அமெரிக்கன் ஸ்னைப்பர் American Sniper 2014


அமெரிக்கன் ஸ்னைப்பர் American Sniper  ஆங்கில திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது.

கிறிஸ் கைல் எழுதிய சுயசரிதை புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தை பிரபல நடிகர்,இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கியுள்ளார்.

இது ஒரு வாழ்க்கை வரலாற்று போர் நாடக  வகை  திரைப்படமாகும்.
இத்திரைப்படம் அமெரிக்க ராணுவ வரலாற்றிலேயே மிகச்சிறந்த துப்பாக்கி சுடும் வீரராகக் கருதப்படும் கிறிஸ் கைல் என்பவரின் வாழ்க்கையை விவரிக்கிறது.

ஈராக் போரின் போது தனது சக வீரர்களைக் காப்பாற்ற அவர் மேற்கொண்ட ஆபத்தான பணிகள், அவரது துல்லியமான இலக்குகள் மற்றும் தொடர்ச்சியான இராணுவப் பயணங்களால் அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள் ஆகியவற்றை இந்த படம் மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கிறது.

இத்திரைப்படத்தின் அடிநாதம்  போர்க்களத்தின் வீரத்தை விடவும், அந்தப் போர் ஒரு மனிதனின் மனநிலையிலும் அவனது குடும்ப வாழ்விலும் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்புகளையே முதன்மையாகப் பேசுகிறது.

நாட்டைப் பாதுகாப்பது மற்றும் சக வீரர்களைக் காப்பது என்ற உயரிய நோக்கில் இராணுவத்தில் இணையும் ஒரு சாதாரண மனிதன், போர்க்களத்தில் எதிர்கொள்ளும் கொடூரமான சூழல்களால் எவ்வாறு மனரீதியாக மாறுகிறான் என்பதைப் படம் மிகத் துல்லியமாகக் காட்டுகிறது.

ஒவ்வொரு முறை போருக்குச் சென்று திரும்பும் போதும் அவனால் சாதாரண பொது வாழ்க்கையோடும், தன் அன்பு குடும்பத்தோடும் உடனடியாக ஒத்துப் போக முடியாமல் தவிப்பது ஒரு போர் வீரன் சந்திக்கும் மிகப்பெரிய உளவியல் போராட்டத்தை விவரிக்கிறது.

தன் கண் முன்னால் எதிரிகளால் சக வீரர்கள் கொல்லப்படும் போது ஏற்படும் குற்ற உணர்ச்சியும், அவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கமும் அவனைத் தொடர்ந்து துரத்துகின்றன.

இந்த கடமை உணர்வுக்கும் குடும்பப் பொறுப்புக்கும் இடையே நடக்கும் தவிப்பே இப்படத்தின் மையக் கருத்தாகும்.

போர்க்களத்தில் இருந்து உயிரோடு மீண்டு வந்தாலும், அந்தப் போரின் நினைவுகளும் அதன் பின்னான பாதிப்புகளும் (PTSD) ஒரு மனிதனை எவ்வளவு காலம் அச்சுறுத்துகின்றன என்பதையும், அதிலிருந்து மீள சக மனிதர்களின் மற்றும் பிற வீரர்களின் ஆதரவு எவ்வளவு அவசியம் என்பதையும் இப்படம் மிகவும் அழுத்தமாக உணர்த்துகிறது.

இது போரின் வெற்றிகளைக் கொண்டாடும் படமாக இல்லாமல், போர் மனித குலத்திற்குள் ஏற்படுத்தும் வலிகளையும், ஒரு போர் வீரன் தன் நாட்டிற்காகக் கொடுக்கும் தனிப்பட்ட விலையையும் பேசும் உன்னதமான படைப்பாகத் திகழ்கிறது.

இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரமான கிறிஸ் கைல் பாத்திரத்தில் பிராட்லி கூப்பர் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கதாபாத்திரத்திற்காகத் தனது உடல் எடையைக் கூட்டி, டெக்சாஸ் பிராந்திய மொழி நடையில் அவர் பேசிய விதம் பரவலான பாராட்டைப் பெற்றது.

கிறிஸின் மனைவியாக நடித்த சியன்னா மில்லரும் கணவனின் பாதுகாப்பு குறித்து கவலைப்படும் ஒரு பெண்ணின் உணர்வுகளைத் தனது முதிர்ந்த நடிப்பால் சிறப்பாகக் கொண்டு வந்துள்ளார்.

இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட் போர்க்களக் காட்சிகளை எவ்வித சமரசமும் இன்றி மிகவும் தத்ரூபமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார்.

வன்முறையைக் கொண்டாடுவது போலன்றி, போர் ஒரு மனிதனின் மனநிலையை எவ்வாறு சிதைக்கிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

டாம் ஸ்டெர்ன் என்பவரின் ஒளிப்பதிவு ஈராக் போர்க்களத்தின் புழுதி பறக்கும் சூழலையும், பதற்றம் நிறைந்த தெருக்களையும், இறுதிக்காட்சியில் வரும் மணற்புயலையும் மிக நேர்த்தியாகவும் காட்சிகளின் தீவிரத்தன்மை மாறாமலும் படம்பிடித்துள்ளது.

இத்திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 547 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

மேலும் 87 ஆவது ஆஸ்கர் அகாடமி விருதுகளில்  சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த ஒலி கலவை உட்பட ஆறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.

அதில் மிகச்சிறந்த ஒலிப்பதிவுத் தொகுப்பிற்கான  ஆஸ்கார் விருதினை இப்படம் வென்றது.

இது தவிர அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் (AFI) ஆண்டின் சிறந்த பத்து திரைப்படங்களில் ஒன்றாகவும் இது தேர்வு செய்யப்பட்டு பல விருதுகளைப் பெற்றது.

இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட் காட்சிகளை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டேக்குகளில்  எடுத்து முடிப்பதில் உலகப் புகழ்பெற்றவர்.

இந்த முழுப் படத்தையும் அவர் வெறும் 44 நாட்களில் எடுத்து முடித்து ஆச்சரியப்படுத்தினார்.
பல நேரங்களில் நடிகர்கள் சாதாரணமாக ஒத்திகை  பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, ஈஸ்ட்வுட் கேமராவை ஓடவிட்டு அவர்களின் இயல்பான நடிப்பை முதல் டேக்கிலேயே பதிவு செய்துவிடுவார்.

கிறிஸ் கைல் மனநல மருத்துவரிடம் பேசும் முக்கியமான காட்சி, எவ்வித ஒத்திகையும் இன்றி ஒரே ஒரு டேக்கில் எடுக்கப்பட்டதாகும்.

கிறிஸ் கைலாக நடிப்பதற்காக பிராட்லி கூப்பர் மேற்கொண்ட அர்ப்பணிப்பு மிகவும் அசாத்தியமானது.
நிஜ கைலின் கம்பீர உடலமைப்பைப் பெறுவதற்காக அவர் 10 வாரங்களில் சுமார் 18 கிலோ 40 பவுண்டுகள் தசை எடையைக் கூட்டினார்.

இதற்காக எவ்வித ஹார்மோன் ஊசிகளோ அல்லது ஸ்டெராய்டுகளோ பயன்படுத்தாமல், தினமும் 4 முதல் 5 மணி நேரம் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார்.

மேலும், தனது உடலில் கலோரிகளை அதிகரிக்க ஒவ்வொரு 55 நிமிடங்களுக்கும் ஒருமுறை சலிப்பில்லாமல் உணவை உட்கொண்டார்.

உடற்பயிற்சி செய்யும் போது நிஜ கிறிஸ் கைல் பயன்படுத்திய பாடல்களின் பட்டியலையே  கூப்பரும் கேட்டுள்ளார்.

இப்படத்தில் போர்க்களத்தின் தீவிரத்தன்மையைக் கொண்டுவர, நிஜமாகவே கிறிஸ் கைலுடன் ஈராக்கில் பணியாற்றிய முன்னாள் கடற்படை சீல்  வீரரான கெவின் லாட்ஸ் என்பவர் படத்தில் ஆலோசகராக மட்டுமன்றி, அவராகவே ஒரு பாத்திரத்திலும் நடித்திருந்தார்.

அவரது ஆலோசனையின் பேரில் தான், சீல் வீரர்களின் கடுமையான பயிற்சியான பனிக்கடலில் கைகளைக் கோர்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும் சர்ஃப் டார்ச்சர் காட்சி  திரைக்கதையில் சேர்க்கப்பட்டு படமாக்கப்பட்டது.

படத்தின் இறுதிக்கட்டப் போர்க்களக் காட்சியான 'சத்ர் சிட்டி' மற்றும் கைவிடப்பட்ட பேரீச்சம்பழத் தொழிற்சாலைக் காட்சிகள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள எல் சென்ட்ரோ என்ற இடத்தில் இருந்த ஒரு பழமையான பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை  மாற்றி வடிவமைத்துப் படமாக்கப்பட்டன.

அதேபோல், ஈராக்கின் ஃபல்லூஜா நகரக் காட்சிகளைப் தத்ரூபமாகக் காட்ட மொராக்கோ நாட்டின் தலைநகரான ரபாத் பகுதிக்கு 150-க்கும் மேற்பட்ட படக்குழுவினர் சென்று 12 நாட்கள் தங்கிப் படப்பிடிப்பு நடத்தினர்.

அங்கு எடுக்கப்பட்ட ஒரு ஐந்து நிமிட போர்க் காட்சிக்கு மட்டும், மூன்று நாட்களில் 150-க்கும் மேற்பட்ட கேமரா கோண அமைப்புகள்  பயன்படுத்தப்பட்டு மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

இப்படத்தின் டைட்டில் கார்டுகளில் வழக்கமான திரைப்படங்களைப் போல "மியூசிக் பை" என்ற தனித் தலைப்போ அல்லது குறிப்பிட்ட ஒரு இசைமைப்பாளரின் பெயரோ இடம் பெறவில்லை.

இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட், படத்தில் பல இடங்களில் இசையை விட மௌனமே போரின் வலியை அதிகம் கடத்தும் என்று நம்பினார்.

எனவே, படத்தொகுப்பிற்குப் பிறகு பல போர்க் காட்சிகளில் இருந்து இசையை முழுமையாக நீக்கிவிட்டு, துப்பாக்கிச் சத்தங்களையும் காற்றில் பறக்கும் குண்டுகளின் ஒலிகளையும் மட்டுமே ஒலிக்கச் செய்தார்.

இந்த தனித்துவமான ஒலி வடிவமைப்புத் தந்திரமே படத்திற்கு ஆஸ்கார் விருதை பெற்றுத்தந்தது.

இருப்பினும், கிறிஸ் கைலின் மனைவி தாயாவின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் "தாயாஸ் தீம்"  என்ற முதன்மைப் பாடலை இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டே நேரடியாகத் தன் கைப்படப் பியானோவில் வாசித்து இசையமைத்துக் கொடுத்தார்.

80+ வயதான ஒரு இயக்குனர், படத்தில் இசையமைப்பாளராகவும் மாறியது படக்குழுவினரை நெகிழ வைத்தது.

அவருக்கு உதவியாக ஜோசப் எஸ். டெபியாசி கூடுதல் இசையை ஒருங்கிணைத்தார்.
படத்தில் வரும் மிக முக்கியமான திருமணக் காட்சியில், புகழ்பெற்ற பாடகர் வான் மோரிசனின் "சம்ஒன் லைக் யூ"  என்ற பாடல் பயன்படுத்தப்பட்டது.

இது தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல,நிஜ வாழ்க்கையில் கிறிஸ் கைல் மற்றும் தாயா தம்பதியினருக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது என்பதால், அவர்களின் நினைவாகவே அந்தப் பாடல் படத்தில் சேர்க்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் இறுதிக்காட்சியில், கிறிஸ் கைலின் மரணத்திற்குப் பிறகு அவரது இறுதி ஊர்வலம் நிஜ ஆவணக் காட்சிகளாகத் திரையில் காட்டப்படும்.

அந்த நெஞ்சை உலுக்கும் 4 நிமிடக் காட்சிக்கு, உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிகோன் இசையமைத்த "தி ஃபியூனரல்" என்ற புகழ்பெற்ற இசைக்கோர்ப்பு பயன்படுத்தப்பட்டது.

திரையரங்கில் படம் முடிந்து இறுதிப் பெயர்கள்  ஓடும் போது, எவ்விதப் பின்னணி இசையும் இன்றி முழுமையான அமைதி  மட்டுமே ஒலிக்கவிடப்பட்டது.

போரினால் இறந்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் விதமாக அமைக்கப்பட்ட இந்த உத்தி, படம் முடிந்து வெளியேறும் ரசிகர்களைப் பாரத்தோடு ஆழ்த்தியது.

இப்படத்தை இயக்குவதற்காகப் புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர் கிறிஸ் கைலின் சுயசரிதை புத்தகத்தைப் படித்துவிட்டு, கதையில் ஒரு எதிரி நாட்டு  கதாபாத்திரத்தை உருவாக்கி, இருவருக்கும் இடையே நடக்கும் ஒரு உளவியல் போராக மாற்ற விரும்பினார்.

அவரது கற்பனையில் திரைக்கதை 160 பக்கங்களுக்கும் மேல் நீண்டு கொண்டே சென்றது. ஆனால், வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் விதித்த கடுமையான பட்ஜெட் கட்டுப்பாடுகளால் தனது பிரமாண்ட பார்வையைத் திரையில் கொண்டுவர முடியாது என்று கருதி ஸ்பீல்பெர்க் இப்படத்தில் இருந்து விலகினார்.

அதன் பின்னரே கிளின்ட் ஈஸ்ட்வுட் உள்ளே வந்தார்.
நாயகன் பிராட்லி கூப்பர் இப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்ததால், முதலில் கிறிஸ் கைல் கதாபாத்திரத்தில் நடிக்க 'கிறிஸ் பிராட்' என்ற நடிகரைத் தான் பரிசீலித்தார்.

ஆனால், வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் கூப்பர்  நடித்தால் மட்டுமே படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொள்வோம் என்று நிபந்தனை விதித்தது.

இதனால் கூப்பர் அந்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக, படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்த போதே, 2013 பிப்ரவரியில் நிஜ கிறிஸ் கைல் படுகொலை செய்யப்பட்டார்.

இது கூப்பரை நிலைகுலைய வைத்தது. அதன் பின்னர் கைலின் மறைவிற்குப் பின் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்த கூப்பர், கைலின் நினைவுக்கு நியாயம் செய்யும் வகையில் அவரது ஆளுமையை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடித்தார்.

படப்பிடிப்பு தளத்தில் கிறிஸ் கைலின் குடும்பத்தினர் வழங்கிய அவரது நிஜ உடைகள், காலணிகள் மற்றும் கைக்கடிகாரத்தைப் பயன்படுத்தி தான் பிராட்லி கூப்பர் நடித்தார்.

கைலின் நடை, உடை, பாவனைகளைத் துல்லியமாகக் கொண்டுவர, அவரது நிஜக் குரல் பதிவுகளை  கூப்பர் நூற்றுக்கணக்கான மணிநேரம் கேட்டுப் பயிற்சி செய்தார்.

படப்பிடிப்பின் போது கூப்பரைப் பார்த்த கைலின் தந்தை, தன் மகனே நேரில் வந்தது போல் இருப்பதாகக் கூறி உணர்ச்சிவசப்பட்டார்.

இப்படத்தின் ஒளிப்பதிவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்று இயக்குனர் ஈஸ்ட்வுட் மற்றும் ஒளிப்பதிவாளர் டாம் ஸ்டெர்ன் இடையே நீண்ட விவாதம் நடந்தது.

ஈஸ்ட்வுட் பிலிம் சுருள்களில்  படம் எடுப்பதையே விரும்புபவர். ஆனால், போர்க்களத்தின் புழுதி மற்றும் தீவிரமான சூழல்களைத் துல்லியமாகப் படம்பிடிக்க டிஜிட்டல் கேமராக்களே சிறந்தது என்று டாம் ஸ்டெர்ன் அவரை வற்புறுத்தினார்.

இறுதியில் ஈஸ்ட்வுட் அதற்குச் சம்மதித்தார். அவரது நீண்ட திரைப்பயணத்தில் டிஜிட்டல் கேமராக்கள் (Arri Alexa XT) மூலம் அனாமார்பிக் லென்ஸ்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இரண்டாவது திரைப்படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஒரு செயற்கை பொம்மை குழந்தை  மிகப்பெரிய அளவில்  விவாதத்தை ஏற்படுத்தியது.

திரைக்கதைப்படி பிராட்லி கூப்பரும் சியன்னா மில்லரும் தங்களின் குழந்தையைக் கையில் வைத்திருக்கும் காட்சியைப் படமாக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு வரவேண்டிய முதல் நிஜக் குழந்தைக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது குழந்தையும் சரியான நேரத்திற்கு வரவில்லை. இதனால் அதிருப்தியடைந்த இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட், தனது கணீரென்ற குரலில் அங்கிருந்தவர்களிடம் ஒரு செயற்கை பொம்மையைக் கொண்டுவரக் கூறி, அதையே வைத்து காட்சியைப் படமாக்கினார்.

படம் வெளியான போது ரசிகர்கள் திரையரங்குகளில் அந்தப் போலி குழந்தையைப் பார்த்து சிரித்ததும், அது ஆஸ்கார் விருது வாய்ப்பை பாதிக்கும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்ததும் ஒரு சுவாரஸ்யமான வரலாறாக மாறியது.

கிறிஸ் கைலைத் தொடர்ந்து வேட்டையாட முயலும் சிரிய நாட்டு ஒலிம்பிக் பதக்க வீரரான எதிரி ஸ்னைப்பர் 'முஸ்தபா' என்ற கதாபாத்திரம், நிஜமாகவே ஈராக்கில் அமெரிக்க ராணுவத்திற்கு சிம்மசொப்பனமாக விளங்கிய 'ஜூபா' என்ற பெயரற்ற ஈராக் ஸ்னைப்பரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

அதேபோல், படத்தில் காட்டப்படும் கொடூர வில்லனான 'தி பட்சர்' என்ற பாத்திரம், நிஜத்தில் ஈராக்கில் செயல்பட்ட 'அபு தானா என்ற தீவிரவாத தலைவனைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இப்படத்தில் நடிகர்களின் தேர்வு மிகவும் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதில் படக்குழுவினர் உறுதியாக இருந்தனர்.

இதற்காகப் போரில் படுகாயமடைந்த நிஜ ராணுவ மாற்றுத்திறனாளி வீரர்களை  வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்தது.

படத்தில் மருத்துவமனையில் வரும் பல காட்சிகள் மற்றும் மறுவாழ்வு மையக் காட்சிகளில் உண்மையில் போரினால் தங்கள் கை, கால்களை இழந்த நிஜ ராணுவ வீரர்களே நேரடியாகக் கதாபாத்திரங்களாகத் தோன்றி நடித்தனர்.

இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட் எப்போதுமே படப்பிடிப்பில் மிகவும் அமைதியான சூழலை விரும்புபவர். பொதுவாக இயக்குனர்கள் பயன்படுத்தும் "ஆக்ஷன்"  அல்லது "கட்"  என்ற வார்த்தைகளை அவர் ஒருபோதும் பயன்படுத்த மாட்டார். அதற்குப் பதிலாக மிகவும் மென்மையான குரலில் "தொடங்குங்கள்" (All right, go ahead) என்றும், காட்சி முடிந்ததும் "இத்துடன் போதும்" (That's enough) என்றும் மட்டுமே கூறுவார்.

அவரது இந்த அமைதியான அணுகுமுறை, பதற்றம் நிறைந்த போர்க்களக் காட்சிகளில் கூட நடிகர்கள் தங்களின் முழுத் திறனையும் பதற்றமின்றி வெளிப்படுத்த பெரிதும் உதவியாக இருந்தது.

இப்படத்தின் மிகவும் சவாலான இறுதிக்கட்ட மணற்புயல் காட்சியின் போது, நடிகர்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விகுறியாக இருந்தது.

கலிபோர்னியாவின் எல் சென்ட்ரோ பகுதியில் கடுமையான வெயிலுக்கு இடையே, பிரம்மாண்டமான ராட்சத விசிறிகள்  மற்றும் தூசுகளைப் பறக்கவிடும் கருவிகள் கொண்டு அந்தப் புயல் காட்சி உருவாக்கப்பட்டது.

அப்போது பிராட்லி கூப்பர் மற்றும் பிற நடிகர்கள் நிஜமாகவே கண்களைத் திறக்க முடியாமலும், சுவாசிக்க முடியாமலும் தவித்தனர்.

அந்தப் புயலின் எதார்த்தத்தை அப்படியே கேமராவில் கடத்த வேண்டும் என்பதற்காக, இயக்குனர் ஈஸ்ட்வுட் நடிகர்களைப் பாதுகாப்புக் கண்ணாடிகள் கூட அணியாமல் நடிக்க வைத்தார்.

நடிகர்கள் எதிர்கொண்ட அந்த நிஜமான தவிப்பே திரையிலும் தத்ரூபமாகப் பதிவானது.

படத்தின் இறுதி வடிவமைப்பு முடிந்ததும், முதலில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் ஒரு சிறப்புத் திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

படத்தைப் பார்த்த பல முன்னாள் ராணுவ வீரர்கள், போர்க்களத்தின் ஒலிகளும் சூழல்களும் அப்படியே தங்களின் நிஜ நினைவுகளைக் கிளறுவதாகக் கூறி உணர்ச்சிவசப்பட்டனர்.

குறிப்பாக, போரில் பங்கேற்றுத் திரும்பிய வீரர்கள் தங்களின் மன அழுத்தத்தைப்  பற்றித் தங்கள் குடும்பத்தினரிடம் விவரிக்க முடியாமல் தவித்த பல விஷயங்களை, இந்தப் படம் தங்களுக்குப் பதிலாகப் பேசியிருப்பதாகக் கூறி நெகிழ்ந்தனர்.

படத்தில் ஒரு சிறிய காட்சியில் இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட் ஒரு கேமியோ தோற்றத்தில்  நடித்துள்ளார். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் கிறிஸ் கைல் தேவாலயத்திற்குள் நுழையும் போது, அவருக்கு முன்னால் நீல நிறச் சட்டை அணிந்து தேவாலயத்திற்குள் செல்லும் ஒரு முதியவராக ஈஸ்ட்வுட் சில நொடிகள் வந்து செல்கிறார்.

எடிட்டிங்கின் போது இந்தத் தோற்றம் பெரும்பாலான ரசிகர்களால் கவனிக்கப்படாமல் போனது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

திரைப்படம் வெளியாகி உலகளவில் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்திய போது, அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் மனைவியான மிச்செல் ஒபாமா, வெள்ளை மாளிகையில் இப்படத்தைப் பாராட்டிப் பேசினார்.

போர் வீரர்களின் குடும்பங்கள் சந்திக்கும் தனிமை மற்றும் தியாகங்களை இந்த அளவுக்கு நேர்மையாக எந்தப் படமும் காட்டியதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், படத்தின் இறுதிக்காட்சியில் வரும் இறுதி ஊர்வலக் காட்சிகள் எவ்வித செயற்கை அரங்குகளும்  இன்றி, கிறிஸ் கைலின் உண்மையான இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்ட நிஜ ஆவணக் குறிப்புகளிலிருந்து  பயன்படுத்தப்பட்டவையாகும்.

இதுவே இப்படத்திற்கு ஒரு மிகச்சிறந்த, உணர்வுப்பூர்வமான இறுதி அஞ்சலியாக அமைந்தது.

படத்தின் கதை:-

டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்து வளரும் கிறிஸ் கைல் (பிராட்லி கூப்பர்) என்ற சிறுவனுக்கு அவனது தந்தை ஒரு துப்பாக்கியைக் கையாள்வது எப்படி என்றும், மான்களை எவ்வாறு வேட்டையாட வேண்டும் என்றும் மிகச் சிறிய வயதிலேயே கற்றுக் கொடுக்கிறார்.

ஆண்டுகள் பல கடந்த பிறகு கிறிஸ் கைல் ஒரு பண்ணை தொழிலாளியாகவும், ரோடியோ எனப்படும் காளை மாடுகளை அடக்கும் வீரராகவும் வாழ்கிறார்.

ஒருநாள் அவர் வழக்கத்தை விட மிக சீக்கிரமாகவே தனது வீட்டிற்குத் திரும்பி வரும்போது, அங்கு அவரது காதலி வேறொரு மனிதனுடன் படுக்கையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.

கோபமடைந்த கிறிஸ் கைல் அவளைத் தனது வீட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கூறுகிறார்.

அதன் பிறகு அவர் தனது தம்பியுடன் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, 1998 ஆம் ஆண்டு அமெரிக்க தூதரகங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் செய்திகள் ஒளிபரப்பாவதைக் காண்கிறார்.

இந்தச் சம்பவம் அவரது மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த, தாய்நாட்டைக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அமெரிக்க கடற்படையில் சேர அவர் திடீரென முடிவெடுக்கிறார்.

அங்கு கடுமையான சிறப்புப் பயிற்சிகளுக்குத் தகுதி பெறும் அவர், அமெரிக்க கடற்படையின் மிக உயரிய சீல் (SEAL) பிரிவில் ஒரு துப்பாக்கி சுடும் வீரராக அதாவது ஸ்னைப்பராக மாறுகிறார்.

ஒருநாள் சான் டியாகோ நகரில் உள்ள ஒரு ஐரிஷ் மதுக்கடையில் கிறிஸ் கைல் தற்செயலாக டாயா ஸ்டுடிபேக்கர் (சியன்னா மில்லர்) என்ற பெண்ணைச் சந்தித்துப் பேசுகிறார்.

அவர்களின் சந்திப்பு காதலாக மாற, இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே, செப்டம்பர் 11 தீவிரவாதத் தாக்குதல்கள் அரங்கேறுகின்றன.

இதனால் கிறிஸ் கைல் தனது முதல் போர் பயணமாக ஈராக் போருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.

போர்க்களத்தில் தனது முதல் பணியின் போது, ரோந்து செல்லும் அமெரிக்க கடற்படை வீரர்கள் மீது ரஷ்ய தயாரிப்பான ஆர் கே ஜி 3 ரக பீரங்கி எதிர்ப்பு கையெறி குண்டை வீசித் தாக்க முயலும் ஒரு ஈராக் பெண்ணையும், அவளது சிறுவனையும் கிறிஸ் கைல் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்.

நாட்டின் பாதுகாப்பிற்காகச் செய்தாலும், ஒரு பெண்ணையும் சிறுவனையும் முதன்முதலில் கொன்ற இந்தத் துயரமான அனுபவம் கிறிஸ் கைலை மனரீதியாகப் பெரிதும் உலுக்குகிறது.

இருப்பினும், அதன் பிறகு போர்க்களத்தில் அவர் பல துல்லியமான இலக்குகளைத் தாக்கி, ஏராளமான எதிரிகளைக் கொன்று குவித்ததால், அவரது அசாத்திய திறமையைப் பாராட்டி சக வீரர்கள் அவரை லெஜண்ட் என்று அழைக்கத் தொடங்குகிறார்கள்.

அதன்பின், அல் கொய்தா அமைப்பின் பயங்கரவாதத் தலைவனான அபு முசாப் அல் சர்காவியை வேட்டையாடும் முக்கியப் பணி கிறிஸ் கைலின் குழுவிற்கு வழங்கப்படுகிறது.

இந்தத் தேடுதல் வேட்டையின் போது கிறிஸ் கைல் ஒரு ஈராக் குடும்பத்தை அதிரடியாக விசாரணை செய்கிறார்.

அப்போது அந்தச் சாதாரணக் குடும்பத்தின் தந்தை, தங்களுக்குப் பாதுகாப்பு அளித்தால் அல் சர்காவியின் வலது கரமாகச் செயல்படும் தி பட்சர் (மிடோ ஹமாடா) என்ற கொடூரமான தீவிரவாதத் தலைவனிடம் தங்களை அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார்.

ஆனால், இந்தத் திட்டம் எதிர்பாராத விதமாகத் தோல்வியில் முடிகிறது. அமெரிக்க வீரர்களுக்கு உதவ முயன்ற அந்தத் தந்தையையும் அவரது மகனையும் தி பட்சர் மிகக் கொடூரமான முறையில் பிடித்துக் கொண்டு, கிறிஸ் கைலின் கண் முன்னாலேயே சித்திரவதை செய்து படுகொலை செய்கிறான்.

அந்தச் சமயத்தில் கிறிஸ் கைலால் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போகிறது, சிரிய நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் பதக்கம் வென்ற முஸ்தபா (சாம் ஷேக்) என்ற எதிரி நாட்டு ஸ்னைப்பர், கைலின் ஒட்டுமொத்தக் குழுவையும் தனது துல்லியமான துப்பாக்கிச் சூட்டால் ஒரே இடத்தில் அசைய விடாமல் முடக்கி விடுகிறான்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, அமெரிக்க வீரர்களைக் கொன்று குவிக்கும் கிறிஸ் கைலின் தலைக்கு ஈராக் கிளர்ச்சியாளர்கள் மிகப்பெரிய தொகையைப் பரிசாக அறிவிக்கிறார்கள்.

தனது முதல் போர் பயணத்தை முடித்துக்கொண்டு கிறிஸ் கைல் தனது மனைவி டாயாவிடம் திரும்பி வருகிறார். அப்போது அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது.

ஆனால், தாயகம் திரும்பினாலும் கிறிஸ் கைலால் சாதாரண மனிதராக வாழ முடிவதில்லை.

போர்க்களத்தில் தான் கண்ட கொடூரமான மரணங்களும், போர் நினைவுகளும் அவரது மனதை எப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கின்றன.

தனது கணவனின் இந்தத் தனிமையையும், அவர் தங்களை விட்டு விலகிப் போவதையும் கண்டு டாயா மிகுந்த கவலை கொள்கிறாள்.

கிறிஸ் கைல் போரை மறந்து தனது குடும்பத்தின் மீதும், குழந்தைகள் மீதும் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று அவள் கண்ணீருடன் வேண்டுகிறாள்.

ஆனால், கைலின் மனமோ போர்க்களத்தையே நாடுகிறது.
கிறிஸ் கைல் சீஃப் பெட்டி ஆபீசராகப் பதவி உயர்வு பெற்று, தனது இரண்டாவது போர் பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்த முறை தீவிரவாதத் தலைவன் தி பட்சருடன் நடக்கும் கடுமையான துப்பாக்கிச் சண்டையில், கிறிஸ் கைல் தனது குழுவினருடன் இணைந்து அவனை வெற்றிகரமாகச் சுட்டுக் கொல்கிறார்.

ஆனால், இந்தப் பயணத்தை முடித்து அவர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பும் போது, அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்த போதிலும், அவர் தன் குடும்பத்தை விட்டு முன்பை விட இன்னும் அதிகமாக மனரீதியாகத் தூர விலகிப் போகிறார்.

தொடர்ந்து தனது மூன்றாவது போர் பயணத்தை ஈராக்கில் மேற்கொள்ளும் போது, எதிரி ஸ்னைப்பரான முஸ்தபா, கைலின் நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரையான் ஜாப் (ஜேக் மக்டோர்மன்) என்ற பிகில்ஸ் என்பவரை  கொடூரமாகச் சுட்டுப் படுகாயப்படுத்துகிறான்.

இதனால் படுகாயமடைந்த ரையான் உடனடியாக மீட்கப்பட்டு ராணுவ முகாமிற்கு அனுப்பப்படுகிறார்.

தன் நண்பனை சிதைத்தவனை பழிவாங்கவும், பாதியில் நின்ற பணியைத் தொடரவும் கிறிஸ் கைலின் குழுவினர் மீண்டும் போர்க்களத்திற்குள் நுழையும் போது, அங்கு நடக்கும் துப்பாக்கிச் சூட்டில் மார்க் லீ (லூக் கிரிம்ஸ்) என்ற மற்றொரு நெருங்கிய சீல் வீரர் துரதிர்ஷ்டவசமாகக் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழக்கிறார்.

தன்னுடன் இருந்த சக வீரர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற கடுமையான குற்ற உணர்ச்சியும், நண்பர்களின் இழப்பும் கிறிஸ் கைலைத் தீவிரமாக உந்தித்தள்ள, அவர் தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி நான்காவது முறையாகப் போர் பயணத்தை மேற்கொள்கிறார்.

இதைக் கேட்டு மனமுடைந்த டாயா, இந்த முறை நீ போருக்குச் சென்றால் நீ திரும்பி வரும்போது நான் உனக்காக இங்கு இருக்க மாட்டேன் என்று மிகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறாள்.

இருப்பினும் அவர் ஈராக் நாட்டிற்குச் செல்கிறார். அங்கு சென்றதும், போர்க்களத்தில் படுகாயமடைந்து முக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தன் நண்பன் பிகில்ஸ், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இறந்துவிட்டான் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு கிறிஸ் கைல் நிலைகுலைகிறார்.

அந்தச் சமயத்தில், அமெரிக்க ராணுவப் பொறியாளர்கள் பாதுகாப்பிற்காகப் சுவர் எழுப்பும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அவர்களை முஸ்தபா தொடர்ந்து சுட்டுக் கொன்று கொண்டிருக்கிறான்.

அவனைத் தீர்த்துக்கட்டும் முக்கியப் பொறுப்பு கிறிஸ் கைலின் குழுவிற்கு வழங்கப்படுகிறது. அதன்படி, எதிரிகளின் நடமாட்டம் மிகுந்த ஆபத்தான பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் கைலின் குழுவினர் பதுங்கியிருக்கிறார்கள்.

அப்போது வெகு தொலைவில் இருக்கும் முஸ்தபாவை கிறிஸ் கைல் தனது தொலைநோக்கி வழியாகக் கண்டறிகிறார்.

மிகக் கடுமையான காற்று மற்றும் சூழலுக்கு இடையே,   1920 மீட்டர் தூரத்தில் இருக்கும் முஸ்தபாவை நோக்கி, எவராலும் சாத்தியமில்லாத ஒரு மிக ஆபத்தான மற்றும் அசாத்தியமான தூர இலக்குத் துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தி, அவனை ஒரே குண்டில் சுட்டுக் வீழ்த்துகிறார்.

ஆனால், இந்தத் துப்பாக்கிச் சூட்டின் சத்தம், அவர்கள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான ஈராக் கிளர்ச்சியாளர்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.

நாற்புறமிருந்தும் எதிரிகள் சூழ்ந்து கொண்டு கொடூரமாகத் தாக்கத் தொடங்க, கைலின் குழுவினரிடம் இருந்த வெடிமருந்துகளும் தீர்ந்து போகும் நிலைக்கு வருகிறது.

அந்தப் பயங்கரமான துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே, தான் சாகப் போவது உறுதி என்று நினைத்த கிறிஸ் கைல், அழுதுகொண்டே தனது மனைவி டாயாவிற்குத் தொலைபேசியில் அழைத்து, தான் போர் செய்தது போதும் என்றும், இப்போது வீட்டிற்குத் திரும்பி வர முழுமையாகத் தயாராகிவிட்டேன் என்றும் உணர்ச்சிவசப்பட்டுக் கூறுகிறார்.

அந்தச் சமயத்தில் திடீரென அங்கு ஏற்படும் ஒரு பிரம்மாண்டமான மணற்புயல், அமெரிக்க வீரர்கள் தப்பிச் செல்வதற்கான ஒரு மறைவிடமாக மாறுகிறது.

அந்தப் புயலின் குழப்பத்திற்கு இடையே எதிரிகளின் தாக்குதலில் காயமடையும் கிறிஸ் கைல், ராணுவ வாகனத்தில் ஏறும் போது நூலிழையில் அங்கேயே கைவிடப்படும் நிலைக்கு ஆளாகி, பின்னர் ஒருவழியாகக் காப்பாற்றப்பட்டுத் தப்பிக்கிறார்.

போர் முடிந்து அமெரிக்கா திரும்பிய கிறிஸ் கைல், தீவிரமான மன அழுத்தத்தினால் எதற்கும் பதற்றமடையும் குணத்துடனும், சாதாரண குடிமை வாழ்க்கையோடு எவ்விதத்திலும் ஒத்துப் போக முடியாமலும் தவிக்கிறார்.

இதைக் கண்டு அவரை ராணுவ மறுவாழ்வு மையத்தின் மனநல மருத்துவர் ஒருவர் சந்தித்துப் பேசுகிறார்.

போர்க்களத்தில் நீங்கள் செய்த கொடூரமான காரியங்கள் உங்களை மனரீதியாக அச்சுறுத்துகிறதா என்று மருத்துவர் கேட்க, அதற்கு கிறிஸ் கைல், போர்க்களத்தில் தன்னால் காப்பாற்ற முடியாமல் போன சக அமெரிக்க வீரர்களின் நினைவுகள் மட்டுமே தன்னைத் தூங்க விடாமல் அச்சுறுத்துவதாகக் கூறுகிறார்.

இதைக் கேட்ட மருத்துவர், போரில் படுகாயமடைந்து உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு உதவி செய்யுமாறு கிறிஸ் கைலை ஊக்குவிக்கிறார்.

மாற்றுத்திறனாளி வீரர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சிகளையும், நம்பிக்கையையும் வழங்கத் தொடங்கிய பிறகு, கிறிஸ் கைல் மெல்ல மெல்லத் தனது பழைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்குகிறார்.

பல ஆண்டுகள் மகிழ்ச்சியாகக் கழிந்த பின்னர், 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதியன்று, கிறிஸ் கைல் தனது மனைவி டாயா மற்றும் குழந்தைகளிடம் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் விடைபெறுகிறார்.

போரினால் ஏற்பட்டுள்ள கடுமையான மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்த நோயால் (PTSD) பாதிக்கப்பட்டுள்ள எடி ரே ரவுத் என்ற முன்னாள் ராணுவ வீரருக்கு உதவுவதற்காக, அவரை ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்திற்குத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

ஆனால், அங்கு சென்ற சில மணி நேரங்களிலேயே, அந்த மனநலம் பாதிக்கப்பட்ட எடி ரே ரவுத் என்பவரால் கிறிஸ் கைல் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி திரையில் எழுத்துக்களாகத் தோன்றுகிறது.

அதனைத் தொடர்ந்து, கிறிஸ் கைலின் மறைவிற்காக அமெரிக்காவின் நெடுஞ்சாலைகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நின்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் உண்மையான இறுதி ஊர்வலக் காட்சிகளும், அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் திரண்டு நின்று அவருக்கு வீர வணக்கம் செலுத்தும் நிஜ ஆவணக் காட்சிகளும் திரையில் தோன்ற படம் நிறைகிறது.

இத்திரைப்படம் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொல்லும் மிக முக்கியமான செய்தி இதுவே.

போர் என்பது வெறும் ஆயுதங்களின் மோதலோ அல்லது போர்க்களத்தில் பெறப்படும் வெற்றிகளோ மட்டுமல்ல.

அது அதன்பின்னர் பல தலைமுறைகளுக்குத் தொடரும் ஒரு கொடிய வடு. தாய்நாட்டைக் காக்க வேண்டும் என்ற உன்னதமான கடமை உணர்வோடு ஒரு மனிதன் போர்க்களத்திற்குச் சென்றாலும், அங்கு அவன் சந்திக்கும் வன்முறையும் கொடூரங்களும் அவனது ஒட்டுமொத்த மனிதத்தன்மையையும், அமைதியான வாழ்வையும் முற்றிலும் சிதைத்துவிடுகின்றன.

ஒரு போர் வீரன் எதிரிகளின் குண்டுகளுக்குத் தப்பித்துத் தன் நாட்டிற்கு உயிரோடு திரும்பி வந்தாலும், அவன் போர்க்களத்தில் கண்ட மரணங்களின் நினைவுகளிலிருந்தும், தன் சக வீரர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆழமான குற்ற உணர்ச்சியிலிருந்தும்  அவ்வளவு எளிதாக மீள முடிவதில்லை.

அந்த உளவியல் போராட்டம் அவனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையையும், அவனது அன்பானவர்களையும் மிகக் கடுமையாகப் பாதிக்கிறது.
எனவே, எந்தவொரு நாடும் ஒரு போரைத் தொடங்குவதற்கு முன்போ அல்லது அதில் நுழைவதற்கு முன்போ பலமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

போர் வீரர்களைப் போர்க்களத்தில் மட்டும் கொண்டாடிவிட்டு, அவர்கள் நாடு திரும்பிய பின் அவர்களைத் தனிமையில் கைவிடக் கூடாது.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிதைந்துபோய் வரும் அந்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் ஒட்டுமொத்தச் சமூகமும் அரசாங்கமும் தார்மீக ஆதரவையும் முறையான மறுவாழ்வையும் வழங்க வேண்டும் என்பதே இத்திரைப்படம் நறுக்கென உணர்த்தும் ஆழமான செய்தியாகும்.

#கீதப்ப்ரியன்ஆஸ்கர் 
#ஆஸ்கர்இரண்டாம்நூறு
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) ஆஸ்கர் (107) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)