கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் அசாத்தியமான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட "The Theory of Everything" "த தியரி ஆஃப் எவ்ரிதிங் " ஆங்கிலத் திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது.
பயோகிராபிகல் டிராமா என்ற சுயசரிதை வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இந்தத் திரைப்படம் ஜேன் ஹாக்கிங் எழுதிய சுயசரிதை புத்தகத்தைத் தழுவி உருவாக்கப்பட்டது.
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு உடல் முடங்கிய ஒரு மனிதரின் அறிவியல் தேடலையும் அவரது வாழ்க்கையில் பயணித்த மனிதர்களின் உன்னதமான உறவையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு சிறந்த அறிமுகமாக இப்படம் உலகிற்கு அமைந்தது.
இப்படத்தின் அடிநாதம் பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் தேடும் ஒரு விஞ்ஞானியின் அறிவியல் பயணம் மட்டுமல்ல, அது அசாத்தியமான சூழ்நிலைகளிலும் தடைகளைத் தகர்த்து வெல்லும் "மனித ஆற்றலின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் காதல்" ஆகும்.
உடல் முற்றிலும் முடங்கி, பேசும் திறனை இழந்து, மரணத்தின் வாசல் வரை சென்று மீண்ட போதிலும், ஒரு மனிதனின் சிந்திக்கும் திறனையும் அவனது மன உறுதியையும் எந்த ஒரு கொடிய நோயாலும் சிறைபிடிக்க முடியாது என்ற ஆன்மாவின் வலிமையே இந்த கதையின் மையக்கருவாக விளங்குகிறது.
அதே சமயம், இந்த படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் மார்ஷ் குறிப்பிட்டது போல, இது ஒரு விசித்திரமான மற்றும் ஆழமான காதல் கதையைத் தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது.
எதார்த்த உலகிற்கு அப்பாற்பட்ட விண்வெளியின் விதிகளையும் காலத்தின் தொடக்கத்தையும் ஆராயும் ஒரு மனிதனுக்கும், அவனது அன்றாட வாழ்க்கையைத் தன் அர்ப்பணிப்பால் தாங்கிப் பிடிக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே உள்ள உறவே இப்படத்தின் ஆன்மாவாகும். விதி வீசிய கொடூரமான பந்துகளையும், உடல்நலச் சிதைவுகளையும் கடந்து, காதலும் நட்பும் எப்படி ஒரு மனிதனை உலகப் புகழ்பெற்ற சாதனையாளராக மாற்றியமைக்கிறது என்பதை படம் விவரிக்கிறது.
மனித வாழ்க்கையின் இறுதி எல்லை வரை சென்று சோதிக்கும் துன்பங்கள் வந்தாலும், "உயிர் இருக்கும் வரை அங்கு நம்பிக்கை இருக்கும்" என்ற அந்த ஒரே ஒரு உன்னத தத்துவமே இப்படத்தின் ஒட்டுமொத்த அடிநாதமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இப்படத்தின் பிரதான பலமாக அமைந்தது எடி ரெட்மெய்ன் மற்றும் பெலிசிட்டி ஜோன்ஸ் ஆகியோரின் அசாத்தியமான நடிப்புத் திறமையாகும்.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் உடல் ரீதியான சிதைவுகளையும் அவரது முகத்தில் இருக்கும் நகைச்சுவை உணர்வையும் எடி ரெட்மெய்ன் தனது நடிப்பில் அச்சு அசலாகக் கொண்டுவந்து பார்ப்பவர்களை வியக்க வைத்தார்.
இயக்குனர் ஜேம்ஸ் மார்ஷ் இப்படத்தை வெறும் அறிவியல் படமாக மட்டும் சுருக்கிவிடாமல் மனித உணர்வுகளுக்கும் காதலின் தியாகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து மிக நேர்த்தியாக இயக்கியிருந்தார்.
பெனோயிட் டெல்ஹோம் செய்த ஒளிப்பதிவு இப்படத்திற்கு மேலும் அழகூட்டும் விதமாக வண்ணமயமான மற்றும் அழுத்தமான காட்சிக் கோணங்களால் ஒவ்வொரு காட்சியையும் உயிரோட்டமாக மாற்றியிருந்தது.
இப்படம் உலகம் முழுவதும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு பல உயரிய விருதுகளையும் வென்று குவித்தது.
குறிப்பாக 87வது அகாடமி விருதுகளில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை எடி ரெட்மெய்ன் தட்டிச் சென்றார்.
இதுதவிர பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகளில் சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம் சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளிலும் கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளிலும் இப்படம் பல முக்கிய விருதுகளைப் பெற்று சாதனை படைத்தது.
இப்படத்தின் காட்சிகளுக்குப் பின்னால் ஒளிப்பதிவாளர் பெனோயிட் டெல்ஹோம் பல புதுமையான மற்றும் சவாலான உத்திகளைக் கையாண்டார்.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் உடல்நிலை சீர்கெட்டுக்கொண்டே போவதை வெறும் நடிப்பில் மட்டுமல்லாமல், காட்சியமைப்பின் வழியேயும் பார்வையாளர்களுக்குக் கடத்த அவர் விரும்பினார்.
இதற்காக கதையின் கால ஓட்டத்திற்கு ஏற்ப வெவ்வேறு விதமான லென்ஸ்கள் மற்றும் ஒளியமைப்புகளைப் பயன்படுத்தினார்.
தொடக்கக் காலக் காட்சிகளில் ஸ்டீபன் ஆரோக்கியமாக இருக்கும்போது பிரகாசமான, துடிப்பான வண்ணங்களையும், நோய் அவரை முடக்கத் தொடங்கும் போது மெல்ல மெல்ல வண்ணங்களின் அடர்த்தியைக் குறைத்து, ஒருவித மங்கலான நிழல் உலகை கேமரா கோணங்கள் வழியே உருவாக்கினார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற மே பால் திருவிழாக் காட்சியைப் படமாக்கியது மிக சுவாரஸ்யமான ஒரு அனுபவமாகும்.
அந்த இரவு நேரக் கொண்டாட்டத்தை அசல் தன்மையுடன் காட்ட, ஆயிரக்கணக்கான விளக்குகள் மற்றும் உண்மையான பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டன.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பட்டாசு வடிவமைப்பு செய்த நிபுணர்களைக் கொண்டு, ஒரே மாதிரியான மூன்று பிரம்மாண்ட வானவேடிக்கை நிகழ்வுகளைத் திட்டமிட்டு நடத்தினர்.
அந்தப் பட்டாசு வெளிச்சத்தில் எடி ரெட்மெய்ன் மற்றும் பெலிசிட்டி ஜோன்ஸ் ஆகியோரின் முகபாவனைகளைத் துல்லியமாகப் படம்பிடிக்க, கேமராவை மிக நெருக்கமாகக் கையாண்டு அந்த நள்ளிரவுக் காட்சியைத் திரையில் ஒரு மாயாஜாலம் போல ஒளிப்பதிவாளர் கொண்டுவந்தார்.
இயக்குனர் ஜேம்ஸ் மார்ஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவரும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் பழைய ஆவணப்படங்கள் மற்றும் நிஜப் புகைப்படங்களை மிகத் தீவிரமாக ஆராய்ந்தனர்.
வரலாற்றில் பதிவான அவரது வாழ்க்கையின் முக்கியத் தருணங்களை அப்படியே திரையில் மறுஉருவாக்கம் செய்ய அவர்கள் கையாண்ட ஒளிப்பதிவு கோணங்கள் படப்பிடிப்புத் தளத்தில் பெரும் சவாலாக இருந்தன.
சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஸ்டீபனின் உலகத்தை அவரது சொந்தக் பார்வைக் கோணத்திலேயே கேமரா வழியே பிரதிபலிக்கச் செய்தனர்.
இதனால் பார்வையாளர்கள் ஸ்டீபனின் உடல்நிலையை வெளியில் இருந்து பார்க்காமல், அவரோடு சேர்ந்து அந்தப் பாதிப்பை உணரும்படியான ஒரு புதுமையான காட்சிக்கோண அனுபவத்தை ஒளிப்பதிவாளர் உருவாக்கினார்.
இப்படத்தின் பின்னணி இசையை அமைத்த ஐஸ்லாந்து நாட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜோஹான் ஜோஹான்சன், இந்தத் திரைப்படத்திற்காக ஒரு தனித்துவமான இசைப் பயணத்தை மேற்கொண்டார்.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் அசாத்தியமான மூளை மற்றும் பிரபஞ்சத் தேடலை ஒலியின் வழியே கடத்த வேண்டும் என்பதற்காக, அவர் வழக்கமான ஆர்கெஸ்ட்ரா இசையோடு எலக்ட்ரானிக் ஒலி வடிவங்களையும், பியானோ வாத்தியங்களின் நேரடிப் பதிவுகளையும் ஒன்றாகக் கலந்தார்.
அறிவியல் சமன்பாடுகளின் நுணுக்கங்களை இசையின் வழியே கொண்டு வர பியானோவின் இசைத் துணுக்குகளை மீண்டும் மீண்டும் ஒலிக்கும் அலைவரிசைகளாக மாற்றியமைத்தார்.
இது புகழ்பெற்ற பிலிப் கிளாஸ் என்பவரின் இசை பாணியை நினைவூட்டும் வகையில் அமைந்ததோடு, பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மையை உணர்த்தும் ஒரு புதிய அறிவியல் ஒலியாக உருவெடுத்தது.
லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க அபே ரோடு ஸ்டுடியோவில் இந்த படத்தின் ஒட்டுமொத்த இசைக்கோர்ப்பும் மிகவும் பிரம்மாண்டமான முறையில் பதிவு செய்யப்பட்டது.
திரையில் தோன்றும் காட்சிகளின் உணர்ச்சி வேகத்திற்கு ஏற்ப, நேரடி இசைக் கலைஞர்களைக் கொண்டு ஒலிகளைப் பதிவு செய்தபோது, படத்தின் ஆன்மாவிற்கு அது கூடுதல் பலம் சேர்த்தது.
குறிப்பாக, படத்தின் இறுதிக் காட்சியில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை அப்படியே காலத்தின் பின்னோக்கிச் செல்லும் அந்தத் தருணத்திற்கான இசையைக் கையாள்வதில் ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்தது.
அந்த உணர்வுப்பூர்வமான கிளைமாக்ஸ் காட்சிக்கு, ஜோஹான்சன் தான் உருவாக்கிய இசையோடு சேர்த்து, 'தி சினிமாடிக் ஆர்கெஸ்ட்ரா' குழுவினர் 2008 ஆம் ஆண்டு ஒரு ஆவணப்படத்திற்காக வாசித்த 'தி அரைவல் ஆஃப் தி பேர்ட்ஸ்' என்ற புகழ்பெற்ற இசைத் துணுக்கையும் மிக நேர்த்தியாகப் பொருத்திப் பயன்படுத்தினார்.
அடுத்ததாக, படத்தின் பிந்தைய தயாரிப்புப் பணிகளின் போது படத்தின் ஒலியமைப்பில் மற்றுமொரு வியக்கத்தக்க திருப்பம் ஏற்பட்டது. ஸ்டீபன் ஹாக்கிங் தொண்டை அறுவை சிகிச்சைக்குப் பிறகு பேசப் பயன்படுத்திய கணினி செயற்கைக் குரலை படக்குழுவினர் தொழில்நுட்ப ரீதியாகத் தாங்களாகவே மறுஉருவாக்கம் செய்ய முயன்றனர்.
ஆனால், அது அவர்கள் எதிர்பார்த்த அசல் தன்மையைக் கொடுக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், படத்தைப் பார்த்த ஸ்டீபன் ஹாக்கிங், படம் உருவாக்கப்பட்டிருந்த விதம் மற்றும் அதன் இசைக்கோர்ப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, தனது உண்மையான எலக்ட்ரானிக் கணினிக் குரலையே படத்தில் பயன்படுத்திக் கொள்ள அதிகாரப்பூர்வமாகப் படக்குழுவிற்கு அனுமதி வழங்கினார்.
இது படத்தின் உண்மைத் தன்மையையும், இசையோடு கலந்த அதன் ஒலியமைப்பையும் சர்வதேச அளவில் மிக உன்னதமான நிலைக்குக் கொண்டு சென்றது.
இப்படத்தின் திரைக்கதையை எழுதிய அந்தோனி மெக்கார்டன், ஸ்டீபன் ஹாக்கிங்கின் புகழ்பெற்ற புத்தகத்தைப் படித்த நாள் முதலே அவரது வாழ்க்கையைத் திரைப்படமாக்க விரும்பினார்.
இதற்காக 2004 ஆம் ஆண்டு ஜேன் ஹாக்கிங் எழுதிய முதல் சுயசரிதை புத்தகத்தைப் படித்துவிட்டு, அவரிடம் எந்தவித ஒப்பந்தமும் இல்லாத நிலையிலும், அவரே சொந்தமாகத் திரைக்கதை எழுதத் தொடங்கினார்.
ஜேனை அவரது இல்லத்தில் பலமுறை சந்தித்து, மணிக்கணக்கில் தேநீர் மற்றும் ஷெரி மது அருந்திக்கொண்டே பல வருடங்களாகப் பேசி, இறுதியாக அவரைத் திரைப்பட உருவாக்கத்திற்குச் சம்மதிக்க வைத்தார்.
இந்த ஒட்டுமொத்தப் பேச்சுவார்த்தை மற்றும் திரைக்கதை உருவாக்கத்திற்கே படக்குழுவிற்குப் பத்து வருடங்கள் தேவைப்பட்டன.
நடிகர் எடி ரெட்மெய்ன் இந்த கதாபாத்திரத்திற்காகச் செய்த தயாரிப்புகள் படப்பிடிப்புத் தளத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தின.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் கதாபாத்திரமாகவே மாற விரும்பிய அவர், சுமார் ஆறு மாத காலம் ஹாக்கிங்கின் பழைய பேட்டிகள் மற்றும் காணொளிகளைத் தீவிரமாக ஆராய்ந்தார்.
ஒரு பேச்சுப் பயிற்சிப் பயிற்சியாளரின் உதவியோடு ஹாக்கிங்கின் தனித்துவமான உச்சரிப்பு முறையைக் கற்றுக்கொண்டார்.
படம் காலவரிசைப்படி படமாக்கப்படாததால், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காலகட்டத்து உடல் நிலைக்குத் தன் உடலை மாற்ற வேண்டிய சவால் அவருக்கு இருந்தது.
தசை நார்கள் சிதைவடையும் நோயின் தீவிரத்திற்கு ஏற்பத் தன் உடலின் தசை அசைவுகளைக் கட்டுப்படுத்த அவர் மேற்கொண்ட உடற்பயிற்சிகள் படப்பிடிப்பில் பெரும் திருப்புமுனையாக அமைந்தன.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக எடி ரெட்மெய்ன் நிஜ ஸ்டீபன் ஹாக்கிங்க நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது ஹாக்கிங்கின் உடல் முற்றிலும் முடங்கியிருந்தாலும், அவரது கண்களில் இருந்த துடிப்பும் புன்னகையும் எடியைக் கவர்ந்தன.
அதேபோல், ஜேன் ஹாக்கிங்கின் கதாபாத்திரத்தில் நடித்த பெலிசிட்டி ஜோன்ஸ், ஜேனை நேரில் சந்தித்து அவரது பழக்கவழக்கங்கள் மற்றும் பேசும் முறைகளை உற்று நோக்கினார்.
பின்னர் படப்பிடிப்பு முடிந்து தயாரான திரைப்படத்தை நிஜ ஜேன் ஹாக்கிங் பார்த்தபோது, திரையில் நடித்த பெலிசிட்டி ஜோன்ஸிற்குள் தன்னுடயை அசல் பிரதிபலிப்பைக் கண்டு வியந்து பாராட்டினார்.
முதன்முதலில் திரையிடப்பட்ட டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தத் திரைப்படத்தை நிஜ ஸ்டீபன் ஹாக்கிங் நேரில் அமர்ந்து பார்த்தார். படம் முடிந்து திரையரங்கில் விளக்குகள் ஒளிரத் தொடங்கியபோது, அங்கிருந்தவர்கள் ஹாக்கிங்கின் கன்னத்தில் இருந்து ஒரு கண்ணீர்த்துளியை அவரது செவிலியர் துடைத்ததை நெகிழ்ச்சியோடு கவனித்தனர்.
தனது வாழ்க்கையை இவ்வளவு தத்ரூபமாகப் திரையில் பதிவு செய்த படக்குழுவினரைப் பாராட்டியதோடு, தனது உண்மையான காப்புரிமை பெற்ற கணினிக் குரலையும், தான் பெற்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உயரிய பதக்கங்களையும் படப்பிடிப்பிற்குப் பயன்படுத்திக் கொள்ள அவர் தாராளமாக அனுமதி கொடுத்தார்.
படத்தின் கதை:-
1963-ஆம் ஆண்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் பிரிவில் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் புத்திசாலித்தனமான மாணவராக ஸ்டீபன் ஹாக்கிங் (எடி ரெட்மெய்ன்) அறிமுகமாகிறார்.
அதே பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படித்துக் கொண்டிருக்கும் ஜேன் வைல்டு (பெலிசிட்டி ஜோன்ஸ்) என்ற பெண்ணைச் சந்தித்து அவர் மீது காதல் வயப்படுகிறார்.
ஸ்டீபன் மிகவும் புத்திசாலியாக இருந்தாலும், அவருடைய பேராசிரியர்களும் நண்பர்களும் அவர் இன்னும் தனது பிஎச்டி ஆராய்ச்சிக்கு எந்த ஒரு தலைப்பையும் தேர்ந்தெடுக்காமல் இருப்பதை எண்ணி கவலைப்படுகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில், தனது வழிகாட்டியான பேராசிரியர் டென்னிஸ் சியாமா (டேவிட் தேவிலிஸ்) உடன் இணைந்து, ரோஜர் பென்ரோஸ் (கிறிஸ்டியன் மெக்கே) என்ற விஞ்ஞானி கருந்துளைகள் (Black Holes) பற்றி நிகழ்த்திய ஒரு சொற்பொழிவைக் கேட்கச் செல்கிறார் ஸ்டீபன். அந்தப் பிரபஞ்சத்தின் விசித்திரமான கருந்துளைகளே இந்தப் பிரபஞ்சம் உருவாவதற்குக் காரணமான தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கலாம் என்ற புதிய சிந்தனை அவருக்குள் உதிக்கிறது.
இதன் காரணமாக, அதையே தனது ஆராய்ச்சித் தலைப்பாக மாற்றிக்கொள்ள அவர் முடிவு செய்கிறார்.
ஆராய்ச்சிப் பணிகள் ஒருபுறம் உற்சாகமாகத் தொடங்கினாலும், எதிர்பாராத விதமாக ஸ்டீபனின் உடலமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அவரது தசை நார்கள் மெல்ல மெல்ல தங்களின் கட்டுப்பாட்டை இழந்து, உடலின் இயக்கங்களை ஒருங்கிணைக்க முடியாமல் அவர் அவதிப்படுகிறார்.
ஒரு கட்டத்தில் பல்கலைக்கழக வளாகத்திலேயே அவர் மிகக் கொடூரமாக கீழே விழுந்து அடிபடுகிறார்.
மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, அவருக்கு ஆரம்பக் கட்ட முற்போக்கு நரம்பியல் சிதைவு நோய் (Motor Neurone Disease / ALS) இருப்பது கண்டறியப்படுகிறது.
இந்த நோய் மனிதனின் உடலை முழுமையாக முடக்கி, அசைய முடியாமல் செய்து, இறுதியில் விழுங்குவதற்கும் சுவாசிப்பதற்கும் கூட வழியில்லாமல் செய்துவிடும் கொடூரமான நோயாகும்.
இதற்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் இல்லாததால், ஸ்டீபன் இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கெடு விதிக்கிறார்கள்.
ஆனால், இந்த நோய் அவரது மூளையையோ, சிந்திக்கும் ஆற்றலையோ, புத்திசாலித்தனத்தையோ எந்த வகையிலும் பாதிக்காது என்றும், ஆனால் காலப்போக்கில் அவரால் தன் மனதில் நினைப்பதை மற்றவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முடியாமல் போகும் என்றும் மருத்துவர் விளக்குகிறார்.
தன்னுடைய வாழ்நாள் இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் என்ற அதிர்ச்சியான உண்மையைக் கேட்ட ஸ்டீபன், கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்.
தன்னை உலகிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டு, யாரிடமும் பேசாமல் தன் அறையிலேயே முடங்கி, முழு நேரமும் ஆராய்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தத் தொடங்குகிறார்.
ஆனால், அவர் மீது உண்மையான காதல் கொண்ட ஜேன், ஸ்டீபனைத் தேடி வந்து தன் காதலை வெளிப்படுத்துகிறார்.
ஸ்டீபனின் உடல்நிலை எவ்வளவு மோசமடைந்தாலும் அவருடன் கடைசி வரை வாழத் தான் தயாராக இருப்பதாக உறுதியளிக்கிறார்.
அவர்களின் காதலின் பலமாக இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அவர்களுக்கு ராபர்ட் என்ற முதல் ஆண் குழந்தையும் பிறக்கிறது.
இதற்கிடையில், ஸ்டீபனின் நடக்கும் திறன் முழுமையாகப் பாதிக்கப்பட, அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
உடல்நிலை மோசமடைந்தாலும் ஸ்டீபன் தன் அறிவாற்றலால் பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் தேடுவதை நிறுத்தவில்லை.
கருந்துளைகளின் மையத்தில் இருக்கும் விண்வெளி நேர ஒருமைப்பாடு (Spacetime Singularities) குறித்த பென்ரோஸின் கோட்பாடுகளிலிருந்து உத்வேகம் பெற்று, ஸ்டீபன் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கிறார்.
ஒரு பெருவெடிப்பின் (Big Bang) மூலமாகவே இந்த பிரபஞ்சம் ஒரு கருந்துளையிலிருந்து உருவானது என்றும், அது இறுதியில் ஒரு பெரும் சுருக்கத்தோடு (Big Crunch) முடிவடையும் என்றும் அவர் தனது ஆய்வின் மூலம் உலகிற்கு நிரூபிக்கிறார்.
இதற்கிடையில், இந்தத் தம்பதியினருக்கு லூசி என்ற மகள் பிறக்கிறாள். ஸ்டீபனின் அறிவியல் புகழ் உலகமெங்கும் பரவிக்கொண்டே இருக்க, மறுபுறம் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது.
குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு, முற்றிலும் முடங்கிப் போன ஸ்டீபனின் அன்றாடத் தேவைகளையும் தனியொரு ஆளாகக் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஜேன் தள்ளப்படுகிறார்.
இதனால் ஜேனின் சொந்தக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு, அவர் மிகுந்த விரக்திக்கும் சோர்விற்கும் உள்ளாகிறார்.
தன் மனைவியின் இந்த நிலையைப் புரிந்துகொண்ட ஸ்டீபன், ஜேன் யாராவது ஒருவருடைய உதவியைப் பெற்றுக் கொண்டால் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பெருந்தன்மையுடன் கூறுகிறார்.
இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட ஜேன் ஒரு தேவாலயத்தின் பாடகர் குழுவில் இணைகிறார். அங்கு அவருக்கு ஜொனாதன் (சார்லி காக்ஸ்) என்ற விதவையின் அறிமுகம் கிடைக்கிறது.
ஜொனாதன் மிக விரைவிலேயே ஹாக்கிங் குடும்பத்தின் நெருங்கிய நண்பராக மாறுகிறார்.
ஜேனின் மூத்த மகன் ராபர்ட்டுக்கு பியானோ சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக மாறும் ஜொனாதன், ஸ்டீபனின் நோயைக் கையாள்வதற்கும், ஜேனுக்குப் பக்கபலமாக இருப்பதற்கும், குழந்தைகளுடன் விளையாடுவதற்கும் என அந்தக் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே மாறி உதவுகிறார்.
இந்தச் சூழ்நிலையில் ஜேனுக்கு டிமோதி என்ற மூன்றாவது குழந்தை பிறக்கிறது.
அப்போது ஸ்டீபனின் தாயார், அந்தக் குழந்தை ஜொனாதனுடையதா என்று ஜேனிடம் சந்தேகக் கணையைத் தொடுக்கிறார். இதனால் அந்தக் குடும்பத்தில் பெரும் சலசலப்பு ஏற்படுகிறது.
இந்தச் சந்தேகத்தால் அதிர்ச்சியடைந்த ஜொனாதன், ஹாக்கிங் குடும்பத்தை விட்டு விலக நினைக்கிறார். ஆனால், அவரும் ஜேனும் தனிமையில் இருக்கும்போது ஒருவருக்கொருவர் தங்கள் மனதில் இருக்கும் ஆழமான காதலை ஒப்புக்கொள்கிறார்கள்.
ஜொனாதன் குடும்பத்தை விட்டு தள்ளி நின்றாலும், ஸ்டீபன் ஜொனாதனை அழைத்து, தன் மனைவி ஜேனுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜொனாதனின் உதவி தேவைப்படுகிறது என்பதை எடுத்துக்கூறி அவரை மீண்டும் குடும்பத்துடன் சேர்த்துக் கொள்கிறார்.
இதற்கிடையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க லூகாசியன் கணிதப் பேராசிரியராக ஸ்டீபன் நியமிக்கப்படுகிறார்.
கருந்துளைகள் முற்றிலும் இருண்டவை அல்ல, அவை கதிர்வீச்சை (Radiation) வெளியிடுகின்றன என்ற தனது புதிய கண்டுபிடிப்பை அவர் உலகிற்கு அறிவிக்கிறார்.
இந்த ஆய்வின் மூலம் அவர் உலகப் புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளராக உயர்கிறார்.
1980-களில், பிரான்சின் போர்டோ நகருக்கு ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஸ்டீபனுக்கு திடீரென கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
அவருக்குக் கடுமையான நிமோனியா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் உயிர் பிழைக்க வேண்டுமானால் தொண்டையில் அறுவை சிகிச்சை (Tracheotomy) செய்ய வேண்டும் என்றும், ஆனால் இந்த சிகிச்சைக்குப் பிறகு அவரால் வாழ்நாளில் பேச முடியாது என்றும் மருத்துவர்கள் ஜேனிடம் கூறுகின்றனர்.
ஸ்டீபனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஜேன் அந்த அறுவை சிகிச்சைக்குச் சம்மதிக்கிறார்.
அறுவை சிகிச்சைக்குப் பின் ஸ்டீபன் தனது பேசும் திறனை முற்றிலும் இழக்கிறார். ஆரம்பத்தில் ஒரு எழுத்துப் பலகை மூலம் தனது புதிய செவிலியரான எலைன் மேசன் (மேக்சின் பீக்) என்பவருடன் தொடர்பு கொள்ளப் பழகுகிறார்.
பின்னர், அவருக்கு உள்ளமைக்கப்பட்ட குரல் அமைப்பைக் கொண்ட ஒரு கணினி கிடைக்கிறது. அதன் உதவியுடன் அவர் 'அ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்' என்ற புத்தகத்தை எழுதுகிறார்.
அந்தப் புத்தகம் உலக அளவில் மிகச் சிறந்த விற்பனைப் புத்தகமாக மாறி சாதனை படைக்கிறது.
1980-களின் பிற்பகுதியில், அமெரிக்காவிற்குச் சென்று ஒரு விருதினைப் பெற்று வர தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், தன்னுடன் செவிலியர் எலைன் மேசனை அழைத்துச் செல்லப் போவதாகவும் ஸ்டீபன் ஜேனிடம் கூறுகிறார்.
பல வருடங்களாகத் தங்களுக்குள் இருந்த கணவன்-மனைவி என்ற பந்தம் இப்போது இயங்கவில்லை என்ற கசப்பான உண்மையை ஜேன் உணர்கிறார்.
"நான் என்னால் முடிந்தவரை உனக்காகச் சிறப்பாகச் செய்தேன்" என்று கூறி, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்துகொள்ளச் சம்மதிக்கிறார்கள்.
ஸ்டீபன் தன் செவிலியரான எலைனைத் திருமணம் செய்துகொள்ள, ஜேனும் ஜொனாதனும் மீண்டும் இணைந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.
அதன்பின், அமெரிக்காவில் ஒரு பொதுச் சொற்பொழிவு மேடையில் ஸ்டீபன் பேசிக் கொண்டிருக்கும்போது, கூட்டத்தில் இருக்கும் ஒரு மாணவர் தன் பேனாவை கீழே தவறவிடுகிறார்.
அதைத் தற்செயலாகப் பார்க்கும் ஸ்டீபன், சக்கர நாற்காலியிலிருந்து தானே எழுந்து சென்று அந்தப் பேனாவை எடுத்து அவரிடம் கொடுப்பது போலத் தன் மனதில் கற்பனை செய்து பார்க்கிறார்.
தன் நோய் தன் உடலை எப்படியெல்லாம் முடக்கிப் போட்டுள்ளது என்பதை நினைத்து அவரது கண்களில் கண்ணீர் முட்டுகிறது.
உடனே தன் கணினி குரல் வழியே, வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், மனிதர்கள் எப்போதும் தங்கள் லட்சியங்களை நோக்கி ஓட வேண்டும் என்று கூறி, "உயிர் இருக்கும் வரை, அங்கு நம்பிக்கை இருக்கும்" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தி அரங்கையே அதிர வைக்கிறார்.
1989-ஆம் ஆண்டு, ஸ்டீபனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி கம்பேனியன்ஸ் ஆஃப் ஹானர்' என்ற விருது வழங்கப்படுகிறது.
இந்தச் சிறப்புமிக்க நிகழ்விற்குக் குயின் எலிசபெத் மகாராணியைச் சந்திக்கச் செல்லும்போது, தன் முன்னாள் மனைவி ஜேனையும், தன் மூன்று குழந்தைகளையும் தன்னுடன் வருமாறு ஸ்டீபன் அழைக்கிறார்.
அவர்கள் அனைவரும் அரண்மனைத் தோட்டத்தில் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியான ஒரு நாளைக் கொண்டாடுகிறார்கள்.
அப்போது, படத்தின் இறுதிக்காட்சியில் ஸ்டீபனின் வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும் அப்படியே தலைகீழாக ஓடத் தொடங்குகின்றன.
அவர் புகழ்பெற்ற விஞ்ஞானியானது, முடங்கியது, குழந்தைகளைப் பெற்றது எனத் தொடங்கி, இறுதியில் 1963-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விழாவில் ஜேனை அவர் முதன்முதலில் பார்த்த அந்தத் தொடக்கப் புள்ளிக்கே படம் பின்னோக்கிச் சென்று முடிகிறது.
காலத்தை பின்னோக்கி நகர்த்தி பிரபஞ்சத்தின் தொடக்கத்தைக் கண்டறிய முற்பட்ட ஸ்டீபனின் அதே ஆராய்ச்சி முறையைப் போல, அவரது காதல் வாழ்க்கையும் காலத்தின் பின்னோக்கிச் சென்று நிறைவடைகிறது.
அதன்பிறகு, திரையில் தோன்றும் ஒரு சுருக்கமான குறிப்பு, ஸ்டீபன் எழுதிய 'ய ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்' புத்தகம் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்றுத் தீர்ந்தன என்பதையும், பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு வழங்கிய நைட்ஹுட் பட்டத்தை அவர் மறுத்துவிட்டார் என்பதையும் விவரிக்கிறது.
அதேபோல் ஜேன், இடைக்கால ஸ்பானிஷ் கவிதைகளில் தனது பிஎச்டி முனைவர் பட்டத்தைப் பெற்று ஜொனாதனைத் திருமணம் செய்துகொண்டார் என்றும், ஸ்டீபனும் ஜேனும் இறுதிவரை நல்ல நண்பர்களாகவே நீடித்து, தங்கள் மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்றும் காட்டி கதை முழுமையாக நிறைவு பெறுகிறது.
மனிதனின் உடலை முடக்கிப் போட நினைக்கும் எந்தவொரு கொடிய நோயும், அவனது அசாத்தியமான அறிவுத் திறனையும் சாதிக்க வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசையையும் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்ற உன்னதமான வாழ்வியல் செய்தியை இப்படம் அழுத்தமாக உணர்த்துகிறது.
மருத்துவர்களால் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும் என்று கணிக்கப்பட்ட ஒரு மனிதர், தனது மன உறுதியாலும் பிரபஞ்சத்தின் ரகசியங்களை அவிழ்க்க வேண்டும் என்ற தீராத தேடலாலும் அந்த விதியையே மாற்றி எழுதி உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக உயர முடியும் என்பதை ஸ்டீபனின் வாழ்க்கை வரலாறு நமக்குக் காட்டுகிறது.
வாழ்க்கை நமக்கு எவ்வளவு கடினமான சூழ்நிலைகளையும் எதிர்பாராத திருப்பங்களையும் கொடுத்தாலும், "உயிர் இருக்கும் வரை அங்கு நம்பிக்கை இருக்கும்" என்ற உயரிய தத்துவத்தை இப்படம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
அறிவியல் சாதனைகளைத் தாண்டி, மனித உறவுகளின் ஆழத்தையும், காதலின் தியாகத்தையும், அதன் யதார்த்தமான மறுபக்கத்தையும் இப்படம் மிக நேர்த்தியாகப் பேசுகிறது.
ஸ்டீபனின் நோய் பாதிப்பை அறிந்த பிறகும் அவருடன் வாழத் துணிந்த ஜேனின் காதல், ஒரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் சுயநலமற்ற அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
அதே நேரத்தில், காலப்போக்கில் ஏற்படும் குடும்பப் பொறுப்புகள், உடல்நலக் குறைபாடுகள் மற்றும் மன அழுத்தங்கள் எப்படிப்பட்ட ஆழமான காதலிலும் விரிசல்களை ஏற்படுத்தக்கூடும் என்ற கசப்பான மனித எதார்த்தத்தையும் படம் மறைக்காமல் விவரிக்கிறது.
பிரிந்து வாழ்ந்தாலும் தங்களுக்குள் இருந்த நட்பையும் மரியாதையையும் இழக்காமல், பரஸ்பர புரிதலோடு கசப்புகளைக் கடந்து வாழ முடியும் என்பதை இவர்களின் வாழ்க்கை உணர்த்துகிறது.
இப்படம் உடல் தடைகளைக் கடக்கும் மனவலிமையையும், கால மாற்றங்களுக்குள் இயங்கும் மனித உணர்வுகளின் உன்னதத்தையும் ஒரே புள்ளியில் இணைத்து மனித வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை நமக்கு விதைக்கிறது.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்இரண்டாம்நூறு