ஆங்கிலேயர்களின் சிறப்பு என்றால் எதையும் முறையாக ஆவணப்படுத்துதல் என உறுதியாகச் சொல்லலாம்.
நமது மதராஸ் மாகாணத்தின் வற்றாத கடல் வளம் பற்றி நூற்றாண்டுகளுக்கு முன் வெளியான புத்தகம் Madras Fisheries Bureau Bulletin Vol 1, இதன் முதல் பதிப்பு 1915 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளனர், இணைப்பில் உள்ள மதராஸ் மாகாணத்தின் வரைபடம் பாருங்கள்.
1899 ஆம் ஆண்டு முதல் 1915 ஆம் ஆண்டு வரை மதராஸ் மாகாணத்தின் கடலில் கிடைத்த மீன்களின் தமிழ் பெயர்களை வகைப்படுத்தி அந்த மீன் பெயருக்கு நிகரான அறிவியல் பெயரையும் A முதல் V வரை மொத்தம் 382 எண்ணிக்கையில் ஆவணப்படுத்தியுள்ளனர், சில மீன்களுக்கு நான்குக்கும் மேற்பட்ட அறிவியல் பெயர்கள் தந்திருப்பதைப் பாருங்கள்.
இந்த 108 வருடங்களில் எத்தனை புதிய மீன்கள் இனம் கண்டறிந்து ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்? எத்தனை மீன்கள் இனம் அழிந்து போயிருக்கும்?
இந்த 382 கடல் மீன்களை நம் அரசு நம்மிடம் ஏற்கனவே உள்ள மீன் அருங்காட்சியகத்தில் முறையாக தரவு , தகவல்கள், படத்துடன் catalogue செய்து பார்வைக்கு வைத்து , அதன் பின்னே உயிருள்ள அதே வகை மீனையும் மீன் தொட்டியில் நீந்த விட்டு காட்சிப்படுத்தினால் நம் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சகத்துக்கு எத்தனை பெருமை சேர்க்கும்?
சென்னை மீனவர்கள் முதல்நாள் இறந்து போன மீனை மணலில் பிரட்டித் தந்து இப்போ பிடித்தது என மீன் பிரியர்களை ஏமாற்றுகிறார்கள் என்ற மலினமான அவதூறு கூட இதன் மூலம் துடைக்கப்படும்.
மீன் பிரியர்கள் அடுத்த முறை மீன் மார்க்கெட்டுக்கு போகையில் இந்த மீன் தெரியுமா? அந்த மீன் தெரியுமா? என்று கேட்டு மீனவர்களிடம் தகவல் வாங்குங்கள்.
நடிகர் சிவகுமார் சங்க காலத்திலிருந்த பூக்களின் பெயர்களைக் கடகடவென்று தமது பிரசங்கத்துக்கு நடுவே கூறி எல்லோரையும் பிரமிக்க வைப்பது வழக்கம். 100 மலர்களின் தமிழ் பெயர் பட்டியலை மடை திறந்தாற்போல் கையில் ஒரு சின்னக் குறிப்புக்கூட இல்லாமல் ஒப்பிப்பதைப் பார்த்துப் பலரும் வியந்திருப்போம், அது போல இந்த ஆவணப்படுத்தப்பட்ட 382 தமிழ் மீன் பெயர்களை ஒப்பித்து ஆவணப்படுத்தினால் நன்றாக இருக்கும்,பள்ளியில் மாணவச் செல்வங்களுக்கும் பழம்பெரும் மீன் வகைகளின் பெயரை ஒப்பிக்கும் போட்டி நடத்தலாம்.
இலவச மின் புத்தகம் தரவிறக்க
https://archive.org/details/madrasfisheriesb01madr