போஸ்டர் மட்டும் இண்டர்நேஷனல் ரேஞ்சுக்கு |
நான் பார்த்ததில் பிடித்த படம் பற்றி மட்டுமே என் வலைப்பூவில் எழுதவேண்டும் என்று நினைத்திருக்கிறேன், இருந்தும் இது போல விதிவிலக்குகள் அமைந்துவிடுகின்றன. இதை விமர்சனம் என்னும் சொல்லுக்குள் என்னால் அடக்கமுடியவில்லை. ஒரு உள்ளக்குமுறல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
விகடனில் மிஸ்டர் மார்க்ஸ் என்றொரு சிறுகதை, செழியன் எழுதி படித்ததில் மனதை மிகவும் பாதித்தது, மார்க்ஸ் போன்று நல்ல தகுதியும் திறமையும் பல வருட திரைஅனுபவமும் இருந்தும், கல்லைகண்டால் நாயை காணோம் ,நாயை கண்டால் கல்லைக் காணோம் என்னும் அதிர்ஷ்டமின்மையால், சில இயக்குனர்கள் சமூகத்தில் கடைசிவரை சாதிக்க முடியாமல், புள்ளியாய் குறுகி , மறைந்தும் போகின்றனர். அது ஏன்? என்பதற்கான விடை இந்த படத்திலேயே இருக்கிறது,
மார்க்ஸ் போல திறமையான இயக்குனருக்கு போக வேண்டிய நல்ல வாய்ப்பை இதுபோல ரவிவர்மன்கள் நான் செய்வேன் என்று செய்தால் ஏன்? மார்க்ஸ் போல ஆட்கள் தெரு நாய் போல ஏழ்மையில் வீழ்ந்து கடைசி வரை சொந்தபடம் செய்யமுடியாமல் கூனிக்குறுகி செத்துப் போகமாட்டார்கள்?!!!
நல்லவனுக்கு கிடைக்கும் எல்லாமே கெட்டவனுக்கும் கிடைத்துவிடுகிறதே! என்ற கமல்ஹாசனின் ஆதங்கத்துக்கான காரணமும் படத்தில் உண்டு. வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம், என்று பேர் வச்சானாம். என்று எம்.எஸ்.பாஸ்கர் ஒரு படத்தில் சொல்லுவார். அதற்கான அர்த்தமும் இதை பார்த்ததும் விளங்கிக்கொண்டேன்.
இயக்குனர் ரவிவர்மன் தமக்கு தாமே இந்தபெயரை சூட்டிக்கொண்டிருந்தால் தயவுசெய்து அதை மாற்றிக்கொள்ளவேண்டும், ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் அகில உலக கவனத்தை பெற்றவை. சிறந்த கம்போசிஷன்கள், தனித்துவமான இந்தியக்கலை ஓவிய பாணிக்கு பெயர்போனவை, அவர் பெயரை வைத்துக்கொண்டு இது போல படம் கொடுத்திருப்பது ஒரு உன்னத கலைஞனுக்கு செய்யும் அவமரியாதை.
தமிழகத்தில் ஏனைய புறநகர் பகுதிகளில் வீடு கட்டும் சொந்தக்காரர்கள்,ஆர்கிடெக்டிடம் போய் டிசைன் வாங்கினால் டிசைன் செய்ய ஃபீஸ் தரவேண்டும், என்று எண்ணி கொத்தனார் மேஸ்திரியிடமே வேலையை ஒப்படைத்து, மிகக் கண்ணறாவியாக ஒரு கட்டிடத்தையும் கட்டி சுற்றுப்புறத்தையும் அசிங்கப்படுத்தி, அதற்கு வாஸ்து வண்ணங்கள் என்று மிட்டாய் ரோஸ், ஊதாப்பூ வண்ணம் போன்ற வண்ணங்களை தான் தோன்றித்தனமாக அடித்து கிரஹப்பிரவேசம் செய்து நாங்களே முன்ன நின்னு கட்டுனது என்பார்கள் , அந்த வீடு அக்கம்பக்கம் போவோர் வருவோரை துன்புறுத்தும் படி இருக்கும். அதுபோல ஒரு மோசமான உதாரணம் இந்த படம்.
மலையாள பிட்டு படம் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஜெய் டே வான்[ஜெய தேவன்] என்னும் இயக்குனர் பற்றி தெரிந்திருக்கும். இவரின் மூலதனம் சில லட்சங்கள். ஷகிலா, ரேஷ்மா, மரியா, சிந்து, வெற்றி, ப்ரேம் குமார். ஒரு ஆம்னி வேன்,ஒரு அண்ணாநகர் அல்லது அடையார் பங்களா,மொத்தமே இவை தான் படத்துக்கான ப்ராப், அந்த வகைப் படம் கூட கதை என்ற ஒன்றை கொண்டிருக்கும், பார்ப்பவருக்கு அது ஸ்மூச்சிங் சீன்களுக்கான பிரதான படம் என்ற பிரக்ங்யை இருக்குமாதலால் லாஜிக் பார்க்க தோன்றாது, எப்போடா? சீன் வரும் என்றே பார்க்க தோன்றும், அந்த அளவுக்கு கூட லாஜிக் இல்லாத படத்தை என்ன? ஒரு ஈகோவுடன் எடுத்து, எல்லோரின் நேரத்தையும் வீணாக்கி பொய்யான மாயை உண்டாக்கி மார்கெட்டிங் செய்து நம்மையும் ஏமாற்றியுள்ளார் ரவிவர்மன்.
படத்தை பற்றி இன்னும் என்னத்த சொல்ல?ஒரு திரைப்படக்கல்லூரி மாணவர் இயக்கும் தீஸீஸ் படம் கூட ஆத்மார்த்தமான அற்பணிப்பை கொண்டிருக்கும். ஒரு நல்ல இயக்குனருக்கு கிடைத்திருக்கவேண்டிய நியாமான வாய்ப்பை இந்த வீணர் பாழ்செய்திருக்கிறார்.
இயக்குனர் சேரனின் டூரிங் டாக்கீஸ் தொடரின் ஒரு பகுதியில் பணக்கார பண்ணையார் ஊரிலிருந்து வாராவாரம் படம் எடுக்கிறேன் என்று வந்து ரூம் போட்டு ,டிபன் காபி, ஃபுல்மீல்ஸ் தான் மட்டும் சாப்பிட்டு , கதை கேட்டு, சேரனை ஒருவருடம் அலைக்கழித்ததைப் பற்றி சொல்லுவார், படிக்கையிலேயே உள்ளம் ரணமாகிவிடும். அப்படி சில தயாரிப்பாளர்கள் இருக்கும் உலகில் ,தனக்கு கிடைத்த ஒரு அருமையான தயாரிப்பாளரை இப்படியா ஒருவர் மொட்டையடிப்பது?!!!
மக்கள் இனியேனும், போஸ்டர், ட்ரெய்லர், விகடன் பேட்டி, ப்ரொமோஷன், போன்றவற்றை நம்பி ஏமாறாமல், ஜாக்கிரதையாக படத்துக்கு போகவேண்டும், இல்லாவிட்டால் எதிர்ப்பார்த்துப்போகும் படம் இது போல திருஷ்டிப்பரிகாரமாக இருந்து தொலையும். இதுபோல ஹைபட்ஜெட் குப்பைகளால் களவாணி போன்ற நல்ல படைப்புகளை கூட தரவிறக்கி பார்த்துவிட்டு திரையில் பார்க்க வேண்டிய அவலத்தில் நாம் உள்ளோம்.
" இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அதன் கண் விடல்."
அதனை அதன் கண் விடல்."
இத்தகைய தன்மையுடைய செயலை, இந்தக் காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டபின், அப்பணியில் அவனை ஏவுதல் வேண்டும் - தெரிந்து வினையாடல்- குறள் - 517
அப்படி ஒருவர் செய்யத் தவறினால் ஆழம் தெரியாமல் காலை விட்டு சேற்றில் சிக்கிக்கொள்வதற்கு சமம். இது அந்த தயாரிப்பாளர், இயக்குனர், அந்த உப்புசப்பில்லாத முகம் செத்த ஹீரோ, எல்லோருக்கும் பொருந்தும், நாயகி சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா,பானாகாத்தாடி போன்ற படங்களில் தன் திறமையை நிரூபித்திருப்பதால் எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
======0000=======
மாஸ்கோவின் காவிரி=காண்போருக்கு கொலைவெறி
இதோ ஆட்டோ ஓரம்போ இயக்குனர்களிடமிருந்து மீண்டும் ஒரு நம்பிக்கை ஒளி:-
வ-குவாட்டர் கட்டிங் பட முன்னோட்ட சலனப்படம்.