ஸ்பாட்லைட் Spotlight
2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். டாம் மெக்கார்த்தி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இது வாழ்க்கை வரலாற்று புலனாய்வு நாடக வகைத் திரைப்படம்.
போஸ்டன் குளோப் நாளிதழின் புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் குழு, கத்தோலிக்க திருச்சபைக்குள் பல தசாப்தங்களாக மறைக்கப்பட்டிருந்த சிறுவர் மீதான முறைகேடுகளை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்த உண்மைச் சம்பவமே இப்படத்தின் கதை.
இத்திரைப்படத்தின் அடிநாதம் அதிகாரமிக்க நிறுவனங்களின் தவறுகளுக்கு எதிராக உண்மையை நிலைநாட்ட துணியும் நேர்மையான பத்திரிகை தர்மமாகும்.
சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் சக்திவாய்ந்த அமைப்பு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தசாப்தங்களாகச் செய்து வந்த அநீதிகளையும் முறைகேடுகளையும் தனிப்பட்ட மனிதர்கள் சிலர் எவ்வாறு வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார்கள் என்பதை இப்படம் பேசுகிறது.
பாதிக்கப்பட்ட எளிய மனிதர்களின் குரலாக மாறி, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதே ஒரு நல்ல ஊடகத்தின் கடமை என்பதை இப்படம் மிக ஆழமாக உணர்த்துகிறது.
இதில் தனிப்பட்ட நபர்களைக் குற்றம் சாட்டுவதை விட, ஒட்டுமொத்த அமைப்பின் கூட்டுத் தோல்வியையும் அதன் முறைகேடான மறைப்புகளையும் அம்பலப்படுத்துவதே முதன்மையான நோக்கமாக உள்ளது.
எவ்வளவு பெரிய தடையோ அல்லது சமூக அழுத்தமோ வந்தாலும், சளைக்காமல் ஆதாரங்களைத் தேடிப் பயணிக்கும் தளர்வறியாத மனித உழைப்பும் நேர்மையும் தான் இந்த ஒட்டுமொத்தக் கதையின் மையப்புள்ளியாகவும் ஆன்மாவாகவும் விளங்குகிறது.
இப்படத்தில் மார்க் ருஃபாலோ, மைக்கல் கீட்டன், ரேச்சல் மெக்ஆடம்ஸ், லீவ் ஷ்ரைபர் போன்ற நடிகர்கள் தங்களின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மார்க் ருஃபாலோ மற்றும் ரேச்சல் மெக்ஆடம்ஸ் ஆகியோரின் சிறப்பான நடிப்பு அவர்களுக்கு ஆஸ்கார் விருது பரிந்துரைகளையும் பெற்றுத்தந்தது.
டாம் மெக்கார்த்தியின் இயக்கம் ஒரு பத்திரிகை அலுவலகத்தின் நிஜமான பரபரப்பையும் புலனாய்வின் தீவிரத்தையும் மிக நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்கிறது.
மசனோபு தகயநாகியின் ஒளிப்பதிவு கதையின் உண்மைத் தன்மைக்கு வலு சேர்க்கும் விதமாக இயல்பான கோணங்களில் அமைந்துள்ளது.
இப்படம் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் மிக உயரிய விருதான சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை ஆகிய இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றது.
அத்துடன் சிறந்த கூட்டு நடிப்பிற்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது உட்பட உலகளவில் பல முக்கியமான விருதுகளையும் பாராட்டுகளையும் இப்படம் பெற்றுள்ளது.
இயக்குநர் டாம் மெக்கார்த்திக்கு இந்தத் திரைப்படத்தை உருவாக்கும் வாய்ப்பு முதன்முதலில் வந்தபோது, தரவுகளின் பிரம்மாண்டத்தைக் கண்டு அஞ்சி, அவர் அதைச் செய்ய மறுத்துவிட்டார்.
பின்னர் அதன் தீவிரத்தை உணர்ந்து இணை எழுத்தாளர் ஜோஷ் சிங்கருடன் இணைந்து திரைக்கதையை எழுதத் தொடங்கினார்.
நிஜப் பத்திரிகையாளர்கள் குழுவாக இணைந்து புலனாய்வு செய்வதைப் போலவே, இவர்கள் இருவருமே ஒரு அறையில் அமர்ந்து நீண்ட விவாதங்கள் மற்றும் ஆய்வுகள் மூலம் இந்தத் திரைக்கதையைச் செதுக்கினர்.
இந்தத் திரைக்கதை பின்னர் திரைப்படமாகத் தயாரிக்கப்படாத சிறந்த கதைகளின் பட்டியலான பிளாக் லிஸ்ட்டில் இடம் பிடித்திருந்தது.
பிரபல ஹாலிவுட் நடிகர் பிரையன் கிரான்ஸ்டனுக்கு இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தி இன்ஃபில்ட்ரேட்டர் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தேதிகளுடன் இது ஒத்துப்போகாததால் அவரால் இதில் நடிக்க முடியாமல் போனது.
இவ்வளவு சிறந்த ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டதற்காக அவர் பின்நாட்களில் பகிரங்கமாகத் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
படப்பிடிப்பின்போது நிஜப் பத்திரிகையாளர்களான சாஷா ஃபைபர், மைக்கல் ரெசென்டிஸ் மற்றும் வால்டர் ராபின்சன் ஆகியோர் ஃபென்வே பார்க் மைதானத்தில் நடக்கும் ஒரு காட்சியின் பின்னணியில் யாருக்கும் தெரியாமல் வந்து சென்றுள்ளனர்.
அதேபோல், செப்டம்பர் 11 தாக்குதல் செய்திகளைச் சேகரிப்பது குறித்துப் பேசும் ஒரு காட்சியில், நிஜப் பென் பிராட்லி ஜூனியர் பின்னணியில் செய்தியாளர்களோடு ஒருவராக அமர்ந்து தன் கதாபாத்திரத்தின் நடிப்பைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
திரைப்படத்தில் போஸ்டன் நகரின் காவல் நிலையமாகக் காட்டப்படும் இடம் உண்மையில் டொராண்டோவில் உள்ள ஒரு பழைய காவல் நிலையமாகும். அதேபோல் போஸ்டன் குளோப் நாளிதழின் பிரம்மாண்டமான அலுவலக உட்புறக் காட்சிகள் அனைத்தும் டொராண்டோவில் இருந்த ஒரு பழைய சீர்ஸ் நிறுவனக் கட்டிடத்தை அப்படியே செய்தித்தாள் அலுவலகமாக மாற்றிப் படமாக்கப்பட்டன.
திரைப்படத்தின் எடிட்டிங் செயல்முறை மட்டும் தொடர்ந்து எட்டு மாதங்கள் நடைபெற்றது. படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காகவும், தேவையற்ற தொய்வுகளைத் தவிர்ப்பதற்காகவும் ஐந்து முழுமையான காட்சிகளையும், பல காட்சிகளின் உரையாடல்களையும் எடிட்டர் டாம் மெக்ஆர்டில் நீக்கினார்.
நிஜ வாழ்க்கையில் பத்திரிகையாளர் மேட் கரோல், சிறுவர்களைத் தவறாக நடத்திய முதன்மைப் பாதிரியாரான ஜான் கோகனின் வீட்டிற்கு அருகில்தான் வசித்து வந்தார்.
கோகனின் புகைப்படத்தைத் தன் வீட்டு ஃபிரிட்ஜில் ஒட்டி வைத்துத் தன் குழந்தைகளை எச்சரித்திருந்தார். ஆனால், இந்த உண்மையை அப்படியே திரையில் காட்டினால் பார்ப்பவர்கள் இது ஏதோ நாடகத்தனமாக இருக்கிறது என்று நம்ப மறுத்துவிடுவார்கள் என இயக்குநர்கள் கருதினர்.
இதனால் திரைப்படத்தில் அது பாதிரியார்களுக்கான ஒரு சிகிச்சை மையம் என்பதாகச் சற்றே மாற்றப்பட்டது.
பத்திரிகையாளர் ராபின்சன் 1993 இல் இருபது பாதிரியார்களின் பட்டியலைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டார் என்ற தவறைப் பத்திரிகையாளர்கள் தங்களின் புலனாய்வின் போது கண்டுபிடிக்கவில்லை.
திரைக்கதைக்காக வழக்கறிஞர் எரிக் மேக்லீஷை இயக்குநர்கள் நேர்காணல் செய்தபோதுதான் இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. நாடகத் தன்மையைக் கூட்டுவதற்காக இந்த நிஜச் சம்பவம் திரைக்கதையில் மிக முக்கிய திருப்பமாக இணைக்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் வெளியீடு, அதற்குப் பின் கிடைத்த வரவேற்பு மற்றும் நிஜ உலகத் தாக்கங்கள் சார்ந்த இரண்டாம் கட்ட நிகழ்வுகள் இன்னும் பல சுவாரசியங்களைக் கொண்டுள்ளன.
வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டபோது, அரங்கம் நிறைந்த கைதட்டல்களைப் பெற்றது. படத்தின் இறுதிக் காட்சியில், தவறிழைத்த கார்டினல் பெர்னார்ட் லா போஸ்டன் நகரில் இருந்து மாற்றப்பட்டு, ரோமில் உள்ள ஒரு புகழ்பெற்ற பேராலயத்தின் உயர் பதவிக்கு உயர்த்தி அமர்த்தப்பட்டார் என்ற உண்மைத் தகவல் திரையில் காட்டப்பட்டபோது, ஒட்டுமொத்த சர்வதேச ரசிகர்களும் அந்த நிர்வாக முரணைப் பார்த்து அரங்கமே அதிரும் வண்ணம் எள்ளலுடன் சிரித்தனர்.
எண்பத்தி எட்டாவது அகாடமி விருதுகள் (ஆஸ்கார்) விழாவில் இப்படம் மிக உயரிய விருதான சிறந்த திரைப்பட விருதையும், சிறந்த அசல் திரைக்கதை விருதையும் வென்றது. ஆஸ்கார் வரலாற்றில் 1952 ஆம் ஆண்டிற்குப் பிறகு, மிக முதன்மையான சிறந்த திரைப்பட விருதை வென்று, அதனுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக இரண்டே இரண்டு விருதுகளை மட்டுமே பெற்ற அரிய திரைப்படமாக இது மாறியது.
மேலும், குறைவான வசூலோடு ஆஸ்கார் வென்ற படங்களின் பட்டியலிலும் இது ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்தது.
கத்தோலிக்கத் திருச்சபையின் முறைகேடுகளைப் பேசும் படம் என்பதால் வேட்டிகன் இதற்கு என்ன எதிர்வினை ஆற்றும் என்ற பயம் பலருக்கும் இருந்தது. ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, வத்திக்கான் அதிகாரப்பூர்வ வானொலி இத்திரைப்படத்தைப் பாராட்டியதோடு, தவறுகளை ஒப்புக்கொள்ளவும், நீதி வழங்கவும் இப்படம் உதவுகிறது என்று குறிப்பிட்டது.
மேலும், பாலியல் அத்துமீறல்களை விசாரிக்கும் வத்திக்கானின் உயர் மட்டக் குழுவினர் இப்படத்தைத் தனிப்பட்ட முறையில் திரையிட்டுப் பார்த்தனர்.
ஆஸ்கார் வெற்றிக்குப் பிறகு, இது கத்தோலிக்கத்திற்கு எதிரான படம் அல்ல என்று வத்திக்கான் நாளிதழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், ரோமில் உள்ள மதகுருமார்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக இப்படத்தைப் பார்க்கப் பரிந்துரைத்துக் கொண்டனர்.
திரைப்படத்தில் போஸ்டன் காலேஜ் உயர்நிலைப் பள்ளியின் பொது உறவு அதிகாரியாக வரும் ஜாக் டன் என்ற நிஜ மனிதரின் கதாபாத்திரம், அநீதிகளுக்குப் பொறுப்பற்றவராகக் காட்டப்பட்டிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், தான் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காகப் போராடியவன் என்றும், தன்னைத் தவறாகச் சித்தரித்துவிட்டார்கள் என்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராகப் பகிரங்கமாகக் குரல் கொடுத்தார்.
ஜாக் டன்னின் போராட்டத்தைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஓபன் ரோடு ஃபிலிம்ஸ் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அதில், கதையின் நாடகத் தன்மையைக் கூட்டுவதற்காகவே சில கற்பனையான உரையாடல்கள் அவரது கதாபாத்திரத்திற்கு வழங்கப்பட்டதாகவும், மூடிமறைப்புச் சம்பவங்களில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை ஒப்புக்கொள்வதாகவும் அறிவித்தது.
இதன் மூலம் திரைப்பட வரலாற்றில் ஒரு நிஜ மனிதரின் நேர்மைக்காகத் தயாரிப்பு நிறுவனம் பகிரங்க அறிக்கை வெளியிட்ட சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியது.
திரைப்பட விமர்சனங்களை ஒருங்கிணைக்கும் உலகப் புகழ்பெற்ற ராட்டன் டொமேட்டோஸ் இணையதளத்தில் இப்படம் 97 சதவீத அரிய அங்கீகாரத்தைப் பெற்றது.
பொதுவாகப் பல திரைப்படங்களுக்கு விமர்சகர்களிடையே மாறுபட்ட கருத்துகள் எழும். ஆனால், இப்படத்தின் நேர்த்தியான திரைக்கதையையும், உண்மைச் சம்பவத்தை மிக யதார்த்தமாகக் கையாண்ட விதத்தையும் பாராட்டி, உலகெங்கிலும் உள்ள சுமார் 120-க்கும் மேற்பட்ட முன்னணித் திரைப்பட விமர்சகர்கள் மற்றும் இதழ்கள் தங்களின் அந்த ஆண்டின் மிகச்சிறந்த பத்து திரைப்படங்களின் பட்டியலில் இதற்கு முதலிடத்தை அளித்துக் கௌரவித்தனர்.
இப்படம் ஆஸ்கார் மற்றும் ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகளைத் தாண்டி, உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு திரைத்துறை மற்றும் விமர்சகர்கள் சங்கங்களின் விருதுகளையும் பரிந்துரைகளையும் அள்ளிக் குவித்தது.
அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் (AFI) இதனை அந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் சங்கங்கள் இப்படத்திற்குச் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான முதன்மை விருதுகளை வழங்கின.
திரைக்கதை எழுத்தாளர்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரிய ஒரு உத்வேகமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மேற்கு மற்றும் கிழக்கு எழுத்தாளர்கள் சங்கங்கள் (WGA) இணைந்து நடத்திய வாக்கெடுப்பில், 21 ஆம் நூற்றாண்டின் இதுவரை வெளிவந்த மிகச்சிறந்த 101 திரைக்கதைகளின் பட்டியலில் இத்திரைப்படம் 31 ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.
எந்தவொரு வணிகரீதியான மசாலாத்தனமும் இன்றி, ஒரு நிஜமான பத்திரிகை விசாரணையை அதன் உண்மைத்தன்மை மாறாமல் விறுவிறுப்பாக எழுதியதே இதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.
பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (BBC) உலகெங்கிலும் உள்ள முன்னணித் திரைப்பட விமர்சகர்களைக் கொண்டு ஒரு சர்வதேச வாக்கெடுப்பை நடத்தியது.
அதில் 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகளவில் வெளியான மிகச்சிறந்த 100 திரைப்படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் 88 ஆவது இடத்தைப் பெற்று, உலக சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு அழியாத முத்திரையைப் பதித்தது.
==============================
படத்தின் கதை:-
1976 ஆம் ஆண்டு போஸ்டன் நகரத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் இரண்டு போலீசார் உரையாடலில் படல் துவங்குகிறது.
ஜான் கோகன் என்ற பாதிரியார் குழந்தைகளைத் தவறாக நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டதை அவர்கள் விவாதிக்கிறார்கள்.
அப்போது ஒரு பெரிய மதகுரு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாயைச் சந்தித்து, பாதிரியார் கோகனை அந்தப் பகுதியில் இருந்து மாற்றிவிடுவதாக வாக்குறுதி கொடுக்கிறார்.
அதேசமயம் ஒரு உதவி மாவட்ட வழக்கறிஞர் அந்த போலீஸ் நிலையத்திற்கு வந்து, இந்தக் கைதை பத்திரிகைகளுக்குத் தெரியாமல் ரகசியமாக மூடிவைக்கச் சொல்கிறார்.
பாதிக்கப்பட்ட தாயும் போலீசில் புகார் கொடுக்க மறுத்துவிடுவதால், பாதிரியார் கோகன் எந்தச் சத்தமும் இல்லாமல் ரகசியமாக விடுதலை செய்யப்படுகிறார்.
2001 ஆம் ஆண்டில் போஸ்டன் குளோப் பத்திரிகையின் புதிய தலைமை எடிட்டராக மார்ட்டி பேரன் (லீவ் ஷ்ரைபர்) பொறுப்பேற்கிறார்.
அவர் அந்தப் பத்திரிகையில் மிக ரகசியமாகப் புலனாய்வு செய்யும் ஸ்பாட்லைட் குழுவின் தலைவரான வால்டர் ராபி ராபின்சனை (மைக்கல் கீட்டன்) நேரில் சந்திக்கிறார்.
பத்திரிகையை மக்களுக்குப் பயனுள்ள ஒன்றாக மாற்ற வேண்டும் என்று பேரன் ஆசைப்படுகிறார்.
ஒருநாள், மிட்செல் கராபெடியன் என்ற வக்கீல் கார்டினல் பெர்னார்ட் லா என்ற பெரிய பேராயர் மீது குற்றம் சாட்டிய செய்தியைப் பேரன் படிக்கிறார்.
பாதிரியார் கோகன் குழந்தைகளைத் துன்புறுத்தியது தெரிந்தும் பேராயர் அதைத் தடுக்காமல் மறைத்தார் என்பதுதான் அந்தச் செய்தி.
இதைப் பார்த்த பேரன், இந்த வழக்கின் பின்னணியை முழுமையாக விசாரிக்கும்படி ஸ்பாட்லைட் குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.
இதனால் ஸ்பாட்லைட் குழுவைச் சேர்ந்த மைக்கல் ரெசென்டிஸ் (மார்க் ருஃபாலோ) என்ற பத்திரிகையாளர் வக்கீல் கராபெடியனைத் (ஸ்டான்லி துட்சி) தொடர்பு கொள்கிறார்.
ஆனால் அவர் ஆரம்பத்தில் பேட்டி கொடுக்க மறுக்கிறார். தன் மேலதிகாரிகள் வேண்டாம் என்று சொல்லியிருந்தும், ரெசென்டிஸ் தனியாகச் சென்று தான் ஸ்பாட்லைட் குழுவின் பத்திரிகையாளர் என்பதை வக்கீலிடம் வெளிப்படையாகக் கூறி அவரைத் தனக்கு உதவி செய்யச் சம்மதிக்க வைக்கிறார்.
ஸ்பாட்லைட் குழுவினர் ஆரம்பத்தில் இது ஏதோ ஒரு பாதிரியார் செய்த தவறு, அவரை ஒரு தேவாலயத்திலிருந்து இன்னொரு தேவாலயத்திற்கு மாற்றி மூடிமறைத்திருக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறார்கள்.
ஆனால், விசாரிக்க விசாரிக்க மாசசூசெட்ஸ் மாநிலம் முழுவதுமே பல பாதிரியார்கள் இதேபோல தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அவர்களுக்குத் தெரியவருகிறது.
இதன் மூலம் இது ஏதோ தனிப்பட்ட தவறு இல்லை, ஒட்டுமொத்தத் திருச்சபையே சேர்ந்து செய்யும் ஒரு பெரிய ஏமாற்று வேலை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
பாதிரியார்களால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களுக்காகப் போராடும் ஒரு அமைப்பின் தலைவரான பில் சவியானோவை (நீல் ஹஃப்) அவர்கள் சந்தித்துப் பேசுகிறார்கள்.
அவர் கொடுத்த ஆலோசனையின்படி, தங்கள் தேடலை 13 பாதிரியாராகப் பத்திரிகையாளர்கள் விரிவுபடுத்துகிறார்கள்.
திருச்சபையால் தன்னிடம் சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட, தவறான நடத்தை கொண்ட பாதிரியார்களுக்குப் போதனை செய்த மனநல மருத்துவர் ரிச்சர்ட் சைப்பை அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்.
போஸ்டன் நகரில் மட்டும் சுமார் 90 பாதிரியார்கள் (அதாவது மொத்தப் பாதிரியார்களில் 6 சதவீதம் பேர்) இது போன்ற தவறுகளைச் செய்திருக்கலாம் என்று அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்.
இதையடுத்து அந்தப் பத்திரிகைக் குழுவினர் 87 பாதிரியார்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களால் பாதிக்கப்பட்ட பலரை நேரில் தேடிச் சென்று பேட்டி எடுக்கிறார்கள்.
இந்த வழக்கின் பிரம்மாண்டத்தைப் பார்க்கப் பார்க்கப் பத்திரிகையாளர்களின் சொந்த வாழ்க்கையிலும் நிம்மதி கெடுகிறது.
பாலியல் குற்றங்கள் செய்த பாதிரியார்களைத் தனியாகத் தங்கவைத்து அவர்களுக்குச் ரகசியமாகச் சிகிச்சை அளிக்கும் ஒரு கூடம், தன் வீட்டுத் தெருவிலேயே இருப்பதை மேட் கரோல் (பிரையன் டி ஆர்சி ஜேம்ஸ்) என்ற பத்திரிகையாளர் கண்டுபிடிக்கிறார்.
ஆனால், செய்தி வெளியாகும் வரை இந்த ரகசியத்தை அவசரப்பட்டு யாரிடமும் சொல்லக் கூடாது என்பதால், தன் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூட இது குறித்து எச்சரிக்க முடியாமல் தவிக்கிறார்.
சாஷா ஃபைபர் (ரேச்சல் மெக்ஆடம்ஸ்) என்ற பெண் பத்திரிகையாளர், தன் பாட்டியுடன் வழக்கமாகச் செல்லும் தேவாலயத்திற்குள் நுழைய முடியாமல் மனதிற்குள் வேதனைப்படுகிறார்.
மற்றொரு பக்கம், மற்ற போட்டிப் பத்திரிகைகள் அரைகுறைத் தகவல்களோடு இந்தச் செய்தியை முன்கூட்டியே வெளியிட்டுவிட்டால் திருச்சபை தப்பித்துவிடும் என்பதால், செய்தியை உடனே முழு ஆதாரங்களோடு வெளியிட வேண்டும் என்று ரெசென்டிஸ் அவசரப்படுகிறார்.
ஆனால், ராபின்சனின் உயர் சமூகக் கத்தோலிக்க நண்பர்கள், திருச்சபையின் மானத்தைக் காப்பாற்ற இந்த விசாரணையைக் கைவிடும்படி ராபின்சனுக்குப் பல வழிகளில் நெருக்கடி கொடுக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடக்கிறது.
இதனால் ஒட்டுமொத்த நாடும் பதற்றமடைய, ஸ்பாட்லைட் குழுவினர் தங்கள் புலனாய்வைச் சில காலம் தள்ளிவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அதன் பிறகு, இந்த மூடிமறைப்பு வேலைகளுக்குப் பேராயர் கார்டினல் லா நேரடியாகக் காரணம் என்பதற்கான நீதிமன்ற ஆவணங்கள் தற்காப்புப் பெட்டகத்தில் பத்திரமாக இருப்பதை வக்கீல் கராபெடியன் பத்திரிகையாளர் ரெசென்டிஸிடம் சொல்கிறார்.
அந்த ஆவணங்களில், பாதிரியார் கோகனின் அசிங்கமான புத்தியைப் பற்றி கார்டினல் லாவுக்கு எச்சரிக்கை விடுத்து பிஷப் ஜான் மைக்கேல் டி ஆர்சி எழுதிய கடிதமும் இருக்கிறது.
எடிட்டர் பேரனின் ஆலோசனையின்படி, ராபின்சன் தன் குழுவினரை இன்னும் தீவிரமாகத் தேடச் சொல்கிறார்.
ஏனென்றால், பேராயர் கார்டினல் லா சாதாரணப் பாதிரியார்களை வெறுமன அழுகிய ஆப்பிள்கள் அவர்கள் என்று சொல்லித் தப்பித்துவிடக் கூடாது, ஒட்டுமொத்தத் திருச்சபையின் திட்டமிட்ட சதியை நாம் உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
நீதிமன்றத்தில் குளோப் பத்திரிகை தொடர்ந்த வழக்கின் மூலம் அந்த ரகசிய ஆவணங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படுகின்றன.
இதையடுத்து ஸ்பாட்லைட் குழுவினர் 2002 ஜனவரியில் செய்தியை வெளியிடத் திட்டமிட்டு எழுதத் தொடங்குகிறார்கள்.
இந்தச் செய்தி அச்சாவதற்குச் சில நாட்களுக்கு முன்னால், ராபின்சன் தன் குழுவினரிடம் ஒரு அதிர்ச்சியான உண்மையை ஒப்புக்கொள்கிறார்.
அதாவது, 1993 ஆம் ஆண்டில் தான் ஸ்பாட்லைட் குழுவில் சேருவதற்கு முன்னால், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வக்கீலான எரிக் மேக்லீஷ் (பில்லி க்ருடப்) தன்னிடம் 20 தவறான பாதிரியார்களின் பட்டியலைக் கொடுத்திருந்தார் என்றும், ஆனால் தான் அதை ஒரு சாதாரணச் செய்தியாகப் போட்டுவிட்டுத் தொடர்ந்து கவனிக்காமல் விட்டுவிட்டேன் என்றும் கூறுகிறார்.
இப்போது ஸ்பாட்லைட் குழு விசாரணையைத் தொடங்கிய பிறகுதான் பழைய பட்டியல் தனக்கு நினைவிற்கே வந்தது என்று வருத்தப்படுகிறார்.
செய்தியாளர்கள் எப்போதுமே எல்லா நேரமும் சரியாக இருப்பதில்லை என்பதை எடிட்டர் பேரன் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு, இப்போதாவது இந்த அநீதியை உலகிற்கு வெளிக்கொண்டு வந்ததற்காக ராபின்சனையும் அவரது குழுவையும் பாராட்டுகிறார்.
பேராயரின் முகத்திரையைக் கிழிக்கும் நீதிமன்ற ஆவணங்களின் இணையதள முகவரி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்வதற்கான அவசர உதவி எண்களுடன் அந்தப் பரபரப்பான செய்தி ஞாயிற்றுக்கிழமை காலையில் வெளியாகிறது.
அடுத்த நாள் விடிந்ததும், பாதிரியார்களால் பாதிக்கப்பட்டுத் தங்கள் வலியை நெஞ்சுக்குள் பூட்டி வைத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அந்தப் பத்திரிகை அலுவலகத்திற்குத் தொலைபேசி மூலம் அழைத்துத் தங்கள் கதைகளை அழுகையோடு சொல்லத் தொடங்குகிறார்கள்.
படத்தின் இறுதிக் குறிப்பில், பேராயர் கார்டினல் லா 2002 டிசம்பரில் தன் பதவியை ராஜினாமா செய்தார் என்றும், ஆனால் அதற்குப் தண்டனையாகப் பதவி பறிக்கப்படுவதற்குப் பதிலாக ரோமில் உள்ள ஒரு பெரிய பேராலயத்தின் மிக உயரிய பதவிக்குத் திருச்சபையால் அவர் மாற்றப்பட்டார் என்றும் காட்டப்படுகிறது.
அத்துடன், பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் மூடிமறைப்புகள் அம்பலமான அமெரிக்காவின் 105 நகரங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள 101 இடங்களின் பெயர்ப் பட்டியலும் திரையில் தோன்றிப் பார்ப்பவர்களை உலுக்கி எடுக்கையில் படம் நிறைகிறது.
இத்திரைப்படம் ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும் மனித மனங்களுக்கும் மிக முக்கியமான சில செய்திகளை அழுத்தமாக முன்வைக்கிறது.
சமூகத்தில் குற்றம் நடக்கும்போது, அதுவும் குறிப்பாகப் பெரிய நிறுவனங்களோ அல்லது மதிக்கப்படும் அமைப்புகளோ தவறு செய்யும்போது, சுற்றியிருப்பவர்கள் எவ்வாறு தங்களின் வசதிக்காக அமைதி காக்கிறார்கள் என்பதை இப்படம் சுட்டிக்காட்டுகிறது.
சட்ட அமலாக்கத்துறை, வழக்கறிஞர்கள், ஏன் பத்திரிகையாளர்களுமே கூடப் பல நேரங்களில் பெரும் அமைப்புகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து உண்மைகளைக் கடந்து போகிறார்கள் என்ற கசப்பான நிதர்சனத்தை இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
தவறு செய்பவர்களை விடவும், அந்தத் தவறுகளை மூடிமறைக்கும் போக்கு பாதிக்கப்பட்ட மனிதர்களை எவ்வளவு தூரம் உளவியல் ரீதியாகப் பாதிக்கிறது என்பதை இப்படம் உணர்த்துகிறது.
நம்பிக்கை வைக்க வேண்டிய இடத்திலேயே ஏமாற்றத்தைச் சந்திக்கும் எளிய மனிதர்களின் குரல்களையும் அவர்களின் தீராத மன வேதனையையும் உலகம் கேட்க வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.
ஒரு சமூகத்தில் முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதற்குத் தனிமனிதர்கள் மட்டும் காரணமல்ல, மாறாக ஒட்டுமொத்தச் சமூக அமைப்பும், அதில் உள்ள செல்வாக்கு மிக்க மனிதர்களின் அலட்சியமுமே காரணம் என்ற செய்தியை இப்படம் சொல்கிறது.
தவறைத் தட்டிக்கேட்கத் தவறும் ஒவ்வொருவருமே அந்தத் தவறு தொடர்வதற்குக் மறைமுகக் காரணியாக மாறுகிறார்கள் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
ஒரு பெரிய உண்மையை உலகிற்குக் கொண்டு வர வேண்டுமானால், அதற்கு அவசரப்படாமல் முறையான ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டும் என்ற செய்தியை இப்படம் கூறுகிறது.
அரைகுறையான தகவல்களோடு வெளியிடுவதை விடுத்து, முழுமையான பின்னணியை ஆராய்ந்து, எவராலும் மறுக்க முடியாத அளவுக்குத் தரவுகளைத் திரட்டுவதே ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்