ட்ரெடில் அச்சு இயந்திரம் பற்றிய நினைவலைகளும் ஜெயகாந்தனின் ட்ரெடில் சிறுகதையும்

என்றும் அழியாத அச்சுக்கலை!
[ட்ரெடில் பற்றி ஆனந்த விகடனில் வெளியான முக்கியமான கட்டுரை]
 
ல்யாணம் தொடங்கி கட்சி பொதுக்கூட்டம் வரை அனைத்திற்குமே பத்திரிக்கை அடிக்கும் கலாச்சாரம் உருவாகிவிட்டது...இன்றைய சூழலில் ஆப்செட் பிரிண்டர்ஸ்,டிஜிட்டல் பிரிண்டர்ஸின் அதிவேக வளர்ச்சியில் தன் முகவரியை இழந்து- வருகிறது பழைய  ட்ரடில் பிரிண்டிங் மிஷின் அச்சகங்கள் இன்னமும் அந்த முறையில் பிரிண்ட் செய்யும் சில அச்சகங்களை இன்னமும் நாம் காணலாம்.இதில் அச்சடிக்கப்படும் பத்திரிக்கைகள் காலத்தால் அழியாதவை காரணம் அதில் பயன்படுத்தப்படும் மை யின் தரம் அப்படிபட்டது...இப்போது உள்ள மையில் எல்லாம் அப்படிபட்ட தரம் இல்லை என கூற ஆரம்பித்தார் இன்னமும் பழைய அச்சுமுறையை பயன்படுத்தி புதுக்கோட்டையில் அச்சகம் நடத்தி வரும் அம்பாள் அச்சக உரிமையாளர் இராமையா.
 
முன்னாடியெல்லாம் நிறைய பிரிண்டிங் பிரஸ்கள் இந்த முறையை பின்பற்றிவந்தன. இப்போது இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது. இந்த மிஷினை கண்டிபிடித்தவரின் பெயர் ஜான் கூட்டன் பெர்க். கட்சி போஸ்டர்ல ஆரம்பிச்சு காதுகுத்து வரைக்கும் எல்லாத்துக்குமே கம்போஸிங் பண்ணி பிரிண்ட் பண்ணுற இந்த முறைல தான் எல்லாரும் பத்திரிக்கை அடிச்சுகிட்டு இருந்தாங்க.ஆனா இப்போ கம்ப்யூட்டர் வந்ததுனால வீட்டுலயே டிசைன் பண்ணி பிரிண்டுக்கு மட்டும் பிரஸுக்கு வர்ற கலாச்சாரம் உருவாகிடுச்சு...
 
டிரிடில் மிஷின்ல பிரிண்ட் பண்ணனும்னா முதல்ல கம்போசிங் பண்ணனும் அது ஒண்ணும் அவ்வளவு சாதாரண காரியம் அல்ல...கம்போசிங் பண்ண எழுத்துக்கள் வேணும் எழுத்துக்கள் எல்லாம் ஈயத்தால் வார்க்கப்பட்டவை எல்லா எழுத்துக்களும் 0.918செ.மீ என்ற அளவில் இருக்கும். கணினியில் உள்ளது போல் இதற்கும் font size உள்ளது.6 முதல் 48 வரை பயன்படுத்தலாம், அதை நம்ம தேவைக்கு ஏற்ற மாதிரி அடுக்க வேண்டும்.எல்லாம் அடுக்கி முடிஞ்ச பிறகு அத மிஷினில் எழுத்திற்குனு இருக்குற இடத்தில் பொருத்தியதும் மிஷினின் மேல்புறம் உள்ள வட்ட வடிவ பகுதியில் மையை தடவ இதில் உள்ள உருளை போன்ற அமைப்பு மையை எடுத்து சென்று எழுத்தில் பூச அது அப்படியே நாம் வைக்கும் பேப்பரில் பிரிண்ட் ஆகும் என கூறி முடித்தார்.
 
கம்போசிங் பண்ண இப்ப ஆளே இல்லனு தான் சொல்லணும்.அது ரொம்ப கஷ்டமான வேலை கூட முதல்ல அந்த வேலை பாக்குறவருக்கு 247 எழுத்தும் எங்க இருக்குனு தெரிஞ்சிருக்கணும்னு சொல்ல ஆரம்பித்தார் அம்பாள் அச்சகத்தின் அச்சு கோப்பாளரான சண்முகம்.40 வருஷமா இந்த வேலை தான் பாக்குறேன்.எனக்கு எல்லா எழுத்தும் எங்க இருக்குனு கரெக்டா தெரியும் அப்படி தெரிஞ்சா தான் சீக்கிரமா வேலை முடியும்.முன்னாடி புதுக்கோட்டைல இந்த எழுத்துக்கள் தயாரிக்கறதுக்குனே ஒரு நிறுவனம் இருந்துச்சு இப்ப இந்த மிஷின பயன்படுத்துறவங்க எண்ணிக்கை குறைஞ்சு போனதால அந்த நிறுவனத்த மூடிட்டாங்க.எங்களுக்கே இப்ப எதாவது எழுத்து தேவைனா மதுரை,திருச்சிக்கு தான் போக வேண்டி இருக்கிறது.
 
என்ன தான் இன்னிக்கு 1000 பத்திரிக்கை ஒரு மணி நேரத்துல பிரிண்ட் பண்ணி கொடுத்தாலும்,இந்த மிஷின்ல பிரிண்ட் பண்ணுற மாதிரி வராது.உதாரணம் டூரிங் டாக்கிஸ் சினிமா போஸ்டர் பாத்திருப்பீங்க அது மழைல நனைஞ்சாலும் சாயம் போகாது.எழுத்துக்களும் அப்படியே இருக்கும்.அதெல்லாம் இந்த மாதிரி முறைல பிரிண்ட் பண்ணுறது தான் என்றார்.
 
 
20 வருஷத்துக்கு முன்னாடி ஐ.டி.ஐ ல இது ஒரு தொழில் படிப்பாவே இருந்துச்சு.1000 பத்திரிக்கை பிரிண்ட் பண்ண குறைஞ்சபட்சம் ஒரு நாள் ஆகும் ஏன்னா இதில் ஒவ்வோரு பிரிண்டுக்கும் பேப்பர நாம தான் மாத்தணும்.இதுக்கு ஆகுற செலவுனு பாத்தா 400ல இருந்து 500 வரைக்கும் ஆகும் அதுவும் அளவ பொருத்து.எவ்வளவு தான் தொழில்நுட்பம் மாறினாலும் இன்னமும் பழைய முறைல தான் பிரிண்ட் பண்ணனும்னு வர்றவங்க இருக்காங்க.அது மட்டுமில்லாம பெரிய போஸ்டர்,ஆபீஸ் லெட்ஜருக்கெல்லாம் இதுல பிரிண்ட் பண்ணுறது தான் சிறந்தது.ஏதோ நாங்க இருக்கற வரைக்கும் தான் இந்த முறை இருக்கும்...இன்றைய தலைமுறைக்கு இத கத்துக்குற ஆர்வம் இல்ல...அடுத்த தலைமுறைல இந்த கலையே அழிஞ்சு போனாலும் ஆச்சரிய படுறதுக்கில்லை.
 
 
ஆனாலும் இந்த முறையில் அச்சிடப்படும் போஸ்டர்களும் சரி, பத்திரிக்கைகளும் சரி அழியாத வகையில் அச்சிடப்படுவதால் உங்களது பதிவுகளை ஆழமாக பதிவு செய்வதில் இந்த அச்சுகலை என்றும் அழியாத ஒன்றாக உள்ளது. இது முழுக்க முழுக்க மனிதன் கட்டுப்பாட்டில் உள்ள இயந்திரம்...ஆனால் இன்றைக்கு மனிதன் முழுக்க இயந்திர கட்டுப்பாட்டுக்கு போய்விட்டான்.கணினி விசைபலகையின் விரல் பதிவால் தன் பதிவை இழந்து வருகிறது இந்த அச்சுக்கலை. சினிமா போஸ்டர்களிலும், கிராமத்து கல்யாண பத்திரிக்கை, திருவிழா அழைப்பிதழ்கள் போன்றவற்றில் இந்த அச்சுக்கலை இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
 
ச.ஸ்ரீராம்
படங்கள் பா.காளிமுத்து
 
=====0000====
 
எழுத்தாளர் ஜெயகாந்தன் 1950களில் எழுதி சரஸ்வதி பத்திரிக்கையில் வெளியான ட்ரெடில் என்னும் சிறுகதை, காலத்தால் அழிக்க முடியாத படைப்பு, அதை இந்த முக்கியமான கட்டுரையின் இறுதியில் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். 

ட்ரெடில்-ஜெயகாந்தன்

டிரிங்...டிரிங்...டிங்...
 மை பிளேட் சுற்றுகிறது…
மை ரோலர்கள் மேலும் கீழும் ஓடுகின்றன… டங் - டட்டங்க்! இம்ப்ரஷன்! டடக்... டடக்... டடக்... டடக்...
 மூங்கில் குச்சி போன்ற ஒரு கால் பெடலை மிதிக்கிறது. ஆம்  அந்த இயந்திரத்தின் உயிர் அதில்தான் இருக்கிறது!

இந்தச் சப்தமேள சம்மேளத்தின் அர்த்தம்? - இருண்ட குகை போன்ற அந்தச் சிறிய அச்சுக்கூடம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான்!
அந்த அச்சுக்கூடத்திற்கு வயசு இருபதுக்குமேல் ஆகிறது. அங்கே நடக்கிற சராசரி வேலை கலியாணப் பத்திரிகைதான். சமயா சமயங்களில் பில் புக்குகள், லெட்டர் பேடுகள், விஸிட்டிங் கார்டுகள் இத்யாதி வேலைகளும் இடம் பெறும். அங்கிருப்பதெல்லாம் அந்த 'டிரெடி'லைத் தவிர நாலைந்து ஜாப் டைப்கேஸ்களும் ஒரு சிறிய கட்டிங் மிஷினும்தான்! - சின்ன பிரஸ்தானே? அப்படி என்ன பிரமாத லாபம் கிடைத்துவிடப் போகிறது?
ஆனால் பிரஸ்ஸின் முதலாளியான முருகேச முதலியார் மட்டும் இருபது வருஷங்களூக்குப் பின் எப்படியோ தமக்கென்று ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு விட்டார்.
கம்பாஸிட்டர் + பைண்டர் + மெஷின்மேன் எல்லாம் - அதோ, டிரெடிலின் அருகே நின்று 'வதக் வதக்'கென்று காலை உதைத்துக் கொள்ளுகிறானே, வினாயகமூர்த்தி - அவன்தான்!
மாதம் இருபது ரூபாய்க்குப் பஞ்சமில்லை. சில சமயங்களில் முதலியாரின் 'மூடு' நன்றாக இருந்தால் டீ குடிக்க, 'நாஸ்டா' பண்ண என்ற பேரில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா வரும்படியையும் சேர்த்தால் நிச்சயம் மாதம் முப்பது ரூபாய்க்கு மோசமில்லை!
வினாயகமூர்த்தி அந்த அச்சுக்கூடத்தில் 'ஸ்டிக்' பிடித்துக் 'கம்போஸ்' செய்ய ஆரம்பித்தது பன்னிரண்டு வருடங்களுக்கு முந்தி. அவன் முதன்முதலில் செய்த முதல் கம்போஸ் ஒரு கலியாணப் பத்திரிகைதான். அன்று முதல் எத்தனையோ பேருக்கு அவன் கையால் எத்தனையோ விதமான கலியாணப் பத்திரிகைகள் அச்சடித்துக் கொடுத்திருக்கிறான். ஆனால் தனக்கு..?
'எத்தினி பேருக்கு நம்ப கையாலே கலியாண நோட்டிஸ் அடிச்சிக் குடுத்திருக்கோம்... ஹ்ம்...'

இவ்விதம் நினைத்துப் பெருமூச்சு விடும் வினாயகத்துக்கு இப்போது வயது முப்பது ஆகிறது.
'இந்த ஓட்டல்லே போடற ஆறணா சோத்தை எவ்வளவு நாளைக்கு துன்னுகிட்டுக் கெடக்கிறது?...'

வினாயகத்தின் கை 'பிரேக்'கை அழுத்திற்று. 'பெட'லை உதைத்த கால் நின்றது. டிரெடிலின் ஓட்டம் நின்றது...
 அருகிலுள்ள மை டின்கள் வைக்கும் ஸ்டாண்டின் சந்தில் அவன் விரல்கள் எதையோ துழாவின. விரலில் சிக்கிய பொடி மட்டையைப் பிரித்து ஒரு சிமிட்டா பொடியை உறிஞ்சியவுடன், பொடியைத் துடைத்த புறங்கை அவன் மூக்கின் மீது மையைப் பூசியது!

அதைக் கவனிக்காமல் அருகே காயப்போட்டிருக்கும் பத்திரிகைகளில் ஒன்றை அவன் எடுத்துப் பார்த்தான்.

'மய்யிதான் இன்னா ஈவனா சப்ளை ஆயிருக்கு... எதுக்கும் அந்தக் கீழ் ரோலரை மாத்திட்டா 'ஸம்'முனு இருக்கும்... இம்ப்ரஷன் கொஞ்சம் கொறைக்கலாமா?... த்ஸ் உம் பரவாயில்ல... ஐயய்யோ!... இந்த எழுத்து இன்னா படலையே! மொக்கையா, இன்னா எழவு? கொஞ்சம் ஒட்டிக்கினா சரியாப் பூடும்."

இந்தச் சமயத்தில் 'ஏய், இன்னாடா மிசினை நிறுத்திட்டே? அந்த ஆளு இப்ப வந்துடுவான்டா!" என்று முதலியார் குரல் கொடுத்தார்.
"ஒரு நாலணா குடு ஸார்! காத்தாலே நாஸ்டா பண்லே; போயிட்டு வந்து மிச்சத்தைப் போடறேன்..."
"சீக்கிரம் வா. வேலெ நெறைய கெடக்கு!" என்று நாலணாவை எடுத்து மேசைமீது வைத்தார் முதலியார்.
"ஆவட்டும், சார்!"
- இது அவனது வழக்கமான பதில்.
காசை எடுத்துக்கொண்டு டீக்கடைக்கு நடந்தான்
ஒரு நாள் -
பிரஸ்ஸில் வினாயகத்தைத் தவிர வேறு யாருமில்லை.
அன்றைய வேலையில், இரண்டு கலியாணப் பத்திரிகைகளைக் கம்போஸ் செய்து 'புரூப்' போட்டு வைப்பதும், திருத்தி வைத்திருக்கும் வாழ்த்துப் பத்திரத்தைக் 'கரெக்ஷன்' செய்து அச்சேற்ற வேண்டியதுதான் பாக்கி.
'அதுக்கு வேற பேப்பர் வெட்டணும்' என்று முனங்கியபடியே டிரெடிலில் மாட்டியிருந்த 'செஸ்'ஸைக் கழற்றும்போது அவனுக்குத் திடீரென ஓர் ஆசை - சாதாரண ஆசை, சிறுபிள்ளைத்தனமான ஆசை - முளைத்தது.

செஸ்ஸைக் கழற்றி ஸ்டோன் மீது போட்டான் - அதுவும் ஒரு கலியாணப் பத்திரிகைதான் - மேட்டரில் மாப்பிள்ளையின் பெயரை அடுக்கியிருந்த டைப்களைப் பிரஷ்ஷால் துடைத்தான். மை நீங்கிய அச்சுக்கள் பளபளத்தன...
- 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' என்ற எழுத்துக்கள் கண்ணாடியில் பிரதிபலிப்பது போல் இடம் வலம் மாறித் தெரிந்தன.

'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்...'

- 'ஷீட்டிங் ஸ்டிக்'கை ஓரத்தில் நிறுத்தி 'மல்டி'க் கட்டையால் 'மடார் மடார்' என்று இரண்டு போடு போட்டு, வால் கட்டைகளைச் சற்று தளர்த்திய பின் 'பிஞ்ச்ச'ரை எடுத்து, பார்டரை அடுத்திருந்த 'குவாடு'களை அழுத்தி, டைப்புகளை நெம்பி, 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' என்ற பன்னிரண்டு எழுத்துக்களை லாகவமாக வரிசை குலையாமல் தூக்கிக் கேஸ்கட்டை மீது வைத்தான்.

- அவன் உதடுகளில் லேசாக ஒரு குறும்புச் சிரிப்பு நௌிந்தது.

அவன் கைகள் 'பரபர'வென வேறு பன்னிரண்டு எழுத்துக்களைக் கேஸிலிருந்து பொறுக்கி விரலிடுக்கில் நிறுத்தின.
- பயல், சிரஞ்சீவியை சாப்பிட்டுவிட்டான்!

'கி. வினாயகமூர்த்திக்கும்' என்று சேர்த்துப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

- 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' இருந்த இடத்தில் 'கி. வினாயகமூர்த்திக்கும்' என்ற எழுத்துக்கள் இடம் பெற்றன!

ஸ்டோன் மீது கிடந்த செஸ்ஸை முடுக்கி, இரண்டு முறை தூக்கித் தூக்கித் தட்டிப் பார்த்துவிட்டு டிரடிலில் மாட்டினான். சற்று நேரம் மை இழைத்தபின் 'வேஸ்ட்ஷீட்' ஒன்றை எடுத்து டிரெடிலில் 'பெட்'டின் மீது வைத்துச் சுருக்கம் நீங்குவதற்காக இரண்டு முறை விரலால் தடவி விட்டான்.
காகிதத்தின் சுருக்கம் இல்லாவிட்டால் கூட, பேப்பரை 'பெட்'டின் மீது வைத்ததும் டிரெடிலின் தாளகதிக்கேற்ப அவசரத்தோடு அவசரமாய்க் காகிதத்தை ஒருமுறை தடவிக் கொடுப்பது அவன் வழக்கம்!
அடுத்தாற்போல் இடது கை பிரேக்கை மாற்றியதும் 'டங்... டட்டங்க்' என்ற இம்ப்ரஷன் சப்தம் எழுந்தது.
- 'பெட்'டிலிருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான்.

'கி. வினாயகமூர்த்திக்கும் - சௌபாக்கியவதி அனுசூயாவுக்கும்' என்ற எழுத்துக்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.

பத்திரிகையிலிருந்து பெற்றோர் பெயரோ, ஜாதிப் பட்டமோ அவன் பிரக்ஞையில் இடம் பெறவே இல்லை!
"சரி. கையோட இதை 'டிஸ்ட்ரிபூட்' போட்டுடுவோமே..."

- செஸ்ஸைக் கழற்றித் துடைத்துச் சுத்தம் செய்து, மேட்டரை எடுத்துக் 'காலிப்' பலகையில் வைத்துக் கொண்டு 'டிஸ்டிரிபூட்' போட முனைந்தான்.

"இன்னாடா, நீ பண்ற வேலையே ஏடாகோடமா கீதே. உன்னெ யார்ரா 'டிஸ்டிரிபூட்' போடச் சொன்னாங்க?... நான் இன்னா வேலெ சொல்லிட்டுப் போனேன். நீ இன்னா வேலெ செஞ்சிக்கினு கீறே! அதெ முடிச்சிப்பிட்டு அந்த வாய்த்துப் பத்திரத்தை கரெக்ஷன் செஞ்சி மிஷின்லே ஏத்திக்க. ஆமா, அது அவசரம்!" என்று முதலியார் இரைந்தார்.

"ஆவட்டும், ஸார்" என்று வேலையில் ஆழ்ந்தான் வினாயகம்.
"மணி இன்னா ஆனாலும் சர்த்தான், இன்னிக்கு அத்தெ முடிச்சிடணும்..."
- இது முதலியாரின் உத்தரவு.

மணி மூன்றுக்கு மேலாகி விட்டது. அச்சேற்றி முடித்த கலியாணப் பத்திரிகை மேட்டர் டிஸ்டிரிபூட் போட்டாகி விட்டது. வாழ்த்துப் பத்திர வேலை ஆக வேண்டும்.
கரங்கள் மும்முரமாய் வேலையில் முனைந்திருக்கின்றன; மனம் தனக்கும் ஒரு கலியாணப் பத்திரிக்கை அச்சடிக்கும் 'அந்த நாளி'ல் லயித்திருக்கிறது...
'சூளை அக்கா கையிலே சொன்னா, சொந்தத்திலே ஒரு பொண்ணெப் பாத்து முடிச்சிடும்..."
சூளையில் வினாயகத்தின் ஒன்றுவிட்ட தமக்கை ஒருத்தி இருக்கிறாள்.
ஹீம்... பொண்ணுக்கா பஞ்சம்? பொழப்புக்குத்தான் பஞ்சம்! மொதல்ல ஒரு நூறு ரூபாயாச்சும் வேணும்; அப்புறம் மாசாமாசம் நாற்பது ரூபா வேணாம்?...'
- திடீரென அவனுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிட்டது! சிரித்துவிட்டான்!

"இன்னாடா, பித்துக்குளியாட்டமா நீயே சிரிச்சிக்கிறே" என்றார் முதலியார்.

"நீதான் பாரு ஸார்...!" என்று வாழ்த்துப் பத்திரத்தின் புரூப்பை அவரிடம் காட்டினான் அவன்.

அதைப் பார்த்த முதலியாரும் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.
'வாழ்வின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள மனிதனுக்கு அவசியம் ஒரு துணை தேவை' என்ற வாசகத்தில் உள்ள 'துணை'யில் 'ணை'க்குப் பதிலாக...

- அச்சுப் பேயின் அந்தக் கூத்தை என்னவென்று சொல்ல?...

தரக்குறைவான இந்த ஹாஸ்யத்தில் கலந்து கொண்டு சிரித்த முதலியாருக்குத் திடீரென, தாம் ஒரு முதலாளி என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டது.
"சிரிப்பு இன்னடா, சிரிப்பு? காலிப்பயலே! வேலையைப் பாருடா, கய்தே!" என்று அவருடைய 'கௌரவம்' குரல் கொடுத்தது.

"ஆவட்டும், ஸார்!" என்ற அந்தத் தொழிலாளியின் 'சிறுமை' அதற்கு அடங்கிப் பணிந்தது!
இரவு மணி ஏழு!
டிரெடில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் வாழ்த்துப் பத்திரம் 'ஸ்டிரைக்' ஆகி முடியவில்லை. வீட்டுக்குப் புறப்பட்ட முதலியார் வினாயகத்தின் அருகே வந்து நின்று வேலையைக் கவனிக்கிறார். அவன் மேலெல்லாம் வியர்வைத் துளிகள் அரும்பி உதிர்ந்து வழிகின்றன.
'டடக்... டடக்... டடக்.. டடக்..'

கால் 'வதக், வதக்'கெனப் பெடலை உதைக்கிறது. கைகள் பறந்து பறந்து டிரெடிலில் பேப்பரைக் கொடுப்பதும் வாங்குவதுமாக இருக்கின்றன.
'பாவம், மாடு மாதிரி வேலை செய்கிறான்!' என்று மனசில் முனகிக்கொண்டே முதலியார், "இந்தா, இதை ராத்திரி சாப்பாட்டுக்கு வெச்சிக்க... இந்தா சாவி, வரும்போது பூட்டிக்கினு வா... நா போறேன்!" என்று சாவியோடு ஒரு எட்டணா நாணயத்தையும் சேர்த்துக் கொடுத்தார்.

- முதலாளியின் மனசைப் புரிந்து கொள்வதில் வினாயகம் அதி சமர்த்தன்.

"ஸார்...!" என்று பல்லைக் காட்டினான்.

"இன்னாடா, சும்மா சொல்லு!" என்று முதலியார் சிரித்தார்.

"ஞாயித்திக்கெயமை, எங்க அக்கா வூட்டுக்குப் போயிருந்தேன்.. அங்கே ஒரு பொண்ணு இருக்காம்..."

அதற்கு மேல் அவனால் சொல்ல முடியாமற் போனதற்குக் காரணம், விஷயம் பொய் என்பதல்ல - வெட்கம்தான்!
'அடடே, கலியாண சமாச்சாரமா?... அடி சக்கை, நடக்க வேண்டியதுதான்!" என்று முதலியாரும் குதூகலித்தார்.

"அதுக்கு அட்வான்ஸா ஒரு நூறு ரூபா..."

"உம்... உம் - அதுக்கென்னா, பார்ப்போம். நீ மத்த விஷயமெல்லாம் பேசி முடி!" என்று சொன்னதும் வினாயகத்தின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை இல்லை.

வௌியில் போகும்போது முதலியார் தமக்குள் சொல்லிக் கொண்டார்!
'பாவம், பயலுக்கு வயசாச்சி - பதினெட்டு வயசிலே நம்மகிட்டே வந்தவன் - நம்மைத் தவிர அவனுக்குத்தான் வேறே யாரு? - ஒரு கலியாணம்னு செஞ்சி வைக்க வேண்டியதுதான்!'

பிரஸ்ஸில் டிரெடில் ஓடிக் கொண்டிருக்கிறது!
'டக் - டக் - டடக் - டடக் -டடக் - '

திடீரென வினாயகத்தின் பெருந்தொடைக்கு மேலே அடி வயிற்றுக்குள்ளே, குடல் சரிந்து கனன்றது போல், குடற் குழாய் அறுந்து தொய்ந்ததுபோல் ஒரு வேதனை...
- "ஆ!" என்று அவன் வாய் பிளந்தது. அவன் கால் டிரெடிலின் பெடலிலிருந்து 'படீ'ரென விலகியது.

கால் விலகிய வேகத்தில், தானே ஓடிய டிரெடிலின் பெடல் 'தடதட'வென அதிர்ந்து ஓய்ந்தது!
வினாயகத்துக்கு மூச்சு அடைத்தது. கேஸ்மீது சாய்ந்து பற்களைக் கடித்தவாறு அடி வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டான். நெஞ்சில் என்னவோ உருண்டு அடைப்பது போலிருந்தது - மூச்சுவிடவே திணறினான். மெள்ள மெள்ள நகர்ந்து அருகிலிருந்த பானையிலிருந்து ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்துக் குடித்தான்.
- வலி குறைந்தது; ஆனால், வலித்தது!

'இன்னம் கொஞ்சம்தான்; போட்டு முடிச்சிட்டுப் போயிடலாமே?...'

முக்கி, முனகி,கால்மாற்றி, பெருமூச்செறிந்து, பல்லைக் கடித்தவாறு, நிறுத்தி நிறுத்தி ஒருவாறாக வாழ்த்துப் பத்திரம் பூராவும் அடித்து முடித்து விட்டான்.
டிரெடிலிருந்து செஸ்ஸைக் கழற்றக்கூடப் பொறுமையில்லை...
- கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு நடந்தான்.

நடக்க முடியவில்லை; வலி அதிகரித்தது...
வயிற்றில் ஏதோ ஒன்று, இருக்க வேண்டிய இடத்திலிருந்து வேறு எதனுடைய இடத்திற்கோ இடம் மாறி, இடம் பிறழ்ந்து, வேறு எதனுடைய வழியிலோ வந்து அடைத்துக் கொண்டது போல...
"அம்...மா"

- அவனால் வலியைப் பொறுக்க முடியவில்லை.

பக்கத்திலிருந்த டாக்டர் வீட்டுக்கு ஓடிப்போய்... இல்லையில்லை... துடித்துத் துடித்துச் சாடிப்போய் விழுந்தான்.

வினாயகத்திற்கு 'ஹெர்ன்யா'வாம். டாக்டரும் முதலியாரும் சேர்ந்து அவனைச் சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.
அவனுடைய உடல், வைத்திய மாணவர்களின் ஆராய்ச்சிப் பொருளாகியது. டாக்டர்கள் அவனைப் பரிசீலிப்பதற்குப் பதிலாகத் தங்கள் புதிய முறைகளை அவன் மீது பிரயோகம் செய்து தங்களுடைய திறமைகளைப் பரிசீலித்துக் கொண்டனர்...
- நோய்... வேதனை... அவமானம்!

நாட்கள் ஓடின. கடைசியில் அவனுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் ஆப்ரேஷன் நடந்தது. அதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்தது. கடைசியில் ஒரு மாதத்துக்குப் பின் ஒருவாறாக அவனுக்கு விடுதலை கிடைத்தது.
ஆஸ்பத்திரியை விட்டு வௌியேறும்போது அவனுக்கு டாக்டர் சொன்ன புத்திமதி அவன் ஹிருதயத்தினுள்ளே சப்தமில்லாமல் ஒரு அதிர்வேட்டை வெடித்தது.
'நீ கல்யாணம் செய்து கொள்ளாதே!.. உனக்கே தோணாது... யாராவது கட்டாயப்படுத்தினாலும்...'

- அவன் காதுகள் அதற்குமேல் எதையும் கிரகிக்கவில்லை!

வினாயகம் மீண்டும் வேலைக்கு வந்து விட்டான். இருண்ட குகை போன்ற அந்தப் பிரஸ்ஸீக்குள் புகுந்து ஒரு மாசமாய்ப் பிரிந்திருந்த டிரெடிலைப் பார்த்தான்; கேஸைப் பார்த்தான்; ஸ்டிக்கைப் பார்த்தான்..
- மனசில் என்ன தோன்றியதோ? - டிரெடிலைக் கட்டிக் கொண்டு பெருமூச்செறிந்தான்...

"அதோ, அந்தக் கலியாணப் பத்திரிகை முடுக்கி வச்சிருக்கு. அதை மிஷின்லே ஏத்திக்கோ. நீ இல்லாம ஒரு வேலையும் நடக்கலேடா!... மத்தப் பசங்க எல்லாம் பிரயோசனமில்லே; ஒனக்கு அடுத்த மாசத்திலேந்து சம்பளத்திலே பத்து ரூவா கூட்டியிருக்கேன். நீ கேட்டியே கலியாணத்துக்குப் பணம் பதினைஞ்சாம் தேதிக்கு மேலே வாங்கிக்க... இன்னடா, சந்தோஷம்தானே?" என்று முதலியார் கண்களைச் சிமிட்டினார்.

அவன் தலையைத் திருப்பிக் கொண்டான். அவனையறியாமல் கைகளிரண்டும் முகத்தைப் புதைத்தன; உடல் குலுங்கிற்று -
அழுதானா?...
"பயலுக்கு ரொம்ப வெக்கம்!" என்று சிரித்தார் முதலியார்.

அவன் மௌனமாக டிரெடிலின் அருகே சென்று யாரோ கம்போஸ் செய்து வைத்திருந்த யாரோ ஒருவருடைய கலியாணப் பத்திரிகையை மனசில் விருப்போ வெறுப்போ சற்றுமின்றி, யந்திரம்போல் மெஷினில் ஏற்றி, காகிதங்களை ஸ்டான்டின்மீது எடுத்து வைத்துக் கொண்டு, மை இழைக்க ஆரம்பித்தான்...
-'டடக்... டடக்...'

அவனது கால் பெடலை மிதித்தது.
'டங்... டட்டங்..!'

- இம்ப்ரஷன்...

அச்சில் வந்தது ஒரு கலியாணப் பத்திரிகைதான்!
மிஷினை நிறுத்திவிட்டு, கேஸ்களுக்கிடையில் செருகி வைத்திருந்த ஒரு காகிதத்தை எடுத்துப் பார்த்தான்...
கி.வினாயகமூர்த்திக்கும் - சௌபாக்கியவதி அனுசூயாவுக்கும்...
- ஆமாம்; அந்த 'வேஸ்ட் ஷீட்' தான்...

அன்று வயிறு குலுங்க அவனைச் சிரிக்க வைத்த அந்த விளையாட்டுப் பத்திரிகைதான்...
அதன் மீது, அவன் கண்களில் ஊற்றுப் போல் சுரந்து கரித்த இரண்டு வெப்பமிக்க கண்ணீர்த்துளிகள் விழுந்து தெறித்தன!..
- "இன்னாடா வினாயகம், மிஷின் நிக்குது... அவன் வந்துடுவானே... அதுக்குள்ளே முடிச்சிடணும்!" என்றார் முதலியார்.

"ஆவட்டும் ஸார்..."

"டடக்... டடக் - டடக்... டடக்..."

- ஆம்; இரண்டு 'டிரெடில்'களும் இயங்க ஆரம்பித்து விட்டன!
 

சொந்த வீடு கட்டுவோர்க்கு பில்டர்ஸ்லைன்ஸ் இதழின் 50 முக்கிய யோசனைகள்


பணம் ,நேரம்,பொருள் மிச்சம் செய்யும் RAT TRAP BOND கட்டுமானத்தின் தோற்றம்


* வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.
தண்ணீர் :
* தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி
மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.
* தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.
* இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.
* வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.
சிமெண்ட்
* தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.
* மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.
* சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.
மணல் :
* மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.
* மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
* கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.
* மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.
இரும்புக் கம்பிகள் :
கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
* இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.
செங்கல் :
* வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
* செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.
* இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.
* கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.
* கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.
* மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.
* அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.
* சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.
* செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.
* மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.
* எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.
* பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.
* ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
* க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.
* எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.
* முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.
* உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.
* தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.
* கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.
* செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.
* நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.
* வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.
* சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.
* கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
* போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.
* அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.
* அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.
* பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.
* லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.
கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :
* ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.
* கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.
* தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.
* வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.
* உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்

வீடு கட்டும் முன் ..
முக்கியத்துவமான டிப்ஸ்கள்
-----------------------------------------------------------
மனையை சீரமைத்தல், மரம் செடி கொடிகளை நடுதல், மண் பரிசோதனை, குடிநீர் பரிசோதனை மேற்கொள்ளுதல், அஸ்திவாரப் பணிகளின்போது கரையான் மற்றும் பலவித பூச்சிகளை ஒழிக்க வல்ல பெஸ்ட் கன்ட்ரோல் என்கிற பூச்சி தடுப்பு முறையை மேற்கொள்ளுதல் ஆகியனவற்றை வீடு கட்டுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய முதற்கட்டப் பணிகள் என வகைப்படுத்துகிறார்கள் கட்டிட வல்லுனர்கள். அது குறித்த ஆலோசனைகள் இதோ:
* நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள நிலத்தில் உள்ள மண் எத்தகைய தன்மைகொண்டது? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்மேல் கட்டப்படும் கட்டடத்தைத் தாங்கக் கூடிய சக்தி அதற்கு இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
* தரை மட்டத்திற்குக் கீழ் உள்ள மண் அடுக்குகளின் அமைப்பு எத்தகையதாக இருக்கிறது? பளுவைத் தாங்குமா? உள்ளுக்குள் அமிழ்ந்து போக வைக்குமா? உறுதி எப்படி? பாறைகள் நிறைந்திருக்குமா? தண்ணீர் தேங்குமா? களிப்பாகித் தொல்லை தருமா? நீரை உறிஞ்சுமா? தேக்கி வைக்குமா? தரைக்குள் நீர் உள்ளே நுழைய அனுமதிக்குமா? உள்ளே நுழையும் நீர் தங்கி இருக்குமா?
வடிகால் வசதி எப்படி? வெறும்கால்களால் நடந்து போக ஏற்றதா? மேற்பரப்பில் காணப்படுவதைப்போலவே எவ்வளவு ஆழத்திற்கு அதே மண் இருக்கும்? என்பதையெல்லாம் நன்கு ஆராய வேண்டும்.
* மேலும், இந்தப் பகுதியில் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைக்க வசதிப்படுமா?ஆழ்துளைக் கிணறுதான் பொருத்தமாக இருக்குமா? எவ்வளவு ஆழத்தில் நீர் கிடைக்கும்? மண்ணின் வகை என்ன? வண்டலா? களிமண்ணா? குறுமண்ணா? மணலா? சவுடா?மண்ணுக்குள் நச்சுத் தன்மை கொண்ட ஊடுருவல் நடந்திருக்கிறதா? அதைத் தடுக்க முடியுமா? நச்சுத் தன்மை கொண்ட மண்ணை மாற்றி அமைக்க வழி இருக்கிறதா?கறையான் முதலிய தொந்தரவுகள் வராமல் இருக்குமா? புற்று வளருமா? மரம், செடி கொடிகளை வளர்க்க ஏற்றதா? வீட்டுத் தோட்டம் பலன் தருமா?கட்டுமானத்தை உறுதியாக்குவதற்குச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளுக்கு அதிகம் செலவு வைக்குமா? கட்டி முடித்த பின் கழிவு நீர் வெளியேற்றத்திற்கு உதவுமா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
* தரையின் உறிஞ்சும் தன்மை எப்படி?தரைப் பரப்பை மூட வேண்டியது அவசியமா? அப்படியே விட்டுவைக்க ஏற்றதா? கான்கிரீட், ஓடு, கல் பாவ வேண்டுமா? அதற்கு அதிகம் செலவு வைக்குமா?கன ரக இயந்திரங்களைக் கொண்டு வந்து இயக்க வசதிப்படுமா? இயந்திரங்களுக்கான தாங்கிகளை அமைக்க இடம் கொடுக்குமா? முளைகளை அடித்து இறக்குவதற்கு ஏற்ற இறுக்கம் கிடைக்குமா? என்பதையும் நன்கு சோதித்து அறியுங்கள்.
* ஆரம்ப கட்ட மண் பரிசோதனை முயற்சிகளுக்குச் சங்கடப்பட்டுக்கொண்டு விட்டுவிடாதீர்கள். சில ஆயிரம் செலவழித்து மண் பரிசோதனை மேற்கொண்டால் அதுதான் உங்கள் கனவு வீட்டின் உண்மையான அஸ்திவாரம்.
மீஅதே போன்று நிலத்தடி நீர் பரிசோதனையும் மேற்கொள்ளத் தவறாதீர்கள். நிலத்தடி நீர் நன்றாக அமைந்துவிட்டால் உங்கள் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான தண்ணீரை வெளியிலிருந்து வாங்க வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* பெஸ்ட் கன்ட்ரோல் தரமாக அமையும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அஸ்திவாரப் பணிகளுக்கு முன்பும், பின்பும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வகையான பெஸ்ட் கன்ட்ரோல் முறைகளைப்பற்றி நிபுணர்களிடம் கேட்டறிந்து செயல்படுத்துங்கள்.

 - FROM BUILDERS LINE
For subscribe pl call : 88254 79234முக்கிய குறிப்பு:-

பணம் ,நேரம்,கட்டுமானப்பொருள் மிச்சம் செய்யும் RAT TRAP BOND கட்டுமானம் மற்றும் இதர வழிமுறைகளைப் பற்றிய மேலதிக தகவல்களைறிய

http://www.youtube.com/watch?v=leOV5ldCyng

http://gshakya-exploration.blogspot.ae/2012/09/cost-energy-efficient-building.html

http://www.earth-auroville.com/
ஸ்வபானம் [സ്വപാനം] [Swapaanam][2014] [மலையாளம்]

படத்தின் ப்ரொமோஷன் போஸ்டர்
ஷாஜி என் கருணுடைய படங்கள் சுத்தமான அழகியல் படங்கள், இப்படம் கலைப்பட விரும்பிகள் உலக சினிமா காதலர்கள்,கர்நாடக் இசைப்பிரியர்கள் ,நாட்டார் இசைப் பிரியர்கள் தவறவிடக்கூடாதவை, மற்றையோர் சில காத தூரம் தள்ளியிருக்கவும். அவரின் குட்டி ஸ்ராங்க் மலையாள சினிமாவின் மிக அருமையான படைப்பு, அதைப் போன்றே எந்த சமரசமுமின்றி எடுக்கப்பட்ட ஒரு கலைப்படைப்பு தான் ஸ்வபானம், இதை தமிழில் குத்துயிர் [குலையுயிர்] என்று சொல்வார்களே, அப்படி  அர்த்தப் படுத்திச் சொல்லலாம்.

இயக்குனர் ஷாஜி கருண் ஒரு தேர்ந்த கேமரா கவிஞருமாதலால் அவருடைய படங்களில் வரும் இருளும் ஒளியும் மிக நேர்த்தியாய் இழையும் காட்சிகள் மேதைமையின் உச்சத்தில் இருக்கும், இவரின் முந்தைய படமான வானப்பிரஸ்தத்தின் ஒளிப்பதிவின் நேர்த்தியும் இயக்கமும்  இன்றும் பேசப்படுகிறது. இவரின் திரைப்படத்தின் லொக்கேஷன்கள் மிகவும் அற்புதமான காணக்கிடைக்காத தங்கமாக இருக்கும், அதற்கு சாட்சி குட்டி ஸ்ராங்க் படத்தில் குட்டி ஸ்ராங்கன் செல்லும் வெவ்வேறு ஊர்களின் சூழலுக்கு ஏற்ப இவர் தேர்ந்தெடுத்த லொக்கேஷன் தீம்கள், மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களை இவரது கேமரா ஸ்வபானத்துக்காக அள்ளி வந்திருக்கிறது.

காமினி மணி சகி பாடல் மேற்குத்தொடர்ச்சி மலையின் பின்னணியில்

ஜெயராம் மற்றும் காதம்பரி தோன்றுகின்ற பாடல் காட்சிகளில் அத்தனை கலைத்திறன் மிளிர்கிறது. க்ளைமேக்ஸ் காட்சியில் மயில் ஒன்று பறந்து வந்து கீழிறங்கி தோகை விரித்து ஆடுகிறது, அதில் அத்தனை அழகியல் பொதிந்துள்ளது. அதே போல ஜெயராம் இரவு வேளையில் செண்டை வாத்தியம் பயிற்சி எடுக்கும் ஒரு காட்சியில் ,அவர்களின் நாலுக்கெட்டு வீட்டின் ரேழியில் கட்டப்பட்டிருக்கும் யானையின் மீது நிலவு ஒளி விழும்,அசலான கவித்துவம் அது,அதே போல படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ஜெயராமின் வளர்ப்பு நாய் ஜெயராம் வைத்த விஷ சோற்றை உண்டு இறந்து கிடக்கும்,அங்கே அருகே ஒரு ஓங்கு தாங்கான மரம்,அது போல ரசனையான பல ஃப்ரேம்கள் படத்தில் உண்டு.

 ஒவ்வொரு காட்சியமைப்பும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன, படத்தின் இசை சேர்ப்புக்கு சென்னையைச் சேர்ந்த யுவராஜ் என்னும் பிண்ணனி இசை சேர்ப்பாளருக்கு தேசிய விருது கிடைத்தது,அதை எந்தப் பத்திரிக்கைகளும் வழக்கம் போலவே கண்டு கொள்ளவில்லை,படத்தின் மாபெரும் பலம் சாஜி நாயரின் ஒளிப்பதிவும்,ஸ்ரீவல்சன் மேனனின் இசையும் ஆகும். இன்னொரு முக்கியமான அம்சம் படத்தில் பாடல் வரிகள், எழுதியவர் பாடலாசிரியர் மனோஜ்குமார். படத்தில் சுவாதித்திருநாள் மகாராஜா எழுதிய ஒரு புகழ்பெற்ற பாடலான காமினி மணி சகி மிக அருமையாக படமாக்கிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.அப்பாடலை இங்கே கேட்கலாம்.

இது செண்டை என்னும் கேரள பாரம்பரிய தோல்வாத்தியத்தை வாசிப்பவனான உன்னிக்கிருஷ்ணனின் கதை, மாரார் சாதியில் ஜனித்து அண்ணன்களின் வழிகாட்டுதலில் செண்டை வாத்தியம் வாசிக்கப் பழகும் உன்னி கிருஷ்ணனுடைய [ஜெயராம்]  பிறப்பு இழிவான பிண்ணனியைக் கொண்டிருக்கிறது, உன்னியின் தாய் மூன்று மகன்களில் இருவரை மாரார் சாதிக் கணவனுக்கு பெற்றிருந்தாலும், உன்னியை அவர் முறை தவறி பெற்றிருக்கிறார், [அதன் உண்மைக்கதை படத்தில் எங்குமே ஃப்ளாஷ் பேக்காக வெளிப்படுவதில்லை ]

மூத்த அண்ணன்,உன்னி,இளைய அண்ணன்

இதை அறிந்த மூத்த மகன் எப்போதுமே உன்னியை ஊரார் முன் மிக இழிவாக நடத்துகிறார், உன்னியின் செண்டை வாத்திய வாசிப்பை எப்போதுமே மட்டம் தட்டி வருகிறார், தவிர உன்னிக்கு லேசான மனநிலை பிறழ்தல் குறையும் இருக்கிறது, இருந்தும் மூத்த அண்ணன் முன்னர் ஜெயிக்க வேண்டும் என்னும் உத்வேகம் பூண்டவர், சில வருடங்களில் அண்ணனையே செண்டை வாத்திய வாசிப்பில் மிஞ்சிவிடுகிறார். ஊரார் மெச்ச பெயரும் புகழும் பெறுகிறார்,அது நாள் வரை அண்ணன் என்னும் ஆலமர நிழலில் வளர முடியாமல் இருந்தவர், 

இப்போது தனியாக செண்டை வாசிப்பு அரங்கேற்றத்தை ஏற்று நடத்தும் அளவுக்கு உயர்கிறார். இவருடைய வாசிப்பில் மயங்கும் ஒரு செண்டை வாத்திய பித்து கொண்ட நாட்டாமை பூக்காட்றி திருமேனி [ சுரேஷ் குருப் ]இவருக்கு தன் மகள் கல்யாணியை [லஷ்மி கோபாலஸ்வாமி] அவளின் விருப்பம்  என்ன என்று கேட்காமல்  மணம் முடித்துத் தருகிறார், ஆனால் உன்னியின் செண்டை வாத்திய மோகமும்,அவளின் செண்டை வாத்தியத்தின் மீதான அதீத வெறுப்பும் இவர்களை,இல்லற பந்தத்தில் ஒன்று சேர்ப்பதேயில்லை, இவர் செண்டையைத் தழுவ,அவள் அங்கே கார் ட்ரைவராக பணிபுரிந்தவனை ரகசியமாக அழைதவள்,என்னுள் ஒரு ஆடவனும் இதுவரை இறங்கவில்லை,எனக்குள் இருக்கும் தாய்மை ஏங்கித் தவிக்கிறது,சூல் கொள்ளத் துடிக்கிறது,எனக்கு இறங்கு,எனக்குள் இறங்கு என அவனை தன்னிடம் இழுத்து சுகிக்கிறாள்,

உன்னியும் கல்யாணியும்

வயிற்றில் குழந்தையும் வளரப் பெறுகிறாள்.  உன்னிகிருஷணனுக்கு திருமணத்தின் போது மனைவியின் ஊரில் வசிக்கும் உயர்சாதி வானசாஸ்திர நிபுணரும் ஜோதிடருமான நாராயணன் நம்பூதிரி  நட்பாகிறார், அவரின் செவ்வாய் தோஷம் பொருந்திய தங்கையைக் கரை சேர்க்க இவர் 50 வயதாகியும் கூட மணம் முடிக்கவில்லை, தங்கைக்காக நிறைய வரன்களை சலித்துப் பார்க்கிறார்,ஆனால் எதுவும் குதிரவில்லை,

 இந்நிலையில் உன்னியை வீட்டுக்குள் அழைத்து செண்டை வாசிக்க வைத்து ரசித்துப் பார்க்க,அவரின் தங்கை நளினி உன்னியுடன் தர்க்கம் செய்கிறாள்.  தான் மோகினியாட்டம் ஆடுகையில்,அதற்கு ஏற்ப செண்டை வாத்தியமிசைக்கும் போட்டிக்கு ஒற்றைக்கு ஒற்றை  வருமாறு உன்னியை அழைக்கிறாள், அங்கே நிகழ்ந்த உன்னியின் செண்டை வாசிப்பில் இயற்கையின் ஒலிகளைக் கேட்டவள். மெய்மறக்கிறாள்,

 உன்னியும் அன்று தன் மனம் இட்ட கட்டளையை கைகள் கேட்டு வாசித்ததாக முதன் முதலாக உணர்கிறார். இருவருக்கும் அன்று ஏற்பட்ட வித்யா நெருக்கம், ஒரு பட்டப்பகல் உடலுறவு வரை சென்று முடிகிறது, உன்னியின் ஜாதகத்தை முன்பொருமுறை கணித்த நாராயணன் நம்பூதிரி,உன்னி முறைதவறிப் பிறந்தவர் என ஊகித்து தங்கைக்கும் சொல்லியிருந்த படியால், இருவரின் பகல் நேர ஆலிங்கனத்தை கண்டுவிட்டவர் அனலாய் கொதிக்கிறார்,  உன்னியை நன்றாக அடித்து விரட்டியும் விடுகிறார்.

உன்னியும் நளினியும்

உன்னிக்கு சாபமும் தருகிறார். உன்னிக்கு மூத்த அண்ணன் மூலம் பொறாமையும் வயிற்றெரிச்சலும் கிடைக்க, பெற்ற அன்னையோ அண்ணனின் படிதாண்டிய வேசி என்னும் சுடு வார்த்தைக்கு பயந்து அண்ணனின் பேச்சை மீறாதே!!!அண்ணனுக்கு விட்டுக்கொடு என்று உன்னிக்கு அறிவுருத்த, சின்ன அண்ணனோ பெரிய அண்ணனுக்கு பயந்து நடக்க, உன்னி கட்டிய மனைவியோ இவரையும் இவரின் செண்டை வாத்தியத்தையும் அடியோடு வெறுக்க, மன பிழற்தல் முற்றிய நிலைக்கு வருகிறார், போதாதக் குறைக்கு ஊரில் இருக்கும் ஒரு நாட்டு வைத்தியன் தந்த போதை மருந்து குளிகைகளையும் கஷாயத்தையும் உட்கொள்ளும் பழக்கமும் பீடிக்க, உன்னியின் அந்திமம் துரிதமாகத் துவங்குகிறது.
ஒரு நாள் மனப்பிழற்சியின் உச்சத்தில் , அண்ணன் இது நாள் வரை தனக்கும் தன் இளைய அண்ணனுக்கும் தராமல்  மூட்டையாகக் கட்டி  ஸ்டீல் பீரோவினில் சேர்ந்து வைத்திருக்கும் பணத்தை சாவியைப் போட்டு திறந்து,அள்ளிப் போய்,பக்கத்துத் தெருவில் வசிக்கிற இளைய அண்ணன் வீட்டு வாசலுக்குச் சென்று பிரிக்கிறார். அங்கே இளைய அண்ணன்,மூத்தவரை பகைத்துக் கொள்ள விரும்பாமல்,குருதுரோகம் செய்ய விரும்பாமல், அண்ணன் சுயநலத்துடன் நமக்கு வரவேண்டிய பணத்தை அவர் சுருட்டிக்கொண்டால் அந்தப் பாவம்,அவருக்கு,ஆனால் எனக்கு அதை அடித்துப் பறிப்பதில் உடன்பாடில்லை,என்றது தான் தாமதம்,சுருக்கென்று குச்சியை கிழித்து உன்னியின் பங்கை கொளுத்திவிடுகிறார் உன்னி,காகிதம் எரிந்து சுருண்டு பறக்கும் தூசுகள் உன்னியின் முகத்தில் மோதுகிற அக்காட்சி உலக சினிமாக்கள் மட்டுமே தரும் ஒரு அனுபவம்.
 
இது தான் சரியான தருணம் என்று கணக்கு போட்டு காத்திருந்த நாராயணன் நம்பூதிரிக்கு, தன் தங்கைக்கு ஏற்ற வரன் இவன் தான் என்று எண்ணும் படி துப்பன் நம்பூதிரி[வினீத்] ஜாதகம் வர,அவளை தன் தங்கை நளினிக்கு விரைந்து மணம் முடிக்கிறார்,ஆனால் முதல் ராத்திரியிலேயே துப்பன் ஒரு இரண்டும் கெட்டான் என தெரிந்தும் விடுகிறது, எந்நேரமும் பூஜையும் புனஸ்காரமும் மடி ஆச்சாரமுமாக இருக்கும் துப்பன், உடையில் ஆணாக இருப்பினும் நடையில் ஒரு பெண், 

நாராயணன் நம்பூதிரியாக இயக்குனர் சித்திக்
இவரை அனைவரும் அர்த்தநாரிஸ்வரர் அருள் பெற்ற இசை வாத்தியம் செய்பவர் எனப் புகழ்ந்து, இவரிடம் பெரிய பணக்காரர்கள் எல்லாம் நாடு விட்டு நாடு வந்து ஆசி பெற்று இசை வாத்தியம் வாங்கிச் செல்கின்றனர், மீட்டாத வீணையாக மனைவி நளினி கட்டிலில் வீற்றிருக்க, துப்பன் அகால இரவிலும் இசைவாத்தியம் செய்து அதை மீட்டுகிறார்.மனைவி தன்னை தொட்டாலும் கூட குளத்தில் பாய்ந்து குளித்து தீட்டுக் கழிக்கிறார்.

கார் சாவியோடு 25பவுன் நகையேனும் கேட்டிருக்கலாமோ?!!! என்றெண்ணும் ப்ரகாஷனும் கள்ளக் காதலி கல்யாணியும்
மிகவும் விந்தையான ஒரு மனிதனுக்கு வாழ்க்கைப்பட்ட நளினி, அண்ணனுக்கு செய்யும் நன்றிக்கடனாக நினைத்து,துப்பனுடனே தங்கியிருக்கிறாள், அண்ணன் இந்த இரண்டு கெட்டானுக்குப் போய் தன் அரிய மாணிக்கம்  போன்ற தங்கையை மணம் முடித்தோமே என நினைத்து,அவளை தன் வீட்டுக்கு அழைத்தாலும் நளினி வருவதாக இல்லை.

மனநிலை பிழற்விலும் காதல் தோல்வியிலும் உழலும் உன்னியை அவனின் தாய் பாலக்காட்டில் இருக்கும் ஒரு மனநோய் காப்பகத்தில் சென்று சேர்த்து தானும் உடனிருந்து நான்கு மாதங்கள் வரை உடனிருந்து கவனிக்கிறாள்,அங்கேயே ஓய்வு நேரத்தில் உன்னி அங்கே உள்ள பாலகர்களுக்கு செண்டை வாத்திய  வகுப்பெடுக்கிறார். இப்போது உன்னியிடம் விரும்பத்தக்க மாற்றங்கள் தெரிய, அவர்கள் ஊர் திரும்புகின்றனர், அங்கே உன்னியின் மனைவி கல்யாணி 6 மாத கர்ப்பமாக இருக்கிறாள், ஊரார் பார்வைக்கு அது உன்னியின் குழந்தை, ஆனால் உன்னிக்கும் கல்யாணிக்கும் மட்டும் தெரியும் அது ட்ரைவர் பிரகாசனின் குழந்தை என்று.

அதற்கு மேலும் தாமதிக்க விரும்பாத கல்யாணி ,அதே இரவு காதலன் பிரகாஷனை அழைக்க, அவர்கள் இருவரும் நடுநிசிக்கு கல்யாணியின் நாட்டாமை அப்பாவான பூக்காட்றி திருமேனியை சந்தித்து உண்மையை உரைக்க, அவர் உன்னியை நினைத்து கதி கலங்கிப் போகிறார். அந்நிலையிலும் பிரகாசன், தாங்கள் இருவரும் உய்க்க உதவ வேண்டி அவரின் காரைத் தருமாறு இறைஞ்சுகிறான். அவரும் அவனிடம் அதன் சாவியைத் தர, அவர்கள் பொள்ளாச்சி சென்று சொச்ச வாழ்க்கையைத் இன்புற்று வாழ ஆரம்பிக்கின்றனர்.
 
யாரும் தவறவிடக்கூடாத துப்பன் நம்பூதிரியின் பட்டறைக் காட்சி
இந்நிலையில் துப்பன் நம்பூதிரி ஒரு இரவில் ,தன் பட்டறையில் வைத்து குண்டு பல்பின் ஒளியில் ஒரு ஃபிடில் வாத்தியத்தை புதிதாக தந்தி பூட்டி மெல்ல வாசித்தவர்  .இதை யாருக்கு நிரந்தரமாக வாசிக்கக் கொடுத்து வைத்திருக்கிறதோ? என்று மனைவியைப் பார்த்து  வித்யா கர்வம் பொங்க பெருமிதம் கொள்கிறார்,நளினி இவரின் கையாலாகாதத் தனத்தை எண்ணி எள்ளி நகையாடுவது போல பார்க்கிறாள்.பெருமூச்சு விடுகிறாள் அப்போது மின்சாரம் தடைபடுகிறது,குண்டு பல்பை தேங்காய் நாரின் மீது வைத்து விட்டு தூங்குகிறார் துப்பன்,அப்போது நடுநிசியில் மின்சாரம் வர,குண்டுபல்பு ஒளிர்ந்து,சூடாகி அது தேங்காய் நாரினைப் பொசுக்கி பல்பு உடைந்து தீப்பற்றி அந்த மாடி அறையின் பட்டறையே பற்றி எரிகிறது,

அர்த்தநாரி போன்ற துப்பன் பாத்திரம்

யார் தொட்டாலும் குளத்தில் முங்கிக் குளிக்கும் துப்பனை ஆஸ்பத்திரி ஊழியர்கள் உடல் முழுக்க தீக் காயங்களுடன் ஸ்ட்ரெட்சரில் ஏற்றி வேனில் வைக்க,அங்கே வரும் உன்னி,நளினியை பார்த்து என்ன ஆயிற்று? எனக் கேட்க, அங்கே விஷய்ம் கேட்டு ஓடி வந்த நாராயணன் நம்பூதிரியோ உன்னியை போட்டு அடிக்க, நளினி மனதுக்குள் கோயிலே கட்டி வைத்திருக்கும் உன்னியை நோக்கி கைக்கூப்பி, இங்கே மீண்டும் வராதீர்கள், .உங்கள் வெள்ளந்தியான மனதையும் உடலையும் இல்வாழ்வையும் கெடுத்தப் பாவத்துக்கு நானே அதை ஏற்று  அனுபவிக்கிறேன், என்னை மறந்து விடுங்கள் என விருட்டென வேனில் ஏறி விடை பெறுகிறாள்.

இயக்குனர் ஷாஜி என் கருண் இந்த துப்பன் நம்பூதிரி கதாபாத்திரத்தில் பொதித்து வைத்த டார்க் ஹ்யூமர் உலகத் தரம்.குட்டி ஸ்ராங்க் படத்திலும் இதே போல ஒரு காட்சி உண்டு, அது ஒரு பெரிய காங்கிரீட் குரிசு,அதை ஊர் ஜனம் மொத்தமும் சேர்ந்து தூக்கி பீடத்தில் நிறுத்தும் வைபவத்தின் போது அதன் ராட்டினக் கயிறு அறுந்து கீழே மக்களின் மீது விழ,அங்கே ஒரு கிழவி உடல் நசுங்கி குருதி கொப்பளிக்க  உயிர் விட்டிருப்பாள். மிகக் குதூகலமாக ஆரம்பித்த காட்சி சடுதியில் ஒரு துன்பியலான முடிவில் கொண்டுவிடும். அதே போலவே இங்கே இந்த குண்டு பல்பு காட்சி.   அதை உள் வாங்கி ஏற்றுச் செய்த நடிகர் வினீத் காலத்துக்கும் பேசப்படுவார், இவர்  ஒரு அண்டர் ரேட்டட் நடிகர். இவரின் அரிகே படத்தின் வில்லத்தனமும், பாவுட்டியுடே நாமத்தில் என்னும் படத்தின் வில்லத்தனமும் மறக்க முடியாதவை, இவர் வயதினை ஒத்த நடிகர்கள் யாருமே ஏற்றுச் செய்ய யோசிப்பவை, எந்த கவுரவமும் பார்க்காமல் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் ஒரு நடிகர் வினீத்.

செண்டை செய்யும் ஆப்த நண்பனும் உன்னியும்

விதி போடும் முடிச்சுக்கள் மிகவும் விந்தையும் விசித்திரமுமானவை, இனி என்ன ஆகும் ?!!! என்று படத்தில் பாருங்கள் ,உன்னியாக வந்த ஜெயராம் எத்தனையோ நூறு படங்கள் நடித்திருந்தாலும்,இது தான் அவரின் பெயர் சொல்லும் படம் என்னும்படியான பாத்திரம், அதற்கு இவர் மிகவும் தகுதியானவர் என நிரூபித்திருக்கிறார், இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்காததன் அரசியல் என்ன என்று தெரியவில்லை, படத்தை நடுவர்கள் பார்த்தார்களா? என்றே ஐயம் எழுகிறது, நாராயணன் நம்பூதிரியாக வந்த சித்திக் மிக அருமையான நடிகர் என நிரூபித்திருக்கிறார். உன்னியின் காதலி நளினியாக வந்த காதம்பரி மிகவும் அருமையான நடிகை,

உலகசினிமா ரசிகர்களுக்கென்றே படம் இயக்கும் இது போன்ற அசல் ஆட்டியர் இயக்குனர்களின் படங்களை நாம் தேடிப்பார்த்து ஊக்கம் தருவோம், அது அவர்களுக்கு அடுத்த படைப்பை இழைத்து மெருகேற்ற மிகுந்த உத்வேகத்தைக் கொடுக்கும்.

படத்தினைப் பற்றிய ரிவர்ஸ் க்ளாப் செய்த முக்கியமான கண்ணோட்டம்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)