இனப்படுகொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனப்படுகொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காட்டின் [katyn ][2007][போலந்து][15+]


இனப்படுகொலை என்றாலே நம் நினைவுக்கு வருவது யூதர்கள் இனப்படுகொலை தான், ஆனால் அதற்கு ஈடாக போலந்து நாட்டினரும் தம் இன்னுயிரை தம் நாட்டுக்காக ஈந்துள்ளனர், போலந்து நாட்டின் 70 ஆண்டுகால வரலாற்றை நாம் படித்துப் பார்த்தால் அது இரண்டாம் உலகப் போரில் சிக்கிச் சீரழிந்து சின்னாபின்னமானது புரியும், நாஜிப்படையினரும்,ரஷ்யரும் போலந்து நாட்டை பயங்கர சுடுகாடாக்கினர் என்றால் மிகையில்லை,

 போலந்து நாட்டின் புகழ்பெற்ற சினிமா இயக்குனரான Andrzej Wajda இயக்கி 2007 ஆம் ஆண்டு வெளியான படம் காட்டின், இவரின் தந்தையும் போலந்து ராணுவ வீரர்,  இந்த காட்டின் படுகொலைகளின் போது சுட்டுக் கொல்லப்பட்டவர் , அப்போது இயக்குனர் Andrzej Wajda க்கு 13 வயது, பிஞ்சு மனதில் நீங்கா வடுவாகப் பதிந்து விட்ட காட்டின் படுகொலை நினைவுகள், இத்திரைப்படத்தில் உக்கிரமாய் வெளிப்பட்டுள்ளது.சோவியத் ரஷ்யா உடைந்து 20 வருடங்கள் கழித்தே இந்த உன்னத படைப்பு போலந்து நாட்டின் தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது,எத்தனை காலம் இது நீரு பூத்த நெருப்பாக போலந்து மக்களின் மனதில் கனன்று கொண்டிருந்திருக்கும்?!!!

வண்டியில்வரும் போலந்து ராணுவஅதிகாரிகளின்  பிணங்கள்
போலந்து நாட்டின்  குடியுரிமை சட்டத்தின் படி ஒவ்வொரு பல்கலைக்கழக பட்டதாரியும் கட்டாய ராணுவ சேவை செய்திருக்க வேண்டியது அவசியம், அப்போது தான் ஒருவருக்கு குடிமகன் அந்தஸ்தும் பட்டமும் ,தொழில் செய்ய உரிமமும் கிடைக்கும்,இரண்டாம் உலகபோரில் ஜெர்மனி முதலில் போலந்தை பிடித்துக்கொள்ள,பின்னர் 2 வார காலத்தில் ரஷ்யாவும் போலந்தைப் பிடித்துக்கொண்டது, சுமார் 11லட்சம் பேர் வரை போர்கைதிகளாக ஜெர்மனியாலும் ரஷ்யாவாலும் பிடித்துச் செல்லப்பட்டனர். 1939ன் இறுதியில் போலந்து ராணுவ வீரர்கள் சுமார் 22000 பேர்களை ரஷ்யாவுக்கு கைதிகளாக  பிடித்துக் கொண்டு சென்ற செம்படை,ஒரு வருடகாலம் நன்கு பராமரித்து, வெளியுலகத்துக்கு அவர்கள் சிறையில் கிருத்துமஸ் கூட கொண்டாடுவதாக ஆவணப்படம் எடுத்து காட்டுகிறது,
பாயிண்ட் ப்ளான்கில் சுடும் காட்சி
பகைவரைக் கூட மனிதாபிமானத்துடன் நடத்தும் ரஷ்யா என பொய்ப் பிரச்சாரம் செய்கிறது, ஆனால் அவர்கள் 22000 பேரை அடுத்தடுத்து காட்டின் என்னும் காட்டுக்குள் கூட்டிப்போய் சுட்டுக்கொன்று புதைத்திருக்கிறது செம்படை,அந்த மரணப் பட்டியலில் இருந்த 22000 பேரும் நன்கு படித்த மேதைகள் அவர்களில் டாக்டர்கள், எஞ்ஜினியர்கள், பைலட்டுகள், என ஒளிமயமான போலந்தை உருவாக்கத் தக்க சான்றோர்கள் இருப்பது போல  பார்த்துக்கொண்டனர்.அதை கவனமாக  நிறைவேற்றவும் செய்தனர்.

 இரண்டாம் உலகப்போர் உச்சத்திலிருக்கும் 1943களில் ஜெர்மனி ரஷ்யா செய்த காட்டின்  படுகொலைகளை [katyn massacre] கண்டறிந்து எதிர் பிரச்சாரம் செய்கிறது, ஆனால் சர்வாதிகாரி ஸ்டாலினின் அரசு அந்த படுகொலைகளை செய்தது நாஜிப்படைதான் என்று உலக நாடுகள் சபை முன்னர் முழங்குகிறது, ரஷ்யா உக்கிரமான போரின் முடிவில்  மீண்டும் நாஜிப்படையின் வசம் இருந்த போலந்தை முழுதாய் ஆக்கிரமிக்கிறது, போலந்தில் நிலவிய தனக்கு உகந்த சூழலைப் பயன்படுத்தி பொது மக்களிடம் காட்டின் படுகொலைகள் நாஜிப்படையினரால் நிகழ்த்தப்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்கிறது, ஆனால் இதற்குப் பின்னர் இருக்கும் சூத்திரதாரி சர்வாதிகாரி ஸ்டாலின் தான் என்பதை போலந்து மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்,
இது உண்மையான காட்டின் படுகொலையும்-கண்டுபிடிப்பும்

1940ஆம் ஆண்டு காட்டின் காட்டுக்குள் வைத்து தலையில் பாய்ண்ட் ப்ளான்கில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு  கும்பலாக புதைக்கப்பட்ட  போலந்து ராணுவ வீரர்களின் சடலங்கள் முறையாக ரஷ்யர்களால் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு மிகவும் நல்லவர் போல நீத்தார்களின் பதக்கங்களையும், உடமைகளும் பல்கலைக்கழகங்களின் வழியே வீட்டாரிடம் ஒப்படைக்கத் தரப்படுகின்றன, ஆனால் அவற்றை அந்த பல்கலைக் கழகங்கள் வீட்டாரிடம் ஒப்படைப்பதில்லை, இப்போது பல்கலைக்கழகங்கள் தடையின்றி இயங்குவதற்கு ரஷ்யாவின் கனிவும் தயவும் தேவையாக இருப்பதால், அவை ஸ்டாலின் செய்த கடந்தகால படுகொலைகளை கண்டுகொள்வதில்லை, நிகழ்காலத்திலேயே கவலை கொள்கின்றனர்,  இருந்தும் அனு தினமும் ரஷ்யர்களின் செம்படை புரிந்த போர் குற்றங்களுக்கு எதிராக ஏதாவது சாட்சியம், தடயம் தோன்றிய வண்ணம் இருக்கின்றன,

ஜெர்மானிய வகை துப்பாக்கியில் இருந்து கிளம்பும்  குண்டு ஒருவரின் தலைக்குள் பாய்ண்ட் ப்ளான்கில் வெளியேறுவதால் மூளைக்குள் அது தங்குவதேயில்லை,அதனால் ஜெர்மானிய நாஜிப்படை  சுட்டு தான் அவர்கள் இறந்தனர் என்று ரஷ்ய செம்படையினர் சாதித்தனர், அந்த   பாணி ஜெர்மனியின் நாஜிப்படைக்கு உரிய கொலை புரியும் பாணியாகும், அதை ரஷ்யர்கள் பின்பற்றி சுமார் 22000 வீரர்களை அடுத்தடுத்து சுட்டுக் கொன்று மூன்று பெரிய சவக்குவியலாக அடக்கம் செய்திருப்பதும் மெல்ல வெளியுலகிற்குத்  தெரிய வருகிறது, ரஷ்யாவும் ஜெர்மனியும் 1990ஆம் ஆண்டு வரை பொருப்பேற்க மறுத்து வந்த நாம் அதிகம் கேள்வியுறாத, காட்டின் படுகொலைகளை உலகுக்குச் சொன்ன மிக முக்கியமான படம் இது,
சுட்ட வேகத்தில் குழியில் தள்ளும் காட்சி
யூத இனப்படுகொலைகள் எல்லோரையும் எளிதாக சென்றடைந்தது போல போலந்து கத்தோலிக்க மக்களின் படுகொலைகள், சீனமக்களின் இனப்படுகொலை, மற்றும் ஆஃப்ரிக்க,கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த  மக்களின் இனப்படுகொலைகள் அதிகம்  மக்களை சென்று சேரவில்லை, அதற்கு யாரும் மெனக்கெட்டு ஆவணக்காப்பும், விளம்பரங்களும் ,பிரச்சாரங்களும் செய்து சர்வதேச அரங்கில் தீவிரமாக வாதாடவுமில்லை, அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனையும் வாங்கித் தந்த பாடில்லை. இந்த காட்டின் படுகொலைகளுக்கு  இன்னமும் ரஷ்யா மனம் வருந்தவில்லை, என்பது தான் மாபெரும் துயரம்.
1943 ல் சவக்குழிகளை தோண்டிய போது
என்ன தான் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் நூரம்பர்க் விசாரணை மன்றம் அமைக்கப்பட்டாலும் நாஜிக்கள் சில நூறு பேர்கள் தண்டனை அடைந்தது போல ரஷ்யர்கள் செய்த போர் குற்றங்களுக்கு தண்டனை அடையவில்லை என்பது   வேதனையான விஷயம்,  அது இன்றும் போலந்து மக்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக இருக்கிறது, இந்தப்படம் பார்ப்பதற்கு முன்னர் இந்த சுட்டிகளில் சென்று புகைப்படங்களைப் பாருங்கள், பின்னர் இதைப் பற்றி படித்து விட்டு ,சிறிது வரலாற்றுப் புரிதலுடன் ,காட்டின் திரைப்படத்தைப் பாருங்கள் , இரண்டாம் உலகப்போரின் உலகறியாத கொடூரங்களை உரக்கச் சொன்ன போலந்து நாட்டின் படைப்பு இது,70 வருடங்கள் கடந்த நிலையில் மிகவும் பலமாக ஒலித்திருக்கிறது,

உலக வரலாற்றில் முதலும் கடைசியுமான சாதனையாக ஸ்டாலினின் அல்லக்கையான Vasili_Blokhin என்னும் ஒருவன் ,தன் கையால் சுமார் 7000 பேரை காட்டின் படுகொலைகளின் போது ரிவால்வரால் சுட்டுக்கொன்று சாதனை படைத்திருக்கிறான். செம்படையின் கொடூரமான சாதனைகளுக்கு இவன் செயல்ஒரு சோற்றுப் பதம்
http://en.wikipedia.org/wiki/Katyn_massacre
http://en.wikipedia.org/wiki/Vasili_Blokhin
http://www.allworldwars.com/Katyn-Files.html#6
http://www.pbs.org/behindcloseddoors/in-depth/katyn-massacre.html
http://www.katyn.org.au/
காட்டின் படத்தின் ட்ரெய்லர்-யூட்யூபிலிருந்து

த ஆக்ட் ஆஃப் கில்லிங் [The Act of Killing][2012][டென்மார்க்]

த ஆக்ட் ஆஃப் கில்லிங், நம்மை கொலை செய்ய தூண்டும் படம், தவறாக எண்ண வேண்டாம் நண்பர்களே!!!, கடவுள் என ஒருவர் இருக்கிறாரா?!!!என விரக்தியின் உச்சத்திற்கு நம்மை தள்ளி, இந்தப் பாவிகள் ஒருக்கால் நம்மிடம் மாட்டினால் நம் வெறி தீர வெறும் கைகளாலே அடித்தே கொன்று விடலாம் என தோன்றவைக்கும்படைப்பு,படத்தில் ஆண்டன் சிகர்க் போல டார்க் ஹ்யூமர் கதாபாத்திரங்கள் வந்தால் வியந்து பார்க்கலாம்,ஆனால் ஆண்டன் சிகர்கை விடக்கொடிய டார்க் ஹ்யூமர் ஜந்துக்கள் இன்னும் வாழ்ந்து வருவதை ஆவணப்படத்தில் பார்க்கையில் எப்படி இருக்கும்?

படத்தில் நாம் ஓடிக்களைத்த ரிடைர்டு கேங்ஸ்டர்களைப் பார்க்கிறோம், இந்த முக்கியமான சுட்டியில் போய் மேலதிக தகவல்களைப் படித்தால் ஒருவர் நன்றாக விளங்கிக் கொள்ளலாம், எல்லோருமே அப்போதைய 1965ன் சுகர்டோ [Suharto]அவசர அரசாங்கத்துக்கு கைக்கூலிகள் தான், எல்லோருமே இன்று தம் 60களில் உள்ளவர்கள், மனைவி குழந்தை என இன்றைய சொகுசு வாழ்வை சுகமாகக் கழிப்பவர்கள். கடவுள் நம்பிக்கையும் கொண்டவர்கள்.இன்னும் கட்டப்பஞ்சாயத்து செய்து வாழ்வை ஓட்டுகின்றனர்.ஒரு சிலர் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

தண்டனை பெறாத கொலைகாரர்கள்
அவர்களின் தொழில் முறை கொலைகளைப்பற்றிய சுகமான நினைவு கூறல் தான் இந்த ஆவணப் படம்.அப்போதைய சர்வாதிகாரி சுகர்டோவின் ராணுவம் கம்யூனிஸ்டுகள் என்னும் சந்தேகத்துக்கு இடமான நபர்களின் பட்டியலை இவர்களிடம் கொடுக்க,இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கி வந்து அடித்தோ,கழுத்தை நெரித்து கொன்று புதைப்பதே இவர்களின் வேலை,அதை அரசுக்கு அணில் போல உதவினோம் என்று பெருமையாக சொல்கின்றனர். இது போர் குற்றமாகாதா?என்றால் நடந்து 40 வருடமாகிறது, விசாரிக்க வேண்டுமானால் காயின் ஆபேல் கதையில் இருந்து துவக்குங்கள் என்கிறான் ஒருவன், புஷ்ஷின் பார்வையில் குவாண்டனாமோ நியாயமானது,சதாமின் பார்வையில் ஷுயா முஸ்லிம்களைக் கொன்றது நியாயமானது,என அடுக்குகிறான்.காட்டுமிராண்டிகள் உலக அரசியல் பேசுவது கண்டு நமக்கு மலைப்பாக இருக்கிறது,

கிஞ்சித்தும் தாங்கள் செய்த தலா 1000க்கும் அதிகமான கொலைகளுக்கு வருந்தாதவர்களாக இருப்பதையும்  நாம் பார்க்கிறோம்.கொடிய நாஜிக்களைக் கூட மன்னித்துவிடலாம் ஏனெனில் அவர்கள் போர் குற்றம் புரிந்ததற்கு கடுகளவாவது தண்டிக்கப்பட்டனர்,நீயா நானா போல ஒரு இந்தோநேசிய டிவி நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு எப்படி கொலை செய்தோம் என்று விளக்குகிறான் அன்வர்,

நம் ஊரில் பன்றியைப் பிடிப்போம் பாருங்கள்,வெறும் கம்பியில் சுருக்கு போட்டு,அதே போல கம்பி கொண்டு கம்யூனிஸ்டு என்று குற்றம் சாட்டப்பட்டவரின் கழுத்தை சுற்றி ஒரு முனையை கம்பத்தில் கட்டியிருக்க மறுமுனை பொருத்தப்பட்ட கட்டையை அன்வர் என்பவன் இருகைகளாலும் இறுக்கி இழுத்து அவரைக் கொல்கிறான் ,இது போலவே சுமார் 1000 பேரை கொன்றிருக்கிறான் அவன்,இவன் எல்விஸ் ப்ரஸ்லி, அல் பசினோவின் தீவிர ரசிகனும் ஆவான்,அவர்களின் படங்களை ஒன்று விடாமல் பார்த்தவன்,ப்ளாக்கில் டிக்கெட் விற்ற திரையரங்க பணீயாளன்,

கம்யூனிஸ்டுகளை வெறுக்க காரணம் சொல்கிறான் கேளுங்கள், கம்யூனிஸ்டுகள் ஹாலிவுட் சினிமாக்களை இந்தோனேசியாவில் தடை செய்தனராம், அதனால் திரையரங்கிற்கு வரும் கூட்டம் அருகிவிட்டதாம், அதனால் திரையரங்க முதலாளிகளும் தொழிலாளிகளும் பாதிக்கப்பட்டனராம். எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா?!!! 1965-66 வரை கொல்லப்பட்ட கம்யூனிஸ்டுகளின் அதிகார பூர்வமான எண்ணிக்கை 5லட்சம் பேர், நாம் பார்ப்பது  வடக்கு சுமத்ராவில் மேடான் என்னும் நகரில் நடந்த கம்யூனிஸ்டுகள் கொலைகளை மட்டும்.நடந்தவற்றில் 5 சதம் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

நாம் பார்க்கும் இந்த கொலைகாரன்கள் ஒரு பானை சோற்றின் பருக்கைகள் தான் , அந்த டிவி காம்பியரிங் அழகி வாய் நிறைய பற்களுடன் இந்த கேங்ஸ்டர்கள் செய்த கம்யூனிச கொலைகளை வியந்து பாராட்டுகிறாள், ஸ்ஸ்ப்ப்பா!!! கம்யூனிஸ்டுகள் என கேவலமாக உடலை சிலுப்பியவள் அவர்கள் சாக வேண்டியவர்கள் தான்! என்கிறாள்.இப்படி மக்கள் மனதில் விஷவிதையை விதைத்திருக்கிறான்கள் இந்த கேடுகெட்ட பொறுக்கிகளும் சர்வாதிகார அரசியல்வாதிகளும்.

இப்போது நாம் அநேகம் பேர் விரும்பி அணியும் ரீபொக்,அடிடாஸ்,ஃபிலா போன்ற ப்ராண்டு ஆடைகள் முதல் ஷூக்கள்,தொப்பிகள் வரை பெரும்பாலும் இந்தோனேசியாவில் தயாரிக்கப்பட்டவையே, 5 லட்சம் கம்யூனிஸ்டுகள் ஒரே வருடத்தில் கருவருக்கப்பட்டதை பெருமையாக பேசும், நியாயம் கற்பிக்கும் நாட்டு மக்கள் தயாரிப்பவை, இனி இவர்கள் தயாரிக்கும் எந்தப் பொருட்களையுமே வாங்கவே கூடாது என அருவருக்க வைக்கிறது, நான் உலகத்தில் சுற்றுலா அல்லது வேலை நிமித்தம் செல்லவே விரும்பாத நாடு என ஒன்று இருக்குமானால் அது பாகிஸ்தான் அல்ல!!! இந்தோநேசியா தான், இதைப் பற்றி எழுத வேண்டுமானால் எழுதிக்கொண்டே போவேன்,மிகவும் அயற்சியாக இருக்கிறது, நம் நாட்டிலேயே ஆவணப்படுத்த வேண்டியவை நிகழ்வுகள் நூறைத் தொடுகின்றன, ஆனால் ஒன்றுமே ஆவணப்படுத்தப்படவில்லை,  

நான் இதை ஒரு மாதம் முன்பு பார்க்க ஆரம்பித்து,அதற்கான அற்பணிப்பான  மனநிலை இல்லாததால் பின்னர் பார்க்கலாம் என வைத்துவிட்டேன், நேற்று கொழந்தயின் இந்தப் பதிவை படித்தேன்,பாலாவும் உடனே பாருங்க என்றார், இன்று வேலை  முடிந்து வந்ததும் பார்த்து,மனம் கேட்காமல் பதிவாகவும் இட்டு விட்டேன். உண்மையிலேயே போர் குற்றங்களைப்பற்றி அறிய இது போல உண்மைக்கு வெகு அருகே பயணிக்கும் படியான ஆவணப் படங்கள் வரவேண்டும்,சினிமா எடுப்பதையே பெரிய தொழிலாக செய்யும் நாடு இந்தியா , உண்மையில் வெட்கக்கேடு ,நம்மிடம் இப்படி உண்மைக்கு அருகே பயணிக்கும் படியான ஒரு ஆவணப்படமும் கிடையாது,

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, இந்திய சீனப்போர், இந்திய பாகிஸ்தான் போர் போன்ற காலகட்டங்களில் நம்நாட்டிலும் எதிரி நாட்டிலும் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பேர்கள், போர்கைதிகளாக வாடுவோர். அனாதையான குழந்தைகள், புலம் பெயர்ந்தோர்,ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்த பணக்காரர்கள்,உயிருக்கு பயந்து மதம் மாறியோர், அன்னை, தந்தை, பிள்ளைகள் சகோதரரை பற்கொடுத்தோர்  மனைவி, மகள்,சகோதரிகளை வன்புணர்வுக்கு பலி கொடுத்தோர், மதக்கலவரங்களில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பேர்கள்,எமர்ஜென்சி சமயத்தில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பேர்கள், கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், அதில் மணமே ஆகியிராத ஆண்கள் பெண்கள், போபால் விஷவாயு கசிவினால் மாண்டோர். என எத்தனையோ ஆதாரங்கள் கொட்டிக்கிடந்தும் எதுவுமே ஆவணப்படமாக்கப்படவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை ராணுவத்துக்கும் புலிகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படை நமக்கு மறக்க முடியாது,3 வருட அட்டூழியத்துக்கு பின்னர் அமைதிப் படையை வெளியேற்ற புலிகளும்,சிங்கள ராணுவமும் ஒன்றாய் இணைந்து பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல,அது ஆப்பரேஷன் பூமாலை அல்ல ஆப்பரேஷன் சவமாலை,உலக அரங்கில் அமைதியை திரும்ப வைத்தவர் என ராஜீவின் புகழை பரைசாற்றும் சுயநலத்துக்காக,புற்றுநோய் கிருமி போல நாட்டையே சூறையாடிய கோரப்படை அது,ஆப்பரேஷன் பூமாலையின் அட்டூழியங்களால் மடிந்த உயிர்களுக்கும் ,வன்புணர்வு செய்யப்பட்ட சகோதரிகளுக்கும்,அங்கே இன்றும் நடைபிணங்கள் போல வாழ்பவர்க்கும் நினைவேந்தல் செய்யும் வண்ணம் நல்ல ஆவணப்படங்கள் நம்மிடம் உள்ளதா? இல்லவே இல்லை.

நாம் வரலாற்று நிகழ்வுகளை ,பேரழிவுகளை அல்லது போரினை பற்றி காணும் திரைப்படங்கள் அல்லது ஆவணப்படங்கள் எல்லாமே ஒன்று வழவழா கொழகொழாவென இருக்கிறது,அல்லது அரைவேக்காடாக இருக்கிறது, அல்லது உண்மையை திரித்து கூறப்பட்டதாக இருக்கிறது.1971 ஆம் ஆண்டு சுமார் 4லட்சம் பெண்கள் கிழக்கு பாகிஸ்தான்  தேசத்தில் மேற்கு பாகிஸ்தான் ராணுவத்தினராலும் அவர்களுக்கு உதவிய ரஜாக்கர்கள் மற்றும் இதர போராளி குழுக்களாலும் வன்புணர்வு செய்யப்பட்டனர்,

பல்கலைக்கழக ஹாஸ்டலில் படித்த 600 இளம்பெண்கள் கைகால்கள் கட்டப்பட்டு சுமார் 9மாத காலம் வரை ராணுவ வீரர்களுக்கு பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டனர்,நிறைய பெண்கள் கழிவறையில் தங்கள் நீண்ட கூந்தலையே சுருக்காக இட்டு தொங்கினர்,போரின் முடிவில் கருவை கலைக்க முடியாதபடி முற்றிய இளம் பெண்களை இந்திய எல்லையில் இருந்த அன்னை தெரசாவின் அபலைகள் இல்லம்  ஏற்றுக்கொண்டது, அங்கே தங்கி நிறைய அபலைப் பெண்கள் குழந்தை பெற்றனர்,பெற்றதும் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க விரும்பாமல் அநேகம் பெண்கள் வீடு திரும்பினர்.வீட்டார் அப்பெண்களை ஒன்று விரட்டினர் அல்லது விஷம் வைத்து கொன்றனர், 25000 க்கும் மேல் விரும்பத்தகாத அனாதை குழந்தைகள் உருவாயின,இன்னும் அவர்களுக்கு நியாயம் கிடைத்த பாடில்லை,ஆனால் மேற்சொன்ன கொடூரங்களை பற்றிய ஒரு ஆவணப்படமும் நம்மிடம் கிடையாது.இது வெட்கக்கேடு தானே?!!!

படத்தைப்பற்றி  சொல்ல நிறைய இருக்கிறது,இனப்படுகொலைகளை பற்றி தொடர்ந்து விரிவாக எழுதவே அயற்சியாக இருக்கிறது,இப்படம் உருவான விதம் பற்றி மிக விளக்கமாக கொழந்த எழுதியிருக்கிறார்,அது முக்கியமான  கட்டுரை அதையும் அவசியம் படியுங்கள்.ஆகவே  நண்பர்கள் அவசியம் பார்த்து கருத்துக்களைச் சொல்லுங்கள்.
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-

ஆமென். [Amen.][2002][ ஃப்ரான்ஸ்]

இயக்குனர் காஸ்டா கவ்ராஸின் ஆமென் [ஃப்ரென்சு] படம்  இன்று மீண்டும் பார்த்தேன், யூத இனப்படுகொலைகளைப் பற்றி இதுவரை வெளிவந்த சுமார் 60 உலகப்படங்களில் மிகவும் முக்கியமான படம், இனப்படுகொலை பற்றி மிக  விரிவாக அலசுகிறது படம், இதே இயக்குனரின் EDEN IS WEST என்னும் தன் நாட்டினை முற்றிலும் தொலைத்து ஃப்ரான்ஸுக்குள்  சட்டவிரோதமாக குடிபெயர்ந்து அனுதினமும் செத்து செத்து பிழைக்கும் அகதியின் கதையையும் அவசியம் பாருங்கள்,

போர் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தினால் உலகெங்கிலும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து இன்னலுறும்  ஏழை மனிதனின் அவதியை நேரில் நாம் கண்ணுறுவது  போல் சித்தரித்திருப்பார், எந்த நாட்டின் அகதியையும் அதில் ஒருவர் பொருத்திப் பார்க்கலாம். இயக்குனரும் போரினால் ஃப்ரான்ஸுக்குள் புலம்பெயர்ந்த ஒரு அகதி என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா காட்சிகளின் மீடியம் என்னும் கூற்றுக்கேற்ப  முதல் காட்சியிலேயே ஜெனிவா நாட்டில் இயங்கிய லீக் ஆப் நேஷனின் , யூத இனப் படுகொலைகளின் மீதான கள்ள மௌனத்தை நமக்குப் பரைசாற்றுகிறது படம். 1936 ஜெனிவா, ஸ்டீஃபன் லக்ஸ் என்னும் யூதர் ஒருவர் சபைக்குள்ளே அதிரடியாக நுழைகிறார், நாஜி ஆக்கிரமிப்பு போலந்தில் யூதமக்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்படுகின்றனர் , இனியேனும் நடவடிக்கை எடுங்கள் நியாயமாரே!!!. என்னும் வாசகங்கள் கொண்ட காகிதங்களை சபையினரை நோக்கி வீசி எறிகிறார், உங்கள் இதயத்தை தொட எனக்கு வேறு வழி தெரியவில்லை, என்று தன் துப்பாக்கியால் நெஞ்சில் குறிவைத்து சுட்டுகொண்டு சரிகிறார், சபையினர் நிலைகுத்தி நிற்கின்றனர், ஸ்டீஃபன் லக்ஸ் பற்றி படிக்க ,பின்னர் படம் ஜெர்மானிய கத்தோலிக் மிஷனரியின் யூத இனப்படுகொலைகளின் மீதான கள்ள மௌனத்தை நமக்கு மெல்ல பரைசாற்றுகிறது,

அடுத்ததாக ஹிட்லரின் ஆணையின் பேரில் ஜெர்மனி எங்கிலும் இருந்த ஊனமுற்றோர், மனநிலை குன்றியோர், பிறவிக் குறைபாடு கொண்ட குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் ஒன்று திரட்டப்பட்டு கருணைக்கொலை என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக அறையில் அடைத்து, கார்பன் மோனாக்ஸைடு வாயு உட்செலுத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர், குடும்பத்தாருக்கு அவர்கள் உடல்கள் கூட தரப்படவில்லை,மரணச் சான்றிதழ் அறிக்கையும், சாம்பல் ஜாடியும் மட்டுமே தரப்படுகிறது, உலகப்போரில் அதிரடியாக போராடிவரும் ஜெர்மனி நாட்டின் உடனடி நலனுக்கும் உணவுப்பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்கும்  ஹிட்லரின் இந்த நடவடிக்கை மிக அவசியமானது என்று எல்லா சர்ச்சுகளிலும் வாராந்திரத் தொழுகையின் போது கத்தோலிக்க கிருஸ்துவ மிஷனரியினர் மூளைச்சலவையை செவ்வனே செய்கின்றனர், அதையும் மிக அருமையாக அலசுகிறது படம். பின்னர் நேசநாடுகள் அமெரிக்கா, ப்ரிட்டன், ஃப்ரான்ஸின், யூத இனப்படுகொலைகளின் மீதான கள்ள மௌனத்தை நமக்கு காட்சிகளின் மூலமாகவும் வசனங்களின் மூலமாகவும் மெல்ல பறைசாற்றுகிறது,

நடப்பது இனப்படுகொலை எனத்தெரிந்தும் எங்கே நாம் எதிர்த்தால் ரோமாபுரியும் வாடிகனும் கையகப்படுத்தப்பட்டு கொள்ளையடிக்கப்படுமோ? என்று அஞ்சி எந்த முடிவுமே கடைசி வரை எடுக்காத போப் பியஸ் XII [Pope Pius XII] ன்  யூத இனப் படுகொலைகளின் மீதான கள்ள மௌனத்தையும் பறைசாற்றுகிறது. இப்படி நுனி முதல் ஆணி வேர் வரை அலசிய படம் என்றால் இதுவாகத்தான் இருக்கும்,

கர்ட் கெர்ஸ்டெய்ன்-ஸைக்ளோன் -B டின்களுடன்
நாஜிப்படையில் மரைன் எஞ்சினியராக வேலைக்கு சேர்ந்த கர்ட் கெர்ஸ்டெய்ன் இங்கே நமக்கு அறிமுகமாகிறார், இவர் உக்கிரமான போரில் ஈடுபட்டிருக்கும்  ஜெர்மனி ராணுவத்துக்கு ஏற்ற இன்றியமையாத ஆராய்ச்சிகளை சமர்ப்பிக்கிறார், எதிரி நாட்டு ராணுவத்துடன் போராடும் விரர்கள் நல்ல குடிநீர் இன்றி நோயால் பீடிக்கப்பட்டு இறந்து போவதை தடுக்க இவர் போர்க்களத்தில் மோட்டார் துணையால், மற்றும் கை பம்பினால் இயங்கும் கழிவு நீரை குடிநீராக மாற்றும் எந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார்,அது அவருக்கு குறுகிய காலத்தில் மிகுந்த புகழைப் பெற்றுத் தருகிறது.


இன்னொரு ஆராய்ச்சியாக ஸைக்ளோன் -பி என்னும் மிகக்கொடிய அபாயகரமான ரசாயனத்தைக் கொண்டு ,அப்போது வேகமாய் பரவி வந்த டைபஸ் என்னும் விஷகாய்ச்சல் உண்டு பண்ணும் பேரசைட்டுகளை அழிக்கலாம் என்று ஒரு ஆய்வறிக்கையையும் சமர்ப்பிக்கிறார், அதாவது வீரர்கள் தங்கும் பேரக்ஸுகளை சுத்தம் செய்வதற்கு மிகச்சிறிய அளவில் அந்த பேரக்ஸின் கூரையில் உள்ள திறப்பில் இந்த ரசாயனத் துகளை கொட்டவேண்டும்,ஒரு மணி நேரம் கழிந்த நிலையில் மூடிய அறைக்குள்ளே காற்றில் பரவிக்கலந்த ஸைக்ளோன் -பி உதவியால் அந்த பேரக்ஸ் கூடமே கிருமிகளற்றுப் போயிருக்கும்,இதனால் வீரர்களுக்கு டைபஸ் நோய்தொற்றை அடியோடு குறைக்கலாம் என்பது தான் இவரின் மற்றொரு ஆராய்ச்சி,

இப்போது நாஜி அரசு நடத்தும் கருணைக்கொலை முகாமை நாம் திகிலுடன் பார்க்கிறோம்,  இப்போது ஒரு மிகக் கொடூரமான இனவெறி கொண்ட விக்டர் ப்ராக் என்னும் நாஜி டாக்டரும் அங்கே நமக்கு அறிமுகமாகிறார் ,கர்ட் கெர்ஸ்டெயின் அக்கா மகள் பெர்த்தா மனவளர்ச்சி குன்றியவள், அவளும் அந்த கருணைக்கொலை ஸீஸனில் கூட்டிவரப்படுகிறாள், அக்குழந்தைக்கு அந்த நயவஞ்சக டாக்டரை எதனாலோ பிடித்துப்போகிறது,முகம் பார்த்து சிரிக்கிறாள்,அவனும் பொய்யாய் சிரிக்க, அவளின் ரிப்போர்டுகளை இன்னொரு டாக்டர் அவனிடம் காட்டி ,என்ன இவள் செலக்டடா?என்று வினவ!!!, அந்த டாக்டர் கண்களை சுருக்கி,தலையை வேகமாக ஆமோதிப்பது போல அசைப்பான், அக்குழந்தை என்னவோ தன்னை அவர்கள் விளையாடக்கூட்டிப் போவது போல நினைத்துக் கொண்டு அந்த மெடிகல் ரெகார்ட் ஃபைலை மார்போடு தழுவிக்கொண்டு மரண வரிசையில் செல்லும். மிகவும் கனமான காட்சி அது.

கர்ட் கெர்ஸ்டெய்னின் ஸைக்ளொன் - பி கொண்டு டைபஸ் விஷகாய்ச்சல் பரப்பும் கிருமிகளை அடியோடு அழித்தல் என்னும்  ஆராய்ச்சி மிகவும் வரவேற்பை பெறுகிறது, ஆனால் அதில் ஒரு பெரிய மாற்றமாக, விஷமக்கார நாஜிப்படை அதிகாரிகள்,ஆக்கபூர்வமான அதை அழிவுக்கு பயன் படுத்த விழைகின்றனர், இவரின் ஆராய்சிகளை சற்றே மேம்படுத்தி மின்னல் வேகத்தில் கேஸ் சேம்பர்கள் போலந்தில் நிறுவப்படுகின்றன,

அதில் முதன் முதலாக ஒரு கேஸ்சேம்பருக்கு இவரை அனுப்பி பாரவையிடச் செய்கின்றனர் நாஜி உயர் அதிகாரிகள், இவர் வெளியே இருந்து பார்க்கையில் அது ஒரு பேரக்ஸ் போன்றே இருக்கிறது,கதவில் உள்ள கண்ணாடி துவாரம் வழியே பார்க்கையில் இவருக்கு உள்ளம் கொதிக்கிறது, இதயமே நின்று விடுவது போல உணர்கிறார், உள்ளே நூற்றுக்கணக்காணோர் அடைபட்டிருக்க, அனைவருமே தலைமுடியை ஒட்ட வெட்டப்பட்டு, அம்மணமாக்கப்பட்டிருக்கின்றனர்,

ஒரு காட்சியாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா,பாட்டி, அப்பா, அம்மா, மகன், மகள், பேரக்குழந்தைகள் என கைகோர்த்த படியே இறுக்க அணைத்துக் கொண்டிருக்கின்றனர், நீரால் முதலில் குளிப்பாட்டப்பட்ட , அவர்கள் மீது ஸைக்ளோன் -பி  கூரையின் திறப்பு வழியே, கவசமுகமூடி அணிந்த நாஜிக்களால் கொட்டப்படுவதையும், அவர்கள் மூச்சுத்திணறி, கீழே கூட விழ முடியா வண்ணம் அடைபட்ட கூட்டத்தின் மீதே சாய்ந்து இடிபாடுகளில் சிக்கி இறப்பதையும் காண்கிறார். மிகவும் அருவருப்புக்கும் , கையாலாகாத் தனத்துக்கும் உள்ளானவர், உடனே ஜெர்மனிக்கு செல்லும் ரயிலில் முன்பதிவு ஏதும் இன்றி ஏறுகிறார், அங்கே பரிசோதகர் இவரின் அதிர்சிக்குள்ளான தோற்றம் கண்டு உடம்பு சரியில்லையா?!!! என வினவ?ஏன்?  நாஜி அதிகாரி  ஒருவனுக்கு உடம்பு சரியில்லாமல் போகாதா என்ன? என்று பதிலுரைக்கிறார்.

உலகமே ரயிலில் பயணிக்கிறது, ரயிலில் இடமில்லை, அதோ அங்கே நடைபாதையில் ஸ்விஸ் நாட்டு தூதுவர் இருக்கிறார், அவருடன் இணைந்து கொள்ளுங்கள் என்கிறார் பரிசோதகர். அவர் அந்த ஸ்விஸ் நாட்டு தூதுவரிடம் சென்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். அன்று மட்டும் 3000 பேர் கேஸ் சேம்பரில் அடுத்தடுத்து கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டதை ஆவேசத்துடன் பகிர்கிறார். அதற்கு உண்டான ஆதாரங்களான ரசீதுகளை,வரைபடங்களை அவரிடம் தந்து லீக் ஆப் நேஷனின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு வேண்டுகிறார்.


தெரிந்தோ தெரியாமலோ இனப்படுகொலை துவங்கிய ஆரம்ப நாட்களில் நாஜிப்படை உயர் அதிகாரிகள், அடிமட்ட அதிகாரிகள் , இனப்படுகொலை கூடத்தை வடிவமைத்த கட்டிடக்கலை வல்லுனர் போன்றோரின் சந்தேகங்களுக்கு இவர் மிக அருமையாக பதிலுரைக்கிறார். அதன் மூலம் ப்ரேக் நாட்டில் நூற்றுக்கணக்கான ஸைக்ளோன் -பி தயாரிப்பு மையங்கள் திறக்கப்படுகின்றன, இவருக்கு புலி வாலைப் பிடித்த கதையாக இவரால் நாஜிப்படைக்கு உண்மையாக நடக்கவும் முடியவில்லை, இனப்படுகொலைக்கு சாட்சியாகவும் இருக்கவும் மனமில்லை,


இப்போது ஜெர்மனியில் இருக்கும் தலைமை கத்தோலிக்க கிருஸ்துவ மிஷனரியின் குருமாரை நேரில் சென்று யூத இனப்படுகொலையின் ஆதாரங்களையும் தன் விலாச அட்டையுடன் கொடுக்க முயல,அங்கே இவரை ஏசுகின்றனர், எள்ளி நகையாடுகின்றனர், இவரின் விடாப்பிடியான தர்க்கங்களின் முடிவில் நான் ஏதாவது செய்யப்பார்க்கிறேன் ,என்று வெளியே அனுப்பி கதவையும் சாத்துகின்றனர், கிருஸ்துவ மிஷனரியினருக்கு, ஜெர்மானிய கத்தோலிக்கர்கள் மற்றும் ரய்ச்சின் காணிக்கையாக பெரும்பொருள் சேருகின்றது, அதை அவர்கள் எக்காரணத்திற்காகவும் இழக்க தயாராகவே இல்லை,


ஆகவே இவரை ஒரு பொருட்டாகவே அவர்கள் மதிக்கவில்லை. இதனாலெல்லாம் மனம் தளர்ந்துவிடவில்லை கெர்ஸ்டெய்ன். தன் அண்டை வீட்டாரை, நண்பர்களை, நம்பிக்கையான அரசு அதிகாரிகளை, தான் வழிபடும் சர்ச்சின் தலைவர், பொருளாளர் என தன் வீட்டிலேயே ரகசிய கூட்டம் நடத்தி நடந்து வரும் இனப்படுகொலையை தடுக்க உதவி கேட்கிறார். யாரும் ஒத்துழைக்கவேயில்லை.

இப்போது ரிக்கார்டோ ஃபோன்டானா என்னும் முக்கிய கதா பாத்திரத்தை நாம் பார்க்கிறோம், இவர் இளம் மத குருமாராக பட்டப்படிப்பு முடித்து,பெர்லினில் இருக்கும் கிருத்துவ மிஷனரியின் தலைமை மதகுருமாரிடம்,உதவியாளராக பணிபுரிபவர், இவரின் குடும்பம் காலம் காலமாக வாடிக்கன் மடாலயத்தில் பணிசெய்து வருவதால்,அவர் தந்தைக்கு போப்பிடமே மிகவும் செல்வாக்கு இருக்கிறது, அவர் எளிதாக போப்பை பார்த்து பேசிவிடவும், யாரையும் கூட்டிப்போய் அறிமுகம் செய்யவும் முடியும். அன்றைய தினம் கர்ட் கெர்ஸ்டெய்ன் தான் கேஸ்சேம்பரில் கண்ணுற்றவற்றை புகாராக அளிக்கும் போது இவரும் உடனிருக்கிறார். ஒரு எஸ் எஸ் அதிகாரி நாஜிக்களைப்பற்றி மிக தைரியமாக புகார் அளிக்கிறாரென்றால் அந்த புகாரில் இருக்கும் நம்பகத்தன்மையை இவர் உணர்கிறார்.

அங்கே கர்ட் கெர்ஸ்டெய்ன் விட்டு  வந்த விலாச அட்டையை எடுத்து பாதுகாக்கிறார்.  பின்னர் ஒரு நாள் கர்ட் ஹெர்ஸ்டெய்ன் வீட்டுக்கு வந்து நட்பாகிறார், தன்னால் முடிந்த வரை இனப்படுகொலையை களைவதற்கு உதவுகிறேன் என்று உறுதியளிக்கிறார். தன் தலைமையிடம் கூட சொல்லாமல் வாடிகன் செல்கிறார். அங்கே நேசநாடுகளின் தூதுவர்கள் ,பெரிய அரசியல் தலைவர்களுடன் உரையாடும் தன்  வாய்ப்பை தந்தையின் மூலம் பெறுகிறார்.இருந்தும் பலனில்லை.


இவரின் புகார்களை கேட்ட யாருமே அதை  தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை, அவர்களின் மேலான உடனடி நோக்கம் கடவுள்மறுப்பு கம்யூனிச ரஷ்யா ஜெர்மனியுடன் நடக்கும் உக்கிரமான போரில் தோற்கடிக்கப் படவேண்டும், போரை முடிவுக்கு கொண்டு வந்த நல்ல பெயர் அனைத்தும் அமெரிக்கா, ப்ரிட்டன், ஃப்ரான்ஸ் மூவருக்கே கிடைக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. சிறிதும் மனம் தளராத ரிக்கார்டோ ஃபோன்டானா வாடிகன் திருச்சபையில் போப் தரிசனம் தரும் தர்பாருக்குள் அதிரடியாக நுழைகிறார், அங்கே பக்தர்கள் ஒவ்வொருவராக போப்பிற்கு தண்டம் செலுத்தி வணங்கி, அவர் கையை முத்தமிட இவரும் அதே வரிசையில் இணைகிறார், போப்பை வணங்கியவர்   இனப்படுகொலை தீவிரத்தையும், போப் சொன்னால் ஜெர்மானிய கத்தோலிக்கர்கள், மற்றும் மிஷனரிகள்,நேச நாடுகள் அதை செவிமடுத்து கேட்க இருக்கும் வாய்ப்பையும் தாழ்மையுடன் நினைவூட்டுகிறார்,

எல்லாவற்றையும் கேட்ட போப், இத்துயரமான போர் சூழலில் பலியாகும் ஒவ்வொரு உயிருக்கும் என் இதயம் ரத்தத்தை கண்ணீராக விடுகிறது,நாட்டு மக்களின் நன்மைக்கு நம்மால் என்ன செய்யமுடியுமோ அதை திருச்சபை மூலம் செய்வோம், நீ உடனே பெர்லினுக்கு திரும்பி உன் திருச்சபை காரியங்களை கவனி என்கிறார். ரிக்கார்டோ ஃபோன்டானா மனம் மாறவில்லை, சதா இனப்படுகொலைகளை தடுப்பது பற்றியே சிந்திக்கும் இவரை தேற்ற அவரது தந்தை உனக்கு ஒரு ஆச்சரியமளிக்கும் செய்தி சொல்ல இருந்தேன், ஆனால் நீயே முந்திக்கொண்டாய், வரும் கிருத்துமஸ் நன்னாளில் போப் வழங்கும் உரையில் யூத இனப்படுகொலை பற்றிய கண்டனமும் வருத்தமும் இடம் பெற்றிருக்கும் ,என்று தெம்பூட்டி அவரை திரும்ப பெர்லினுக்கு அனுப்புகிறார்.


இப்போது கர்ட் கெர்ஸ்டெய்னுக்கு நாஜிப்படையில் தலைமை லூட்டினென்ட் ஜெனரலாக பதவி உயர்வும் கிடைக்கிறது, விருப்பமே இல்லாமல்,எல்லா கேஸ் சேம்பருக்கும் ஸைக்ளோன் -பி ரசாயன டப்பாக்களை பார்வையிட்டு, அங்கீகரித்து விலைக்கு வாங்குவது இவரது வேலை, இவர் இனப்படுகொலையை குறைக்கும் வண்ணம் தன் பணிக்காலத்தில் நிறைய ஸைக்ளோன் -பி சரக்குகளை அவை தரமாயிருந்தாலும் வேண்டுமென்றே தரமில்லாதவை,செல்லாது,செல்லாது என்று திருப்பி அனுப்புகிறார், தன்னால் ஆன இந்த ஒரு துரும்பை கிள்ளிப்போட்டு, இன்னும் அதிகம் பேர் ஒரேநாளில் மடிவதை சற்றே தள்ளிப்போடுகிறார்.

இப்போது ரிக்கார்டோ ஃபோன்டானா கர்ட் கெர்ஸ்டெய்னை சந்திக்கிறார். போப் வரும் கிருத்துமஸ் நன்னாளில் ஐரோப்பா  மக்களிடம் ரேடியோவில் வாழ்த்து செய்தி தரும் போது, யூதர்களின் இனப்படுகொலை குறித்த கண்டணத்தையும், வருத்தத்தையும் பதிவு செய்வார் என்று நம்பிக்கை அளிக்கிறார், ஆனால் கிருத்துமஸ் நன்னாளில் போப்பின் லத்தீன் மொழி வாழ்த்து செய்தியை வாட்டிகன் ரேடியோ ஒலிபரப்ப, அதை ரிக்கார்டோ ஃபோன்டானா ஜெர்மனில் மொழிபெயர்த்து கர்ட் கெர்ஸ்டெய்னுக்கு உடனே சொல்கிறார். அதில் எந்த ஒரு இடத்திலுமே யூதர்களோ, ஜிப்ஸிக்களோ, இனப்படுகொலை என்றோ வாசகம் இல்லாமல் இருப்பதை கண்டு துணுக்குறுகின்றனர், தாங்கள் ஏமாற்றப்பட்டதையும் உணர்கின்றனர்.

இனி பொறுப்பதில்லை, இனப்படுகொலைக்கு நேரடி சாட்சியான கர்ட் கெர்ஸ்டெய்னை வாடிகனுக்கு கூட்டிப்போய் போப்புடன் நேரடியாக உரையாடவிட்டு மன்றாட வேண்டி , தன் தந்தையுடன் பேசி ஏற்பாடு செய்கிறார் ரிக்கார்டோ ஃபோன்டானா,மிகுந்த கெடுபிடிகளுக்கு பின்னர்  கர்ட் கெர்ஸ்டெய்னை  தன்னுடன் காரில் வாடிகனுக்கு அழைத்துப் போகிறார். நாஜிக்கள்  ரோமுக்குள்,அங்கே நாஜிக்கள்   வாடிகனுக்குள் புகுந்து யூதர்களை சிறை பிடிக்க கொத்து கொத்தாக கணக்கெடுப்பதை கண்ணுறுகின்றனர். போப்பை யாருமே அன்று சந்திக்க முடியாத படிக்கு  வாடிகன் அரண்மனை முழுக்க நாஜிக்கள் குவிக்கப்பட்டுள்ளனர்,

 ரோமில் இருக்கும் கிருத்துவ மதத்துக்கு ஏற்கனவே மதம் மாறிய யூதர்களையும் திரட்டி கொல்ல நினைக்கிறான் ஹிட்லர். அதை தடுக்க லஞ்சமாக 50கிலோ தங்கக் கட்டிகளையும் வாடிகன் வாழ் யூதர்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர் நாஜிப் படையினர் , ஆனாலும் திடீரென மனம் மாறி ஹிட்லரின் ஆணைக்கு பயந்த நாஜி அதிகாரிகள், அன்றைய தினம் 1000 பேரை முதல்கட்டமாக ஒன்று திரட்டி கேஸ்சேம்பருக்கு ரயிலில் ஏற்றி அனுப்ப ஆயத்தமாகின்றனர், இரும்பு இதயம் கொண்ட போப்பையும், கூட இருக்கும் குருமார்களையும் இனி மேலும் தன்னால் கரைக்கவே முடியாது என்று முடிவெடுத்த ரிக்கார்டோ ஃபோன்டானா, அவர்கள் முன்பாகவே தன் கிருத்துவ மதத்தை புறக்கணிக்கும் விதமாக யூதன் எனக் குறிக்கும் ஸ்டார் ஆஃப் டேவிட் என்னும் நட்சத்திர குறியை தன் உடையில் அணிந்து கொள்கிறார்,அது மதத்துரோகம் என்கின்றனர் போப்பும்,சக குருமார்களும், இவர் பணியவில்லை.

அன்றிரவு  1000 பேர் கொண்ட யூதர்களுடன்  ரிக்கார்டோ ஃபோன்டானாவும் மரண ரயிலில் ஏறி விடுகிறார், பின்னர் அதில் ஆஷ்விட்ஸ் சென்ற அவர் கேஸ் சேம்பரில் விழும் பிணங்களை அப்புறப்படுத்தி எரியூட்டும் பணியையும்  செய்கிறார். இறைவனின் கொடிய தீர்ப்புக்கு தானே சாட்சியாக நிற்கிறார். வேறு வழியின்றி மறுநாள் கர்ட் கெர்ஸ்டெய்ன் பெர்லின் திரும்பி தன் குடும்பத்தாரையும் சந்திக்கிறார். ஸ்டாலின்க்ராடில் இரண்டு லட்சம் நாஜி ராணுவத்தினர் ,கொல்லப்பட்டு 1லட்சம் நாஜி ராணுவத்தினர் போர் கைதிகளாக பிடிக்கப்பட்டதையும் அறிகிறார்.

இப்போது ஆஷ்விட்ஸுக்குள் தானே முன்வந்து நுழைந்த ரிக்கார்டோ ஃபோன்டானாவை விடுவிக்கக் கோரி வாட்டிகனில் இருந்து வேண்டுகோள் கடிதம் வந்தும் அவரை விடுவிக்காமல், அவர் பிணத்தை எரியூட்டும் வேலைக்கு தள்ளப்படுகிறார். அங்கே பிணத்தை எரிக்கும் இடத்தில் கொடூர நாஜிக்களின் மன நிலையும், அதனை எதிர்த்துப் போராடும் வலிவற்ற யூதர்களின் மன நிலையையும் தன் கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்க்கிறார். சாவைக் கூடச் சலனமின்றி வரிசையில் நின்று ஏற்றுக் கொண்ட அந்த யூத மக்களின் மன நிலையை ஆயாய்கிறார்,

அடக்கி வைத்தவர்களின் எண்ணிக்கை, அடங்கிப் போனோர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து தானும் இவர்களுடன் மடிவதே போப்பின் மௌனத்துக்கும் ஒட்டுமொத்த கத்தோலிக்கர்களின் தவற்றுக்கும் தண்டனையாக இருக்கும் என்று தன் மரணத்தை இன்முகத்துடன் நோக்கியிருக்கிறார் ரிக்கார்டோ ஃபோன்டானா.அன்று ஒரு நாள் கர்ட் கெர்ஸ்டெய்ன் நாஜி ராணுவ தலைமை ஜெனரல் ஹிம்லரின் கையெழுத்தை போலியாக போட்டு,  ரிக்கார்டோ ஃபோன்டானாவுக்கு ஒரு விடுதலை அறிக்கையை தயாரிக்கிறார்,

அதைக் கொண்டு ஆஷ்விட்ஸுக்குள் நுழைகிறார். அக்கடிதம் கண்டவுடன் பயந்து போன அதிகாரிகள்  ரிக்கார்டோ ஃபோன்டானாவை இவர் முன்பாக கொண்டு வந்து நிறுத்துகின்றனர், ஆனால் அவருக்கு கோழை போல தப்பி ஓட மனமில்லை, நான் இங்கேயே இவற்றிற்கு சாட்சியாய் இருப்பேன் , இறப்பேன் என்று உறுதியாக இருக்கிறார். அந்நேரம் ஹிம்லரின் கடிதத்தை ஆராய்ந்த நாஜிப்படையின் கொடுங்கோல் டாக்டர் விக்டர் ப்ராக் அது போலியானது, என்று கண்டுபிடித்து. ரிக்கார்டோவை கேஸ் சேம்பருக்கு உடனே அனுப்பி கதையை முடிக்க  ஆணையிடுகிறார்.ரிக்கார்டோ உயிரோடு இருந்தால் தான் ஒருபோதும் வாட்டிகனில் சென்று அடைக்கலம் கேட்க வழியிருக்காது என்னும் பயமே அதற்கு காரணம்.

கர்ட் கெர்ஸ்டெய்னை தன்னுடனே காருக்கு இழுத்து வருகிறார்.இவருடன் காரில் வரும் போது எல்லாமே முடிந்து விட்டது, சாட்சியங்கள் எதுவுமெ இல்லாதபடிக்கு புதைத்த பிணத்தைக் கூட நோண்டி எடுத்து எரியூட்டுகிறோம், கேஸ் சேம்பர்கள், எரியுலைகள் கூட  இன்று இடிக்கப்படும், நீயும் எங்காவது வேறு நாட்டுக்கு தப்பிச்சென்று அடைக்கலம் கேள், நானும் வாட்டிகன் செல்ல எண்ணுகிறேன் என்கிறார், சுமார் 6 வருடங்கள் இவர் மீது கொண்ட அபிமானத்தினாலும் நட்பினாலுமே தான் இவரை நாஜிக்களின் கோர்டில் ஒப்படைக்காமல் விடுவிப்பதாக சொல்கிறார்.

ரிக்கார்டோ ஃபோன்டானா
இப்போது கட் கெர்ஸ்டெய்ன் பெர்லினுக்குள் வந்து மீண்டும் தன் வீட்டாரைச் சந்திக்கிறார், எந்நேரமும் ரஷ்ய செம்படையும், நேசநாட்டுப் படையும் ஜெர்மனிக்குள் புகுந்து தன்னை போர் குற்றங்களுக்காக கைது செய்யும், அதற்கு முன்பாக தாமே சரணடைந்து தன் பாவங்களை கழுவப் போகிறேன், என்று மனைவியிடமும் குழந்தைகளிடமும்  சொல்லி விட்டுப் புறப்படுகிறார், இனி எப்போதும் திரும்பப்போவதில்லை என்னும் முடிவுடன் தன் மனைவியை ஆரத்தழுவி முத்தமிடும் காட்சியும்,அப்போது அவளின் கண்ணில் தெரியும் காதலும்,நெஞ்சுரமும் மிக அற்புதமான ஒரு காட்சி அது.

பின்னர் நாம் ஆஷ்விட்ஸின் கேஸ் சேம்பரையும் எரியுலையையும் கண்ணுறுகிறோம், அங்கே ஒரு வயதான யூதர் ,சற்று முன்னர் கேஸ் சேம்பருக்குள் அனுப்பப் பட்டவர்களின் துணிகளை எடுத்து மடித்துக் கொண்டிருக்கையில் அதில்  ரிக்கார்டோ ஃபோன்டானாவின் மதகுருமார் அணியும் கருப்பு அங்கியையும், அதில் அவர் பிணைத்துக்கொண்ட ஸ்டார் ஆஃப் டேவிட் பட்டையையும் எடுத்து ஏற இறங்கப் பார்க்கிறார். இந்த ஒற்றைக் காட்சியில் நாம் நெஞ்சம் உடைகிறோம். ரிக்கார்டோ ஃபோன்டானாவின் நேரம் வந்து விட்டதை உணர்த்திய அற்புதக் காட்சி அது.

அன்றைய தினம் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வர,  ஃப்ரென்சு ராணுவத்தாரிடம் சரணடைந்து ,போலந்தில் நடந்த இனப்படுகொலைகளைப் பற்றி இவர் விரிவாக தக்க ஆதாரங்களுடன் ஃப்ரென்ச், ஜெர்மன் மொழிகளில்  கொடுத்த முதல் தகவல் அறிக்கை ’’கெர்ஸ்டெய்ன் அறிக்கை ’’ என்று அழைக்கப்படுகிறது,அதில் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய ஒவ்வொரு அதிகாரியின் பெயரையும் இவர் குறிப்பிட்டிருந்தார்.

கொடுங்கோல் டாக்டர்
இந்த அறிக்கை  போர்குற்றம் பற்றி விசாரிப்பதற்கென்றே துவங்கப்பட்ட நூரம்பர்க் விசாரனை மன்றத்துக்கு [Nuremberg Trials] இனப்படுகொலையில் கொல்லப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையை  கணக்கிடவும் ,குற்றவாளிகளை கண்டறிந்து சுற்றி வளைக்கவும்   பேருதவியாக இருந்தது, கெர்ஸ்டெய்ன் தன் முதல் தகவல் அறிக்கையை சமர்பித்த பின்னரும் மனசாந்தி அடையாமல் தான் விருப்பமில்லாமல் நாஜிப்படையின் இன அழிப்புக்கு சுமார் 6 வருடங்கள் பணிசெய்த குற்ற உணர்வு மிகவும் வாட்ட, தான் வீட்டுக்காவலில் தங்கவைக்கப்பட்டிருந்த ஓட்டல் அறையிலேயே தூக்கு மாட்டி தற்கொலையும் செய்து கொள்கிறார் , இப்போது அந்த கொடுங்கோல் டாக்டர் தன் நாஜி உடையைக் களைந்து விட்டு வாட்டிகனுக்கு சென்று அடைக்கலம் கேட்பதை நாம் பார்க்கிறோம், போரின் விளைவுகளால் தான்  ஜெர்மனியிலிருந்து உயிர் தப்பி அகதியாக வந்திருப்பதாகவும், தனக்கு மருத்துவம் தெரியும் என்றும் சொல்கிறார், வாடிகனில் அவர் போப்பின் உதவியாளர் மூலம் அகதியாக ஏற்கப்பட்டு, மருத்துவத் தொண்டு புரிவதற்கு அர்ஜெண்டினா அனுப்பி வைக்கப்படுவதை நாம் அங்கே பார்க்கிறோம், ஆனால் நிஜ வாழ்வில் அர்ஜெண்டினாவில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய அவர் நூரம்பர்க் நீதி மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு  2 June 1948 அன்று தூக்கில் போடப்பட்டதாகப் படித்த பின் தான் என் மனம் ஆறியது.

கர்ட் கெர்ஸ்டெய்னின் மனைவி பெரும் போராட்டங்களுக்குப் பிறகு சுமார் 20 வருடங்கள் நடந்த வழக்கு விசாரணைகளின் முடிவில்,  கெர்ஸ்டெய்னின்  பணிக்காலத்தில் இனப் படுகொலையை நிறுத்தக்கோரி அவர் முதலில் சந்தித்த ஸ்விஸ் நாட்டு தூதுவரின் சாட்சியம், அவர் வாடிகன் பயணம் மேற்கொண்டதற்கு ஆதாரமாக ரோமில் போப்பிற்கு நெருக்கமான சிலரின் சாட்சியம், மற்றும் தகுந்த ஆவணங்களின் துணை போன்றவற்றின் உதவியால் கர்ட் கெர்ஸ்டெய்ன் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு ,இறந்த தன் கணவருக்கு பொதுமன்னிப்பும் பெற்றுத்தருகிறார்.அவருக்கு பென்ஷனும் கிடைக்கப்பெற்றார் என்று படித்தேன்.

படத்தை நிச்சயம் பாருங்கள்,நண்பர் உலக சினிமா ரசிகன் ஆமென் படம் பற்றிய விரிவான தொடர்களை எழுதி வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும், அவர் பதிவில்  படத்தின் சிறப்பு மிக்க காட்சியாக்கங்கள் விவரணையாக கிடைக்கும்.அதையும் படியுங்கள்.நண்பர் ஒருவர் இப்படி பெரிய விக்கி கட்டுரை போல எழுதுவதால் என்ன பயன் என்று கேட்டார்.ஒரு சிறப்பான படம் பற்றியும்,வரலாற்று சம்பவத்தை நினைவு கூற வேண்டியும் 10பக்கம் எழுதினாலும் அர்த்தமுள்ளது தான் என்று சொன்னேன்.ஏன் எனக்கும் பின்னாளில் இதை படித்து நினைவு கூற வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-

ஹாலோகாஸ்ட் என்னும் ஆறாண்டுகால திட்ட இனப்படுகொலை


ஹாலோகாஸ்ட் என்பது மகாக்கொடியவன் ஹிட்லரின் நாஜிப்படையால் போலந்து  நாட்டில் தன்னிச்சையாக 1933 ஆம் வருடம் தொடங்கி 1939 ஆம் வருடம் வரை நடந்த மனிதத்தன்மையற்ற இனப்படுகொலை ஆகும். வரலாற்றில் ரத்தத்தால் எழுதப்பட்ட கறுப்பு காவியம்.கடவுள் என ஒருவர் உண்மையிலேயே உண்டா? என கேட்க வைக்கும் அருவருக்கத்தக்க மிருகத்தனமான பெருங்குற்றங்கள் , அரசியலின் பெயரால் அரங்கேறிய கருப்பு நாட்கள் அவை . மொத்தத்தில் காலமும் காலனும் கைகோர்த்து  போட்ட மகா கேவலமான மேடை நாடகம்.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 3000 பேர் என தோராயமாக கணக்கிட்டு  6வருடங்கள் தொடர்ந்து மொத்தம் 60 லட்சம் பேர் கொல்லப்பட்டு ,இந்த பஞ்சமகா பாதகத்தை  நாஜிப்படையினர் வெற்றிகரமாக வெட்கமின்றி நடத்தியுள்ளனர்.

மிகக் கொடூரமான இனவெறி கொண்ட ஜெர்மானிய நாஜிப்படை ,யூதர்களையும் இன்னபிற இனத்தவரையும் கொன்றழிக்க சதித்திட்டம் தீட்டி மூன்று நிலை கட்டமைப்பு திட்டங்களை , தாங்கள் கைப்பற்றிய ஐரோப்பாவில் தோற்றுவித்தது. இனப்படுகொலையை கட்டவிழ்க்க உருவாக்கப்பட்ட அடிப்படை மூன்று அடுக்கு  நிலை திட்டவியூகம் பின் வருமாறு:-


நிலை-1
மெய்ன் சிட்டி வித் கெட்டோ:- (லோக்கலாக சொன்னால் அகதி குடியிருப்புக்கள்)


இந்த அகதிகள் முகாம்கள் போலந்து நாட்டில் கானாஸ் (kaunas),  வில்னியஸ் (vilnius), பியலிஸ்டொக் (bialystok) வார்ஸா (warsaw), லொட்ஸ்( lodz) க்ரகொவ் (krakow) ல்வொவ் (lwow) என மொத்தம் 7 இடங்களில் மின்னல் வேகத்தில் நிறுவப்பட்டன.

யூத மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த முகாம்களில் வரவழைக்கப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பெற்றனர். யூத இன ஆண்களும் பெண்களும் இந்த முகாம்களில் வழங்கப்படும் 20செ,மீ X 20செ,மீ  நட்சத்திர குறியீட்டு லேபில் போன்ற பட்டையை தங்கள் ஆடைகளில் வலது தோள்பட்டையில் தைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக  அமல் படுத்தப்பட்டனர்.
ஹோமோ செக்சுவல்களுக்கு பிங்க் வண்ண லேபில்கள் தைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர்.பாரம்பர்ய போலீஷ் இன ஆண்களும் பெண்களும் இந்த முகாம்களில் வழங்கப்படும் 20செ,மீ X 20செ,மீ  "P" என்னும்  குறியிட்ட துணிப்பட்டையை தங்கள் ஆடைகளில் வலது தோள்பட்டையில் தைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக  அமல் படுத்தப்பட்டனர்.அவர்களிடம் இருந்த வீடுகள், நிலங்கள்,கால் நடைகள், தொழிற்சாலைகள் , வங்கிகள், யூத பொது நிறுவனம் என மொத்தமாக கபளீகரம் செய்யப்பட்டன.


போலந்து,ஜெர்மனி,ஆஸ்ட்ரியா, ஹங்கேரி இன்னபிற நாடுகளிலிருந்து வீடுவாசல்களை பிடுங்கிக்கொண்டு சுத்தமாக காலிசெய்து விரட்டப்பட்ட  யூதர்கள் மற்றும் இன்ன பிற இனத்தவரான ரோமாக்கள், யெகோவா விட்னெஸ்ஸுகள், ஹோமோ செக்சுவலிஸ்டுகள்,கும்பல் கும்பலாக நடத்தியோ ரயிலிலோ,அல்லது வாகனங்களிலோ புளிமூட்டைகள் போல அடைத்து அழைத்துவரப்பட்டு  இந்த கெட்டோ மையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.


இதில் மின்வசதி, குளிர்பிரதேசத்தில் குளிர்காய மேண்டல் வசதி எதுவுமே இராது, ஒரே அறையில் நான்கு முதல் ஐந்து யூத குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டனர். இங்கே தான் அடையாள அட்டை வழங்கப்பட்டு அருகில் உள்ள மேஜர் கான்செண்ட்ரேஷன் கேம்ப்ஸ்களில் சாகும் வரை வேலை வாங்கப்பட்டு வதைக்கப்பட்டனர்.

இந்த மையங்களில் வைத்து தான் யூத இனத்தவரின் அன்றாடஉபயோக,அறிய பொருட்களை பிடுங்கிக்கொண்டு கிடங்கு போல குவித்து வைத்து அதை கருவூலத்துக்கு எடுத்து சென்றனர்.யாரும் தப்பிப்போகமுடியாத வண்ணம் 20 அடிக்கு சுவர் எழுப்பி அதன் மேல் மின் கம்பிகளும் அமைக்கப்பட்டு வெளியுலக தொடர்பே இல்லாமல் ஈழதமிழர் முகாம் போல அடைத்து வைக்கப்பட்டனர்.

நிலை-2
மேஜர் கான்செண்ட்ரேஷன் கேம்ப்ஸ்:- (லோக்கலாக சொன்னால்  தொழிற்பேட்டைகள்)

ப்லாஸ்ஸொவ்(plaszow) ஸாஸ்லாவ்(zaslaw) க்ராஸ் ரொஸென் (gross-rosen) பொட்டுலைஸ்(potulice) ஸ்டட்தாஃப்(stutthof) சொல்டாவ் (soldau)  என மொத்தம் 6 இடங்களில் மின்னல் வேகத்தில் நிறுவப்பட்டன.ஏற்கனவே இருந்த போலந்துக்காரர்களின் தொழிற்சாலைகளும் சிறை பிடிக்கப்பட்டு  நாஜி அரசுக்கு வேண்டியவர்களுக்கு வசதியாக கைமாற்றப்பட்டன.

"Arbeit Macht Frei" உழைப்பே சுதந்திரம் பெற்றுத்தரும்.
இது தான் ஒவ்வொரு கான்செண்ட்ரேஷன் கேம்ப்பின் வாசல் வளைவில் எழுதப்பட்ட வாசகம்,ஒவ்வொரு நாளும் கெட்டோவிலிருந்து வரும்
மக்கள் இதைத்தாண்டிதான் உள்ளே அமைந்துள்ள ஆயுத தொழிற்சாலை,
பீங்கான் தொழிற்சாலைகள், சமையல் பாத்திர தொழிற்சாலைகள்.மற்றும் சாய தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்றனர்.



பெரும்பாலான நேரங்களில்  சாலையில் மலைப்போல் குவிந்த ஐஸ்கட்டிகளை வாரிக்கொட்டுவது , சாலைகள் போடுவது, கட்டிடம் கட்டுவது, பிணங்களை அப்புறப்படுத்துவது, பிணங்களை எரியூட்டுவது போன்ற வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டனர்.இதில் நிறைய பேர் தப்பிக்க முயன்று மின்வேலியில் மாட்டியும், சிலர் நாஜிப்படைக்கு எதிராக குழு அமைத்து துப்பாக்கி எடுத்து போராடி பின்னர் பிடிபட்டு திறந்த வெளிகளில் தூக்கு போடப்பட்டும், மண்டியிடப்பட்டு முன்னந்தலையிலோ, பின்னந்தலையிலோ சுடப்பட்டும் கொல்லப்பட்டனர்.

யூதர்கள் மற்றும் இன்ன பிற இனத்தவரை இங்கு வைத்து தான் சாகும் வரை வேலை வாங்கியது, திறந்த வெளி மருத்துவ சோதனையில் குழந்தைகள்,சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர் இன்னபிற நோய்வாய்பட்டோரை உடனடியாக சுட்டுக் கொன்றோ அல்லது மந்தை போல லாரிகளில் ஏற்றி ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ரயிலில் மந்தை மந்தையாக எற்றி  இறுதியாக எக்ஸ்டெர்மினேஷன் கேம்ப்களில் இறுதி தண்டனைக்கு கொண்டு வந்து விடுவர்.

யாரும் தப்பிப்போகமுடியாத வண்ணம் மின் வேலி அமைக்கப்பட்டு வெளியுலக தொடர்பே இல்லாமல் ஈழதமிழர் முகாம் போல அடைத்து வைக்கப்பட்டனர்.என்ன கொடுமை என்றால்? முகாமில் தண்ணீர்,மற்றும் உணவு சப்ளையே சரிவர கிடையாது,சேறும் சகதியுமாக இருக்கும்.

குப்பையில் போடப்படும் ரொட்டிகளும், அழுகிய முட்டைகளும், ஒன்றுக்கும் உதவாத அழுகிய காய்கறிகளும், குப்பை கீரைகளும்,புழத்துப்போன தானியங்களுமே என்றாவது தரப்படும்,அதீத பட்டினி,சுகாதாரமின்மையால் உண்டான தொற்று நோய்கள். மிருகத்தனமான மருத்துவ பரிசோதனைகள் ,தூக்கிலிட்டு கொல்லுதல்,துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல் மற்றும் ஓய்வில்லாத வேலையின் காரணமாகவே எண்ணிலடங்கா மனித உயிர்கள் பலியாயின.

குளிக்க வழியில்லாததால் எல்லோரும் அழுக்காகவும்,
சிரங்கு சொறியுடனும், தலையில் பேணும் பொடுகுடனுமே வாழ்ந்தனர்.
ஒரு பங்கருக்கு 4 பேர்கள் என ஆண் பெண்,பெரியவர்கள் என பேதம் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டு எந்நேரமும் மரண பயம் காட்டியே
முகாமில் அடைத்து வைக்கப்பட்டனர்.பெரும்பான்மையான மக்கள் மன அழுத்தத்தால்  பீடிக்கப்பட்டே உலவினர்.


நிலை-3
எக்ஸ்டெர்மினேஷன் கேம்ப்ஸ்:-(லோக்கலாக சொன்னால் கசாப்பு கடைகள்)




இந்த வகை கொலை கள மையங்கள்  ஆஷ்விட்ஸ் 1, 2 மற்றும் 3 ( auschwitz 1,2 & 3), பெல்ஸெக் (belzec), மஜ்டனெக் (majdanek) சொபிபொர் (sobibor) செல்ம்னோ (chelmno) ட்ரிப்லின்கா (trblinka) என மொத்தம் 6 இடங்களில் நிறுவப்பட்டன, இருப்பதிலேயே பெரியதாக ஆஷ்விட்ஸ் என்னும் கொலை கள மையமே கருதப்படுகிறது.இந்த இடத்தில் மட்டும் மூன்று எக்ஸ்டெர்மினேஷன்  கேம்ப்கள் அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் துவங்கப்பட்டு இரவு பகலாக இயங்கி வந்ததாம் .

 மேலே சொன்ன ஒவ்வொரு மேஜர் கான்செண்ட்ரேஷன் கேம்ப்களில் இருந்தும் இந்த எக்ஸ்டெர்மினேஷன் கேம்ப்ஸ் எனப்படும் கேஸ் சாம்பர் அல்லது கொலை செய்யும் கூடம் வருவதற்கு 24 மணி நேரமும்  நீராவி ரயில் விட்டிருந்தனர், அவசர அவசரமாக இருப்புபாதைகளும் , ரயில் நிலையங்களும்  அமைக்கப்பட்டன.இடைவிடாமல் யூதர்களும் இன்னபிற இனத்தவரும் ஆட்டு மந்தைகள் போல அழைத்துவரப்பட்டு இறக்கி, ஆடைகளை களைய வைக்கப்பட்டு, தலை முடியை வெட்டவைக்கப்பட்டு , மிகக் குளிர்ந்த நீரில் ஷவரில் ஒரு பெரிய குளியல் அறைபோன்ற கூடத்தில் குளிக்க வைக்கப்பட்டு, பின்னர் கூடத்தின் கூரையின் வழியே கொடிய சயனைடு வாயுவை (Zyklon B) செலுத்தி மணிக்கு 125 பேர் என கணக்கிட்டு கொல்லப்பட்டு , உடனடியாக சூளையில் எரியூட்டப்பட்டு பரலோகம் சென்ற ஒன்வே ட்ராஃபிக் இது என்றால் மிகை ஆகாது.

கடைசியில் செம்படையினர் கைப்பற்றியவை :- லட்சக்கணக்கான மூக்கு கண்ணாடிகள், லட்சக்கணக்கான லெதெர் சூட்கேசுகள், லட்சக்கணக்கான வரி வரியான பைஜாமாக்கள் (சீருடைகள்) லட்சக்கணக்கான தலை வாரும் ஹேர் ப்ரஷுகள். லட்சக்கணக்கான ஜோடி காலணிகள், பதினாயிரம் மூட்டை தலைமுடிகள்(பெயிண்ட் ப்ரஷ் செய்ய) யூதர்களை எரியூட்டிய பதினாயிரம் சாம்பல் அடங்கிய பீங்கான் ஜாடிகள்(ஹிட்லர் பின்னொரு சமயம் அந்த சாம்பலை விளை நிலங்களில் எருவாக இட எண்ணி இருந்தானாம்)

இதில் மிக வேதனையான விஷயம் என்னவென்றால் செம்படையினர் நாஜிப்படையை தோற்கடித்து நெருங்கும் முன்னரே இந்த கொலை கலன் அறைகளை அழித்தும் , இடித்தும் சேதப்படுத்தியும் விட்டனர்.

பதிவேடுகளை கொளுத்தியும் விட்டனர்.கொன்றவர் விபரம் 15 லட்சம் வரை இதனால் கணக்கிலேயே வரவில்லை என பெரும் சர்ச்சையும் இன்று வரை உண்டு. இன்றைய நவ நாகரீக இஸ்ரேலிய யூதர்கள் ஜெர்மனியிடம் கற்ற கொடிய பாடத்தை எளியார் மீது பிரயோகிக்கும் பொருட்டு பாலஸ்தீனிய அப்பாவி குடிமக்கள் மீது பாஸ்பரஸ் குண்டுமழை பொழிந்தும் எந்திர துப்பாக்கியால் சுட்டும் பீரங்கி தாக்குதல் நடத்தியும் தீர்த்துக் கொள்கின்றனர்.

தான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என நினைக்கும் ஒரே ஜீவன் இவர்களாகத்தான் இருக்கும்.
-----------------------------------------------------------------


-----------------------------------------------------------------
டிஸ்கி:-

இன்றைய தேதியிலும் இனப்படுகொலை ஓய்ந்த பாடில்லை.
ஈழத்தில் இதை எழுதும் ,படிக்கும் கன நேரத்தில் எத்தனை அப்பாவி சகோதர,சகோதரிகள்  கொல்லப்பட்டனரோ?

கடவுளே? ஏஸி அறையில் இருந்து சுகமாய் எழுதவும் படிக்கவும் செய்து விடுகிறோம், அந்த கேம்பில் ஒருவனாக இருந்தால் தெரியும் நமக்கு சங்கதி!

கடவுளிடம் தினமும் கதறி மன்றாடுவோம். நல்ல காலம் உண்மையிலேயே பிறக்க, அவர்களுக்கு விடுதலை உண்மையிலேயே கிடைக்க.

செய்திகள், படங்கள், சுட்டிகள் தந்து உதவிய விக்கிபீடியா, கூகுளுக்கு நன்றி








Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (250) ஆஸ்கர் (201) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) உலக சினிமா (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)