பாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்

மகாகவி பாரதியின் படைப்புகளை தன் படைப்புகளில் எங்கெல்லாம் உபயோகப்படுத்த வழியிருக்கிறதோ அங்கெல்லாம்,மிக அழகாக பயன்படுத்தியவர் இயக்குனர் சிகரம்.ஒரு க்ளாஸிக்கை எப்படி உருவமும் பெருமையும் சிதையாமல் பயன்படுத்த வேண்டும் என்பது அவருக்கு கை வந்த கலை. தமிழ் சினிமாவில் பாரதி மற்றும் திருவள்ளுவரின் படைப்புகளை மிக அதிகமாக மரியாதை செய்தவர் அவரே.

இதோ பாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடல்.இது நாட்டை என்னும் ராகத்தில் அமைந்தது.

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.

இயக்குனர் கே.பாலச்சந்தரின்  சிந்து பைரவி படத்தில் வந்த பாடல் இங்கே இது முழுக்க பாரதியார் இயற்றியது,தாஸேட்டா இசைஞானியின் இசையில் பாடியது
http://www.youtube.com/watch?v=oqhZ4b9M9CM

இயக்குனர் கே.பாலச்சந்தரின்  மனதில் உறுதி வேண்டும்  படத்தில் வந்த பாடல் இங்கே,இதுவும் பாரதியார் இயற்றிய பாடலே,அங்கங்கே அனுபல்லவி,சரணத்தில் வாலியின் பேனா பாரதியாரின் வரிகளை சரளமாக உள்வாங்கி படைத்தது.இதுவும்  தாஸேட்டா இசைஞானியின் இசையில் பாடியது
http://www.youtube.com/watch?v=Qw40A1XijVE
கள்வனின் காதலி படத்தில் பயன்படுத்தப்பட்ட பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் பாடல் வடிவம் கே.பாலசந்தருக்கு மிகுந்த இஸ்பிரேஷனாக இருந்தது.இப்பாடலை டி.எம்.எஸ்ஸும் பானுமதியும் பாடியிருப்பார்கள்.

பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை [1982] மற்றும் சத்மா [1983]
மூன்றாம் பிறையின் இந்தி வடிவமான சத்மாவுக்கும் [காயம்] அதே ஊட்டி தான் லொக்கேஷன், அதே நடிகர்கள் [அந்த தாடிக்கார வில்லன் கதா பாத்திரத்தில் Gulshan Grover இந்திக்காக, இன்னும் சில உப கதாபாத்திரங்களுக்காக இந்தி நடிகர்கள் சிலர் மாற்றப்பட்டனர்], அதே தொழில்நுட்பக் கலைஞர்கள் தான், அதே மூன்றாம் பிறை  மெட்டிலேயே அமைந்த பாடல்கள் தான், பாடகர்களில் கூடுதலாக  Suresh Wadkar, Asha Bhosle  உண்டு, கதாபாத்திரங்களின் பெயர்களை இந்திக்காக மாற்றியுமிருந்தார், இங்கே கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் இந்தியில் கவிஞர் குல்சார் எழுதினார்.
சத்மாவின் இந்தி டைட்டில் ஸ்க்ரோல்
மூன்றாம் பிறையின் இறுதிக் காட்சியை கேத்தி ரயில் நிலையத்தில் படமாக்கியிருந்தார் இயக்குனர் பாலு மகேந்திரா.சத்மா படத்தில் கேத்தி ரயில் நிலையத்தின் பெயர் பலகையை ராம்நகர் என்று பெயர் மாற்றி படம் பிடித்திருப்பார். [ராம் நகர் என்பதை முழுதாக காட்ட மாட்டார்]
கேத்தி ரயிலடி
ராம் நகர் என பெயர் மாற்றப்பட்ட கேத்தி ரயிலடி
இக்காட்சியைப் பற்றி தன் சன்டே இந்தியன் பேட்டியில் இப்படி சொல்லியிருந்தார்.

தேவலோக வாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா.

       ஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம்.

       அந்தத் தேவதையின் வரவையும் மறைவையும், அவருக்கும் எனக்குமான   உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்கு சொல்லியிருந்தேன். “மூன்றாம் பிறை” படம் மூலமாக.

        மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.!

        நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன்.

        ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன. இது உங்களுக்கு........

எனக்கு......

       எல்லா இன்னல்களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்...!
மறைந்த நடிகை ஷோபா

இப்படத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் , இது கவிஞர் .கண்ணதாசன் எழுதிய கடைசி பாடலான கண்ணே கலைமானே என்னும் அழியாப்புகழ் பெற்ற பாடலைக் கொண்டிருக்கும் படம்.

அப்பாடல் 1981 ஆம் ஆண்டு கவிஞர் அவர்கள் சிகிச்சைக்காக  அமெரிக்காவுக்கு செல்லும் போது  தி.நகரிலிருந்து அவர் மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் வழியில் இயக்குனர் பாலு மகேந்திரா காரில் உடன் செல்கையில் கவிஞர் சொல்லச் சொல்ல அவர் குறிப்பெடுத்துப் பிறந்த பாடல், அதன் பின்னர் அமெரிக்காவில் சிகிச்சை பலனின்றி  இறந்த கவிஞரின் பூத உடல் தான் சென்னைக்கு திரும்பி வந்தது, அப்போது கவிஞரின் மகளான விசாலிக்கு ஆறே வயதாம், கவிஞரின் சிகிச்சைக்கு இவரும் அவர் அன்னையுடன் உடன் சென்றிருந்ததை ஒரு பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்தார்.

 இன்றும் அவர் கண்ணே கலைமானே பாடலை தந்தை தனக்கு பாடி வைத்து விட்டுச் சென்ற தாலாட்டாகவே நினைப்பதாகப் பகிர்ந்தார். கவிஞரின் 13 ஆவது குழந்தையான கலைவாணன் இளம் வயதிலேயே மறைந்து விட்டார்,அவர் விசாலிக்கு உடன் பிறந்த அண்ணனும் கூட,அவரும் விசாலியுடன் இது அப்பா எனக்காகத் தான் கலைமானே என்று பாடி விட்டுச் சென்ற தாலாட்டு என்று இவருடன் தர்க்கம் செய்வாராம். மிகவும் நெகிழ்ச்சியூட்டும்,கல்லையும் கரைக்கும் நீண்ட பேட்டி அது.

இங்கே சென்று அதைப் படியுங்கள்.

தண்ணீர் தண்ணீர் [1981] பெருமைமிகு தமிழ் திரையுலகின் உலக சினிமா


1981 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான தண்ணீர் தண்ணீர் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படைப்பு, படத்தின் ஆக்கத்துக்கு உறுதுணையாக இருந்த கோவில்பட்டி முக்கிய பிரமுகர்களுக்கும், மஞ்சநாயக்கர் பட்டி, எத்திலப்ப நாயக்கர் பட்டி கிராம மக்களுக்கும், ஆளும் கட்சி எதிர்கட்சி கூட்டணி கட்சி என்று பேதம் இன்றி உதவிய கட்சி அன்பர்கள் அனைவருக்கும் இயக்குனர் டைட்டில் கார்டில் நன்றி சொன்னதைப் பாருங்கள்,இன்று நடக்குமா இந்த அதிசயம்.

இப்படத்தில் உபயோகப்படுத்திய ஊர்களின் பெயர் கற்பனைப் பெயரல்ல,ஒரு சட்டமன்றத் தேர்தலையே புறக்கணிக்கும் கிராமத்தின் பெயர் மஞ்சநாயக்கர் பட்டி என்றே உச்சரிப்பார்கள்.

 எத்தனை நெஞ்சுரம் மிக்க படைப்பு இது?!!!,தொழிற்நுட்பமும் சமூக வலைத்தள ஊடகங்களும் கோலோச்சும் இன்றைய சூழலில் கூட மத்திய மாநில அரசுகளை துணிச்சலாக விமர்சிக்கும் இது போன்றதோர் படத்தை எடுத்து வெளியிடுவது என்பது முடியாத செயல்,

ஆனால் அன்றைய 80 களிலேயே சாதித்துக் காட்டினார் இயக்குனர் கே.பாலச்சந்தர்.அது தான் அவர் முகராசி, கைராசி என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.. அதே 1981 ஆம் ஆண்டில் மட்டும் அவர் 9 திரைப்படங்கள் இயக்கி வெளியிட்டுள்ளார்,

அவை பின்வருமாறு

1ஆடவல்லு மீகு ஜோஹர்லு[1981]Aadavallu Meeku Joharlu [தெலுங்கு]
2 எங்க ஊர் கண்ணகி [1981]
3 தொலிக்கொடி கூசிண்டி[1981][Tholikodi Koosindi ][தெலுங்கு]
4 தண்ணீர் தண்ணீர்[1981]
5. 47 நாட்கள்[1981]
6. 47 ரோஜுலு[1981][47 நாட்கள் தெலுங்கு வடிவம்]
7.ஆகலி ராஜ்யம்[1981] வறுமையின் நிறம் சிவப்பு தெலுங்கு வடிவம்
8.தில்லு முல்லு[1981]
9.ஏக் துஜே கேலியே[1981]

கே.பாலச்சந்தர் இப்படத்துக்காக சிறந்த திரைப்படத்துக்கான தேசியவிருதும்,சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருதும்  பெற்றார்.

தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தின் டைட்டில் ஸ்க்ரோலில் கவிஞர் கண்ணதாசன் என்று குறிப்பிட்டு விட்டு அவர் பெயருக்கு கீழே கவிப்பேரரசுவுக்கு எந்த பட்டமும் தராமல் வைரமுத்து என்றே குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள். :)))

வைகுண்டராஜன் உள்ளிட்ட நிறைய மலை முழங்கி மகாதேவன்கள் நம் சமூகத்தில் உண்டு, அதை தட்டிக்கேட்கும் சகாயம் போன்ற ஆட்சித்துறை அலுவலர்கள்,ட்ராபிக் ராமசாமி போன்ற சமூக ஆரவலர்கள்,உண்டு கண் எதிரே வன்புணர்ந்து பள்ளமாக போடப்பட்ட பாறை நிலம் உண்டு,எந்த முதுகெலும்பு கொண்ட இயக்குனராவது சமகாலத்தின் முக்கிய பிரச்சனையான இதை படமாக எடுக்க முன்வருவாரா?எடுத்துக் காட்டி சாதிப்பாரா?!!!

இப்போதைய அரசியல் சூழலில் இது போல படைப்புகள் வரும் என்ற நம்பிக்கை எனக்கு கொஞ்சமும் இல்லை,அன்றைய தலையாய பிரச்சனையான குடிநீர் பிரச்சனையை துணிந்து பேசிய  முக்கியமான படம் இது , இது போன்ற படங்களைப் பார்த்து ஆற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியுமில்லை

சிட்டிசன் என்றொரு படம் வந்தது அதிலும் அத்திப்பட்டி என்று அந்த ஊருக்குப் பெயர் வைத்து தண்ணீர் தண்ணீரில் வரும் அத்திப்பட்டிக்கு ட்ரிப்யூட் செய்திருப்பார்,சிட்டிசன் பட இயக்குனர் ச.சுப்பையா.

அத்திப்பட்டி பள்ளி  வாத்தியாரான கோமல் ஸ்வாமிநாதன் ஒரு பத்திரிக்கையாளருக்கு பேட்டியளிக்கையில் அரசு எந்திரத்தின் செயல்பாடு பற்றி  ஒரு ஸர்காஸ்டிக் வசனம் பேசும் நீண்ட காட்சியை இங்கே பாருங்கள். 

http://www.youtube.com/watch?v=BjENolc39pk&spfreload=10

 
பாடலாசிரிய வைரமுத்து எழுதிய இந்த நாட்டுப்புறச் சிந்து பாடலை பாருங்கள்,அதில் இடையே வரும் இன்றைய இரட்டைக்குவளை முறை அவலத்துக்கும் பொருந்தும் யதார்த்தமான வசன வரிகளை உற்று கவனியுங்கள்.
http://www.youtube.com/watch?v=NLBrluuwU2Qமா(வா)னத்திலே மீன் இருக்க
மதுரையிலே நீ இருக்க
சேலத்திலே நான் இருக்க
சேருவது எக் காலம்?

அத்து வானக் காட்டுக்கள்ளே
ஆயக் குழல் ஊதையிலே
சாடை சொல்லி ஊதினாலும்
சாடையிலே நான் வருவேன்
சேரிப் பொண்ணு:- என் பாட்டு ஒங்க காதைத் தீண்டிருச்சே? தப்பில்ல?
நாயக்கர் சாதி இளைஞன்:- காதை வுடு புள்ள; மனசையும்-ல்ல தீண்டிருச்சி?

நாயக்கர் சாதி இளைஞன்:-ஏய் புள்ள, மீதித் தூரத்துக்குச் சொமையை எப்புடித் தூக்குவேன்?
சேரிப் பொண்ணு:- உம்ம்..எம் பாட்டு ஒம்ம கூடவே வரும்..போங்க..
 ===000===
இப்படம் பற்றி எத்தனை கட்டுரை எழுதினாலும் போதாது,எனவே இன்னும் வரும். 

இப்படம் பற்றி கே.பாலசந்தர் மாலைமலருக்கு அளித்த முக்கியமான பேட்டி இங்கே.

அப்போது (1981) தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருந்தது. அதை மையமாக வைத்து கோமல்சுவாமி நாதன் கதை- வசனம் எழுதி, நாடகமாக நடத்தியதுதான் 'தண்ணீர் தண்ணீர்.' அதற்கு திரைக்கதை எழுதி, டைரக்ட் செய்தேன். படத்தின் கதாநாயகி சரிதா. பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்தனர்.

அப்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார். தண்ணீர் பிரச்சினை என்பதால், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும், வசனங்களும் அரசாங்கத்தை தாக்குவது போல் இருப்பதாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கருதினார்கள்.

'படம் வெற்றிகரமாக ஓடியது. படத்தில் அரசை தாறுமாறாக தாக்கி இருப்பதாக, எம்.ஜி.ஆருக்கு தகவல் போயிற்று. 'இந்தப் படத்துக்கு சென்சாரில் எப்படி அனுமதி கொடுத்தார்கள்?' என்று எம்.ஜி.ஆர். கூறியதாக எனக்கு தெரியவந்தது. 'படத்தின் முடிவில், எல்லோரும் துப்பாக்கி எடுத்துக்கொண்டு வன்முறை பக்கம் திரும்புவதாக காட்டப்பட்டிருக்கிறது' என்று பலர் குற்றம் சாட்டினார்கள்.

ஒரு புரட்சிக்காரன் எப்படி உருவாக்கப்படுகிறான் என்பதை காட்டுவதற்காக எடுக்கப்பட்ட காட்சி அது. எல்லோரும் தீவிரவாதியாக மாறவேண்டும் என்று சொன்ன காட்சி அல்ல. அரசு பற்றிய விமர்சனங்களும் அதில் நாசூக்காக இருக்கும்.

படத்தைப்பற்றி வாதப்பிரதி வாதங்கள் நடந்தன. 'துப்பாக்கி தூக்கச் சொல்கிறார், பாலசந்தர்' என்று முணுமுணுக்கப்பட்டதாலும், தணிக்கைக் குழுவுக்கு அரசு சென்றதாலும், அந்தக் கடைசி காட்சியில் சில மாறுதல்கள் செய்தேன். அந்த ஆண்டு விருதுக்காக, மத்திய மாநில அரசுகளுக்கு 'தண்ணீர் தண்ணீர்' அனுப்பப்பட்டது.

மாநில அரசின் விருது கிடைக்கவில்லை. ஆனால், சிறந்த மாநில மொழிப்படம் என்றும், தேசிய அளவிலான சிறந்த திரைக்கதை என்றும் இரண்டு பரிசுகளை மத்திய அரசு வழங்கியது. 'தண்ணீர் தண்ணீர்' படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த நடிகைக்கான விருதும் (சரிதாவுக்கு) வழங்க மாநில தேர்வுக்குழு முடிவு செய்திருப்பதாக, ஆரம்பத்தில் எனக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்தன. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானபோது, எந்த பரிசும் கிடைக்கவில்லை.

ஆனால், 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்துக்கு மாநில அரசின் விருது கிடைத்தது. பரிசளிப்பு விழா எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது.

விருது வழங்கும் விழாவில், எம்.ஜி.ஆர். முன்னிலையில் நான் பேசியது, இன்றும் நினைவில் இருக்கிறது. 'என் மீது அரசுக்கு கோபம் இருக்கலாம். தண்ணீர் தண்ணீர் படத்தால் ஏற்பட்ட அந்தக் கோபத்தின் காரணமாக, இந்தப் படத்துக்கும் விருது தரப்படமாட்டாது என்று எண்ணினேன். அதற்கு மாறாக, எம்.ஜி.ஆர். கையால் இப்போது விருது வாங்கி இருக்கிறேன். இது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது' என்று குறிப்பிட்டேன்.

எம்.ஜி.ஆர். பேசும்போது, என் பேச்சுக்கு பதிலளித்தார். 'அந்தந்த நேரத்தில் எது நல்ல படம் என்று எண்ணுகிறோமோ, அதைத்தான் தேர்வு செய்வோமே தவிர, ஏதோ ஒரு காரணத்துக்காக பழி வாங்கும் எண்ணமோ, திறமையானவர்களை ஒதுக்கி வைத்து விடும் எண்ணமோ கிடையாது' என்று குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆரின் 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம்தான் திரை உலகுக்கு வந்தேன். 'எம்.ஜி.ஆர். படத்துக்கு பாலசந்தர் வசனம் எழுதுகிறார்' என்ற மதிப்பும், மரியாதையும் திரை உலகில் எனக்கு ஏற்பட காரணமாக இருந்தவர் அவர். தனது அரசாங்கத்தை விமர்சித்து படம் வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் என்னை வாழ்த்தியது கண்டு நெகிழ்ந்து போனேன்.'

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

காவியத்தலைவன்

காவியத்தலைவன் பற்றி இப்படி ஈவு இரக்கமின்றி விமர்சிக்கிறாரே?!!! என்று சாரு மேல் முதலில் மிகவும் கோபமாக இருந்தேன், நான் காவியத்தலைவன் படம் பார்த்தேன், என்னாலேயே அரை மணி நேரம் கூட படத்தை ஒன்றிப் பார்க்க முடியவில்லை, என் தளத்தில் பிடித்த படம் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்னும் கொள்கை வைத்திருந்தாலும் சில சமயம் அதை மீறவேண்டியுள்ளது.

இருந்தும் நல்லதை உடனே சொல்ல வேண்டும்,கெட்டதை காலம் நேரம் பார்த்து சுட்டிக்காட்ட வேண்டும் என்பதால் படம் தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்ட பின் இங்கே இதை எழுதுகிறேன்.
தயாரிப்பாளரையும் தன்னையும் வசந்தபாலன் ஏமாற்றியிருக்கிறார் என்றால், இயக்குனர் வசந்தபாலனை ஏ.ஆர்.ரஹ்மான்,ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. உதவி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் என ஒட்டு மொத்தமாக ஏமாற்றியிருக்கின்றனர். இந்த நவீன யுகத்தில் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் இந்தி டப்பிங் சீரியலான சிந்து பைரவி கூட நல்ல லிப் ஸிங்கிங்கை கொண்டிருக்கிறது.

 ஆனால் காவியத்தலைவனில் லிப்ஸிங்கிங்கில் பெரும் ஊழலே நடைபெற்றிருக்கிறது, அதுவும் அந்த இரு நாயகிகள் தோன்றும் க்ளோஸ் அப்  காட்சிகளை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் .நான் அழகு பற்றியோ நிறம் பற்றியோ அலட்டிக்கொள்ளாதவன். எனக்கே திரைப்படத்தின் நாயகிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படை அழகும் சாமுத்ரிகா லட்சணமும் இவர்களுக்கு இல்லாதது கண்டு பற்றிக் கொண்டு வருகிறது. 
 வசந்த பாலன் இனி அவருடைய பவ்யம் , பணிவு, தன்னடக்கம் போன்றவற்றை ஏறக்கட்டிவிட்டு  உடனே கற்க வேண்டியது நெறியாள்கை நிர்வாகம், சக தொழிற்நுட்பக் கலைஞர்களிடன் மிகக் கறாராக வேலை வாங்குகிற திறன், நேர்த்தி, மற்றும் காஸ்டிங் அறிவு. இவரின் காஸ்டிங் அறிவு பூச்சியமாகிவிட்டதோ? என்று சந்தேகமே வந்து விட்டது.படத்தின் இரண்டு நாயகிகளுமே eye sore. கண்ணுக்கு நன்றாக ஒரு நாயகியுமே அமையவில்லையா? அல்லது நீரவ்ஷா படத்துக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்க வராமலே போனாரா?!!! எப்படி 2 கமலா காமேஷ்களை இவரால் படத்தில் துணிந்து நாயகிகளாகக் காட்ட முடிந்தது?!!!
 
இவரின் வெயில் படத்தில் உருகுதே மருகுதே பாடலில் வந்த நடிகர் பசுபதிக்கும் பிரியங்கா நாயருக்கும் வரும் காதலும் சரசமும் எத்தனை நம்பும்படியாக இருக்கும்? அங்கே பரத்துக்கும் பாவனாவுக்கும் வரும் காதல் , அந்த ஜோடிப்பொருத்தம் எத்தனை நிஜமாக இருக்கும்? அங்காடி தெருவில் அஞ்சலிக்கும் மகேஷுக்கும் அமைந்த பொருத்தம் எப்படியிருக்கும்?!!! அந்த  வசந்த பாலன் என்ன ஆனார்? என்னும் கோபத்தில் தான் இப்படி எழுத வேண்டியிருக்கிறது, இதே படத்தை ஆல் இன் ஆல் அழகுராஜா புகழ் ராஜேஷ் எடுத்திருந்தால் யாரும் எதுவும் கேட்டிருக்கப்போவதில்லை, இது வசந்தபாலன் என்பதால் தான் கேட்கிறோம்.
தமிழ் சினிமாவில் முக்கியமான முயற்சிகள் தேவை தான் ஆனால் அவை சிரத்தையுடன் இருக்க வேண்டும். கமலின் ஹேராம், சேரனின் பொக்கிஷம்  கடந்த காலத்தை தமிழ் சினிமாவில் மிக அழகாக தத்ரூபமாகச் சொன்ன படம். படைப்பாக்கத்தில் ஒரு குறையுமே இல்லாத படங்கள் அவை. அவை வணிகரீதியாக தோல்வியடைந்திருந்தாலும், அது தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சிக்காக என்றும் பேசப்படும்.

 ஆனால் காவியத் தலைவன்?!!!. ஏதோ இருவர் படத்தை 2014க்கு ரீமேக் செய்தது போலத்தான் அதன் ஆக்கம் இருந்தது.அதைப் போயா இன்ஸ்பிரேஷனுக்கு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்?!!! இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் எதற்கு? மிஸ்கின் போல நல்ல புதிய இசையமைப்பாளரை பிடித்திருந்தால் நீங்கள் முழுச் சுதந்திரத்துடன் இயங்கி வேலை வாங்கியிருக்க முடியுமே?!!! நாங்கள் படம் பார்த்தது  ஏ.ஆர்.ரகுமான் இசைக்காக அல்லவே அல்ல, வசந்தபாலனின் தீஸிஸ் மிகுந்த மேக்கிங்கிற்காக.
 மேலும் தம்பி ராமையா + சிங்கம்  புலி நகைச்சுவை என்ற பெயரால் செய்யும் சேஷ்டைகளை பீரியட் படம் என்றதால் அனுமதித்தீர்களா?!!! இதெல்லாம் அடுக்குமா? ஒரு பீரியட் படம் எப்படி ரிச்சாக எடுக்க வேண்டும்,ஒரு நாயக,நாயகியை எத்தனை அழகாக பார்வையாளர் ரசிக்கும் படி காட்ட வேண்டும் என்பதற்கு உதாரணமாக எத்தனை படங்கள் உண்டு?,இந்திய சினிமாவில்?!!! பீரியட் படம் என்பதால் இந்த சோக்கர் பாலி, ஹரிஸ்சந்த்ராஸ்சி ஃபேக்டரி [2009] இதன் நகைச்சுவை சப் டைட்டில் இன்றியே புரிபவை,அது மராத்தியில் உருவான முதல் சினிமா பற்றி மிக அழகாகச் சொன்ன படம், ரிச்நெஸ்காக தேவ்தாஸ்[2002] ரெய்ன்கோட் போன்ற படங்களையும் இங்கே  குறிப்பிடுகிறேன்,
 மின்சாரமில்லாத காலங்களின் நிஜமான ஒளிப்பதிவை தத்ரூபமாகக் கொண்டு சமகாலத்தில் எத்தனையோ உயர்ந்த படைப்புகள் வந்துள்ளன, வசந்தபாலன் காவியத்தலைவனில் மிகுந்த சிரத்தையாக இருந்திருக்கலாம், 

இதே நடிகர் நாசரை இயக்குனர்[நடிகை] நந்திதா தாஸ் தன் ஃபிராக்[Firaaq] [2008] படத்தில் ஐந்தேநிமிடம் வந்தாலும் எப்படி பயன்படுத்தியிருப்பார்?
நஸ்ரூதீன் ஷாவுக்கு ஈடான நடிகர் நாசர், அவருக்கு போட்ட மேக்கப்பில் எத்தனை போலித்தனம்?!!! சாரு சொன்னது போல அவரின் சிகையை ஒட்டப் பயன்படுத்திய பிஸின் கூட வெளியே தெரிகிறது. அது மிகைப்படுத்திச் சொன்னது என நினைத்தேன்,அது அராஜகமில்லையா?!!! உதவி இயக்குனர்கள் அதை சரிபார்த்திருக்க வேண்டும் தானே?நடிகர் சித்தார்த்தை தீபாமேத்தா தன் மிட்நைட்ஸ் சில்ட்ரனில் எப்படி வேலை வாங்கியிருப்பார்?!!!
உழைத்தோம்,ஆனால் பலன் கிடைக்கவில்லை,என்று புலம்பி என்ன பயன்?இது என்ன குறுகிய கால ப்ராஜக்டா?2 வருடங்கள் எடுத்துக் கொண்ட படம் தானே? அற்பணிப்பில்லாத உழைப்பை போட்டு விட்டு அது எல்லோரின் பாராட்டையும் பெற வேண்டும் என எதிர்பார்த்தால் அது பேராசை தானே?
இப்படத்தை காசு கொடுத்தோ கொடுக்காமலோ பார்த்த யாருக்கும் கோபம் வரத்தானே செய்யும். இன்னும் இது குறித்து எழுத நிறைய உள்ளது,நேரம் வாய்க்கையில் நிச்சயம் எழுதுவேன்.

கல்யாண அகதிகள் [1985] நடிகர் நாசரின் அறிமுகத் திரைப்படம்இயக்குனர் கே.பாலச்சந்தர் எத்தனையோ பேரை அறிமுகம் செய்திருந்தாலும் அத்தனை பேரும் சினிமாவில் வெற்றி பெற முடிந்ததில்லை.
அவர் செய்த அறிமுகங்களில் முத்தான , அவர் பெருமைப்பட்ட மற்றதோர் அறிமுகம் நடிகர் நாசர் ஆவார்.

அவரின் திறமை மீது அபார நம்பிக்கை வைத்தவர் அவர் பெயரை சினிமாவுக்காக மாற்றாமல் தன் கல்யாண அகதிகள் படத்தின் டைட்டில் ஸ்க்ரோலில் இவரை நாசர் முகம்மது[அறிமுகம்] என்றே அறிமுகம் செய்திருப்பதைப் பாருங்கள்.

நாசர் தன் நாடக அனுபவத்தை வைத்து திரையுலகில் கால் பதிக்க முயன்றார்.சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பும் படித்தார்,வருமானத்துக்காக தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் சேவைப்பகுதியில் பணியாற்றியுமிருக்கிறார். சினிமாவுக்கு முயன்ற அதே நேரம் கதை, கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பியுமுள்ளார். அவற்றில் சில பிரசுரமாகியிருக்கிறது.

பின்னர் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று நடிப்புத்துறையில் பட்டம் பெற்றார். இதன் முன்னர், தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் நடிப்புப் பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றார்.அவரின் திறமையைக் கண்ட பாலச்சந்தர் தன் 1985 ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தில் குடிப்பழக்கத்தால் மனைவியை [ஒய்.விஜயா] தன் நண்பனுக்கே கூட்டிகொடுக்கும் ஒரு இழிபிறவி கதாபாத்திரத்தில் இவரை அறிமுகம் செய்தார்.

அதன் பின்னர் நாசர் நடிப்பில் தொட்ட உயரங்கள் நாம் அறிவோம். 

கல்யாண அகதிகள் திரைப்படமும் தீர்க்கமாக பெண்ணியம் பேசிய பெண்ணைச்[பெண்களைச்] சுற்றி சுழலும் படைப்பே, பாலச்சந்தரின் வழமையான காட்சியமைப்புகள்,ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட பெண் கதாபாத்திரங்கள் இதிலுமுண்டு. சுயநலமி ஆணாதிக்க மாந்தர்களால் புரையோடிப் போன இச்சமுதாயத்தை இதைப் போல இன்னும் எத்தனைப் படைப்புகள் தந்தாலும் திருத்த முடியாது என்று நினைத்ததால் தான் அடுத்தடுத்து பெண்ணியம் பேசும் படைப்புகளாகத் தந்தார்,அதில் அவர்  சிறிதும் சோர்ந்து போனதில்லை,அலுத்துக்கொண்டதுமில்லை,

தம் படைப்புகளில் திருவள்ளுவர் வாயிலாகவும் மகாகவி பாரதியாரின் வாயிலாகவும் ஆனவரை பெண்ணியம் பேசியவர் அவர்,அத் திரைப்படைப்புகள் வெற்றி பெற்றாலும் கொக்கரித்ததில்லை, தோல்வியடைந்தாலும் துவண்டதில்லை, கே.பாலச்சந்தர் படைத்த பெண் கதாபாத்திரங்கள் பெண்ணினத்துக்கே பெருமை சேர்த்தவை,

கே.பாலச்சந்தர் மட்டும் இப்படிப் பட்ட பெண்ணியம் பேசும் படைப்புகளை தொடர்ந்து தராமல் போயிருந்தால், இன்னும் நம் தமிழ் சமூகத்தில் வரதட்சினை கொடுமை,ஆண்களின் பலதார விவாகங்கள்,சமூகத்தில் பெண்ணை போகப் பொருளாகப் பார்க்கும் அடிமைத்தளை, வாழச் சென்ற வீட்டுக்குள் நிகழும் கணவன், நாத்தனார்,மாமியார் மாமனார் கொடுமைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகத்தில் பெண்ணை ஈவ் டீசிங் செய்தல்,சட்டசபையில் பெண்ணை துகிலுரிதல்,அவமானப்படுத்துதல்,வீட்டு வேலைக்காரியை சம்பளம் தரும் திமிரில் அவளை பெண்டாளுதல் போன்றவை தொடர்படியே இருந்திருக்கும்,அவற்றை ஒரு தவறாகவே எண்ணாத சமூகமாக விளங்கியிருகும் என்பது கண்கூடு.

 இதே போலவே கட்டுப்பெட்டி சமூகத்தில் ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட படிதாண்டிய பெண்களின் கதைக்களனைக் கொண்ட திரைப்படங்களை கல்யாண அகதிகள் திரைப்படத்தின் வணிக ரீதியான படு தோல்விக்குப் பிறகும் அவர் இயக்கினார் என்பது தான் ஆச்சர்யமான உண்மை,அவை பின் வருமாறு:- 

[குறிப்பு:- இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்களில் ஆண்களால் வஞ்சிக்கப்படும் பெண் கதாபாத்திரத்தை அல்லது  ஆணாதிக்கத்துக்கு எதிராய் புரட்சி செய்யும் பெண்மணி கதாபாத்திரத்தை,  குடும்பச் செலவுகளுக்கு  ஆணின் தயவை எதிர்பாராமல் சுய ஜீவனம் செய்யும் கதாபாத்திரங்கள் கொண்டிருப்பவற்றை நான் என் புரிதலின் படி இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்]  

கல்யாண அகதிகளுக்குப் பின்னர் வந்த பெண் உரிமை பேசிய படைப்புகள்
 1. சிந்து பைரவி [1985],
 2. Mugila Mallige [முகில மல்லிகே][கன்னடம்][1985]
 3. சுந்தர ஸ்வப்னகலு[ Sundara Swapnagalu][1986][சொல்லத்தான் நினைக்கிறேன் கன்னட மீள் ஆக்கம்]
 4.  மனதில் உறுதி வேண்டும்[1987]
 5. ருத்ரவீணை [1988][உன்னால் முடியும் தம்பி படத்தின் தெலுங்கு வடிவம்]
 6. உன்னால் முடியும் தம்பி [1988]
 7. புதுப்புது அர்த்தங்கள், [1989 ]
 8. Dilon Ka Rista [புது புது அர்த்தங்களின் இந்தி வடிவம் ஆனால் படம் இன்னும் வெளிவரவில்லை]
 9. ஒரு வீடு இருவாசல் [1990 ]
 10. அழகன்[1991]
 11.  வானமே எல்லை [1992]
 12. ஜாதி மல்லி [1993 ]
 13. டூயட்[1994]
 14. கல்கி,[1996 ]
 15. பார்த்தாலே பரவசம் [2001 ][தொலக்காட்சி நாடகங்கள் இயக்கச் சென்ற பாலச்சந்தர் 6 வருடங்களுக்குப் பின்னர் இயக்கிய அவரது 100 வது படம்]
 16. பொய் [ 2006][அவர் கடைசியாக இயக்கிய இத்திரைப்படத்தையும் பெண்ணுக்கு பெருமை சேர்க்கும் ஆக்கமாகவே செய்தார்  ]
கல்யாண அகதிகளுக்குப் முன்னர் வந்த பெண் உரிமை பேசிய படைப்புகள்
 1.   இரு கோடுகள்[1969]
 2. அரங்கேற்றம் [1973]
 3. சொல்லத்தான் நினைக்கிறேன்[1973]
 4. அவள் ஒரு தொடர்கதை[1974]
 5. நான் அவன் இல்லை [1974]
 6. அபூர்வ ராகங்கள் [1975]
 7. மன்மதலீலை[1975]
 8. அந்துலேனிகதா[1976][அவள் ஒரு தொடர்கதையின் தெலுங்கு  வடிவம்]
 9. மூன்று முடிச்சு[1976]
 10. அவர்கள்[1977]
 11. நிழல் நிஜமாகிறது[1978]
 12. தப்புத்தாளங்கள்[1978]
 13. தப்பிட தாளா[1978][தப்புத்தாளங்களின் கன்னட வடிவம்]
 14. நூல்வேலி[1979]
 15. குப்பெடு மனசு[1979][நூல்வேலியின் தெலுங்கு வடிவம்]
 16. இதி கத காது [1979][அவர்கள் திரைப்படத்தின் தெலுங்கு வடிவம்]
 17. வறுமையின் நிறம் சிவப்பு[1980]
 18. ஆகலி ராஜ்யம்[1980][வறுமையின் நிறம் சிவப்பின் தெலுங்கு வடிவம்]
 19. ஆடவல்லு மீகு ஜோஹர்லு[1981]Aadavallu Meeku Joharlu
 20. எங்க ஊர் கண்ணகி [1981]
 21. தொலிக்கொடி கூசிண்டி[1981][Tholikodi Koosindi ][தெலுங்கு]
 22. தண்ணீர் தண்ணீர்[1981]
 23. 47 நாட்கள்[1981]
 24. 47 ரோஜுலு[1981][47 நாட்கள் தெலுங்கு வடிவம்]
 25. அக்னி சாட்சி [1982]
 26. பெங்கியல்லி அரலிட ஹூவு [Benkiyalli Aralida Hoovu][1982][அவள் ஒரு தொடர்கதையின் மீள் ஆக்கம்]
 27. ஸரா ஸி ஸிந்தகி [Zara Si Zindagi][1983][வறுமையின் நிறம் சிகப்புவின் இந்தி வடிவம்]
 28. கோகிலம்மா[Kokilamma][தெலுங்கு][1983]
 29. ஏக் நைய் பெஹெலி [Ek Nai Paheli][1983][அபூர்வ ராகங்களின் இந்தி வடிவம்]
 30. அச்சமில்லை அச்சமில்லை [1984]
 31. இரடு ரேகேகலு [1984] [Eradu Rekhegalu][இரு கோடுகள் படத்தின் கன்னட மீள் ஆக்கம்]
 அவர் இயக்கிய தொலைக்காட்சித் தொடர்களை பின்னொரு சமயத்தில் பட்டியலிடுவேன்.

கல்யாண அகதிகள் திரைப்படம் இங்கே

http://www.youtube.com/watch?v=X2L5BbWzikA

ஒளிப்பதிவாளர் ராது கர்மாகர் [Radhu Karmakar] _இந்திய பிரம்மாண்ட சினிமாவின் பெரும் தச்சன்.


ஒளிப்பதிவாளர் ராது கர்மாகரின் ஒரே புகைப்படம்
நம் இந்திய வணிக சினிமாவின் பெருமைக்கு பின்னின்று பாடுபட்ட ஒளிப்பதிவாளர்களில் காலம் சென்ற ராது கர்மாகருக்கு மிகுந்த பங்குண்டு,Kismat Ki Dhani (1945) படத்தில் அறிமுகமானவர்  அதன் பின்னர் இயக்குனர் ராஜ் கபூரூடன் இணைந்து நான்கு தலைமுறை காலம் பயணித்து,அவரின் ஆவாரா[1951]  துவங்கி ராம் தேரா கங்கா மெய்லி[1985]  வரை உடன் பணியாற்றியவர்.அதன் பின்னர் தன் முதுமையிலும்    Param Vir Chakra (1995) படம் வரை பணியாற்றிவிட்டுத் தான் ஓய்ந்தார், அப்படங்களை உலக அரங்கின் இந்திய வணிக சினிமாவாக வியந்து பேச வைத்தவர்.

ஷ்ரீ 420 ராஜ்கபூர்
இவரது கருப்பு வெள்ளை படங்கள் காவியங்கள் என்றால் இவரின் வண்ணப் படங்கள் இதிகாசங்கள், இவர் வைத்த ஃப்ரேம்கள் ,காம்போசிஷன்கள், இயற்கை மற்றும் செயற்கை பிரம்மாண்டத்தின் அழகியலையும் , மனிதத்தின் ஒவ்வொரு பரிணாமத்தையும் ஒருங்கே பறை சாற்றுபவை. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை சற்றும் தவற விடாமல் அற்புதமாக பதிவு செய்து,உச்சம் தொட்டவை, க்ளாஸிக் சினிமாவின் மாபெரும் சூத்திரதாரி, எங்கோ வங்காளத்தின் ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஏழைக் கலைஞராகவே மடிந்தவர்,குடும்ப வாரிசு இல்லாவிட்டாலும்,தொழிலுலகத்தில் மானசீக வாரிசுகள் நிரம்பியவர்.
1993 ஆம் வருடம் மறைந்த இவருக்கு 1995 ஆம் வருடம் தான் வாழ்நாள் சாதனையாளருக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தது நம் சினிமாவும்,அரசியலும்.

Radhu Karmakar: The Painter of Lights என்னும் இவரின் சுயவரலாற்றுப் புத்தகம் 2005 ஆம் ஆண்டு இவர் நினைவாக வெளியிடப்பட்டது,அதுவும் சினிமா ஆர்வலர்கள் படிக்க வேண்டிய முக்கியமான  புத்தகம்

இந்திய சினிமாவில் மாபெரும் கலைஞர்கள் மறக்கப் படுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும்,எத்தனையோ திரைப்படங்களுக்கு காவியத்தன்மை  அந்தஸ்தை அளித்த இவருக்கு ஒரு உருப்படியான புகைப்படம் முழு இணையத்திலோ அல்லது இவரது விக்கி ஐஎம்டிபி பக்கங்களிலோ கிடையாது என்பது எத்தனை நகைமுரண்.

 ராஜ்கபூரின் மூன்றாம் கண் என்று புகழப்பட்ட  ஒளிப்பதிவாளர் ராது கர்மாகர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜாக் கார்டிஃப்ஃபிடம்  சென்று ஆறு மாத காலம் தங்கி டெக்னிகலர் போட்டோக்ராப்பி பயின்றார்.

1956ஆம் ஆண்டு  திரும்பி வந்து ராஜ்கபூரின் ஷ்ரீ 420 படத்துக்கு மிக அருமையாக கருப்பு வெள்ளையில்  மிக தத்ரூபமான தொலைநோக்குடன் ஒளிப்பதிவு செய்து பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார்.

 ‘Shree 420′ படத்தில்  ‘Pyar hua ikrar hua’  பாடலைப் பார்த்த சார்லி சாப்ளின் இப்பாடலை முழுக்க அவர் ஸ்டுடியோவுக்குள் படமாக்கியதை நம்பவில்லையாம், அது ஒரு நகரத்தின் சாலை என்றே நினைத்ததாகச் சொன்னாராம். இதை ராது கர்மாகரின் Radhu Karmakar: The Painter of Lights புத்தகத்தில் அவர் விரிவாய் எழுதியிருக்கிறார்.
 http://en.wikipedia.org/wiki/Jack_Cardiff

ராஜ்கபூர் இறந்த பின்னரும் கூட இவர் அவர் மகன் ரந்தீர் கபூரின் ஹென்னா படத்துக்கு இவர் ஒளிப்பதிவு செய்தார். இவர் எத்தனையோ சாதனைகளை செய்திருந்தாலும் கூட ராஜ்கபூரின் ஆர்.கே.பிக்சர்ஸின் கம்பெனி கேமராமேன் என்னும் அடைமொழி அளவுகோலைக் கொண்டே இவரை சினிமாவில் பார்த்தனர்.

 இதே துயரம் தான் இந்திய சினிமாவின் மற்றோர் ஒப்பற்ற ஒளிப்பதிவாளரான வி.கே.மூர்த்திக்கும் நிகழ்ந்தது.அவரும் ஒளிப்பதிவில் எத்தனையோ சாதனைகளை செய்திருந்தாலும் கூட குருதத் கம்பெனியின் ஆஸ்தான கேமராமேன் என்னும் அடைமொழி அளவுகோலைக் கொண்டே அவரையும் சினிமாவில் பார்த்தனர். ராது கர்மாகர் சினிமாவில் கிடைக்கும் பணம் புகழுக்கெல்லாம் என்றுமே ஆசைப்பட்டதில்லை என்று அவரின் மனைவி இந்த புத்தகத்தில் சொல்கிறார்.ராது கர்மாகார் ஆசைப்பட்டதெல்லாம் இந்தியில் ஆர்சன் வெல்ஸ் இயக்கிய சிட்டிசன் கேன் படத்துக்கு ஈடான ஒரு படைப்பை தரவேண்டும் என்பது தானாம்,அவரது இயக்குனர் கனவு Jis Desh Mein Ganga Behti Hai திரைப்படம் மூலம் நனவானாலும்,இதுவே கடைசியாகவும் ஆயிற்று,அதன் பின்னர் அவர் தன்னை ஒளிப்பதிவாளராகவே முன்னிறுத்திக்கொண்டார்.


இவரின் இந்த முக்கியமான படைப்புகள்,சினிமா ஆர்வலர்கள், சினிமாத்துறையில் பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக காண வேண்டியவை,தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளும் உந்துசக்தியாக இப்படைப்புகள் விளங்கும் என்பது திண்ணம்.

    Kismat Ki Dhani (1945) கருப்பு வெள்ளை
    Jwar Bhata (1944)கருப்பு வெள்ளை
    Milan (1946)கருப்பு வெள்ளை
    Naukadubi (1947)கருப்பு வெள்ளை
    Mashal (1950)கருப்பு வெள்ளை
    Samar (1950)கருப்பு வெள்ளை
    Awaara (1951)கருப்பு வெள்ளை
    Jagte Raho (1956)கருப்பு வெள்ளை
    Shree 420 (1955)கருப்பு வெள்ளை
    Sangam (1964)வண்ணம்
    Aman (1967)வண்ணம்
    Sapnon Ka Saudagar (1968)வண்ணம்
    Mera Naam Joker (1970)வண்ணம்
    Be-Imaan (1972)வண்ணம்
    Bobby (1973)வண்ணம்
    Sanyasi (1975)வண்ணம்
    Dhoop Chhaon (1977)வண்ணம்
    Satyam Shivam Sundaram (1978)வண்ணம்
    Love Story (1981)வண்ணம்
    Prem Rog (1982)வண்ணம்
    Ram Teri Ganga Maili (1985)வண்ணம்
    Adventures of Tarzan (1985)வண்ணம்
    Dance Dance (1987)வண்ணம்
    Commando (1988)வண்ணம்
    Henna (1991)வண்ணம்
    Param Vir Chakra (1995)வண்ணம்

இவரின் விக்கி பக்கம்
http://en.wikipedia.org/wiki/Radhu_Karmakar

இவர் பற்றிய தி இந்து நினைவுக் கட்டுரை

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/memories-of-a-lifetime-through-a-lens/article1434449.ece

இவரின் Radhu Karmakar: The Painter of Lights புத்தகம் பற்றிய  விமர்சனம் ,புத்தகம் 216 பக்கங்கள்,விலை 250 ரூபாய்.
http://www.dnaindia.com/lifestyle/books-and-more-a-self-effacing-genius-1195587

இவர் படத்தின் ஆவணக் காப்பு பக்கம்

ஒருவீடு இரு வாசல் [1990] பாகம்-1


குத்துக்கல்வலசை கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றால அருவிகள் இக்கிராமத்தின் அருகாமையில் உள்ளதால்  தென்காசியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும்  ஊராக   விளங்குகிறது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்கும் பெயர் போனது. மக்கள் இதைச் சாரல் மழை என்றும் அழைப்பர்.

இதைத் தான் ஒரு வீடு இரு வாசல் படத்தின் முதல் வாசல் கதை நடக்கும் இடமாக வைத்தார் இயக்குனர் கே.பாலச்சந்தர், படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் உண்டு.

அதில் முதன்மையாக வயலின் சகோதரர்களான கணேஷ்-குமரேஷை இதில் இரு வாசல்களுக்கும் சுயநலமி_ஆணாதிக்க நாயகர்களாகவே மாற்றியிருந்தார் இயக்குனர்.

 இப்படம் வந்து 24 வருடங்களாகிறது, இந்த வயலின் சகோதரர்கள் சினிமாவில் சாதிக்க முடியாவிட்டாலும் இந்திய சாஸ்திரிய வயலினிசையில் சாதித்தது மிக அதிகம்.

படத்தில் அண்ணன் கணேஷ்  தொழிற்சாலை ஒன்றின் பொறியாளர், நல்ல சம்பளத்துடன் கார் வீடு என அருவிக்கு அருகே சொகுசாக  வசிக்கிறார்,

தனிமை சூன்யத்தை விரட்ட இப்பாறைக்கு அருகே உள்ள குன்றிற்கு தினமும் வந்து பாரதியார் பாடல்களையும் தியாகையர் கீர்த்தனைகளையும் வயலினில் வாசிப்பார்.

 தம்பியான குமரேஷ் இதில் ஒரு பெண்ணிய சிந்தனை எழுத்தாளர்,அவரின் உதவியாளர் விவேக்,அவர் சொல்லச் சொல்ல விவேக்  எழுதுவார்,இடையில் யோசனைகள் சொல்லி மெருகேற்றுவார் .

ஆண்களின் மறுபக்கம் என்னும் நாவல் எழுத இருவரும் குற்றாலம் வந்தவர்கள்,இப்பாறைக்கு வர,அங்கே வயலினில் மானச சஞ்சரரேவை நெக்குருக வாசிக்கும் கணேஷின் இசையால் வசமாகின்றனர். மிக ரம்மியமான காட்சி அது.

விவேக் படத்தில் நிறைய உடனடி ஹைக்கூக்களாக சொல்லுவார்.அத்தனையும் அவரே எழுதியவை, அவர் இப்பாறையைப் பார்த்து சொல்லும் ஒரு ஹைக்கூ

புத்தனைப் போல் ஒரு சித்தனைப் போல்
நிற்கும் குத்துக்கல்,இது ஒத்தைக்கல்.

விவேக் படத்தின் முதல்வாசலில் மட்டும் வருவார்,இரண்டாம் வாசலில் குமரேஷ் தன் ஆண்களின் மறுபக்கம் நாவலுக்கு விருது வாங்கியவர்  ஒரு இலக்கிய இதழிலும் சப் எடிட்டராக வேலையில் இருப்பார், அப்போது அவர் பழைய உதவியாளர் விவேக்கை உதறி விட்டிருப்பதை இயக்குனர் காட்டாமல் காட்டியிருப்பார்.

சென்ற வருடம் இயக்குனர் பாலச்சந்தர் விவேக் பற்றி ஒரு படவிழாவில் பேசுகையில், “நான் விவேக்கை ‘முட்டாள்’ என்றுதான் செல்லமாகக் கூப்பிடுவேன். ஆனால், அவன் ரொம்ப புத்திசாலி. முதன்முதலில் என்னிடம் சான்ஸ் கேட்டு வரும்போதே, அவன் எழுதிய புதுக்கவிதைகளையெல்லாம் கொண்டு வந்து காட்டிதான் சான்ஸ் வாங்கினான்.

ஒரு வீடு இருவாசல் படத்துக்கு குற்றாலத்தில் படப்பிடிப்பு நடந்த போது வானத்தில் வானவில் பார்த்தேன். அது மறைவதற்குள் படம் பிடிக்க நினைத்தேன். ஆனால், அதை படத்தில் வெறுமனே காட்ட எனக்கு விருப்பம் இல்லை. அங்கு விவேக் நின்று தன் நண்பனிடம் அந்த வானவில் பற்றி புதுக்கவிதை  பேசுகிற மாதிரி படம் பிடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

 உடனே அங்கு நின்று கொண்டிருந்த விவேக்கை அழைத்து,‘வானவில்லைப் பற்றி உடனே ஒரு புதுக்கவிதை எழுதுடா’ என்று சொன்னேன். அந்த வானவில் மறைவதற்குள் எழுதி முடிக்க வேண்டுமே என்ற பதற்றம் இருந்தாலும், அழகாக எழுதிவிட்டான். உடனே அவனை பேச வைத்து படமாக்கினேன்” என்றார்.

அந்த ஹைக்கூ இங்கே

வண்ணங்கள் கோர்த்த வளைந்த மலரா?
வானம் அடித்த வாட்டர் கலரா?
அர்ச்சுனன் வில் என்னும் கனவுப் போஸ்டர்!
ஆண்டவன் தான் இதற்கு ட்ராயிங் மாஸ்டர்!!!

இப்படத்திற்கும் ரகுநாதரெட்டி தான் ஒளிப்பதிவாளர், குறைந்த முதலீட்டில் உருவான திரைப்படம் என்பதால் சூப்பர் 16 எம் எம் ஃப்லிம் ஸ்டாக் கொண்டு எடுத்து விட்டு 35mm ப்ளோன் அப் செய்திருப்பார்கள், அந்த சூரிய அஸ்தமனக் காட்சியின்    போது கே.பாலச்சந்தர் & ரகுநாதரெட்டியின் சில்ஹவுட் ஒளிப்பதிவின் மீதான தீராக்காதலும் மேதமையும் மிக அருமையாய் வெளிப்பட்டிருக்கும். படம் இங்கே.

இப்படம் இன்றும் தமிழ்சினிமாவில் ஒரு ஆச்சர்யம்,படம் பற்றி விரிவாக எழுதுவேன்.

முழுப்படம் யூட்யூபில் நல்ல ப்ரிண்ட் , கட்கள் எதுவும் இல்லாமல் கிடைக்கிறது, அவசியம் பாருங்கள்.  லிங்க்.
http://www.youtube.com/watch?v=hUJ6WBGHAiY

இயக்குனர் கே.பாலச்சந்தர் சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு 2011ல் அளித்த முக்கியமான பேட்டி

 

இந்த முக்கியமான பேட்டிக்காக சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை எத்தனை பாராட்டினாலும் தகும், பெரிய பேட்டி பொருமையாக படியுங்கள்.இயக்குனர் சிகரம் பற்றிய அருமை பெருமைகள் பிடிபடும்.

தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒருவரின் பெயர் உண்டென்றால் அது கே.பி. சினிமா அடைமொழியோடு சொல்வதென்றால் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். நூறு அசாதாரணமான திரைப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். நையாண்டி, நகைச்சுவை, சமூக சித்திரம், அரசியல், பெண்ணியம் என எல்லா கதைகளையும் தொட்டு எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கியவர். அவருக்குப் பால்கே விருது வழங்கி கௌரவித்திருப்பதன் மூலம் தமிழையும் தமிழர்களையும் இந்திய அரசு பெருமைப்படுத்தி இருக்கிறது. தமிழகத் திரையுலகின் தரத்தை முன்னகர்த்திக் காட்டியிருக்கும் அவரைச் சந்திப்பது என்பது அரை நூற்றாண்டு சினிமா சரித்திரத்தைச் சந்திப்பதற்குச் சமம்.
 
உங்கள் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் "அரங்கேற்றம்'. திடீரென்று அப்படியொரு புரட்சிகரமான படத்தை எடுக்க வேண்டும் என்று உங்களைச் சிந்திக்க வைத்தது எது?அந்தக் கதையை என் திரைவாழ்வில் ஆறு மாத ஓய்வுக்குப் பின்னால் எடுத்தேன். அதனாலும்கூட அதில் சற்று சத்தியாவேசம் அதிகமாகவே இருந்தது. அந்தப் படம் 72-ல் வந்தது. அதற்கு முன்னாடி வரை ரொம்ப வேகமாக தினம் மூன்று ஷூட்டிங், நான்கு ஷூட்டிங் என்று ஓடிக் கொண்டிருந்தேன். விளைவு ஹார்ட் அட்டாக். ஆறு மாதம் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார்கள்.அந்த ஓய்வில் யோசனை பண்ணியதில் இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்கோம்.. இனி என்ன பண்ணப் போகிறோம் என்ற மனத்தின் அலசலில் விளைந்ததுதான் "அரங்கேற்றம்'. கிருஸ்துவுக்கு முன்.. கிருஸ்துவுக்குப் பின் என்பதுபோல ஹார்ட் அட்டாக்குக்கு முன் ஹார்ட் அட்டாக்குக்குப் பின் என என் படங்களைப் பிரித்துவிடலாம். அதற்கு முன்னாடி 15, 20 படங்கள் எடுத்திருந்தேன். ஹார்ட் அட்டாக் என்னை முற்றிலுமாக புரட்டிப் போட்டுவிட்டது. என்ன மாதிரியான படங்களை எடுக்கப் போகிறோம் என்பதற்கும் கூட "அரங்கேற்றம்' முன் மாதிரியாக அமைந்துவிட்டது.
 
இப்போது அரங்கேற்றம் திரைப்படம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"அரங்கேற்றம்' உங்களுக்குத் தெரியும். அது பூகம்பத்தையே ஏற்படுத்தியது. அப்போது எனக்கு சின்ன வயது. இப்போது கேட்டால் அப்படியொரு படத்தை எடுப்பேனா என்பது சந்தேகம்தான். பிராமண சமுகத்தில் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சிரமப்படுவதுதான் கதையின் மையம். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் நிறைய பெண் குழந்தைகளைப் பெற்று அவர்களை கரையேற்ற முடியாமல் அவதிப்படுவதைச் சொல்ல வேண்டும் என்பதுதான் என் நோக்கம். என் மகள் புஷ்பா ஒரு பேட்டியில் சொல்லும்போது அந்தக் கதை அவருடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட ஓர் உண்மைச் சம்பவமாக இருந்திருக்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்.... இருந்திருக்கலாம் என்றுதான் சொன்னார்கள். உண்மைச் சம்பவம் என்று சொல்லவில்லை. இப்போதும் அது உண்மையில் நடந்த சம்பவமா? என்பதைச் சொல்ல நான் விரும்பவில்லை. 
 
"அரங்கேற்றம்' திரைப்படத்தை நீங்கள் ஏன் பிராமண சமூகத்தின் பின்புலத்தில் அமைத்திருந்தீர்கள். அதற்கு ஏதாவது காரணம் உண்டா?அதைச் சொல்வதற்கு எனக்கு மிகவும் தெரிந்த பழக்கமான சமூகத்தைக் கையில் எடுத்துக் கொள்வதுதானே சரியாக இருக்கும்?அந்தச் சமூகத்தைப் பற்றித்தான் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் வாழ்க்கை, பேச்சு வழக்கு, நடை, உடை, பாவனை எனக்கு அத்துப்படியாக இருந்தது. 15 -20 ஆண்டுகள் அதிலேயே ஊறி வளர்ந்தவன். என்னுடைய கதையைச் சொல்லுவதற்கு அந்த சமூகத்தின் பழக்க வழக்கங்கள் எளிமையாக இருந்தன. அதுவுமில்லாமல் எனக்குத் தெரியாத இன்னொரு சமூகத்தைக் கையில் எடுத்து விமர்சிப்பதும் சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.அந்தக் கதையில் நான் என்ன சொல்ல விரும்பினேனோ அதை ஆணித்தரமாகச் சொன்னேன் என்பது எனக்குப் புரிந்தது. எனக்கு மட்டுமல்ல, அது யாருக்குப் புரிய வேண்டுமோ? அவர்களுக்கும் புரிந்தது. தமிழக அரசும் கூட குடும்பக் கட்டுப்பாட்டை இதைவிட அழுத்தமாக யாரும் சொல்லிவிடமுடியாது என்று பாராட்டி, கெüரவித்தது. 
 
உங்கள் திரைப்படங்கள் அனைத்துமே பிராமணர்களையும் அவர்களின் வாழ்க்கை நெறியையும் அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டதாகக் கூறப்படுகிறதே, அது உண்மைதானா?"அரங்கேற்றம்' படத்துக்குப் பிறகு "அவள் ஒரு தொடர்கதை', "அபூர்வ ராகங்கள்', "அவர்கள்' என என் படங்கள் அணிவகுத்தன. ஆனால் என்ன சொல்கிறார்கள் என்றால் நீங்கள் ஏன் பிராமண சமுதாயத்தை மட்டுமே வைத்துப் படம் எடுக்கிறீர்கள் என்றார்கள். நான் பிராமண சமுதாயத்தை வைத்து "அரங்கேற்றம்' என்கிற ஒரே ஒரு படம்தான் எடுத்தேன். நான் எடுத்தவை எல்லாமே நடுத்தர வர்க்கத்தை மையப்படுத்திய படங்கள்தான். ஆனால் பிராமண சமூகத்தை நடுத்தர வர்க்கத்துடனேயே அடையாளப்படுத்திப் பார்க்கிறார்கள். அதில் நியாயமே இல்லை. "அரங்கேற்றம்' தவிர வேறு எந்தப் படத்திலுமே ஜாதியைப் பற்றிச் சொன்னதே இல்லை."அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் ஒரு ஜாதிக் கலவரம் நடப்பதாகச் சொல்ல நேர்ந்தபோதுகூட அவர்கள் என்ன ஜாதி என்பதைச் சொல்லவே இல்லை. "எதிர் நீச்சல்' என்றால் உடனே அது பிராமணக் கதை என்று நினைக்கிறார்கள். அதில் ஒரு குடும்பம்தான் பிராமணக் குடும்பம். ஒரு நாயர் குடும்பம், ஒரு முஸ்லிம் குடும்பம் என்று எட்டுக் குடும்பங்களை அதில் காட்டினேன். பட்டுமாமி கேரக்டர் பேசப்பட்டதால் உடனே அது பிராமணக் கதை என்று நினைத்துவிடுகிறார்கள். அப்படியில்லை.
 
எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நாகேஷ், முத்துராமன், ஜெமினி, மேஜர் சுந்தர்ராஜன் போன்ற அடுத்தகட்ட நடிகர்களை வைத்தே படங்களை இயக்கினீர்கள். கதையின் பலத்தில் மட்டுமே மக்களைக் கவர வேண்டிய நெருக்கடி இருந்ததே?நெருக்கடி என்று சொல்ல முடியாது. அதை என் குறிக்கோளாக வைத்திருந்தேன். நாகேஷ் என் நண்பன். நானும் அவனும் ஒன்றாக வந்தோம். அவனைக் கதாநாயகனாக வைத்து சக்ஸஸ் செய்தவன் நான். ஒரு காமெடியனைக் கதாநாயகனாக வைத்து எந்தப் படமும் வெற்றி பெற்றதில்லை. என்.எஸ்.கே.வை கதாநாயகனாக வைத்து அண்ணா ஒரு படத்துக்கு கதை எழுதியிருக்கிறார். அந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை. அதன் பிறகு யாரும் அப்படி முயற்சி பண்ணதாகத் தெரியவில்லை. அப்படியிருந்தும் நாகேஷைக் கதாநாயகனாக்கினேன்.
 
நாகேஷைக் கதாநாயகனாக்க வேண்டும் என்பதற்காகவே "சர்வர் சுந்தரம்' கதை எடுக்கப்பட்டதா, இல்லை அது இயல்பாக அமைந்ததா?இயல்பாக வந்தது என்று சொல்ல முடியாது. நாகேஷை மனதில் வைத்துத்தான் "சர்வர் சுந்தரம்' நாடகம் எடுக்கப்பட்டது. அவருடைய உடல் அமைப்புக்கு... அவருடைய உடல் மொழிக்கு ஏற்ப சர்வர் பாத்திரத்தில் ஒரு கதையை உருவாக்கினேன். அதே போல ஜெமினி என்னை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டார். அவரை வைத்து படங்கள் எடுத்தேன்.
 
பெரிய நடிகர்களை வைத்துப் படங்கள் எடுப்பதில்லை என்று நீங்கள் தீர்மானித்திருந்தீர்களா? அப்படியெல்லாம் இல்லை. தேதி பிரச்னைகள் தராத நடிகர்களை வைத்துப் படம் எடுப்பதில் கவனமாக இருந்தேன். இந்தக் காட்சிக்குப் பத்து பேர் தேவை என்றால் நான் செட்டுக்குள் போகும்போது அந்தப் பத்துபேரும் இருக்க வேண்டும். இருக்கிற நடிகர்களை வைத்து காட்சிகளை எடுத்துக் கொள்ள எனக்கு முடியாது. இந்த நடிகரை இந்தப் பக்கம் நிற்க வைத்து படம் எடுத்துக் கொண்டு இன்னொரு நாள் இன்னொரு நடிகரை அந்தப் பக்கம் நிற்க வைத்து படம் எடுக்கிற சிந்தனைக்கெல்லாம் நான் போகவே இல்லை. இதற்கு சின்ன ஆர்ட்டிஸ்டுகளோ, புது முகங்களோதான் எனக்குச் சரியாக இருந்தார்கள். 
 
"புன்னகை' படம் தோல்வி அடைந்தது என்பதும், தாங்கள் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு சிகிச்சை எடுத்தீர்கள் என்பதும் தங்களைத் தளர வைத்திருக்க வேண்டும் அல்லவா?  ஆனால் நேர் மாறாக அதற்குப் பிறகுதான் நீங்கள் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி "ரிஸ்க்' எடுத்தீர்கள். அதற்கு ஏதாவது காரணம் உண்டா?ஹார்ட் அட்டாக்குக்குப் பிறகு நான் எடுத்த முடிவுகளில் ஒன்று புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது... "அவள் ஒரு தொடர்கதை' படத்துக்கு நடிகர்களை தேர்வு செய்த போது ஒரு படத்தில் தலை காட்டியிருந்தாலும் அவர்களைத் தவிர்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். அந்தப் படத்தில் ஒரே ஒரு விதிவிலக்கு கமல்ஹாசன். அந்த விகடகவி வேடத்துக்கு எனக்குச் சரியான ஆள் கிடைக்கவில்லை. அந்த வேடத்தை கமலைத் தவிர வேறு யார் செய்திருந்தாலும் சரியாக இருக்காது என்றும் தோன்றியது. யாரை நம்பி அந்த வேடத்தை நான் ஒப்படைக்க முடியும்? அதனால் அவரை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற எல்லாரையும் புதுமுகங்களாக தேர்வு செய்தேன்.அந்தப் படத்தில் நடித்த சுஜாதா, ஜெய்கணேஷ், ஸ்ரீப்ரியா எல்லாருமே பின்னாளில் பிரபலமானார்கள்.நான் தியேட்டரில் இருந்து வந்தவன். தியேட்டரில் ஒழுக்கம் முக்கியம். அதில் ரொம்ப கண்டிப்பாக இருப்பேன். அதனால் ஆரம்பித்திலிருந்தே எனக்கு செகர்யமான நடிகர்களை வைத்து படம் எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். 
 
போகப் போக அதைத் தளர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது வேறு விஷயம்.சொல்லப் போனால் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது ஸ்ரீதர் பாணி. அவர் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார். அதைத் தொடர்ந்து நானும் புதுமுகங்களைத் தேட ஆரம்பித்து, பாலசந்தர் படம் என்றால் புதுமுகங்கள் இருப்பார்கள் என்று பேசும் அளவுக்குப் போனது. பாலசந்தர் படம் என்று மக்கள் மனதில் ஒரு எதிர்பார்ப்புக்கும் அதுவே காரணமானது. இல்லையென்றால் சிவாஜி படம், எம்.ஜி.ஆர். படமாகத்தான் பேசியிருப்பார்கள்.புது முகங்கள் என்ற போது அவர்களுக்குச் சொல்லித் தர மிகவும் அவகாசம் இருந்தது. முழுமையாகத் தயார் செய்ய முடிந்தது. நூறு சதவீதம் அவர்களைத் தயார் செய்தேன். வெற்றியும் நூற்றுக்கு நூறாக அமைந்தது. அதனால்தான் "அவர்கள்' படத்தில் சுஜாதாவை அனுவாகவும் ரஜினியை ராமநாதனாகவும் மக்கள் இன்னமும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். 
 
சிவாஜியை வைத்து "எதிரொலி' படத்தை இயக்கினீர்கள். உங்களைத் திரையுலகில் அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கவில்லையே ஏன்?எம்.ஜி.ஆர். ஒரு இமயம். என்னோடு தோழமையோடு இருக்கிற கமல்ஹாசன், ரஜினிகாந்தை வைத்துக்கூட ஒரு கட்டத்துக்கு மேல் நான் படம் இயக்கவில்லை. ரஜினியைக்கூட எஸ்.பி.முத்துராமனையும் கே.எஸ். ரவிகுமாரையும் வைத்துத்தான் இயக்க வைத்தேன்.ரஜினியிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதை முத்துராமன் செய்வதுதான் சரியாக இருக்கும். என்னிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. நானும் ரஜினியும் சேர்ந்தால் அந்த எதிர்பார்ப்பு வேறு மாதிரி ஆகிவிடும். அது படத்தைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்."எதிரொலி'யைப் பொறுத்த வரை அந்தக் கதை சிவாஜிக்கு ரொம்ப பிடித்திருந்தது.
 
 திரைக்கதையை ரொம்ப ரசித்தார்.கதையில் சிவாஜிகணேசன் ஒரு தவறு செய்துவிடுகிறார். அதற்காக குற்ற உணர்வில் படம் முழுக்க தவிக்கிறார். மனசாட்சியால் கடைசி வரை தொல்லை பட்டுக் கொண்டே இருப்பார். அப்ப சிவாஜி பெரிய இமேஜ் உள்ள ஹீரோ. அவர் போய் தவறு பண்ணிட்டதாக காட்டினால் ஒத்துக் கொள்வார்களா? அவரைப் போய் தப்பு பண்ணிட்டதா காட்டிட்டாரேன்னு என்னைக் குற்றம்சாட்டினார்கள். படம் சரியா போகவில்லை. ஆனால் மிகவும் ரசித்து எடுத்த படம் அது. இப்போது பார்த்தாலும் ஆச்சர்யமாக இருக்கும். அதை ஒரு புதுமுகத்தை வைத்து எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்பது என் கணிப்பு. அப்படி எடுத்திருந்தால் அது பாலசந்தர் படமாகியிருக்கும். அது சிவாஜி படமாகிவிட்டது. அதிலிருந்து இமேஜ் ஒரு தடையாக அமைந்துவிட்டது. இமேஜ் இருக்கும் நடிகர்களை வைத்துப் படம் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துவிட்டேன். 
 
அதனால்தான் எம்.ஜி.ஆரை வைத்துப் படமே இயக்கவில்லையா?எம்.ஜி.ஆர். என்னுடைய இயக்கத்தில் ஒரு படம் எடுக்க விரும்பினார். ஆர்.எம். வீரப்பன் அது பற்றி பேசினார். அவர் கொடுத்த தேதியை நாம் மீறவே முடியாது. அவருக்கான பாடல்கள், காட்சிகள் எல்லாம் வேறு மாதிரி இருக்க வேண்டும். என் பாணி வேறாக இருந்தது. அதுவுமில்லாமல் நான் அப்போதுதான் நாடகத்தில் இருந்து வந்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தேன். இரண்டு, மூன்று படங்கள் கையில் இருந்தன. அவர் கொடுத்த தேதி எனக்குச் சரியாக வரவில்லை. நான் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து கையெடுத்துக் கும்பிட்டு அதைத் தவிர்த்துவிட்டேன். (சிரிக்கிறார்)
 
அவர் உங்களை வசனகர்த்தாவாக அறிமுகம் செய்தார். அவர் உங்களுக்கு அறிமுகம் ஆனது எப்படி?என் நாடகத்தைப் பார்த்துத்தான். என்னுடைய "சர்வர் சுந்தரம்', "நாணல்', "மெழுகுவர்த்தி' என என் எல்லா நாடகத்துக்கும் அவர் வந்திருக்கிறார். "மெழுகுவர்த்தி'யைப் படமாக்க வேண்டும் என்று உரிமை வாங்கினார். என்ன காரணத்தினாலோ அது நடக்காமல் போய்விட்டது. இந்தியில் ப்ரான் நடித்த ஒரு படத்தின் உரிமையை வாங்கி அதைத்தான் "தெய்வத்தாய்' என்று படமாக்கினார்கள். அதற்கு என்னைத் திரைக்கதை வசனம் எழுதுவதற்கு எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். அது குறித்து ஆர்.எம்.வீரப்பன்தான் என்னிடம் பேசினார்.
 
நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்களுக்கு நீங்கள் கதை தயாரிக்கவில்லை. ஆனால் நீங்கள் இயக்கிய படங்களின் மூலமாகவே நட்சத்திர அந்துஸ்துள்ள நடிகர்கள் உருவானார்கள். கமல், ரஜினி இருவரும் உங்கள் தயாரிப்புகள். அவர்களின் நட்சத்திர பலத்துக்கு ஏற்ப கதையை உருவாக்கும் சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டதா?ஒரு கட்டத்துக்கு மேல அவர்களுக்குப் பண்ணமுடியலைதான். அப்கோர்ஸ்.. கமல் எனக்கு பிரச்னை இல்லை. "தப்புத்தாளங்கள்' படத்தில் பார்த்தீர்கள் என்றால் ஒரே ஒரு காட்சியில் அவர் தாசி வீட்டுக்கு வந்துவிட்டுப் போவதுபோல ஒரு காட்சி. கமல் அதை மகிழ்ச்சியாக நடித்துக் கொடுத்தார். அந்த மாதிரி ஒரு காட்சியை ரஜினியை வைத்துப் பண்ண முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 
 
ஆக்க்ஷன் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருந்த ரஜினியை வைத்து "தில்லு முல்லு' என்ற காமெடி படத்தை எடுக்க முடிந்ததே?ஆமாம். ரஜினிக்கும்கூட அதில் நடிப்பதற்கு யோசனை இருந்தது. ""தைரியமா பண்ணுப்பா. நான் பாத்துக்கிறேன்'' என்று சொல்லித்தான் நடிக்க வைத்தேன். ரசித்து ரசித்துப் பண்ணிய படம். சந்தோஷமாக நடித்தார். அதற்கப்புறம்தான் அவர் படங்களில் முன்பகுதியில் காமெடியாகவும் பின் பாதியில் சீரியஸாகவும் இருப்பது மாதிரி ஒரு ட்ரெண்ட் உருவானது. அண்ணாமலை, முத்து எல்லாம் அந்த டைப் படங்கள்தான். காமெடியில் அவரை ரசிக்கிறார்கள் என்பது தெரிந்ததும் அது ஒரு பார்முலாவாகவே மாறிவிட்டது. 
 
வித்தியாசமான முயற்சியாக நீங்கள் எடுத்த புன்னகை, நான் அவனில்லை ஆகியவை பெரிய வரவேற்பைப் பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?நான் மிகவும் முன்னாடி செய்துவிட்ட படங்கள் அவை. மக்கள் தயாராவதற்கு முன்னால் வந்துவிட்டதுதான் அவை வரவேற்பைப் பெறமுடியாமல் போனதற்குக் காரணம். "நான் அவனில்லை' இப்போது ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுவிட்டது. இருந்தாலும் நான் அப்போது செய்த ஸ்கிரீன் ப்ளே இல்லை இது. அது வேறு. வெற்றி பெற்றுவிட்டது என்பது வரை சந்தோஷம்தான்.கல்கி எடுத்தேன். அதில் கணவனால் புறக்கணிக்கப் பட்ட பெண்ணுக்கு ஒரு புதுமைப் பெண் ஒருத்தி ஒரு முடிவெடுக்கிறாள். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் அன்புக்காக அவள் தன்னைத் தியாகம் செய்கிறாள். அந்தக் கணவனிடமிருந்து ஒரு குழந்தையைப் பெற்று புறக்கணிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணுக்கு அந்தக் குழந்தையைத் தருகிறாள். இப்போது எடுத்தால் அந்தப் படம் பிரமாதமாகப் போகும் என்பது என் நம்பிக்கை. அது ஒரு பதினைந்து வருஷத்துக்கு முன்னால் எடுத்துவிட்ட படம். ஒரு பெண் அப்படி செய்வாளா என்ற பதறினார்கள். சிலர் ஆவேசப்பட்டார்கள். இப்போது காலம் மாறியிருக்கிறது. பலருடைய சிந்தனைகளை மாற்றியிருக்கிறது. வாடகைத் தாய் என்றெல்லாம் இப்போது பேசுகிறார்கள்.   
ஸ்ரீதர், மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம்.. என உங்களுக்கு முன்னும் உங்கள் சமகாலத்திலும் பணியாற்றிய பல முக்கியமான இயக்குநர்கள் இருக்கிறார்கள். இதில் தமிழ் சினிமாவின் தரத்தை முன்னெடுத்துச் சென்ற படங்களாக நீங்கள் கருதுவது எவற்றை?ஒவ்வொருத்தருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. பாரதிராஜாவின் முதல் படமே பிரமிக்க வைத்த படம்தான். கிழக்குச் சீமையிலே எனக்கு மிகவும் பிடித்தபடம். மகேந்திரனின் உதிரிப்பூக்கள், மணிரத்னத்தின் இதயக்கோயில் எந்திரன் என நிறைய சொல்லலாம். 
 
கறுப்பு வெள்ளைப் படங்களில் இருந்து வண்ணப்படங்களுக்கு மாறிய முக்கியமான காலகட்டத்தைக் கடந்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு அந்த மாற்றம் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியதா? 
கறுப்பு வெள்ளையில் எடுத்ததுமாதிரி எமோஷனல் காட்சிகள் கலரில் வராது. வண்ணப் படங்களின் காலம் வந்த பின்பும் நான் கறுப்பு வெள்ளையில்தான் பிடிவாதமாக படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் அது பிளாக் அண்டு ஒயிட் காலம் என்று பேச ஆரம்பித்த பின்பு வேறு வழியில்லாமல் நானும் கலரில் எடுக்க ஆரம்பித்தேன். நான் முதலில் எடுத்த படம் நான்கு சுவர்கள். அது சரியாகப் போகவில்லை. நல்ல படம் அது. முதல் கலர் படம் என்பதால் கலர்படம்.. கலர் படம் என்று அதிலேயே நிறைய யோசனை செலவானது.
 
 சொல்லப் போனால் வண்ணத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினால் என்னையே நான் இழக்க வேண்டியதாக இருந்தது. இப்பவும் மறுபடி எடுக்கலாம். அப்படிப்பட்ட கதை அது. என்னால் என் சிந்தனையை அதில் முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போனது. வண்ணம் வந்த போது ஏற்பட்ட பாதிப்பு என்றால் இதுதான்.ஆனால் இப்போது மக்கள் கலரில் எடுக்கும் படங்களை விரும்பத் தொடங்கி நிறைய மாற்றங்கள் வந்தாகிவிட்டது. இனிமேல் மறுபடி கறுப்பு வெள்ளைக்குத் திரும்ப முடியாது. நூற்றுக்கு நூறு எடுத்துக் கொண்டால் அதில் கறுப்பு வெள்ளையிலேயே அத்தனை எமோஷனையும் காட்ட முடிந்தது. கலரில் எடுத்திருந்தால் என்ன செய்திருப்பேன்? அதில் இடம் பெறும் ஐந்து பெண்களுக்கும் ஐந்து பாடல் வைத்திருப்பேன். சிந்தனை அப்படித்தான் போயிருக்கும்.

மேடை நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர்... மூன்றிலும் சாதனை படைத்திருந்தாலும் உங்கள் படைப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் களமாக இதில் எதைக் கருதுகிறீர்கள்?நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர் மூன்றுமே மூன்று தனித்தனி கம்பார்ட்மெண்டுகள். நாடக பயிற்சி சினிமாவுக்கு பயன்படும். ஆனால் சினிமாவுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். எனக்கே அப்படி வேறு மீடியத்துக்கு மாறும்போது அவகாசம் தேவைப்பட்டது. நாடகத்தின் தாக்கம் என்னிடம் அதிகம் இருந்தது. நாடகம் என்றால் உயிரை விடுவேன். பத்து ஆண்டுகள் நாடகமே உலகம் என்று இருந்தேன். 
 
அதனால் அதிலிருந்து சினிமாவுக்கு என்னைத் தயார்படுத்திக் கொள்வதற்குள் ஐந்தாறு சினிமாக்களைக் கடந்துவிட்டேன். ஆரம்பத்தில் என்னுடைய நாடககங்களையேதான் நான் சினிமாவாக எடுத்தேன். அதனால் எந்த இடத்தில் கைதட்டல் விழும் எந்த இடத்தில் மக்கள் கண்கலங்குவார் என்பது தெரியும். அந்தந்த காட்சிகளை அப்படி அப்படியே வைத்தேன். சினிமாவை ஒத்திகைப் பார்த்துவிட்டு படம் எடுப்பதுமாதிரியான அனுபவம் அது. சினிமாவுக்காக சிந்திக்கும்போது அதை எதிர்பார்க்க முடியாது. அதுதான் வித்தியாசம்.
ஏ.ஜி.எஸ்.ஸில் பணியாற்றிய காலங்களிலேயே நாடகம் போட ஆரம்பித்தீர்கள் அல்லவா?1950-ல் ஏ.ஜி.எஸ்.ஸில் சேர்ந்தேன். 59-லிருந்து நாடகம் போட ஆரம்பித்தேன். 63, 64-ல் சினிமாவுக்கு வந்துவிட்டேன். ஏ.ஜி.எஸ்.ஸில் என்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த அனந்து என் நாடகங்களைப் பார்த்துவிட்டு என்னுடன் பழக ஆரம்பித்தார். சினிமாவிலும் அந்த நட்பும் பங்களிப்பும் தொடர ஆரம்பித்தது. 
 
வி.குமார், எம்.எஸ். விஸ்வநாதன்... பிறகு இளையராஜா... ஏ.ஆர்.ரஹ்மான் என உங்கள் படங்களில் இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களின் தனித்துவமான அடையாளம் என்று நீங்கள் உணர்ந்தது எதை? 
 
ஒவ்வொருத்தருமே இசை மேதைகள். அவர்களுக்குத் தீனிபோடுவது சாதாரண விஷயமில்லை. என்னுடைய படங்களில் மொத்த டூயட் என்று பார்த்தால் நான்கைந்து பாடல்கள்தான் இருக்கும். மற்றதெல்லாம் சிச்சுவேஷன் பாடல்கள்தான். எல்.ஆர். ஈஸ்வரி ஹைபிட்சில் பாடக்கூடியவர். அவரை காதோடுதான் நான் பாடுவேன் என்று பாட வைத்தது வி.குமார் இசையில்தான். அதே படத்தில் மென்மையான குரலில் பாடக்கூடிய பி.சுசிலாவை நான் சத்தம்போட்டுத்தான் பாடுவேன் என்று ஹை பிட்சில் பாடவைத்தோம். இசையில் அற்புதமான பல முயற்சிகளை நாங்கள் செய்தோம்.எம்.எஸ்.விஸ்வநாதனும் நானும் பணியாற்றிய படங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அத்தனைப் பாடல்களும் காலம்கடந்து நிற்பவை. எம்.எஸ்.வியும் கண்ணதாசனும் எனக்குக் கொடுத்த விதவிமான மெட்டுக்களுக்கும் பாடல்களுக்கும் கணக்கே இல்லை. அத்தனை அற்புதமான பாடல்கள். தெய்வம்தந்த வீடு வீதியிருக்கு..., காற்றுக்கென்ன வேலி.. கடலுக்கென்ன மூடி.. என்ன அற்புதமான பாடல்கள்..? 
 
அதுவரை எம்.எஸ். விஸ்வநாதனின் இசையமைப்பில் படங்களை இயக்கிய நீங்கள் பிறகு ஏன் திடீரென்று இளையராஜாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்தீர்கள்?"சிந்து பைரவி' படம் வொர்க் பண்ணும்போது இந்தப் படத்தை இளையராஜாவை வைத்து பண்ணப் போகிறேன் என்று எம்.எஸ்.வி.யிடம் சொன்னேன். படத்தில் கர்னாடிக்கோடு ஃபோக் சாங்கும் இருப்பதால் அதற்கு இளையராஜா பொருத்தமாக இருப்பார் என்று சொன்னேன். அவருடைய சம்மதத்தோடுதான் இளையராஜாவிடம் சென்றேன். ராஜாவுக்கு ரொம்ப சந்தோஷம். வைரமுத்துவின் வரிகளில் பாடறியேன் படிப்பறியேன் கிடைத்தது. எல்லாமே சிட்சுவேஷன்தான். குமாரிடம் பணியாற்றியபோதே எம்.எஸ்.வியிடம் போனேன். எம்.எஸ்.வியிடம் இருக்கும்போதே ராஜாவிடம் போனேன். அப்படித்தான் ரஹ்மானிடம் வந்தேன். அதற்கு எந்த விருப்பு வெறுப்பும் காரணமில்லை. கதையைச் செழுமைபடுத்த என்ன தேவையோ அதை நாடிப் போனேன். கதைதான் அதற்கு யார் தேவை என்பதைத் தீர்மானிக்கிறது. 
 
தெலுங்கில் மரோசரித்ரா, இந்தியில் ஏக் துஜே கேலியே போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தும் அந்த மொழிப் படங்களில் நீங்கள் தொடர்ந்து படங்கள் இயக்கவில்லேயே? 
ஒரு மனுஷன்தானே? எவ்வளவு பண்ண முடியும்? இத்தனைக்கும் தெலுங்கில் என்னை இயக்கும் கே.விஸ்வநாத்துக்கு நிகராகக் கொண்டாடினார்கள். இருந்தும் தமிழோடு நிறுத்திக் கொண்டேன். அதுவுமில்லாமல் பணம் சேர்க்கிற ஆசை என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. தமிழ் எனக்கு வசதியாக இருந்தது அதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். 
 
உங்கள் படங்களில் பல மொழியினரை நடிகர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் அவர்கள் எல்லோரும் சொந்தக் குரலில்தான் படத்தில் பேச வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தீர்கள். ரஜினி, சரிதா, பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் அவர்களின் உச்சரிப்புக்காகவே சிலாகிக்கப்பட்டார்கள். இப்போது நடிக்கும் நடிகைகள் பலருக்கும் டப்பிங் கலைஞர்களே குரல் கொடுக்கிறார்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 
 
பெரும்பாலும் என் படத்தில் அதைப் பிடிவாதமாகக் கடைபிடித்தேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்று நினைத்தவர்களுக்கு மட்டும் டப்பிங் வைத்துக் கொண்டேன். 
 
ரஜினி, கமலிடம் கண்டு வியந்த பல விஷயங்கள் இருக்கும். அவர்களின் குருவாக அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன? 
 
""நூற்றுக்கு நூறு'' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன். அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன். அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதைத்தான் நான் பார்க்கிறேன். 
 
தமிழ் சினிமா தொழில்நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. அந்த வளர்ச்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? 
 
ஆகாயத்தில் மூன்று குட்டிக்கர்ணம் அடிப்பதற்கும் திரையில் நூறு ரஜினியைக் காட்டுவதற்கும்தான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். அப்போதே யதார்த்தம் போய்விடுகிறது. கிராபிக்ஸைப் பயன்படுத்தி வியக்க வைப்பதற்கான கதைகள் வேறு. அவதார் மாதிரியான விஞ்ஞான புனைகதைகளுக்கும் மாயாஜால படங்களுக்கும் குழந்தைகளுக்கான அனிமேஷன்களுக்கும் அத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். யதார்த்த படங்களுக்குத் தேவையில்லை. யதார்த்த கதைகள் என்பவை கேமிரா சொல்லும் கதையாக இருக்க வேண்டுமே தவிர, கம்ப்யூட்டர் சொல்லும் கதையாக இருக்கக் கூடாது. நான் சொல்வதை இன்றைக்கு நிறைய பேர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 
 
அப்படியானால் நல்ல திரைப்படம் உருவாவதற்கு இந்தத் தொழில்நுட்பம் எல்லாம் தேவையில்லை என்கிறீர்களா? 
எடிட்டிங், கேமரா தொழில்நுட்பம் போன்ற வளர்ச்சிகள் காலத்தின் கட்டாயம். அவை நிச்சயம் தேவை. 
 
உலகத் தரமான சினிமா என்பது பற்றி பலரும் பேசுகிறார்கள். உங்கள் பார்வையில் உலக சினிமா என்றால் என்ன? 
உலக சினிமா எல்லாமே நல்ல சினிமா இல்லை. நல்ல சினிமாதான் உலக சினிமாவாக இருக்க முடியும். நுணுக்கமாகச் சொல்ல வேண்டியதை நுணுக்கமாகவும் விரிவாகச் சொல்ல வேண்டியதை விரிவாகவும் சொல்வதே நல்ல சினிமாவாக இருக்கமுடியும். ரேவும் அடூர் கோபாலகிருஷ்ணனும் எடுத்தவை உலகத்தரமானவை. ஆனால் அது எல்லோருக்கும் புரிந்து கொள்ள முடிகிற படமாக இருக்க வாய்ப்பில்லை.உலகத்தரம் வாய்ந்த ஜனரஞ்சக சினிமா என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. எல்லாவற்றையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. உலக சினிமா வேறு, சினிமா உலகம் வேறு என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.. அதுதான் என் கருத்தும். 
 
உங்கள் யூனிட் என்று சொல்லும் அளவுக்கு உங்களுக்கென கேமிராமேன், கதைவிவாதக் குழுவினர் செயல்பட்டனர். குறிப்பாக அனந்து உள்ளிட்டவர்களைப் பற்றி? 
 
வெவ்வேறு காலகட்டங்களில் பலர் பணியாற்றியிருக்கிறார்கள். முன்னரே சொன்னது மாதிரி இசையமைப்பாளர்கள், கவிஞர்கள்...ஒளிப்பதிவாளர்களில் லோகநாத் 55 படங்களுக்கு மேல் பணியாற்றினார். அதன் பிறகு அவருடைய அஸிஸ்டெண்ட் ரகுநாதரெட்டி 25 படங்களுக்குப் பணியாற்றினார். சீரியலுக்கும்கூட அவர்தான் செய்கிறார். எடிட்டிங்கில் பார்த்தால் ஆரம்பகாலத்தில் நடராஜ முதலியார் செய்தார். அதற்கப்புறம் என்.ஆர். கிட்டு... அவரால் முடிகிற வரை எனக்கு எடிட்டிங் செய்தார். அவர் என்னைத் தவிர வேறு யாருக்கும் பணியாற்றியதில்லை. அனந்து நாடக உலகத்திலிருந்தே உடன் இருந்தவர். ஆரம்பத்தில் 10-15 படம் தவிர என் எல்லா படத்திலும் இருந்தவர். வசந்த் எடுத்துக் கொண்டால் பதிமூன்று வருஷம் வொர்க் பண்ணியிருக்கிறார். சுரேஷ்கிருஷ்ணா ஒன்பது வருஷம்.. சரண் ஏழெட்டு வருஷம்.. இடையில் வந்துவிட்டுப் போனவர்கள் மிகவும் குறைவு. 
 
கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில் செயல்பட்டு வருகிறீர்கள். இந்திய அரசின் மிக உயர்ந்த திரைத்துறை சாதனையாளர் விருதான பால்கே விருது பெற்றிருக்கும்  இந்தச் சந்தர்ப்பத்தில் திரைத்துறையினருக்கு உங்கள் அறிவுரை? 
 
அறிவுரை எல்லாம் பெரிய வார்த்தை... ஒரே ஒரு விஷயம்தான்.. அர்ப்பணிப்புதான் முக்கியம். செட்டுக்கு வந்துவிட்டால் சினிமாவைத் தவிர எந்த சிந்தனையும் இருக்காது. அர்ப்பணிப்புதான் அடிப்படை.. அப்புறம் உழைப்பு.. அப்புறம் திறமை... திறமையில்லாம அர்ப்பணிப்பு மட்டும் இருந்து பிரயோஜனமில்லையே.. 

இயக்குனர் கே.பாலச்சந்தர் பிறந்தது தஞ்சாவூர் தாலுக்காவில் உள்ள நன்னிலம். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குநர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் என கலை உலகின் பலத்துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டியவர். வாழ்க்கைத் துணை ராஜம். மகன், கைலாசம். மகள் புஷ்பா கந்தசாமி.கே.பாலசந்தர் என்று அறியப்பட்ட கைலாசம் பாலசந்தர் பிறந்தது ஜூலை 9, 1930-ல். வீட்டுத் திண்ணையில் பள்ளிப்பருவத்திலேயே நாடகம் போட்டவர்.
 
 மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதினார். திரைத்துறையில் 1965-ம் ஆண்டு வெளியான "நீர்க்குமிழி' இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். நாகேஷ் இதில் கதாநாயகனகாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. "புன்னகை', "அவள் ஒரு தொடர்கதை', "அபூர்வ ராகங்கள்', "அவர்கள்', "புன்னகை மன்னன்', "எதிர் நீச்சல்', "வறுமையின் நிறம் சிகப்பு', "உன்னால் முடியும் தம்பி' முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சில.
 
 90- களுக்குப் பிறகு "கையளவு மனசு' போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.கவிதாலயா என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதன் மூலமாக பிற இயக்குநர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார். அவற்றில் "நெற்றிக்கண்', "ராகவேந்தரா', "சிவா', "ரோஜா', "முத்து' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
 
இவருக்கு 1987ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டுக்கான தாதாசாகெப் பால்கே விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இயக்குநர் ஸ்ரீதரைப் போலப் பல புதுமுகங்களை ஆர்வத்துடன் அறிமுகம் செய்தவர் பாலசந்தர். அவர்களுள் உலக அளவில் புகழ் அடைந்தவர் ரஜினிகாந்த். கமலஹாசனை கதாநாயகனாக்கியது பாலசந்தர் அல்ல எனினும், வரிசையாக அவருக்கு வாய்ப்புக்களை ஏணிப்படிகளாக அமைத்துக் கொடுத்தவர் பாலசந்தர்தான். ""அவள் ஒரு தொடர்கதை'' போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். 
 
படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இது ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. "பட்டினப்பிரவேசம்' திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் ஒரு வெற்றிப்படமே.மேலும், பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை) "ஷோபா (நிழல் நிஜமாகிறது)' சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோரைக் குறிப்பிடலாம்."வறுமையின் நிறம் சிகப்பு' திலீப், "நிழல் நிஜமாகிறது' அனுமந்து ஆகியோர் இவருடைய அறிமுகங்களே. 
 
மேஜர் சுந்தரராஜன் (மேஜர் சந்திரகாந்த்), எஸ். வி. சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு), மற்றும் மௌலி (நிழல் நிஜமாகிறது), ஒய். ஜி. மகேந்திரன் (நவக்கிரகம்), காத்தாடி இராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) ஆகியோர் நாடக மேடையில் இருந்து இவரால் திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். தமது இயக்கத்தில் பாலசந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர். நடிகையரில் செüகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
 
வெற்றி, தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் பாலசந்தர் அனுபவித்தது உண்டு. இவர் முதன் முதலில் இயக்கிய வண்ணப்படமான "நான்கு சுவர்கள்' தோல்வி அடைந்தது. அதே கால கட்டத்தில் அவரது "நூற்றுக்கு நூறு' வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டியது.அரசியல் களத்தைத் தொட்டுப் பார்த்த பாலசந்தரின் படங்கள் "தண்ணீர் தண்ணீர்', "அச்சமில்லை அச்சமில்லை'. "தண்ணீர் தண்ணீர்' கோமல் சுவாமிநாதனின் நாடகத்திலிருந்து உருவானது. கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலசந்தரின் "நினைத்தாலே இனிக்கும்'. பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவே.பாலசந்தரின் கைவண்ணத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் "மேஜர் சந்திரகாந்த்'. இவர் கறுப்பு வெள்ளையில் எடுத்த கடைசி படம் "நிழல் நிஜமாகிறது,
 
1969 முதல் பால்கே விருது மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியச் சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் பால்கே மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். 1913-ல் "ராஜா ஹரிசந்திரா' என்ற படத்தை முதன் முதலாக தயாரித்தார். 19 ஆண்டுகளில் 95 திரைப்படங்களைத் தயாரித்தவர். மெüனயுகம் முடியும்போதே இவருடைய சினிமா வாழ்வும் முடிவுக்கு வந்துவிட்டது. "சேது பந்தனம்' என்ற இவருடைய கடைசி மெüனப்படம் 1932-ல் வெளியானது.தமிழ் சினிமா பங்களிப்புக்காக இதுவரை நான்கு பேர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றிருக்கிறார்கள். எல்.வி. பிரசாத் (1982), நாகிரெட்டி (1986), சிவாஜிகணேசன் (1996), கே.பாலசந்தர் (2011).     
  
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)