பெங்காலி சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெங்காலி சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அபுர் பாஞ்சாலி [Apur Panchali ][2014] [பெங்காலி]


உலகின் தலைசிறந்த நூறு படங்களில் பதேர் பாஞ்சாலியும் அடக்கம்,உலகின் தலைசிறந்த மிகவும் கொண்டாடப்பட்ட சிறுவர் பாத்திரத்தின் முதன்மையானது அபு கதாபாத்திரம்.பெங்காலி சினிமாவின் சிறந்த இயக்குனரான கௌஷிக் கங்குலி, தன் மானசீக குருவான சத்யஜித்ரேவிற்கு இந்த அபுர் பாஞ்சாலி மூலம் பாதபூஜை செய்திருக்கிறார். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் குருவிற்கு காணிக்கையாக்கியிருக்கிறார்,

அபு ட்ரலஜியின் முதல் பாகமான பதேர் பாஞ்சாலி [1955],சினிமாவைக் கொண்டாடும் யாருக்குமே உயிரானது,அத்தனை நெருக்கமானது,அபு கதாபாத்திரத்தை உலகே கொண்டாடினாலும்,அதில் நடித்த சுதிர் பேனர்ஜியை 50 வருடங்களுக்கும் மேலாக யாருமே கண்டு கொள்ளவில்லை,அதில் இன்னுமொரு துயரம் என்னவென்றால்,அபு ட்ரலஜியில் இரண்டாம் பாகமான அபராஜிதாவில் வருவது போன்றே, இதிலும் சுதிர் பேனர்ஜியின் அப்பா பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக இருந்து மடிகிறார்,ஆசை ஆசையாக கைப்பிடித்த மனைவியும் அபுர் சன்சார் படத்தில் வருவது போல  குறைமாதத்தில் மனவளர்ச்சி குன்றிய ஆண் சிசுவை ஈன்றெடுத்தவர் நோய் வாய்ப்படுகிறார்.[படத்தில் அபுவின் மனைவி பிரசவத்தில் ஆண் சிசுவை பெற்றுத் தந்து விட்டு இறந்து விடுவார்],

பின்னர் வேலைக்காக ஊர் ஊராக அலைந்து திரிந்தும் அவரால் குமாஸ்தாவுக்கும்  மேலான எந்த ஒரு வேலையிலும் பிரகாசிக்கமுடியவில்லை,தான் மிகவும் நேசித்த கால்பந்தாட்டத்தையும் தொடரமுடிவதில்லை, தொடர் வறுமை சினிமாவை விட்டு நீண்ட தூரம் இவரைத் தள்ளி வைத்து விட்டது,இவருக்கு வயதானதைக் காரணம் காட்டி இவர் வேலையில் இருந்தும் கட்டாய ஓய்வு கொடுக்கப்படுகிறார். இது போல அபு ட்ரலஜி படங்களின் அபு கதாபாத்திரத்துக்கும் நிஜ பாத்திரத்துக்கும் ஆன நிறைய ஒற்றுமைகளால் மிகவும் மனம் நொந்தவர், சினிமா உலகின் தொடர் புறக்கணிப்பாலும், காலம் சென்ற மனைவியின் பிரிவுத்துயராலும் யாருடனும் பேசாமல் தனியே வாழுகிறார்.

இச்சூழ்நிலையில் தான் அபு கதாபாத்திரத்தையும் பதேர் பாஞ்சாலி திரைப்படத்தையும் மிகவும் கொண்டாடும் சத்யஜித்ரே திரைப்படக்கல்லூரி மாணவன் , இவரைத் தேடி வருகிறான், இவர் அவனிடம் முகம் கொடுத்து பேசாவிட்டாலும்,மனம் தளராதவன்,தினமும் தொடர்ந்து வந்து அவரின் அன்பை போராடி வெல்கிறான்,

அவன் கொண்டுவந்த கடிதம் ஜெர்மனி உலகசினிமா கவுன்சிலில் இருந்து வந்திருக்கிறது, உலகின் தலைசிறந்த குழந்தை நட்சத்திரங்களையும், குழந்தைகளை மிகச் சிறப்பாக சித்தரித்த சிறந்த திரைப்படங்களையும் கௌரவிக்க எண்ணிய அக்கவுன்சில் பைசைக்கிள் தீவ்ஸ் உள்ளிட்ட அனைத்துப் படங்களையும் பட்டியலிட்டு, அதில் முதன்மையாக பதேர் பாஞ்சாலியை வைக்கிறது, அதில் நடித்த சுதிர் பேனர்ஜிக்கு கடிதம் சத்யஜித் ரே திரைப்படக் கல்லூரி மூலம் கொடுத்து அனுப்புகிறது.

இனி மாணவனும் சுபீர் பேனர்ஜியும் எப்படி ? ஜெர்மனி சென்று விருது வாங்கி வந்தனர் என்பதை மிகுந்த நெகிழ்ச்சியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ, அபுர் சன்சார் படங்களின் பளிங்கு போன்ற காட்சிப் பிரதிகள் படத்தின் ஊடே வரும் சுதிர் பேனர்ஜியின் கடந்த கால வாழ்க்கைப் பிண்ணனியுடன் ஓப்பீட்டுக்காக காட்டப்படுகிறது, அவை அத்தனை அழகு,ரம்மியம்.

திர் பேனர்ஜியின் கடந்த கால வாழ்வைக் காட்ட கருப்பு வெள்ளையை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர், அதுவும் அத்தனை அழகு,பாந்தம் ,  தரம், படத்தில் இவர் சத்யஜித் ரேவைப் பற்றி குறிப்பிடுகையில் காக்காபாபு என்றே குறிப்பிடுகிறார், இவரை சினிமா உலகம் புறக்கணித்ததற்கு சமாதானப் படுத்த அந்த மாணவன் சொல்லும் உண்மைகள் உறைய வைக்கும்.சினிமாவில் மிகச்சிறப்பாக பங்காற்றிய நடிகர்களை சினிமா உலகம் மறந்து போவது ஒன்றும் புதிதல்ல.

சார்லி சாப்ளினின் த கிட் படத்தில் நடித்த சிறுவன்Jackie Coogan  அதன் பின்னர் எந்தப் படத்திலும் சோபிக்க முடியவில்லை,தன் ஐம்பதாம் வயதில் சில டிவி தொடர்களில் மட்டுமே அவரால் நடிக்க முடிந்தது.

E.T. the Extra-Terrestrial   படத்தில் நடித்த ஹென்ரி தாமஸ் தொடர்ந்து சில படங்கள் நடித்தும் தாக்குப் பிடிக்க அதிர்ஷ்டம் இல்லாததால் ஒரு கிடாரிஸ்ட் ஆக மாறிப்போனார்.

பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் நடித்த சிறுவன் Enzo Staiola கூட இரு படங்களுக்கு மேலாக சோபிக்க முடியவில்லை,அவர் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு கணக்கு ஆசிரியராக மாறிப்போனார்.

படம் பற்றி மேலும் விரிவாக எழுத வேண்டும், சத்யஜித் ரேவின் ரசிகர்கள், உலகசினிமா ரசிகர்கள் அவசியம் கொண்டாட வேண்டிய அழகியல் படைப்பு, இது 2014 ஆம் ஆண்டு சிறந்த இயக்குனருக்கான வெள்ளி மயில் விருதை வென்றது.

படத்தின் ட்ரெய்லரே மயிர் கூச்சரிய வைக்கும்,முயன்று பாருங்கள்

ஷூன்யோ ஆவ்ன்கோ:ஆக்ட் ஸீரோ [Shunyo Awnko: Act Zero][2013 ][பெங்காலி]


இயக்குனர் ன் ஷூன்யோ ஆவ்ன்கோ :ஆக்ட் ஸீரோ என்னும் பெங்காலி மொழிப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது, ஒரிஸ்ஸாவின் நியாம்கிரி மலையை இந்திய அரசும் [49% பங்கு] லண்டனைச் சேர்ந்த கனிமவள நிறுவனமான வேதாந்தாவும் [51%] ஏலம் போட்டு அதன் கனிம வளங்களை அசுர கதியில் சுரண்டிக் கொண்டிருப்பது நாமறிந்ததே,

அங்கே மலையை தெய்வமாக எண்ணி அதன் காடுகளையும் அருவிகளையும்,ஆறுகளையும் வாழ்வாதாரமாகக் கொண்டு  வாழும் Dongria பழங்குடி மக்கள் அனுதினம் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றியும், அவர்களின் அரிய வாழ்வாதாரங்கள், பண்பாடு, கலாச்சாரங்கள் அழிக்கப்படுவதைப் பற்றியும் இந்திய அரசு கவலைப் படுவதில்லை, வெறும் 3000 பழங்குடியினருக்காக அந்த மலையை கைகழுவி விட்டு போட்டது போட்டபடி வெளியேற அவர்களின் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள  பாக்ஸைட் வளக் கனவு விடுவதாயில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக வேதாந்தா நிறுவனமே இந்த மலையும் தொழிற்சாலையும் வேண்டாமென்று திரும்பிப் போனாலும் இந்திய அரசு அவர்களை விடுவதாக இல்லை, தவிர வேதாந்தா நிறுவனம் இதே போலவே ஆஃப்ரிக்காவின் ஏழை நாடான ஸாம்பியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் சுரங்கம் நிறுவி சுரண்டிக் கொண்டிருக்கும் பெரிய பன்னாட்டு நிறுவன முதலைகள் என்றால் மிகையில்லை.

இங்கே நியாம்கிரியில் நன்கு  காலூன்றிவிட்ட அவர்களை   இனி தூக்கி எறிவது என்பது முடியாத செயல்.தம் நியாம்கிரி மலையைக் காக்க அப்பாவி பழங்குடியினரும் தம் சொந்த அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை. அனுதினமும் இந்திய ராணுவத்தினருடன் துப்பாக்கிச் சண்டை, மாவோயிஸ்டுகளின் துணையுடன் அவர்களை எதிர்த்து கொரில்லா தாக்குதல், மாவோயிஸ்டுகள், பழங்குடியினர், இந்திய ராணுவத்தினர் என ஆயிரக்கணக்கில் உயிர்பலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மொத்தத்தில் தேன்கூட்டில் கல் எறிந்தது போலானதொரு நிலை.
 மாவோயிஸ்டு தீவீரவாதிகள் ஒருபுறம் ,பழங்குடி மக்களுக்கு யானையைச் செய்கிறேன் பூனையைச் செய்கிறேன் என ஆசை வார்த்தை மட்டும் காட்டும் வேதாந்தா கம்பெனி நிர்வாகம் மறுபுறம், இன்று நியாம்கிரியில் நடந்து கொண்டிருக்கும் வாழ்வியல் யதார்த்தங்களை  தெளிவாகப் பேசுகிறது இப்படம், இதே கதையை பிண்ணணியாகக் கொண்டு பாலிவுட்டில் Chakravyuh உள்ளிட்ட எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தாலும் அவற்றில் நிரம்பியிருக்கும் போலியான ஹீரோயிசமும், சினிமாத்தனமும், சென்டிமெண்டுகளும்  க்ளிஷேத்தனமும் இப்படத்தில் அறவே இல்லை, 
 
அது தான் இப்படத்தை உலக சினிமாவாக மாற்றும் காரணி, படத்தில் கார்பொரேட்டுகளின் ஆடம்பரமும், உல்லாசமான சொகுசு வாழ்க்கையும், அப்பாவி ஏழைப் பழங்குடியினரின் அன்றாட அல்லல்களுக்கிடையேயான இயல்பு வாழ்க்கையும் சரிபாதியாக பிரிக்கப்பட்டு நான் லீனியர் பாணியில் வெவ்வேறு ஆக்ட்களாக தொகுக்கப்பட்டுள்ளது, படத்தின் திரைக்கதையும், Goutam Ghose ன் ஒளிப்பதிவும் , Anupam Roy ன் இசையும் ஒருங்கிணைந்து மாயாஜாலத்தை நிகழ்த்துகின்றன என்றால் மிகையில்லை.
 
மிகவும் சிக்கலான ஒரு அரசு மற்றும் மக்கள் சார்ந்த முக்கிய பிரச்சனையை மிகவும் யதார்த்தமாக பிரதிபலிக்கும் ஒரு படைப்பு இப்படம். படத்தின் திரைக்கதை 6 ஆக்ட்களாக சொல்லப்படுகிறது 7ஆவதாக 0 ஆக்ட் படத்தின் முடிவாகச் சொல்லப்படுகிறது. படத்தின் வசனங்கள் அரசுக்கு எதிராக பழங்குடிகளும் சமூக ஆர்வலர்கள் எழுப்பும் யதார்த்தமான கேள்விகளால் நிரம்பியுள்ளது.அவற்றில் முக்கியமான இரண்டை இங்கே பகிர்கிறேன்,

1.இந்தியாவிலேயே இந்திய கனிம வள நிறுவனம் என்னும் பொதுத்துறை நிறுவனம் இருக்க 51 சதவிகித பங்குகளை வெளிநாட்டு நிறுவனமான வேதாந்தாவுக்கு தாரை வார்க்க என்ன காரணம்? இதற்கு நாங்கள் முறையாக டெண்டர் விட்டு தான் வேதாந்தா நிறுவனத்தை தேர்ந்தெடுத்தோம் என்று  கலெக்டர் சொல்லும் சப்பைக்கட்டை கேட்கும் போதே ஒருவருக்கு பற்றிக் கொண்டு வரும்.

2.சரி!!! நியாம் கிரி மலையில் மட்டும் தானா கனிம வளங்கள் உள்ளது?. ஏன் மும்பையின் உயர்குடி மக்கள் வசிக்கும் மலபார் ஹில்ஸ் பகுதியில் இல்லாத கனிம வளங்களா?!!!

தில்லியின்  உயர்குடி மக்கள் வசிக்கும் சாணக்யபுரியில் இல்லாத கனிம வளங்களா? கொல்கத்தாவின் உயர்குடி மக்கள் வசிக்கும் பகுதியான அலிப்பூரில் இல்லாத கனிம வளங்களா?!!! ஏன் அங்கே எல்லாம் மேட்டுக்குடி மக்கள் கனிம வளங்களுக்காக அரசால் வெளியேற்றப் படுவதில்லை?

ஏன் இந்தியாவில் அணை கட்டுவதாக இருந்தாலும்? தொழிற்ச்சாலைகள் அமைப்பதாக இருந்தாலும்? சுரங்கங்கள் தோண்டுவதாக இருந்தாலும், நெடுஞ்சாலைகள் அமைப்பதாக இருந்தாலும் களபலியாக பழங்குடிகளே குறி வைக்கப்படுகின்றனர்? இந்தியாவின் முன்னேற்றம், அந்நிய முதலீடு ஊக்குவிப்பு என்னும் போர்வையில் 100 வருடங்களுக்குப் பின்வரும் சந்ததிகளுக்கு எதுவுமே இல்லாத படிக்கு  நம் நாட்டின் கனிம வளங்கள் அசுர கதியில் சுரண்டப்படுவது ஏன்?!!!

இந்தியா சுதந்திரம் அடைந்த 67 வருடங்களில் இப்படி தங்கள் வாழ்வாதாரங்களை , உறைவிடங்களை விட்டு துரத்தியடிக்கப்பட்ட பழங்குடி மக்களின் எண்ணிக்கை 6 கோடி என்பது தெரியுமா?!!! அவர்கள் என்ன ஆனார்கள்? என்று எந்த அரசுக்காவது அக்கறை இருக்கிறதா? போன்ற கேள்விக் கணைகள்,புத்திசாலித்தனமான பெண் பத்திரிக்கையாளர் ஒருவரால் முன்வைக்கப்படுகிறது, அதற்கு அந்த கனிம நிறுவன உயர் அதிகாரியால் எந்த பதிலுமே சொல்ல முடிவதில்லை,

அந்த ராக்கா என்னும் பெண் பத்திரிக்கை செய்தியாளராக நம் கொங்கனா சென்  நடித்திருக்கிறார் ,அந்த வேதாந்தா கனிம வள நிறுவன உயர் அதிகாரி அக்னி போஸாக நடித்திருக்கிறார். அவரின் தனிமையில் உழலும் குடிக்கு அடிமையான மனைவி ஜில்லிக் என்னும் கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரின் கணவர் ஓயாமல் பயணங்கள் மேற்கொள்ள, இவர் தனிமைக்கு இரையாகிறார், இவர் திரைமேதை ஃபெலினி, மற்றும் ரபீந்த்ரநாத் தாகூரின் கவிதைகளுக்கு தீவிர ரசிகையாகவும் இருக்கிறார், தன் கணவனைப் போலவே தானும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்னும் லட்சியம் கொண்டிருக்கிறார்.விரைவில் ஒரு ஏர்ஹோஸ்டஸ் பயிற்சிப் பள்ளியை தன் முன் அனுபவத்திலிருந்து துவங்க ஆசை கொண்டிருப்பவர்.

இவர்களின் மணவாழ்க்கையில் எழும் ஊடல்களைக் களைவதற்கு மனாலி  சென்று ஒரு உயர்தர கெஸ்ட் ஹோமில் தங்கி, 2வார விடுமுறையை 2ஆம் தேன்னிலவு போல உல்லாசமாகக் கழிக்கின்றனர். அங்கே அந்த கெஸ்ட் ஹோமை நிர்வகிக்கும் இஸ்லாமிய தம்பதிகளாக முதிய விஞ்ஞானி  கபீர் சவுத்ரி  வேடத்தில் , நடித்திருக்கிறார்,இவர் தன் முதுமையால் சக்கர நாற்காலியில் விழுந்து விட்டிருந்தாலும், கம்ப்யூட்டரில் அப்டேட்டாக இருக்கிறார், ஹேக்கிங் மென்பொருள் ஒன்றை கண்டு பிடித்து அதை மேம்படுத்தியும் வருகிறார்.

அவரது மிகுந்த ஆச்சாரமான மனைவி லைலா கதாபாத்திரத்தில் Lolita Chatterji  நடித்துள்ளார். இவர்கள் நடத்தும் கெஸ்ட் ஹோம் மிகவும் புதுமையானது, இவர்களின் மகன் டாரா பிபிசி பத்திரிக்கை செய்தியாளன், காஷ்மீரில் நிலவி வரும் ராணுவ நடவடிக்கையால் 5 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனவன்.தன் மகன் முஸ்லிம் என்பதால் போலியாக இந்திய ராணுவத்தால் என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கலாம் என லைலா உறுதியாக நம்புகிறார்,பல சமயம் அவருக்கு இதனாலேயே ஹிஸ்டீரியா போன்று வருகிறது, அவ்வேளைகளில் மாற்று மதத்தாரை, அவரது நம்பிக்கைகளை துவேஷிக்கிறார் .  அதோ தரையெல்லாம் என் மகனின் ரத்தம் என பதறுகிறார்,

 வேலைக்காரியிடம் சொல்லி தரையில் நீர் ஊற்றச் செய்து தரையை  தானே தேய்த்துத் துடைக்கிறார். ஆனால் மறுநாள் அவர் நேற்று நடந்த அமர்க்களங்களை சுத்தமாக மறந்து இயல்பான நிலைக்கு திரும்பி விடுகிறார், வந்திருக்கும் விருந்தினருக்கு ராயல் குசின் உணவு வகைகளை சமைத்துப் பறிமாறுகிறாள்.

இவர்களைத் தவிர முக்கிய கதாபாத்திரமாக பெரும்பாலான பழங்குடிகள் பற்றிய சித்தரிப்புகள் வரும் திரைப்படங்களில் டாக்டராக தோன்றும் இதிலும் நியாம்கிரி பழங்குடி மக்களுக்கு சிகிச்சையளிக்கும்   ப்ரபோல் ராய் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இப்போது வெளியான நீலாகாஷம் பச்சக்கடல் சுவர்ண பூமி என்னும் படத்திலும் பழங்குடிகளுக்கு உதவும் நல்ல மனம் கொண்ட டாக்டர் வேடம் பூண்டிருந்தார். படம் பார்க்கும் பார்வையாளர் மனதில் பதிந்து விடுவார்.

அவசியம் படத்தைப் பாருங்கள்,  நம் இந்தியாவில் இருக்கும்  இயற்கையின் சொர்க்கபுரியான மனாலியின் எழில் கொஞ்சும் அழகையும் மக்களின் வாழ்வியலையும்,ஒரிஸ்ஸாவின் நியாம்கிரி மலையயும்,அதன் இயற்கை அழகினையும்,மாந்தர்களையும்,கொல்கத்தா நகர சூழலையும் வாழ்வியலையும், இயக்குனர் மிக அருமையாக படமாக்கியிருக்கிறார். படத்தை மேலே சொன்ன முக்கியமான 6 கதாபாத்திரங்களால் செதுக்கியிருக்கிறார் .

உலக சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத ஒரு படம், பொதுவாக பெங்காலி திரைப்படங்கள் போஸ்டரில் ஆங்கிலப் பெயரைக் கொண்டிருக்காது, அதே போல  பல நல்ல திரைப்படங்கள் கூட ஆங்கில சப்டைட்டில்களை கொண்டிருக்காது, அவ்வளவும் மொழிப்பற்றினால் தான்,அந்நிய விருதுகளை ஒரு பொருட்டாக கருதாத இன மானத்தினால் தான்  . இந்தப் படம் ஒரு காம்போஸிட் லிங்குஸ்டிக் படம், ஒரு சேர பெங்காலி, ஹிந்தி, உருது, ஆங்கிலம் என கதாபாத்திரங்களால் பேசப்படுகிறது, அதிர்ஷ்டவசமாக இதற்கு ஆங்கில சப்டைட்டில் கிடைத்தது.படம் அவசியம் பாருங்கள்.

இதன் ஆங்கில சப் டைட்டில் தரவிறக்க:-
http://www.subtitleseeker.com/2961236/Shunyo+Awnko%3A+Act+Zero/Subtitles/English/
படம் தரவிறக்க:-
https://torrentz.eu/8e73cc466f0489cd1d177b19ad4ff5b920a3d7f5

படத்தின் ட்ரெய்லர் யூட்யூபிலிருந்து

அகோன்டுக் [আগন্তুক ] [Agantuk AKA The Stranger][1991][பெங்காலி]


அகோன்டுக் 1991ஆம் ஆண்டு வெளியான படம்,இது சத்யஜித்ரேவின் கடைசிப் படம், ரே முதுமையாலும், நோய்வாய்ப்பட்டு தளர்வுற்றிருந்தபடியாலும் , இதன் பெரும்பான்மையான காட்சிகள் வீட்டுக்குள்ளேயே படமாக்கப்பட்டன  , வழக்கம் போல ரேவின் சினிமாவுக்கே உரிய அழகியலை ஒருவர் இதிலும் நன்கு உணர முடியும், மிஷ்கின் படங்களில் நாம் கால்களுக்கு மட்டும் முக்கியம் தந்து படமாக்கப்பட்ட ஷாட்களை பார்ப்போம், அந்த கால்களுக்கு முக்கியம் தந்து ஷாட் வைக்கும் நேர்த்தியை ரே தன் படங்களில் 90 களிலெயே மிக அருமையாக கையாண்டுள்ளார். அத்தனை சிறந்த எக்ஸ்பெரிமெண்டலிஸ்ட் ரே.

இதில் மன்மோகன் மித்ரா [உத்பல் தத்] மற்றும் அவர் வீட்டார் பேசும்  நீண்ட வரவேற்பறை உரையாடல்கள் மூலம் சத்யஜித் ரேவுக்குள் இருக்கும் சமூகம், மதம், ஜாதி, கடவுள், ஒழுக்கம், நாகரீகம் போன்றவற்றின் மீதான விஷய ஞானம் பார்வையாளருக்கு பிடிபடும், அவை கதையின் போக்கினூடே வரும், உரையாடல்களின் நுட்பத்தால் அவை பார்வையாளரை வசீகரிக்கும், உலக ஞானம் ஒரு சமுத்திரம் போன்றது ,அதை  சினிமாவுக்குள் சற்றும் மேதாவித்தனமோ திணித்தலுமோ இன்றி நுழைப்பது என ரேவிடம் ஒரு இயக்குனர் படிக்க வேண்டும்.

இப்படத்தை ரே தான் எழுதிய அதிதி என்னும் சிறுகதையில் இருந்தே படமாக்கியுள்ளார், படத்தில் இய்றகையான ஒளி அமைப்புடன்  எடுக்கப்பட்ட காட்சிகள், பார்வையாளர்களை கதையின் போக்கில் ஒன்றச்செய்து விடுகிறது. வழக்கமான ரேவின் படங்களைப் போலவே கொல்கத்தா தான் இதற்கும் கதைக்களம், தற்காலத்தில் ஒரு மேல்தட்டு குடுமபத்தில் நடக்கும் கதை, அனிலா  போஸ் [மமதா ஷங்கர்] 33 வயது குடும்பத்தலைவி, கணவன் சுதீந்த்ரா பன்னாட்டு கம்பெனியில் உயர் அதிகாரி, செழிப்பான குடும்பம், மிகுந்த ஜாக்கிரதை உணர்வும் லட்சியமும் உடையவர் சுதீந்த்ரா போஸ்     [திபாங்கர் டே],  ஒரே மகன் சாட்யாஜி , சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழும் இவர்களுக்கு ஒரு இன்லேண்ட் லெட்டர் வருகிறது,20 வருடங்களுக்கு முன்னர் நம் குடும்பங்களுக்கு வாரம் தவறாமல் வரும் இன்லேண்ட் லெட்டரை மறக்க முடியுமா?!!!

 அனிலாவுக்கு 35 வருடங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய அவளின் தாய் மாமா மன்மோஹன் மித்ரா கடிதம் எழுதியிருக்கிறார்,இவர்கள் அறியாத ஒரு குடும்ப நண்பர் மூலம்  இவர்களின் விலாசம் கிடைத்தது என்கிறார். அதில் இத்தனை நாள் அறிவுத்தேடல்,உலகம் சுற்றல்,பணிகள் என இருந்து விட்டேன், என் பெற்றோர் இறுதிக்கடன் செய்ய கூட அங்கே வரமுடியவில்லை, உறவுகளின் தொடர்பை முற்றிலும் விலக்கியிருந்த நான் இப்போது என் ஒரே சொந்தமான உன்னைப் பார்க்க வருகிறேன், நான் ஆஸ்திரேலிய கண்டத்தை சுற்றிப்பார்க்க புறப்படும் முன்னர் , உன் வீட்டில் ஒரு வாரம் தங்கப் போகிறேன், இந்த அவசர யுகத்தில் யார் வீட்டுக்குள்ளும் விருந்தாளியாக நுழைந்து தங்குவது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாதது என அறிவேன்,

மன்மோகன் பேரனிடம் சொல்லும் மேஜிக் என்னும் வாக்கியம்
என்னை நீ பார்த்த நினைவு உனக்கிருக்காது,உன்னை நான் பார்த்த நினைவு எனக்கிருக்காது, இது ஒரு வகையில் உனக்கு ஒரு தண்டனை தான், நான் போலியான மாமாவா?, உண்மையான மாமாவா? என உன் கணிப்புக்கே விட்டு விடுகிறேன், நீ என்னை ஏற்றாலும் மகிழ்ச்சி, என்னை ஏற்காவிட்டாலும் மகிழ்ச்சியே, அன்பு ஆசிகள்-மன்மோஹன் மித்ரா என முடிகிறது கடிதம். கடிதம் அருமையான தூய பெங்காலி எழுத்து நடையில் பிழையேயின்றி இருக்கிறது, இது சுதீந்த்ராவுக்கு சந்தேகத்தை இன்னும் கிளப்புகிறது, அனிலாவுக்கு கணவரை மீறி ஒன்றும் செய்ய முடியாது, இருந்தும் 35 வருட தாய் மாமன் உறவையும் சந்தேகிக்க முடியாது,

தன் கணவர் அவரை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதையும்,அவர் அதனால் அவமானப்படுவதையும் சகிக்க முடியாது,மகன் சாட்யாவுக்கு என உயிரோடு இருக்கும் ஒரே தாத்தா அவர் மட்டுமே, வருவது உண்மையானவர் என்று எப்படி உறுதியாக நம்ப முடியும்? யாரிடம் உறுதி செய்து கொள்வது? இவை எல்லாம் சேர்ந்து அனிலாவை அச்சுறுத்துகிறது, கணவர் சுதீந்திரா முதலில் தனக்கு இவர் வருகையில் உடன்பாடு இல்லை என்றவர் ,மனைவியின் பச்சாதாபத்துக்கு உரிய தோற்றத்தினாலும், அவரை சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்தினாலும், அவரின் வருகைக்கு சம்மதிக்கிறார், மாமாவின் வருகைக்கு வீடே தயாராகிறது.

ரே இப்போது ராஜ்தானி எக்ஸ்பிரஸ்ஸில்,ஒட்டப்பட்ட பயணிகள் பட்டியலில் மிக அருகாமையில் காட்டுகிறார், அதில் டைப் செய்யப்பட்ட மன்மோகன் மித்ரா என்னும் பெயர் கன்ஃபர்ம்ட் என்றிருக்கிறது, இப்போது மன்மோகன் மித்ரா படிக்கும் நாளிதழை மட்டும் நாம் பார்க்கிறோம்,பின்னர் அவருக்கு இரவு உணவு வருவதையும்,இரு கைகள் அவற்றை திறப்பதையும் பார்க்கிறோம், ரயில் கொல்கத்தா வந்தடைகிறது, இப்போது போர்டரின் கால்களையும், மன்மோகன் மித்ராவின் கால்களுக்கும் மட்டுமே க்ளோஸ் அப், நாம் தன் இலக்கை நோக்கி நடைபோடும் பூட்சு கால்களை மட்டுமே பார்க்கிறோம், டாக்ஸியில் மீட்டர் விழுகிறது,
இங்கே வீட்டில் குறித்த நேரத்தில் அனிலா தன் மகனை வாசலில் நிறுத்தி தாத்தா வந்தவுடன் குரல் கொடுக்க சொல்கிறாள் ,தன் கணவனின் ஆலோசனைக்கேற்ப வீட்டு வரவேற்பறையில் இருந்த பஞ்சலோக சிலைகளையும், யானை தந்தத்தால் செய்த பொம்மைகளையும் எடுத்து பீரோவில் வைத்து பூட்டுகிறாள், ஆனாலும் அதை அரைமனதுடனே செய்கிறாள்,  இப்போது டாக்ஸியில் இருந்து இறங்கிய மன்மோகன் மித்ராவை நாம் முழுதுமாய் பார்க்கிறோம், [இதில் மன்மோகன் மித்ராவாக தோன்றிய உத்பல் தத், ஹிந்தி மற்றும் பெங்காலி சினிமாவின் சிறந்த அண்டர்ரேட்டட் நடிகர், மிகச்சிறந்த நாடகக் கலைஞரும் கூட, இவரின் கோல்மால் ஹிந்திப் படத்தின் பவானி சங்கர் என்னும் முதலாளி கதாபாத்திரத்தை தான் தில்லுமுல்லு படத்தில் ஸ்ரீராமச் சந்திரமூர்த்தியாக தேங்காய் சீனிவாசன் செய்திருப்பார்.]

அனிலா மாமாவிடம் ஆசி வாங்கினாலும் அவரை மாமா என அழைக்க நா எழவில்லை, சாட்யாவும் தயக்கத்தின் மீதத்தினால் தாத்தா என அழைப்பதில்லை, இதை மன்மோகன் மித்ரா நன்கு உணர்ந்து கொள்கிறார், தான் பதில் கடிதம் எதிர்பார்த்ததாகவும், வராததால் இங்கே கிளம்பி வந்து விட்டதாகவும், இவளின் பதில் எதுவாக இருந்தாலும் ஏற்று தங்குவது, புறப்படுவதை முடிவு செய்து கொள்ள முடியும் என்கிறார், அனிலா அவரை அதற்கு அவசியமே இல்லை நீங்கள் இங்கே விருப்பம் போல தங்கலாம் என்கிறாள், மன்மோகன் மித்ரா அவளுக்கு தன் பாட்டி சொன்ன ஸ்ரீ கிருஷ்ணரின் 108 நாமாவளியில் இருந்து 4 வரியை பாடிக்காட்ட அவளுக்கு மிகுந்த நம்பிக்கை வந்து விடுகிறது,

மாமாவை மாடியில் இருக்கும் தன் காலம் சென்ற மாமனாரின் அறையில் தங்க வைக்கிறாள், குளித்து விட்டு வந்தவருக்கு அறுசுவை விருந்தை பறிமாறுகிறாள். தான் கல்கத்தா உணவு சாப்பிட்டு 35 வருடம் ஆகிறதை சொல்கிறார் மாமா, அவருக்கு தாயின் கையால் உண்ட உணவு நினைவுக்கு வருகிறது, பேரன் சாட்யா  தாத்தாவிடம் பிரியத்துடன் ஒட்டிக்கொள்கிறான், தன் நண்பர்களுக்கும் அவரை பின்னால் இருக்கும் தோட்டத்தில் வைத்து அறிமுகம் செய்கிறான்,அவர் அவனுக்கு தான் வைத்திருந்த வெளிநாட்டு காசுகளை அது எந்த நாட்டைச் சேர்ந்தது,அதன் பெயர் என்ன என விளக்கித் தருகிறார்.சாட்யா நாணயம் சேமிப்பவர்களை Numismatics என்பார்கள் என  விஷய ஞானத்துடன் சொன்னதைக் கேட்டு வியக்கிறார்,

அனிலா,மன்மோகன் மித்ரா,சாட்யா உணவு மேஜையில்
அவனுக்கும் அனிலாவுக்கும் தன் பயணத்தைப் பற்றி நிறைய சொல்கிறார், அனிலா அவரிடம் நீங்கள் ஏன் வீட்டை விட்டு வெளியேறினீர்கள்? எனக் கேட்க, அவர் அதற்கு இரண்டு விஷயங்கள் உந்துதலாக இருந்தன, தான் கற்ற ஜெர்மானிய மொழியில் இருக்கும் wanderlust[அலைந்து திரிபவன்] என்னும் சொல்லும், தான் பிஏ படிக்கையில் கண்ட நாளிதழில் வெளியான ஒரு ஆதிவாசி வரைந்த காட்டெருமையின் குகை ஓவியமுமே தன் வாழ்வின் லட்சியம்,  ஊர் சுற்றுதல் என்று இலக்கு நிர்ணயிக்க வைத்ததாக சொல்கிறார்,அதை முன்னிட்டு லண்டன் சென்றவர், அங்கேயிருந்து அமெரிக்கா, மற்றும் அனைத்து ஐரொப்பிய நாடுகள்,மற்றும் தான் படித்த இளங்கலை ஆந்த்ரோபோலஜி பட்டப்படிப்பு, அதன் பின்னர் ஐநாவில் ஆந்த்ரோபோலஜிஸ்டாக வேலை, அதன் பின்னர் சுமார் 41 பழங்குடிகள் நாகரீகங்களை தான் அவர்களின் இனத்தோடு இனமாக தங்கி ஆராய்ந்தது எல்லாவற்றையும் சுவை படச் சொல்கிறார்.

இதன் மூலம் மாமா தேசாபிமானம், பாஷாபிமானம்,மத அபிமானம்,ஜாதி அபிமானம், கடவுள் அபிமானம் விட்டவராக திகழ்வதை அனிலா அறிகிறாள், அவர் குடும்பத்தில் இத்தகைய மேலான நற்குணங்களுடன் உயிரோடு இருக்கும் ஒரே நபரான மாமாவை மிகவும் மதிக்கிறாள்,பேரனுக்கும் அவரை மிகவும் பிடித்துப் போகிறது, இப்போது அனிலாவின் கணவர் அலுவலகத்தில் இருந்து அழைக்கிறார், மாமா வந்ததை அறிந்தவர்,அவரிடம் பாஸ்போர்டை வாங்கி சோதித்துப் பார்க்கச் சொல்கிறார்,அனிலா மறுக்கிறாள்,வந்திருப்பது தன் மாமாவே தான் என்னும் நம்பிக்கை தனக்கு இருப்பதாக உறுதியாக கூறுகிறாள். அப்படி உங்களுக்கு வேண்டுமானால் அவரை சோதனை செய்து கொள்ளுங்கள் என்கிறாள்.

மாலை வேலை முடிந்ததும், சுதீந்த்ரா வருகிறார், மனைவின் வேண்டுகோளுக்கிணங்க மாமாவிடம் ஆசி பெற குனிந்தவரை மாமா தடுத்தவர் ,என் மேல் முழு நம்பிக்கை ஏற்பட்டவுடன் ஆசி வாங்குவதே நல்லது என்கிறார், மருமகனின் முகத்தில் சந்தேகம் குடிகொண்டிருப்பதை கண்டவர், தன் பாஸ்போர்டை எடுத்து அவரிடம் தந்து படிக்கச் சொல்லுகிறார். அதை படித்த சுதீர்ந்திரா அவரை மாமா தான் என நம்பிய அதே வேளையில் இடியாக ஒன்றைச் சொல்கிறார். இப்போது போலி பாஸ்போர்ட் தயாரிப்பதும் பெறுவதும் ஒன்றும் கடினமில்லை, யார் வேண்டுமானாலும் போலி பாஸ்போர்டை காட்டி தான் இன்னார் என சொல்லக்கூடும், உண்மையான நபரை புரிந்து கொள்ள சற்று காலம் ஆகும், இப்போது சொல், நான் என் பெட்டியைக் கூட திறந்து வெளியே எதையும் அடுக்கவில்லை, உன் சொல்லுக்காகத்தான் காத்திருக்கிறேன், இப்படியே கிளம்பிவிடுகிறேன், என்கிறார்,

சுதீந்திரா,அதெல்லாம் தேவையே இல்லை,என மழுப்பி கீழே மனைவியிடம் வருகிறார்.தனக்கு மாமாவை இன்னார் என கண்டுபிடிப்பதில் குழப்பம் இருப்பதாகவும், அதனால் தன் நண்பனும் நகைச்சுவை நடிகனுமாகிய சந்தாவையும் அவரின் மனைவியையும் மாமாவைப் பற்றிய உண்மைகளை வெளிக் கொணர வீட்டுக்கு அழையா விருந்தாளிகள் போல வரவழைக்கப் போகிறேன் என்கிறார்,மாலையில் அவர்கள் வந்ததும் மாமா தன் பயணம் பற்றியும் உலக அறிவு,சமூக சிந்தனை, தத்துவ விசாரங்கள் பற்றியும் மிக நுட்பமாக உரையாடுகிறார், கடைசியாக தன்  புத்திகூர்மையால் வந்திருப்பவர்கள்  எதேச்சையாக இங்கே வரவில்லை, சுதீந்திராவால் ஆழம் பார்க்க வரவழைக்கபட்டதை அறிகிறார். மனம் நோகிறார். அங்கே அனைவரும் மாமாவிடம் மன்னிப்பும் கேட்க அன்று சுமூகமாக இரவு உணவு அருந்துகின்றனர்.

மறுநாளே அனிலா முந்தைய நாள் ஒளித்து வைத்த பஞ்சலோக சிலைகளையும், தந்த சிலைகளையும் வரவேற்பறையில் திரும்ப பார்வைக்கு வைக்கிறாள், அவற்றை பார்வையிட்ட மன்மோகன்,நேற்று இவற்றை நான் பார்க்கவில்லையே என்கிறார், அனிலா அவை வேறொரு அறையில் இருந்தன,இன்று இடம் மாற்றியிருக்கிறேன் என சமாளிக்கிறாள். சந்தேகம் மறைந்து உறவு துளிர்விடும் அற்புதமான கட்டம் அது, ரே அதை மிக அருமையாக காட்சிப்படுத்தியிருப்பார். அன்று இரவு அனிலா அகதா க்ரிஸ்டியின் ஒரு க்ரைம் நாவல் ஒன்றை தூக்கம் வரும் வரை படிக்கிறாள், திடீரென அவளுக்கு பொறி தட்டுகிறது, இவரின் தாத்தா [அம்மாவின் அப்பா] சாகும் முன்னர் சொத்தை பாகம் பிரித்து உயில் எழுதியது அவளுக்கு நினைவிருக்கிறது,அதில் இவரின் மறைந்த மூத்த மாமாவுக்கும், அம்மாவுக்கும் பாகம் வந்ததும் நினைவிருக்கிறது,தாத்தா தன் இளைய மகன் மீது வைத்த  அளவு கடந்த பாசத்தை வீட்டார் சொல்லி அதுவும் நன்கு நினைவிருக்கிறது, அப்படியென்றால் இங்கே வந்திருக்கும் மாமா அன்று பிரிக்கப்பட்ட சொத்தில் தன் பாகத்தை வாங்கத்தான் இங்கே வந்திருக்கிறாரா? அந்த சொத்தில் மாமாவுக்கு பங்குண்டா?

அந்த சொத்தை நிர்வகித்த வக்கில் யார்? அதற்கு எக்ஸிக்யூட்டர் யார்?என பல குழப்பங்கள் ஒரு சேரக் கிளம்புகின்றன,கணவரிடம் இதைப் பகிர,அவருக்கு வந்திருப்பவர் போலியா, அல்லது நிஜமானவரா?என அறிய வேண்டிய கட்டாயத்துடன், மேற்கண்ட கேள்விகளும் சேர்ந்து கொள்கின்றன.உடனே டெலிபோன் டைரக்டரியில் இருந்து வக்கீலின் எண்ணை எடுத்தவர்,அவருக்கு அந்த அகால நேரத்தில் அழைக்கிறார், அவர் உயிருடன் இருப்பதையும் வீட்டார் மூலம் அறிகிறார் . மறு நாளே அவரைப் பார்க்க வர நேரம் வாங்குகிறார். அங்கே சென்றவர் ஒரு 85 வயது கிழ வக்கீலை பார்க்கிறார், அவருக்கு செவித்திறன் மிகவும் குறைந்து விட்டிருக்கிறது, ஒப்புக்கு ஒரு செவித்திறன் கருவியை அணிந்திருந்தாலும் அவருக்கு இவர் சொல்லும் எதுவுமே கேட்பதில்லை, அவருக்கு சுதீந்திரா கத்தி விளக்க திராணியற்றுப் போன நிலையில் தன் வெறும் உதட்டை அசைத்து மெதுவாக வாக்கியமாக கேள்விகளைக் கேட்க , அதை கிழவர் கிரகித்து பதில் சொல்கிறார். மிகவும் இயல்பான நடையில் அமைந்திருந்த நகைச்சுவைக் காட்சி அது,ரேவின் படங்களில் இருக்கும் யதார்த்தமான எள்ளல்களில் க்ளாசிக் தன்மையை நமக்கு உணர்த்தும்.

வக்கில் கிழவர், மாமா மன்மோகனுக்கு சொத்தில் பங்கு உண்டு, அச்சமயம் தான் சிங்கப்பூர் சென்றிருந்தமையால் வேறொரு எக்ஸிக்யூட்டர் நியமிக்கப்பட்டு, அது குறித்து மாமாவுக்கும் தெரிவிக்கப்பட்டதாக சொல்லுகிறார், இப்போது சுதீந்திராவுக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது, அப்போதே பாகம் பிரிக்கப்பட்டு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் போல வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட அத்தொகை மிகவும் பெரிய தொகை, இப்போது வட்டியுடன் பெருகியிருக்கும், அதை மன்மோகன் மித்ரா என்னும் பெயரில் போலியாக  ஒருவர்   அடித்துக்கொண்டு போவதில் சற்றும், உடன்பாடு இல்லை, வங்கியில் அடையாளத்தை நிரூபிக்க பாஸ்போர்ட் போதுமானது என வக்கில் சொன்னது வேறு இவருக்கு சந்தேகத்தை கூட்டுகிறது, எப்படி வந்திருப்பது உண்மையானவர் என கண்டுபிடிப்பது? தன் கிரிமினல்  வக்கில் நண்பர் செங்குப்தாவை அன்று மாலை வீட்டுக்கு அழைக்கிறார் சுதீந்திரா.

இனி என்ன ஆகும்?!!! மன்மோகன் மித்ரா உண்மையானவரா?போலியா? என்பதை வக்கில் செங்குப்தா கண்டறிந்தாரா? மாமா தன் சொத்துக்களை எக்ஸிக்யூட்டரிடமிருந்து பெற்றாரா? அவற்றை என்ன செய்தார்? மாமா ஆஸ்திரேலியா சென்றாரா? போன்றவற்றை படத்தில் பாருங்கள், செங்குப்தா , சுதீந்திரா, அனிலா  இவர்களுக்குடனான அந்த வரவேற்பறை உரையாடல்  மிகவும் முக்கியமானது. அங்கே அனிலா தம்பூர் என்னும் தந்தி வாத்தியத்தை மீட்டி பாடும் இறைவனின் மீதான பக்திப்பாடல் மிக அரிய, அழகான பாடல். அது தாகூரால் இயற்றப்பட்ட பாஸிலோ கஹாரோ பீனா என்னும் மிக இனிய பாடலாகும், வாழ்க்கையில் பணம் தான் பிரதானமா? உறவு என்பது என்ன? குடும்பம் என்பது என்ன? நாகரீகம் என்பது என்ன போன்ற கேள்விகளுக்கு மன்மோஹன் மித்ரா  தன் 35 வருட தனிமனிதனின் அறிவுத்தேடல் மூலம் சொன்ன பதில்களை அவசியம் பாருங்கள்,
மன்மோகன் மித்ரா மற்றும் அனிலா பாஸிலோ கஹாரோ பீனா பாடலின் போது

வாழ்வில் பயணம் செய்யாதவரை,குறுகிய மனப்பான்மை கொண்டோரை பெங்காலியில் குபோமாண்டுக் Kupomanduk [கிணற்றுத் தவளை] என்கிறார் மன்மோகன், அதே போல ஒரு உரையாடலில் சுதீந்த்ராவிடம் what is the Longest word in English? என்பார் மன்மோகன், சுதீந்த்ரா பள்ளியில் படித்துள்ளேன் மறந்து விட்டது என விழிக்க, அது FLOCCINAUCINIHILIPILIFICATION = SETTING LITTLE [OR] NO VALUE என்பதே இந்த நீண்ட 29 எழுத்துக்கள் உணர்த்தும் பொருள், இது தான் Civilization [நாகரீகம்] என்று முத்தாய்ப்பாக நிறுத்தி நகைப்புடன் முடிப்பார் மன்மோகன்,அது போன்ற பல சுவையான தருணங்களை ரே படத்தில் பொதித்து வைத்துள்ளார்.

இறுதிக்காட்சியில் வரும் கோல்[ kohl] பழங்குடியின் பாரம்பரிய நடனம்
இந்திய சினிமா வரலாற்றில் இது மிக முக்கியமான படம், உரையாடல் மூலமாகவே ஒரு படத்தை விறுவிறுப்பாக நகர்த்தும் கலை எல்லோருக்கும் கைவந்து விடாது, அந்த நேர்த்தியில் ரே தான் எத்தகைய ஆட்டியர்+Auteur
என்பதை இப்படம் மூலம் ஆணித்தரமாய் நிரூபிக்கிறார். உலக சினிமா ரசிகர்கள், தேடிப்பார்க்க வேண்டிய படம், இதை அடுத்த முறை டிடியில் ஒளிபரப்பும் போது தவறாமல் பாருங்கள். உத்பல் தத் சொற்பம் படங்களே செய்திருந்தாலும் அவரின் பெயரை இது போன்ற நல்ல தரமான படைப்புகள் மூலம் நிலைநாட்டியுள்ளார். படத்தின் ஒப்பற்ற இசையும் சத்யஜித் ரேவே செய்திருக்கிறார், படத்தின் உயிரோட்டத்துடன் கலந்த ஒன்று இதன் பிண்ணனி இசை.

அகோன்டுக்=டோண்ட் மிஸ் இட்!!!

அனிலா பாடும் பாஸிலோ கஹாரோ பீனா என்னும் ரபீந்த்ரநாத் தாகூரின் மிக அருமையான பாடல்

ப்ரதித்வந்தி [Pratidwandi] [প্রতিদ্বন্দ্বী][1972 ] [பெங்காலி ] [இந்தியா]


த்யஜித் ரே இந்தியகலை மற்றும் அழகியல்  சினிமாவின் பிரம்மா, இவரின் கேமரா கோணங்கள் தனித்துவமானவை, ஒவ்வொரு காட்சியிலும் புதுமை புகுத்துவதிலேயே சதா சிந்தனையாக இருந்தவர். இவரின் படங்கள் அனைத்திலுமே ஒரு ஆத்மார்த்தமான சிருஷ்டி நிறைந்திருக்கும், ப்ளாக் அண்ட் ஒயிட்டில் இவர் எடுத்த திரைப்படங்கள் காலம் கடந்து நிற்கின்றன, நிற்கும், அகில உலக அளவில் இயக்குனர் ஜாம்பவான்கள் அனைவருமே போற்றி, ஒத்துக்கொண்டு ,மதிக்கும் ஒப்பற்ற ஆளுமை சத்யஜித்ரே,மார்ட்டின் ஸ்கார்ஸஸி இவரது படங்கள் அத்தனையையும் மிகவும் விரும்பி தன்னார்வத்துடன் செப்பனிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் அதிகம் பேசப்படாத ,குடத்திற்குள் வைத்த விளக்கு போன்ற ஒரு படைப்பு தான் கொல்கத்தா ட்ரிலஜி, இதில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரதித்வந்தி, [ஆங்கிலத்தில்   The Adversary] மிக முக்கியமான படம், அடுத்த தவணையான 1971 ல் வெளிவந்த சீமாபத்தா [ஆங்கிலத்தில் Company Limited], மூன்றாவதாக 1976 ஆம் ஆண்டு வெளிவந்த ஜன ஆரன்யா[ஆங்கிலத்தில்  The Middleman] இம்மூன்றுமே 1970களில் இந்தியாவில் வங்கதேசத்தில்  நீக்கமற நிறைந்திருந்த தவறான பொருளாதாரக் கொள்கை, அரசு&தனியார்  அலுவலகங்களில் பெருகிவிட்டிருந்த ஊழல்கள்,தில்லுமுல்லுகள்,  வேலையில்லா திண்டாட்டம், கொடிய பசி பஞ்சம் பட்டினி,நக்ஸல் பாரி இயக்கம், அமைப்பு சேரா யதார்த்தவாதம், சந்தர்ப்பவாதம் போன்றவற்றை பட்டவர்த்தனமாகப் பேசும் நேர்மையான படைப்புகள்.ரேவின் தன்னிகறற்ற சர்காசிசத்தின் ஊடாக நாம்  நடந்து முடிந்த  ஒரு வரலாற்றை ,மானுடவியலை காணமுடியும்.

தன் படைப்புகளில் ரே பயன்படுத்திய யுக்திகள், காலம் கடந்தும் பேசப்படுபவை, ஃப்ரென்சு நியூ வேவ் சினிமாவின் பாதிப்பில் ரே உருவாக்கிய படம் இது. ரே இதில் ஏகப்பட்ட ஜம்ப் கட்களை உபயோகித்திருப்பார்.ரேவிடம் படைப்புத்திறனும் அதை  லாபி செய்யும் திறமையும் ஒருங்கே குடிகொண்டிருந்தது, அவரது பெரும்பாலான படங்கள் ஆங்கிலத்தில் பெயரும், போஸ்டரும் கொண்டிருந்தன, அத்தனை படங்களுமே பெரும்பாலானவை உலக திரைப்படவிழாக்களில் பங்குபெற்று உயர்ந்த விருதுகளையும், சம்பிரதாயமில்லாத பாராட்டுக்களையும் வென்றுள்ளன என்பதே ரேவின் தனித்திறமைக்கு சான்று, ரே அடிப்படையில் ஒரு ஓவியர் என்பதால் அவரின் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமே ஒரு ஓவியம் போன்ற ஒரு தோற்றம் பொருந்திவரும், அவரின் பெண்கள் கதாபாத்திரங்கள்,ஆண்கள் கதாபாத்திரங்கள்,இயற்கையான அழகை பரைசாற்றும் படி   அமைந்திருக்கும், சாதாரணத்தில் இருக்கும் அழகியலைக் ரேவின் கண்கள் மிகத்துல்லியமாக  படம் பிடித்துக்காட்டும்,அவரே பல சமயம் கதாபாத்திரங்களுக்கு ஒப்பனை  இடத்துவங்கிவிடுவார்.

ப்ரதித்வந்தி என்றால் எதிராளி அல்லது போட்டியாளன் என்பது பொருள்,படத்தின் துவக்கத்திலேயே மருத்துவம் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் சித்தார்த்தாவின்[Dhritiman Chatterjee ] தந்தையின் சவ  புறப்பாட்டை பார்க்கிறோம்,ராம் ராம் சத்யஹ!! என்னும் கோஷம் பிண்ணனியில் ஒலிக்கிறது, இதில் நவீன யுக்தியாக படத்தின் கதாபாத்திரங்களின்  வழமையான உணர்ச்சி கொந்தளிப்பான காட்சிகளை ரே நெகெடிவ்வில் [X-ray digressions] காட்டியிருந்தார், அது சவத்தை மாடியிலிருந்து இறக்கி கீழே கொண்டு வைத்து, அதை சிதை மூட்டும் வரையிலும் தொடர்கிறது, அதன்பின்பு கொல்கத்தாவின் நகரவாழ்க்கையை நிதர்சனமாக காட்டுகிறார்.

 இப்போது சித்தார்தா   கொடிய வெயிலில் வேலை தேடி நேர்முகத் தேர்வுக்கு போகிறான், அவன் முறை வந்தவுடன் கேட்கும் கேள்விகள்,அவனின் பதில்கள்,ஏற்கனவே இளங்கலை பாட்டனி முடித்துவிட்டு,மருத்துவம் இரண்டாம் வருடம் படித்தவன் தந்தையின் திடீர் மரணத்தால் படிப்பை கைவிட வேண்டியதாகிவிட்டதை அறிகிறோம், அவனுள்ளே ஒரு கம்யூனிஸ்ட் அனுதாபி இருந்தாலும் அவன் தீவிர கம்யூனிஸ்டு அல்லன், அவன் இருத்தலியலால் பீடிக்கப்பட்டு தனக்கென ஒரு  வேலையை தேடிக்கொள்ள பிரயத்தனப்படுகிறான், ஆனால் வேலைவாய்ப்புகள் பிரகாசமாயில்லை, வேலைக்கு ஆள் எடுத்தாலுமே சிபாரிசு கொண்டுதான் ஆளை   அமர்த்துவதை அறிகிறோம்,  ரத்தத்தில் கொஞ்சம் ரோசம் , சூடு சுரணை இருந்தால் எங்கிலும்  வேலை கிடைக்காத நிலை,

 சித்தார்த்தாவின் தங்கை ஸுடாப்பா [Krishna Bose] , நல்ல வேலையில் காரிய தரிசியாக இருக்கிறாள், ஆனால் அவள்  தன் முன்னேற்றத்துக்கு வேண்டி தன் பெண்மையையே விட்டுக்கொடுக்க வேண்டியதாயிருக்கிறது, அவளின் 40 களில் இருக்கும் மேலதிகாரி, அவளுக்கு ஓவர் டைம் என்னும் பெயரில் தன் பாலியல் இச்சையை தணித்துக்கொள்கிறான்,அவனின் மனைவி சித்தார்த்தாவின் அம்மாவிடம் வந்து முறையிட்டு மகளை வேலையை விட்டு நிறுத்தி தன் குடும்பத்தை வாழ விடக் கேட்கிறாள், ஆனால் தங்கையோ வேலையை விடுவதாகயில்லை, அடுத்த மாதம் முதல் தான் தன் மேலதிகாரியின் அந்தரங்க காரியதரிசியாக பதவி உயர்வு பெற்றிருப்பதாகவும், அதன் மூலம் தனக்கு 200 ரூபாய் சம்பள உயர்வு கிடைத்திருப்பதாகவும்,  பெருமை பீத்திக்கொள்கிறாள்,

சிறுவயதில் தன் அண்ணனிடம் மிகுந்த பாசம் கொண்ட தங்கை அவள்,கால ஓட்டத்தில் மிகுந்த சுயநலமியாக அகிவிட்டிருக்கிறாள். தன் மேக்கப் செலவுகள்,நடனம் கற்றுக்கொள்ளும் செலவுகளுக்கே தன் வருமானத்தில் பெரும்பங்கை செலவிடுகிறாள், இது தவிர மாடலிங்கும் செய்ய ஆரம்பித்திருக்கிறாள், உடம்பை கடை விரித்து அதில் வருமானம் ஈட்டினால் பிழை இல்லை என்னும் நவீன சித்தாந்தம் பேசித் திரிகிறாள், சித்தார்த்தாவின் தம்பி  டுனுவோ [Debraj Ray ] தீவிர நக்ஸல் பாரி இயக்கத்தில் பங்கு கொண்டு களப்பணியாற்றி வருகிறான்,திடீர் திடீரென உடம்பில் காயங்களுடன் வரும் தம்பியை பார்ப்பது  சித்தார்த்தாவிற்கு கலக்கத்தை தருகிறது.ஆக தங்கையும் தம்பியும் சித்தார்த்தாவை சிறிதும் மதிப்பதில்லை,


தங்கள் முடிவுகளை தாங்களே எடுக்கத் துவங்கி விட்டது தெரிந்தாலும் சித்தார்த்தாவினால் விட்டு விலகி விட முடியவில்லை.தங்கையுடன் சித்தார்த்தா சிறுவயதில் சென்ற சுற்றுலாவின் போது,அவள் அங்கே காட்டிய ஒரு பறவையின் இனிய சங்கீதத்தை அடிக்கடி நினைவு கூறுகிறான் சித்தார்த்தா, அதை இந்த ஜனசந்தடி மிகுந்த கொல்கத்தா நகரினூடே தேடியவன் ஒரு சமயம் தன் தம்பியுடன் மெல்லிய விஸ்கி போதையுடன் புது மார்க்கெட் சென்றும் தேடுகிறான்,அங்கே அவன் தேடிய பறவை கிடைப்பதில்லை,

 தம்பி நக்ஸல் பாரிகளுடன் சேர்ந்து சுற்றியலைந்து தேவையான பொருளை ஈட்டிக்கொள்ளுவதை அறிந்திருக்கிறான், ஆனாலும் சித்தார்த்தாவின் செலவுகளுக்கு அவன் வாயை விட்டு கேட்டாலுமே தம்பியும் தங்கையும் பணம் தருவதில்லை, அந்த அளவுக்கு சுயநலமிகளாக இருக்கின்றனர். சித்தார்த்தா ஒரு சமயம் தன் மருத்துவக்கல்லூரி புத்தகங்கள் இரண்டினை விற்று சேகுவாரேவின் கெரில்லா வார்ஃபேர் என்னும் புத்தகத்தை வாங்கி தன் தம்பிக்கு பிறந்தநாள் பரிசளித்திருக்க,அதை தம்பி சித்தார்த்தாவிடமே திருப்பித்தந்து அதை விற்று பணம் வாங்கிக்கொள் என்கிறான்.

தங்கையின் மேலதிகாரியின் சொகுசு பங்களாவிற்கு போன் செய்துவிட்டுப்  பார்க்கச் செல்லுகிறான் சித்தார்த்தா, அங்கே காத்திருக்கையில் மேலதிகாரியை சுட்டுக்கொள்ளுவது போல நினைத்துப்பார்க்கிறான் [ரேவின் இப்படத்தில் தன் வழமையான பாணியிலிருந்து விலகி கனவுக்காட்சிகளையும் புகுத்தியிருந்தார் ] ஆனால் நிஜத்தில் ,இவனால் ஒன்றும் செய்ய முடிவதில்லை, தங்கையின் ராஜினாமாவைப்பற்றி  பேசப்போனவனை மேலதிகாரி லாவகமாக பேசி  மடக்கி, இங்கேயே நான் வரும் வரை காத்திரு, நான் உனக்கு,எனக்குத் தெரிந்த நிறுவனத்தில்  வேலைக்கு சேர்க்க சிபாரிசு கடிதம் தருகிறேன்  என தூண்டில் வீசி விட்டு அகல்கிறான்,

சித்தார்த்தா அங்கே இருக்கப் பிடிக்காமல் விருட்டென வெளியேறி விடுகிறான், அங்கே சாலையில் ஒரு பென்ஸ் கார் பாதசாரி சிறுமியை இடித்து விட்டு நிற்க, அதன் உரிமையாளரை, தெருவில் வருவோர் போவோர் எல்லாம் சேர்ந்து ,அதுவரை தாங்கள் தேக்கி வைத்திருந்த ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வை தர்ம அடிகளாக மாற்றி , துவைத்து எடுப்பதைப்  பார்க்கிறான், அவர்களோடு சித்தார்த்தனும் சேர்ந்து கொள்ள ஆயத்தமாகிறான், காரினுள்ளே அந்த உரிமையாளனின் மகள் பயந்த படி இவனைப்பார்த்ததும் மேலும் வீரிட, இவன் சுய நினைவுக்கு வந்தவன் விலகிச்செல்கிறான்.ரே துயரமான ஒரு காட்சியிலும் பொதிந்திருக்கும் அழகியலையும் அவல நகைச்சுவையையும்  நுட்பமாக  அங்கே வெளிப்படுத்துகிறார்,

 ஒரு காட்சியில் ,சித்தார்த்தா வெயிலின் கொடுமையால் போக்கிடம்  இன்றி  சினிமா தியேட்டருக்குள் நுழைந்து படத்துக்கு காத்திருக்க,அங்கே இந்திராகாந்தி  அம்மையார் தன் அரசின் வருமானத்தை, பல புதிய வரிவிதிப்புகளின் மூலம் பல்கிப் பெருக்கிய  சாதனை,  நியூஸ் ரீலாக திரையில் வருகிறது,  அவனுக்கு தலையை வலித்துக்கொண்டு வருகிறது, மேலே பால்கனியில் நக்ஸல்பாரியின் ஆட்கள் ஒருவரால் நிறுவப்பட்ட அதிக சக்தி  இல்லாத குண்டு வெடிக்க, திரைப்படம் ரத்து செய்யப்படுகிறது, சித்தார்த்தா இப்போது ஒரு  நினைவுச்சின்னம் ஒன்றின் நிழலில் புதிதாக சிகரட் பிடிக்க, அங்கே வரும் ஹிப்பிகள் கஞ்சா புகைத்துக்கொண்டு,ஒன்றும் இல்லாததில் எல்லாம் சந்தோஷத்தை தேட முயற்சிப்பதை பார்க்கிறான்,

அங்கே பசுவை அவர்கள் பார்க்க அதற்கும் ஒரு கொண்டாட்டம்,இந்த சிதிலமடைந்த ஒரு நினைவுச்சின்னத்தை பெரிய பொக்கிஷமாக கருதி அதற்கும் ஒரு கொண்டாட்டம், என ஹிப்பியின் வாழ்க்கை மிகவும் நகைப்புக்கிடமாக இருப்பதை அறிகிறான் சித்தார்த்தா. தியேட்டரின் கூட்ட நெரிசலில் தன்னுடைய வாட்சின் பாலன்ஸ் ஸ்ட்ராப் பட்டை அறுந்து  போக அதை மாற்ற 8-50ரூபாய் ஆகும் என சிப்பந்தி சொல்கிறார், தன்னிடம் அத்தனை ரூபாய் இல்லாததால் மாற்றாமல் வாட்சை வாங்கி வருகிறான்.

ஒரு கடையில் சென்று தலைவலிக்கான சாரிடான் மாத்திரையை 60 பைசா கொடுத்து வாங்கியவன், நீரும் வாங்கி வெறும் வயிற்றில் விழுங்குகிறான், போக்கிடம் இருந்தாலும்,வீட்டுக்கு உடனே போக விரும்பாதவன்,தன் நண்பர்கள் அறைக்கு செல்கிறான்.அங்கே அவனின் நண்பன் ஒருவன் செஞ்சிலுவை சங்கம் கொடுத்த மோல்டட் உண்டியலில் இருந்து ரூபாய் நாணயங்களை லாவகமாக நோண்டி எடுக்கிறதைப் பார்க்கிறான். இவன் அதை தவறு என உரைத்து பிடுங்க, நண்பன் ,தனக்கு தேவை அன்றைய தினத்தை ஓட்ட ரூபாயே அன்றி இவன் புத்திமதிகள் அல்ல என்கிறான்,

2 மைல்கள் கால்கடுக்க நடந்து உண்டியல் குலுக்கியதற்கு தனக்கு ஏதேனும் பயன் இருக்க வேண்டாமா?என மேலும் கேட்கிறான் நண்பன்.இது போல உலகத்தரமான எள்ளல்களை ரே காட்சிப்படுத்தியிருப்பார். சித்தார்த்தா காணும் கனவுகள் ரேவினால் மிகப் புதுமையாக படமாக்கப்பட்டுள்ளன. தம்பியுடனான வாதத்தின் போது தன் தலை ஜில்லெட்டின் எந்திரத்தில் இருந்து விழும் கூரிய தகட்டால் துண்டாடப்படுவது போன்றும்,தன் தம்பியை வங்காள போலீசார் குழு ரைஃபிளால் குறிவைத்து சுட்டு வீழ்த்துவது போன்றும், தன் தங்கை கடற்கரை மணலில் பிகினியுடன் மாடலிங்கிற்கு நிற்க அவளை காமாந்தகர்களின் கண்கள் மொய்ப்பது போன்றும் பலகாட்சிகளை உதாரணமாகச் சொல்வேன்.

சித்தார்த்தாவுக்கும் அவன் தம்பிக்கும் நடக்கும் விவாதங்கள், மிகவும் சுவையானவை, நக்ஸல் பாரிகளுடன் இணைந்து கொலைகூட செய்யத்துணிகிற தம்பியைப் பார்த்து, நீ சிறு வயதில் கோழியை கொல்வதைக் கூட கண் கொண்டு பார்க்க மாட்டாய்,நீயா இப்படி மாறிப் போனாய் என்கிறான், தம்பியோ ஃப்ரெஞ்சு புரட்சியின் போது உன் போன்ற சான்றோர் ஏராளம் பேர் ஜில்லெட்டின் எந்திரத்தில் அமர்த்தி தலை கொய்யப்பட்டனர்,கால ஓட்டத்தில் எதுவும் இங்கே நடக்கும் என்கிறான்.

இப்போது சித்தார்த்தாவை அவன் தம்பி ஒரு முக்கியமான இடத்துக்கு அழைத்துப்போகிறேன் என்று கூட்டிப்போகிறான்,அதற்கு முன்பாக ஒரு உயர்தர சீன உணவகத்துக்கு அழைத்துப்போகிறான், அங்கே வைத்து சீன உணவை மிகுந்த பரீட்சயத்துடன்  ஆர்டர் செய்கிறான்,  பின்னர் அரிஸ்டோக்ராட் விஸ்கி 2 லார்ஜ் தருவிக்கிறான், குடித்தவுடன்,இருவரும் சீன உணவுகளை விழுங்கிவிட்டு, ஜனசந்தடியில்லாத ஒரு பகுதியில் உள்ள வீட்டின் மாடிக்கு சென்று தம்பி கதவை தட்டுகிறான்,உள்ளே பிள்ளைகள் சத்தம் கேட்க,கதவை திறந்த ஒரு இளம் தாய் ஒருத்தி,கதவை திறக்கமுடியாது என விளையாடிவிட்டு,கதவை அடைக்கிறாள்,குழந்தைகள் விளையாட வழிபண்ணிவிட்டு,இருவரையும் உள்ளே விட்டவள்,வேகமாய் கதவை அடைக்கிறாள்,

தம்பியை அவள் மிகவும் உரிமையுடன் அழைக்கிறாள்,சித்தார்த்தா அருவருப்பும் கூச்சமும் ஒருங்கே கொண்டிருக்கிறான்,தம்பி அவளை நோக்கி,சித்தார்த்தாவை நன்கு கவனிக்க சொல்ல,அவள் குளித்துவிட்டு வருகிறேன் என்கிறாள்,சித்தார்த்தா சிகரெட் பொருத்த,பற்ற வைக்க நெருப்புக்கு குனிகிறாள்,அவளும் கேட்டு வாங்குகிறாள்,தம்பி இருவருக்குமாக இரண்டு பெரிய ரூபாய் தாள்களை,அவளது ஒப்பனை மேசை அறையை இழுத்து, அதனுள் திணிக்கிறான்,பின்னர் அவளுடைய கூந்தலை தன் கைகளால் அலைந்தபடி,இந்தக் கூந்தலில்  யாரையும் இவள் முடிந்து விடுவாள் என்கிறான். சித்தார்த்தாவிற்கு மிகவும் கோபமும் ஆற்றாமையும் வருகிறது, தன் அத்தியாவசிய செலவுக்கு வாய்விட்டுக் கேட்டும் உதவாதவன் இப்படி பரத்தையருக்கும் குடிக்கும் லாகிரிக்கும் செலவிடுவதை வெறுக்கிறான்.அங்கேயிருந்து தம்பி கத்த கத்த  அகல்கிறான்.

வீதியில் இறங்கி நடந்தவனை ,ஒரு இருண்ட வீட்டின் முன்பாக நின்று ஒரு இளம் பெண் ,உங்களைத்தானே நில்லுங்கள், என்று இறைஞ்சுகிறாள், இவன் அடுத்த கேஸா? என திகைக்க, அவள் என் வீட்டில் ஃப்யூஸ் போய்விட்டது, ஃப்யூசுக்கு வயரை வைத்துள்ளேன், ஆனால் மாட்ட பயமாயிருக்கிறது, உதவுங்கள், என்கிறாள், இவன் நெருப்புக்குச்சி கிழித்து அந்த வெளிச்சத்திலேயே ஃப்யூசை மாற்றித்தர, அவள் அவனுக்கு பழச்சாரை தந்து அமர வைத்து பேசுகிறாள், அவள் கேயா [ Jayshree Roy] என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள், சித்தார்த்தாவை அடிக்கடி தெருவில் பார்த்திருப்பதாக சொன்னவள், அவளின் அம்மா சிறுவயதிலே ,இறந்து விட, அப்பா வேறு ஒரு பெண்மணியுடன் தொடர்பில் இருப்பதாகவும் ,அவளையே விரைவில் மணக்கப்போவதாகவும் சொல்கிறாள்,

கேயா விரைவில் தில்லிக்கு சென்று கல்லூரி சேரப்போவதாக சொல்கிறாள். அவனுடன் கடிதத் தொடர்பில் இருப்பேன், சித்தார்த்தாவுக்கு வேலை கிடைத்தவுடன் வாழ்வில் இருவரின் அடுத்த நடவடிக்கை குறித்து பேசலாம், என தீர்க்கமாக சொல்கிறாள். சித்தார்த்தாவை நேரம் கிடைக்கையில் வீட்டுக்கு வந்து போகக் கேட்கிறாள் கேயா. இருவருக்கும் சிலநாட்களில் நல்ல நட்பு உண்டாகிறது, சித்தார்த்தா கொல்கத்தாவை விட்டு வெளியேற விரும்பவில்லை என கேயாவிடம் சொல்ல,அவள் ஏமாற்றம் அடைகிறாள், எந்நேரமும் வருமானவரித்துறை அதிகாரியான தன் தந்தைக்கு தில்லிக்கு மாற்றம் வரலாம் என்கிறாள், அவள் ஊரைவிட்டுப்போக தயாரானது சித்தார்த்தாவுக்கு உள்ளூர ஏமாற்றமாயிருக்கிறது,

இப்போது கேயாவை காதலிக்கவும்,மணம் புரியவும் கூட தனக்கு தகுதி தேவையிருப்பதின் அவசியத்தை உணர்கிறான் சித்தார்த்தா, தன் தூரத்து உறவினர் ஒருவர் வேலைக்கு சிபாரிசுக் கடிதம் தர சித்தார்த்தா   நேர்முகத்தேர்வு ஒன்றுக்கு செல்கிறான், அங்கே கொல்கத்தாவில் மருந்து விற்பனை பிரதிநிதி வேலை எதுவும் காலி இல்லை, ஆனால் மேற்கு வங்காளத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஊரான Balurghat ல் ஒரு மருந்து டெலிவரி ஆள் வேலை இருப்பதாகவும், இப்போது அதை ஏற்று, முன்னேறும்படி அந்த அதிகாரி வலியுறுத்த இவன் தன் முடிவைச் சொல்ல 10 தினங்கள் கேட்கிறான்.ஆனால் அங்கே செல்ல விரும்பவில்லை,மறுநாளே கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் நிறூவனத்துக்கு நேர்முகத்தேர்வுக்குச் செல்கிறான்.

ரேவின் ஒரு அற்பணிப்பிற்கு உதாரணமாக இந்த ஒரு நேர்முகத்தேர்வு காட்சியை சொல்லுவேன், அங்கே 4 பேரைத் தேர்வு செய்யவேண்டிய காலியிடங்களுக்கு 275 பேர் குழுமியிருக்க, கொடிய வெயிலில் நேர்முகத் தேர்வு நடக்கிறது, அது ஒரு அழுக்கு காரிடார்,அங்கே இருந்த 2 மின்விசிறியில் ஒன்று பழுது பட்டிருக்க, ஒன்று அழுது வடிந்த படி சுற்றிக்கொண்டிருக்கிறது, வேலை தேடுவோர் பசியைப் போக்க சிகரெட்டாய் குடித்து மணல் வாளியில் சொருகிக்கொண்டிருக்க, சித்தார்த்தாவின் முறை வருவதற்கு இன்னும் 100 ஆட்கள் போக  வேண்டும், அவன் வந்திருக்கும் ஆட்களை நோட்டம் இடுகிறான்,

அதில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு  தினுசு, ஒருவன் கோட் சூட்டுமாக இடம் வலமாக பீடு நடைபோட்டவன், புழுக்கத்தின் மிகுதியால்  அதை கழற்றி விட்டு  சுருதி குறைத்து இப்போது சொங்கி நடை போடுகிறான், அவன் ஆறடி உயரமிருப்பதால்  அவ்வேலை தனக்கு கிடைக்காது என ஐந்தரை அடி இருக்கும் ஒருவன் புலம்புவதை கவனிக்கிறான் சித்தார்த்தா.காரிடாரில் காத்திருக்கும் ஒவ்வொருவரும் எலும்புக்கூடுகளாக உருமாறும் அக்காட்சி குறிப்பிடத்தக்கது,அந்த எலும்புக்கூடுகளை மிக சிரத்தையாக நிற்கவும்,சாயவும்,அமரவும்,கூன் போடவும் வைத்திருந்தார் ரே,[12 வருடம் கழித்து வந்த மூடுபனி படத்தில் பாலு மகேந்திரா ஒரு பிளாஸ்டிக் லேப் எலும்புக்கூட்டை க்ளைமேக்ஸ் காட்சிக்கு மெத்தனமாக பயன் படுத்தியது ஏனோ நினைவுக்கு வந்தது] அப்போது ஒருவன் அசதி மற்றும் பசி மிகுதியால் மயங்கி விழ, அவனை சிலர் அப்புறப்படுத்துகின்றனர்,

அக்காட்சியுடன் சித்தார்த்தாவுக்கு தன் மருத்துவக் கல்லூரி வகுப்பில் கேட்ட எலும்புக்கூடுகள் பற்றிய பாடம் வந்து போகிறது, மற்றொரு சாலை கடக்கும் காட்சியில் ஒரு பெண்ணின் ஒயிலான நிமிர்ந்த மார்பகங்களைப் பார்த்த சித்தார்த்தாவுக்கு மருத்துவக்கல்லூரியில் தான் கேட்ட மார்பகங்களைப் பற்றிய பாடம் நினைவுக்கு வருகிறது, மற்றொரு காட்சியில் தன் தோழியின் வீட்டில் அவளின் சித்தி தலைவலிக்கு மாத்திரையை அவர் தொண்டைக்குள் அத்தனை பெரிய மாத்திரை இறங்காது என சலித்துக்கொண்டே விழுங்க, , சித்தார்த்தாவுக்கு மருத்துவக்கல்லூரியில் தான் கேட்ட தொண்டை பற்றிய பாடம் நினைவுக்கு வருகிறது, இப்படி மிகப் புதுமையான, சுவையான பல கனெக்‌ஷன்களை கையாண்டிருந்தார் ரே.

அதற்குப் பின்னும் சித்தார்த்தாவினால் சும்மா இருக்க முடியவில்லை, சிலரை சேர்ந்துக் கொண்டு, அறை வாசலில் இருந்த காவலாளியை தள்ளிவிட்டு, அறையின் உள்ளே சென்றவன் அங்கே நேர்முகத் தேர்வு எடுப்பவரிடம் , வெளியே குழுமியுள்ளோர் அமர ஏற்பாடு செய்யுமாறு சொல்ல,அவர்கள் விட்டேத்தியாக , இதுவும்  அவர்களின் பொறுமைக்கு ஒரு சோதனை தான், இதை சகித்துக்கொள்பவன் தான் நல்ல சிப்பந்தியாக இருக்க முடியும்,உன் பெயர் என்ன? என் /உன்/ அவர்கள் நேரத்தை வீணாக்காதே!!! என்கின்றனர். சித்தார்த்தன் தன் இடம் வலம் நோக்க, உடன் வந்தவர் யாருமே இல்லை, அவனும் வெளியேறி மீண்டும் காத்திருக்க,இன்னும் பெரும் திரளான நபர்கள் மீதமிருக்க,காவலாளி அவர்களை நோக்கி உணவு இடைவேளை அரைமணிக்கு பிறகு மீண்டும் நேர்முகத்தேர்வு நடக்கும் , நீங்கள் எல்லாம் கலையலாம், என்கிறான். சித்தார்த்தாவுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டு விழித்துக் கொள்ள, அறைக்குள்  வேகமாய் நுழைந்தவன், அங்கே மூன்று அதிகாரிகளையும் அடித்து துவைக்கிறான், நாற்காலியால் தாக்கி விட்டு வெளியேறுகிறான்.

ஒருவாரம் கடந்த நிலையில் சித்தார்த்தா Balurghat என்னும் ஊருக்கே வேலைக்கு சேர வருகிறான், அங்கே ஒரு அழுக்கு அறைக்குள் தங்க வைக்கப்படுகிறான், இவனை போன்றே அங்கே வேலைக்கு வந்தவர் ஒரு அறையில் குழுவாக தங்கியிருப்பதை பார்க்கிறான், அயற்சியுடன் வெளியே பால்கனிக்கு வந்தவன் அங்கே சவ ஊர்வலம் செல்வதை வேடிக்கை பார்க்கிறான். ராம் ராம் சத்யஹ!! என்னும் கோஷம் பிண்ணனியில் ஒலிக்க, அங்கே அவன் அதுநாள் வரை தேடிக்கொண்டிருந்த பறவையின் சங்கீதமும் கேட்கிறது.தொலைவில் அப்பறவையையும் பார்க்கிறான், அதுமுதல் சித்தார்த்தா ஒரு புதிய ஆரம்பத்தை எதிர்நோக்குகிறான்.

தற்கால கலைசினிமாவின் முக்கிய இயக்குனரான சுதிர் மிர்ஸா இயக்கிய Hazaron Khwashein Aisi 1970களின் எமர்ஜென்ஸியையும் , நக்ஸல்பாரி இயக்கத்தையும் நேர்மையாக சித்தரித்த படம், அதிலும் கதாநாயகனின் பெயர் சித்தார்த்தா தான் ,இயக்குனர்  சத்யஜித்ரேவிற்கு செய்த ஒரு ட்ரிப்யூட்  என நினைக்கிறேன். படம் அவசியம் பாருங்கள், உங்கள் கண்ணோட்டத்தில் கருத்துக்களை இங்கே பகிருங்கள். தேடிப்பார்க்கும் தூரத்தில் தான் இத்தகைய பொக்கிஷங்கள் இருக்கின்றன, யூட்யூபில் முழுப்படமும் ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்கிறது.இந்த கொல்கத்தா ட்ரிலஜியின் அடுத்த இரண்டு தவணைப் படங்களையும் விரைவில் எழுதுவேன்.

Release Year: 1970
Producer: Priya Films (Nepal Dutta, Asim Dutta)
Screenplay & Direction: Satyajit Ray, Based on the novel: 'Pratidwandi' by Sunil Ganguli.
Cinematography: Soumendu Roy, Purnendu Bose
Editing: Dulal Dutta
Art Direction: Bansi Chandragupta
Sound: J. D. Irani, Durgadas Mitra
Music: Satyajit Ray


Cast:

Dhritiman Chatterjee ... Siddhartha Chaudhuri
Jayshree Roy ... Keya
Debraj Ray ... Tunu
Krishna Bose ... Sutapa
Mamata Chatterjee ... Sanyal's wife
Kalyan Chowdhury ... Shiben
Indira Devi ... Sarojini
Soven Lahiri ... Sanyal
Pisu Majumdar ... Keya's father
Dhara Roy ... Keya's aunt
Shefali ... Lotika

ப்ரதித்வந்தி முழுப்படமும் யூட்யூபிலிருந்து:-
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (260) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (167) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)