================================
2007 ஆண்டு வெளிவந்த அடோன்மெண்ட் படம் பார்த்திருக்கிறீர்களா?, ஆம் எனில், அதில் வரும் தீம் ம்யூசிக்கான "Love Letters"ஐ மறந்திருக்க முடியாது, இத்தாலிய இசையமைப்பாளர் டரியோ மரியனல்லி, டைப் ரைட்டர் பொத்தான்கள் தட்டப்படும் க்லிக்-க்ளாக் ஓசையை செல்லோ, பியானோ இசையுடன் குழைத்து நம்மை கிறங்கடிக்கும் மந்திர இசையை அமைத்திருப்பார். இவரின் சோலோயிஸ்ட் , ப்ரைட் அண்ட் ப்ரிஜுடிஸ், வி ஃபார் வெண்டட்டாவும் இசைக்கோர்வைக்கு பெயர் போனவை.
டரியோ மரியனல்லி மெய்மறந்து செய்து ஆஸ்கர் வாங்கிய, அழியாப்புகழ் பெற்ற , அற்புத இசையை ஒத்த மெட்டுக்களை இசைஞானி 1986 ஆம் ஆண்டே தன் ஹவ் டு நேம் இட் ஆல்பத்தில் 10 ஆம் தொகுப்பான "Can do anything" இல் அருமையாய் வயலின்கள், புல்லாங்குழல், பியானோ, ஷெனாய் கொண்டு இசைப்படையலாக போட்டு விட்டார். இதை வீடு, மற்றும் நாயகன் படத்திலும் ஆனந்தமான தருணங்களுக்கு பிண்ணணி இசையாக அமைத்திருப்பார். இதை கேட்கும் போதெல்லாம் பரவசம் தொற்றிக்கொள்ளும், அட்டோன்மெண்ட் படம் பார்த்த பின் அதே பரவசம் ஏற்பட காரணம் தெரியவில்லை, மண்டையை பிய்த்துக்கொண்டு, தேடியவன் இதை கடைசியில் கண்டுகொண்டேன். எதனாலோ 2 தொகுப்புகளையும் என்னால் வேறுபடுத்தியே பார்க்க முடியவில்லை, இதைத் தான் ”இண்டெலெக்சுவல்ஸ் திங்க் அலைக்” என்பார்கள் போலும். நல்லதை ஏற்கனவே அறிந்திருந்தாலும் பகிர்வதில் தவறில்லையே!
இசை ரசிகர்கள் அனைவரும் பெருமைகொள்ள வேண்டிய விடயம், என தோன்றியதால் இதை பகிர்ந்து கொண்டேன், நான் இசை ரசிகன் தானே ஒழிய விமர்சகன் அல்ல, ஆகவே மாற்று கருத்துக்கள் இருந்தால் வரவேற்கிறேன். மொத்தத்தில் இவை இரண்டுமே அவசியம் பகிரவேண்டிய பொக்கிஷங்களே!