இந்த முக்கியமான பேட்டிக்காக சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை எத்தனை பாராட்டினாலும் தகும், பெரிய பேட்டி பொருமையாக படியுங்கள்.இயக்குனர் சிகரம் பற்றிய அருமை பெருமைகள் பிடிபடும்.
தமிழ் 
சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே 
பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒருவரின் 
பெயர் உண்டென்றால் அது கே.பி. சினிமா அடைமொழியோடு சொல்வதென்றால் இயக்குநர் 
சிகரம் கே. பாலசந்தர். நூறு அசாதாரணமான திரைப் 
படைப்புகளுக்குச் சொந்தக்காரர். நையாண்டி, நகைச்சுவை, சமூக சித்திரம், 
அரசியல், பெண்ணியம் என எல்லா கதைகளையும் தொட்டு எல்லாவற்றிலும் நூற்றுக்கு 
நூறு மார்க் வாங்கியவர். அவருக்குப் பால்கே விருது வழங்கி 
கௌரவித்திருப்பதன் மூலம் தமிழையும் தமிழர்களையும் இந்திய அரசு 
பெருமைப்படுத்தி இருக்கிறது. தமிழகத் திரையுலகின் தரத்தை முன்னகர்த்திக் 
காட்டியிருக்கும் அவரைச் சந்திப்பது என்பது அரை நூற்றாண்டு சினிமா 
சரித்திரத்தைச் சந்திப்பதற்குச் சமம்.
 
உங்கள் 
திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் "அரங்கேற்றம்'. 
திடீரென்று அப்படியொரு புரட்சிகரமான படத்தை எடுக்க வேண்டும் என்று உங்களைச்
 சிந்திக்க வைத்தது எது?அந்தக் கதையை என் திரைவாழ்வில் 
ஆறு மாத ஓய்வுக்குப் பின்னால் எடுத்தேன். அதனாலும்கூட அதில் சற்று 
சத்தியாவேசம் அதிகமாகவே இருந்தது. அந்தப் படம் 72-ல் வந்தது. அதற்கு 
முன்னாடி வரை ரொம்ப வேகமாக தினம் மூன்று ஷூட்டிங், நான்கு ஷூட்டிங் என்று 
ஓடிக் கொண்டிருந்தேன். விளைவு ஹார்ட் அட்டாக். ஆறு மாதம் ஓய்வெடுக்கச் 
சொல்லிவிட்டார்கள்.அந்த ஓய்வில் யோசனை பண்ணியதில் 
இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்கோம்.. இனி என்ன பண்ணப் போகிறோம் என்ற 
மனத்தின் அலசலில் விளைந்ததுதான் "அரங்கேற்றம்'. கிருஸ்துவுக்கு முன்.. 
கிருஸ்துவுக்குப் பின் என்பதுபோல ஹார்ட் அட்டாக்குக்கு முன் ஹார்ட் 
அட்டாக்குக்குப் பின் என என் படங்களைப் பிரித்துவிடலாம். அதற்கு
 முன்னாடி 15, 20 படங்கள் எடுத்திருந்தேன். ஹார்ட் அட்டாக் என்னை 
முற்றிலுமாக புரட்டிப் போட்டுவிட்டது. என்ன மாதிரியான படங்களை எடுக்கப் 
போகிறோம் என்பதற்கும் கூட "அரங்கேற்றம்' முன் மாதிரியாக அமைந்துவிட்டது.
 
இப்போது அரங்கேற்றம் திரைப்படம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"அரங்கேற்றம்'
 உங்களுக்குத் தெரியும். அது பூகம்பத்தையே ஏற்படுத்தியது. அப்போது எனக்கு 
சின்ன வயது. இப்போது கேட்டால் அப்படியொரு படத்தை எடுப்பேனா என்பது 
சந்தேகம்தான். பிராமண சமுகத்தில் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு 
சிரமப்படுவதுதான் கதையின் மையம். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் நிறைய பெண் 
குழந்தைகளைப் பெற்று அவர்களை கரையேற்ற முடியாமல் அவதிப்படுவதைச் சொல்ல 
வேண்டும் என்பதுதான் என் நோக்கம். என் மகள் புஷ்பா ஒரு 
பேட்டியில் சொல்லும்போது அந்தக் கதை அவருடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட ஓர் 
உண்மைச் சம்பவமாக இருந்திருக்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்.... 
இருந்திருக்கலாம் என்றுதான் சொன்னார்கள். உண்மைச் சம்பவம் என்று 
சொல்லவில்லை. இப்போதும் அது உண்மையில் நடந்த சம்பவமா? என்பதைச் சொல்ல நான் 
விரும்பவில்லை. 
 
"அரங்கேற்றம்' திரைப்படத்தை நீங்கள் ஏன் பிராமண சமூகத்தின் பின்புலத்தில் அமைத்திருந்தீர்கள். அதற்கு ஏதாவது காரணம் உண்டா?அதைச் சொல்வதற்கு எனக்கு மிகவும் தெரிந்த பழக்கமான சமூகத்தைக் கையில் எடுத்துக் கொள்வதுதானே சரியாக இருக்கும்?அந்தச்
 சமூகத்தைப் பற்றித்தான் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் வாழ்க்கை, 
பேச்சு வழக்கு, நடை, உடை, பாவனை எனக்கு அத்துப்படியாக இருந்தது. 15 -20 
ஆண்டுகள் அதிலேயே ஊறி வளர்ந்தவன். என்னுடைய கதையைச் சொல்லுவதற்கு அந்த 
சமூகத்தின் பழக்க வழக்கங்கள் எளிமையாக இருந்தன. அதுவுமில்லாமல் எனக்குத் 
தெரியாத இன்னொரு சமூகத்தைக் கையில் எடுத்து விமர்சிப்பதும் சரியாக 
இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.அந்தக் கதையில் நான் 
என்ன சொல்ல விரும்பினேனோ அதை ஆணித்தரமாகச் சொன்னேன் என்பது எனக்குப் 
புரிந்தது. எனக்கு மட்டுமல்ல, அது யாருக்குப் புரிய வேண்டுமோ? 
அவர்களுக்கும் புரிந்தது. தமிழக அரசும் கூட குடும்பக் கட்டுப்பாட்டை இதைவிட
 அழுத்தமாக யாரும் சொல்லிவிடமுடியாது என்று பாராட்டி, கெüரவித்தது. 
 
உங்கள் 
திரைப்படங்கள் அனைத்துமே பிராமணர்களையும் அவர்களின் வாழ்க்கை நெறியையும் 
அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டதாகக் கூறப்படுகிறதே, அது உண்மைதானா?"அரங்கேற்றம்'
 படத்துக்குப் பிறகு "அவள் ஒரு தொடர்கதை', "அபூர்வ ராகங்கள்', "அவர்கள்' என
 என் படங்கள் அணிவகுத்தன. ஆனால் என்ன சொல்கிறார்கள் என்றால் நீங்கள் ஏன் 
பிராமண சமுதாயத்தை மட்டுமே வைத்துப் படம் எடுக்கிறீர்கள் என்றார்கள். நான் 
பிராமண சமுதாயத்தை வைத்து "அரங்கேற்றம்' என்கிற ஒரே ஒரு படம்தான் 
எடுத்தேன். நான் எடுத்தவை எல்லாமே நடுத்தர வர்க்கத்தை 
மையப்படுத்திய படங்கள்தான். ஆனால் பிராமண சமூகத்தை நடுத்தர வர்க்கத்துடனேயே
 அடையாளப்படுத்திப் பார்க்கிறார்கள். அதில் நியாயமே இல்லை. "அரங்கேற்றம்' 
தவிர வேறு எந்தப் படத்திலுமே ஜாதியைப் பற்றிச் சொன்னதே இல்லை."அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் ஒரு ஜாதிக் கலவரம் நடப்பதாகச் சொல்ல நேர்ந்தபோதுகூட அவர்கள் என்ன ஜாதி என்பதைச் சொல்லவே இல்லை. "எதிர் நீச்சல்' என்றால் உடனே அது பிராமணக் கதை என்று நினைக்கிறார்கள். அதில்
 ஒரு குடும்பம்தான் பிராமணக் குடும்பம். ஒரு நாயர் குடும்பம், ஒரு முஸ்லிம்
 குடும்பம் என்று எட்டுக் குடும்பங்களை அதில் காட்டினேன். பட்டுமாமி 
கேரக்டர் பேசப்பட்டதால் உடனே அது பிராமணக் கதை என்று 
நினைத்துவிடுகிறார்கள். அப்படியில்லை.
 
எம்.ஜி.ஆர்.,
 சிவாஜி என்ற தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் கோலோச்சிக் 
கொண்டிருந்த காலகட்டத்தில் நாகேஷ், முத்துராமன், ஜெமினி, மேஜர் 
சுந்தர்ராஜன் போன்ற அடுத்தகட்ட நடிகர்களை வைத்தே படங்களை இயக்கினீர்கள். 
கதையின் பலத்தில் மட்டுமே மக்களைக் கவர வேண்டிய நெருக்கடி இருந்ததே?நெருக்கடி
 என்று சொல்ல முடியாது. அதை என் குறிக்கோளாக வைத்திருந்தேன். நாகேஷ் என் 
நண்பன். நானும் அவனும் ஒன்றாக வந்தோம். அவனைக் கதாநாயகனாக வைத்து சக்ஸஸ் 
செய்தவன் நான். ஒரு காமெடியனைக் கதாநாயகனாக வைத்து எந்தப் படமும் வெற்றி 
பெற்றதில்லை. என்.எஸ்.கே.வை கதாநாயகனாக வைத்து அண்ணா ஒரு படத்துக்கு கதை 
எழுதியிருக்கிறார். அந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை. அதன் பிறகு யாரும்
 அப்படி முயற்சி பண்ணதாகத் தெரியவில்லை. அப்படியிருந்தும் நாகேஷைக் 
கதாநாயகனாக்கினேன்.
 
நாகேஷைக் கதாநாயகனாக்க வேண்டும் என்பதற்காகவே "சர்வர் சுந்தரம்' கதை எடுக்கப்பட்டதா, இல்லை அது இயல்பாக அமைந்ததா?இயல்பாக
 வந்தது என்று சொல்ல முடியாது. நாகேஷை மனதில் வைத்துத்தான் "சர்வர் 
சுந்தரம்' நாடகம் எடுக்கப்பட்டது. அவருடைய உடல் அமைப்புக்கு... அவருடைய 
உடல் மொழிக்கு ஏற்ப சர்வர் பாத்திரத்தில் ஒரு கதையை உருவாக்கினேன். அதே போல
 ஜெமினி என்னை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டார். அவரை வைத்து படங்கள் 
எடுத்தேன்.
 
பெரிய நடிகர்களை வைத்துப் படங்கள் எடுப்பதில்லை என்று நீங்கள் தீர்மானித்திருந்தீர்களா? அப்படியெல்லாம்
 இல்லை. தேதி பிரச்னைகள் தராத நடிகர்களை வைத்துப் படம் எடுப்பதில் கவனமாக 
இருந்தேன். இந்தக் காட்சிக்குப் பத்து பேர் தேவை என்றால் நான் செட்டுக்குள்
 போகும்போது அந்தப் பத்துபேரும் இருக்க வேண்டும். இருக்கிற நடிகர்களை 
வைத்து காட்சிகளை எடுத்துக் கொள்ள எனக்கு முடியாது. இந்த 
நடிகரை இந்தப் பக்கம் நிற்க வைத்து படம் எடுத்துக் கொண்டு இன்னொரு நாள் 
இன்னொரு நடிகரை அந்தப் பக்கம் நிற்க வைத்து படம் எடுக்கிற 
சிந்தனைக்கெல்லாம் நான் போகவே இல்லை. இதற்கு சின்ன ஆர்ட்டிஸ்டுகளோ, புது 
முகங்களோதான் எனக்குச் சரியாக இருந்தார்கள். 
 
"புன்னகை'
 படம் தோல்வி அடைந்தது என்பதும், தாங்கள் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு சிகிச்சை
 எடுத்தீர்கள் என்பதும் தங்களைத் தளர வைத்திருக்க வேண்டும் அல்லவா?  ஆனால் 
நேர் மாறாக அதற்குப் பிறகுதான் நீங்கள் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி 
"ரிஸ்க்' எடுத்தீர்கள். அதற்கு ஏதாவது காரணம் உண்டா?ஹார்ட்
 அட்டாக்குக்குப் பிறகு நான் எடுத்த முடிவுகளில் ஒன்று புதுமுகங்களை 
அறிமுகப்படுத்துவது... "அவள் ஒரு தொடர்கதை' படத்துக்கு நடிகர்களை தேர்வு 
செய்த போது ஒரு படத்தில் தலை காட்டியிருந்தாலும் அவர்களைத் தவிர்த்துவிட 
வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். அந்தப் படத்தில் ஒரே ஒரு விதிவிலக்கு
 கமல்ஹாசன். அந்த விகடகவி வேடத்துக்கு எனக்குச் சரியான ஆள் 
கிடைக்கவில்லை. அந்த வேடத்தை கமலைத் தவிர வேறு யார் செய்திருந்தாலும் 
சரியாக இருக்காது என்றும் தோன்றியது. யாரை நம்பி அந்த வேடத்தை நான் 
ஒப்படைக்க முடியும்? அதனால் அவரை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற எல்லாரையும்
 புதுமுகங்களாக தேர்வு செய்தேன்.அந்தப் படத்தில் நடித்த சுஜாதா, ஜெய்கணேஷ், ஸ்ரீப்ரியா எல்லாருமே பின்னாளில் பிரபலமானார்கள்.நான்
 தியேட்டரில் இருந்து வந்தவன். தியேட்டரில் ஒழுக்கம் முக்கியம். அதில் 
ரொம்ப கண்டிப்பாக இருப்பேன். அதனால் ஆரம்பித்திலிருந்தே எனக்கு செகர்யமான 
நடிகர்களை வைத்து படம் எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். 
 
போகப் போக 
அதைத் தளர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது வேறு விஷயம்.சொல்லப் போனால் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது ஸ்ரீதர் பாணி. அவர் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார். அதைத்
 தொடர்ந்து நானும் புதுமுகங்களைத் தேட ஆரம்பித்து, பாலசந்தர் படம் என்றால் 
புதுமுகங்கள் இருப்பார்கள் என்று பேசும் அளவுக்குப் போனது. பாலசந்தர் படம் 
என்று மக்கள் மனதில் ஒரு எதிர்பார்ப்புக்கும் அதுவே காரணமானது. 
இல்லையென்றால் சிவாஜி படம், எம்.ஜி.ஆர். படமாகத்தான் பேசியிருப்பார்கள்.புது
 முகங்கள் என்ற போது அவர்களுக்குச் சொல்லித் தர மிகவும் அவகாசம் இருந்தது. 
முழுமையாகத் தயார் செய்ய முடிந்தது. நூறு சதவீதம் அவர்களைத் தயார் 
செய்தேன். வெற்றியும் நூற்றுக்கு நூறாக அமைந்தது. அதனால்தான் "அவர்கள்' 
படத்தில் சுஜாதாவை அனுவாகவும் ரஜினியை ராமநாதனாகவும் மக்கள் இன்னமும் 
ஞாபகம் வைத்திருக்கிறார்கள். 
 
சிவாஜியை
 வைத்து "எதிரொலி' படத்தை இயக்கினீர்கள். உங்களைத் திரையுலகில் 
அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கவில்லையே ஏன்?எம்.ஜி.ஆர்.
 ஒரு இமயம். என்னோடு தோழமையோடு இருக்கிற கமல்ஹாசன், ரஜினிகாந்தை 
வைத்துக்கூட ஒரு கட்டத்துக்கு மேல் நான் படம் இயக்கவில்லை. ரஜினியைக்கூட 
எஸ்.பி.முத்துராமனையும் கே.எஸ். ரவிகுமாரையும் வைத்துத்தான் இயக்க 
வைத்தேன்.ரஜினியிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று எனக்குத்
 தெரியும். அதை முத்துராமன் செய்வதுதான் சரியாக இருக்கும். என்னிடம் மக்கள்
 எதிர்பார்ப்பது வேறு. நானும் ரஜினியும் சேர்ந்தால் அந்த எதிர்பார்ப்பு 
வேறு மாதிரி ஆகிவிடும். அது படத்தைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்."எதிரொலி'யைப் பொறுத்த வரை அந்தக் கதை சிவாஜிக்கு ரொம்ப பிடித்திருந்தது.
 
 திரைக்கதையை ரொம்ப ரசித்தார்.கதையில்
 சிவாஜிகணேசன் ஒரு தவறு செய்துவிடுகிறார். அதற்காக குற்ற உணர்வில் படம் 
முழுக்க தவிக்கிறார். மனசாட்சியால் கடைசி வரை தொல்லை பட்டுக் கொண்டே 
இருப்பார். அப்ப சிவாஜி பெரிய இமேஜ் உள்ள ஹீரோ. அவர் போய் தவறு பண்ணிட்டதாக
 காட்டினால் ஒத்துக் கொள்வார்களா? அவரைப் போய் தப்பு பண்ணிட்டதா 
காட்டிட்டாரேன்னு என்னைக் குற்றம்சாட்டினார்கள். படம் சரியா போகவில்லை. 
ஆனால் மிகவும் ரசித்து எடுத்த படம் அது. இப்போது பார்த்தாலும் ஆச்சர்யமாக 
இருக்கும். அதை ஒரு புதுமுகத்தை வைத்து எடுத்திருந்தால் 
வெற்றி பெற்றிருக்கும் என்பது என் கணிப்பு. அப்படி எடுத்திருந்தால் அது 
பாலசந்தர் படமாகியிருக்கும். அது சிவாஜி படமாகிவிட்டது. அதிலிருந்து இமேஜ் 
ஒரு தடையாக அமைந்துவிட்டது. இமேஜ் இருக்கும் நடிகர்களை வைத்துப் படம் 
எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துவிட்டேன். 
 
அதனால்தான் எம்.ஜி.ஆரை வைத்துப் படமே இயக்கவில்லையா?எம்.ஜி.ஆர்.
 என்னுடைய இயக்கத்தில் ஒரு படம் எடுக்க விரும்பினார். ஆர்.எம். வீரப்பன் 
அது பற்றி பேசினார். அவர் கொடுத்த தேதியை நாம் மீறவே முடியாது. அவருக்கான 
பாடல்கள், காட்சிகள் எல்லாம் வேறு மாதிரி இருக்க வேண்டும். என் பாணி வேறாக 
இருந்தது. அதுவுமில்லாமல் நான் அப்போதுதான் நாடகத்தில் 
இருந்து வந்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தேன். இரண்டு, மூன்று படங்கள் 
கையில் இருந்தன. அவர் கொடுத்த தேதி எனக்குச் சரியாக வரவில்லை. நான் 
எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து கையெடுத்துக் கும்பிட்டு அதைத் 
தவிர்த்துவிட்டேன். (சிரிக்கிறார்)
 
அவர் உங்களை வசனகர்த்தாவாக அறிமுகம் செய்தார். அவர் உங்களுக்கு அறிமுகம் ஆனது எப்படி?என்
 நாடகத்தைப் பார்த்துத்தான். என்னுடைய "சர்வர் சுந்தரம்', "நாணல்', 
"மெழுகுவர்த்தி' என என் எல்லா நாடகத்துக்கும் அவர் வந்திருக்கிறார். "மெழுகுவர்த்தி'யைப்
 படமாக்க வேண்டும் என்று உரிமை வாங்கினார். என்ன காரணத்தினாலோ அது 
நடக்காமல் போய்விட்டது. இந்தியில் ப்ரான் நடித்த ஒரு படத்தின் உரிமையை 
வாங்கி அதைத்தான் "தெய்வத்தாய்' என்று படமாக்கினார்கள். அதற்கு என்னைத் 
திரைக்கதை வசனம் எழுதுவதற்கு எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். அது குறித்து ஆர்.எம்.வீரப்பன்தான் என்னிடம் பேசினார்.
 
நட்சத்திர
 அந்தஸ்துள்ள நடிகர்களுக்கு நீங்கள் கதை தயாரிக்கவில்லை. ஆனால் நீங்கள் 
இயக்கிய படங்களின் மூலமாகவே நட்சத்திர அந்துஸ்துள்ள நடிகர்கள் 
உருவானார்கள். கமல், ரஜினி இருவரும் உங்கள் தயாரிப்புகள். அவர்களின் 
நட்சத்திர பலத்துக்கு ஏற்ப கதையை உருவாக்கும் சூழ்நிலை உங்களுக்கு 
ஏற்பட்டதா?ஒரு கட்டத்துக்கு மேல அவர்களுக்குப் 
பண்ணமுடியலைதான். அப்கோர்ஸ்.. கமல் எனக்கு பிரச்னை இல்லை. 
"தப்புத்தாளங்கள்' படத்தில் பார்த்தீர்கள் என்றால் ஒரே ஒரு காட்சியில் அவர்
 தாசி வீட்டுக்கு வந்துவிட்டுப் போவதுபோல ஒரு காட்சி. கமல் அதை 
மகிழ்ச்சியாக நடித்துக் கொடுத்தார். அந்த மாதிரி ஒரு காட்சியை ரஜினியை 
வைத்துப் பண்ண முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 
 
ஆக்க்ஷன் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருந்த ரஜினியை வைத்து "தில்லு முல்லு' என்ற காமெடி படத்தை எடுக்க முடிந்ததே?ஆமாம்.
 ரஜினிக்கும்கூட அதில் நடிப்பதற்கு யோசனை இருந்தது. ""தைரியமா பண்ணுப்பா. 
நான் பாத்துக்கிறேன்'' என்று சொல்லித்தான் நடிக்க வைத்தேன். ரசித்து 
ரசித்துப் பண்ணிய படம். சந்தோஷமாக நடித்தார். அதற்கப்புறம்தான்
 அவர் படங்களில் முன்பகுதியில் காமெடியாகவும் பின் பாதியில் சீரியஸாகவும் 
இருப்பது மாதிரி ஒரு ட்ரெண்ட் உருவானது. அண்ணாமலை, முத்து எல்லாம் அந்த 
டைப் படங்கள்தான். காமெடியில் அவரை ரசிக்கிறார்கள் என்பது தெரிந்ததும் அது 
ஒரு பார்முலாவாகவே மாறிவிட்டது. 
 
வித்தியாசமான முயற்சியாக 
நீங்கள் எடுத்த புன்னகை, நான் அவனில்லை ஆகியவை பெரிய வரவேற்பைப் பெற 
முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?நான்
 மிகவும் முன்னாடி செய்துவிட்ட படங்கள் அவை. மக்கள் தயாராவதற்கு முன்னால் 
வந்துவிட்டதுதான் அவை வரவேற்பைப் பெறமுடியாமல் போனதற்குக் காரணம். "நான் 
அவனில்லை' இப்போது ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுவிட்டது. இருந்தாலும் 
நான் அப்போது செய்த ஸ்கிரீன் ப்ளே இல்லை இது. அது வேறு. வெற்றி 
பெற்றுவிட்டது என்பது வரை சந்தோஷம்தான்.கல்கி எடுத்தேன். 
அதில் கணவனால் புறக்கணிக்கப் பட்ட பெண்ணுக்கு ஒரு புதுமைப் பெண் ஒருத்தி 
ஒரு முடிவெடுக்கிறாள். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் அன்புக்காக அவள் 
தன்னைத் தியாகம் செய்கிறாள். அந்தக் கணவனிடமிருந்து ஒரு 
குழந்தையைப் பெற்று புறக்கணிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணுக்கு
 அந்தக் குழந்தையைத் தருகிறாள். இப்போது எடுத்தால் அந்தப் படம் பிரமாதமாகப்
 போகும் என்பது என் நம்பிக்கை. அது ஒரு பதினைந்து வருஷத்துக்கு முன்னால் 
எடுத்துவிட்ட படம். ஒரு பெண் அப்படி செய்வாளா என்ற பதறினார்கள். சிலர் 
ஆவேசப்பட்டார்கள். இப்போது காலம் மாறியிருக்கிறது. பலருடைய சிந்தனைகளை 
மாற்றியிருக்கிறது. வாடகைத் தாய் என்றெல்லாம் இப்போது பேசுகிறார்கள்.   
ஸ்ரீதர்,
 மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம்.. என உங்களுக்கு 
முன்னும் உங்கள் சமகாலத்திலும் பணியாற்றிய பல முக்கியமான இயக்குநர்கள் 
இருக்கிறார்கள். இதில் தமிழ் சினிமாவின் தரத்தை முன்னெடுத்துச் சென்ற 
படங்களாக நீங்கள் கருதுவது எவற்றை?ஒவ்வொருத்தருக்கும் 
ஒரு சிறப்பு இருக்கிறது. பாரதிராஜாவின் முதல் படமே பிரமிக்க வைத்த 
படம்தான். கிழக்குச் சீமையிலே எனக்கு மிகவும் பிடித்தபடம். மகேந்திரனின் 
உதிரிப்பூக்கள், மணிரத்னத்தின் இதயக்கோயில் எந்திரன் என நிறைய சொல்லலாம். 
 
கறுப்பு
 வெள்ளைப் படங்களில் இருந்து வண்ணப்படங்களுக்கு மாறிய முக்கியமான 
காலகட்டத்தைக் கடந்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு அந்த மாற்றம் ஏதேனும்
 பாதிப்பை ஏற்படுத்தியதா? 
கறுப்பு வெள்ளையில் 
எடுத்ததுமாதிரி எமோஷனல் காட்சிகள் கலரில் வராது. வண்ணப் படங்களின் காலம் 
வந்த பின்பும் நான் கறுப்பு வெள்ளையில்தான் பிடிவாதமாக படங்கள் எடுத்துக் 
கொண்டிருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் அது பிளாக் அண்டு ஒயிட் காலம் என்று
 பேச ஆரம்பித்த பின்பு வேறு வழியில்லாமல் நானும் கலரில் எடுக்க 
ஆரம்பித்தேன். நான் முதலில் எடுத்த படம் நான்கு சுவர்கள். அது சரியாகப் 
போகவில்லை. நல்ல படம் அது. முதல் கலர் படம் என்பதால் 
கலர்படம்.. கலர் படம் என்று அதிலேயே நிறைய யோசனை செலவானது.
 
 சொல்லப் போனால் 
வண்ணத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினால் என்னையே நான் இழக்க 
வேண்டியதாக இருந்தது. இப்பவும் மறுபடி எடுக்கலாம். அப்படிப்பட்ட கதை அது. 
என்னால் என் சிந்தனையை அதில் முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போனது. 
வண்ணம் வந்த போது ஏற்பட்ட பாதிப்பு என்றால் இதுதான்.ஆனால் 
இப்போது மக்கள் கலரில் எடுக்கும் படங்களை விரும்பத் தொடங்கி நிறைய 
மாற்றங்கள் வந்தாகிவிட்டது. இனிமேல் மறுபடி கறுப்பு வெள்ளைக்குத் திரும்ப 
முடியாது. நூற்றுக்கு நூறு எடுத்துக் கொண்டால் அதில் கறுப்பு வெள்ளையிலேயே 
அத்தனை எமோஷனையும் காட்ட முடிந்தது. கலரில் எடுத்திருந்தால் என்ன 
செய்திருப்பேன்? அதில் இடம் பெறும் ஐந்து பெண்களுக்கும் ஐந்து பாடல் 
வைத்திருப்பேன். சிந்தனை அப்படித்தான் போயிருக்கும்.
மேடை 
நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர்... மூன்றிலும் சாதனை 
படைத்திருந்தாலும் உங்கள் படைப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் களமாக
 இதில் எதைக் கருதுகிறீர்கள்?நாடகம், சினிமா, 
தொலைக்காட்சித் தொடர் மூன்றுமே மூன்று தனித்தனி கம்பார்ட்மெண்டுகள். நாடக 
பயிற்சி சினிமாவுக்கு பயன்படும். ஆனால் சினிமாவுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள 
வேண்டியிருக்கும். எனக்கே அப்படி வேறு மீடியத்துக்கு மாறும்போது அவகாசம் 
தேவைப்பட்டது. நாடகத்தின் தாக்கம் என்னிடம் அதிகம் இருந்தது. நாடகம் 
என்றால் உயிரை விடுவேன். பத்து ஆண்டுகள் நாடகமே உலகம் என்று இருந்தேன். 
 
அதனால்
 அதிலிருந்து சினிமாவுக்கு என்னைத் தயார்படுத்திக் கொள்வதற்குள் ஐந்தாறு 
சினிமாக்களைக் கடந்துவிட்டேன். ஆரம்பத்தில் என்னுடைய நாடககங்களையேதான் நான்
 சினிமாவாக எடுத்தேன். அதனால் எந்த இடத்தில் கைதட்டல் விழும் எந்த இடத்தில்
 மக்கள் கண்கலங்குவார் என்பது தெரியும். அந்தந்த காட்சிகளை அப்படி அப்படியே
 வைத்தேன். சினிமாவை ஒத்திகைப் பார்த்துவிட்டு படம் 
எடுப்பதுமாதிரியான அனுபவம் அது. சினிமாவுக்காக சிந்திக்கும்போது அதை 
எதிர்பார்க்க முடியாது. அதுதான் வித்தியாசம்.
ஏ.ஜி.எஸ்.ஸில் பணியாற்றிய காலங்களிலேயே நாடகம் போட ஆரம்பித்தீர்கள் அல்லவா?1950-ல்
 ஏ.ஜி.எஸ்.ஸில் சேர்ந்தேன். 59-லிருந்து நாடகம் போட ஆரம்பித்தேன். 63, 
64-ல் சினிமாவுக்கு வந்துவிட்டேன். ஏ.ஜி.எஸ்.ஸில் என்னுடன் பணியாற்றிக் 
கொண்டிருந்த அனந்து என் நாடகங்களைப் பார்த்துவிட்டு என்னுடன் பழக 
ஆரம்பித்தார். சினிமாவிலும் அந்த நட்பும் பங்களிப்பும் தொடர ஆரம்பித்தது. 
 
வி.குமார்,
 எம்.எஸ். விஸ்வநாதன்... பிறகு இளையராஜா... ஏ.ஆர்.ரஹ்மான் என உங்கள் 
படங்களில் இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களின் 
தனித்துவமான அடையாளம் என்று நீங்கள் உணர்ந்தது எதை? 
 
ஒவ்வொருத்தருமே
 இசை மேதைகள். அவர்களுக்குத் தீனிபோடுவது சாதாரண விஷயமில்லை. என்னுடைய 
படங்களில் மொத்த டூயட் என்று பார்த்தால் நான்கைந்து பாடல்கள்தான் 
இருக்கும். மற்றதெல்லாம் சிச்சுவேஷன் பாடல்கள்தான். எல்.ஆர். ஈஸ்வரி 
ஹைபிட்சில் பாடக்கூடியவர். அவரை காதோடுதான் நான் பாடுவேன் என்று பாட 
வைத்தது வி.குமார் இசையில்தான். அதே படத்தில் மென்மையான குரலில் பாடக்கூடிய
 பி.சுசிலாவை நான் சத்தம்போட்டுத்தான் பாடுவேன் என்று ஹை பிட்சில் 
பாடவைத்தோம். இசையில் அற்புதமான பல முயற்சிகளை நாங்கள் செய்தோம்.எம்.எஸ்.விஸ்வநாதனும்
 நானும் பணியாற்றிய படங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அத்தனைப் 
பாடல்களும் காலம்கடந்து நிற்பவை. எம்.எஸ்.வியும் கண்ணதாசனும் எனக்குக் 
கொடுத்த விதவிமான மெட்டுக்களுக்கும் பாடல்களுக்கும் கணக்கே இல்லை. அத்தனை 
அற்புதமான பாடல்கள். தெய்வம்தந்த வீடு வீதியிருக்கு..., காற்றுக்கென்ன 
வேலி.. கடலுக்கென்ன மூடி.. என்ன அற்புதமான பாடல்கள்..? 
 
அதுவரை 
எம்.எஸ். விஸ்வநாதனின் இசையமைப்பில் படங்களை இயக்கிய நீங்கள் பிறகு ஏன் 
திடீரென்று இளையராஜாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்தீர்கள்?"சிந்து
 பைரவி' படம் வொர்க் பண்ணும்போது இந்தப் படத்தை இளையராஜாவை வைத்து பண்ணப் 
போகிறேன் என்று எம்.எஸ்.வி.யிடம் சொன்னேன். படத்தில் கர்னாடிக்கோடு ஃபோக் 
சாங்கும் இருப்பதால் அதற்கு இளையராஜா பொருத்தமாக இருப்பார் என்று சொன்னேன்.
 அவருடைய சம்மதத்தோடுதான் இளையராஜாவிடம் சென்றேன். ராஜாவுக்கு ரொம்ப 
சந்தோஷம். வைரமுத்துவின் வரிகளில் பாடறியேன் படிப்பறியேன் கிடைத்தது. 
எல்லாமே சிட்சுவேஷன்தான். குமாரிடம் பணியாற்றியபோதே எம்.எஸ்.வியிடம் 
போனேன். எம்.எஸ்.வியிடம் இருக்கும்போதே ராஜாவிடம் போனேன். அப்படித்தான் 
ரஹ்மானிடம் வந்தேன். அதற்கு எந்த விருப்பு வெறுப்பும் காரணமில்லை. கதையைச் 
செழுமைபடுத்த என்ன தேவையோ அதை நாடிப் போனேன். கதைதான் அதற்கு யார் தேவை 
என்பதைத் தீர்மானிக்கிறது. 
 
தெலுங்கில் மரோசரித்ரா, 
இந்தியில் ஏக் துஜே கேலியே போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தும் அந்த
 மொழிப் படங்களில் நீங்கள் தொடர்ந்து படங்கள் இயக்கவில்லேயே? 
ஒரு
 மனுஷன்தானே? எவ்வளவு பண்ண முடியும்? இத்தனைக்கும் தெலுங்கில் என்னை 
இயக்கும் கே.விஸ்வநாத்துக்கு நிகராகக் கொண்டாடினார்கள். இருந்தும் தமிழோடு 
நிறுத்திக் கொண்டேன். அதுவுமில்லாமல் பணம் சேர்க்கிற ஆசை 
என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. தமிழ் எனக்கு வசதியாக இருந்தது அதிலேயே 
கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். 
 
உங்கள் படங்களில் பல 
மொழியினரை நடிகர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் 
நடிக்கும் திரைப்படங்களில் அவர்கள் எல்லோரும் சொந்தக் குரலில்தான் படத்தில்
 பேச வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தீர்கள். ரஜினி, சரிதா, 
பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் அவர்களின் உச்சரிப்புக்காகவே 
சிலாகிக்கப்பட்டார்கள். இப்போது நடிக்கும் நடிகைகள் பலருக்கும் டப்பிங் 
கலைஞர்களே குரல் கொடுக்கிறார்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 
 
பெரும்பாலும்
 என் படத்தில் அதைப் பிடிவாதமாகக் கடைபிடித்தேன். ஒன்றும் செய்வதற்கில்லை 
என்று நினைத்தவர்களுக்கு மட்டும் டப்பிங் வைத்துக் கொண்டேன். 
 
ரஜினி, கமலிடம் கண்டு வியந்த பல விஷயங்கள் இருக்கும். அவர்களின் குருவாக அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன? 
 
""நூற்றுக்கு
 நூறு'' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் 
உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப 
ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு 
புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி 
என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் 
தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன். அதை அந்தப்
 படத்தில் பயன்படுத்தியிருந்தேன். அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு 
குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, 
கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதைத்தான் நான் பார்க்கிறேன். 
 
தமிழ் சினிமா தொழில்நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. அந்த வளர்ச்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? 
 
ஆகாயத்தில்
 மூன்று குட்டிக்கர்ணம் அடிப்பதற்கும் திரையில் நூறு ரஜினியைக் 
காட்டுவதற்கும்தான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். அப்போதே 
யதார்த்தம் போய்விடுகிறது. கிராபிக்ஸைப் பயன்படுத்தி வியக்க வைப்பதற்கான 
கதைகள் வேறு. அவதார் மாதிரியான விஞ்ஞான புனைகதைகளுக்கும் மாயாஜால 
படங்களுக்கும் குழந்தைகளுக்கான அனிமேஷன்களுக்கும் அத்தகைய 
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். யதார்த்த 
படங்களுக்குத் தேவையில்லை. யதார்த்த கதைகள் என்பவை கேமிரா சொல்லும் கதையாக 
இருக்க வேண்டுமே தவிர, கம்ப்யூட்டர் சொல்லும் கதையாக இருக்கக் கூடாது. நான்
 சொல்வதை இன்றைக்கு நிறைய பேர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 
 
அப்படியானால் நல்ல திரைப்படம் உருவாவதற்கு இந்தத் தொழில்நுட்பம் எல்லாம் தேவையில்லை என்கிறீர்களா? 
எடிட்டிங், கேமரா தொழில்நுட்பம் போன்ற வளர்ச்சிகள் காலத்தின் கட்டாயம். அவை நிச்சயம் தேவை. 
 
உலகத் தரமான சினிமா என்பது பற்றி பலரும் பேசுகிறார்கள். உங்கள் பார்வையில் உலக சினிமா என்றால் என்ன? 
உலக சினிமா 
எல்லாமே நல்ல சினிமா இல்லை. நல்ல சினிமாதான் உலக சினிமாவாக இருக்க 
முடியும். நுணுக்கமாகச் சொல்ல வேண்டியதை நுணுக்கமாகவும் விரிவாகச் சொல்ல 
வேண்டியதை விரிவாகவும் சொல்வதே நல்ல சினிமாவாக இருக்கமுடியும். ரேவும் 
அடூர் கோபாலகிருஷ்ணனும் எடுத்தவை உலகத்தரமானவை. ஆனால் அது எல்லோருக்கும் 
புரிந்து கொள்ள முடிகிற படமாக இருக்க வாய்ப்பில்லை.உலகத்தரம்
 வாய்ந்த ஜனரஞ்சக சினிமா என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. 
எல்லாவற்றையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. உலக சினிமா வேறு, சினிமா உலகம் 
வேறு என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.. அதுதான் என் கருத்தும். 
 
உங்கள்
 யூனிட் என்று சொல்லும் அளவுக்கு உங்களுக்கென கேமிராமேன், கதைவிவாதக் 
குழுவினர் செயல்பட்டனர். குறிப்பாக அனந்து உள்ளிட்டவர்களைப் பற்றி? 
 
வெவ்வேறு காலகட்டங்களில் பலர் பணியாற்றியிருக்கிறார்கள். முன்னரே சொன்னது மாதிரி இசையமைப்பாளர்கள், கவிஞர்கள்...ஒளிப்பதிவாளர்களில்
 லோகநாத் 55 படங்களுக்கு மேல் பணியாற்றினார். அதன் பிறகு அவருடைய 
அஸிஸ்டெண்ட் ரகுநாதரெட்டி 25 படங்களுக்குப் பணியாற்றினார். 
சீரியலுக்கும்கூட அவர்தான் செய்கிறார். எடிட்டிங்கில் பார்த்தால் 
ஆரம்பகாலத்தில் நடராஜ முதலியார் செய்தார். அதற்கப்புறம் 
என்.ஆர். கிட்டு... அவரால் முடிகிற வரை எனக்கு எடிட்டிங் செய்தார். அவர் 
என்னைத் தவிர வேறு யாருக்கும் பணியாற்றியதில்லை. அனந்து நாடக 
உலகத்திலிருந்தே உடன் இருந்தவர். ஆரம்பத்தில் 10-15 படம் தவிர என் எல்லா 
படத்திலும் இருந்தவர். வசந்த் எடுத்துக் கொண்டால் பதிமூன்று வருஷம் வொர்க் 
பண்ணியிருக்கிறார். சுரேஷ்கிருஷ்ணா ஒன்பது வருஷம்.. சரண் ஏழெட்டு வருஷம்.. 
இடையில் வந்துவிட்டுப் போனவர்கள் மிகவும் குறைவு. 
 
கடந்த 50
 ஆண்டுகளாக திரைத்துறையில் செயல்பட்டு வருகிறீர்கள். இந்திய அரசின் மிக 
உயர்ந்த திரைத்துறை சாதனையாளர் விருதான பால்கே விருது பெற்றிருக்கும்  இந்தச் சந்தர்ப்பத்தில் திரைத்துறையினருக்கு உங்கள் அறிவுரை? 
 
அறிவுரை
 எல்லாம் பெரிய வார்த்தை... ஒரே ஒரு விஷயம்தான்.. அர்ப்பணிப்புதான் 
முக்கியம். செட்டுக்கு வந்துவிட்டால் சினிமாவைத் தவிர எந்த சிந்தனையும் 
இருக்காது. அர்ப்பணிப்புதான் அடிப்படை.. அப்புறம் உழைப்பு.. அப்புறம் 
திறமை... திறமையில்லாம அர்ப்பணிப்பு மட்டும் இருந்து பிரயோஜனமில்லையே.. 
இயக்குனர் கே.பாலச்சந்தர் பிறந்தது
 தஞ்சாவூர் தாலுக்காவில் உள்ள நன்னிலம். இயக்குநர், தயாரிப்பாளர், 
திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குநர், தொலைக்காட்சி நாடகத் 
தயாரிப்பாளர் என கலை உலகின் பலத்துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டியவர். வாழ்க்கைத் துணை ராஜம். மகன், கைலாசம். மகள் புஷ்பா கந்தசாமி.கே.பாலசந்தர்
 என்று அறியப்பட்ட கைலாசம் பாலசந்தர் பிறந்தது ஜூலை 9, 1930-ல். வீட்டுத் 
திண்ணையில் பள்ளிப்பருவத்திலேயே நாடகம் போட்டவர். 
 
 மேடை நாடகத் துறையில் 
இருந்து திரைத்துறைக்கு வந்தவர். எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய்' 
படத்துக்கு வசனம் எழுதினார். திரைத்துறையில் 1965-ம் ஆண்டு வெளியான 
"நீர்க்குமிழி' இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். நாகேஷ் இதில்
 கதாநாயகனகாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், 
மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள் ஆகியவையே 
கருப்பொருளாய் விளங்கின. "புன்னகை', "அவள் ஒரு தொடர்கதை', "அபூர்வ 
ராகங்கள்', "அவர்கள்', "புன்னகை மன்னன்', "எதிர் நீச்சல்', "வறுமையின் 
நிறம் சிகப்பு', "உன்னால் முடியும் தம்பி' முதலியன இவர் இயக்கிய சிறந்த 
படங்களில் சில.
 
 90- களுக்குப் பிறகு "கையளவு மனசு' போன்ற 
பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.கவிதாலயா 
என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதன் மூலமாக பிற 
இயக்குநர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார். அவற்றில் 
"நெற்றிக்கண்', "ராகவேந்தரா', "சிவா', "ரோஜா', "முத்து' ஆகியவை 
குறிப்பிடத்தக்கவை.
 
இவருக்கு 1987ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது 
கொடுக்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டுக்கான தாதாசாகெப் பால்கே விருதுக்கு இவர் 
தேர்ந்தெடுக்கப்பட்டார்.இயக்குநர் ஸ்ரீதரைப் போலப் பல 
புதுமுகங்களை ஆர்வத்துடன் அறிமுகம் செய்தவர் பாலசந்தர். அவர்களுள் உலக 
அளவில் புகழ் அடைந்தவர் ரஜினிகாந்த். கமலஹாசனை கதாநாயகனாக்கியது பாலசந்தர் 
அல்ல எனினும், வரிசையாக அவருக்கு வாய்ப்புக்களை ஏணிப்படிகளாக அமைத்துக் 
கொடுத்தவர் பாலசந்தர்தான். ""அவள் ஒரு தொடர்கதை'' போன்ற சில 
திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். 
 
படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான 
இது ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. "பட்டினப்பிரவேசம்' திரைப்படத்திலும்,
 டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் ஒரு 
வெற்றிப்படமே.மேலும், பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் 
அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு 
தொடர்கதை) "ஷோபா (நிழல் நிஜமாகிறது)' சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா 
(தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோரைக் குறிப்பிடலாம்."வறுமையின் நிறம் சிகப்பு' திலீப், "நிழல் நிஜமாகிறது' அனுமந்து ஆகியோர் இவருடைய அறிமுகங்களே. 
 
மேஜர்
 சுந்தரராஜன் (மேஜர் சந்திரகாந்த்), எஸ். வி. சேகர் (வறுமையின் நிறம் 
சிகப்பு), மற்றும் மௌலி (நிழல் நிஜமாகிறது), ஒய். ஜி. மகேந்திரன் 
(நவக்கிரகம்), காத்தாடி இராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) ஆகியோர் நாடக 
மேடையில் இருந்து இவரால் திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். தமது
 இயக்கத்தில் பாலசந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், 
நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர். நடிகையரில் 
செüகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
 
வெற்றி,
 தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் 
பாலசந்தர் அனுபவித்தது உண்டு. இவர் முதன் முதலில் இயக்கிய வண்ணப்படமான 
"நான்கு சுவர்கள்' தோல்வி அடைந்தது. அதே கால கட்டத்தில் அவரது "நூற்றுக்கு 
நூறு' வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டியது.அரசியல்
 களத்தைத் தொட்டுப் பார்த்த பாலசந்தரின் படங்கள் "தண்ணீர் தண்ணீர்', 
"அச்சமில்லை அச்சமில்லை'. "தண்ணீர் தண்ணீர்' கோமல் சுவாமிநாதனின் 
நாடகத்திலிருந்து உருவானது. கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து 
நடித்த கடைசிப் படம் பாலசந்தரின் "நினைத்தாலே இனிக்கும்'. பாலசந்தர் 
வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவே.பாலசந்தரின்
 கைவண்ணத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் "மேஜர் சந்திரகாந்த்'. இவர் 
கறுப்பு வெள்ளையில் எடுத்த கடைசி படம் "நிழல் நிஜமாகிறது,
 
1969
 முதல் பால்கே விருது மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. 
இந்தியச் சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் பால்கே மராட்டிய மாநிலத்தைச்
 சேர்ந்தவர். 1913-ல் "ராஜா ஹரிசந்திரா' என்ற படத்தை முதன் முதலாக 
தயாரித்தார். 19 ஆண்டுகளில் 95 திரைப்படங்களைத் தயாரித்தவர். மெüனயுகம் 
முடியும்போதே இவருடைய சினிமா வாழ்வும் முடிவுக்கு வந்துவிட்டது. "சேது 
பந்தனம்' என்ற இவருடைய கடைசி மெüனப்படம் 1932-ல் வெளியானது.தமிழ்
 சினிமா பங்களிப்புக்காக இதுவரை நான்கு பேர் தாதா சாகேப் பால்கே விருது 
பெற்றிருக்கிறார்கள். எல்.வி. பிரசாத் (1982), நாகிரெட்டி (1986), 
சிவாஜிகணேசன் (1996), கே.பாலசந்தர் (2011).