ஆர்.சி.சக்தி
அவர்களின் உணர்ச்சிகள் 70களிலேயே மிகவும் முற்போக்கான படம்,கொடிய
பால்வினை நோயான எயிட்ஸ் கண்டறியப்பட்டதற்கு முன்னால் புழங்கிய மேகநோய்
அல்லது வெட்டை நோய் முற்றி சானிட்டோரியத்தில் சிகிச்சை பெற்று
மரணப்படுக்கையில் அவதியுரும் நோயாளியாக கமல்ஹாசன்
தோன்றியிருப்பார்.அவருக்கு இளம் வயதில் மிகவும் சர்ர்சையான கதாபாத்திரமாக
அமைந்தது.
இதில் ஸ்ரீவித்யா சோபிஸ்டிகேட்டட் விலைமங்கை, ஸ்ரீவித்யா மீது லாட்ஜ்
அட்டெண்டரான கமல் வேட்கை கொண்டிருக்க,அவர் இவரைத் தன் உடன்பிறவாத் தம்பியாக
நினைப்பார். விபத்தில் காயமுற்ற கமல்ஹாசனை இதிலும் காப்பாற்றி அடைக்கலம்
தருவார். தம்பியாகவும் தத்து எடுத்துக்கொள்வார்,ஆனால் கமலின் மனதில்
வக்கிரம் இன்னும் மீதமிருக்கும்,அதன் விளைவாக ஸ்ரீவித்யா செலவுக்குத் தரும்
பணத்தில் எளிதில் கிடைக்கும் விலைமங்கைகளை கண்டபடி கூடுவார்.அதில் நோயால்
பீடிக்கப்படுவார்.
இதில்
மேஜர் சுந்தர்ராஜன் ரகசிய நோய் டாக்டராக வருவார். வி.கோபாலகிருஷ்ணன் நல்ல
நடிகர் இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் செய்திருப்பார்,அவரை நன்கு
பயன்படுத்தியவர்களில் இயக்குனர் ஸ்ரீதருக்கு அடுத்த படியாக ஆர்.சி
.சக்தியும் ஒருவர்.
மனைவியின் கள்ளத்தொடர்பு துரோகம் சகித்து அவளை மன்னிக்கும் கணவன் கதாபாத்திரம் தமிழுக்கு முதன்மையானதும் புதுமையானதும் ஆகும்.
அதே
போல இளம்விதவை கதாபாத்திரமும் உண்டு, அந்நாட்களில் இளம் விதவைக்கு
மறுமணம் செய்யாமல் அவளை விரகத்தில் ஏங்க விட்ட சமூகத்துக்கு நல்ல சவுக்கடி
தந்த படம் இது,
இதே
போல பெண்களால் பயன்படுத்தப்பட்டு அவர் வீட்டாரால் வஞ்சிக்கப்பட்ட ஏழை
வேலைக்காரன் கதாபாத்திரத்தை கமல் பின்னாட்களில் சிகப்பு ரோஜாக்கள்
படத்திலும் தொடர்ந்து செய்தார்,
ஆர்.சி.சக்தியின் கூட்டுப்புழுக்கள் என்னும் ரகுவரன் நடித்த திரைப்படம் ஒரு அருமையான படைப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்,
அவரின்
சிறை,தர்மயுத்தம் ,மனிதரில் இத்தனை நிறங்களா? எல்லாம் அவரின் அருமையான
படைப்புகள்.90 களுக்குப் பின்னர் அவர் வாய்ப்புகள் இன்றி படம் இயக்கவில்லை,
கமல்ஹாசனுக்கு
ஒரு வகையில் ஏணியாகவும் தோனியாகவும் இருந்தவர் ஆர்.சி.சக்தி,அவரை கௌரவிக்கும் வண்ணமாகவே தன் தேவர்மகன் திரைப்படத்தின் நாயகன் பெயரை சக்தி என்று வைத்தார் என நினைக்கிறேன். அவர்
புதுமையான கதைகளை படமாக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்தார்,முடிந்தவரை
படைத்தார்,அதில் சில குப்பைகளும் உண்டு,ஆனால் அவரின் முயற்சிகள்
முக்கியமானவை,தமிழ் சினிமாவின் மிகவும் அண்டர்ரேட்டட் இயக்குனர்,அவருக்கு என் அஞ்சலிகள்.அவரின் படைப்புகளை இனி தேடி பார்ப்போம்.