அமீரகத்தில வேலை பார்க்கையில் வேலைமீது ஓவர் பில்டப் தரும் நபர்களை மலையாளிகள் பாவனாயி என்று கிண்டல் செய்வதை கவனித்துள்ளேன்,தமிழில்
"கதாநாயகன்" பார்த்தவர்கள் ஒருமுறை மூல வடிவமான நாடோடிக்காற்று (1987) பாருங்கள்,ஒரு க்ளாஸிக் என்பதன் அர்த்தம் அறியலாம் .
நாடோடிக்காற்றில் சிரிப்பு ஓவர்பில்டப் வில்லன் பாவனாயி கதாபாத்திரம் உலகெங்கும் மலையாளிகளிடம் அப்படி புகழ்பெற்றது,
அது போலவே சிரிப்பு ஃப்ராடு கஃபூர் இக்கா (மாமுக்கோயா) கதாபாத்திரம் உலகெங்கும் மலையாளிகளிடம் அப்படி புகழ்பெற்றது.
கள்ளத்தோணியில் கொச்சினில் இருந்து துபாயில் செல்ல முயன்று மெட்ராஸில் இறக்கிவிடப்பட்ட மோகன்லாலும் சீனிவாசனும் வில்லன் திலகனின் கடத்தல் தொழிலுக்கு தங்களையும் அறியாமல் அத்தனை குழப்பமும் நஷ்டமும் விளைவிப்பர், அந்த இரு வேலையில்லா பட்டதாரிகளை கொல்ல பம்பாயின் புகழ்பெற்ற பெய்ட் கில்லரான பாவனாயியை (இயற்பெயர் பி.வி.நாராயணன் ) (கேப்டன்ராஜ்) பெரும்பணம் தந்து தருவிப்பார் திலகன், பாவனாயி பெட்டியில் வில் அம்பு, மலபார் கத்தி, RDX பாம்ப், டேப்ரிக்கார்டர் பாம்ப், துப்பாக்கி என அனைத்தும் profesional ஆக வைத்திருப்பார், இவரும் திலகனும் கொலைசதிக்கு திட்டம் தீட்டுகையில் சிரிப்பு சரவெடியாக இருக்கும்.
மோகன்லால் காய்கறி விற்கும் தள்ளு வண்டியில் RDX பாம்ப் வைப்பார் பாவனாயி, அதில் தப்புவார் மோகன்லால்.
இரண்டு நாள் தான் கான்ட்ராக்ட் தந்த அபாயின்மெண்ட் என்பதால் அடுத்து சீனிவாசனை கொல்ல விழைவார் பாவனாயி ,இசை அமைப்பாளர் சங்கர் கணேஷுக்கு ஒருவர் டேப்ரிக்கார்டரில் குண்டு வைத்து தபாலில் அனுப்பி அவர் இயக்கியதும் வெடித்ததே அதே டெக்னிக்கில் சதி செய்வர் , இங்கே சாலையில் அனாதையாக இருந்த டேப்ரிக்கார்டரை பார்த்ததும் அதை ஆன் செய்யாமல் கொண்டு போய் அடகு வைக்க மார்வாடி கடைக்கு செல்வார் சீனிவாசன், பாவனாயிக்கு மார்வாடி கடையில் வெடித்தால் விபரீதம் என்பதால் கடைவாசலில் வைத்து தன் கையாளை வைத்து பெரும் பணம் தந்து டேப்ரிக்கார்டரை திரும்ப வாங்கி வருவார்.
இறுதியாக இருவரை சர்கிள் இன்ஸ்பெக்டர் அழைத்ததாக ஆள்விட்டு அண்ணாநகர் விஸ்வேஸ்வரையா டவருக்கு வரசொல்லி, பெட்டியை திறந்து காட்டியவர் எப்படி சாக ஆசைப்படுகிறீர்கள் என்பார்,
அங்கே 12 ஆவது மாடியில் சண்டை நடக்கையில் இவர்கள் மீது பாய்கிறேன் என்று கைப்பிடி கம்பியில் பாய்கையில் குறிதவறி தரையில் விழுந்து இறப்பார் பாவனாயி .
1987 ஆம் ஆண்டு அண்ணாநகர் விஸ்வேஸ்வரையா டவரின் படங்களைப் பாருங்கள், அந்த கல்வெட்டு மீது கூட நம் ஆட்கள் எப்படி கைவரிசை காட்டி உள்ளனர் பாருங்கள், இந்த கோபுரத்தை வடிவமைப்பதற்கு முன் அகில இந்திய அளவில் வடிவமைப்பு போட்டி நடத்தப்பட்டது, அதில் வென்றவர் இந்தியாவின் பழம்பெரும் கட்டிடக்கலைஞரான காலஞ்சென்ற திரு. யஹ்யா மெர்சண்ட் (Yahya Merchant) (1903-1990)ஆவார், மும்பையின் சர்JJ காலேஜ் ஆஃப் ஆர்கிடெக்சர் என்ற பெருமைமிகு கல்லூரியில் பயின்றவர். அவரது பெருமைமிகு தனித்துவமான படைப்புகள், பொதுகட்டிடங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நவீன இந்திய கட்டிடக்கலைக்கு பெருமை சேர்ப்பவை,
இந்த விஸ்வேஸ்வரையா கோபுர வடிவம், துபாயின் புர்ஜ் அல் அராப் கட்டிட வடிவத்தின் முன்னோடி எனலாம், காரணம் புர்ஜ் அல் அராப் கட்டிடத்தின் படத்தை முதலில் 2000 ஆம் ஆண்டு ஒரு காலண்டரில் பார்க்கையில் நம் விஸ்வேஸ்வரையா டவர் தான் நினைவுக்கு வந்தது, வளைவான structural spines நிறுவி மொத்த தளங்களை தாங்கிப்பிடிப்பது இரண்டு கட்டிடங்களும் கொண்ட ஒற்றுமை, anna nagar tower ல் ஐந்து structural spine இருக்கிறது , burj al arab ல் நான்கு structural spine இருக்கிறது . Quaid-e-Azam Mausoleum நினைவுச் சின்னத்தை வடிவமைத்தவர் யஹ்யா மெர்சண்ட்.
1968 ஆம் ஆண்டு மக்கள் உபயோகத்துக்கு 60 லட்சம் ரூபாய் செலவில் திறக்கப்பட்ட தொலைநோக்கான கட்டிடக்கலையைக் கொண்ட நூறடி உயர கோபுரம், எப்படி சுவற்றில் பெயர்களை எழுதி கிறுக்கி வைத்திருக்கின்றனர் பாருங்கள் நம் மக்கள், கல்வெட்டில் ஆர்கிடெக்ட் பெயரைக் கூட அவரின் மேன்மை அறியாமல் மார்க்கரால் மெழுகி தன்பெயரை எழுதி வைத்திருந்தனர் என்று இணைப்பு படம் ஒவ்வொன்றாக பாருங்கள், நான் முதலில் 1998 ஆம் ஆண்டு செல்கையில் இன்னும் கோரமான வசைகள் சுவர்களில் எழுதி இருந்தது, இன்று பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முழுக்க கிரில்களால் மூடி சுவர்களில் கலை வேலைபாடுகள் செய்து புதிய தரை வேய்ந்து சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் மீண்டும் திறந்துள்ளனர், இனியாவது மக்கள் கிறுக்க கொண்டுவரும் கரிக்கட்டிகள் பென்சில்கள் கைப்பற்றப்பட வேண்டும்.இனி ஒரு மாமாங்கம் இந்த கோபுரத்தை பூட்டி வைக்கும் அவலம் நேர வேண்டாம்.