இந்த மூவரசம்பட்டு தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் ஐவர் துர்மரண நிகழ்வில் கூட சில சாதி வெறியாளர்கள் இவர்கள் சாதி சாவு தான் உசத்தியா? என கேட்டு பதிவிட்டதைப் பார்க்க முடிந்தது, பலரை நட்பு நீக்கம் செய்தேன், பலரை ப்ளாக் செய்தேன், காரணம், சாதி மத வெறுப்பு என்பது பிடியில்லாத கத்தி , இருபுறமும் வெட்டும், இந்த ஐவர் சாவு அந்த தர்மலிங்கேசுவரர் கோயிலுக்கு துர்அதிர்ஷ்டமானது,ஐவரில் இருவர் உடன் பிறந்த சகோதர்கள்,அவர்கள் பெற்றோருக்கு எத்தனை பெரிய இழப்பு அது.
சென்னை போல நகரங்களில் வெறுங்காலில் சாலையில் நம்மால் இறங்கி நடக்க முடியுமா?
சவ ஊர்வலங்களில் கூட இப்போது பாடையை தூக்கி ஆம்புலன்ஸில் வைத்து விடுகின்றனர், காரணம் யாருக்கும் "வெறுங்காலில்" பாடையை தூக்கிக்கொண்டு சுடுகாட்டுக்கு நடக்க பாதபலம் மற்றும் சிரத்தை இருப்பதில்லை,
கோயில் உற்சவர் பல்லக்கின் எடை சுமார் 300 கிலோ என்று வைத்தால் கூட பத்து பேருக்கு தோள் சுமையாக ~30 கிலோ வரும் , வெறும் காலில் பல்லக்கை தூக்கிக் கொண்டு கடும் சூட்டில் சரளைக் கற்கள் குத்தும் குண்டு மணல் கொண்ட தெருவில் நடந்து போய் உற்சவரை புறப்பாடு செய்து விட்டு மீண்டும் பத்திரமாக கோயிலில் எழுந்தருளச் செய்ய வேண்டும்,
பகீரதப் பிரயத்தனமான செயல், சில வருடங்களாக அந்த ஐந்து இளைஞர்கள் தன்னார்வத்துடன் பாதம் தாங்கிகளாக அதைசெய்து பக்குவப்பட்டு பழகியிருந்தனர், இனி எந்த பெற்றோராவது அந்த தெருவில் இருந்து கோயில் திருப்பணிக்கு பயமின்றி தன் பிள்ளைகளை அனுப்புவார்களா? அனுப்பினால் பெரிய தயை,அதிசயம் அது.
புத்திரசோகம் என்பது யாருக்கும் வரவேண்டாம்,ஐந்து குடும்பங்களுக்கு வந்த புத்திர சோகத்தில் ஆறுதல் சொல்லாமல் விஷம் தோய்ந்த அமில கருத்துகளை வீசுபவர்கள் தயவு செய்து சாதி மத வெறியை விடுங்கள், உங்கள் வயிற்றெரிச்சலை சட்டசபையில் அரசு ஐவருக்கு வழங்கிய இந்த மூன்று நிமிட மௌன அஞ்சலிக்கு காட்டாதீர்கள், அவர்களுக்கு வழங்கவில்லையே என இதில் கொள்ளிக்கண்ணை வைக்காதீர்கள்,அரசு ஐவருக்கு வழங்கிய இந்த இரண்டு லட்ச ரூபாய் இழப்பீட்டில் உங்கள் வெறுப்பை காட்டாதீர்கள்,அந்த பெற்றோர் ஏற்கனவே தெய்வத்தால் வஞ்சிக்கப்பட்டனர்,அரசனாலும் வஞ்சிக்கப்படக்கூடாது என்ற பரந்த மனம் கொள்ளுங்கள்.
இதில் வயிறெரிவது மிகவும் அருவருப்பானது, மனமுதிர்ச்சி கொள்ளுங்கள்.