கில் பில்: பாகம் 1 (Kill Bill: Volume 1) திரைப்படம் அமெரிக்காவில் அக்டோபர் 10, 2003 அன்று வெளியானது.
இத்திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகிறது.
இயக்குனர் க்வென்டின் டாரண்டினோவின் இயக்கத்தில் உருவான கில் பில் பாகம் 1 மற்றும் 2 திரைப்படங்கள், ஒரு சாதாரண பழிவாங்கல் கதையைத் தாண்டி, உலக சினிமாவின் பல்வேறு வகைகளுக்கும் ஒரு பிரம்மாண்டமான புகழாரமாக நிற்கிறது. இது ஜப்பானியச் சமுராய், கிளாசிக் குங்ஃபூ, இத்தாலிய ஸ்பேகெட்டி வெஸ்டர்ன் மற்றும் அமெரிக்க க்ரைம் ஃபிக்ஷன் ஆகிய பாணிகளைத் தன் பாத்திரங்களில் கலந்து உருவாக்கிய ஒரு சினிமா காவியமாகும். இந்தப் படத்தை உருவாக்குவதில் அவர் வெளிப்படுத்திய ஆழமான திரைப்பட அறிவும் நுணுக்கமும், கில் பில்லை ஒரு கலைப் படைப்பாக உயர்த்தியது. டாரண்டினோ கதையை அத்தியாயங்களாகப் பிரித்து, காலவரிசையை மாற்றி அமைத்து, பார்வையாளர்களைப் பழிவாங்கும் பாதையில் தீவிரமாக ஈடுபட வைக்கிறார். ஓ-ரென் இஷியின் பின்னணியை அனிமேஷனாகச் சித்தரித்ததும், மருத்துவமனைக் காட்சிகளை கருப்பு வெள்ளையில் படமாக்கியதும், வெவ்வேறு சினிமா ஊடகங்களின் வீரியத்தை ஒரே படத்திற்குள் கொண்டு வந்த அவரது தைரியமான முடிவுகளுக்குச் சான்றாகும். உமா தர்மன், பிரைட் கதாபாத்திரத்தை வெறும் உடல் வலிமை கொண்டவராக அல்லாமல், உணர்ச்சிப்பூர்வமான ஆழம் கொண்ட ஒருவராக நிலைநிறுத்தினார்; ஒரு தாய் தன் குழந்தையை இழந்த துயரமும், நியாயத்திற்காகப் போராடும் அவளது மன உறுதியும், ஆக்ஷன் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களுக்கான ஒரு புதிய இலக்கணத்தை வகுத்தது. டேவிட் காரடைன், பில்லாக, மையக் கதாபாத்திரத்தின் உணர்ச்சி மோதலுக்கான ஒரு வலுவான மையமாக விளங்கினார்; அவர் ஒரு சிதைந்த தத்துவத்தைக் கொண்ட வில்லனாக மட்டுமல்லாமல், பிரைடின் காதலனாகவும் மகளின் தந்தையாகவும் சித்தரிக்கப்பட்டு, அவர்களது துயரமான இறுதிக் கதைக்கு ஒரு ஷேக்ஸ்பியர் நாடக உணர்வை அளித்தது. துணை நடிகர்களான லூசி லியு மற்றும் டேரில் ஹன்னா ஆகியோரின் தனித்துவமான நடிப்பும், பிரைடின் பழிவாங்கும் பயணத்திற்குப் பலவிதமான வில்லத்தனமான சவால்களைக் கொடுத்தன. ராபர்ட் ரிச்சர்ட்சனின் ஒளிப்பதிவு, டோக்கியோவின் சண்டைக் காட்சிகளில் ரத்தத்தின் துடிப்பான சிவப்பு நிறத்தை அதிகப்படுத்துதல் போன்ற நுட்பங்களால், படத்தின் காட்சிக் கவர்ச்சியைத் தீர்மானித்தது. டாரண்டினோவின் திரைக்கதை, 'ஐந்து விரல் உள்ளங்கை இதயத்தை வெடிக்கும் நுட்பம்' போன்ற புனைகதைக் கூறுகளை இணைப்பதிலும், பில்லுடனான இறுதிக் காட்சியில் 'சூப்பர்மேன்' பற்றிய ஒரு ஆழமான தத்துவ உரையாடலை வைப்பதிலும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் பின்னணி இசை ஒரு முக்கிய பேசுபொருளாகும்; அவர், நான்சி சினாட்ராவின் "பேங் பேங்" போன்ற கிளாசிக் பாடல்களையும், என்ன்னியோ மோரிகோன் இசையமைத்த வெஸ்டர்ன் படங்களின் பதற்றம் நிறைந்த இசையையும், ஜப்பானியப் பாரம்பரிய இசையையும் கலந்து பயன்படுத்தினார். இந்த இசைக் கலவை, ஒவ்வொரு காட்சியின் உணர்ச்சிக்கும் பொருத்தமாக அமைந்து, படத்திற்கு ஒரு தனித்துவமான காவிய உணர்வைக் கொடுத்தது. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்தப் படம், உமா தர்மனுக்கு கோல்டன் குளோப் பரிந்துரை உட்படப் பல பாராட்டுகளைப் பெற்றதுடன், தனது தனித்துவமான பாணி மற்றும் கதை சொல்லும் முறைக்காக, 21 ஆம் நூற்றாண்டின் சினிமா மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் நிலைத்திருக்கிறது.
கில் பில்லின் இந்தப் பிரம்மாண்டமான சினிமாத் தாக்கம், அதன் பாணியை நகலெடுக்க முயன்ற பல ஆக்ஷன் படங்களுக்கு வழிவகுத்ததுடன், உலகத் திரைப்பட விழாக்களில் டாரண்டினோவுக்கு ஒரு தவிர்க்க முடியாத மாஸ்டர் இயக்குநராக அங்கீகாரத்தையும் வழங்கியது.
படத்தின் கதை
வெர்னிடா கிரீன்:
பழிவாங்கல் பட்டியலில் பிரைடின் முதல் குறிக்கோள் வெர்னிடா கிரீன், இவள் ஒருகாலத்தில் 'டெட்லி வைப்பர்' உறுப்பினராக இருந்து, இப்போது ஒரு சாதாரணப் புறநகர் இல்லத்தில் ஒரு மனைவியாகவும் தாயாகவும் வாழ்ந்து வருகிறாள். பிரைட் அவளது வீட்டிற்குச் சென்று, உடனடியாக வெர்னிடாவைச் சண்டைக்கு அழைக்கிறார்.
இருவரும் கையிலும் சமையலறை உபகரணங்களிலும் இருந்த கத்திகளை எடுத்துக்கொண்டு, அவர்களின் சமையலறையில் ஒரு குறுகிய கடுமையான சண்டையில் ஈடுபடுகின்றனர்.
இந்தச் சண்டை உச்சத்தில் இருக்கும்போது, வெர்னிடாவின் இளம் மகள் நிக்கி பள்ளியிலிருந்து திரும்பி வந்துவிடுகிறாள். குழந்தைக்கு முன்னால் சண்டையிட விரும்பாத பிரைட் சண்டையை நிறுத்துகிறார். நிலைமை அமைதியாகிவிட்டதாக எண்ணியபோது, வெர்னிடா சற்றும் யோசிக்காமல்,சீரியல் உணவு அட்டைப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த ஒரு துப்பாக்கியால் பிரைடைச் சுட முயற்சிக்கிறார். ஆனால், பிரைட் மின்னல் வேகத்தில் ஒரு வீசும் கத்தியை எடுத்து, வெர்னிடாவின் நெஞ்சில் வீசியவர், உடனடியாகக் கொன்றும் விடுகிறார். நிக்கி, தன் தாயின் மரணத்தை அநியாயமாகப் பார்க்க நேரிடுகிறது. பிரைட், நிக்கியிடம், "இது என் பழிவாங்கலுக்கு நடுவில் நடந்த ஒரு செயல், நீ பெரியவளாகி உனது தாய்க்குப் பழிவாங்க விரும்பினால், நான் காத்திருப்பேன்" என்று கூறிவிட்டு, தனது பயணத்தைத் தொடர்கிறார்.
நான்கு வருடங்களுக்கு முன்பு
எல் பாசோ படுகொலை (The El Paso Massacre)
1999-ம் ஆண்டு, தி பிரைட் (The Bride) – அவரது உண்மையான பெயர் இன்னும் வெளிப்படுத்தப்படுவதில்லை.
டெக்சாஸின் எல் பாசோவில் உள்ள சிறு தேவாலயத்தில் தனது காதலன் டாமி ப்ளிம்ப்டனைத் திருமணம் செய்துகொள்ள கர்ப்பிணியாக திருமண உடையில் ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறார் ப்ரைட் . இந்த பிரைட் ஒருகாலத்தில் பில்லின் தலைமையில் இயங்கிய 'டெட்லி வைப்பர்ஸ் அசாசினேஷன் ஸ்குவாட்'டின் மிக முக்கியமான உறுப்பினராக பில்லின் அந்தரங்க தோழியாகவும் இருந்தவர். வன்முறை நிறைந்த தன் வாழ்க்கையைத் துறந்து, ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ அவர் தீர்மானித்து இந்த நான்கைந்து மாத காலங்களாக எல்பாசோ என்ற பாலைவன சிற்றூரில் சிறிய பழைய ரெகார்ட் கடையில் பணிபுரிகிறார், வரித்துக் கொண்ட புதிய காதலனை கரம் பிடிக்கவே இந்த திருமண ஒத்திகை . ஆனால், இந்த மகிழ்ச்சியான தருணம் எதிர்பாராத விதமாக முடிவுக்கு வருகிறது. திருமண ஒத்திகை நடந்துகொண்டிருக்கும்போதே, பில் தலைமையிலான 'டெட்லி வைப்பர்ஸ்' குழு திடீரென அங்குத் எந்திரத் துப்பாக்கி தாக்குதல் நடத்துகிறது. ,டாமி,அவன் பெற்றோர், உறவினர், பினானிஸ்ட், பாதிரியார் மற்றும் அங்கிருந்த அனைவரும் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
கடுமையான காயங்களுடன், மரணத்தின் விளிம்பில் இருந்தபோது, பிரைட் தன் முன்னாள் காதலனும் தலைவனுமான பில்லிடம், அவன்தான் குழந்தையின் தந்தை என்றும் கடைசி மூச்சில் கூறுகிறார். இருந்தும், பில் இரக்கமின்றி அவள் தலையில் சுட்டு விட்டு, அங்கிருந்து சென்றுவிடுகிறான்.
இந்தச் சம்பவம் பின்னர் 'எல் பாசோ படுகொலை' என்று அழைக்கப்படுகிறது. காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்கையில், பிரைட் மட்டும் உயிருடன் இருக்க அவளை கிண்டல் செய்த ஷெரீஃபின் முகத்தில் உமிழ்ந்த பின், ஆழமான கோமா நிலையில் சென்றுவிட்டதை அறிகிறோம்.
பிரைட் மருத்துவமனையில் கோமாவில் இருந்தபோது, 'டெட்பி வைப்பர்ஸ்' குழுவினர் அவளை முழுமையாகக் கொல்ல முயல்கின்றனர். எல்லே டிரைவர் (Elle Driver) என்ற மற்றொரு முன்னாள் குழு உறுப்பினர், செவிலியர் போல மாறுவேடம் அணிந்து வந்து, அவளுக்கு நஞ்சு செலுத்தி கருணைக் கொலை செய்ய முயற்சிக்கிறார். ஆனால், கடைசி நிமிடத்தில், பில் தொலைபேசியில் எல்லேயைத் தொடர்புகொண்டு, ஒரு தற்காப்பற்ற நிலையில் இருப்பவரைக் கொல்வது மரியாதைக்குரியதல்ல என்று கூறி, அந்தத் திட்டத்தை ரத்து செய்கிறான்.
நான்கு ஆண்டுகள் கழித்து,
ஒரு கொசுக்கடியில், பிரைட் கோமாவில் இருந்து திடீரென விழித்தெழுகிறார். அடி வயிற்றை தடவியவர்,தான் இப்போது கர்ப்பமாக இல்லை, தனது குழந்தை பறிபோய்விட்டது என்பதை அறிந்ததும் அவர் அடைந்த துயரமும் கோபமும் அளவிட முடியாததாகிறது. அந்தச் சமயத்தில், ஒரு மருத்துவமனை ஊழியனும், ஒரு பாலியல் வாடிக்கையாளனும் அவளைப் வல்லுறவு செய்ய எண்ணி அவள் அறைக்குள் நுழைகின்றனர், மருத்துவமனை ஊழியன் அவளை டாலருக்கு கூட்டித் தந்தபின் வேசலின் டப்பா தந்து விட்டு கடிக்க கீற கூடாது என நிபந்தனை விதித்தவன் 25 நிமிடத்தில் வருகிறேன் என அகல்கிறான் . பீட்ரிக்ஸ் தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி, முதலில் வன்முறையாளரின் நாக்கைப் பிடுங்கி தன் பற்களால் உருவியவள் பின்னர் அவனின் கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் கொல்கிறார். அடுத்ததாக, அவளது உடலைக் கோமா நிலையில் விற்றுவந்த மருத்துவமனை ஊழியன் உள்ளே நுழைய அவனின் கால் நரம்பை அறுத்து விழ வைத்தவள் அவன் தலையை அறையின் கதவால் பல முறை மோதி மத்டையை நசுக்கிக் கொல்கிறார். பிரைட் அந்த ஊழியரின் டிரக்கை எடுத்து கொண்டு, பில் மற்றும் மற்ற 'டெட்பி வைப்பர்ஸ்' குழுவினரைக் கொன்று பழிவாங்கச் சபதம் ஏற்கிறார்.
வெர்னிடாவைக் கொன்ற இரண்டு மாதங்களுக்குப் முன்பு நடந்தது ,
பிரைட் வாள் ஒன்றை தனக்கென பெறுவதற்காக ஜப்பானின் ஓகினாவாவுக்கு பயணிக்கிறார். அங்கு, புராணக்கதைகளில் வருவது போன்ற புகழ்பெற்ற வாள் தயாரிப்பாளரும், கலைஞருமான ஹட்டோரி ஹன்ஸோவைக் அவரது சுஷி உணவகத்தில் காணச் செல்கிறார். பில்லுக்கு வாள் செய்துகொடுத்ததற்கான குற்ற உணர்ச்சியால், ஹன்ஸோ வாள் செய்வதை நிறுத்திவிட்டவர்,இந்த புதிய தனக்கு பழக்கமில்லாத சுஷி உணவகத்தை வேடிக்கையாக நடத்தி வருகிறார்.
பிரைட், தான் பழிவாங்கத் துடிக்கும் இலக்கு வேறு யாருமல்ல, தன் முன்னாள் மாணவன் பில்தான் என்று ஹன்ஸோவிடம் கூறுகிறார். பில்லின் அநீதியான செயல்களை அறிந்த ஹன்ஸோ, தன் முன்னாள் சபதத்தை மீறி, பிரைடுக்கு உலகிலேயே மிகச்சிறந்த, கூர்மையான ஒரு சமுராய் வாளை உருவாக்குவதாக உறுதியளிக்கிறார்.
ஹன்ஸோ வாள் தயாராகிறது; பிரைட் அடுத்ததாக, தனது பழிவாங்கலை முடிப்பதற்காக டோக்கியோவுக்குப் பயணிக்கிறார்.
பழி வாங்கும் பட்டியலில் முதல் பெயர் ஓ-ரென் இஷி
வெர்னிடா கிரீனைக் கொல்லும் முன்பு நடக்கும் பழிவாங்குதல் இது,
அந்த பெருமைமிகு வாளுடன், பிரைட் தனது முதல் இலக்கைக் குறிக்கிறார்: முன்னாள் 'டெட்லி வைப்பர்' உறுப்பினரான ஓ-ரென் இஷி . சிறு வயதில் தனது பெற்றோரை யக்குஸா கொன்றதைக் கண்ணால் கண்ட ஓ-ரென், பிற்காலத்தில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு, அந்தக் பீடோஃபைல் கொலையாளியைப் பழிவாங்கிக் கொன்று, தானே டோக்கியோ யக்குஸா தலைவராக உயர்ந்தவர்.(இந்த காட்சிகள் ரத்த களரி காரணமாக காமிக்ஸாக சித்தரிக்கப்பட்டன, ஆளவந்தான் திரைப்படம் பார்த்து உந்துதல் பெற்றிருந்தார் இயக்குனர் குவென்டின் டாரண்டினோ.)
பிரைட் டோக்கியோவுக்குச் சென்று ஓ-ரென்னைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். ஓ-ரென் அப்போது ஒரு பிரபல உணவகத்தில் இருந்தார். அங்குச் சென்ற பிரைட், மின்னல் வேகத்தில் ஓ-ரென்னின் உதவியாளரும் வழக்கறிஞருமான சோஃபி ஃபாடேல்லின் கையைத் துண்டிக்கிறார். இதைத் தொடர்ந்து, பிரைட், ஓ-ரென்னின் சிறப்புப் படையான கிரேஸி 88 என்றழைக்கப்படும் ஏராளமான வாள்வீரர்களை வாட்போரில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடுமையான இரத்தக் களரியில், பிரைட் அந்த 88 பேரையும் தனி ஒருவராக எதிர்கொண்டு வீழ்த்துகிறார். பின்னர், ஓ-ரென்னின் தனிப்பட்ட மெய்க்காவலராக இருக்கும் பள்ளிச் சீருடை அணிந்த, சங்கிலிக் முட்கள் குண்டு ஏந்திய கோகோ யுபாரியையும் வென்று கொல்கிறார்.
இதையடுத்து, ஓ-ரென்னும் பிரைடும் அந்த உணவகத்தின் ஜப்பானியத் தோட்டத்தில் நட்சத்திரங்களுக்கு கீழே நேருக்கு நேர் வாள் சண்டையிடுகின்றனர். பனி பொழியும் அந்தத் தோட்டத்தில் நடந்த சண்டையின் முடிவில், பிரைட் ஓ-ரென்னின் தலையின் மேற்பகுதியையே உரித்து அவரை வீழ்த்துகிறார். கடைசி மூச்சின்போது, ஓ-ரென் பிரைடின் வாளின் தரத்தைப் புகழ்ந்துவிட்டு இறந்துபோகிறார்.
சண்டைக்குப் பிறகு, பிரைட் காயமடைந்த சோஃபி ஃபாடேலைக் கட்டி, ஒரு காரின் டிக்கியில் அடைக்கிறார். பில் மற்றும் மற்ற குழு உறுப்பினர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக, சோஃபியின் எஞ்சியிருந்த கையையும் வெட்டிவிடுகிறார். ஒரு எச்சரிக்கையாகவும் தலைவன் பில்லுக்கு செய்தி சொல்வதற்கும் சோஃபியை உயிருடன் விடுகிறார். கடைசியில், பில், சோஃபியைக் கண்டறிந்து, பிரைடின் மகள் உயிருடன் இருக்கிறாள் என்று பிரைடுக்குத் தெரியுமா என்று சோஃபியிடம் கேட்கிறார்.
இதற்கு பிறகான அடுத்த பழிவாங்கலில் தான் வெர்னிடா கிரீனை கொன்றதை நாம் இங்கே நினைவு கூற வேண்டும்.
இப்போது கில்பில் இரண்டாம் பாகம் மீண்டும் எல்பாஸோ பாலைவன சிற்றூர் தேவாலயத்தில் துவங்குகிறது.
பிரசவத்திற்குத் தயாராக இருந்த பிரைட், அவரது காதலன் ஆகியோரின் திருமண ஒத்திகையை காண்கிறோம். அங்கு பில் வந்து பிரத்யேக நீண்ட புல்லாங்குழலை இசைக்கிறான் , ப்ரைட் அவனைக் கண்டு ஆச்சர்யமுற்றவள் ,அவனை மோசமாக நடந்து கொள்ளக் கூடாது என வேண்டுகிறாள், தன் தந்தை என மணமகன் டாம்மியிடம் அறிமுகப் படுத்துகிறாள், அங்கு மீண்டும் திருமண ஒத்திகை விட்ட இடத்திலிருந்து துவங்க நால்வர் குழு உள் நுழைந்து அனைவரையும் எந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறது, பில் பிரைடை சுட்டாலும், அவளின் ஜீவ மரணப் போராட்டத்தால் உயிருடன் இருக்கிறாள், இந்த கொடிய ஐவரை பழிவாங்க சபதம் செய்கிறாள்.
ஓ-ரென் இஷி மற்றும் வெர்னிடா கிரீன் ஆகியோரின் மரணத்திற்குப் பிறகு, பிரைட் அடுத்ததாக பில்லின் இளைய சகோதரனும், மற்றொரு 'டெட்லி வைப்பர்' உறுப்பினருமான பட்டைத் தேடிச் செல்கிறார். பட் கர்ப்பிணியை மணமகன் வீட்டாரைக் கொன்று கோமாவில் ஆழ்த்திய குற்ற உணர்வால் இப்போது ஒரு அழுக்குபிடித்த டிரெய்லரில் மிகவும் சாதாரண தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். பிரைட் பட்-ஐ பதுங்கியிருந்து கதவை உடைத்து நுழைந்து தாக்கத் திட்டமிடுகிறார். ஆனால், பில் ஏற்கனவே பட்-ஐ நேரில் எச்சரித்திருந்தான். பட், பிரைட் வருவதை அறிந்தே, அவளைத் தனது டிரெய்லருக்குள் ஒயிலாக காத்து வரவேற்றவன், நேருக்கு நேர் சண்டையிடுவதற்குப் பதில், அவர் பிரைடை உப்புக்கற்களால் (rock salt) நிரப்பப்பட்ட இரட்டைக் குழல் ஷாட்கன் குண்டுகளால் இரு மார்பகங்களில் சுட்டு வீழ்த்துகிறான், அவளைச் செயலற்றவளாக ஆக்குகிறான்,விஷக் கொடுக்கு தீண்டியது போன்ற வலியில் துடிக்க விடுகிறான்.
அவளைக் கை கால்களை கட்டிப் போட்ட பிறகு, பட், மற்றொரு முன்னாள் 'டெட்பி வைப்பர்' உறுப்பினரான எல்லே டிரைவரைத் தொடர்புகொண்டு,
கைப்பற்றிய பிரைடின் வாளை ஒரு மில்லியன் டாலருக்கு விற்கப் பேரம் பேசுகிறான். விடியலில் பணத்தை எடுத்துக்கொண்டு வருவதாக எல்லே உறுதியளிக்கிறாள். அதற்கு முன், பட் ஒரு குள்ள அடியாள் உதவியுடன் இடுகாட்டில் மண்ணைத் தொண்டியவன் பிரைடைச் செயலற்ற நிலையில் ஒரு சவப்பெட்டிக்குள் டார்ச் லைட் உடன் வைத்து . பின்னர், அந்தச் சவப்பெட்டியை ஆணிகளால் அறைந்து புதைக்கின்றான்.
சவப்பெட்டிக்குள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் பிரைட்,
ஒரு பயங்கரமான கடந்த கால நினைவுக்குள் செல்கிறார். பல ஆண்டுகளுக்கு முன், பில் தான் விருப்பத்திற்குரிய தற்காப்புக் கலை குருவான பாய் மேய்யை ப்ரைடுக்கு நேரில் அவர் பள்ளி அடிவாரத்தில் கொண்டு விட்டு அவரிடம் பேசி வந்து வழியனுப்புகிறார்.
பாய் மேய் ஒரு மிருகத்தனமான புகழ்பெற்ற மாஸ்டர் ஆவார். அவர் "ஐந்து விரல் கொண்டு உள்ளங்கையால் தாக்கி இதயம் நொறுக்கும் இதய நுட்பம்" (Five Point Palm Exploding Heart Technique) என்ற ஒரு மரண அடியை மட்டும், ஒருபோதும் தன் மாணவர்களுக்குக் கற்றுத்தர மறுத்து வந்தவர். அந்த அடிபட்டால், ஐந்து அடிகள் மட்டுமே வைத்து உயிரிழக்க முடியும் என்று நம்பப்படுகிறது. . பாய் மேய், பிரைடை ஆரம்பத்தில் கேலி செய்தும், சித்திரவதை செய்வது போலவும் கடுமையான பயிற்சிகளைக் கொடுக்கிறார். ஆனால் பிரைட் சளைக்காமல் பயிற்சி செய்து, இறுதியில் தனது விடாமுயற்சியால் பாய் மேயின் மரியாதையை மெச்சுதலைப் பெறுகிறார்.
தற்போது, புதைக்கப்பட்ட சவப்பெட்டிக்குள், பிரைட், பாய் மேய்யிடம் கற்றுக்கொண்ட நுட்பங்களில் கல் போன்ற மரப்பலகையை முஷ்டி கொண்டு துளை இடுவதை பயன்படுத்துகிறார். அவர் தனது கைகளுக்கு அபரிமிதமான பலத்தைக் கொடுத்து, சவப்பெட்டியின் மூடியை உடைத்து, மண்ணை விலக்கி நீக்கி மேலேறி, உயிருடன் புதைக்கப்பட்டதில் இருந்து தப்பித்து மறு ஜென்மம் எடுத்ததைப் போல வெளியேறுகிறார்.
பிரைட், உயிருடன் புதைக்கப்பட்டதன் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்த சில நிமிடங்களில் மோட்டல் ஒன்றில் நுழைந்து நீர் வாங்கி அருந்தி ஆசுவாசம் அடைகிறாள், ஒரு மலை மீது நின்று பட் ட்ரெய்லரை வேவு பார்க்கையில், எல்லே டிரைவர் பட்-இன் டிரெய்லருக்குள் நுழைவதைப் பார்க்கிறார். எல்லே, பிரைடின் ஹன்ஸோ வாளை பட்-இன் கையில் இருந்து வாங்க ஒரு மில்லியன் டாலர் பணத்தைக் கொண்டு வந்திருந்தாள். பணம் கைமாறியவுடன்,பட் தயாரித்து குடிக்கத்தந்த வோட்கா ஸ்க்ரூ ட்ரைவர் பானத்தை குடித்தபடியே எல்லே, பட்-க்கு ஒரு துரோகம் இழைக்கிறாள். அவர் பணப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மிகவும் ஆபத்தான பாம்பான ப்ளாக் மாம்பாவை ஏவிவிட்டு, பட்-ஐக் கன்னத்தை கடிக்க விட்டுக் கொல்கிறார். பட் வலியால் துடிதுடித்து இறக்கிறான்.
பட் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திய எல்லே, பில்லுக்கு ஃபோன் செய்தவள், பிரைட் பட்-ஐக் கொன்றுவிட்டாள் என்றும், அதற்குப் பழிவாங்கத் தான் பிரைடையும் கொன்றுவிட்டதாகவும் பொய் கூறுகிறாள்,அவள் புதைக்கப்பட்ட கல்லறை கல்லை அடையாளம் சொல்கிறாள். இந்த உரையாடலின்போதுதான் பிரைடின் உண்மையான பெயர் வெளிப்படுகிறது: பீட்ரிக்ஸ் கிட்டோ . எல்லே டிரெய்லரை விட்டு வெளியேற முற்படுகையில், பீட்ரிக்ஸ் திடீரென அவளை கதவு திறந்து வழிமறித்துத் தாக்குகிறார். இரு முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையே ஒரு கடுமையான சண்டை வெடிக்கிறது, .
எல்லேயும் பாய் மேய்யிடம் பயிற்சி பெற்றவர் என்பதால், சண்டை உச்சக்கட்ட வேகத்தில் செல்கிறது.
பில் தம்பி பட்டிற்கு தந்த ஹன்ஸோ வாளை ப்ரைட் எடுத்து அது இன்னும் பட்டிடம் இருப்பதையும், பட் அதை அடமானம் வைத்தேன் என பொய் சொன்னதையும் எல்லேயிடம் உரைக்கிறாள், இருவருக்கும் கடுமையான வாள் போர் நடக்கிறது.
சண்டையின்போது, எல்லே, ஒரு அதிர்ச்சி தரும் இரகசியத்தை வெளிப்படுத்துகிறாள்: அவர் தான் பாய் மேயை உணவில் விஷம் வைத்துக் கொன்றவள் என்பதே அது. "அந்தப் பயங்கரமான கிழவனுக்கு" (a miserable old fool) ஏனெனில் பாய் மேய் தன்னுடைய ஒரு கண்ணைப் பிடுங்கியதற்காகப் பழிவாங்க இவ்வாறு செய்ததாகவும் எல்லே கேலி செய்கிறார். இந்த செயல் பீட்ரிக்ஸை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. ஆவேசமடைந்த பீட்ரிக்ஸ், எல்லேயின் மிச்சமிருந்த மற்றொரு கண்ணையும் பிடுங்கி தரையில் இட்டு மிதித்து கூழாக்கி விடுகிறார். இரண்டு கண்களும் பறிபோன எல்லே, கத்தலுடன் டிரெய்லருக்குள் அரற்றுகிறாள், பீட்ரிக்ஸ், பட்-ஐக் கொன்ற அதே கருப்பு மாம்பா பாம்பு எல்லேயை பார்த்து அங்கேயே சீறிக்கொண்டிருக்கும் நிலையில் அவளைத் தனியே விட்டுவிட்டுச் செல்கிறார்.
தனது இறுதி இலக்குக்காக, பீட்ரிக்ஸ் மெக்சிகோவுக்குச் செல்கிறார். அங்கு ஓய்வுபெற்ற விபச்சாரத் தரகர் எஸ்தெபன் விஹாயோவை சந்தித்து, பில் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டறிய உதவி கேட்கிறார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பீட்ரிக்ஸ் பில்லின் ஆடம்பரமான வீட்டைக் கண்டறிகிறார், அவரை காவலர்கள் தடுப்பதில்லை.
அந்த வீட்டின் அறையின் கதவை திறக்க, பில்லுடன் ஒரு குழந்தையைப் பார்க்கிறார். அந்தக் குழந்தை வேறு யாருமல்ல, பீட்ரிக்ஸின் மகள்தான்! அவள் பெயர் பி.பி. என்பதும், நான்கு வயதான அந்தக் குழந்தை உயிருடன் இருப்பதும்தான் பில், சோஃபியிடம் கேட்ட இரகசியம் என அறிகிறோம்.
தனது மகள் உயிருடன் இருப்பதை அறிந்த பீட்ரிக்ஸ், அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைகிறார். அந்த மாலைப்பொழுதை அவர் பில் மற்றும் பி.பி-உடன் அமைதியாக சொர்க்க தருணம் போல செலவிடுகிறார்.
பி.பி-யைத் தூங்க வைத்த பிறகு, பில், வாள் போரை இரவு கடற்கரையில் வைத்துக்கொள்ளலாமா அல்லது பாரம்பரிய குங்ஃபூ பள்ளி போல விடியலில் வைத்துக் கொள்ளலாமா என்கிறான்.திமிரி புறப்பட்ட ப்ரைடின் முன்பாக இருந்த பழத்தட்டில் இருந்த பழங்களை துப்பாக்கியால் சுட்டு ப்ரைடை பழச்சாற்றால் குளிப்பாட்டி மகிழ்கிறான், இடது கால் மூட்டில்
ஒரு உண்மை சொல்லும் மருந்து (truth serum) கலந்த அம்பை பீட்ரிக்ஸின் உடலில் செலுத்தியவன், அது என்ன இழவு என வலியில்
துடிக்கையில் கேட்க அது பான்தடால் என்ற மனோதத்துவ மருந்து (குணா ) என்கிறான், அவளைக் கேள்விகள் கேட்டு உண்மைகளை ஆழ்மனதில் இருந்து வெளிக்கொணரத் தொடங்குகிறான் பில். பீட்ரிக்ஸ், லிசா வாங்கை கொல்ல செல்கையில் அவளின் பெண் பாதுகாவலர் இவள் இருப்பிடத்தை உளவறிந்து ஷாட்கன்னால் கொல்ல வந்த தருணத்தை விவரிக்கிறாள், விமானத்தில் மசக்கை வாந்தி எடுத்தவள், பரிசோதனை கருவி வாங்கி பரி சோதனை செய்து அது நீல நிறமாக மாறி தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்த தருணத்தை அழுதபடி உண்மை விளம்புகிறாள், தனது குழுவினர் மற்றும் வன்முறை வாழ்க்கையை விட்டுவிட்டு, பி.பி-க்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தரவே வெளியேறியதாக அரற்றிப் புலம்புகிறார். பில், அவள் இறந்துவிட்டதாகவே நினைத்ததாகவும், மூன்று மாதங்கள் துக்கம் அனுஷ்டித்ததாகவும், ஆனால் அவள் உயிருடன் இருப்பதும், தன் குழந்தை பிறக்கப்போகும் நிலையில், அவளது தந்தை என்று தன்னை தவறாக நினைத்த ஒரு 'முட்டாள்' மனிதரைத் திருமணம் செய்யத் தயாரானதும் தெரிந்தே, அவளைக் கொல்ல உத்தரவிட்டதாகவும் பில் கூறுகிறான்.
அவர்கள் இருவரும் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே வாள் சண்டையிடத் தொடங்குகின்றனர். ஆனால், பீட்ரிக்ஸ் தனது ஹன்ஸோ வாளை பில் தன் கழுத்தை துண்டாக்க பிரயோகிக்க , அந்த வாளை பில்லின் வாள் உறையில் லாவகமாகப் பிடித்துச் சிக்க வைக்கிறார். அந்தச் சமயத்தில், துரிதமாக பாய் மேய் அவருக்கு மட்டும் கற்றுக்கொடுத்த, ஐந்து விரல் உள்ளங்கை இதயம் நொறுக்கும் நுட்பத்தால் பில்லின் மார்பில் ஒத்தி அடிக்கிறார். பாய் மேய் இவளுக்கு இதைச் சொல்லித் தந்துவிட்டாரா என்று ஆச்சரியத்துடன் உணர்ந்த பில் இதை கேட்க அவள் ஆமோதிக்கிறாள்,ஏன் முன்பே சொல்லவில்லை ? என கேட்க , தெருயவில்லை , நான் ஒரு பேட் பெர்சன், என்கிறாள், அதற்கு , பில் யு ஆர் நாட் ய பேட் பெர்சன், யூ ஆர் ய டெர்ரிஃபிக் பெர்சன் , மை ஃபேவரிட் பெர்சன் என்றவன், தன்னை உடையை சீர்ப்படுத்திக் கொண்டு , வாயில் வழியும் ரத்தத்தை துடைத்துக் கொண்டவன், தான் பார்க்க எப்படி இருக்கிறேன் எனக் கேட்கிறான், விடைபெற தயாராக உள்ளதாக தோற்றமளிக்கிறாய் என்கிறாள், நாற்காலியை விட்டு எழுந்து பின்னே செல்கிறான் பில்,
பீட்ரிக்ஸுடன் இப்படி அழகாக சமாதானமாகிறான் பில், அவளிடமிருந்து விடைபெற்று, ஐந்து அடிகளை எடுத்து வைக்கிறான் ஆறாவது அடியில், ரத்தம் வெளியேறி, பில் நிலத்தில் சாய்ந்து இறந்துபோகிறான்.
தன் ஐந்தாம் பழிவாங்கலை முடித்த பீட்ரிக்ஸ் கிட்டோ, தனது மகள் பி.பி-யுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காகப் பயணிக்கையில் கில் பில் இரண்டாம் பாகம் நிறைவடைகிறது.
கில் பில் திரைப்படத்தின் இரு பாகங்களையும் நம் வீட்டுப் பெண்களைப் பார்க்கச் செய்ய வேண்டியதன் காரணம் உண்டு, அது பழிவாங்கலைத் தாண்டிய பெண்ணிய வலிமையின் ஒரு தீவிரமான சித்திரத்தை வழங்குவதாலே ஆகும்.
பிரைட் என்ற பீட்ரிக்ஸ் கிட்டோ கதாபாத்திரம், அநீதி, துரோகம் மற்றும் உடல் ரீதியான வன்முறை ஆகியவற்றால் அழிக்கப்பட்ட ஒரு பெண்ணாக ஆரம்பித்து, தனது சொந்த ஆற்றலால் மறுபிறவி எடுத்து, தனது வாழ்வை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தின் சின்னமாக இருக்கிறாள்.
அவள் தனது தாய்மை உரிமைக்காகவும், தன் மீதான வன்முறைக்காகவும் தனி ஒருவராக எழுந்து, உலகிலுள்ள வலிமையான எதிரிகளை எதிர்கொள்கிறாள். இந்தப் படம், பெண்கள் தங்கள் உணர்ச்சிக் கோபத்தையும், மன உறுதியை வெளிப்படுத்தவும், இலக்குகளை அடையப் பயன்படுத்தவும் முடியும் என்பதைக் காட்டுகிறது.
பிரைடின் கதை, பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், அமைதியான மற்றும் சமரசமான முடிவுகளுக்குப் பதிலாகத் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக எதிர்த்துப் போராடவும் தயங்கக்கூடாது என்ற செய்தியை வலுவான ஆக்ஷன் பாணியில் கடத்துகிறது. இது, பாலினப் பாகுபாடுகளை உடைத்து, ஒரு பெண் தனக்கான நீதியை தானே நிலைநாட்ட முடியும் என்று கூறுவதன் மூலம், பெண்களுக்கு ஒரு அசாதாரணமான உத்வேகத்தை அளிக்கிறது.