"12 Angry Men" (1957) நாடகம், தத்துவம், மற்றும் நுண்ணிய நடிப்பு ஆகியவற்றின் உச்சகட்டக் கலவையாக, உலக சினிமா வரலாற்றில் நிலைபெற்ற ஒரு வியத்தகு சாதனையாகும்.
நீதிமன்றத்தின் ஒரு சிறிய நடுவர் அறையை முழுத் திரையிலும் நிரப்பிய இந்தத் திரைப்படம், கலை மற்றும் தொழில்நுட்பத்தின் துல்லியத்தால் ஒரு மாபெரும் காவியமாக விரிகிறது.
இயக்குநர் சிட்னி லூமெட்டின் மேதைமையை வியந்து போற்ற வார்த்தைகள் இல்லை. ஒருவரையொருவர் நெருக்கி அமர்ந்திருக்கும் 12 ஆண்களையும், ஒரே அறையையும் வைத்துக்கொண்டு, இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்தது அசாத்தியமான சாதனை. அவர் கேமரா கோணங்களைப் பயன்படுத்திய விதம் ஓர் உளவியல் பாடம். படத்தின் ஆரம்பத்தில் நடுவர்களை மேலிருந்து காட்டி அவர்கள் மீது அழுத்தத்தையும், அலுப்பையும் பதிய வைக்கிறார்.
விவாதம் உச்சத்தை அடைய அடைய, அவர் கேமராவைத் தரையோடு நெருக்கி நகர்த்தி, க்ளோசப் ஷாட்களை அதிகரித்து, அறையின் வெப்பத்தையும், கதாபாத்திரங்களின் உள்ளே நடக்கும் உக்கிரமான உணர்ச்சிப் போராட்டத்தையும் பார்வையாளர்களின் நரம்புகளுக்குள் கடத்துகிறார். குற்றம் சாட்டப்பட்ட இளைஞனைத் திரையில் காட்டாமல் ஒரு விசாரணை நடத்திய அவரது துணிச்சலான திரைக்கலைப் புதுமை, படத்திற்கு ஒரு தத்துவார்த்த ஆழத்தைக் கொடுத்தது. இதனால், கவனம் முழுக்க ஆதாரங்கள் மற்றும் நீதியின் நெறிமுறைகள் மீதே நிலைநின்றது.
எழுத்தாளர் ரெஜினால்ட் ரோஸ்-ஐ (Reginald Rose) வியந்து பாராட்ட வேண்டும். அவரது கூரிய கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள், இந்தத் திரைப்படத்தின் முதுகெலும்பாக உள்ளன. கதை ஒரே இடத்தில் நடந்தாலும், வசனங்களின் அனலால் கதை ஒருநொடிகூட தொய்வடையவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்புலமும் கட்டடக்கலைஞர், பங்குத் தரகர், வாட்ச்மேக்கர், மெசஞ்சர் உரிமையாளர் அவர்கள் பேசும் வசனங்கள் மூலம் வெளிப்படுகிறது.
நடுவர் 8-ன் தர்க்கரீதியான கேள்விகளும், நடுவர் 3-ன் ஆவேசமான உளறல்களும், நடுவர் 10-ன் இனவெறி வசனங்களும், மிகவும் கூர்மையாக எழுதப்பட்டு, நடுவர் குழுவின் படிப்படியான மனமாற்றத்தை ஒரு தர்க்கச் சங்கிலியாகக் கோர்க்கின்றன.
சட்டத்தின் "நியாயமான ஐயத்தின்" தத்துவத்தை மிக எளிமையான, ஆனால் அழுத்தமான உரையாடல்கள் மூலம் அவர் நிறுவிய விதம், சினிமா வரலாற்றில் நிகரற்றது.
ஒளிப்பதிவாளர் போரிஸ் காஃப்மேன் (Boris Kaufman)-ன் கைவண்ணம் ஒரு மாயாஜாலமாகும். அவர் ஒரு சிறிய அறையைப் படமாக்கவில்லை,அவர் அங்கு தகித்த உணர்ச்சிவெளியைப் படமாக்கினார். அவர் ஒளியையும் நிழலையும் பயன்படுத்தி, படத்தின் மனநிலையை மாற்றிய விதம் அற்புதம். ஆரம்பத்தில் இருந்த பிரகாசமான, நேரடி ஒளி, நடுவர்களின் சோர்வையும் பொதுவான மனநிலையையும் காட்டியது. பின்னர், வெளியே மழை பெய்யும்போது, அறையின் ஒளி மங்கி, நிழல்களும் இருளும் ஆழமாகி, நடுவர்களின் மனதின் குழப்பத்தையும், தனிப்பட்ட ரகசியங்களும் ஆவேசமும் வெளிப்படும் தருணத்தையும் காட்சிப்படுத்துகிறது.
மெளனமே ஆதிக்கம்
இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பைப் பற்றிப் பேசும்போது, நாம் மெளனத்தைப் பற்றியே பேச வேண்டும். பின்னணி இசை பெரும்பாலும் இல்லாமல் இருந்தது, இசையமைப்பாளரின் மிகப் பெரிய துணிச்சலாகும். இது, நடுவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒரு விரல் மேஜையைத் தட்டும் ஒவ்வொரு சத்தத்திற்கும், அறைக்குள் இருக்கும் சிறிய இரைச்சல்களுக்கும் அதிக வீரியத்தையும் அழுத்தத்தையும் அளித்தது. இந்தத் துல்லியமான ஒலியமைப்பு, நாடகத்தின் யதார்த்தத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்று, பார்வையாளர்களை நேரடியாக நடுவர் அறைக்குள் அமர வைத்தது. மெளனம் என்பது இசையின் ஒரு அங்கமாகச் செயல்பட்டது இங்குதான்.
உச்ச நட்சத்திரங்களின் கூட்டுத் தாக்கம்
இந்தத் திரைப்படத்தின் நடிப்பு, ஒரு தனிநபர் மேதைமை அல்ல; அது கூட்டு மேதைமை . 12 நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்குள் வாழ்ந்தார்கள்:
ஹென்றி ஃபோண்டா (நடுவர் 8): அமைதி, கண்ணியம் மற்றும் அசைக்க முடியாத உறுதியுடன் நீதியைத் தேடும் மனிதனின் இலக்கணமாக அவர் அளித்த நடிப்பு, எவரையும் வியக்க வைக்கும்.
லீ ஜே. காப் (நடுவர் 3): கோபத்தின் கொந்தளிப்பையும், தந்தையின் தனிப்பட்ட வேதனையையும் வெளிப்படுத்தும் விதத்தில் அவர் நடித்திருந்தார்.
இறுதிக் காட்சியில் அவர் உடைந்து அழுவது, நடிப்பின் ஒரு சிகரம்.
ஜோசப் ஸ்வீனி (நடுவர் 9): முதியவர், தனது கூர்மையான நுண்ணறிவால் சாட்சிகளின் பொய்களை அம்பலப்படுத்துகிறார். அவர் வெளிப்படுத்திய கனிவும் உறுதியும் வியக்கத்தக்கது.
எட் பெக்லி (நடுவர் 10): வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்திய அவரது ஆவேசமான நடிப்பு, இறுதியில் மற்றவர்களால் புறக்கணிக்கப்படும்போது அவர் அடைந்த தனிமையைப் பயங்கரமான யதார்த்தத்துடன் வெளிப்படுத்தியது.
ஒவ்வொரு நடிகரும் பங்குத் தரகர் (நடுவர் 4), வாட்ச்மேக்கர் (நடுவர் 11), வங்கிப் பணியாளர் (நடுவர் 2) – எனத் தங்கள் பாத்திரத்தின் தொழிலையும் குணாதிசயத்தையும் மிகவும் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
படத்தின் கதை:-
நியூயார்க் கவுண்டி நீதிமன்றத்தின் வெப்பமான கோடை நாளில். ஒரு 18 வயது 'சேரி இளைஞன்', தன் கொடுமைக்கார தந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவனது வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.
நீதிபதி ரூடி பாண்ட் என்பவரின் குரல் மட்டும் அங்கே கேட்கிறது , அவர் இந்த நடுவர் குழுவிடம், நியாயமான சந்தேகம் உங்களுக்கு இருந்தால் 'குற்றமற்றவன்' என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், குழுவினரின் ஒருமனதான முடிவு கட்டாயம் என்றும், அவன் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தால் மின்சார நாற்காலியில் கட்டாய மரண தண்டனை காத்திருக்கிறது என்றும் அறிவுறுத்துகிறார்,நீதிபதி, சட்டம் பயின்றவர்களை விடுத்துச் சாதாரணத் தொழில் புரியும் 12 பேரை அமர்த்தியதற்குக் காரணம், அமெரிக்கச் சட்டத்தின் அடிப்படைத் தத்துவமான "சமமானவர்களின் தீர்ப்பு" என்பதாகும். இதன் நோக்கம், நீதியைச் சட்ட வல்லுநர்களின் பார்வையில் மட்டும் வைக்காமல், சாதாரண, பகுத்தறிவுள்ள மக்களின் பொதுப் புத்தியின் அடிப்படையிலும் மனசாட்சியின் வெளிப்பாட்டிலும் நிலைநாட்டுவதே ஆகும். நடுவர் குழு, அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு ஜனநாயகச் சோதனைச் சாவடியாகவும் செயல்படுவதைப் பார்க்கிறோம்.
நீதிமன்ற உதவியாளர் அங்கே (ஜேம்ஸ் கெல்லி) நடுவர்களை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறார். அந்த நீதிமன்ற அறையில் விசிறி பழுதாகி இருக்க, வெப்பம் மேலும் இறுக்கத்தை அளிக்கிறது.
இந்த நடுவர் அறையில் இருந்த 12 ஆண்களின் தொழில்கள் மற்றும் பின்புலங்கள் முற்றிலும் மாறுபட்டவை:
மார்ட்டின் பால்சம் (நடுவர் 1): ஒரு அமைதியான, வழிநடத்தும் தலைவர், உயர்நிலைப் பள்ளி கால்பந்து பயிற்சியாளர்.
ஜான் ஃபீட்லர் (நடுவர் 2): எளிதில் தடுமாறும் ஒரு மென்மையான வங்கிப் பணியாளர்.
லீ ஜே. காப் (நடுவர் 3): கோபக்காரர், தன் மகனைப் பிரிந்த ஒரு அஞ்சல் சேவை உரிமையாளர்; 'குற்றவாளி'யின் மிகத் தீவிர ஆதரவாளர்.
இ. ஜி. மார்ஷல் (நடுவர் 4): தர்க்கரீதியானவர், கூர்மையான பங்குத் தரகர்; உண்மைகளை மட்டுமே நம்புபவர்.
ஜாக் கிளக்மேன் (நடுவர் 5): சேரிப் பின்னணியில் வளர்ந்தவர், பால்டிமோர் ஓரியோல்ஸ் ரசிகர்; 'சேரிப் பையன்கள்' மீதான பாகுபாட்டைக் கண்டு உணர்ச்சிவசப்படுபவர்.
எட்வர்ட் பின்ஸ் (நடுவர் 6): கொள்கைப் பிடிப்புள்ள, மரியாதை நிறைந்த வீட்டுக்கு வண்ணம் பூசுபவர்.
ஜாக் வார்டன் (நடுவர் 7): பொறுமையற்ற, கேலி பேசுபவர்; அந்த மாலை நடக்கும் யாங்கீஸ் ஆட்டத்தைக் குறித்து கவலை கொள்பவர்.
ஹென்றி ஃபோண்டா (நடுவர் 8): மனிதநேயம் மிக்க கட்டடக் கலைஞர் மற்றும் மூன்று குழந்தைகளின் தந்தை; ஆரம்பத்தில், கேள்வியெழுப்பும் ஒரே நபர்.
ஜோசப் ஸ்வீனி (நடுவர் 9): சிந்தனையுள்ள, கூர்ந்து கவனிக்கும் வயதானவர்.
எட் பெக்லி (நடுவர் 10): சத்தமான, இனவெறியும் பக்கச்சார்பும் கொண்ட கார் கராஜ் உரிமையாளர்.
ஜார்ஜ் வோஸ்கோவெக் (நடுவர் 11): ஐரோப்பிய வாட்ச்மேக்கர், குடியேறிய அமெரிக்கர்; ஜனநாயக விழுமியங்களை மதிப்பவர்.
ராபர்ட் வெப்பர் (நடுவர் 12): நிலையற்ற, எளிதில் திசைதிருப்பப்படும் விளம்பர நிர்வாகி.
ஆரம்ப வாக்கெடுப்பில், நடுவர் 8 (ஹென்றி ஃபோண்டா), தான் அவசரப்பட விரும்பவில்லை என்று கூறி, 'குற்றமற்றவன்' என்று வாக்களித்துத் தனித்து நின்றவர்.
ஆரம்பத்தில், வழக்கின் முடிவு அப்பட்டமாகத் தெரிந்தது: இளைஞன், தான் தொலைத்துவிட்டதாகக் கூறிய அதே வகையான சுவிட்ச் பிளேடு கத்தி கொலை நடந்த இடத்தில் இருந்தது.
ஒரு அண்டை வீட்டார், எதிரே ஓடும் ரயில் ஜன்னல் வழியாக இளைஞன் குத்துவதைப் பார்த்ததாகச் சாட்சியமளித்தார்.
கீழே வசித்த மாற்றுத்திறனாளி முதியவர், இளைஞனின் கொலை மிரட்டல் சத்தத்தையும், உடல் விழும் சத்தத்தையும் கேட்டதாகவும், பின் இளைஞன் படிக்கட்டில் ஓடுவதைப் பார்த்ததாகவும் கூறினார்.
நடுவர் 8, ஒரு நிபந்தனை விதித்து, அடுத்த வாக்கெடுப்பில் ஒருமனதாக இருந்தால் தான் தன் வாக்கை மாற்றுவதாகக் கூறுகிறார்.
இரகசிய வாக்கெடுப்பில், நடுவர் 9 (ஜோசப் ஸ்வீனி) தன் வாக்கை மாற்றி விடுகிறார்; அவர், இன்னும் விவாதம் தேவை என்பதை நடுவர் 8-ன் உறுதியிலிருந்து தாம் உணர்ந்ததாக ஒப்புக்கொள்கிறார்.
நடுவர் 8, நீதிமன்றத்தில் 'தனித்துவமானது' என்று கூறப்பட்ட அதே போன்ற சுவிட்ச் பிளேடு கத்தியை வெளியே இருந்து வாங்கி வந்தவர், அது உண்மையில் தனித்துவமானது அல்ல என்பதை மற்ற 11 பேர்களுக்கும் நிரூபிக்கிறார்.
பல நடுவர்கள், "உன்னைக் கொன்றுவிடுவேன்" என்ற மரண அச்சுறுத்தல் என்பது வெறும் கோபத்தின் வெளிப்பாடு மட்டுமே என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். நடுவர் 2 (ஜான் ஃபீட்லர்) உட்பட இரண்டு நடுவர்கள் தங்கள் வாக்கை அத்தருணத்தில் மாற்றுகின்றனர்.
இந்த விவாதங்களால், நடுவர் 5 (ஜாக் கிளக்மேன்), நடுவர் 11 (ஜார்ஜ் வோஸ்கோவெக்) மற்றும் நடுவர் 6 (எட்வர்ட் பின்ஸ்) ஆகியோர் தங்கள் வாக்கை 'இளைஞன் குற்றமற்றவன்' என்று மாற்றுகின்றனர்.
நடுவர் 6, விவாதத்தின்போது நடுவர் 3 முதியவரான நடுவர் 9-ஐ வார்த்தைகளால் கடுமையாகத் தாக்கியபோது, நியாயத்திற்காக எழுந்து நின்று அவருக்கு ஆதரவாகப் பேசுகிறார்.
நடுவர்கள் இப்போது இளைஞனுக்கு எதிராக சாட்சி சொன்ன மாற்றுத்திறனாளி முதியவரின் சாட்சியத்தை ஆராய்கின்றனர். முதியவர், சத்தம் கேட்ட பிறகு 15 வினாடிகளில் கதவைத் திறந்து, இந்த இளைஞன் ஓடுவதைப் பார்த்ததாகக் சாட்சியம் கூறியிருந்தார்.
நடுவர்கள், முதியவரின் குடியிருப்பு வரைபடத்தைப் பார்த்து ஒரு பரிசோதனை நடத்தினர். முதியவர், தான் கூறிய நேரத்தில் கதவு வரை சென்று படிக்கட்டை அடைவது அசாத்தியம் என்பதை அங்கே உறுதியாகக் கண்டறிந்தனர்.
மேலும், ரயில் கடந்து செல்லும் சத்தத்தில், முதியவர் கேட்டதாகக் கூறிய சத்தங்கள் அனைத்தையும் மறைத்திருக்கும் என்றும், முதியவர் தெளிவாக எதையும் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் நடுவர் 8 வாதிடுகிறார்.
இந்த வாதங்கள், மேலும் இரண்டு நடுவர்களை மனம் மாற்றுகிறது. நடுவர் 3 (லீ ஜே. காப்), ஆத்திரத்தில் நடுவர் 8-ன் மீது பாய்ந்து "கொன்றுவிடுவேன்" என்று மிரட்டுகிறார்.
அதே வினாடியில், அனைவரும் மௌனமாகின்றனர்,அவர் சொன்ன வார்த்தைகள் உண்மையில் கொலையாகாது என்பதை உளமார உணர்ந்தனர்.
இதுவே, இளைஞனின் வார்த்தைகளும் வெறும் கோபத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் என்பதை மீண்டும் இந்த சபையில் உறுதிப்படுத்தியது.
நடுவர் 7 (ஜாக் வார்டன்), அன்று மாலை யாங்கீஸ் ஆட்டத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஒரே அவசரத்திற்காகத் தன் முந்தைய வாக்கை மாற்றி 'குற்றமற்றவன்' என வாக்களிக்கிறார்.
இது அவரது பொறுப்பற்ற தன்மையை நமக்கு காட்டுகிறது.
தொடர்ந்து நடுவர் 12 (ராபர்ட் வெப்பர்) மற்றும் தலைவர் நடுவர் 1 (மார்ட்டின் பால்சம்) ஆகியோரும் தமது வாக்கை குற்றமற்றவன் என்று மாற்ற, நடுவர் குழு 6:6 என்று சமமாக அங்கே பிரிந்து நிற்கிறது.
நடுவர் 5 (ஜாக் கிளக்மேன்), சேரிப் பின்னணியில் வளர்ந்தவர் என்ற முறையில், சுவிட்ச் பிளேடு கத்தியின் பயன்பாடு பற்றித் தனிப்பட்ட அனுபவத்துடன் பேசுகிறார். அத்தகைய கத்திகள் மேல்நோக்கி குத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை என்றும், இளைஞன் குட்டையாக இருந்ததால், கத்தியின் பிடியை மாற்றாமல் கீழ்நோக்கிக் குத்தியிருக்க வாய்ப்பில்லை என்றும் வாதிடுகிறார்.
இது அனுபவம் வாய்ந்த கொலைத்தாக்குபவர் செய்யும் செயல் அல்ல என்று முடிக்கிறார். இதன் பிறகு, நடுவர் குழு 9:3 என்று மாறிய அதிசயம் நடக்கிறது.
நடுவர் 10 (எட் பெக்லி), தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், சேரிப் பின்னணியில் உள்ளவர்கள் பற்றிய வெறுப்பு நிறைந்த, பக்கச்சார்பான ஆவேச உரையை அந்த அறையில் நிகழ்த்துகிறார்.
இதனால் பெரும்பாலான நடுவர்கள் (நடுவர் 4 உட்பட), அறையில் அவரைப் புறக்கணிக்கும் விதமாக எழுந்து நின்று, அருவருத்து சுவரை நோக்கித் திரும்பி நிற்கின்றனர். இது, அவரது இனவெறிக்கு இந்த அறையில் இடம் இல்லை என்பதைக் காட்டுகிறது.
நடுவர் 4 (இ. ஜி. மார்ஷல்), 'தொழில்முறை தர்க்கவாதி', இன்னும் ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் நம்புகிறார்: எதிரே இருந்த அண்டை வீட்டுப் பெண்ணின் சாட்சி வாக்குமூலம் அது.
அவர் கடும் உறுதியாக இருப்பதால், நடுவர் 12 மீண்டும் இளைஞனை குற்றவாளி' என்று மாற்றி எழுதி விடுகிறார்.
நடுவர் 4 தன் கண்ணாடியைக் கழற்றியவர், மூக்கின் மீது ஏற்பட்டிருந்த அடையாளங்களைத் இதமாக தேய்த்து விடுகிறார்,
நடுவர் 9 (ஜோசப் ஸ்வீனி) இதை கூர்ந்து கவனிக்கிறார். அந்தப் பெண் சாட்சியும் அடிக்கடி அதேபோல் மூக்கை கண்ணாடி அழுத்திய தடத்தில் இதமாக தேய்த்துக் கொண்டிருந்ததை அவர் நினைவு கூர்கிறார்; , அவள் வழக்கமான கண்ணாடி அணிபவள்.
நடுவர் 8 இந்தத் தகவலை சரியாக பயன்படுத்தியவர்: அந்தப் பெண் படுக்கையில் தூங்க விழைந்ததால் நிச்சயம் கண்ணாடி அணிந்திருக்க மாட்டாள். மேலும், இரவில், இரு கட்டடங்களுக்கு நடுவே ஓடும் ரயிலின் வெளிச்சத்தில் கண்ணாடி இல்லாமல் கொலையாளியை அவள் தெளிவாகப் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை.
இந்த விவாதமானது, நடுவர் 4 (பங்குத் தரகர்)-ன் தர்க்கரீதியான உறுதியை முழுமையாக உடைக்கிறது.
அவர் தன் வாக்கை இளைஞன் குற்றமற்றவன் என மாற்றுகிறார்.
நடுவர் 12 ம் மீண்டும் இளைஞன் 'குற்றமற்றவன்' என்று மாற்றுகிறார். நடுவர் 10ம் அரை மனதாக தன் இனவெறி வாக்கை இத்தருணத்தில் விலக்கிக் கொண்டார்.
இறுதியில், நடுவர் 3 (லீ ஜே. காப்) மட்டுமே அந்த அறையில் தனித்து நிற்கிறார். மற்ற நடுவர்கள் அமைதியாக அவரையே பார்க்கின்றனர். அவர், தன் மகனுடன் ஏற்பட்டிருந்த மனக்கசப்புதான் இந்த இளைஞனையும் தண்டித்தே தீர வேண்டும் என்ற தனது பிடிவாதத்திற்குக் காரணம் என்பதை உணர்கின்றார்.
உணர்ச்சிபூர்வமான உள்ளக் குமுறலில், தன் மகனுடன் அவர் இருந்த புகைப்படத்தை ஆவேசமாகக் கிழித்தெறிகிறார்.
பிறகு, கண்ணீரில் உடைந்துபோன அவர், தன் பிடிவாதத்தை விட்டுவிட்டு, "இளைஞன் குற்றமற்றவன்" என்று தன் வாக்கை மாற்றினார்.
இப்போது 12 பேர்களின் தீர்ப்பும் ஒருமனதாகிறது. இளைஞன் விடுதலை செய்யப்பட வேண்டும் என முன்மொழிகின்றனர்.
நடுவர்கள் அறையை விட்டு வெளியேறும்போது, நடுவர் 8 (ஹென்றி ஃபோண்டா), உடைந்துபோயிருந்த நடுவர் 3-க்கு அவரது கோட்டை அணிய உதவுகிறார். இறுதிக் காட்சியில், நடுவர் 8 மற்றும் நடுவர் 9, தங்களை டேவிஸ் மற்றும் மெக்கார்ட்ல் என பரஸ்பரம் அறிமுகப் படுத்திக் கொள்கின்றனர்,
நீதிக்காகப் போராடிய இரு வலிமையான நடுவர்களும் தங்கள் வழியில் பிரிந்து செல்கையில் படம் நிறைகிறது.
இத்திரைப்படத்தின் அடிப்படை கருப்பொருள் – அதாவது, மூடிய அறைக்குள் நடக்கும் ஆழமான விவாதம் மற்றும் ஒருமனதான தீர்ப்பின் தேடல் – உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல்வேறு நாடுகளில் அதன் கலாச்சார மற்றும் அரசியல் பின்னணியை பிரதிபலிக்கும் வகையில் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய இயக்குனர் நிகிதா மிகால்கோவ் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான "12" என்ற திரைப்படம் குறிப்பிடத்தக்கது.
ரஷ்யத் திரைப்படமான "12", மாஸ்கோவில் செச்சென் இனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், ஒரு ரஷ்ய இராணுவ அதிகாரியை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கை மையப்படுத்துகிறது. அசல் கதையைப் போலவே, நடுவர் குழுவில் ஒருவரே முதலில் சந்தேகத்தை எழுப்புகிறார். இருப்பினும், மிகால்கோவ் இதில் ஒரு முக்கியமான மாற்றத்தைச் செய்கிறார்: நடுவர்களின் விவாதம் செச்செனியாவில் நடந்த போர்க்காலக் குழந்தைப் பருவத்தின் சோகமான பின்னணிக் காட்சிகளுடன் (Flashbacks) அடிக்கடி குறுக்கிடப்படுகிறது.
இது, நடுவர்களின் தனிப்பட்ட சமூக, இன ரீதியான முன்முடிவுகளையும், ரஷ்யாவின் வரலாற்றின் தாக்கத்தையும் இன்னும் ஆழமாகக் காட்டுகிறது. மேலும், இந்தக் கதையில், குற்றம் சாட்டப்பட்டவன் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட, நடுவர் குழுவின் தலைவரால் (முன்னாள் உளவுத்துறை அதிகாரி) அவனை விடுவித்தால், வெளியே காத்திருக்கும் உண்மைக் குற்றவாளிகளால் அவன் கொல்லப்படுவான் என்ற உண்மை வெளிப்படுத்தப்படுகிறது. இது, நீதியின் வெற்றி மட்டும் போதாது; நடைமுறை பாதுகாப்பு தேவை என்ற கூடுதல் தத்துவார்த்த அழுத்தத்தை அளிக்கிறது. இறுதியில், நடுவர்கள் அனைவரும் ஒருமனதாக விடுதலைக்கு வாக்களித்தாலும், தலைவர் அந்த இளைஞனைப் பாதுகாக்கத் தானே களமிறங்குவதாக முடிவெடுப்பார்.
இதன் மூலம், தனிப்பட்ட நீதிக் கடமை சமூக நீதிக்கான பெரும் பொறுப்பாக மாறுவதைச் சித்தரிக்கிறது.
இதைத் தவிர, இந்தியா, துருக்கி, லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட பல மொழிகளில் இந்தத் திரைப்படம் தழுவப்பட்டு, அந்தந்த பிராந்தியத்தின் சமூக, அரசியல் அல்லது பொருளாதார மோதல்களை உள்ளடக்கிய விசாரணைப் பின்னணிகளைக் கொண்டிருந்தன.
இந்தத் தழுவல்கள் அனைத்தும், "12 Angry Men"-ன் முக்கியச் செய்தியை நிலைநிறுத்துகின்றன: நீதி என்பது பலவீனமான குரலைக் காக்கும் கடமை; மேலும், ஜனநாயகம் என்பது ஒரு அறையில் அமர்ந்து பொறுமையாக விவாதிக்கும் மனப்பான்மையில்தான் தங்கியுள்ளது.
ஒரு சிறிய இடத்தில் நடக்கும் விவாதம்கூட, சர்வதேச அளவில் நீதியின் தத்துவத்தை எப்படிப் பிரதிபலிக்கும் என்பதற்கு இந்தத் திரைப்படத் தழுவல்கள் மிகச் சிறந்த சான்றாகும்.