அண்ட் காட் க்ரியேட்டெட் வுமன் (Et Dieu... créa la femme) 1956


'அண்ட் காட் க்ரியேட்டெட் வுமன்' (Et Dieu... créa la femme) என்ற 1956 ஆம் ஆண்டு வெளியான  பிரெஞ்சுத் திரைப்படம், உலக சினிமா வரலாற்றில் ஒரு கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்திய முக்கியமான மைல்கல் ஆகும்.

 இதன் இயக்குநர் ரோஜர் வாடிம், பிரெஞ்சு சினிமாவில் மட்டுமல்லாமல், உலக அரங்கிலும் பாலியல் உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தை அடியோடு மாற்றியமைத்தார். 

இது ஒரு காதல் நாடகம் என்ற போர்வையில், ஐரோப்பாவின் போர் பிந்தைய சமூகத்தில் பெண்களின் ஆதிக்கம் நிறைந்த சுதந்திரத்தையும், சமூகக் கட்டுப்பாடுகளின் வீழ்ச்சியையும் ஆழமாகப் பதிவு செய்தது.

இது இயக்குநர் ரோஜர் வாடிமின் முதல் திரைப்படமாகும். ஒரு புதிய இயக்குநர் என்றபோதிலும், அவர் கையாண்ட விதம் மிகவும் துணிச்சலானது.

 ஜூலியட் என்ற கதாபாத்திரத்தை அவர் சித்தரித்த விதம், அக்காலப் பார்வையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. வாடிம் சயிண்ட்-ட்ரோபேஸின் தட்பவெப்பத்தைப் பயன்படுத்திய விதம் அற்புதம். கடற்கரைகள், சூடான காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைக் கதை சொல்லலுக்கான ஒரு கவர்ச்சியான பின்னணியாக மாற்றினார் இயக்குனர். 

இந்தக் கதைக்களம், ஜூலியட்டின் கட்டுக்கடங்காத உணர்வுகளுக்கும், ஊரின் இறுக்கமான சமூக அமைப்புக்கும் இடையே உள்ள முரண்பாட்டைத் தெளிவாகக் காட்டியது.

 பாலியல் உணர்வுகளை வெளிப்படையாகப் பேசும்போதும், அவர் அதை கலைநயத்துடனும், கவிதை ரீதியாகவும் படமாக்கினார். இந்தத் துணிச்சல் தான் பிற்காலத்தில் பிரெஞ்சு ‘புதிய அலை’ சினிமாவுக்குக் கூட மறைமுகமாக வழி வகுத்தது.

இந்தப் படம்தான் நடிகை பிரிகிடே பார்டோட்டின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. ஜூலியட் கதாபாத்திரத்தில் பார்டோட்டின் நடிப்பு, வெறுமனே ஒரு நடிப்பு மட்டுமல்ல; அது ஒரு கலாச்சார நிகழ்வு. ஜூலியட் - கவர்ச்சி, கள்ளங்கபடமற்ற தன்மை, மற்றும் அழிக்கும் சக்தி ஆகியவற்றுடன் கலந்த ஒரு கலவை. 

பார்டோட் இந்த ஜூலியட் கதாபாத்திரத்தை அசத்தலாகச் சுமந்திருந்தார். அவள் நிர்வாணமாக வெயில் காய்வதிலும், வெற்றுக்காலுடன் நடப்பதிலும், ஆவேசமாக நடனமாடுவதிலும் வெளிப்படும் இயல்பான, கட்டுப்படுத்த முடியாத உணர்வுகள், உலக சினிமா ரசிகர்கள் அதுவரை திரையில் கண்டிராத ஒரு புரட்சிகரமான பெண்மையைச் சித்தரித்தது.

 பார்டோட் திரையில் ஒரு 'கவர்ச்சி அணுகுண்டாக'  வெடித்தார், அதன் விளைவாகவே அவருக்கு 'செக்ஸ் கிட்டன்'  என்ற புனைப்பெயர் உருவானது. மற்ற நடிகர்களான கர்டென் ஜாக், ஜீன்-லூயிஸ் ட்ரிண்டிக்னன்ட் ஆகியோரின் பங்களிப்பும் கதையின் அழுத்தத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியது.

ரோஜர் வாடிம் எழுதிய திரைக்கதை, அந்தக் காலகட்டத்தின் சமூக மரபுகளை நேரடியாகப் பார்த்துச் சவால் விட்டது. கதைக்களம் ஒரு சாதாரண காதல் முக்கோணம் போலத் தோன்றினாலும், அதன் ஆழமான உட்கருத்து - சமூக அமைப்பால் கட்டமைக்கப்பட்ட புனிதமான திருமண பந்தத்திற்கு வெளியே ஒரு பெண் தனது உரிமையையும், பாலுணர்வுக்கான தேவையையும் நிலைநாட்டுவது  என்பதாக இருந்தது. 

ஜூலியட் ஒருவிதமான தார்மீகத் தீர்ப்புக்குள் அடைக்கப்படவில்லை. அவள் செய்யும் துரோகங்கள் கூட, அவளது அடிப்படை சுதந்திர உணர்வின் வெளிப்பாடாகவே சித்தரிக்கப்படுகிறது. இந்த விதமான சிக்கலான, தார்மீகத் தெளிவற்ற கதாபாத்திரச் சித்தரிப்பு அக்காலத் திரைப்படங்களில் மிகவும் புதியதாகும்.

படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டவர் ஆர்மாண்ட் திர்ராட் . அவர் செயிண்ட்-ட்ரோபேஸ் நகரின் சூரிய ஒளியையும், கடல் அழகையும் மிக நேர்த்தியாகப் பயன்படுத்தினார். இப்படமானது டெக்னிகலர் (Technicolor) முறையில் படமாக்கப்பட்டது.

 நிறங்களின் பயன்பாடு, படத்தின் கவர்ச்சியையும், உணர்வுப்பூர்வமான வெப்பத்தையும் அதிகரித்தது. குறிப்பாகக் கடற்கரைக் காட்சிகள், நடனக் காட்சிகள் மற்றும் நெருக்கமான தருணங்களில் ஒளிப்பதிவு, கதையின் உணர்வுக்கு மேலும் உயிரூட்டியது.

இப்படத்திற்கு இசையமைத்தவர் பால் மிஸ்ராக்கி (Paul Misraki). அவரது இசைப் பின்னணி, ஒருபக்கம் தென் பிரான்ஸின் லேசான, ரொமான்டிக் சூழ்நிலையையும், மறுபக்கம் ஜூலியட்டின் கொந்தளிப்பான மனநிலையையும் பிரதிபலித்தது. 

குறிப்பாக, ஜூலியட் மதுக்கடையில் ஆடும் அந்த ஆவேச நடனக் காட்சியின் இசை இன்றளவும் மறக்க முடியாத ஒரு பகுதியாகும். இந்த இசை, அந்தக் காலகட்டத்தின் திரைப்பட இசையின் போக்கிலிருந்து மாறுபட்டு, படத்தின் மையமான கிளர்ச்சி உணர்வை அழுத்தமாகத் தாங்கி நின்றது.

இந்தப் படத்திற்குக் குறிப்பிடத்தக்க முக்கியமான விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், இது விருதுகளை விடப் பெரிய ஒன்றைப் பெற்றது  அதுதான் உலகளாவிய கலாச்சாரத் தாக்கம். இந்தப் படம் பிரிகிடே பார்டோட்டை உலக நட்சத்திரமாக்கியதன் மூலம், பிரெஞ்சு சினிமாவிற்கான ஒரு புதிய சர்வதேசப் பாதையைத் திறந்தது. அமெரிக்காவில் பெரும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டாலும், இது அமெரிக்கத் திரைப்படத் துறையில் நடைமுறையில் இருந்த பழமையான 'ஹேஸ் கோட்' போன்ற தணிக்கை விதிகள் மீதான சமூக விவாதத்தைத் தூண்டி, அதன் வீழ்ச்சிக்கு மறைமுகக் காரணமாக அமைந்தது.

 இத்திரைப்படம் அடைந்த சர்வதேச வெற்றி, பிரான்ஸில் புதிய அலை திரைப்படத் தயாரிப்பாளர்கள் (New Wave Filmmakers) தங்கள் கருத்துக்களைத் துணிச்சலாக வெளிப்படுத்த ஒரு தைரியமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

 'அண்ட் காட் க்ரியேட்டெட் வுமன்' ஒரு திரைப்படமாக மட்டுமல்லாமல், பாலியல் புரட்சியின் தொடக்கப் புள்ளியாகவும், சமூக விவாதத்துக்கான ஒரு கருவியாகவும் உலக சினிமா வரலாற்றில் நிலைபெற்றுள்ளது.

படத்தின் கதை:-

ஜூலியட் ஒரு அனாதை, கட்டுக்கடங்காத பெண் குதிரை போன்றவள், நினைத்த இன்பத்தை உடனே துய்ப்பவள். 
இக்கதை 1956 ஆம் ஆண்டின் அழகிய கோடை காலத்தில், பிரான்சின் தெற்குக் கடற்கரையில் உள்ள புகழ்மிக்க செயிண்ட்-ட்ரோபேஸ்  நகரில் தொடங்குகிறது.  அவள் கவர்ச்சி, அழகு, மற்றும் அச்சுறுத்தாத சுதந்திரம் ஆகியவற்றின் முழு வடிவம்.
ஜூலியட் ஒரு சுகவாசி வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் அவளது ஒரே விதி. 

அவளது இயல்பான உடல் கவர்ச்சியை எந்தவித முயற்சியும் செய்யாமல் அவள் ஊரில் வெளிப்படுத்துகிறாள்.
வீட்டில் அவள் தன் ஆடைகளைக் களைந்துவிட்டு, நிர்வாணமாகத் தன் கொல்லைப்புறத்தில் படுத்து வெயில் காய்வாள்.

பெரும்பாலான நேரங்களில், செருப்பைக் கழற்றிவிட்டு, மண்ணில் வெறும் கால்களுடன் அலைவாள்.
சமூகத்தின் எந்தக் கட்டுப்பாடுகளையும், மற்றவர்கள் தன்னைப் பற்றிக் கூறும் விமர்சனங்களையும் அவள் முற்றிலும் புறக்கணிக்கிறாள். 

இவளது இந்தத் துணிச்சல் ஊரில் ஒரு பெரும் கொந்தளிப்பை உருவாக்குகிறது. ஊரில் உள்ள ஒவ்வொரு ஆணும் அவளது கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, அவள் பின்னால் அலைகின்றனர்; அதே சமயம், ஊர்ப் பெண்கள் அவளது கட்டுப்பாடற்ற சுதந்திரத்தைக் கண்டு கடுங்கோபம் கொள்கிறார்கள்.

ஜூலியட் பாலுணர்வு ரீதியாக மிகத் துடிப்புடன் இருக்கிறாள். அவளது இந்தத் துணிச்சலைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் எரிக் கரேடின் என்ற மிகவும் வயதான, பெரும் பணக்காரருடன் அவள் நெருங்கிப் பழகுகிறாள், ஊர் கட்டுப்பாடு காரணமாக இத்தனை வயது வித்தியாசம் கொண்ட பெண்ணை அவர் மணக்க முடியாது,எனவே அவளுக்கு மணமுடித்து வைத்து அவளை விரும்பிய  போதெல்லாம் அடைய திட்டமிடுகிறார் . சைக்கிளில் செல்லும் அந்த இளம்பெண்ணை மகிழ்விக்க, அவளுக்கு ஒரு புதிய காரை வாங்கிக் கொடுப்பதாக எரிக் வாக்குறுதி அளிக்கிறார்.
எரிக் சயிண்ட்-ட்ரோபேஸில் ஒரு பெரிய சூதாட்ட விடுதியைக் கட்ட விரும்புகிறார். ஆனால், அந்த வளர்ச்சித் திட்டத்துக்குத் தேவையான இடத்தில், பல ஆண்டுகளாக இருக்கும் டார்டியூ  குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு சிறிய கப்பல் கட்டும் தளம் தடையாக இருக்கிறது.

அந்தக் குடும்பத்தில் மூன்று சகோதரர்கள்:
 ஆன்டோயின் : மூத்தவன், கம்பீரமானவன்.
 மைக்கேல் : நடுவன், வெள்ளந்தியானவன்.
 கிரிஸ்டியன் (Christian): இளையவன்.

ஆன்டோயின்  அந்த புதிய கப்பல் தளத்தைக் குறித்து எரிக்கின் திட்டத்தைப் பற்றிக் கேட்பதற்கு, டூலான் நகரிலிருந்து வார இறுதி நாட்களில் இவ்வூருக்கு  வருகிறான்.

ஜூலியட், அந்த உயரமான, மனம் மயக்கும் ஆன்டோயினைத் தனக்குக் கிடைத்த ஒரு நல்ல துணையாகப் பார்க்கிறாள். அவனுடன் அவன் பணிபுரியும்  டூலான் நகரத்துக்கு தானும் போகக் காத்திருக்கிறாள். ஆனால், ஆன்டோயின் அவளிடம் உடல் ரீதியான இன்பத்தை மட்டுமே எதிர்பார்க்கிறான். இந்த உண்மையை அவள் ஒட்டுக்கேட்டு அறிகிறாள். என்றாலும், அவன் அவளைச் சமாதானப்படுத்தி, காலையில் பேருந்து நிலையத்தில் வைத்து சந்திப்பதாக உறுதியளிக்கிறான். இரவு அவளைச் சபலத்துக்கு உள்ளாக்கியவன், மறுநாள் காலையில், அவள் ஏக்கத்துடன் பேருந்தை நிறுத்த கையசைக்க, அந்தப் பேருந்தைத் நிறுத்தி ஏற்றாமல் கடந்து போக சொல்கிறான்.

ஜூலியட்டின் இந்த அடங்காத குணம் அவளைக் கவனித்துக்கொள்ளும் வயதான காப்பாளர்களுக்குப் பொறுமையை இழக்கச் செய்கிறது. அவர்கள் அவளிடம், "நீ உடனடியாக அடங்கவில்லை என்றால், உன்னைக் காப்பகத்துக்குத் திருப்பி அனுப்பி விடுவோம். அங்கே நீ இருபத்தி ஒரு வயது முடியும்வரை பூட்டப்பட்டிருப்பாய்," என்று அச்சுறுத்துகிறார்கள்.

ஜூலியட் ஊரை விட்டுச் செல்லக் கூடாது என்று விரும்பிய பணக்காரர் எரிக், ஆன்டோயினை ஜூலியட்டை திருமணம் செய்துகொள்ளும்படி கெஞ்சுகிறார். ஆன்டோயின் இதை கடுமையாக மறுத்துவிடுகிறான்.
ஆனால், மூன்று வருடங்கள் சிறைவாசம் போன்ற அவளது அனாதை காப்பக வாழ்க்கை, ஜூலியட்டைப் பாதிக்கும் என்பதை உணர்ந்த, அவளது காதலுக்கு ஏங்குபவனான  நடுச் சகோதரன் மைக்கேல், அவளை உடனே  திருமணம் செய்துகொள்ள முன்வருகிறான். 

தன் மனது முழுக்க ஆன்டோயின் மீது காதல் இருந்தாலும், வேறு வழியில்லை என்பதால், ஜூலியட், நேர்மையான மைக்கேலை மணமகனாக ஏற்றுக்கொள்கிறாள்.

மைக்கேலுக்கும் ஜூலியட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஒரு சிறிய தேவாலயத்தில் சடங்குகள் நடக்கின்றன. இந்தத் திருமணத்தில் அண்ணன் ஆன்டோயின் கலந்துகொள்ளவே இல்லை, அவன் திருமணத்தை முற்றிலும் அலட்சியம் செய்கிறான்.

திருமணத்துக்குப் பிறகு, ஒரு பொது இடத்தில் மைக்கேலும் ஜூலியட்டும் நிற்கும்போது, ஓர் உள்ளூர் ரவுடி மைக்கேலையும், ஜூலியட்டையும் இழிவுபடுத்திப் பேசுகிறான். ஆவேசமடைந்த மைக்கேல், தன்னுடைய மனைவியின் கண்ணெதிரே அவமானப்படுத்தப்பட்டதால், அந்த கோபத்துடன் அவனைத் தாக்குகிறான். ஆனால், வலுவான அந்த ரவுடியால் மைக்கேல் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு, வாய் உடைக்கப்பட்டு தெருவில் அவமானப்படுகிறான்.
திருமணம் முடிந்ததும், குடும்ப வீட்டில் வரவேற்பு விருந்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ஜூலியட், விருந்துக்காகக் காத்திருக்கும் எல்லோரையும் அலட்சியம் செய்துவிட்டு, மைக்கேலுடன் தங்கள் அறைக்குச் செல்கிறாள். அங்கே இருவரும் ஆழ்ந்த, உணர்ச்சிப்பூர்வமான அன்பைப் பரிமாறிக்கொண்டு கதவைத் திறந்து வைத்து உறவு கொள்கிறார்கள். தாம்பத்திய உறவு முடிந்த பிறகு, ஜூலியட் வரவேற்பு அறையில் இருந்தவர்களைக் கொஞ்சமும் மதிக்காமல், கீழே இறங்கி வந்து, விருந்துக்கு வந்தவர்களின் உணவுத் தட்டுகளைச் சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறாள்; முடித்ததும் , ஒரு பாட்டில் ஒயினையும் தன்னுடன் எடுத்துக்கொண்டு பாடிக்கு செல்கிறாள்,சிறு நாணம் இல்லை. அவளது இந்தக் கண்ணியமற்ற, துடுக்கான செயல் அங்கே இருந்த விருந்தினர்களைத் திகைப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துகிறது.

இதற்கிடையில், பணக்காரரான எரிக் கரேடின் அந்தப் பெரிய துறைமுகத்தை  முழுவதுமாக விலைக்கு வாங்கிவிடுகிறார். அவர் டார்டியூ சகோதரர்களின் குடும்பத்துக்கு அந்தத் துறைமுகத்தில் 30% லாபப் பங்குகளைக் கொடுத்து, அந்தப் பங்களிப்புக்கு ஈடாக, துறைமுகத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பை அண்ணன் ஆன்டோயினிடமே ஒப்படைக்கிறார். இதனால், ஆன்டோயின் நிரந்தரமாகச் சயிண்ட்-ட்ரோபேஸுக்கே திரும்பி வந்து தங்க வேண்டியதாகிறது.
ஆன்டோயின் அருகில் இருந்ததால், ஜூலியட்டின் நடவடிக்கைகள், கணவன் மைக்கேல் மீது மேலும் மேலும் மரியாதைக் குறைவாக மாறுகிறது. ஜூலியட்டின் மனம் மீண்டும், தன் முதல் காதலான ஆன்டோயினை நாடத் தொடங்குகிறது.

ஒருநாள், மைக்கேல் வணிக ரீதியான வேலைக்காக ஊரை விட்டுச் சென்ற சமயம். ஜூலியட், ஆன்டோயினுக்குச் சொந்தமான துறைமுகத்தின் படகுகளில் ஒன்றைத் திருடிச் செல்கிறாள். ஆனால், படகின் என்ஜினில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டு, படகு தீப்பிடிக்க ஆரம்பிக்கிறது.
ஜூலியட்டைக் காப்பாற்றுவதற்காக, ஆன்டோயின் நீந்திக் கடலுக்குள் சென்று, அவளைக் காப்பாற்றுகிறான். இருவரும் நீந்தி, ஒரு மக்கள் நடமாட்டமில்லாத, ஒதுக்குப்புறமான கடற்கரையில் கரை சேர்கிறார்கள். அங்கே, அந்தச் சூழ்நிலையின் தளர்வு, பழைய ஈர்ப்பு, மற்றும் ஜூலியட்டின் சபலத்தால், அவள் ஆன்டோயினைச் சம்மதிக்க வைத்து, அவனுடன் திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்ட உடல் உறவை  அந்ததீவில் வைத்துக்கொள்கிறாள்.

அந்த நெருக்கத்துக்குப் பிறகு, ஜூலியட் காய்ச்சல் கண்டு, தன் படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கிறாள். அவள் தன் மனதில் உள்ள பாரத்தைத் தாங்க முடியாமல், தன் கணவனின் இளைய சகோதரனான கிரிஸ்டியனிடம், ஆன்டோயினுடன் தான் கொண்ட உறவைப்பற்றிய உண்மையை ஒப்புக்கொள்கிறாள்.
இதற்கிடையில், ஜூலியட்டை எப்போதும் வெறுத்து வந்த, மைக்கேலின் தாயார், மேடாம் டார்டியூவுக்கு இந்தத் துரோக விஷயம் எப்படியோ தெரிய வருகிறது. அவள் ஆத்திரமடைந்து, மகன் மைக்கேலிடம், "உன் மனைவி உனக்குத் துரோகம் செய்துவிட்டாள். நீ அவளைச் சற்றும் தாமதிக்காமல் வீட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்" என்று உத்தரவிடுகிறாள்.
அவளைச் சந்தித்துப் பேச மைக்கேல் அவளது அறைக்குச் செல்லும்போது, ஜூலியட் அங்கிருந்து மறைந்திருந்தாள். மைக்கேலின் குழப்பம் அதிகரிக்கிறது.

மைக்கேல், தன் மனைவி ஜூலியட் மாயமானதைக் கண்டு பெரும் குழப்பத்தில் இருக்கிறான். அவளை நகரம் முழுவதும் தேடி அலைகிறான். தன் தாய் சொன்ன துரோகச் செய்தியாலும், மனைவி காணாமல் போனதாலும் அவன் ஆத்திரத்தின் உச்சியில் இருக்கிறான்.
அவன், தன் மனைவிக்குத் துரோகம் செய்த அண்ணன் ஆன்டோயினைத் தேடி, கப்பல் கட்டும் தளத்துக்குச் செல்கிறான். ஆத்திரத்தில் அங்கே சென்ற மைக்கேல், தன் கையில் ஒரு துப்பாக்கியை எடுக்கிறான்.
ஆனால், ஜூலியட் செய்த துரோகத்துக்கு, தன் அண்ணனைச் சுட்டுக் கொல்வது சரியான தீர்வு அல்ல என்று அவனது மனசாட்சி தடுக்கிறது. எனவே, துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு, அவன் ஆன்டோயினை நோக்கிப் பாய்ந்து, ஆக்ரோஷமாகச் சண்டையிடத் தொடங்குகிறான். மைக்கேலின் ஆத்திரமான தாக்குதலில், எதிர்பாராத விதமாக ஆன்டோயின் தலையில் அடிபட்டு, அவன் நிலை குலைந்து கீழே மயங்கி விழுகிறான்.

இதற்கிடையில், ஜூலியட் நகரத்தில் உள்ள ஒரு மதுக்கடைக்கு  வந்துவிடுகிறாள். அவள் தன் மனதில் உள்ள கொந்தளிப்பை மறப்பதற்காக, இரட்டைப் பிராண்டிகளை  அதிக அளவில் குடிக்கத் தொடங்குகிறாள். அவள் அங்கிருக்கும்போது, அவளது தோழி லூசியன் அங்கே வந்து, ஜூலியட் கட்டுப்பாடில்லாமல், ஊரறிய ஒரு வேடிக்கையாக மாறி வருவதை எரிக் கரேடின்னுக்குத் தெரிவிக்கிறாள்.
ஜூலியட்டைக் காப்பாற்ற நினைத்த எரிக் அங்கே விரைந்து வருகிறார். அவர் அவளிடம், "என்னுடன் வா! உன்னை உலகம் முழுவதற்கும் அழைத்துச் சென்று, நான் உனக்குச் சிரிப்பையும், மகிழ்ச்சியையும் தருகிறேன்" என்று கெஞ்சுகிறார். ஆனால், ஜூலியட் அவருடைய சலுகையை அலட்சியமாக மறுக்கிறாள்.
இதற்கிடையில், அங்கிருந்த கரீபியன் இசைக் கலைஞர்கள் தங்கள் இசையை இசைக்க, ஜூலியட் தன் மனக் கொந்தளிப்பை வெளிப்படுத்த, அங்கே கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே சென்று, எல்லை மீறிய, பாலுணர்வைத் தூண்டும் விதமான நடனத்தை ஆடத் தொடங்குகிறாள்.

ஜூலியட் நடனமாடிக் கொண்டிருக்கும்போதே, துப்பாக்கியை எடுத்தவாறு மைக்கேல் ஆவேசமாக அந்தக் கடைக்குள் நுழைகிறான். தன் கணவன் துப்பாக்கியுடன் நிற்கிறான் என்பதைக் கண்டும் ஜூலியட் அவனைச் சற்றும் பொருட்படுத்தாமல், தன் அநாகரிகமான நடனத்தைத் தொடர்கிறாள்.
நிலைமையைப் புரிந்துகொண்ட எரிக், மைக்கேலிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முயற்சிக்கிறார். அந்த இழுபறியில், துப்பாக்கி வெடித்து, எரிக் காயமடைகிறார்.
உள்ளூர் போலீஸ் இந்த விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று விரும்பிய எரிக், மயக்கமடைந்த ஆன்டோயினை எழுப்பி, தன்னை நைஸ் (Nice) நகரில் இருக்கும் தன் நண்பரும் அறுவை சிகிச்சை நிபுணருமான ஒருவரிடம் அழைத்துச் செல்லும்படி கேட்கிறார்.
காயமடைந்த நிலையில் காரில் பயணிக்கும்போது, எரிக் தன் மனதின் ஆழத்தில் ஜூலியட் மீது வைத்திருந்த தீவிரமான காதலை ஆன்டோயினிடம் வெளிப்படுத்துகிறார். ஆனால், அவளது இயல்பைக் குறித்துப் பேசும்போது, "அந்தப் பெண், ஆண்களின் வாழ்க்கையை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவள்" என்று ஒரு கசப்பான உண்மையைப் போல் தெரிவிக்கிறார். மேலும், ஆன்டோயினிடம், "இந்தத் துறைமுகத்தின் முதலாளி யார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதே," என்று ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்து, அவனை வேறு ஊருக்குப் பணியிடமாற்றம் செய்வதாகவும் அறிவிக்கிறார்.

துப்பாக்கிச் சூடு சத்தம் அடங்கி, எரிக் அங்கிருந்து சென்ற பிறகு, மைக்கேல் அந்த மதுக்கடையிலேயே இருக்கும் ஜூலியட்டைக் கோபத்துடன் எதிர்கொள்கிறான்.
மைக்கேல், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று, அவளது கன்னத்தில் பலமாக, தொடர்ந்து நான்கு முறை அறைகிறான்.
கணவனால் அவ்வாறு தாக்கப்பட்ட ஜூலியட், வலியில் கூச்சல் போடுவதற்குப் பதிலாக, தான் எதிர்பார்த்தது இதுதான் என்பது போல, தன் முகத்தில் ஒரு விசித்திரமான சிரிப்பை வரவழைத்துக் கொள்கிறாள். "இவ்வளவு தீவிரமாக, ஆழமாக, நான் உன்னைச் செயல்படத் தூண்டிவிட்டேனே" என்ற ஒருவித திருப்தி அவளது கண்களில் தெரிகிறது.

கடைசியில், கணவன் மைக்கேலும், மனைவி ஜூலியட்டும் கைகோர்த்துக்கொண்டு, அமைதியாகத் தங்கள் வீட்டை நோக்கி நடக்கிறார்கள். ஜூலியட்டின் கட்டுக்கடங்காத சுதந்திரம், இறுதியில், அன்பின் ஆதிக்கத்திற்கு அல்லது மைக்கேலின் ஆத்திரத்தின் மூலம் வெளிப்பட்ட அவளது அன்பின் மீதான தேவைக்கு அடிபணிந்தது போன்ற ஒரு தருணர்தில் படம் நிறைவடைகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (196) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) இசைஞானி (44) கலை (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) ஓவியம் (21) மனையடி சாஸ்திரம் (21) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) இலக்கியம் (14) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)