குவென்டின் டாரன்டினோவின் "தி ஹேட்ஃபுல் எய்ட்"(2015), உலக சினிமா மேதைகளின் வரிசையில் ஒரு தனித்துவமான படைப்பாக நிற்கிறது.
ஒரு பாரம்பரிய வெஸ்டர்ன் திரைப்படத்தின் வெளிப்புறப் பிரம்மாண்டத்தை, ஒரு துப்பறியும் நாடகத்தின் இறுக்கமான, ஒற்றை அறை வடிவத்திற்குள் சுருக்கி, அரசியல், இனவெறி மற்றும் மனித இயல்பின் இரக்கமற்ற தன்மையை ஆழமாக ஆராயும் ஒரு சவாலான முயற்சியை இது மேற்கொண்டது.
படத்தின் பெரும்பகுதி, உறைபனியால் சூழப்பட்ட ஒரு மவுனப் பேழையைப் போன்ற விடுதிக்குள் நடக்கும்போதும், அதன் உரையாடல்கள், வெளிப்புறப் பனிப்புயலை விடக் கொடூரமான உணர்ச்சிப் புயலைக் கிளப்பின.
டாரன்டினோ, அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய, இன்னும் ஆறாத காயங்கள் மற்றும் பகைமைகளால் சிதைந்துபோன சமூகத்தின் ஒரு சிற்றுருவத்தை, இந்த எட்டு மனிதர்கள் வழியாகக் காட்டினார்.
இதில், ஆபிரகாம் லிங்கனின் போலியான கடிதம் ஒரு குறியீடாகச் செயல்பட்டு, கறுப்பின மேஜருக்கும் வெள்ளைக்கார பவுண்டி ஹண்டருக்கும் இடையில் ஒரு பொய்யான நம்பிக்கைப் பிணைப்பை உருவாக்கியது.
இந்தத் தந்திரமே, வெள்ளையினச் சமூகத்தில் பிழைக்க ஒரு கறுப்பின மனிதன் பயன்படுத்தும் உத்தி என்பதை வெளிப்படையாகப் பேசியது.
இந்தப் படத்தின் திரைக்கதை, அதன் நாடகத்தன்மை, நுட்பமான நகைச்சுவை மற்றும் திடீர் வன்முறைக்கான நேரத்தைக் கனகச்சிதமாகப் பயன்படுத்தியது. வழக்கமான நேர்கோட்டுக் கதையைக் கைவிட்டு, இடை நடுவே ஒரு விரிவான ஃப்ளாஷ்பேக் மூலம், விடுதிக்குள் இருந்த ரகசியம் முழுவதையும் வெளிப்படுத்தியது ஒரு புத்திசாலித்தனமான உத்தி.
இது பார்வையாளர்களை, வெறும் பார்வையாளராக இருக்க விடாமல், நடந்த கொடூரங்களுக்குச் சாட்சியாக மாற்றியது. சாம்வெல் எல். ஜாக்சன், கர்ட் ரஸ்ஸல், மற்றும் ஜெனிஃபர் ஜேசன் லீ ஆகியோரின் நடிப்பு, இந்தக் கதாபாத்திரங்களின் சிக்கலான, வினோதமான உணர்ச்சிகளைக் கச்சிதமாகக் கொண்டு வந்தது.
குறிப்பாக, கைவிலங்கிடப்பட்டு ஒரு சடலத்துடன் பிணைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், தனது சதித்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் டெய்ஸி டொமெர்குவின் கதாபாத்திரம், அற்புதம் மற்றும் அருவருப்பின் கலவையாக இருந்தது.
ராபர்ட் ரிச்சர்ட்சனின் ஒளிப்பதிவு, ஒரு கலைப் படைப்பின் பிரம்மாண்டத்தை அளித்தது. இது பனிப்புயலின் தனிமையையும், விடுதியின் நெருக்கமான, அழுத்தம் நிறைந்த உட்புறத்தையும் சமமாக அணுகியது. என்னியோ மொரிக்கோனின் ஆஸ்கார் வென்ற பின்னணி இசை, படம் முழுவதும் நீடித்த ஒரு பயங்கரமான, தீர்க்கப்படாத பதற்றத்தை உருவாக்குகிறது.
மொரிகோன் மற்றும் டாரன்டினோவின் இந்தச் சங்கமம், ஒரு நவீன வெஸ்டர்னுக்குத் தேவையான கிளாசிக்கல் மர்மத்தையும், வலிமையையும் அளித்தது. முடிவில், இந்தப் படம் வெறும் வெஸ்டர்ன் அல்ல, மாறாக, வெறுப்பு, துரோகம் மற்றும் பழிவாங்கல் என்ற அமெரிக்கச் சிதைவுகளை அலசும், ஒரு முக்கியமான மற்றும் மறக்க முடியாத உலக சினிமா அனுபவமாகும்.
இயக்குனர் க்வென்டின் டாரன்டினோ, தனது வழக்கமான தனித்துவமான பாணியில் இந்த வெஸ்டர்ன் திரைப்படத்தை அளித்துள்ளர். இது அதிக உரையாடல்கள், வன்முறை மற்றும் கருப்பு நகைச்சுவை ஆகியவற்றைக் ஒருங்கே கொண்டிருந்தது. பிற்பாதி கதை ஒரு அறையில் நடக்கும் மர்மக் கதையாக அமைக்கப்பட்டிருந்தாலும், டாரன்டினோவின் இயக்கம் அதன் நாடகத்தன்மையைக் கூர்மைப்படுத்துகிறது.
அவர் கதைக்களத்தை நேர்கோட்டில் சொல்லாமல், நடுவில் ஒரு விரிவான ஃப்ளாஷ்பேக்கைப் பயன்படுத்தி, விடுதிக்குள் நடந்த படுகொலை மற்றும் சதித்திட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
அமெரிக்க உள்நாட்டுப் போரின் வடுக்கள், இனப் பகைமை, மற்றும் துரோகம் ஆகியவை இந்த இயக்கத்தின் மையக் கருப்பொருளாக உள்ளன.
திரைக்கதையை எழுதியவரும் டாரன்டினோ தான். இந்தப் படத்தின் முக்கிய பலமே, ஒரு சிறிய இடத்தில் சிக்கிய எட்டு மனிதர்களுக்கு இடையேயான சிக்கலான, அரசியல் ரீதியாகச் சூடான உரையாடல்கள்தான். சாமுவேல் ஜாக்ஸன்(மேஜர் Warren), கர்ட் ரஸ்ஸல் (ஜான் ரூத்), மற்றும் ஜெனீஃபர் ஜேஸன் லெய்ஹ் (டெய்ஸி டோமர்கூ) உட்பட நடிகர்கள் அனைவரும் தங்கள் வேடங்களுக்குப் பொருத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் நடித்தனர்.
குறிப்பாக, ஜெனீஃபர் ஜேஸன் லெய்ஹ்கின் நடிப்பு, வன்முறைக்கு ஆளான ஒரு குற்றவாளியின் மாறுபட்ட கோணங்களைக் காட்டி, அவருக்குச் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் பரிந்துரையைப் பெற்றுத் தந்தது.
ஒவ்வொரு நடிகரும், தங்கள் கதாபாத்திரங்களின் இருண்ட பக்கங்களை மிக அழுத்தமாக வெளிப்படுத்தினர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை ராபர்ட் ரிச்சர்ட்சன் அற்புதமாக செய்தார். அல்ட்ரா பேனவிஷன் 70எம்எம் பாணியில் படமாக்கப்பட்டதால், படத்தின் வெளிப்புறக் காட்சிகள், குறிப்பாகப் பனிப்புயலின் பிரமாண்டம் மற்றும் தீவிரத் தன்மையை மிகத் துல்லியமாகக் காட்ட முடிந்தது.
உட்புறக் காட்சிகளில் கூட, இந்த வகை ஒளிப்பதிவு அறையின் நெருக்கமான அமைப்பையும், மரவேலைப்பாடுகளின் சூடான நிறத்தையும், வெளியேயுள்ள குளிரான வெள்ளை நிறத்துடன் ஒப்பிட்டுக் காட்டி, ஒரு காட்சிப் புலன் உணர்வை உருவாக்குகிறது.
இந்தப் பிரம்மாண்டமான ஒளிப்பதிவு, ஒரு தனி அறையில் நடக்கும் காட்சிகளுக்குக் கூட அதிகத் தனித்துவத்தை அளித்தது.
இப்படத்திற்கு இசையமைத்தவர், வெஸ்டர்ன் படங்களுக்கு இசையமைப்பதில் முன்னோடியான என்னியோ மொரிக்கோன் அவர்கள். டாரண்டினோவின் படங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மீள் உபயோக இசைத் தொகுப்புகளுக்கு மாறாக, மொரிக்கோன் அவர்கள் பிரத்யேகமாக அபாரமான புதிய இசையை உருவாக்கினார்.
பின்னணி இசை, படம் முழுவதும் நீடித்த சஸ்பென்ஸ், தனிமை மற்றும் பனி நிறைந்த காட்சியின் அச்சுறுத்தும் அமைதியை வன்முறையின் அழகியலைப் பிரதிபலித்தது.
இந்தப் படத்திற்காக மொரிக்கோன் தனது முதல் ஆஸ்கர் விருதைச் சிறந்த அசல் இசைக்கான பிரிவில் வென்றார். ,அவர் கோல்டன் குளோப் மற்றும் பாஃப்டா போன்ற விருதுகளையும் பெற்றார்.
படத்தின் கதை:-
1877 ஆம் ஆண்டு . அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவடைந்திருந்தாலும், அதன் வடுவும், அரசியல் ரீதியிலான பிளவுகளும், குறிப்பாக வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையேயான இனப் பகைமைகளும் நீங்காமல் இருந்த காலகட்டத்தின் இறுதிக் கட்டம் அது.
இந்தக் கதை, வ்யோமிங் பிரதேசத்தின் கடும் குளிரும், உறைபனிக் காற்றும் நிறைந்த பகுதியில் நிகழ்கிறது.
கதையின் முக்கியப் பாத்திரமான, யூனியன் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற குதிரைப்படை மேஜர் மார்க்விஸ் வாரன், தான் வேட்டையாடிய மூன்று கொடூர கொலையாளிகளின் சடலங்களைச் சுமந்து கொண்டு, ரெட்ராக் நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில், அவரது குதிரை முற்றிலும் செயலிழந்துபோக, அந்தப் பயணத்தைத் தொடர முடியாமல், வாரன் தனியாகக் கடும் பனிப்புயலை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
அப்போது, அந்தப் பனிபடர்ந்த வெட்டவெளியில், ஓ.பி.ஜாக்ஸன் என்ற அனுபவம் வாய்ந்த ஓட்டுநரால் இயக்கப்படும் ஒரு கனமான மரத்தாலான ஸ்டேஜ்கோச் குதிரை வண்டி வந்து சேர்கிறது. வாரன், ஒரு விபரீத நம்பிக்கையுடன் அதன் கூரையில் பவுண்டி பிணங்களை கட்டியவர் ,பயணியருடன் பயணியாகிறார்.
அந்த வண்டிக்குள் ஏற்கனவே இன்னொரு பவுண்டி ஹண்டர் என்ற பரிசு வேட்டைக்காரன் இருந்தார். அவர்தான் ஜான்ரூத், தன் பிரத்யேக பாணிகாகப் புனைப்பெயர் பெற்றவர் , அது "த ஹாங்மேன்" தூக்கு தூக்கி. அவர், ஒரு கொடூரமான குற்றவாளியான "க்ரேஸி" டெய்ஸி டோமர்கூ என்பவளை உயிருடன் பிடித்து, அவளது தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக ரெட்ராக் நகருக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
டெய்ஸியைக் கண்காணிக்க, ரூத், அவளது கையில் தனது கையையும் இணைத்து கைவிலங்கிட்டுப் பிணைத்திருந்தார்.
வார்ரன் உள்ளே நுழைகிறார். ரூத், கறுப்பினத்தவரான வாரன் மீது உடனடியாக நம்பிக்கை வைக்கிறார். இதற்குக் காரணம், வார்ரன் எப்போதும் தன்வசம் வைத்திருக்கும் ஒரு பொக்கிஷம். அது, தான் யூனியன் இராணுவத்தில் இருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனிடம் இருந்து பெற்றதாகச் சொல்லப்படும் ஒரு தனிப்பட்ட பேனாநட்பு கடிதம்.
இந்த நம்பிக்கைக் குறியீடு, இரு வேறு துருவத்தைச் சேர்ந்த இந்த மனிதர்களை ஒன்றிணைக்கிறது.
வண்டி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்க, பாதையில் மேலும் ஒரு நபர் இணைகிறார். அவர், க்ரிஸ் மேனிக்ஸ், தன் தந்தை எர்ஸ்கின், மானிக்ஸ் மௌராடர்ஸ் என்றழைக்கப்பட்ட லாஸ்ட் காசர் தெற்கு போராளிக் குழுவை வழிநடத்தியவர்.
மானிக்ஸ், தான் தான் ரெட்ராக்கின் புதிய ஷெரிஃப் என்று கூறிக்கொண்டு அவர்களுடன் பயணிக்க இணைகிறார். ஒரு முன்னாள் கான்ஃபெடரேட் வீரரின் மகன், ஒரு யூனியன் மேஜருடன் பயணிக்க நேரிடுவது, அந்தச் சூழலில் நிலவிய இன மற்றும் அரசியல் பதற்றத்தை உணர்த்துகிறது.
பனிப்புயல் தீவிரமடைய, குதிரைகள் ஆவியைக் கக்கியபடி ஓடுகுறது, வண்டியின் சக்கரங்கள் பனியை இறுக்கிக் கிழித்துச் செல்கின்றன. இந்த இடத்தில்தான், ஒரு முக்கியமான தகவல் வெளிப்படுகிறது: வார்ரன், உள்நாட்டுப் போரின்போது ஒரு போர்க் கைதிகள் முகாமை உடைத்துத் தீ வைத்ததற்காக, அவர் தலையின் மீது கான்ஃபெடரேட் படைகள் ஒரு பெரிய பரிசை வைத்திருப்பதை ரூத் தெரிந்துகொள்கிறார்.
இது, வார்ரனின் கடந்த காலம், அவர் மீதுள்ள ரூத்தின் நம்பிக்கைக்கு ஒரு சிறிய அச்சுறுத்தலாக அமைகிறது.
கடும் பனிப்புயலைக் கிழித்துக்கொண்டுச் சென்ற குதிரை வண்டி, ஓ.பி.ஜாக்ஸனின் அனுபவத்தால், "செம்மஞ்சள் மரப் பஸ்ஸல்கள்" (Red Pine Needles) என்றழைக்கப்படும் பகுதிக்கு நடுவில் அமைந்திருக்கும், ஒரே தங்குமிடமான மின்னியின் ஹாபர்தேஷரி என்ற உணவு மதுபானம் ஆடை விடுதியை இறுதியாகச் சென்றடைகிறது.
வண்டியை விடுதி வாசலில் நிறுத்தியதும், ஓட்டுநர் ஓ.பி.ஜாக்ஸனின் பொறுப்பான பணி தொடங்குகிறது. உறைபனிக் காற்றில் விரைந்து சென்று, குளிரால் களைத்துப்போன குதிரைகளை, விடுதியின் பின்னால் இருக்கும் பனிக் காப்பு கொட்டகைக்குள் பத்திரமாகக் கட்டி, அவற்றின் தாகத்தையும் பசியையும் போக்க வைக்கோலும் தண்ணீரும் அளிக்கிறார்.
உள்ளே நுழைந்த பிறகு, அங்கிருந்த வெளிச்சம் மற்றும் பாதுகாப்பான உணர்வு நீடிக்கவில்லை. வெளியே ஓலமிடும் பனிக்காற்று, விடுதியின் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழையப் பார்க்கிறது. உள்ளே இருக்கும் சூட்டையும், அடைக்கலத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
உடனடியாகச் செயல்படும் ஓ.பி.ஜாக்ஸன் அந்தக் கனமான மரக் கதவை முழுமையாக இழுத்து மூடி, கதவு மீண்டும் திறக்காமல் இருக்க, தரையிலிருந்து ஒரு பெரிய, உறுதியான இரும்பு குறியைத் தேடி எடுத்து, அதை கதவின் சட்டத்திற்குப் பின்னால் குறுக்காகத் தட்டி, கதவை இறுக்கிப் பூட்டி விடுகிறார். இதன் மூலம், வெளியில் உள்ள மிருகத்தனமான பனிப்புயலுக்கும், உள்ளே உள்ள இந்தச் சிறிய அடைக்கலத்துக்கும் இடையேயான தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்படுகிறது.
இந்த விடுதிக்குள், ஏற்கனவே சில மனிதர்கள் தங்கியிருந்தனர், அவர்களை இந்த ஸ்டேஜ்கோச் வண்டிக் குழு சந்திக்கிறது.
விடுதிக்குள் நுழைந்த வண்டிக் குழு, ஏற்கெனவே அங்குத் தங்கியிருந்த நான்கு நபர்களைச் சந்திக்கிறது. விடுதியின் உரிமையாளர்களான மின்னீ மற்றும் அவள் கணவர் ஸ்வீட்டேவ் ஆகியோர் இல்லாததால், மெக்சிகன் ஆன பாப், கடையைப் பார்த்துக்கொள்வதாகக் கூறுகிறார்.
மற்றவர்கள், ரெட்ராக்கின் உள்ளூர் தூக்கிலிடுபவர் ஆஸ்வால்டோ மோப்ரே, அமைதியாக அமர்ந்திருக்கும் கௌபாய் ஜோ கேஜ், தன் காணாமற் போன மகன் செஸ்டர் சார்லஸிற்க்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பத் திட்டமிட்டுக் காத்திருக்கும் முன்னாள் கான்ஃபெடரேட் தளபதி சான்ஃபோர்ட் ஸ்மித்தர்ஸ் ஆகியோர் ஆவர்.
உள்நாட்டுப் போரின் போது கிடைத்த மோசமான அனுபவங்கள் காரணமாக, ஜான்ரூத் சக மனிதர்களை நம்புவதில்லை. குறிப்பாக, டெய்ஸி டோமர்கூவை எப்படியாவது மீட்க அவளுடைய ஆட்கள் திட்டமிட்டிருக்கலாம் என்ற அச்சத்தில், அவர் உடனடியாகச் செயல்படுகிறார்.
ஒரு கணம் கூடத் தாமதிக்காமல், அவர் மேஜர் வார்ரனைத் தவிர, அங்கிருந்த மற்ற அனைவரின் துப்பாக்கிகளையும் மற்றும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விடுகிறார். வார்ரன் மீது அவருக்குள்ள நம்பிக்கை, அவர் வைத்திருக்கும் லிங்கனின் கடிதத்தின் அடிப்படையிலானது.
உள்நாட்டுப் போரின் அரசியல் பகைமை உடனடியாகத் தீப்பிடித்தது. க்ரிஸ் மேன்னிக்ஸ் தளபதி ஸ்மித்தர்ஸை ஒரு போர்க் கதாநாயகனாக மதிக்க, வார்ரனுக்கு அவர் ஒரு கொடூரமான எதிரியாகத் தோன்றுகிறார். பேட்டன் ரவுஜ் என்ற இடத்தில், Smithers உத்தரவின் பேரில் கறுப்பினப் போர்க் கைதிகள் தூக்கிலிடப்பட்டதை நினைவுகூர்ந்த வார்ரன், அவரைக் கொன்று பழிவாங்கத் துடிக்கிறார்.
இரவு உணவின்போது, மேன்னிக்ஸ அந்த லிங்கன் கடிதம் போலியானது என்று யூகித்து, வார்ரனை நோக்கிப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்புகிறான். ரூத்தின் ஏமாற்றத்தைப் புரிந்துகொண்ட வார்ரன், அந்தக் கடிதம் வெள்ளைக்காரர்களிடம் தனக்குச் சலுகை வாங்கிக் கொடுக்கும் ஒரு பொய் என்று சற்றும் தயக்கமின்றி ஒப்புக்கொள்கிறார். இந்தத் தருணம், வார்ரனின் கூரிய அறிவையும், நிலைமையைச் சமாளிக்கும் திறனையும் காட்டுகிறது.
உடனடியாக, வார்ரன் தன் பழிவாங்கும் திட்டத்தைத் தொடங்குகிறார். அவர் தன் துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்து, தளபதி Smithers-ன் அருகில் வைக்கிறார். தன்னுடைய பரிசை வேட்டையாட முயன்ற ஸ்மித்தர்ஸின் மகனைத் தானே கொன்றேன், அதுவும் கடுங் குளிரில் நான்கு கால்களில் நாய் போல தவழ விட்டு வாய்ப்புணர்ச்சி வன்கொடுமை செய்து அதன் பின் சுட்டுக் கொன்றதாக ஆத்திரமூட்டும் பொய்களைச் சொல்கிறார். இந்த அவமானமும் மகனின் பெயரும் ஸ்மித்தர்ஸின் உணர்ச்சிகளைத் தூண்ட, அவர் ஆத்திரத்தில் அந்தத் துப்பாக்கியை எடுக்க விரைந்தபோது, வார்ரன் சற்றும் தாமதிக்காமல் தற்காப்புக்கு என்றெசுட்டு அவரைக் கொல்கிறார்.
இந்தக் கொலை, விடுதிக்குள் அமைந்திருந்த சண்டையற்ற சூழலைக் குலைத்து, மேலும் வன்முறைக்கான கதவைத் திறக்கிறது.
இந்தச் சண்டை மற்றும் குழப்பமான தருணத்தின்போதுதான், விடுதியின் மூலையில், காபி கொதித்துக்கொண்டிருந்த பாத்திரத்தில் விஷம் கலக்கப்பட்டது என்ற கொடூரமான உண்மை நிகழ்கிறது. இந்தக் கலப்பைப் பிணைக்கப்பட்டிருந்த டெய்ஸி மட்டுமே மௌனமாகக் கண்ணால் காண்கிறாள்.
சண்டையின் சத்தம் அடங்க, ஜான்ரூத் மற்றும் ஓ.பி.ஜாக்ஸன் இருவரும் அந்த விஷம் கலந்த காபியைக் குடிக்கிறார்கள்.
சில நிமிடங்களில், O.B. துடித்து இறந்து போகிறார். மரணப் போராட்டத்தில் இருந்த ரூத், தன் வலியில் துடித்துக்கொண்டிருக்கும்போதே, டெய்ஸி தன் கையில் விலங்கிடப்பட்டிருந்த சங்கிலியைப் பயன்படுத்தி, ரூத்தின் துப்பாக்கியை இழுத்து எடுத்து, அவரைச் சுட்டுக் கொன்றுவிடுகிறாள். இதன் மூலம், அவளுடைய கும்பலின் முதல் திட்டம் நிறைவேறுகிறது.
சற்று தாமதித்து நிலைமையைப் புரிந்துகொண்ட வார்ரன், டெய்ஸியை நிராயுதபாணியாக்கி, அவள் கையில் இருந்த கைவிலங்கைத் துண்டிக்காமல், ரூத்தின் பிணத்துடன் பிணைத்து ஒரு மூலையில் அமர வைக்கிறார். விஷத்தின் மர்மம் அவிழ்க்கப்பட, மேன்னிக் காபியில் விஷம் கலந்தது ஜோ கேஜ் ஆக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறான்.
ஆனால் வார்ரனின் கவனம் வேறு திசையில் செல்கிறது.
அவர் பாப் ன் கதையில் முரண்பாடுகளைக் கண்டறிகிறார். பாப் மின்னியின் உண்மையான் பணியாள் இல்லை என்று ஆதாரங்களுடன் கண்டுபிடித்துக் கொல்கிறார்.
அதன் பிறகு, வார்ரன், டெய்ஸியைக் கொல்வதாக அச்சுறுத்தும்போது, ஜோ கேஜ் தான் காபியில் விஷம் கலந்ததை ஒப்புக்கொள்கிறான்.
விஷம் கலந்தது யார் என்று தெரிந்த ஒரு சில கணங்களில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, கீழே உள்ள தரைப்பலகைகளுக்கு அடியில் மறைந்திருந்த ஓர் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் வார்ரனின் விரைப்பையில் சுடுகிறான். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, மோப்ரே மற்றும் மேன்னிக்ஸ் இருவரும் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு, தாங்களும் காயமடைகிறார்கள்.
வார்ரனின் விரைப்பகுதியில் துப்பாக்கிச் சூடு விழுந்தவுடன், கதை உடனடியாகச் சற்று நேரம் பின்னோக்கிச் செல்கிறது. அந்தப் பனிப்புயலுக்குச் சற்று மணி நேரங்களுக்கு முன்னால், விடுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பதை ஃப்ளாஷ்பேக் காட்சியில் காண்கிறோம்.
Daisy-இன் சகோதரனும் இந்தக் கும்பலின் தலைவனுமான ஜோடி,
பாப் உண்மையில், இவன் மார்கோ "த மெக்ஸிகன்"), மோப்ரே உண்மையில், இவன் "இங்லிஷ்" பீட் ஹுக்காஸ்), மற்றும் கேஜ். உண்மையில், இவன் "க்ரூச்" டக்ளஸ் ஆகியோர் மின்னீ ஹேபர்டேஷரி வந்தடைந்தனர். அவர்கள் உடனடியாக விடுதிக்குள் இருந்த அனைவரையும் கொடூரமாகப் படுகொலை செய்தனர். விடுதியின் உரிமையாளர்களான மின்னீ, ஸ்வீட்டேவ், மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் அனைவருமே கொல்லப்பட்டனர். ஆனால், அங்கு ஏற்கெனவே தங்கியிருந்த முன்னாள் கான்ஃபெடரேட் தளபதி சான்ஃபோர்ட் ஸித்தர்ஸை மட்டும் அவர்கள் உயிரோடு விட்டனர். அதன் காரணம், ஸ்மித்தர்ஸ் தன் மகனான செஸ்டர் சார்லஸக்கு கட்டத் திட்டமிட்டிருந்த நினைவுச் சின்னம் ஒன்றிற்காகக் காத்திருந்தார். இந்தக் கும்பல், அவர் வாய் திறக்காமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அவரை ஒரு பார்வையற்ற சாட்சியாக இருக்க அனுமதித்தது. இந்தக் கும்பல், கொலை செய்யப்பட்ட உடல்கள் அனைத்தையும் மறைத்து, விடுதியைச் சுத்தம் செய்து, Bob வெளியே இருந்து வந்த விருந்தினர்களிடம் பொய் சொல்லத் தயார் செய்கிறது. மேலும், ரூத் மற்றும் பிறர் வந்தால், அவர்களை எதிர்கொள்ளத் தேவையான ஆயுதங்களை மறைத்து வைக்கின்றனர். இந்த ஏற்பாடுகள் முடிந்த பிறகு, Jody இந்தத் திட்டத்தின் தலைமை மூளையாகச் செயல்பட, தரைப்பலகைகளுக்கு அடியில் உள்ள பாதாள அறையில் ஒளிந்துகொள்கிறான்.
நிகழ்காலத்திற்குத் திரும்புகையில், மேஜர்வார்ரன் மற்றும் க்ரிஸ் மேனிக்ஸ் இருவரும் தங்கள் காயங்களால் பலவீனமடைந்த நிலையில், எஞ்சியிருக்கும் டெய்ஸி, மோப்ரே, மற்றும் கேஜ் ஆகியோரைத் தங்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்திருக்கிறார்கள். ரூத் மற்றும் ஓ.பியின் மரணத்திற்குப் பழிவாங்க, அவர்கள் டெய்ஸியைக் கொல்வதாக அச்சுறுத்துகிறார்கள். இந்தக் கட்டத்தில்தான், தலைவனான ஜோடி, தனது குழுவினரைக் காக்க, பாதாள அறையில் இருந்து வெளியே வந்து சரணடைகிறான்.
ஆனால், வார்ரன் ஒரு கணம் கூடத் தாமதிக்காமல், துப்பாக்கியால் சுட்டு ஜோடியை உடனடியாகக் கொன்றுவிடுகிறார்.
தலைவன் கொல்லப்பட்ட நிலையில், எஞ்சியிருக்கும் கும்பல் உறுப்பினர்கள் வேறு வழியின்றித் தங்கள் திட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் ரெட்ராக்கில் சுமார் பதினைந்து கூலிப்படையினர் காத்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் டெய்ஸியை உயிருடன் மீட்பதற்காகவே காத்திருப்பதாகவும் கூறுகின்றனர். அவர்கள் மின்னிக்ஸுக்கு ஒரு சலுகை அளிக்கிறார்கள்: மேன்னிக்ஸ், வார்ரன்னைக் கொன்றால், அவர்கள் அவரைக் காப்பாற்றுவார்கள், மேலும் இறக்கும் நிலையில் இருக்கும் மோப்ரே (ஹைகாக்ஸ்) மற்றும் கொல்லப்பட்ட பாப் (மார்கோ) மீதுள்ள பவுண்டி பரிசை அவர் வசூலிக்கலாம் என்று ஆசை காட்டுகிறார்கள்.
மேன்னிக்ஸை சமாதானப்படுத்த ஹைகாக்ஸ் (மோப்ரே) முயற்சிக்கும்போது, வார்ரன் அவருக்குப் பேச வாய்ப்பளிக்காமல், அவரைச் சுட்டுக் கொல்கிறார். அதன் பிறகு, கேஜ் (டக்லஸ்) ஒரு இறுதி முயற்சியாக, மேசையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை எடுக்க விழைந்த போது, மேன்னிக்ஸ் மற்றும் வார்ரன் இருவரும் ஒரே நேரத்தில் சுட்டு அவரைக் கொல்கிறார்கள்.
இப்போது, டெய்ஸி டோமர்கூ மட்டுமே எஞ்சியிருக்கிறாள். மேன்னிக்ஸ் அவளுடைய சலுகைகளையும் கேட்கிறார், ஆனால் அது ஒரு பொய் என்று அவர் உடனடியாகப் புரிந்துகொள்கிறார். மேன்னிக்ஸுக்கு இரத்தம் அதிகமாக வெளியேறியதால், அவர் சிறிது நேரம் மயக்கமடைகிறார்.
இதுதான் டெய்ஸியின் இறுதி வாய்ப்பு. அவள், தன் வலது கையில் விலங்கிடப்பட்டிருந்த ஜான் ரூத்தின் சடலத்தின் கையை, அங்கு இருந்த ஒரு கோடாரியைப் பயன்படுத்தி வெட்டி வீசிவிட்டு, கைவிலங்குடன் தப்பித்து ஒரு துப்பாக்கியை எடுக்க முயல்கிறாள்.
ஆனால், மேன்னிக்ஸ் மீண்டும் விழித்தெழுந்து, துப்பாக்கியால் சுட்டு டெய்ஸியைக் காயப்படுத்துகிறார்.
டெய்ஸியின் கொடூரமான முயற்சி தோல்வியடைகிறது. ஜான் ரூத், தான் வேட்டையாடியவர்களை எப்போதுமே உயிருடன் தூக்கு மேடைக்கே கொண்டு வந்து தூக்கிலிடுபவர் அவரது மரணத்திற்கு ஒரு கவுரவம் அளிக்கும் விதமாக, மேன்னிக்ஸ் மற்றும் வார்ரன் இருவரும், தங்கள் காயங்களின் உச்சகட்ட வலிக்கு மத்தியிலும், தங்கள் கடைசி பலத்தைப் பயன்படுத்தி, Daisy-ஐ விடுதியின் விட்டத்திலிருந்து தூக்கிலிட்டு விடுகிறார்கள்.
இறுதியில், வார்ரன் மற்றும் மேன்னிக்ஸ் இருவரும் தங்கள் கடுமையான காயங்களால் மெதுவாக மரணத்தை நோக்கிச் செல்கிறார்கள். மேன்னிக்ஸ், வார்ரன் பையில் இருந்த போலியான லிங்கன் கடிதத்தை எடுத்து, அதைச் சத்தமாகப் படிக்கிறார். அது போலியானது என்று தெரிந்தபோதிலும், அந்தக் கடிதம் மிகவும் நுணுக்கமாகவும், விவரத்துடனும் எழுதப்பட்டிருந்ததை மேன்னிக்ஸ் வியந்து பாராட்டுகிறார். இந்தக் கடிதம், இறுதியில், ஒரு பிணைப்புச் சங்கிலியாக மாறி, இருவரும் சாகும் நிலையில் படுத்திருக்கும்போது கூட, அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு உணர்வுப்பூர்வமான நட்பை ஏற்படுத்துகிறது. அவர்கள் இருவரும் அதே அறையில் தங்கள் மரணத்தை எதிர்கொள்கையில் படம் நிறைகிறது.
இந்தப் படம் பெற்ற மிக முக்கியமான கௌரவம், புகழ்பெற்ற இத்தாலிய இசையமைப்பாளர் என்னியோ மொரிகோன் அவர்களுக்குச் சிறந்த அசல் இசைக்காகக் கிடைத்த ஆஸ்கர் விருது ஆகும். அவருக்கு 87 வயதாக இருந்தபோது இந்த விருது வழங்கப்பட்டது, இது மொரிகோனுக்குக் கிடைத்த முதல் போட்டி ஆஸ்கர் விருதாகும். மேலும், மொரிகோன் இந்த இசைக்காக கோல்டன் குளோப் மற்றும் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது (BAFTA) ஆகிய உயரிய விருதுகளையும் வென்றார். நடிகை ஜெனீஃபர் ஜேஸன் லெய்ஹ், தனது கொடூரமான மற்றும் சிக்கலான டெய்ஸி டோமர்கூ பாத்திரத்திற்காகச் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
இருப்பினும், மொரிகோனின் இசை ஆதிக்கம் செலுத்தியதால், படத்தின் மற்ற துறைகளான திரைக்கதை மற்றும் இயக்கம் போன்ற பிரிவுகளில் இது கூடுதல் ஆஸ்கர் வெற்றிகளைப் பெறவில்லை.
இந்தப் படத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் பல சுவாரஸ்யமான ட்ரிவியா தகவல்கள் உள்ளன. இந்தப் படம் முழுவதுமாக அல்ட்ரா பேனவிஷன் 70எம்எம் பாணியில் படமாக்கப்பட்டது ஒரு முக்கியமான அம்சமாகும். இது 1960களுக்குப் பிறகு அரிதாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பாணி ஆகும். டாரன்டினோ இந்தக் கதைக்கு ஒரு பிரம்மாண்டமான உணர்வை அளிக்க விரும்பியதால், இந்தக் கடினமான தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்தார். மேலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு சிறிய அறையிலேயே நடந்தாலும், இந்தக் காட்சியமைப்புகள் ஹாலிவுட்டில் உள்ள ஒரு சவுண்ட்ஸ்டேஜில் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பின்போது நடிகர்களின் மூச்சுத் தெரிவதற்காக, அந்த அரங்கம் செயற்கையாக 30° பாரன்ஹீட் (-1° செல்சியஸ்) குளிரூட்டப்பட்டு வைக்கப்பட்டது. இது, நடிகர்கள் கதாபாத்திரத்தின் சூழலை இயல்பாக உணர்வதற்கும், காட்சிகளின் நம்பகத்தன்மைக்கும் உதவியது.
ஆரம்பத்தில், டாரன்டினோ இந்தப் படத்தைத் திரைக்கதையாக மட்டுமே வெளியிடும் எண்ணத்தில் இருந்தார், திரைக்கதை கசிந்த பிறகுதான், அவர் முடிவை மாற்றி அதைத் திரைப்படமாக எடுக்கத் தீர்மானித்தார்.
இந்தப் படம், டாரன்டினோவின் மற்ற படங்களைப் போலவே, உள்நாட்டுப் போர் காலத்து அமெரிக்காவின் இருண்ட பக்கங்களை ஆழமாக அலசியது குறிப்பிடத்தக்கது.