அருமை நண்பர்களே!!!
எழுவர் விடுதலை பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் மிக முக்கியமான கட்டுரையின் சாரத்தை மட்டும் இங்கே பகிர்கிறேன், இதன் முழுக் கட்டுரையை அவர் தளத்தில் படியுங்கள், ஒருவரின் சார்பு நிலை, விருப்பு, வெறுப்பு ஜெயமோகனின் மீதான விமர்சனம் தவிர்த்து அனைவரும் படியுங்கள்.

கேள்வி 2. அப்படியென்றால் பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியமூவரும் தூக்கிலேற்றப்பட்டிருக்க வேண்டுமா?
இல்லை. அவர்கள் வேறுவகையில் அணுகப்பட்டாகவேண்டும். இதுவும் ஓர் உலகளாவிய
வழக்கமே. அரசியல்நடவடிக்கைகளை எந்த ஜனநாயகதேசமும் அனுமதித்தாகவேண்டும்.
அந்த அரசியல்நடவடிக்கைகளின் ஒருபகுதி சிலசமயம் வன்முறையை நோக்கித் திரும்பி
தேசத்தின் அதிகாரத்திற்கு எதிராக போர்செய்ய முனையலாம். அந்தப்போர்
கீழ்த்தரமான குற்றமனநிலையில் செய்யப்படுவதல்ல. வலுவான மாற்றுக்
கருத்தியலால் செயப்படுவது. அதைச் செய்பவர்கள் குற்றவாளிகளல்ல,
அரசியல்நடவடிக்கையாளர்கள்.
ஜவகர்லால் நேருவின் சொற்களில் சொல்வதென்றால் ஓர் அரசை மாற்றுவதற்கான
போராட்டங்களை அனுமதிக்கும் அரசே ஜனநாயக அரசு. ஓர் அமைப்பை மாற்றுவதற்காகச்
செயல்படுவதற்கான அனுமதி அவ்வமைப்பால் அளிக்கப்படுமென்றால்தான் அந்த அமைப்பு
வளர்ச்சியை நோக்கிச் செல்லக்கூடியது. ஆகவே இந்திய அரசுக்கும்
அமைப்புக்கும் எதிரான அனைத்து வகையான கருத்தியல் செயல்பாடுகளும்
அனுமதிக்கத்தக்கவையே. அவர்களில் சிலர் வன்முறையை நோக்கிச் செல்லும்போது
மட்டுமே அது அரசின் அடிப்படைக்கு எதிரான செயல்பாடாக ஆகிறது.
[லால்டெங்கா]
நாம் அவர்களின் அரசியலை ஏற்காவிட்டாலும் அவர்களின் நோக்கத்தை ஏதோ ஒருவகை
அரசியல்நம்பிக்கையாகத்தான் அடையாளம் காணவேண்டும்.
அரசியல்நடவடிக்கையாளர்களையும் குற்றவாளிகளையும் பிரித்தறியமுடியாவிட்டால்
நாம் ஜனநாயக அரசியலின் ஆரம்பப் பாடங்களைக்கூட கற்கவில்லை என்றே பொருள்.
அவர்களை வெறும் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தவும் பிறகுற்றங்களுடன்
அவர்களின் செயல்களை ஒப்பிடவும் முயல்பவர்கள் பெரும்பாலும் ஜனநாயகமென்பதையே
அறிந்துகொள்ளாத பழமைவாதிகளோ பாமரர்களோதான்.
ஒரு ஜனநாயக அரசு அரசியல்சார்ந்த வன்முறையை ஒரேசமயம் இரு அணுகுமுறைகள்
கொண்டுதான் எதிர்கொள்ளும். அந்த வன்முறை அரசுக்கும் சமூகத்துக்கும்
எதிரானது என்பதனால் அதை தன்படைபலத்தால் அது எதிர்கொள்ளும். அதேசமயம்
அவர்களுடன் பேசவும் அவர்களின் தரப்பை புரிந்துகொள்ளவும் அவர்களை
வென்றெடுத்து தன்னுடன் ஒத்துப்போகச் செய்யவும் அது தொடர்ந்து முயலும்.
சொல்லப்போனால் வன்முறையை அது கையாள்வதே அந்தத் தரப்பை தன்னுடன் பேச
வரும்படி கட்டாயப்படுத்துவதற்காகத்தான். முழுமையான அழித்தொழிப்பை அது
இலக்காக்காது. அவர்கள் குற்றவாளிகளல்ல, தன்னுடைய சமூகத்தின் இலட்சியவாத
மனங்கள் என அந்த அரசு அறிந்திருக்கும். அவர்களை இழக்கலாகாது என்று அது
கவனம் கொள்ளும்.
அதாவது அரசியல்நடவடிக்கையின் விளைவான வன்முறை என்பது ஒரு போர். போரை
போராகவே அரசு எதிர்கொள்வது இயல்பு. வன்முறைக்கு சாமரம்வீசும்
போலிஅறிவுஜீவிகள் அதை அரசபயங்கரவாதம் என்று சொல்வார்கள். அது அபத்தம்.
அந்தப்போரில் அரசு தன் முழுப்படைபலத்தையும் பயன்படுத்தி தனக்கு எதிராக
ஆயுதமெடுத்தவர்களை ஒடுக்கும். அதைச்செய்யாத அரசே உலகில் இல்லை. ஆனால்
நாகரீக ஜனநாயக ஆர்சு எந்தப்போரும் ஒரு சமரசத்தில், ஒப்பந்தத்தில்தான்
முடிந்தாகவேண்டும் என்றும் அறிந்திருக்கும். போரை வெற்றிகரமாக முடிக்க,
அமைதியை முடிந்தவரை விரைவாகக் கொண்டுவரவே அது முயலும். அழித்தொழிப்பும்
பழிவாங்கலும் அதன் இயல்பாக இருக்காது.
இந்திய அரசு அவ்வகையில் இன்றுவரை இன்றைய உலகின் மிகச்சிறந்த ஜனநாயக
அரசுகளுக்கு இணையாகவே நடந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை. இந்திய அரசை
மிகமோசமான வன்முறைஅரசு என்று இடைவெளியில்லாமல் சித்தரிக்கும்
அரசியலெழுத்தாளர்கள் இங்குண்டு. மிகக்கீழ்த்தரமான சர்வாதிகார ,மதவெறி
அரசுகளிடம் கூலிபெற்று கூச்சலிடும் கும்பலை விடுவோம். மற்றவர்கள் கூட
இந்தியாவை விட இன்னும் மனிதாபிமானத்துடன் இவ்விஷயத்தில் நடந்துகொண்ட
நாடுகளைச் சுட்டிக்காட்ட முடியாது.
இந்தியாபோன்ற பன்முகப் பண்பாடும், பலவகை இனங்களும், பற்பல அரசியல்களும்
கொண்ட நாடுகள் அவ்வாறுதான் நடந்துகொள்ளமுடியும். இந்தியா சுதந்திரம் பெற்ற
நாள்முதல் அந்த ஜனநாயக அணுகுமுறையை ஒரு முன்னுதாரணமாகவே முன்வைத்த
ஜவகர்லால் நேருவை இத்தருணத்தில் நாம் நன்றியுடன் நினைவுகூரவேண்டும். இந்திய
அரசுக்கு எதிரான முதல் கம்யூனிஸ கிளர்ச்சியின்போது இந்த வேறுபாட்டை நேரு
மிகத்தெளிவாகவே பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
1947 இந்தியா சுதந்திரம் பெற்றதுமே இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி
இந்தியாவின் ஜனநாயகக் குடியரசின் மீது ஆயுதப்போராட்டத்தை அறிவித்தது.
1948ல் அங்கீகரிக்கப்பட்ட கல்கத்தா கொள்கைமுடிவின் [Calcutta thesis]
அடிப்படையில் இந்தியாவெங்கும் நேரடியான வன்முறைத்தாக்குதலில் அது
இறங்கியது. நிலங்கள் கைப்பற்றப்பட்டன. அரசூழியர்களும் நிலப்பிரபுக்களும்
கொல்லப்பட்டனர். அந்த வன்முறையை காவல்துறையைக்கொண்டு எதிர்கொண்டபோதுகூட
அதை அடக்கி அவர்களை இந்திய தேசிய அரசை ஏற்றுக்கொள்ளவைக்கவே இந்திய அரசு
முயன்றது.
விளைவாக அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். தேர்தல்முறையையும்
ஜனநாயகத்தையும் ஏற்றுக்கொண்டனர். ஆயுதமேந்தி இந்திய அரசுமேல் தாக்குதல்
தொடுத்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆனார்கள். கல்கத்தா கொள்கைமுடிவை
வரைந்தவர் மார்க்ஸியத் தலைவரான பி.டி.ரணதிவே. இந்திய அரசுமீது
வன்முறைப்போரை தொடுத்த அவர் இந்திய அரசியலில் ஒரு நட்சத்திரமாக கடைசி
வரைக்கும் இருந்தார். பலர் மாநில முதல்வர்கள் ஆனார்கள்.
பர்மாவிலோ ,இந்தோனேஷியாவிலோ, ஈரானிலோ, காங்கோவிலோ இதே போலக்
கிளர்ந்தெழுந்த இடதுசாரிகள் என்ன ஆனார்கள் என்பதை மட்டும்
கவனித்தால்போதும், இந்தியா நடந்துகொண்ட முறை என்ன என்பதை
புரிந்துகொள்ளலாம். பிறநாடுகளைப்போல இங்கு அவர்கள்
அழித்தொழிக்கப்பட்டிருந்தால் இன்று நான் வழிபடும் பல சிந்தனையாளர்கள்,
எழுத்தாளர்கள் அரசியல்தலைவர்கள் அன்றே கொல்லப்பட்டிருப்பார்கள். ஆற்றூர்
ரவிவர்மா இருந்திருக்கமாட்டார். இ.எம்.எஸ் இருந்திருக்கமாட்டார். அச்சுத
மேனன் இருந்திருக்கமாட்டார். நக்சலைட் இயக்கம் அப்படி
அழிக்கப்பட்டிருந்தால் கெ.வேணு இருந்திருக்கமாட்டா. இந்தியாவின் பெரும்
ஞானச்செல்வம் முளைக்காமலேயே அழிந்திருக்கும்
[கனு சன்யால்]
இந்தியா அனைத்து அரசியல்வன்முறைகளிலும் இந்த அணுகுமுறையையே
கொண்டிருக்கிறது. இந்தியாவெங்கும் பெரும் வன்முறை இயக்கத்தை
உருவாக்கியவரும் பலகொலைகளைச் செய்தவருமான நக்சலைட் இயக்கத்தலைவர்
கனுசன்யால் விடுதலையாகி அதற்குப்பின்னரும் இந்திய அரசுக்கு எதிரான
ஜனநாயகபூர்வ கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வாழ்ந்திருக்கிறார். [1989ல் அவரைச்
சந்திப்பதற்காக கல்கத்தா சென்றேன். சந்திக்கமுடியவில்லை ]
நேரடியாகவே பலநூறு கொலைகளுடன் தொடர்புடைய மிசோரம் தீவிரவாதியான
லால்டெங்காவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அந்தப்
பேச்சுவார்த்தைகளை நடத்தியவர் இந்தியப்பிரதமாரான ராஜீவ்காந்தி. நம்
அரசுஅவருடன் ஒப்பந்தமிட்டிருக்கிறது. அவர் மிசோரம் பகுதியின் முதல்வராக
பணியாற்றியிருக்கிறார்.
பல்லாயிரம் வடகிழக்குத் தீவிரவாதிகள், பஞ்சாப் தீவிரவாதிகள் அவர்கள்
தீவிரவாதத்தைக் கைவிட்டதுமே மன்னிக்கப்பட்டு பொதுவாழ்க்கைக்கு
அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மிகச்சமீபத்தில்கூட பல அரசியல்கொலைகளுடன்
தொடர்புள்ள ஆந்திர நக்சலைட் தலைவரான கொண்டப்பள்ளி சீதாராமையா சில
ஆண்டுகளில் விடுதலையாகி இயல்புவாழ்க்கைக்கு மீண்டு மகள் வீட்டில்
மரணம்டைந்திருக்கிறார்
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் அக்குற்றங்களைச் செய்தார்களா,
விசாரணை சரியா என்றெல்லாம் நான் போகவிரும்பவில்லை.. ஆனால் அவர்கள்
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்று வைத்துக்கொண்டாலேகூட அவர்கள்
கொலைகாரர்கள் அல்ல, மாற்று அரசியல் கொண்டவர்கள். அத்தகைய மாற்று அரசியல்
கொண்டவர்கள் தொடர்ந்து இந்தியாவால் வெறும் குற்றவாளிகளாக நடத்தப்பட்டதில்லை
என்பதே ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தொடரும் வரலாறு . அவர்கள்
தண்டனைக்குப்பின் மன்னிக்கப்பட்டிருக்கிறார்கள், அரசியல் பொதுவாழ்க்கைக்கு
அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தது ஐம்பதாயிரம் உதாரணங்களை
இந்தியாவின் அரைநூற்றாண்டு வரலாற்றில் சுட்டிக்காட்டமுடியும்.
அப்படி இருக்க முதல்முறையாகத்தான் கொலைக்குற்றவாளிகள் விடுதலை
ஆகிறார்கள், அவர்களால் கொல்லப்பட்ட போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு யார்
பதில் சொல்வது என்றெல்லாம் பேசுபவர்கள் அரசியல் அறியாமையை அல்லது நுட்பமான
சந்தர்ப்பவாதத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள்.
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் இதுவரை தூக்கிலேற்றப்படாமைக்குக்
காரணமும் இதுவே, அவர்களை வன்முறையை நம்பிய அரசியலாளர்களாகவே இந்திய
நீதிமன்றங்கள் கருதின, எளியகுற்றவாளிகள் என்று அல்ல. அவர்கள் ராஜீவ்
காந்தியின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் என்பதனால், அந்தக் குடும்பம்
அரசியலின் உச்ச அதிகாரத்தில் இருப்பதனால்தான் தூக்கை ரத்துசெய்யும் முடிவு
ஒத்திப்போடப்பட்டது என்பது வெளிப்படை. காங்கிரஸ்தான் அம்முடிவை
எடுக்கமுடியும், பாரதிய ஜனதா எடுக்கமுடியாது என்பதும்
புரிந்துகொள்ளக்கூடியதே. இல்லையேல் பல்லாண்டுகளுக்கு முன்னரே அவர்கள்
மிசோ, பஞ்சாப், நக்சலைட் தீவிரவாதிகளைப்போல விடுதலைசெய்யப்பட்டு பொது
அரசியல் வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பார்கள்.
சாந்தன் முதலியோர் நம்பிய அரசியலின் காலம் முடிந்துவிட்டது. அந்த
நம்பிக்கைகளும் அவ்வரசியலும் வரலாற்றில் மூழ்கி மறைந்துவிட்டன. அதாவது
அவர்கள் இந்தியாவுடன் தொடுத்தபோர் முடிவுக்கு வந்துவிட்டது. அவர்கள் இந்திய
அரசுக்கு அளித்த கருணை மனு அவர்கள் இந்தியதேசத்தில் கொண்டுள்ள நம்பிக்கையை
காட்டுகிறது. அவர்கள் இந்தியாவில் ஓரு சராசரி ஆயுள்தண்டனையைவிட இருமடங்கு
தண்டனையை அனுபவித்துவிட்டனர். ஆகவே அவர்கள் விடுதலை செய்யப்பட்டு
பொதுவாழ்க்கைக்கு அனுமதிக்கப்படுவதே நியாயமானது. இன்றுவரை இந்தியா
மேற்கொண்டுள்ள ஜனநாயக வழிமுறைகளுக்கு ஏற்புடையது. லால்டெங்கா உள்ளிட்ட
வன்முறை அரசியல்வாதிகளை ராஜீவ்காந்தி எதிர்கொண்ட முறையும் இதுவே.
இது ஜெயலலிதாவின் தேர்தல் உத்தியா?
இருக்கலாம். ஆனால் இந்தியாவில் எல்லாமே தேர்தலை முன்னில்கண்டு செய்யப்படுபவைதானே? நான் மத்திய அரசில் பணிபுரிந்தவன். ஒரு ஊதிய உயர்வு கூட தேர்தல் நெருங்காத சாதாரண காலகட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதில்லை. அந்த ஊதிய உயர்வை நாம் வேண்டாம் என்று சொன்னதுமில்லை. இங்குள்ள ஜனநாயகம் அப்படி, அவ்வளவுதான்
*
இவ்விஷயத்தில் நான் முக்கியமாகச் சொல்லவேண்டிய ஒன்று உள்ளது. இதை கேரளத்தில்தான் தெளிவாக அடையாளம் காண்கிறேன். என் இளமையில் இத்தகைய விஷயத்தில் ஆழ்ந்த வரலாற்றறிவும் கோட்பாட்டுநோக்கும் சமநிலையும் கொண்ட இ.எம்.எஸ் போன்ற பேரறிஞர்கள் கருத்துச் சொல்வார்கள். அதை ஒட்டி விவாதம் நிகழும்.
இன்று அத்தகைய குரல்களே இல்லை. அரசியல்பேச்சாளர்கள் மற்றும் அர்னாப் கோஸ்வாமி ராஜ்தீப் சர்தேசாய் போன்ற அரைவேக்காட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிநடத்துநர்கள் தேசத்தின் கருத்தை தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு எந்த வரலாற்றுணர்வும் இல்லை. ஜனநாயக அடிப்படைகளைப்பற்றிய அறிவில்லை. வெறும் கூச்சலிட்டு அந்நிகழ்ச்சியை காரசாரமாக ஆக்கி டிஆர்பி குவிப்பதன்றி வேறு இலக்கும் இல்லை. வாசிப்பு ஊடகத்தில் இருந்து காட்சி ஊடகத்துக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டதன் பக்கவிளைவா இது?
*
எந்தக்கருத்து சொன்னாலும் பாதிப்பேர் கொந்தளித்துக் கிளம்புவது தமிழ் வழக்கம். நான் என் தரப்பை எனக்குத்தெரிந்த நியாயத்தின் அடிப்படையில் தெளிவாகவே முன்வைக்கிறேன். எனக்கு இது இப்போது சரியானதாகப் படுகிறது. நான் அரசியல்சிந்தனையாளனோ செயல்பாட்டாளனோ அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் சொல்லியிருக்கும் இந்த வாதங்களை வேறெவரும் சொல்லிக் கேட்கவில்லை. ஆகவே இவற்றை எழுதுகிறேன். இவற்றை நிராகரிப்பவர்களுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை
பேரறிவாளனின் தாய் தாய்மை என்பதன் இன்னொரு உதாரணம். அன்னை இருப்பது வரை ஒருவனுக்கு மண்ணில் வேறெந்த உறவும் தேவை இல்லை என்று உணர்கிறேன். அன்னைக்கு என் வணக்கம்.
ஜெ