தாசி | தெலுங்கு | 1988 | பி.நர்சிங்கராவ் |அபூர்வமான படைப்பு | உலக சினிமா
தாசி 1988 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனர் பி.நர்சிங்கராவ் எழுதி இயக்கி வெளியான அற்புதமான சுயாதீனத் திரைப்படம், இயக்குனர் பி.நர்சிங்கராவ் ஆந்திரத்தின் தரம்மிகுந்த உலகசினிமா படைப்பாளி,
இதில் நடிகை அர்ச்சனா தாசி கமலாட்சி கதாபாத்திரமாகவே மாறிப்போயிருந்தார் .
இத்திரைப்படம் 36 வது தேசிய திரைப்பட விருது விழாவில் தெலுங்கின் சிறந்த திரைப்படம் உட்பட ஐந்து விருதுகளை வென்றது,
1989 ஆம் ஆண்டு நடந்த 16ஆம் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் நடுவர்கள் இப்படத்தை நிலப்பிரபுத்துவ சூழலின் கோர யதார்த்தத்தை காட்சிமொழியில் அசலாய் , அரிதாய் , தத்ரூபமாக சித்தரித்த படைப்பு என புகழாரம் சூட்டி உயரிய விருதான Diploma of merit ஐயும் வழங்கி கௌரவித்தனர்,
இந்திய பனோரமாவில் 12 வது சர்வதேச திரைப்பட விழாவில் தாசி திரையிடப்பட்டு மிகவும் சிலாகிக்கப்பட்டது.
கதை: 1920 ஆம் ஆண்டில் தெலுங்கானாவில் ஹைதராபாத் நிஜாம் ஆளுகைக்குட்பட்ட ஜமீனில் இப்படம் துவங்குகிறது,
தாசி என்று அழைக்கப்படும் கமலாட்சி (அர்ச்சனா) என்ற தேவரடியார் பெண்ணின் கதை இது. சிறுமியாக இருக்கையிலேயே ஜமீன் தம்பதிகளுக்கு வெறும் இருபது ரூபாய்க்கு குடும்பத்தினரால் விற்கப்படுகிறாள் கமலாட்சி , அவள் பூப்படையும் முன்பே உடலாலும் மனதாலும் பல பல முறை சூறையாடப்பட்டவள்.
ஜமீன்வீட்டார்கள் காலால் இடும் வேலைகளை தலையால் செய்கிறாள் , சுணங்காமல் செய்கிறாள் கமலாட்சி, அவளுக்கென்று சின்ன சின்ன ஆசை விருப்பம் என இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாத அற்புதமான இதயம் கொண்டவள் இவள் , ஜமீன்தாரர் எப்போது அழைத்தாலும் வந்து படுக்கையில் இன்முகத்துடன் விருந்தாகிறாள்,எனவே மஞ்சத்திற்கு வர அழகிய மனையாள் காத்திருந்தாலும் கமலாட்சியையே நாடுகிறார் ஜமீன்தார்,இதில் சிறிய பொறாமையும் ஜமீன்தார் மனைவிக்கு இவளிடத்தில் உண்டு.
ஜமீன்தாரர் மனைவிக்கு உடம்பு கைகால் பிடித்து விடுவது,உடம்பில் சந்தன தைலம் தேய்த்து நீராட்டி கேசத்துக்கு பிரத்யேகமாக கடைந்த வெண்ணெய் அப்பி வைத்து,வாசனை திரவியங்கள் தேய்த்து குளிப்பாட்டி சாம்பராணி இட்டு , புடவை கட்டி அலங்கரித்து , நலுங்கிட்டு கைகால்களை நீவி விட்டு அத்தனை வேலைகளையும் சுழன்று சுழன்று செய்கிறாள் கமலாட்சி,
இந்த குறுநில ஜமீனைப் பார்வையிட்டு நில அளவை செய்து வரி நிர்ணயிக்க வருடா வருடம் நிஜாமின் அமைச்சரவைக் குழு ஜமீனுக்கு விஜயம் செய்கையில் வந்தவர்களில் கிழவன் குமரன் என பேதமின்றி முக சுளிப்பின்றி விருந்தாகிறாள் கமலாட்சி,
ஜமீன்தாரர் உறவினர் விருந்தினர்களின் முழுநேர பாலியல் பொம்மையாக இருக்கிறாள் இருந்தும் ஒரு இடத்திலும் சுணங்குவதில்லை, முகம் சுண்டுவதில்லை, அவள் சுறுசுறுப்பாக அங்கே இயங்கியபடியே இருக்க வேண்டும், பகல் அல்லது இரவு நடுநிசி என அவள் வந்து தேவை தீர்க்க கணக்கேயில்லை.
ஜமீன்தாருக்கு கமலாட்சி அலுக்க ஆரம்பிக்கையில் அவர் ஆசைப்பட்ட பணிக்காரனின் பெண்ணை அவள் குடிசைக்கு நேரில் சென்று தாஜா செய்து பயிற்சி தந்து அழைத்து வந்து ஜமீன்தாருக்கு கூட்டித்தந்து வாசலில் விளக்கு பிடித்து காவல் காக்கும் வேலையையும் செய்கிறாள் கமலாட்சி.
ஜமீன்தாருக்கும் மனைவிக்கும் பல வருடங்களாகவே குழந்தையில்லை, இந்நிலையில் கமலாட்சி கர்ப்பமாகிறாள், இது ஜமீன்தாரரின் வித்து என அவள் அறிவாள் , அவள் இக்குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என விரும்புகிறாள்.
இறுதியில் வெளியே அரண்மனையில் கலை நிகழ்ச்சிகள் வீர சாகச நிகழ்ச்சிகள் நடக்க ஜமீன்தாரர், மனைவி ,ஊரார் என அதில் ஐக்கியமாகி லயித்திருக்கிறார்கள், கமலாட்சி ஐமீன்தாரரின் மனைவியால் கருக்கலைப்பு செய்ய ஆணையிடப்பட்டவள், முழு பப்பாளிபழம் புகட்டப்பட்ட நான்கு மாத கர்ப்பிணி பெருவலியுடன் கருவறுக்கப்படுகிறாள், உலக சினிமாவில் மட்டுமே கருக்கலைப்பு காட்சிகள் அப்பெண்ணின் நிஜ வலியை அவஸ்தையை சித்தரித்திருக்கும்,இது அப்படிப்பட்டது , உதாரணமாக 4 months 3 weeks 2 days and later (ருமேனியா), பிரியாணி (மலையாளம்), ஒரு கொச்சு ஸ்வப்னம் (மலையாளம் ),portrait of a lady on fire (இங்கிலாந்து) ,Three extremes ,dumpling (சீனா) படைப்புகளைச் சொல்லலாம்.
பூர்ஷ்வாக்கள் எங்கும் எப்போதும் பூர்ஷ்வாக்கள் தான், இந்த கமலாட்சி போல எத்தனை எத்தனை கமலாட்சிகளை நம் தேசத்தில் ஒவ்வொரு ஜமீனும் கண்டிருக்கும் , அவர்களின் ஒட்டு மொத்த அபயக்குரலாக இப்படம் ஒலித்திருக்கிறது,
இப்படத்திற்கு தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசியவிருது இயக்குனர்
பி. நர்சிங்கராவிற்கு கிடைத்தது
இப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது அபுர்பா கிஷோர் பிர் அவர்களுக்கு கிடைத்தது, இப்படத்தில் முழுக்க மின்சாரமில்லாத யுகத்தை இயற்கை வெளிச்சம் மட்டுமே பயன்படுத்தி தத்ரூபமாக காட்டியிருந்தார்.
இவர் புனே திரைப்படக் கல்லூரியின் துவக்க கால பெருமைமிகு மாணவர்,கெரில்லா பாணி ஒளிப்பதிவை இந்திய சினிமாவில் முன்னெடுத்த படைப்பாளி, இவரின் ஒளிப்பதிவுக்கு சான்றாக கோதூளி, 21down என பல தனித்துவமான படைப்புகளைச் சொல்லலாம்.
இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசியவிருது நடிகை அர்ச்சனாவுக்கு கிடைத்தது,இவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை, இந்திய சினிமாவில் underrated நடிகை, அத்தனை photogenic ஆன நடிகையும் கூட,இப்படம் அதற்கு சான்றாக அமைந்துள்ளது. இதில் கமலாட்சி திறந்த வெளியில் குளிக்கும் காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது, வெங்கலச் சொம்பின் மினுமினுப்பும் கருப்புத் தங்க மேனியும் சூரிய ஒளியில் அப்படி இழைந்தோடியுள்ளது, இதே காட்சிக்கு tribute செய்வது போல் குட்டி ஸ்ராங்க் மலையாள படத்தில் இயக்குனர் ஒளிப்பதிவாளர் ஷாஜி.N.கருண் , கமாலினி முகர்ஜி முதுகு காட்டிக் குளிப்பதற்கு காட்சி வைத்துள்ளார், இது போலவே இது இவிட வரெ திரைப்படத்தில் ஜெயபாரதியின் நனைந்த முதுகை ஒளிப்பதிவாளர் ராமசந்திரபாபு அவர்கள் மிகுந்த ரசனையின் அழகியலுடன் படமாக்கியுள்ளார்.
இப்படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான தேசியவிருது சுதர்சனிற்கு கிடைத்தது.
இப்படத்திற்கு சிறந்த கலை இயக்கத்திற்கான தேசிய விருது டி.வைகுந்தத்திற்கு கிடைத்தது.
இப்படத்தில் பின்னணி இசை இல்லை,நாட்டார் கலை நிகழ்ச்சியின் போது இசைக்கப்படும் வாத்திய இசை மட்டுமே உண்டு, ஜமீன்தாரரை வரிய புலவர்கள் திரண்டு வந்து நேரில் போற்றிப் பாடும் அந்த காட்சியில் எல்லாம் நாம் அக்காலத்திற்கே பயணிக்கிறோம்.
இப்படம் ஆங்கில சப்டைட்டிலுடன் யூட்யூபில் கிடைக்கிறது
https://youtu.be/p1UotUnJDIE
திரைப்பட ஆர்வலர்கள் ,மாணவர்கள், ஒளிப்பதிவாளர்கள் தவறவிடக்கூடாத படம் இது
#தாசி,#அர்ச்சனா,#பி_நர்சிங்கராவ்,#aburba_kishor_bir,#ரூபா