எஸ்தப்பன் 1980 ஆம் ஆண்டு இயக்குனர் G.அரவிந்தன் இயக்கத்தில் வெளியான தனித்துவமான magical realism வகை திரைப்படம், ஒளிப்பதிவு ஷாஜி.N.கருண்.,
இப்படத்தின் கதை கேரளத்தின் கொச்சி வர்க்கலாவின் கடற்கரை, anjengo கோட்டை, அச்சுத்தெங்கு என்ற மீனவ கிராமத்தைச் சுற்றி நடக்கிறது.
எஸ்தப்பன் அந்த அச்சுத்தெங்கு என்ற மீனவ கிராமத்தின் தேவாலயத்தில் ஊழியம் செய்பவன், அவனுக்கு ஆசாரிப்பணியும் , மீனவப் பணியும் தெரிந்திருந்தாலும் சமீப காலமாக எந்த வேலையும் அவன் செய்வதில்லை,ஆன்மீகத்தால் உந்தப்பட்டவனாக திரிகிறான்.
தேவாலயத்தில் சாம்பராணி இடும் சங்கிலி பிணைத்த தூபக்காலைக் கொண்டு தூபம் இட்டபடி நடந்து அந்த கிராம மக்களிடையே பிரசங்கங்கள் செய்கிறான்.
கடல் அரிப்பிற்கு போடப்பட்ட ராட்சத பாறைகள் , கட்டுமரங்கள், பழைய சுவர்கள்,மரங்கள், சுடுகாட்டின் சமாதிகள் என எல்லாவற்றின் மேலும் இயேசு கிருஸ்துவின் மலைப்பிரங்கங்கம், மக்களுக்கு அருட்பாலித்த ஓவியங்களை கரி கொண்டு அழகாக வரைந்தபடியே இருக்கிறான் கருணை வடிவான எஸ்தப்பன்,
பலரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர், சிலர் அவனை பைத்தியம் என்கின்றனர், ஏச்சுக்கும் புகழ்ச்சிக்கும் , எதற்கும் அவன் மயங்குவதில்லை.
ஒரு சமயம் நடுநிசியில் ஒரு ஏழை, குடும்பத்தாரின் வயிற்றுப்பசிக்காக வாழைத் தாரை திருடிக் கொண்டு ஓடுகிறான்,ஊரார் அவனைத் துரத்துகையில் எஸ்தப்பன் மீது மோதி நின்றவன், அவனிடம் வாழைத்தாரை தந்துவிட்டு வயிற்றுப்பசியால் திருடினேன்,என்னை அடித்தே கொன்று விடுவார்கள், காப்பாற்று என்று ஓடுகிறான், அவனிடம் அந்த நொடியில் எஸ்தப்பன் தன் கையில் இருந்த காசை தந்து விடுகிறான்.,
அந்த துரத்திய மக்கள் எஸ்தப்பனையும் வாழைத்தாரையும் பிடித்து கொண்டு போய் பாதிரியாரிடம் ஒப்படைக்கின்றனர், அது முதலே எஸ்தப்பன் ஊரார்கள் சிலருக்கு திருடனாகிறான்.
அந்த திருட்டைப்பற்றி ஊரின் பெட்டிக்கடை ஒன்றில் விசாரிக்க வந்த போலீஸ்காரர் அங்கு விற்க தொங்கவிட்டிருந்த வாழைத்தாரில் இருந்து சர சரவென பழங்களை பத்துக்கும் மேல் பிய்த்து தின்றபடியே எஸ்தப்பனின் மாயவேலை பற்றி பேசுகிறார்,
இவர் முன்பு கள்ளக்கடத்தல்காரரைப் பிடிக்க ரோந்து போகையில் கடல்புரத்தில் சந்தேகத்துக்கிடமாக அமர்ந்திருத்த எஸ்தப்பனை ஏய் யார்நீ என்று குரலெடுத்து அதட்டிய அதே தொடியில் , அவன் போலீஸ் சீருடை அணிந்த தன் உயர் அதிகாரியாக மாறியவன் திரும்பி தன்னை அதிகார தொனியில் பார்த்ததாக சொல்லி கருவுகிறார்.
ஊரில் ஒரு கைம்பெண் அவள் வயிற்றுப்பிழைப்பிற்காக விபசாரியாகிறாள், அவளை ஒரு லாரி டிரைவர் தினம் தினம் உபயோகித்துக்கொள்கிறான், ஆனால் அவனுக்கு அவள் மீது சந்தேகம், தன் கிளீனர் சகாவிடம் அவளுக்கு முன்பு போல என்னிடத்தில் இணக்கமில்லை, அவள் எஸ்தப்பனை விரும்புகிறாள் என்று கதை கட்டப்பார்க்கிறான்,
ஆனால் அந்த க்ளீனர் அதை மறுத்தவன், எஸ்தப்பன் , அவளது மகள் கடும் ஜுரத்தில் பீடிக்கப்பட்டு சாக கிடக்கையில், டாக்டராலும் கூட கைவிடப்பட்டிருக்க, அக்குழந்தையை சாம்பராணி தூபம் கொண்டு மூட்டமிட்டு ஜெபித்து எழுந்து நிற்கச் செய்ததாகச் சொல்கிறான், இது லாரி டிரைவருக்கு மிகுந்த ஆத்திரம் ஊட்டுகிறது.
ஒரு நாள் அதே ஏழை கைம்பெண் குடிசையில் இருந்து லாரிக்காரன் மற்றும் அவனது சகாக்கள் மூவரால், வாடகை பாக்கி என்று சொல்லி, அவள் வசமிருந்த தட்டுமுட்டு சாமான்களை தூக்கி வெளியே எறியப்பட்டிருக்கிறாள்.
எஸ்தப்பன் அங்கு வந்தவன் அவளை சற்று காத்திருக்கும்படி சொல்லிவிட்டு அகன்றவன், திரும்ப வருகையில் ஒரு கோணிப்பை முழுக்க பணத்தாள்களை கொண்டு வந்து அவளுக்குத் தருகிறான்,
அத்துடன் இல்லாமல் பகைவருக்கும் அருள்வது போல தென்னந்தோப்பில் சீட்டாடிக்கொண்டிருந்த லாரி டிரைவர் மற்றும் சகாக்களுக்கும் கோணிச்சாக்கில் இருந்து பணத்தாள்களை அள்ளித் தந்து விட்டு அகல்கிறான்.
மற்றொரு சமயம் ஒரு பணக்கார வீட்டின் குழந்தையை கடல் அலையில் இருந்து காப்பாற்றுகிறான் எஸ்தப்பன், அவர்கள் மகிழ்ந்தவர்கள் எஸ்தப்பனோடு புகைப்படங்கள் எடுக்கின்றனர், இரவில் அவனுக்கு தோட்டத்தில் மது விருந்து படைக்கின்றனர்,அவனை விஸ்கி அருந்த நிர்பத்திக்கின்றனர்,
அவன் அவர்களின் அன்பைத் தட்டாமல், விஸ்கி குப்பியை அப்படியே சாய்த்து குடித்து காலி செய்கிறான் ,ஆனாலும் அவனுக்கு போதை ஏறியிருக்கவேயில்லை, அவன் பேச்சு குழறவில்லை, குடித்த நாற்றம் எழவில்லை என அவர்கள் வியக்கின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் ஒரு ஏழைத்தாய் தன் மகன் உண்ணியப்பம் தின்பதை பார்த்தவள் , இது உனக்கு ஏது? என்று கேட்க, அச்சிறுவன்,சுவற்றில் குரிசும் இயேசுவும் வரைந்துவிட்டு அருகே கண் மயங்கிக் கிடந்த எஸ்தப்பன் மீது நாங்கள் சிறுவர்கள் கல்லால் அடித்து விளையாடினோம்,
ஆனால் எஸ்தப்பனோ அதற்கு கோபப்படாமல் எறிந்த கற்களை அப்பமாக மாற்றி எங்கள் மீது எறிந்தான், நாங்கள் கைநிறைய அப்பங்கள் சுமந்து தின்றோம் என்று குதூகலிக்கிறான்.
இது போல அடுக்கடுக்கான சம்பவங்களால் அவனை ஊரார் புரியாத புதிர் என்கின்றனர், அவனைப் பிடித்தவர்கள் , அவனால் அவன் பிரசங்கத்தால் குணம் பெற்றவர்கள் அவனை அற்புதங்கள் நிகழ்த்துபவன், நல்ல உள்ளம் கொண்டவன், ஏழைக்கு இறங்குபவன் என்று உயர்வாகச் சொல்கின்றனர்,
அவனைப் பிடிக்காதவர்கள் அவனை புரட்டுக்காரன், திருடன், மந்திரக்காரன், விபசாரியிடம் செல்பவன், சுடுகாட்டுக் கொள்ளையன் என்கின்றனர்.
இந்த கதைகள் எல்லாமே வசனமாக இல்லாமல் அழகிய ஒளிப்பதிவில் காட்சிகளாகவே விரிகிறது,
இயேசு கிருஸ்து போலவே அந்த மீனவ கிராமத்தில் இருந்து பல நாட்களாக காணாமல் போய்விடுகிறான் எஸ்தப்பன்.,ஆயினும் அவனை இங்கே கண்டேன் நான் அங்கே கண்டேன் என்று நிறைய பேர் ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் கண்டதாக கதைகள் பல சொல்கின்றனர்,
அவன் நிச்சயம் திரும்ப வருவான் என்று நம்பிக்கையுடன் மீனவ கிராம மக்கள் சிலர் காத்திருக்கின்றனர்.
அதில் உண்மை எது பொய் என்பது என்று நமக்கு தெரிவதில்லை, அது உண்மையாகவும் இருக்கலாம் , பொய்யாகவும் இருக்கலாம் என்னும்படியாக இந்த எஸ்தப்பன் திரைப்படத்தை செய்திருக்கிறார் இயக்குனர் ஜி.அரவிந்தன்,
இப்படத்திற்கு பின்னணி இசையும் அவரே அமைத்தார், எடிட்டிங்கும் அவரே செய்தார், இப்படத்தின் படப்பிடிப்பிற்கு அவர் தேர்ந்தெடுத்த இயற்கை எழில் கொஞ்சும் இந்த கடற்புரங்கள் அபாரமானவை.
மிகுந்த அழகியல் தன்மையுடன் துவங்கி நிறையும் காட்சிகள் ஒருவரால் மறக்க இயலாது., இயேசு கிருஸ்துவின் பைபிள் கதைகளை நினைவூட்டும் கதைக்களம், எஸ்தப்பனாக நடிகர் ராஜன் கக்கநாடன் சிறப்பாக தோன்றியிருந்தார்.
இத்திரைப்படத்திற்கு 1980 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான கேரள மாநில அரசு விருது கிடைத்தது.
இயக்குனர் G.அரவிந்தன் , நடிகர் ராஜன் காக்கநாடன் அறிமுகம்
இந்திய உலகசினிமாவில் இயக்குனர் G.அரவிந்தன் அவர்களின் பங்கு மிக முக்கியமானது, இவர் மலையாளத்தில் திரைப்படங்களை இயக்கினார், இவரது முழுப்பெயர் கோவிந்தன் அரவிந்தன் .
இவர் 1935 ஜனவரி 21ஆம் தேதி கோட்டயத்தில் பிறந்தார். மலையாள எழுத்தாளர் எம். என். கோவிந்தன் நாயர் இவர் தந்தை ஆவார்.
இவரது திரைப்படங்கள் அரிய கதைக்கருவையும், அபாரமான அழகியலையும் எளிமையான இயற்கையான அரங்க அமைப்புகளையும் கொண்டிருந்தன,அதிக ஆடம்பரங்களையும் பொருட்செலவையும் இவர் தவிர்த்து திரைப்படங்கள் இயக்கினார், பெரிய நட்சத்திரங்களையும் ஸ்டுடியோவுக்குள் சென்று படமாக்குவதையும் முற்றிலும் தவிர்த்தார், இவரது திரைப்படங்கள் உலகின் பல திரைப்படவிழாக்களிலும் தேசிய விருது அரங்கிலும் முக்கிய பேசுபொருளாக இருந்தன,இன்றும் இவரது படைப்புகள் உலக அரங்கில் விவாதிக்கப்படுகின்றன.
இவரது காஞ்சன சீதா திரைப்படத்தில் தோன்றும் ஸ்ரீராமர் கதாபாத்திரத்தை புதுமையாக தாடியுடன் தோன்ற வைத்திருந்தார், அரிதாரப் பூச்சுகள் எதுவுமின்றி புராண கதாபாத்திரங்களை எளிய தோற்றத்தில் தோன்ற வைத்திருந்தார், இவரது சிதம்பரம், வாஸ்துஹாரா ஆகிய திரைப்படங்கள், சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் சி. வி. ஸ்ரீராமனின் சிறுகதைகளை தழுவி வெளியான படைப்புகளாகும்.
இவர் இயக்கிய மொத்த திரைப்படங்கள் 17 , அவை உத்தராயனம் (1974) காஞ்சன சீதை (1977) தம்பு (1978) கும்மாட்டி (1979) எஸ்தப்பன் (1980) போக்குவெயில் (1981) விதி (1985) the seer who walk's alone (1985) சிதம்பரம் (1985) The brown landscape (1985) ஒரிடத்து (1986) ,Contours of the linear rythm (1987) மாறாட்டம் (1988) அனாதி தாரா (1988) உண்ணி (1989) சகஜ (1990) வாஸ்துஹாரா (1991 ) ஆகும்.
இவரது அனேக திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஷாஜி.N.கருண் இந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளரும், உலக சினிமா இயக்குனருமாவார்.
இயக்குனர் G.அரவிந்தன் சிறந்த இயக்குனருக்கான கேரள அரசின் மாநில விருதுகளை, உத்தராயணம் 1974, தம்பு 1978, கும்மாட்டி 1979, எஸ்தப்பன் 1980, போக்குவெயில் 1981, விதி 1985, 1986, 1990 ஆகிய திரைப்படைப்புகளுக்குப் பெற்றார்.
இயக்குனர் G.அரவிந்தன் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதினை காஞ்சனசீதா 1977,தம்பு 1978, ஓரிடத்து 1986 ஆகிய திரைப்படைப்புகளுக்குப் பெற்றார்.
இயக்குனர் G.அரவிந்தன் 1991 மார்ச் 15 ஆம் நாள் மறைந்தார்.
====
எஸ்தப்பனாக தோன்றிய நடிகர் ராஜன் காக்கநாடன் ஒரு கவின்கலை பயின்ற ஓவியர்,இவரது ஓவியங்கள் தனித்துவமான தாந்தரீக பாணியைக் கொண்டவை, இவர் 1942 ஆம் ஆண்டு பிறந்தார் ,இவரது பெற்றோர் காக்கநாடன் மற்றும் ரோசம்மா , இந்தியா முழுக்க ரயில்வே துறையில் நெடுங்காலம் பணியாற்றியவர், இமயமலைக்கு தனித்து சாகசப் பயணம் மேற்கொண்ட பாதசாரி இவர் , தன் இமயமலை சாகசப் பயண அனுபவங்களை தொகுத்து புத்தகம் எழுதிய எழுத்தாளர், இவரை எஸ்தப்பனாக தோன்றச் செய்வதே சாலப் பொருத்தம் என்று அந்த சித்தன் போன்ற கதாபாத்திரத்தில் தோன்றச் செய்தார் இயக்குனர் G.அரவிந்தன்.
இவர் எழுதிய புத்தகங்கள்
On the top of the snowmobile,
When there is no time, To Amarnath Cave
இவரது மூத்த சகோதர் பிரபல எழுத்தாளரான ஜார்ஜ் வர்கீஸ் காக்கநாடன் ஆவார் , ராஜன் காக்கநாடன் ஆகஸ்ட் 24 1991 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் மறைந்தார்.
புதிய ஜனசக்தி ஜூலை 2021 இதழில் வெளியான கட்டுரை
#எஸ்தப்பன்,#ஜி_அரவிந்தன்,#ராஜன்_காக்கநாடன்,#உலகசினிமா