மயிலையில் மாதவப்பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது,குடத்துள் இட்ட விளக்கு போல அமைதியாக L வடிவ தெருவின் ஓரத்தில் உள்ளடங்கி இருக்கும்,இது பேயாழ்வார் அவதார தலம்.
1938 -1940 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீராமுலு செட்டியார் என்னும் வைசிய வைணவர் மயிலை மாதவப் பெருமாள் கோவிலுக்கு நித்யபடி ஆராதனைகளுக்கும் உற்சவங்களுக்கும் , சாத்துமுறைக்கும், மண்டகப்படிக்கும் வேண்டி செய்த கைங்கர்யங்களை விவரிக்கும் 81 வருடப் பழமையான கல்வெட்டு இது,
எத்தனை விபரமாக எத்தனை சுவாரஸ்யமாக உள்ளது பாருங்கள், இவருக்கு இரண்டு சம்சாரங்கள்( அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது).
இவர்கள் மூவரின் திவசத்தன்றும் பிராமணர்களுக்கு சாப்பிடும் செலவிற்கு 30 ரூபாய் ஒதுக்கியுள்ளார்.
மாதவப்பெருமாள் கோவில் வளாகத்தில் 125 A,B,C மூன்று வீடுகள் இவர் செலவில் கட்டி விட்டு கோவில் திருப்பணிகளுக்கு வாடகை வருமானம் வர வழி செய்துள்ளார்.
இது தவிர தன் கச்சேரி ரோடு 11 ஆம் இலக்க தனி வீட்டை கோவிலுக்கு எழுதி வைத்து அதன் வீட்டு வாடகையை கோவிலுக்கு வருமாறு செய்துள்ளார்.
ஒவ்வொரு பழமையான கோவில்களிலும் விமரிசையாக நடக்கும் எல்லா உற்சவங்களுக்குப் பின்னால் இப்படி நம் முன்னோர்களின் தன்னலமற்ற ஈகை குணம் உள்ளது.
இது போல எத்தனையோ செல்வந்த முன்னோர்கள் கோவில்களுக்கு நிறைய எழுதி வைத்தாலும்,அவை முறையான சிலா சாசனங்கள் செய்யாததால் அதன் விபரம் ஊரார் அறிய முடியாது,கோவில் சொத்தை பிதுர்ராஜ்ஜிய சொத்தாக கருதி வாடகையே தராமல் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் வழக்கு போட்டு நீட்டும் கயவர்கள் நிரம்ப உள்ளனர்.