மரண சிம்மாசனம் | Throne of Death (1999)என்ற மலையாள மொழி அரசியல் அவல நகைச்சுவை படம் ஒன்று பார்த்தேன்.
இந்தியாவில் எப்போதும் வழக்கத்தில் இருந்திராத மின்சார நாற்காலி மரண தண்டனையை கேரள அரசு அமல்படுத்தி களபலியாக கிருஷ்ணன் என்ற கூலியை அதில் வைத்து மின்சாரம் செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றுவது போல அவல நகைச்சுவைக் கதையை மிக எளிமையாக செய்திருக்கிறார் இளம் இயக்குனர் முரளி நாயர்.
இதை சுயாதீன திரைப்படமாக எடுத்தவர் பல நாடுகளில் திரைப்படவிழாக்களில் திரையிட்டு அதிக அளவில் கவனம் பெற்றிருக்கிறார்.
படத்தின் கதை: கேரளத்தின் காயல் கரை தீவு கிராமத்தில் ஏழை விவசாயக்கூலி கிருஷ்ணன் தனது குடும்பத்திற்கு உணவளிக்க வேண்டி ஒரு நிலச்சுவான்தாரரின் தோப்பில் இருந்து தேங்காய்களைத் திருடுகையில் பிடிபடுகிறார்,
கையும் களவுமாக போலீஸில் ஒப்படைக்கப்படுகிறார், அவர் மீது பழைய தீர்க்கப்படாத பெரிய வழக்குகள் ஏதாவது எழுதி வழக்கை முடிக்க போலீஸ் நினைக்கிறது.
பல ஆண்டுகளாக இத்தீவில் இருந்து காணாமல் போன ஒருவரை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டுகிறது போலீஸ், இப்பழியில் இருந்து மீள்வதற்கு ஏழைக்கூலி கிருஷ்ணன் மற்றும் குடும்பத்தார் எத்தனை முயன்றும் முடிவதில்லை.
கிருஷ்ணன் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு முன்பு சுவரொட்டிகள் ஒட்டி நிறையஉழைத்து அடிமட்டத் தொண்டுகள் பல செய்திருக்கிறார், ஆனாலும் அவரை எந்தக் கட்சியுமே காப்பாற்ற நினைக்கவில்லை, தேர்தல் சமயத்தில் எந்த சம்பவமும் mileage தரும் பொக்கிஷம் தான்.
எனவே அடுத்து நெருக்கத்தில் வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிப்பதற்கு என்ன தகிடுதத்தமும் செய்ய தயாராக இருக்கிறார்கள் அரசியல் கட்சிகள்.
அந்த ஊர் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவதற்காக அதிகாரத்தில் உள்ள கட்சி அவரை அணுகி நயிச்சியமாய் பேசி தீர்க்கப்படாத கொலைக்கு உட்படுத்துகிறது கட்சிக்கு வந்த ஒரு சோதனை தன் சோதனை என்று கிருஷ்ணன் செய்யாத கொலைப்பழியை ஏற்றுக்கொள்கிறார்,
தூங்கி எழுந்த நீதிமன்றம் தந்த மரணதண்டனையையும் மனமுவந்து எதிர்கொள்கிறார், தேர்தலை முன்னிறுத்தி அந்த ஊரில் புதிய மாற்றங்களைச் செய்யப்போகிறோம், அந்நிய முதலீடுகளை தொழிற்நுட்பத்தை கேரளத்திற்கு தருவிப்போம் பாருங்கள் என்று நிறைய வாக்குறுதிகளைத் தருகிறது ஆளும் கட்சி,
அதில் ஒரு கவர்ச்சியான அம்சமாக அமெரிக்காவில் வழக்கத்தில் இருக்கும் அதே மரண சிம்மாசன மரண தண்டனை முறையை இங்கு கேரளத்தில் அமல்படுத்தப்போகிறோம், என்று ஆளுகிற அரசியல் கட்சி பெருமையுடன் அறிவிக்க ஊராரிடம் கைதட்டல் பலமாக எழுகிறது.
அந்த நாளும் வந்திடுகிறது, ஊர் கூடி வேடிக்கைப் பார்க்க , காயலில் வல்லத்தில் அந்த மலினமான ,செத்து புதைத்த தொழிற்நுட்பமான அலுமினிய ஃபாயில் சுற்றப்பட்ட மின்சார நாற்காலி வருகிறது,
அதற்கு பூமாலை எல்லாம் சுற்றி ஆரத்தி காட்டி சகாவு கிருஷ்ணன் விழா மேடை எதிரே சிறிய மேடையில் புத்தாடைகள் உடுத்தி , இந்த இறக்குமதி நாற்காலி இடப்பட்டு மஞ்சள் தண்ணீர் தெளித்த ஆடு போல் அதில் அமரவைக்கப்படுகிறார்,அவருக்கு சோகம் பெருகுவதற்கு மாறாக உள்ளம் மிகவும் குதூகலமாக இருக்கிறது.
ஒரு அரசு மருத்துவர் கிருஷ்ணனை ஸ்டெத் வைத்து பரிசோதித்து அவர் ஆரோக்கியமாக உள்ளதைச் சொல்கிறார், அங்கே உலக வங்கி நிதி அளித்த இந்த புதிய மரண சிம்மாசனத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைக்க வந்தவர் ஒன்றிய அரசு வடக்கன் கோட்டும் வட்டக்கண்ணாடியும் அணிந்த அமைச்சர்,
அவர் மிகுந்த ஆர்வத்துடன் ரிமோட் கன்ட்ரோலை அழுத்தி கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ச்ச, கிருஷ்ணன் சிரித்தபடியே அதிகம் அலட்டிக் கொள்ளாமல் செத்தும் போகிறார்,
உள்ளூர் மக்களுக்கும் இந்த மரணதண்டனை நிரம்பப் பிடிக்கிறது, தண்டனை முடிந்ததும் குடையை விரித்து பிடித்தபடி வீடு திரும்புகின்றனர்.
தேர்தலில் இந்த ஆளும்கட்சியின் களபலி நல்ல mileage பெற்றுத்தருகிறது, தேர்தல் முடிந்து வெற்றிவாகை சூடிய கையோடு சகாவு கிருஷ்ணனுக்கு சிகப்புபீடம் அமைத்து முதல் மரண சிம்மாசனப் பயனாளி என்று மார்பளவு சிலையை அமைத்திருப்பதைக் காட்டுகின்றனர்,
அவர் பெயரில் கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள் எழுப்படும் செய்திகளைக் கேட்பதுடன் இந்த ஒரு மணி நேர திரைப்படம் நிறைகிறது,
அரசியல் நையாண்டி திரைப்பட ரசிகர்கள் இப்படத்தை அவசியம் பாருங்கள், அரசியல்வாதிகளுக்கு ஏழை மக்களின் உயிர் என்பது எத்தனை கிள்ளுக்கீரை போன்றது என்பதை படத்தின் அவல நகைச்சுவைக் காட்சிகள் நிரூபிக்கின்றன.
மரண சிம்மாசனம் திரைப்படம் மலையாள சினிமாவில் political satire ல் ஒழிவு திவசத்தே களி திரைப்படத்திற்கு எல்லாம் முன்னோடி என்றால் மிகையில்லை, கேரளத்தில் vipinல் உள்ள மஞ்சனிக்காடு தீவுக்கு அருகிலுள்ள நஜாரக்கல் தீவுக்கிராமத்தில் முழுப்படமும் மிகவும் குறைந்த பொருட் செலவில் தயாராகியுள்ளது இப்படம்,
இப்படம் முழுவதும் அமெச்சூர் தொழிற்நுட்கக் கலைஞர்கள் கொண்டு படமாக்கப்பட்டது, கிருஷ்ணனின் மனைவி மட்டுமே தொழில்முறை நடிகை , அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கிராமத்தில் உள்ளவர்களை வைத்தே எளிமையாக சித்தரித்துள்ளனர்,
மரண சிம்மாசனம் திரைப்படம் 1999 Cannes திரைப்பட விழாவில் un certain regard பிரிவில் திரையிடப்பட்டு அங்கு Caméra d'Or விருதை வென்றது.
இத்திரைப்படத்திற்கு பிரிட்டிஷ் திரைப்பட நிறுவனத்தில் சிறப்பு வரவேற்பு கிடைத்தது.
இத்திரைப்படம் கொண்டிருக்கும் அசாதாரண கருப்பொருளுக்காக
Le Monde ஃப்ரெஞ்சு தினசரியிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
இத்திரைப்படம் Vienna திரைப்பட விழா , Torino திரைப்பட விழா, Toronto திரைப்பட விழா, Pusan திரைப்பட விழா, La Rochelle திரைப்பட விழா, Midnight Sun திரைப்பட விழா Lapland திரைப்பட விழா மற்றும் அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனத்தைப் பெற்றது.
படம் யூட்யூபில் சப்டைட்டிலுடன் கிடைக்கிறது, இந்திய சினிமாவில் political satire ல் அகில உலக கவனம் பெற்ற பீப்லி லைவ் திரைப்படத்திற்கு எல்லாம் முன்னோடி இது, திரைப்பட ஆர்வலர்கள் மாணவர்கள்,சுயாதீன திரைப்பட இயக்குனர்கள் அவசியம் பாருங்கள்.
https://youtu.be/DVhxZJZEZHk
#மரண_சிம்மாசனம்,#முரளி_நாயர்,#மலையாளம்,#சுயாதீன_திரைப்படம்