தேவராகம் ( 1996 ) இயக்குனர் பரதன் இயக்கத்தில் வெளியான படம், இசை கீரவாணி ( மரகதமணி), ஒளிப்பதிவு ரவியாதவ், படத்தில் நடிகர் அரவிந்த்ஸ்வாமி ஒரு சவண்டி பிராமணராக நடித்திருப்பார், இப்படம் இன்னும் சற்று அதிகமாக சவண்டிகரண details உடன் வந்திருக்க வேண்டியது, ஆனால் அது ஏனோ நிகழவில்லை.
நடிகை ஸ்ரீதேவி 1984 முதல் தமிழ்,மலையாளம் மொழிகளில் நடிக்க முடியவில்லை, 1986 முதல் தெலுங்கில் நடிக்க முடியாத படிக்கு இந்திபட உலகில் அப்படி busy ஆகி விட்டார்,
இயக்குனர் பரதன் மூன்றரை வயது சிறு குழந்தையான ஸ்ரீதேவியை முதன் முதலில் சோப்பு விளம்பரம் ஒன்றிற்கு போட்டோ எடுத்தாராம், அந்த கைராசியை ஸ்ரீதேவியின் தாயார் ராஜேஸ்வரி ஐயப்பன் நீண்ட காலம் மறக்கவேயில்லையாம்,
தேவராகம் படத்தில் வரும் லஷ்மி என்ற அரிய கதாபாத்திரத்திற்கு நிரூபனமான தேர்ந்த நடிகையை நடிக்க வைக்க எண்ணினார் இயக்குனர் பரதன், இப்படத்தின் கதையை ஸ்ரீதேவிக்கு சொல்ல அவர் வீட்டுக்குப் போனவரை ஸ்ரீதேவி தாயார் நன்கு நினைவில் வைத்திருந்தாராம்,
பரதன் படத்தில் நீ எத்தனை தடை வந்தாலும் நடிக்க தான் வேண்டும் என மகளிடம் சொன்னாராம், ஆனால் படம் துவங்கியதும் ஸ்ரீதேவியின் தாயாருக்கு மூளைப் புற்றுநோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட சிகிச்சைக்கு வேண்டி அமெரிக்கா கொண்டு செல்லப்படுகிறார்,
உடன் ஸ்ரீதேவியும் போகிறார்,படம் இவரால் துவங்குகிறது, நிற்கிறது, மிகவும் இக்கட்டான சூழ்நிலை,இவர் ஒரே போன் காலில் நான் படம் நடிக்க முடியவில்லை என சொல்லியிருக்கலாம், ஆனால் இவர் தாயார் , இயக்குனருக்கு தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இப்படத்தை முடிக்க அவரை அனுப்பி வைக்கிறார்,
இது போல பல முறை இவர் விமானத்தில் பல முறை பறந்து வந்து இப்படத்தை முடித்துத் தந்தாராம், இப்படம் முற்பாதி முழுக்க இவருக்கு வண்ண வண்ண உடைகள்,கனவுப் பாடல்கள்,என முழுதும் வண்ணம்,அணிகலன்கள், அவற்றை எல்லாம் மாணவி போல குறித்துக் கொண்டு வந்து அவரே continuity பார்த்து நடித்துத் தந்தாராம்,
ஒரு போதும் தன் சம்பளத்தைப் பற்றி பேசவேயில்லையாம், அவர் இந்தியில் அப்போது வாங்கிய சம்பளத்தில் ஐந்தில் ஒரு மடங்கு சம்பளம் தான் நடிக்க தரப்பட்டது என இயக்குனர் பரதனின் மனைவியும் மலையாள சினிமாவின் முக்கியமான நடிகையுமான கேபிஏஸி லலிதா பேட்டியில் பகிர்ந்திருந்தார்,
1997 ஆம் ஆண்டில் ஸ்ரீதேவியின் தாயார் மூளைப் புற்றுநோயுடன் போராடி மடிந்தார், அவருக்கு தவறுதலாக மூளையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையும் அவர் மரணிக்க காரணமாக அமைந்தது.
இப்படம் மலையாளம் ,தமிழ் , தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியானது,மலையாளத்தில் நடிகை ரேவதி ஸ்ரீதேவிக்கு குரல் தந்திருந்தார்.
இயக்குனர் இத்தனை வீர்யமான கதையில் casting ல் ஏன் இப்படி compromise செய்தார் எனத் தெரியவில்லை, தேஜஸ்ஸான முகத்திற்கு வேண்டி அரவிந்த்ஸ்வாமியை இதில் தோன்ற வைத்துள்ளார் இயக்குனர்,
சவண்டி முகத்திற்கு வேண்டி எத்தனை ஒப்பனை இட்டாலும் அவருக்கு சவக்களையை முகத்தில் கொண்டு வர இயலவில்லை.நீங்கள் கண்ணம்மாப்பேட்டை கடக்கையில் ஞானவாபி என்ற பிராமணர் காரியம் செய்யும் மண்டபத்தைப் பார்க்கலாம், அங்கே இருந்து தான் சவண்டி பிராமணரை அழைத்து வருவார்கள்,
சவண்டியை இதம் பிரேதம் என சொல்லி இறந்தவரை அவராக ஆவாஹனம் செய்து செய்து அவருக்கு ஒரு சவத்தின் களையே வந்திருக்கும்.
இக்கதாபாத்திரம் மோகன் லால் மட்டுமே நடிக்க முடிந்த ஒன்று, காரணம் உணர்ச்சி கொந்தளிப்புகளை முகத்தில் தேக்கி எதிராளியை கரைய விடும் நடிப்பு மோகன்லாலுடையது,
இதில் விஷ்ணு என்ற சவண்டியாக அரவிந்த்ஸ்வாமி சுத்தமாக பொருந்தவில்லை.அதே போலவே ஸ்ரீதேவியும் காரணம் லஷ்மி என்னும் கதாபாத்திரம் துருதுருவென்ற பாலக்காட்டு தமிழ் பேசும் அக்ரஹாரத்துப் பெண் கதாபாத்திரம் அதை ஷோபனா போல வேறு யாராவது இளம் நடிகை பொருத்தமாக செய்திருக்க முடியும்,
இப்படத்தில் நடிக்கையில் ஸ்ரீதேவிக்கு 33 வயது, அவர் எத்தனை நன்றாக நடித்தாலும் அந்த 18 வயது அக்ரஹாரத்துப் பெண் கதாபாத்திரத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை, மூக்கு ஆபரேஷன் வேறு செய்து வேற்று முகமாகிப் போய் விட்டார் .
படத்தில் லக்ஷ்மியும் (ஸ்ரீதேவி ) விஷ்ணுவும் (அரவிந்த் ஸ்வாமி) காதலர்கள், விஷ்ணுவின் அப்பா ராமநாத கனபாடிகள் பெரிய வேத பண்டிதர்,ஆனால் ஏழை,
விஷ்ணு அவரின் மாணவன், வளரும் புரோகிதர் , அக்ரஹாரத்தில் வசிக்கும் லக்ஷ்மியும் விஷ்ணுவும் தெடுநாள் காதலர்கள், ஒரு சந்தர்ப்பத்தில் கந்தர்வ மணம் செய்து சரீர சம்பந்தமும் கொண்டு விடுகின்றனர்,
ஆனால் ஸ்ரீதேவியின் அப்பா நெடுமுடி வேணு ,சென்னையில் வசிக்கும் அக்கா கேபிஏஸி லலிதா தன் மகனுக்கு ஸ்ரீதேவியை மணம் முடித்துத் தரக் கேட்க மறுப்பேதும் சொல்லாமல் வாக்கு தருகிறார்,
லஷ்மி தாயில்லாத பெண் என்று செல்லமாக வளர்ந்தவர் , அத்தை மகனை மணமுடிக்க அப்பா நிர்பந்திக்க ,லஷ்மி விடாப்பிடியாக மறுத்து தான் விஷ்ணுவை தான் மணப்பேன் என பிடிவாதமாக இருக்கிறார் ,
ஸ்ரீதேவி மறுத்ததால் அவரை கண்டபடி அடித்து விட்டு, மகளை அடித்ததற்கும் அக்காவிற்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாததாலும் கதவை தாழிட்டு , நிலை விளக்கில் நெற்றியை மோதி விளக்கை தள்ளி விட்டு தன்னையே எரித்து தற்கொலை செய்யப் பார்க்கிறார் நெடுமுடி வேணு ,
ஸ்ரீதேவி கதவை உடைக்க முடியாமல் வெளியே சென்று விஷ்ணுவை அழைத்து வருகிறார், அறைக் கதவை உடைத்து தன் மடியில் கிடத்திக் கொள்கிறார் விஷ்ணு.
காப்பாற்ற வந்த விஷ்ணுவுடம் நெடுமுடி வேணு இரைஞ்சி மகளை மறப்பேன் என்று சத்தியம் வாங்குகிறார், இனி காதலர்கள் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை.
மறுநாள் அக்ரகாரத்தில் திருமணம், லஷ்மி ஒரு சவம் போலவே இந்த திருமணத்துக்கு தன்னை ஒப்பு தருகிறார், விஷ்ணுவும் நடைபிணமாகிறார்,
இதில் அத்தை மகன் பார்த்தசாரதியாக ராஜீவ்கிருஷ்ணா நடித்தார், அதுவும் ஸ்ரீதேவியின் சைக்கோத்தனம் கொண்ட impotent கணவன் கதாபாத்திரம், அந்த casting ம் சொதப்புகிறது.(இவர் ஆஹா படத்தில் வந்தார்,வயது வித்தியாசம்)
விஷ்ணுவின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததால்,இவரை லஷ்மியின் திருமணத்துக்கு புரோகிதத்தை செய்ய அனுப்புகிறார், எத்தனை மறுத்தும் அப்பா கேளாததால் ஸ்ரீதேவி திருமண புரோகிதத்தை விஷ்ணுவே சென்று நடத்துகிறார், தட்சணை பெற்று ஆசியளிக்கிறார்.
இதன் மூலம் சொந்த பெண்டாட்டியை வேறொருவனுக்கு திருமணம் செய்த நீசனாகிறார் விஷ்ணு, அந்த கொடிய பாவத்தால் மனம் குமுறுகிறார்,யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு வெளியேறியவர் ஒரு வருடம் காசி, கயா, இராமேசுவரம் எல்லாம் சென்று தீர்த்தாடனம் செய்துவிட்டு பாவத்தைத் தொலைத்து சென்னைக்கு வருகிறார்.
அங்கே இவர் தந்தையிடம் படித்த பணத்தாசை கொண்ட புரோகிதரான ஞானப்பழம் ஹரிஹர சுப்ரமணிய ஐயர் (ஜனார்த்தனன் )வீட்டுக்கு வருகிறார், அவருக்கு விஷ்ணுவை பிடித்துப் போய் விடுகிறது.
ஹரிஹர சுப்ரமணிய ஐயர் முன்பே ஒத்துக்கொண்ட ஒரு குழந்தை ஆண்டு நிறைவுக்கு , மிகுந்த மறுப்புக்கு பின் விஷ்ணு போக நேர்கிறது, காசிக்கு போயும் கர்ம வினை தொடர்ந்தார போல மீண்டும் அங்கே லஷ்மியைப் பார்க்கிறார்,
இவரது பீஜகுமாரனான அந்த ஒரு வயது குழந்தைக்கு உண்மை எதுவும் தெரியாமல் ஆயுஷ் ஹோமம் அங்கே செய்விக்கிறார், தட்சணை பெற்று ஆசியளிக்கிறார்.
ஆனால் லஷ்மி தன் கணவனை இதுவரை தன்னை தொடக்கூட அனுமதித்ததில்லை என்பதே அங்கு நிதர்சன உண்மை.
இங்கே சென்னையில் விஷ்ணுவை பணக்கார புரோகிதரின் மகள் ரவளி விரும்புகிறார்,லஷ்மியை இங்கே பார்த்தபின் விஷ்ணுவுக்கு சென்னையில் இருக்க பிடிப்பதில்லை, தேஜஸ் மிகுந்த அரவிந்த் ஸ்வாமியை தன் மகளுக்கு மணமுடிக்க புரோகிதரும் அவர் மனைவியும் விரும்பினாலும் மறுத்து அங்கிருந்து தன் சொந்த ஊருக்கு போகிறார் அரவிந்த்ஸ்வாமி.
ஊரில் மகனை ஒரு வருடமாக காணாத ராமநாத கனபாடிகள் உடல் நலம் குன்றியிருக்க,விஷ்ணு அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு தான் ஊரை விட்டு இந்த சிறிய வயதில் ஷேத்ராடனம் சென்ற காரணத்தை அழுதபடி சொல்கிறார்,
அப்போது தனக்கும் லஷ்மிக்கும் இருந்த பர்த்தா- பார்யாள் உறவு பற்றி இவர் விவரித்துச் சொல்ல , அங்கே எரிமலையாக வெடித்த ராமநாத கனபாடிகள், துர்வாச முனி போல கோபம் கொண்டு , சொந்த மனைவியை விற்ற இழி பிறவி மகனைப் பார்த்து நீசனுக்கும் நீசன் நீ,சண்டாளன் நீ என சபிக்கிறார்,
சாபத்தைப் பெற்றுக் கொண்டு கதறியபடி இந்த மகாபாவத்துக்கு பரிகாரம் கேட்ட மகனை சவண்டியாக போகும்படி மேலும் சபிக்கிறார், தசரத ராமன் போன்ற தந்தைப் பாசம் கொண்ட விஷ்ணு அதை வேத வாக்காக ஏற்று அன்று முதல் சவண்டியாகிறார்,
ஊரின் கடைக்கோடியில் இராமநாதபுரத்தில் சிறு கிராமம் ஒன்றில் சென்று தஞ்சமடைந்தவர், மரத்தடியில் படுத்துக் கொள்கிறார்,தலைக்கு தன்னிடம் இருக்கும் துணி மூட்டையை வைத்துக் கொள்கிறார், பிராமணரில் யாரும் ஏற்கத் தயங்கும் சமூக விலக்கப் பணியான சவண்டிகரண வேலையை சிரமேற்றுச் செய்கிறார்.
ஈமைச்சடங்கு செய்பவர் கொடுக்கும் தட்சணையை வாங்கிக் கொண்டு சவண்டி வேலை கிடைக்காவிட்டால் பட்டினியாக இருக்கவும் பழகிக் கொண்டார் அவர்,இப்படி வேலை கிடைக்காமல் பட்டினியில் தூங்கிக் கொண்டு இருப்பவரை அழைத்து வர பாலக்காட்டில் இருந்து வில் வண்டி வருகிறது, இது தான் படத்தின் துவக்க காட்சி.முடிவைத் தவிர மீதி படம் முழுக்க விஷ்ணுவின் கண்ணோட்டத்தில் விரியும்.
இனி என்ன ஆகும்? இனிதான் பல திருப்பங்களை இயக்குனர் வைத்துள்ளார், படம் அவசியம் பாருங்கள், படத்தில் இசையமைப்பாளர் கீரவாணியின் ஏழு இனிய பாடல்கள் உண்டு,
ரவியாதவின் அற்புதமான ஒளிப்பதிவு, 12 வருடங்களுக்குப் பிறகு தென்னிந்திய மொழியில் ஸ்ரீதேவி நடித்தது என எல்லா சிறப்புகளும் இருந்தும் இப்படம் அடைந்த தோல்வியை இயக்குனர் பரதன் அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை,
#தேவராகம்,#பரதன்,#ஸ்ரீதேவி,#அரவிந்த்ஸ்வாமி, #நெடுமுடிவேணு, #ஜனார்த்தனன்,#கீரவாணி,#ரவியாதவ்