கேரளத்தில் இருந்து பெண்வாசனையற்ற பயந்தாங்கொள்ளி BA பட்டதாரி சந்திரன் (சுகுமாரன் )சென்னைக்கு தன் நண்பர் ஜகதியுடன் வருகிறார்,
கேரளத்தில் இவரது வீட்டில் அப்பா கடுமையான அனுமன் பக்தர் , அவர் இவரிடம் மகனே பெண் ஒரு அனர்த்தமானு, பெண்ணைக்கண்டால் ஓடுக என்று திரும்பத் திரும்ப சொல்லி இவரை வளர்த்திருக்கிறார்,
இவருக்கு 32 வயதாகியும் திருமணம் செய்து வைக்கவில்லை, இவர் ஊரில் தெருவில் போகும் வரும் பெண்களை அப்படி அடித்து நோக்குகிறார்,ஜொள் வடிக்கிறார், இவர் நண்பர் ஜகதி ஊருக்கு விடுமுறையில் வருகிறார், இவரை சென்னைக்கு தன்னுடன் வந்து வேலை தேடிக் கொள்ளுமாறு சொல்ல சுகுமாரன் இரவே அப்பா தூங்குகையில் பெட்டி படுக்கையுடன் ஸ்தலம் விடுகிறார்.
ரயிலேறி சென்னை வந்தவர் சென்னை சூலையில் நண்பர் ஜகதியுடன் வந்து ஒரு விசாலமான ஸ்டோர் குடித்தனத்தில் வந்து தங்குகிறார், அங்கு அடுத்த வீட்டில் ஒரு மாப்ளமார் குடும்பம் இருக்கிறது நடிகர் பகதூர் அதன் குடும்பத் தலைவர்,அவர் மனைவி அமீனாவாக மீனா, மகள் ஆயிஷாவாக நித்யா,பகதூர் டிம்பர் ஸா மில் வைத்திருக்கிறார் ,
வேலை தேடும் சுகுமாரனுக்கு அவர் தன்னுடைய ஸா மில்லில் மரம் குழிக்கணக்கு எழுதும் எழுத்தர் வேலை தருகிறார், கூடவே தன் மகள் ஆயிஷாவுக்கும் BA ட்யூஷன் எடுக்கச் செய்கிறார்,இப்படி இவருக்கு அதிகம் நோகாமல் வேலை கிடைக்கிறது.
அடுத்த குடித்தனத்தில் ஒரு ஆண்பித்து கொண்ட நர்ஸ் சரளா வசிக்கிறார்,சதா எதிர்படும் ஆடவர்களை propose செய்து சல்லியப்படுத்தி தெறித்து ஓடவைக்கிறார்,
இந்த ஸ்டோர் குடித்தனத்தின் உரிமையாளர் பரவூர் பரதன் ஒரு மருந்து விரும்பி, அலோபதி, ஹோமியோபதி, சித்தா, யுனானி என தான் உருவகப்படுத்திக்கொண்ட எல்லா அசுகங்களுக்கும் எல்லா டாக்டர்களிடமும் சென்று காண்பித்து விதவிதமான வண்ணவண்ண மருந்துகளை வாங்கி குடித்தபடியே இருக்கிறார்,
தலை முதல் பாதம் வரை அட்டவணை இட்டு தினமும் ரோகம் கொண்டாடும் வினோத வியக்தி.
சுகுமாரனின் நண்பர் ஜகதியின் ஆர்மி ரிட்டயர்ட் மாமா சங்கராடி, தோன்றிய போதெல்லாம் வேகமாக ரன்னிங் செய்தபடி இவர்கள் அறைக்கு வந்து தன் ஆர்மி வாழ்க்கையில் தன் சமையல்காரன் புராணம் பாடுகிறார்,(உள்ளத்தை அள்ளித்தா ஜெய்கணேஷ் காமெடி ட்ராக் நினைவுக்கு வருகிறது)
இந்த ஸ்டோர் குடித்தன உரிமையாளர் மகள் கல்லூரி படிக்கும் மாதவி, மாதவியும் ஆயிஷாவும் கல்லூரித் தோழிகள்,மாதவியை சுகுமாரன் கண்டநாள் முதல் விரும்புகிறார், ஆனால் மாதவி அவரை அப்படி வெறுப்பேற்றுகிறார், போக்கு காட்டி நோகடிக்கிறார், இருந்தும் சுகுமாரன் முயற்சியை கைவிடுவதில்லை, அழகிய இளம்பெண் மாதவிக்கு பல பல ரூபத்தில் போட்டி வருகிறது, இவர் மனம் தளர்வதில்லை.
ஆயிஷாவுக்கு (நித்யா) திருமணம் செய்கையில் அவரை மணக்கும் மாப்பிள்ளையாக மிகச்சிறிய துக்கடா வேடத்தில் நடிகர் மோகன்லால் தோன்றுகிறார்.
மாதவியை பெரும்பாடுபட்டு வயது வித்தியாசத்தையும் மீறி சுகுமாரன் இறுதியில் காதலில் வெல்லும் கதை இது, சிரிப்பு பட விரும்பிகள் மூளையை கழற்றி வைத்து விட்டு பாருங்கள்.
1982 ஆம் ஆண்டு சென்னையை படத்தின் துவக்கக் காட்சியில் இங்கே பாருங்கள்.
சென்னை வானொலி நிலையம் எதிரே காந்தி சிலை அருகே அப்போது ஒரு பீச் ரெஸ்டாரெண்ட் இருந்திருக்கிறது, அதை பின்னாளில் இடித்துள்ளனர்.அந்த ரெஸ்டாரண்ட் இப்படத்தில் ஒரு காட்சி வருகிறது.
இப்படத்தில் பாடல்களை சத்யன் அந்திக்காடு எழுதியுள்ளார்.
சூலை பெரியமேடு Sydenham's சாலையில் காலிகட் டிம்பர் என்ற கடையில் படப்பிடிப்பு அனுமதி வாங்கி நடத்தியுள்ளனர், ஸ்டோர் குடித்தனத்துக்கு செட் அமைத்துள்ளனர்,
ஒரு காட்சியில் கமலா தியேட்டரில் ராணி தேனி போட்டி காட்சிக்கு சுகுமாரன் மாதவி கல்லூரித் தோழிகள் சென்று ராணித்தேனீ படம் பார்க்கின்றனர்.
#குறுக்கன்டெ_கல்யாணம், #சுகுமாரன்,#மாதவி,#பகதூர்,#பரவூர்_பரதன்,#ஜகதி,