போர் வெல் குழியை வேலை முடிந்ததும் மூடி வைப்பது அத்தனை
கடினமானதா?இல்லவே இல்லை, எவன் வீட்டு குழந்தையோ தானே அதில் விழுந்து
உயிர்விடப்போகிறது,நம் குழந்தை தான் வீட்டில் பாதுகாப்பாக
இருக்குமே?என்னும் மெத்தனமும் தடித்தனமும் தான் ஒரு ஆயிரம் ரூபாய்
செலவுக்கு கஞ்சத்தனம் காட்டி போர்வெல் குழியை மூடவிடாமல்
தடுக்கிறது.இவர்கள் எல்லாம் நல்ல கதிக்கு போவார்களா?ஒரு
பிஞ்சுக்குழந்தையின் கொடூர மரணத்துக்கு காரணமானவர்களால் , அவர்களது
குடும்பத்தாரால் எப்படி தினமும் உண்டு கொழுத்து நிம்மதியாக தூங்க
முடிகிறது?மனம் பதை பதைத்து உயிரை மாய்த்துக்கொள்ள மாட்டார்களா?அப்படி
மாண்டு போகாதவர்கள் மனிதப்பிறவிகள் தானா?
எப்படி
மனசாட்சி இன்றி மீண்டும் போர்வெல் அமைக்க ஆட்டிக்கொண்டும் லாரியை
ஓட்டிக்கொண்டும் போக முடிகிறது?சரி அவர்களுக்குத் தான் அறிவில்லை என்றால்
அக்கம் பக்கத்து மனிதர்களாவது ,போர் வெல் உறையை மூடி போட்டோ,கோணிப்பை
போட்டோ இறுக்கி கட்டாமல் லாரியை எடுத்துக்கொண்டு போகக்கூடாது என்று
கண்டிப்புடன் சொல்ல துப்பு இல்லையே?
இதற்கும்
ட்ராஃபிக் ராமசாமி என்பவர் தான் வந்து பொதுநல வழக்கு போட வேண்டுமா?யாரும்
தெருவில் இறங்கி எந்த நல்லதும் செய்ய மாட்டார்களா?நாட்டு நலனுக்காக ஒரு
துரும்பைக்கூட நகர்த்த மாட்டார்களா?இதை வேடிக்கைப் பார்க்கும் மனசாட்சியற்ற
வழக்கறிஞர்களே!!! அய்யா ஆட்சியாளர்களே!!!உங்கள் துரு பிடித்துப்போன
மனசாட்சிக்கு கொஞ்சம் எண்ணெய் விடுங்கள்.இனியேனும் கடுமையான சட்டம் இயற்ற
தோள் கொடுங்கள்.
120 கோடி மக்கள் தொகை கொண்ட
நாட்டில் இதற்கு ஒரு கடுமையான சட்டம் போட துப்பில்லையே?போலியோவையே ஒழித்த
நமக்கு போர்வெல் மரணங்களை ஒடுக்க முடியவில்லையே? வெட்கமாக இல்லையா?உங்கள்
நெஞ்சு கொதிக்க வில்லையா? எப்படி இந்த லட்சணத்தில் வல்லரசு கனவு
காணுகிறீர்கள்?,உயர்நீதி மன்றம் கூட மக்கள் சார்பில் இதை பொதுநல வழக்காக
எடுத்து சட்டம் இயற்றலாமே?.எத்தனை ? கேடுகெட்ட மெத்தனம் இருந்தால்
போர்வெல்லை ஒரு பலகையோ,பிவிசி சானிட்டரி கேப்போ, தரித்திர பட்சம்
சர்க்கரைக் கோணியோ கூட வைத்து இறுக்கிக் கட்டி மூட முடியாத படிக்கு
பிச்சைக்காரத்தனம் கூடிய தடித்தனத்துடன் இருப்பார்கள்?அந்த போர்வெல்
கம்பெனிக்காரனும், நிலத்தின் உரிமையாளனும். ஒவ்வொரு மாதமும் கேட்கும் இது
போன்றஅவல செய்தி எனக்கு மிகுந்த அயற்சியளிக்கிறது.
இப்படி மூடி போட ரூ 2000 ஆகுமா? |
இந்தத்
தேர்தல் சமயத்திலும் கூட எந்த மானம்கெட்ட கட்சியும் இந்த போர்வெல் குழி
விபத்து இறப்புகளை தடுக்கும் வகையில் சட்டமியற்றுவேன் என்று எந்த தேர்தல்
வாக்குறுதியும் தர மறுக்கிறதே? அவ்வளவு ஏன் அதைப் பற்றி பேசக் கூட எந்த
வேட்பாளனுக்கும் மனம் வரவில்லையே? ஏன், போர்வெல்லில் விழுவது ஏழைகளின்
குழந்தைகள் தான் என்பதாலா?
வருடத்துக்கு தமிழகத்தில்
மட்டும் குறைந்தது இதுபோல 10 சம்பவங்கள் நடக்கின்றன,அப்போது இந்தியாவில்
எத்தனைக் குழந்தைகள் போர்வெல்லில் விழுந்து உயிரைவிடுவர்?,மிகுந்த
கொடுமையான மரணம் அது.நிலத்தடியில் எத்தனை உஷ்ணம் இருக்கும் தெரியுமா?அங்கே
விழுந்து தவிக்கும் குழந்தை எத்தனை உளவியல் ரீதியான சிக்கல்களுக்கு
உள்ளாகும் எனத் தெரியுமா?300 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட குழியில் குழந்தை
அடைத்துக்கொண்டு ஆனவரை கத்திப் பார்த்து விட்டு அழுது
அணர்த்திவிட்டு,திராணி தீர்ந்த நிலையில்,தாகம் எடுத்து உயிரை விடும்
காட்சியை நினைத்துப் பார்த்தேனும்,போர்வெல் குழியை மூடுங்கள்.
இந்த தரித்திர பட்ச மூடி போட ரூ 500-1000 ஆகுமா? |
இதற்கு
காரணமானவர்களை அதே குழியில் தள்ளி விட்டு மூச்சுதிணரவிட்டுக் கடுமையாக
தண்டிக்க வேண்டும்.இனி போர்வெல் அமைக்க ஒவ்வொருவரும் அப்ரூவல் வாங்க
வேண்டும்,அதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டது என்னும்
அத்தியாவசிய நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டு அதிகாரிகளால் அவை
சரிபார்க்கப்படவேண்டும். அது கடுமையாக அமல்படுத்தும் வரை இப்படிப்பட்ட
விபரீதங்கள் தொடந்த படி தான் இருக்கும்.
இப்போதைய சூழலில் நமக்குத் தேவை , போர்வெல்லில் விழும் குழந்தையை மீட்க ரோபோ எந்திரங்கள் அல்ல,
இனி எந்தக் குழந்தையும் போர் வெல்லில் விழாத படிக்குச் செய்யும் மிகக் கடுமையான சட்டங்கள் தான்,அதை நாம் போராடிப் பெறுவோம்.
சமீபத்திய போர்வெல் குழி மரணங்கள் பற்றிய சுட்டிகள்:-http://www.dailythanthi.com/News/India/2014/06/20092808/After-52-hours-girl-trapped-in-borewell-found-dead.vpf
http://www.dailythanthi.com/News/India/2014/08/04035415/In-Karnataka-the-250footdeep-bore-well-and-alive-in.vpf
http://tamil.oneindia.in/news/tamilnadu/tiruvannamalai-borewell-owner-arrested-198229.html
http://tamil.oneindia.in/news/tamilnadu/manhole-kills-3-years-old-girl-197371.html
http://tamilmurasu.org/inner_tamil_news.asp?Nid=53640