கடந்த மாத இறுதியில் தமிழக முதல்வர் ஓர் இனிய
அறிவிப்பைச் செய்தார். 'ஜூன் முதல் தேதி முதல் மின்வெட்டு முழுவதுமாக
நீங்கும்.’ அடுத்த வாரத்திலேயே பதிலடியாக டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை
வெளியிட்டார். 'முதல்வர் அறிவிப்புக்குப் பின்னர்தான் மின்வெட்டு
அதிகமானது’... உண்மை நிலவரம் என்ன?
தமிழகம் முழுதும் திரட்டிய 'ஷாக்’ தகவல்கள் இவை...
'ஜூன் 1-ம் தேதிக்கு பின்னர் தமிழகத்தில் மின்தடை
முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும்’ என்று எப்போது முதல்வர் ஜெயலலிதா
அறிவித்தாரோ, அதற்கு மறுநாளில் இருந்து மின்வெட்டு அதிகரித்து மக்கள்
கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
தமிழகத்தின் இப்போதைய மின்தேவை 13,000 மெகாவாட்.
அனல்மின் நிலையம், நீர்மின் நிலையங்கள் மற்றும் காற்றாலை மூலமாகப்
பெறப்படும் மின்சாரம் ஆகியவை தமிழகத்தின் மின்தேவைக்குப் போதுமானதாக இல்லை.
நீர்மின் நிலையங்கள் செயல்படும் அளவுக்கு எந்த அணைகளிலும் போதுமான நீர்
இல்லை என்கிற சோகம் ஒருபுறம் இருக்க, அனல்மின் நிலையங்கள் அடிக்கடி
பழுதடைந்து படுத்துவிடுகின்றன. நீண்டகாலமாகிவிட்ட அனல்மின் நிலையங்களை
அடிக்கடிப் பழுதுபார்த்து பராமரிப்பு செய்ய வேண்டிய நிலைமை இருப்பதால்,
பராமரிப்புக்காக அடிக்கடி மின் உற்பத்தியை நிறுத்த வேண்டியிருக்கிறது.
இதைச் சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம்
வாங்க ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், அவற்றை முழுமையாகத்
தமிழகத்துக்குக் கொண்டுவந்து சேர்க்க போதுமான மின்பாதை வசதி இல்லை.
இப்படியான சூழலில், தமிழகத்தின் மின்பற்றாக்குறை 2,000 முதல் 3,000
மெகாவாட் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது. இப்படி இருக்க, 'மின்வெட்டு
இருக்காது’ என்று எப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை!
நெல்லையின் சோகம்!
நெல்லை மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் இரண்டு முதல்
மூன்று மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. கிராமங்களின் நிலைமை மிகவும் மோசம்.
பகலில் மூன்று மணி நேரம், இரவில் மூன்று மணி நேரம் என மின்சாரம் இல்லாமல்
இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இந்த மின்வெட்டு காரணமாக சிறு தொழில்கள்
முடங்கிப் போய் இருக்கின்றன. சங்கரன்கோவில் பகுதியில் உள்ள விசைத்தறித்
தொழில் பெரும் நட்டத்தை சந்திப்பதால், பல தொழிற்கூடங்கள் மூடப்பட்டுவிட்டன.
அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் மாற்றுத் தொழில் வாய்ப்புகளைத் தேடி
கேரளாவுக்குச் செல்லும் அவலமும் உள்ளது.
விவசாயிகள் ஏற்கெனவே வறட்சியால் நிலைகுலைந்துப்
போயிருக்கும் சூழலில், மின்பற்றாக்குறையால் ஏக்கப் பெருமூச்சுடன்
விளைநிலைங்களிலேயே தவம் கிடக்கிறார்கள். இரவில் மின்சார மோட்டார்களை இயக்க
வேண்டிய நிலைமை. அதுவும் பல நேரங்களில் நின்று நின்று வரும் கரன்ட்,
விவசாயிகளைக் கண்ணீர் வடிக்க செய்வதாகக் குமுறுகின்றனர்.
ஆனாலும், நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மூலமாக மின்
உற்பத்தி அதிகரித்திருக்கிறது. தென் மேற்குப் பருவக்காற்று பலமாக வீசுவதால்
கடந்த ஒரு வாரமாகக் காற்றாலைகளில் இருந்து இடைக்கும் மின்சாரம் கணிசமாக
கூடியிருக்கிறது. கடந்த மாதத்தில் வெறும் 400 மெகாவாட்டாக இருந்த மின்
உற்பத்தி, இப்போது 3,000 மெகாவாட் அளவுக்கு உயர்ந்துள்ளது. இப்படி ஒரு
பக்கம் மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையிலும், காற்றாலைகள் அதிகம்
இருக்கும் பகுதிகளிலும் மின்வெட்டு அதிகரித்து வருவதுதான் மக்களை அதிர்ச்சி
அடையச் செய்திருக்கிறது.
மிரட்டி ஓடவைக்கும் சென்னை!
தமிழக மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தை மட்டுமே கொண்ட
சென்னைக்கு தமிழக மொத்த மின் உற்பத்தியில் 20 சதவிகித மின்சாரம்
தேவைப்படுகிறது. சென்னையில் இருந்த சுழற்சி முறையிலான இரண்டு மணி நேர
மின்வெட்டு ரத்தாகி ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும், அறிவிக்கப்படாத
மின்வெட்டு தொடர்கிறது. பெரும்பாலான நேரங்களில் லோ வோல்டேஜ் மின்சாரம்
சப்ளை ஆவதால் ஃபேன், மிக்ஸிகள், ஏசி மெஷின்கள் ஓடுவது இல்லை.
''முன்பெல்லாம் இந்த நேரத்துக்குதான் கரன்ட் போகும்...
இந்த நேரத்துக்கு கரன்ட் வரும்னு தெரியும். அதுக்கு தகுந்த மாதிரி கரன்ட்ல
செய்யுற வேலைகளை முன்கூட்டியே முடிச்சு வச்சுடுவோம். இப்போ, எப்போ வரும்...
எப்போ போகும் என்பது யாருக்கும் தெரியாது.
சென்னையில் பெரும்பாலான வீடுங்க புறாக்கூண்டுபோலத்தான்
இருக்குது. இங்கே வசிக்கிறவங்களுக்கு 24 மணி நேரமும் கட்டாயம் கரன்ட் தேவை.
ஃபேன், லைட் இல்லாம, வீட்டுக்குள்ள இருக்கவே முடியாது. பகலில் மின்சாரம்
இல்லைன்னாலும் ஏதோ ஒருவழியில் சமாளிச்சிடலாம். ஆனா, இரவு நேரத்தில்
அடிக்கடி மின்தடை ஏற்படுறதால, சரிவர தூங்க முடியலை. இன்னொரு பக்கம்
கொசுக்கடி. மின்சார வாரிய அலுவலகத்துக்குப் போன் செஞ்சா, டிரான்ஸ்ஃபார்மர்
ரிப்பேர், கேபிள் துண்டாகிடுச்சுன்னு விதவிதமான காரணங்களைச் சொல்றாங்க.
வேலைக்காகத்தான் சொந்த ஊரை விட்டுட்டு வந்து இங்கே இருக்கோம். பேசாம சொந்த
ஊரைப் பார்த்து கிளம்பிடலாமான்னு தோணுது'' என்று புலம்புகிறார்கள்
சென்னைவாசிகள்.
சிவகங்கையின் திடீர் மின்வெட்டு!
சிவகங்கை மாவட்டத்தில் மின் தட்டுப்பாடு முன்புபோல
இல்லை என்றாலும், முழுமையாக மின் தட்டுப்பாடு தீர்ந்துவிட்டதாக சொல்ல
முடியாது. திடீர் திடீரென மின்சாரம் தடைப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த
மின்வெட்டை பயன்படுத்தித்தான் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரனை ஒரு
கும்பல் சரமாரியாக வெட்டினார்கள். அந்த அளவுக்குக் குற்றச் செயல்கள்
மின்தடை நேரத்தில் நடப்பதால் மக்கள் அச்சத்துடனே இருக்க வேண்டிய நிலைமை
உள்ளது.
விழுப்புரத்தில் ஆறு மணி நேர மின்வெட்டு!
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திண்டிவனம்
போன்ற நகரங்களில் காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் என மொத்தம்
நான்கு மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. சில நாட்களில் இது
ஆறு மணி நேரமாகவும் நீடிக்கிறது. அதேபோல், கிராமப்புறங்களில் ஆறு மணி
நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெரும் தொழில்சாலைகள் எதுவும் இல்லாத
விவசாய பூமியான விழுப்புரத்தில் மின்வெட்டால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது
விவசாயிகள்தான். வயல்களில் நீர் இறைக்கத் தேவைப்படும் மூன்று முனை
மின்சாரம் மூன்று மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. கத்திரி முடிந்த
பிறகும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால்
மின்வெட்டினால் வீட்டில் குடியிருக்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
வெக்கையில் தவிக்கும் வேலூர்!
வேலூர் மாவட்டத்தில் முன்பெல்லாம் மின்வெட்டு நேரங்களை
அறிவித்த மின்துறை இப்போதெல்லாம் கிடைத்த நேரத்தில் மின்வெட்டை அமல்படுத்தி
வருகிறது. மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் பரவலான மின்வெட்டு உள்ளது.
நகரப் பகுதியில் ஒரு மணி நேரமும், கிராமப்புற பகுதியில் இரண்டு மணி நேரமும்
அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருக்கிறது. வேலூர் வெயில் பிரசித்தம்.
அதனால், மக்களின் தவிப்பு சொல்லி மாளாது.
மின்வெட்டு நேரத்தின்போது தொழிலாளர்களுக்கு இடைவேளை
விட்டு வந்த தொழிற்சாலைகள், இப்போதுள்ள திடீர் மின்வெட்டால் சற்று கலக்கம்
அடைந்துள்ளனர். பெரிய தொழில் நிறுவனங்கள் இதில் இருந்து
தப்பித்துக்கொண்டாலும், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சிறுதொழில்
நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற விவசாயிகள் மின்வெட்டால் கடுமையாக
பாதித்துள்ளனர்.
கடலூரில் மூன்று பேஸ் முடக்கம்!
கடலூர் மாவட்டத்தில் மின்வெட்டு என்பது நகரத்தைக்
காட்டிலும் கிராமப்புறங்களில்தான் அதிகமாக உள்ளது. நகரத்தில் 30 நிமிடங்கள்
மின்வெட்டும் கிராமப்புறங்களில் ஒரு மணி நேரம் மின்வெட்டும் உள்ளது.
இதனால் தொழிற்சாலைகள் அடையும் பாதிப்பைட விவசாயிகளின் பாதிப்பு அதிகம்.
விவசாயிகள் பயன்படுத்தும் பம்ப்செட்டுகள் மூன்று பேஸ் மின்சாரத்தில்
இயங்கக் கூடியவை. இப்போது இரண்டு பேஸ் மின்சாரம் மட்டுமே
கொடுக்கப்படுகிறது. இதனால் பம்ப் செட்டுகள் இயக்க முடியாமல் விவசாயிகள்
கவலையில் உள்ளார்கள்.
திக் திக் திருவண்ணாமலை!
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஜூன் 4-ம் தேதி
வரையில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 நிமிடம் மின்சார நிறுத்தம்
செய்யப்பட்டது. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக மின்சாரம் வந்தாலும், இரவு
நேரங்களிலும் மதிய நேரங்களில் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை
மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
சந்தவாசல் பகுதியில் கடந்த வாரம் முழுவதும் காலை 8 மணி
முதல் 10 மணி வரையில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மும்முனை மின்சாரத்தில்
வழக்கம்போல மின்தட்டுப்பாடு இருப்பதால், விவசாயிகளும் சிறுதொழில்
செய்பவர்களும் எப்போதும்போல திக் திக் நிலையில்தான் இருக்கின்றனர்.
ராமநாதபுர ஐஸ் பிரச்னை!
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை பெரிய அளவிலான
தொழிற்சாலைகள் இல்லை. அதேபோல் முப்போகம் விளையக் கூடிய விளைநிலங்களும்
இல்லை. அப்படி இருந்தும் மின்தடை என்பது மற்ற மாவட்டங்கள் போலவே இங்கும்
அமலில் உள்ளது. இதனால் நீண்ட கடற்கரைப் பகுதியைக்கொண்ட இந்த மாவட்டத்தில்
மீனவர்களால் பிடித்து வரப்படும் மீன்களைப் பாதுகாக்கத் தேவையான ஐஸ் கட்டி
உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. மின்தடை இருந்த காலத்திலாவது
குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் இருக்காது என்பது தெரியும். அதனால்
மின்சாரம் இருக்கும் நேரத்தைக் கணக்கிட்டு அதற்கு ஏற்ப ஐஸ்கட்டிகளை
உற்பத்தி செய்வார்கள். ஆனால், கடந்த ஒன்றாம் தேதிக்குப் பின்னர் மின்தடை
அறவே நீக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பின் எப்போது மின்சாரம் வரும், போகும்
எனத் தெரியாத நிலையில் மின்தடை உள்ளது. இதனால் உற்பத்தி செய்யப்படும்
ஐஸ்கட்டிகள் முழுமையாக கெட்டியாகாமல் எளிதில் உருகிவிடும் நிலையிலேயே
தயாராகிறது. இதனால் ஐஸ்கட்டி தொழிலகங்களுக்கு நட்டம் ஏற்படுவதுடன்
மீனவர்களுக்கு வழங்கப்படும் ஐஸ்கட்டிகளுக்கான விலையும் கூடுதலாகிறது.
வானம் பார்த்த பூமியான இந்த மாவட்டத்தில் ஓரளவு
விவசாயப் பகுதியாக உள்ள திருவாடானையில் விவசாயத்துக்கு வழங்கப்படும்
மின்சாரம் முன்பிருந்த நிலையே தொடர்கிறது. இதேபோல் பருத்தி, மிளகாய்
விவசாயம் நடைபெறும் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதிகளைச் சேர்ந்த
விவசாயிகள் கடந்த 10 நாட்களாக மின்தடை நீங்காததால் வருத்தத்தில் உள்ளனர்.
முதல்வர் தொகுதியிலும் மின்தட்டுப்பாடு!
திருச்சி மாவட்டத்தில் மின்வெட்டு அதிகரித்து
வருவதாகப் பொதுமக்கள் புலம்புகிறார்கள். முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த
தொகுதியான ஸ்ரீரங்கத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முன்பைவிட இப்போது
மின்வெட்டு அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி
நேரம் எனவும் அதிகபட்சம் நான்கு மணி நேரம் வரை மின்சாரம் போய்விடுவதால்,
செய்வதறியாமல் தவிக்கின்றனர் ஸ்ரீரங்கவாசிகள். புறநகர்ப் பகுதிகளில்
அதைவிடக் கொடுமை. மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் எனத் தெரியாது
என்கிறார்கள்.
காவிரி டெல்டா பகுதிகளிலேயே காணப்படும் தண்ணீர்
பற்றாக்குறையால் ஏற்கெனவே மாவட்டத்தின் முக்கியத் தொழிலான விவசாயம்
நொடிந்துள்ளது. இப்போது தலை தூக்கியுள்ள மின் பிரச்னை விவசாயிகளைக்
கூடுதலாக வதைக்கிறது. வாழை, வெங்காயம், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்குத்
தண்ணீர் கட்டமுடியாமல் தவிக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாக திருச்சியில் 100-க்கும் மேற்பட்ட
தொழிற்சாலைகள் தொடர்ந்து நடத்த முடியாமல் மூடுவிழா கண்டுள்ளதாகவும் பல
குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளதாகவும் புலம்புகிறார்கள், அப்பாவி
மக்கள்.
டெல்டா மாவட்டங்களில் மின்வெட்டு பிரச்னை
தொடர்கதையாகத்தான் இருந்து வருகிறது. இந்த மின்சாரத்தை நம்பி குறுவை
சாகுபடியைத் தொடங்கலாமா, வேண்டாமா என்பதுதான் டெல்டா விவசாயிகளின் நிலை.
மும்முனை மின்சாரம் மட்டுமல்ல, அன்றாடத் தேவைகளுக்கான இரு முனை மின்சாரமும்
கிராமப்புறங்களில் தட்டுப்பாடுதான். ஒரு லட்சம் ஆழ்குழாய் பம்புசெட்டுகளை
நம்பி டெல்டா விவசாயிகள் விவசாயம் செய்துவருகிறார்கள். அவர¢களுக்கு 12 மணி
நேரம¢ மும்முனை மின்சாரமும், 24 மணி நேர வீட்டு உபயோகத்துக்கு மின்சாரமும்
சீராகக் கிடைக்க வேண்டும் என்றால், டெல்டாவுக்கு 500 மெகா வாட் மின்சாரத்தை
அரசு கொடுக்க வேண்டும்.
சேலம் தொழிற்சாலைகள் பாதிப்பு!
எந்த நேரத்தில் மின்சாரம் வருகிறது என்றே சொல்ல
முடியவில்லை. அறிவிப்புக்கு முன்பு ஐந்து மணி நேரம் மின்வெட்டு இருந்தது.
இப்போது அதைவிட அதிக நேரம் கட் செய்கிறார்கள். இதனால் தொழில்கள் பெருமளவு
பாதிக்கப்பட்டிருக்கிறது. சேலத்தைப் பொறுத்தவரை பவர்லூம், சேகோ ஃபேக்டரி,
வெள்ளிப் பட்டறை, ஸ்டீல் உற்பத்தி உட்பட பல தொழில்கள்
பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல சிறுதொழில்கள் நிறுவனங்களுக்கு மூடுவிழா
நடத்திவிட்டனர்.
நாமக்கல்லில் நேரம் தெரியவில்லை!
முன்பு 8 மணி நேரம் 10 மணி நேரம் மின்சாரம்
தடைசெய்யப்பட்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதால் அதற்கு தகுந்தாற்போல்
தொழில் நிறுவனங்கள் பணிகளை செய்தன. இப்போது கால நிர்ணயம் இல்லாமல்
மின்வெட்டு இருப்பதால் ஒட்டுமொத்த தொழிலும் முடங்கிவிட்டன.
நாமக்கல்லில் லாரி பாடி பில்டிங், வெல்டிங் பட்டறைகள்,
ஆட்டோ மொபைல்ஸ் வொர்க் ஷாப், பள்ளிப்பாளையம் பவர்லூம் தொழில்கள் என பல
தொழில்கள் முடங்கிவிட்டன. நாமக்கல் பகுதிகளில் இயங்கிவரும் தனியார் பள்ளி
நிர்வாகங்களும் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன.
விருதுநகரில் ஆகா!
விருதுநகர்
மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜூன் 1-ம் தேதிக்கு முன், தினமும் நான்கு முதல்
ஆறு மணி நேரம் வரை மின்தடை இருந்தது. பிறகு ஜூன் 5-ம் தேதிக்குப் பிறகு
நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. இப்போது தினமும் ஒரு நாளைக்கு
ஒரு மணி நேரமாக மின்தடை குறைந்துவிட்டது. இப்போது எவ்வளவோ தேவலாம் என்று
கருதுகின்றனர் சிவகாசி உள்பட மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவன
நிர்வாகிகள்.
மதுரையில் படுத்துவிட்ட நெசவுத் தொழில்!
மதுரை மாநகருக்குள் எந்த நேரம் மின்சாரம் போகும்,
எப்போது வரும் என்று சொல்ல முடியாது. புறநகர் பகுதிகளில் வழக்கம்போல
காலையில் இரண்டு மணி நேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும் மின்வெட்டு.
மதுரையைப் பொறுத்தவரை சில்வர் பட்டறைத் தொழிலும் இரும்பு பட்டறைத் தொழிலும்
பவர்கட்டால் படுத்துவிட்டது. நெசவுத் தொழிலாளர்கள் நிலையோ பரிதாபம்.
சமீபத்தில் பெய்த திடீர் மழையாலும் சூறாவளி காற்றாலும்
சாய்ந்த மின்கம்பங்களை இன்னும் சரிசெய்யவில்லை. அதனால் கூடுதல் மின்
பிரச்னையால் தவிக்கிறார்கள் மக்கள்.
தேனி மருத்துவமனையிலும் மின்வெட்டு!
இரவு, பகல் எல்லா நேரமும் மின் தட்டுப்பாடு இருக்கிறது.
குழந்தைகள், வயோதிகர்கள் இரவு நேரங்களில் தடைப்படும் மின்சாரத்தால்
மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மருத்துவமனைகளின் நிலைமையும் இதுதான்.
விவசாயிகளின் நிலைமை இன்னும் சோகம். குறைந்த மின்னழுத்த மின்சாரம் வருவதால்
பல இடங்களில் மோட்டார்கள் பழுதாகிவிட்டன.
கிருஷ்ணகிரியில் காரணம் தெரியாதவில்லை!
குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது தவணை
முறையில் மின்தடை ஏற்படுகிறது. 3-ம் தேதி அதிகபட்சமாக மூன்று மணி நேரம்
மின்வெட்டு இருந்தது. பலத்த காற்றுடன் மழை பெய்த காரணத்தால் எண்ணற்ற
மின்கம்பங்கள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. அதனால் பல இடங்களில்
மின்சாரம் இல்லாததற்கான காரணம் மின்வெட்டினாலா, கம்பங்கள் சாய்ந்ததனாலா
என்பதே மக்களுக்குத் தெரியவில்லை. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவந்த
மும்முனை மின்சாரத்தை இப்போது மேலும் இரண்டு மணி நேரம்
அதிகரித்திருக்கிறோம் என்கிறார்கள் மின்வாரியத் துறையினர்.
தருமபுரியில் அப்பாடா!
இங்கு ஓரளவுக்கு மின்வெட்டு சரிசெய்யப் பட்டுவிட்டது
என்கிறார்கள். ஐந்து நிமிடம், 10 நிமிடம் என்று ஏற்படும் மின்வெட்டுக்களைச்
சேர்த்தால் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு இருப்பது
இல்லை. அதனால் மக்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
முதல்வரின் ஆணைக்கு அமைச்சர்கள் அஞ்சுகிறார்கள்... மின்சாரம்?
படம்: தி.விஜய்
போர்க்கால அடிப்படையில் திட்டங்கள்!
''தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்துதான் இந்த 2,500 மெகாவாட் மின்சாரம் இப்போது
கிடைக்கத் தொடங்கியிருக்கிறதே தவிர, ஜெயலலிதா புதிதாகத் தொடங்கப்போவதாக
அறிவித்த மின் திட்டங்களால் இல்லை. ஜெயலலிதா தனது அறிக்கையில் 3,300
மெகாவாட் மின்சாரத்தை நீண்டகால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள்
போடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த மின்சாரம் யாரிடமிருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம்
போடப்பட்டுள்ளது? அதற்காக முறைப்படி டெண்டர் கோரப்பட்டதா? அரசு சார்பில்
ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமானால் அனைவரும் விவரங்களைப் புரிந்துகொள்ள
உதவியாக இருக்கும்'' என்று அனல் பறக்கப் பேசுகிறார் டாக்டர் ராமதாஸ்.
பதிலுக்கு மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,
''முதலமைச்சர் ஜெயலலிதா மின் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் இடையேயான 4
ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறையை நீக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில்
2,500 மெகாவாட் மின்திறன் கொண்ட திட்டங்களை மூன்றே ஆண்டுகளில்
நிறைவேற்றியுள்ளார். முந்தைய மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் கிடப்பில்
போட்டிருந்த அனல் மின் உற்பத்தி திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா
முடுக்கிவிட்டதன் காரணமாக ஐந்து புதிய அனல் மின் உற்பத்தி அலகுகள்
உற்பத்தியை தொடங்கி 2,500 மெகா வாட் கூடுதல் மின் உற்பத்தி நிறுவு திறன்
உருவாக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது, நடுத்தர கால ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டு 500 மெகாவாட் மின்சாரம் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல்
வாங்கப்பட்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல், 1,000 மெகாவாட் திறன் கொண்ட
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகில் இருந்து 562 மெகாவாட்
மின்சாரம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்து வருகிறது. தமிழகம் மற்றும் பிற
மாநிலங்களில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 3,330
மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய 15 ஆண்டுகளுக்கு நீண்டகால ஒப்பந்தங்கள்
கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில் இப்போது 222 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு
வருகிறது. இது படிப்படியாக, ஆகஸ்ட் மாதம் முதல் 2 ஆயிரம் மெகாவாட் ஆக
உயரும். மீதமுள்ள 1,330 மெகாவாட் மின்சாரம் வரும் 2015-16-ம் ஆண்டில்
இருந்து கிடைக்கும். தி.மு.க ஆட்சியின் இறுதியில் 8 ஆயிரம் மெகா வாட்டாக
இருந்த மின் உற்பத்தி, கடந்த 3 ஆண்டு காலத்தில், 12,995 மெகாவாட் என்ற
உச்ச அளவு மின் தேவையை தமிழ்நாடு மின்சார வாரியம் நிறைவேற்றியுள்ளது.
2015-ல் 14,500 மெகாவாட் மின் தேவையை தமிழ்நாடு மின்சார
வாரியம் நிச்சயம் நிறைவேற்றும். நான்கு மாதங்கள் மட்டுமே கிடைக்கும்
காற்றாலை மின்சாரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஆண்டு முழுவதும்
கிடைக்கும் அனல்மின் சக்தியைக்கொண்டே தமிழகத்தின் மின் தேவை முழுமையும்
நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பதை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள்
புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.
கணக்கெல்லாம் சரிதான்... காத்து வரலையே