சமீபத்தில் பார்த்த படத்தில் எனக்கு மிகவும் தாக்கத்தை உண்டு பண்ணிய படம் இது என்றால் மிகை இல்லை, டவ்ன்ஃபால் பட இயக்குனர் ஆலிவர் ஹிர்ச்பீகல் என்றதுமே நம்பிக்கை இருந்தது, இயக்குனர் இதிலும் ஏமாற்றவில்லை. கை ஹிப்பர்டின் அருமையான கதையில் உருவான இந்த படம் ப்ரிடிஷ் / ஐரிஷ் டெலிவிஷனின் கூட்டுதயாரிப்பாகும்,இந்த படத்திற்கு 2009ஆம் ஆண்டுக்கான் சன் டான்ஸ் ஃபெஸ்டிவலின் 2 விருதுகள் கிடைத்தது. பிபிசி 2 இல் வெளியிடப்பட்டு பின்னர் பெரிய திரையிலும் வெளியாகி நடிப்புக்காகவும் கதைக்காகவும் மிகவும் பேசப்பட்ட படம்.
படத்தின் ஒன்லைன் இது தான்:-
இருவர்.
ஒருவன் வெறுப்பின் உச்சத்தில் மற்றவனை மன்னிக்க மறுக்கிறான்.
மற்றொருவன் குற்ற உணர்வின் உச்சத்தில் தன்னையே மன்னிக்க மறுக்கிறான்.இந்த உணர்ச்சி போராட்டம் தான் ஃபைவ் மினிட்ஸ் ஆஃப் ஹெவன்ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் புகழ் லியம் நீஸன் அவரது உன்னதமான நடிபபால் மனதை மீண்டும் உருக்கியிருக்கிறார்.ப்ளடி சண்டே படப் புகழ் ஜேம்ஸ் நெஸ்பிட் ஆக்ரோஷத்திலும் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் செம திறமை காட்டியிருக்கிறார்.இது இவர்கள் இருவரை மட்டும் முன் நிறுத்தி நகரும் கதைக்களம்.
ஒருவரின் குற்றத்தை இன்னொருவர் மன்னிப்பதும் , மறப்பதும் எவ்வளவு கடினம்? என மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார்கள்.மனிதனின் மிகக் கடினமான செயல் என்பது மன்னிப்பாகத் தான் இருக்கும் என இந்த படம் 2 மணி நேரத்தில் நமக்கு நன்கு விளக்கிவிடுகிறது.
படத்தை 2 பகுதியாக பிரிக்கலாம்.
முதல் பகுதி 1975 ஆம் ஆண்டு மேற்கு அயர்லாந்தில் கத்தோலிக்கர்களுக்கும் , ப்ராடஸ்டண்டுகளுக்கும் நடந்த இனக்கலவரத்துடன் துவங்குகிறது.ஊரடங்கு உத்தரவு சமயத்தின் போது , முன் விரோதம் காரணமாக 17 வயது அலிஸ்டர் லிட்டில் , 19 வயது ஜிம் க்ரிஃபினை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அகல்கிறான்,சம்பவ இடத்தில் இருந்த ஜிம் மின் தம்பியை கொல்லாமல் விட்டு விடுகிறான். பின்னர் வழக்குக்கு அவனே சாட்சியாகிறான்.
பின்னர் அலிஸ்டர் போலீஸிடம் பிடிபட்டு 12 வருடங்கள் சிறை வாசம் அனுபவிக்கிறான்.
அண்ணனின் கொலையை கண்ணால் கண்ட 11 வயது ஜோ அண்ணனை கொன்றவனை பழிவாங்கவும் முடியாமல் , அண்ணனையும் காப்பாற்ற முடியாமல் தன் அம்மாவின் ஏச்சு பேச்சுக்கு ஆளாகி பின்னர் அம்மா தற்கொலை செய்து கொண்டு இறக்க, 33 வருடங்கள் கழிந்த நிலையில் .தற்போது திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் ஆன பின்னரும் ஜோ வன்மத்துடன் அலைகிறான்.அண்ணனை கொன்றவனை எப்படியாவது பழி தீர்க்க தருணம் பார்க்கிறான்.
இரண்டாம் பகுதியாக :-
1975 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரங்கள் , பலியான உயிர்கள் குறித்த டாகுமெண்டரி தயாரிக்க எண்ணிய ஐரிஷ் தொலைக்காட்சியினர் , அலிஸ்டரையும் ஜோவையும் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேச செய்து வித்தியாசமான டாகுமெண்டரி எடுக்க கேட்டு அணுகுகின்றனர்.
இருவரும் இதற்கு சம்மதித்து தொலைக்காட்சி நேர்காணலுக்கு ஆவலுடன் தயாராகின்றனர்.அலிஸ்டாருக்கு ஜோ தன்னை கொன்று தன் அண்ணன் சாவுக்கு பழி தீர்க்க எண்ணியிருப்பது தெரியாது,
அந்த நாளும் வந்தே விடுகிறது.அலிஸ்டர் (லியம் நீஸன்) நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்க ஒரு அறையில் அமைதியாக காத்திருக்க ,
தாமதமாக உள்ளே நுழைந்த ஜோ (ஜேம்ஸ் நெஸ்பிட் ) அலிஸ்டரை கண்களால் தேடுகின்றான். அலிஸ்டருக்கு ஒப்பனை போடப்படுகின்றது. மிகவும் பரபரப்பான மன நிலையில் நிறைய புகை பிடிக்கிறான்,தொலைகாட்சி டெக்னீஷியன் பெண்ணிடம் அலிஸ்டரை பற்றி விசாரிக்க,அவன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை,ஆனால் ஒரு ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் சொந்தமாக உண்டு எனவும் ,தன் போல் இல்லாமல் வருமானத்திற்கு குறைவில்லை எனவும் அறிந்து இன்னும் கடுப்பாகிறான்,பழம் நறுக்கும் கத்தியை எடுத்து சட்டைக்குள் ஒளித்துக் வைத்துக் கொள்கிறான்.இவனுக்கு முகம் வியர்த்து இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.
தொலைக்காட்சி டெக்னீஷியன்களோ ? இவன் நல்ல மன நிலைக்கு வந்த பின்னரே இருவரையும் சந்திக்க வைக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.
இவனிடம் சம்மதம் வாங்கி ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் சொல்லி ,படிகளில் இருந்து இறங்கி வர சொல்ல,இவன் வேகமாக இறங்க.
அவர்கள் , மன்னிப்பு கேட்டு மீண்டும் இறங்கி வர சொல்ல, அவன் தன் கத்தி வெளியே விழுந்துவிடுமோ என பயந்து மீண்டும் பதட்டத்துடன் இறங்க,அவர்கள் இவனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒருமுறை இறங்கி வர சொல்ல,இவன் ஏக கடுப்பாகி சட்டையில் குத்திக்கொண்ட மைக்கை உருவிக் கடாசிவிட்டு தன்னை கூட்டிவந்த காரில் சென்று அமர்ந்து கொண்டு மிரட்டி காரை கிளப்பிக்கொண்டு விமான நிலையம் செல்கிறான்.
அலிஸ்டர் தனக்கு மன்னிப்பு கிடைக்காத ஏமாற்றத்தில் உழல்கிறான். ஜோவின் ஊருக்கு செல்கிறான்.ஜோ வழக்கமாக சூதாடும் கிளப்பிற்கு சென்று உருக்கமான கடிதம் ஒன்றை கொடுக்கிறான். அதில் நடந்ததை மறந்துவிட்டு நீ உன் மனைவியுடனும் மகள்களுடனும் இனிய வாழ்க்கையை துவக்க வேண்டும், நான் அதன் பின்னர் உன் முகத்திலேயே விழிக்கமாட்டேன்.எனக்கு தேவை ஒரே ஒரு மன்னிப்பு மட்டுமே என்கிறது.மேலும். நான்
உன் அண்ணன் இறந்த வீட்டில் தான் காத்திருக்கிறேன் என முடிக்க,
ஜோ வெறியுடன் கிளம்புகிறான்,அந்த பாழடைந்த வீட்டின் மாடிக்கு சென்ற ஜோ அலிஸ்டரை கண்டவுடன் கண்ட மேனிக்கு தாக்க தொடங்க, தற்காப்புக்காக அலிஸ்டரும் திருப்பி தாக்க,ஒருகட்டத்தில் கண்ணாடி சன்னலை உடைத்துக் கொண்டு கூரையில் சறுக்கி தரைத்தள நடைபாதையில் வந்து விழுந்து இருவரும் மூர்ச்சை ஆகின்றனர்.
சிறிது நேரத்தில் முதலில் கண்விழித்த அலிஸ்டர் ஜோவின் நாடி பிடித்து பார்க்கிறான்.பின்னர் கண்விழித்த ஜோவை எழுப்பி உட்கார வைக்கிறான்.தான் பெல்ஃபாஸ்ட் என்னும் ஊருக்கு போவதாகவும்.திரும்பவே வரப்போவதில்லை என்றும் கூறுகிறான்.
இனியாவது வன்மத்தை கைவிட்டு மனைவி மகள்களோடு மகிழ்ச்சியாக வாழ்வதற்கே தான் அவனை உயிருடன் விடுவதாக சொல்லுகிறான். ஜோ இப்போது தெளிந்த உள்ளத்துடன் உடைந்த கால்களால் தள்ளாடி எழுந்து நின்று ஒரு சிகரெட்டை பற்ற வைக்கிறான்.
இப்போது அலிஸ்டர் சாலையில் பாதசாரி சிக்னலுக்கு காத்திருக்க ஜோவிடமிருந்து கைபேசியில் அழைப்பு வருகிறது, நீண்ட தயக்கத்துடன் பேசிய ஜோ , அவனை மன்னித்து விட்டதாகவும் இனி தன் முகத்தில் விழிக்க வேண்டாம் என்றும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்கிறான்.அலிஸ்டர் நெடு நாள் பாரத்தை நொடியில் இறக்கி வைத்த மகிழ்ச்சியில் ஆனந்த மழையில் நனைகிறான்.
-------------------------------------
இன்றைய காலகட்டத்தில் வெளிவரும் அனேகமான திரைப்படங்கள் வன்முறை, கண்ணுக்கு கண்,கைக்கு கை , பழிக்கு பழி தீர்த்தல்,ரத்தம்,வஞ்சம் ஆகியவற்றையே பிரதானமாக கொண்டு எடுக்கப்படுகின்றன, ஆனால் இந்த படம் வன்முறையால் வன்முறையை வேண்டாம் என்று சொன்ன படம்.இரண்டு மணி நேரம் உபயோகமாக செலவு செய்ய எண்ணுபவர்கள் , உலக சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்,மற்றபடி எனக்கு பேசினால் பிடிக்காது.கொட்டாவி வரும் என்பவர்கள் தயவு செய்து வேறு படம் பாருங்கள்.என்னை திட்டாதீர்கள்.
----------------------------------------------------------
படத்தின் கானொளியை அவசியம் பாருங்கள் படமும் பிடிக்கும்.
படத்தின் கானொளியை அவசியம் பாருங்கள் படமும் பிடிக்கும்.
----------------------------------------------------------
Directed by | Oliver Hirschbiegel |
---|---|
Produced by | Eoin O'Callaghan Stephen Wright |
Written by | Guy Hibbert |
Starring | Liam Neeson James Nesbitt Anamaria Marinca |
Music by | David Holmes |
Cinematography | Ruairi O'Brien |
Editing by | Hans Funck |
Studio | Big Fish Films Element Pictures Ruby Films |
Distributed by | BBC Television (United Kingdom) IFC Films (United States) Pathé (worldwide) |
Release date(s) | 5 April 2009 (TV) 21 August 2009 (U.S., limited) |
Original channel | BBC Two |
Running time | 90 minutes |
Country | United Kingdom/Ireland |