"தி பக்கெட் லிஸ்ட்" வாழ்வின் இறுதிப் பக்கங்களில் ஒரு தத்துவார்த்தப் புன்னகை
'தி பக்கெட் லிஸ்ட்' திரைப்படம், மரணத்தின் வாயிலில் நிற்கும் இரண்டு மனிதர்களின் ஆசைகளையும், உளவியல் பயணத்தையும் எளிமையாக அணுகியிருந்தாலும், அது உலக சினிமா தரத்துடனும், இலக்கிய ஆழத்துடனும் கூடிய ஒரு தத்துவார்த்தப் படைப்பாகவே ஒளிர்கிறது.
இப்படத்தின் மையக்கரு, பிரெஞ்சு தத்துவஞானி ஆல்பர்ட் காம்யுவின் 'வீழ்ச்சி' (The Fall) மற்றும் 'சிசிஃபஸ் கட்டுக்கதை' (The Myth of Sisyphus) ஆகியவற்றின் மையமான 'வாழ்வின் அபத்தத்தை ஏற்றல்' என்ற கருத்தை மென்மையாகப் பிரதிபலிக்கிறது.
சாகப் போகிறோம் என்று தெரிந்த பிறகும், கார்ட்டர் (மார்கன் ஃப்ரீமேன்) மற்றும் எட்வர்ட் (ஜாக் நிக்கல்சன்) ஆகியோர் தங்கள் அற்ப ஆசைகளைத் துரத்துவது, வாழ்வின் அர்த்தமற்ற தன்மையை நகைச்சுவையுடனும் உற்சாகத்துடனும் எதிர்கொள்வதைக் காட்டுகிறது.
அவர்கள் மலையேறுவதும், வானில் இருந்து குதிப்பதும், தங்கள் இருப்பின் இறுதி நிமிடங்களில், மனித வாழ்வு எவ்வளவு சிறியது என்பதை உணர்ந்து, அதை ஒரு சாகசமாக மாற்றும் காம்யுவின் 'அபத்த நாயகத்தனமே' .
நிக்கல்சனின் முரட்டுத்தனமான நகைச்சுவைக்கும், ஃப்ரீமேனின் அமைதியான அறிவுக்கும் இடையிலான மோதல், ரஷ்ய இலக்கிய மேதை ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் அடிக்கடி காணப்படும் 'பொருள்முதல்வாதி (Materialist) Vs. ஆன்மீகவாதி (Spiritualist)' என்ற கருப்பொருளை நினைவூட்டுகிறது.
எட்வர்ட், பணம் மற்றும் ஆடம்பரத்தின் உச்சமாக இருக்கிறான்; கார்ட்டர், அறிவு, குடும்பம் மற்றும் உணர்வுப்பூர்வமான உறவுகளின் பிரதிநிதியாக இருக்கிறான்.
இந்த இரு துருவங்களும் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டு, எட்வர்ட் பணத்தைத் துறந்து உறவைத் தேடுவதும், கார்ட்டர் தன் கட்டுப்பாடுகளை உடைத்து சாகசங்களைத் தேடுவதும், இருவரின் பரிணாம வளர்ச்சியைச் சித்தரிக்கிறது.
இப்படம் பிரபல கவிஞரான டி.எஸ். எலியட்டின் கவிதை வரியான, "We shall not cease from exploration, and the end of all our exploring will be to arrive where we started and know the place for the first time"
நாம் தேடுதலை நிறுத்தவே மாட்டோம், நமது தேடுதலின் முடிவு, நாம் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பி வருவதுதான், ஆனால் அதை முதல்முறையாக அறிவதுதான்
என்பதன் திரைக் காட்சியாக அமைகிறது. உலகத்தைச் சுற்றிப் பயணித்து, பிரமிடுகளிலும், இமயத்திலும் உண்மையை அலசிய பிறகும், எட்வர்ட் தனது மகள் மற்றும் பேத்தியிடம் சமாதானம் ஆவதுதான் அவரின் உண்மையான 'புதையல்' என்பதையும், கார்ட்டர் தனது மனைவியிடம் மன்னிப்புக் கேட்டுத் திரும்புவதுதான் அவர் தேடிய 'திருப்தி' என்பதையும் உணர்த்துகிறது.
'தி பக்கெட் லிஸ்ட்' உணர்ச்சிவசப்பட்ட பயணத்தைப் பற்றிய படம் அல்ல; அது மரணத்தை ஒரு ஆசிரியராக மாற்றும் கலையைப் பற்றியது.
மரணத்தின் நிழலில், மனிதர்கள் தங்கள் வாழ்வின் உண்மையான அர்த்தத்தையும், விட்டுச் சென்ற உறவுகளின் மதிப்பையும் எவ்வாறு கண்டறிகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, சர்வதேச இலக்கிய மேதைகளின் தத்துவார்த்த கேள்விகளுக்கான ஒரு சுவாரஸ்யமான பதிலைத் திரையில் அளிக்கிறது.
படத்தின் கதை :-
திறமையான கார் மெக்கானிக் கார்ட்டர் சேம்பர்ஸ் மற்றும் பெரும் பணக்காரர் எட்வர்ட் கோல் இருவரும் ஒரே மருத்துவமனையில் முதன்முதலில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சந்திக்கிறார்கள்.
எட்வர்ட் தான் அந்த மருத்துவமனையின் உரிமையாளர், இருவருக்கும் தீராத நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
கார்ட்டர், திறமையான வரலாற்றாளரும் கூட.
இளமையில் அவர் ஒரு வரலாற்றுப் பேராசிரியராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவர், ஆனால் குடும்பம் என்ற முடிவால் அந்த ஆசையை விட்டுவிட்டவர். அவர் ஒரு சிறந்த குடும்பத் தலைவரும் கூட.
எட்வர்ட், நான்கு முறை விவாகரத்து செய்தவர்; பணக்காரர். தனிமையில் வாழ்பவர். அவர் உலகின் விலை உயர்ந்த காபியான 'கோபி லுவாக்'-கை விரும்பி குடிப்பவர், ட்ரம்ப் போன்ற எலான் மஸ்க் போன்ற குணாதிசயம் கொண்டவர். தனது தனிப்பட்ட உதவியாளர் மாத்யூ என்பவரை, வேண்டுமென்றே 'தாமஸ்' என்று வேறு பெயரால் அழைத்து கேலி செய்பவர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, கார்ட்டரும் எட்வர்ட்டும் எதிரும் புதிருமாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிப் பழகி நண்பர்களாகின்றனர். வேடிக்கைக்காக, கார்ட்டர் தான் இறப்பதற்கு முன் செய்ய வேண்டிய ஆசைகள் அடங்கிய ஒரு பட்டியலை எழுத ஆரம்பிக்கிறார்.
தனக்கு ஒரு வருடமே மிச்சமிருக்கிறது என்று தெரிந்தவுடன், விரக்தியுடன் அந்தக் காகிதத்தைக் கிழித்துப் போடுகிறார்.
மறுநாள் காலையில், எட்வர்ட் கிழிந்த அந்தப் பட்டியலைக் கண்டெடுக்கிறார். அதைச் சரிசெய்து படித்துவிட்டு, கார்ட்டரை உற்சாகப்படுத்துகிறார்.
"நாம் இருவரும் சேர்ந்து இந்தப் பட்டியலில் உள்ள எல்லாவற்றையும் நிறைவேற்றலாம். அனைத்து செலவுகளையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்" என்று சொல்லி, தன்னுடைய சில ஆசைகளையும் அதில் சேர்க்கிறார்.
கார்ட்டரின் மனைவி வர்ஜீனியா நோயாளி கணவனை பிரிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், கார்ட்டர் இப்பயணத்துக்கு சம்மதிக்கிறார். உதவியாளர் மாத்யூவுடன் இருவரும் தங்கள் உலகப் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
அவர்கள் இருவரும் உலகின் பல இடங்களுக்குப் பயணிக்கிறார்கள்:
இவர்கள் வானத்தில் விமானத்தில் இருந்து பாரசூட் கட்டி குதிக்கிறார்கள்.
கலிபோர்னியா பந்தயத் திடலில் பழமையான ரேஸ் கார்களை ஓட்டி மகிழ்கிறார்கள்.
வட துருவத்தின் மேல் விமானத்தில் பறக்கிறார்கள்.
மிகவும் ஆடம்பரமான 'செவ்ரே டி'ஓர்' உணவகத்தில் இரவு உணவு சாப்பிடுகிறார்கள்.
இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலைப் பார்க்கிறார்கள்.
சீனப் பெருஞ்சுவரில் மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறார்கள்.
தான்சானியாவில் சிங்க சஃபாரிக்குச் செல்கிறார்கள்.
எவரெஸ்ட் சிகரத்தைப் பார்க்கிறார்கள்.
கிசா பிரமிட்டின் உச்சியில் அமர்ந்து இருவரும் மனம் விட்டுப் பேசுகிறார்கள். அப்போது கார்ட்டர், தான் நீண்ட நாட்களாகத் தன் மனைவி மீது தான் காதலில் குறைவைத்திதாகவும், ஒரு பேராசிரியராக ஆகாததற்காக அவளுக்கு சிறிது வருத்தம் இருப்பதாகவும் சொல்கிறார்.
எட்வர்ட், தான் தன் மகளைப் பிரிந்து இருப்பதன் வலியைப் பற்றிப் பேசுகிறார். தன் மகளைத் துன்புறுத்திய அவளது கணவனை விரட்டியதால், மகள் இவரைப் பேசாமல் பிரிந்து சென்றுவிட்டாள் என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.
பின்னர், ஹாங்காங்கில் இருக்கும்போது, எட்வர்ட் ஒரு அழகிய விலைமாது பெண்ணை ஏற்பாடு செய்து கார்ட்டரிடம் அனுப்புகிறார்.
ஆனால், தன் மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணுடனும் உறவில்லாத கார்ட்டர், அதை மறுத்து திருப்பி அனுப்பி விடுகிறார். தனக்கு மனைவியை பார்க்கவேண்டும் போல உள்ளது, உடனடியாகப் பட்டியலை முடித்துவிட்டுத் திரும்பி வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று எட்வர்டிடம் வற்புறுத்துகிறார்.
சோகமும் சமரசமும்
திரும்பி வரும் வழியில், கார்ட்டர், எட்வர்டை அவருடைய பிரிந்த மகளுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார்.
இதைத் தான் அவர் மீது வைத்த நம்பிக்கைக்கு பங்கம் விளைவித்தார் என்று கருதிய எட்வர்ட், கார்ட்டரை கோபமாகப் பேசுகிறார். பிறகு கோபத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடுகிறார்.
கார்ட்டர் தன் குடும்பத்துடன் வீட்டிற்குத் திரும்புகிறார். அதே சமயம், தனிமையில் உணர்ந்த எட்வர்ட், தன் வீட்டில் அழுது உடைந்து போகிறார்.
வீடு திரும்பிய கார்ட்டரின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை. தன் மனைவியுடன் அணுக்கமாக இருக்கத் தயாராகும் போது, திடீரெனச் சரிந்து விழுகிறார்.
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில், புற்றுநோய் அவரது மூளைக்குப் பரவியிருப்பது தெரிய வருகிறது.
அதே நேரத்தில், புற்றுநோயிலிருந்து அதிசயமாக மீண்டு வந்திருக்கும் எட்வர்ட், மருத்துவமனைக்கு வந்து கார்ட்டருடன் சமரசம் செய்துகொள்கிறார்.
அப்போது, புதிர் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் வல்லவரான கார்ட்டர், எட்வர்ட் விரும்பிக் குடிக்கும் கோபி லுவாக் காபி, உண்மையில் காட்டுப் பூனையால் உண்ணப்பட்டு, அதன் கழிவில் இருந்து எடுக்கப்படுவது என்ற வேடிக்கையான உண்மையைச் சொல்கிறார்.
இருவரும் சத்தமாகச் சிரிக்கிறார்கள். பிறகு, எட்வர்ட்டிடம் தன்னுடைய அந்தப் பட்டியலை முடித்து வைக்குமாறு கார்ட்டர் கெஞ்சுகிறார்.
ஆனால், அறுவை சிகிச்சையின் போது கார்ட்டர் இறந்துவிடுகிறார்.
அதன்பின் எட்வர்ட், தன் மகளுடன் சமரசம் செய்துகொள்கிறார். அவள் மூலமாகத் தான் இதுவரை அறியாத தன் பேத்தியையும் சந்திக்கிறார். அந்தச் சிறுமியின் கன்னத்தில் முத்தம் கொடுத்து, "உலகிலேயே மிக அழகான பெண்ணுக்கு முத்தமிடுவது" என்ற ஆசையை அடிக்கோடிட்டு முடிக்கிறார்.
பிறகு, கார்ட்டரின் இறுதிச் சடங்கில் எட்வர்ட் ஒரு இரங்கல் உரை ஆற்றுகிறார். அதில், கார்ட்டர் தனக்கு நண்பராகக் கிடைத்தது ஒரு வரம் என்றும், கார்ட்டருடன் கழித்த கடைசி மூன்று மாதங்கள், தன்னுடைய வாழ்க்கையின் மிகச் சிறந்த நாட்கள் என்றும் நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்.
எட்வர்ட் 81 வயது வரை வாழ்ந்து மறைகிறார். அவர் இறந்த பிறகு, உதவியாளர் மாத்யூ, எட்வர்ட்டின் சாம்பலை இமயமலையின் ஒரு சிகரத்திற்குக் கொண்டு செல்கிறார்.
அங்கே, ஏற்கனவே கார்ட்டரின் சாம்பல் வைக்கப்பட்டிருந்த காபி டின்னுக்கு அருகில், எட்வர்ட்டின் சாம்பல் டின்னையும் வைக்கிறார். பிறகு, "உண்மையிலேயே ஒரு பிரம்மாண்டமான ஒன்றைக் காணுதல்" என்ற பக்கெட்லிஸ்டின் கடைசி ஆசையை மாத்யூ பூர்த்தி செய்து, அந்தப் பட்டியலை இரண்டு டின்ன்களுக்கும் இடையில் வைத்துவிட்டு அகல்கிறார்.
மலையில் ஒருவரின் அஸ்தியை புதைப்பது சட்டப்படி குற்றம், அதனால் எட்வர்ட் இதைப் பார்த்தால் கண்டிப்பாகச் சிரித்திருப்பார் என்று கார்ட்டரின் குரல் அசரீரி போல சொல்வதுடன் பக்கெட் லிஸ்ட் நிறைகிறது.
'தி பக்கெட் லிஸ்ட்' திரைப்படத்தின் முதுகெலும்பாக விளங்கிய ஜாக் நிக்கல்சன் மற்றும் மார்கன் ஃப்ரீமேன் ஆகியோரின் நடிப்பை வியந்து போற்ற வார்த்தைகள் இல்லை.
உலகையே ஆளும் கோடீசுவரர் எட்வர்ட் கோலாக நடித்த ஜாக் நிக்கல்சனின் முரட்டுத்தனமும், தனிமையின் வலியும் கலந்த நடிப்பு பிரமிக்க வைக்கிறது. மறுபுறம், அறிவும், பொறுமையும், பாசமும் நிறைந்த கார்ட்டர் சேம்பர்ஸாக நடித்த மார்கன் ஃப்ரீமேனின் கனிவும், ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் மென்மையான நடிப்பும் நம் நெஞ்சைத் தொடுகின்றன.
இவர்களின் இந்தக் கூட்டணி, இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களின் முரண்பாடுகளையும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டு அவர்கள் இணைந்ததையும் திரையில் ஒரு காவியமாகப் படைத்தது.
இந்த வாழ்வியல் நகைச்சுவைப் பயணத்தை உருவாக்கிய எழுத்தாளர் ஜஸ்டின் சாக்ஹாம் மற்றும் இயக்குநர் ராப் ரெய்னர் ஆகியோரின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் உண்மையிலேயே போற்றுதலுக்குரியது.
மனதின் ஆழமான வலிகளையும், மனித உறவுகளின் முக்கியத்துவத்தையும், மரணத்தை ஒரு கொண்டாட்டமாக மாற்றும் நேர்த்தியையும் அவர்கள் எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் கையாண்ட விதம் தனித்துவமானது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தத் திரைப்படத்தைத் தமிழில் உரிமை வாங்கி தழுவும்போது தமிழ் சினிமாவுக்கு அர்த்தமுள்ள நகைச்சுவை கலந்த வாழ்வியல் படைப்பு கிடைக்கும் , இந்த முதிர்ச்சியான, ஆழமான கதாபாத்திரங்களுக்கு, இந்திய சினிமாவின் சகாப்தங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அவர்களை விடச் சிறந்த தேர்வு இருக்கவே முடியாது. கோடீசுவரர் எட்வர்ட்டாக கமல்ஹாசனும், அறிவார்ந்த கார்ட்டராக ரஜினிகாந்தும், வழுக்கையுடன் செயற்கையான விக் மற்றும் முக ஒப்பனை இன்றி தங்கள் இயற்கையான தோற்றத்திலும், அனுபவ முதிர்ச்சியுடனும் நடித்தால், அது அவர்கள் மீண்டும் இணையும் ஒரு மறக்க முடியாத வாழ்நாள் பரிசாக அமையும்.
மேலும், இந்தப் படத்தின் ஆழமான திரைக்கதையைக் கெடுக்காமல் இருக்க, கதை, திரைக்கதை உணர்வு இல்லாத எந்த ஒரு பேய்பட மேஸ்திரியின் கைகளிலும் இந்தப் படத்தை இயக்கக் கொடுக்காமல், ஒரு திறமையான இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே என் போன்ற சினிமா ஆர்வலரின் விருப்பமாக உள்ளது.