ஃபியோதோர் தஸ்தாயெவ்ஸ்கியின் 'கரமசோவ் சகோதரர்கள்' என்ற இறுதிப் படைப்பு அற்புதமான ரஷ்ய இலக்கியம், இது ஒரு சாதாரணக் கொலை மர்மக் கதையல்ல,இது மனித மனதின் ஆழமான உளவியல் மற்றும் தத்துவார்த்தச் சவால்களின் களஞ்சியமாகும்.
இந்த நாவல், மனித இயல்பின் முரண்பாடுகளை மூன்று சகோதரர்களாகப் பிரித்துக் காட்டியதில் தனித்துவம் பெறுகிறது: உணர்ச்சியின் கொந்தளிப்பை திமித்ரி மூலமும், அறிவின் அகங்காரத்தை இவான் மூலமும், ஆன்மீகத்தின் மீட்பை அலெக்ஸி மூலமும் சித்தரிக்கிறது.
இவானின் "கடவுள் இல்லையெனில், எல்லாம் அனுமதிக்கப்பட்டதே" என்ற தத்துவம், வேலைக்காரன் ஸ்மெர்டியாகோ செய்த கொலையை நியாயப்படுத்த உதவுகிறது. இந்தக் கொலையைச் செய்ய ஸ்மெர்டியாகோவ், திமித்ரி ஆத்திரத்தில் எழுதிய 'தந்தையைக் கொன்றாவது பணத்தைத் தருவேன்' என்ற கடிதம் மற்றும் காத்யாவின் பழிவாங்கும் உணர்வு ஆகியவற்றைப் பின்னணியாகப் பயன்படுத்திக் கொண்டது, கதையின் தார்மீகச் சிக்கலை அதிகப்படுத்துகிறது.
திமித்ரி தன் ஆத்திரத்தின் வெளிப்பாடாக ஸ்னெகிரியோவை பொது இடத்தில் தாடியைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்திய சம்பவம், ஒரு ஏழையின் கௌரவச் சிதைவு ஏற்படுத்தும் வலி எவ்வளவு பெரியது என்பதைக் காட்டுகிறது.
தஸ்தாயெவ்ஸ்கி ஒரு சாதாரணக் கதை சொல்லி அல்ல, அவர் மனித ஆன்மாவின் மருத்துவர். அவர் பாத்திரங்களின் மனதின் இருண்ட மூலைகளுக்குள் சென்று, அவர்களின் குற்ற உணர்வு, சந்தேகம், மற்றும் ஆழமான பாசம் ஆகியவற்றை வார்த்தைகளால் செதுக்கியுள்ளார்.
இந்தக் கதையில் உள்ள தத்துவார்த்தச் சிக்கல்களும், நிராகரிக்கப்பட்ட காதல், குலைந்த கௌரவம், மற்றும் பழிவாங்கும் வேட்கை ஆகியவற்றையும் கொண்ட இந்தப் படைப்பு, ஒரு தீர்க்கதரிசியின் குரல் போல, நம்பிக்கையற்ற தன்மையின் விளைவுகளை முன்கூட்டியே உணர்த்தியது.
சட்டம் திமித்ரியைத் தண்டித்தாலும், அவர் தப்பிக்கும் வழியில் இல்லுஷாவிடம் மன்னிப்புக் கேட்கச் சென்றது, உண்மையான நீதி என்பது மனசாட்சியிலும், நிபந்தனையற்ற மன்னிப்பிலும் தான் இருக்கிறது என்பதை நிலைநாட்டுகிறது.
தஸ்தாயெவ்ஸ்கியின் இந்தப் படைப்பு மிகவும் சிக்கலானதும், நீளமானதும்கூட. இருப்பினும், அதன் ஆழமான நாடகத் தன்மையால் பலமுறைத் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளது.
1958-ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் கிளாசிக் பதிப்பு, உணர்ச்சிகரமான நாடகத் தன்மையை மையப்படுத்தியது.
இதற்கு மாறாக, 1969-ஆம் ஆண்டு வெளியான சோவியத் காவியம் என்று கருதப்படும் ரஷ்யப் பதிப்பு, நாவலுக்கு மிகவும் விசுவாசமானதாகவும், தஸ்தாயெவ்ஸ்கியின் உளவியல் மற்றும் தத்துவச் சிக்கல்களைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதாகவும் இருந்தது.
2008-ஆம் ஆண்டு வெளியான செக் குடியரசு திரைப்படம் போன்ற சில நவீன வடிவங்கள், கதையின் சாராம்சத்தையும் உளவியல் தீவிரத்தையும் மட்டும் மையமாகக் கொண்டிருந்தன.
இவ்வாறு காலத்தைப் பொறுத்து, காதல், தத்துவம், அல்லது உளவியல் நாடகம் என நாவலின் வெவ்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், மூலக் கதையின் குடும்பப் பகை, நீதி விசாரணை, மற்றும் பாவ மீட்பு என்ற மையக் கருத்தை இந்தப் படைப்பு ஒருபோதும் இழக்கவில்லை.
படத்தின் கதை:-
1870-ஆம் ஆண்டு ரஷ்யாவில் கதை துவங்குகிறது, ஃபியோதோர் கரமசோவ் என்ற ஊதாரித்தனமும் நேர்மையற்ற தன்மையும் கொண்ட செல்வந்தர், தன் மகன்களின் வாழ்க்கையைத் தன் சுயநலத்திற்காகச் சிதைக்கிறார்.
இவருக்கு மூன்று மகன்கள் உணர்ச்சிமயமான ராணுவ அதிகாரி திமித்ரி அறிவாளியும் எழுத்தாளருமான இவான் மற்றும் துறவறம் பூண்ட அலெக்ஸி அத்துடன், கள்ள மகன் பாவெல் ஸ்மெர்டியாகோவும் உண்டு.
திமித்ரி, இவான், மற்றும் அலெக்ஸி ஆகிய மூன்று சகோதரர்களும் ஃபியோதோர் கரமசோவுக்குப் பிறந்திருந்தாலும், அவர்கள் மூவரும் வெவ்வேறு தாய்மார்களுக்குப் பிறந்தவர்கள் ஆவர்.
ஃபியோதோர் தன் வாழ்நாளில் இரு முறை திருமணம் செய்திருந்தார். திமித்ரி ஃபியோதோரின் முதல் மனைவி, அதாவது அடெலாய்டா இவனோவா மியுசோவா என்ற பணக்கார மற்றும் பிடிவாதமான பெண்ணுக்குப் பிறந்தவர். இவள் திமித்ரியைப் பிறந்த சிறிது காலத்திலேயே ஃபியோதோரைக் கைவிட்டுச் சென்றாள். திமித்ரியின் உணர்ச்சிமயமான குணாதிசயங்கள் இவளிடமிருந்தே வந்ததாகக் கூறப்படுகிறது. ஃபியோதோரின் இரண்டாவது மனைவி யான சோபியா இவனோவா என்ற அமைதியான, ஆன்மீகப் பற்றுள்ள பெண்ணுக்குப் பிறந்தவர்களே இவான் மற்றும் அலெக்ஸி ஆவர். அவள் ஃபியோதோரின் சித்திரவதையால் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். இவான் தன் தாயின் உணர்ச்சிப்பூர்வமான ஆழத்தையும், அலெக்ஸி தன் தாயின் அன்பு மற்றும் மத நம்பிக்கையுள்ள குணாதிசயங்களையும் பெற்றிருந்தனர். இந்த மூன்று சட்டபூர்வமான மகன்களைத் தவிர, ஃபியோதோரின் கள்ள மகனான பாவல் ஸ்மெர்டியாகோவ், ஒரு மனநலம் குன்றிய பிச்சைக்காரப் பெண்ணுக்குப் பிறந்தவன். இதுவே அவர்களின் வெவ்வேறு தனித்துவமான குணாதிசயங்களுக்கும், குடும்ப உறவுகளில் இருந்த சிக்கல்களுக்கும் அடிப்படையான காரணமாக இருக்கிறது.
ஃபியோதோர் தன் மகனான பாவல் ஸ்மெர்டியாகோவை வேலைக்காரனாக நடத்தியதற்குப் பின்னால், 19-ஆம் நூற்றாண்டு ரஷ்யச் சமூகத்தின் கடுமையான சமூக இழிவு மற்றும் ஃபியோதோரின் கீழ்த்தரமான குணம் ஆகிய முக்கியக் காரணங்கள் இருந்தன. பாவல் ஸ்மெர்டியாகோவ் ஒரு முறையற்ற பிறப்பாவார்; , ஃபியோதோர் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்யாத பெண்ணுக்குப் பிறந்த மகன். ஸ்மெர்டியாகோவ், பாவல் லிசாவெட்டா ஸ்மெர்டியாஷ்சாயா என்ற ஒரு மனநலம் குன்றிய, ஊமையான பிச்சைக்காரப் பெண்ணுக்குப் பிறந்தவன். ஃபியோதோர் அவளை மிகக் கொடூரமான முறையில் வல்லுறவு செய்ததன் காரணமாக பிறந்தவன். இந்தக் தாழ்ச்சியான சூழ்நிலையே, ஸ்மெர்டியாகோவின் பிறப்பைச் சமூகத்தில் மிக மோசமான இழிவுள்ள நிகழ்வாக ஆக்கியது. ஃபியோதோர் ஒரு சுயநலவாதி, கீழ்த்தரமானவர் மற்றும் குரூரமானவர். அவர் ஸ்மெர்டியாகோவை ஒரு வேலைக்காரனாகவே தன் வீட்டிலேயே வைத்திருந்தார். இது அவருக்கு ஒருவித குரூரமான அதிகார உணர்வைக் கொடுத்தது. தனது சொந்த ஒழுக்கக்கேட்டின் ஒரு வாழும் சான்றாக அவன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். திமித்ரி, இவான், அலெக்ஸி ஆகிய மூவரும் உயர் குலத்தைச் சேர்ந்த மனைவிகளுக்குப் பிறந்தவர்கள் என்பதால், அவர்கள் சட்டப்பூர்வமான மகன்களாகக் கருதப்பட்டனர். ஆனால், ஸ்மெர்டியாகோவ் முறைதவறிப் பிறந்ததால், ஃபியோதோர் அவனைச் சமமாக நடத்தவே மறுத்து, அவனுக்குச் சமையற்காரன் மற்றும் வேலைக்காரன் என்ற நிலையைக் கொடுத்து, எந்தவிதமான தார்மீகப் பொறுப்பையும் ஏற்கவிடவில்லை. இதன் காரணமாகவே, ஸ்மெர்டியாகோவ் ஒரு மகனாக அங்கீகரிக்கப்படாமல், தன் தந்தையின் வீட்டிலேயே அடிமையாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் திமித்ரி தன் தாயின் சொத்தைப் பெறுவதற்கு ஃபியோதோரிடம் பணம் கேட்கும்போது, அவர் மகனை இழிவுபடுத்தி உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி பணம் தந்து அதீத கடனாளியாக்குகிறார்.
திமித்ரியின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பமாக, ராணுவத் தளபதியின் மகள் காத்யா இவனோவா வருகிறார். அவளது தந்தை பொறுப்பில் இருந்த ஐயாயிரம் ரூபிள் பணம் திருடப்பட்டதால், தந்தையின் கௌரவத்தைப் பாதுகாக்க, காத்யா வேறு வழியின்றித் தன் உடலைத் திமித்ரிக்கு அளிப்பதாகப் பேரம் பேச வருகிறாள்.
திமித்ரி அவளது தியாகத்தைக் கண்டு நெகிழ்ந்து, எந்தப் பிரதிபலனும் இன்றிப் பணத்தைக் கொடுத்து அவளது கௌரவத்தைக் காப்பாற்றுகிறார்.
இதனால் நெகிழ்ந்த காத்யா, பின்னாளில் திமித்ரியின் கடனை அடைத்து அவரை மணக்கச் சம்மதிக்கிறாள்.
திமித்ரி விருப்பமில்லாமலே திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாலும், அவரது மோகம் முழுவதும் க்ருஷெங்கா ஸ்வெட்லோவா என்ற தங்கும் விடுதி உரிமையாளர் மீதுதான் இருக்கிறது. அதே பெண் மீது திமித்ரியின் கிழட்டு தந்தை ஃபியோதோரும் ஆசை கொண்டதால், தந்தையும் மகனும் ஒரே பெண்ணுக்காகப் போட்டி போடுவது குடும்பப் பகைமை உச்சமடையக் காரணமாகிறது.
ஃபியோதோர், திமித்ரியைச் சிக்கவைக்கும் சதியின் ஒரு பகுதியாக, க்ருஷெங்காவின் ஊழியரான முன்னாள் ராணுவத் தலைவன் ஸ்னெகிரியோவைப் பயன்படுத்தி திமித்ரியின் கடன்களை வாங்கி, பணத்தை உடனடியாக திரும்பக் கேட்கச் செய்கிறார்.
இந்தச் சதிவலையில் சிக்கிய ஆத்திரத்தில் இருந்த திமித்ரி, தெருவில் ஸ்னெகிரியோவை எதிர்கொண்டு, அவர் மகன் இல்லுஷா கண் முன்பே, ஸ்னெகிரியோவைத் தரையில் தள்ளி, அவரது தாடியைப் பிடித்து இழுத்துத் துவம்சம் செய்து, அவரது கௌரவத்தைக் குலைக்கிறார்.
இந்தச் சம்பவத்தால் ஆழமாக மனமுடைந்த இல்லுஷா, கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் வீழ்கிறான். இதற்கிடையில், திமித்ரிக்கு எப்படியேனும் உதவ விரும்பிய காத்யா, மூவாயிரம் ரூபிளைத் தபாலிடக் கொடுப்பது போல், அவர் அதைக் திருடுவார் என்று தெரிந்தே கொடுக்கிறாள்.
திமித்ரி அந்தப் பணத்தைக் காதலி க்ருஷெங்காவுடன் களியாட்டங்களில் செலவழித்துவிடுகிறார்.
அறிவாளி மகனான இவானின் தத்துவமான "கடவுள் இல்லையெனில், எல்லாம் அனுமதிக்கப்பட்டதே" என்பதனால் உந்தப்பட்ட பாவல் ஸ்மெர்டியாகோவ், தன்னை இழிநிலையில் தள்ளிய தந்தை ஃபியோதோரைக் கொன்றவன், அவரிடம் திருடப்பட்ட 3,000 ரூபிளை வைத்து பழியைத் திமித்ரி மீது போடும் காட்சி சுவாரஸ்யமானது,
பாவல் ஸ்மெர்டியாகோவ் தன் தந்தை ஃபியோதோர் கரமசோவைக் கவனமாகத் திட்டமிடப்பட்ட சதி மற்றும் தந்திரமான சூழலைப் பயன்படுத்தி கொன்றான். கொலை நடக்கும் நாளில், ஃபியோதோர் க்ருஷெங்காவுக்காக ஆவலுடன் காத்திருந்த சரியான தருணத்தைப் பயன்படுத்தினான், பாவல் ஸ்மெர்டியாகோவ் தனக்கு வலிப்பு வருவது போல் நடிப்புத் திட்டத்தை மேற்கொண்டான். இதனால், வீட்டில் இருந்தவர்கள் அவன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பி, அவன் அறையிலேயே இருப்பான் என்று நினைத்தனர்.
இது அவனுக்கு ஒரு பலமான பொய்க் கவசமாக அமைந்தது. பின்னர், இரவு நேரத்தில், க்ருஷெங்கா வருவதாகப் பொய் சொல்லி, ஃபியோதோரை வீட்டின் படிக்கட்டுகளுக்கு அழைத்து வந்தான்.
க்ருஷெங்காவுக்காக ஆவலுடன் தனியாக இருந்த கிழவர் ஃபியோதோர் முன்பாக ஸ்மெர்டியாகோவ் திடீரெனத் தோன்றியவன், கனமான பித்தளை எடைகல்லைக் கொண்டு தலையில் ஓங்கி அடித்தான். ஃபியோதோர் இறந்த பிறகு, ஸ்மெர்டியாகோவ் மூவாயிரம் ரூபிளை எடுத்துக்கொண்டு, திமித்ரி அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சன்னலைப் பயன்படுத்தி வெளியேறுகிறான். இதனால், திமித்ரி ஏற்கெனவே தந்தையைக் கொல்லப்போவதாக மிரட்டியிருப்பதும்,பிரத்யேக சன்னலைப் பயன்படுத்தியதும், திமித்ரி மீது பழியைப் போடுவதற்கு ஏதுவாக அமைந்தது.
தந்தையின் கொலை நடந்த இடத்திற்குச் சென்ற திமித்ரி கைது செய்யப்படுகிறார். நீதிமன்றத்தில், திமித்ரி தான் கொலையாளி அல்ல என்று மறுக்கிறார்,
ஆனால் அவர் மீது இருந்த வெறுப்பாலும், காதல் நிராகரிக்கப்பட்டதாலும் ஆழமாகக் காயமடைந்த காத்யா, பழிவாங்கும் வேட்கையுடன் செயல்படுகிறாள்.
அவள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும்போது, திமித்ரி ஆத்திரத்தில் எழுதிய ஒரு கடிதத்தைச் சமர்ப்பிக்கிறாள். அதில் திமித்ரி, "நான் யாரைக் கொன்றாவது உன் பணத்தைத் திரும்பச் செலுத்துவேன்" என்று எழுதியிருந்தார்.
இந்தக் கடிதம், திமித்ரிக்குக் கொலை செய்யும் உள்நோக்கம் இருந்தது என்று நிரூபிப்பதாக அமைந்து, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட முக்கியக் காரணமாகிறது.
பின்னர், இவான் மாஸ்கோவிலிருந்து திரும்பியதும்,வேலைக்கார மகன் பாவல் ஸ்மெர்டியாகோவ் கொலையைச் செய்ததை ஒப்புக்கொள்ளச் செய்கிறான்.
பாவல் ஸ்மெர்டியாகோவ், தான் நம்பிய தத்துவத்தின் ஆதாரமாக இருந்த இவான், இப்போது தன்னைப் புறக்கணித்ததைக் கண்டதால், ஆழமான தனிமையையும் குற்ற உணர்வின் சுமைகளையும் தாங்க முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறான்.
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட திமித்ரியை, இவான் மற்றும் அலெக்ஸி இணைந்து, க்ருஷெங்காவுடன் ரஷ்யாவை விட்டுத் தப்பிக்க வைக்கத் திட்டமிடுகிறார்கள்.
திமித்ரிக்கு நீதிமன்றத்தால் சைபீரியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, அவருடைய சகோதரர்களான இவான் மற்றும் அலெக்ஸி இருவரும் இணைந்து, திமித்ரியையும் க்ருஷெங்காவையும் ரஷ்யாவை விட்டுப் பாதுகாப்பாகத் தப்பிக்க வைக்க ஒரு ரகசியத் திட்டத்தைத் தீட்டினார்கள்.
திமித்ரிக்குச் சைபீரியச் சிறைக்குச் செல்லும் வழியில் இருக்கும் ஒரு சிறிய நகரில், திமித்ரி நோய்வாய்ப்பட்டது போல நடிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகச் சிறை அதிகாரிகளுடன் ரகசியமாகப் பேசப்பட்டு, திமித்ரி அதிகாரிகளின் கவனத்திலிருந்து தப்பித்துச் செல்ல உதவி செய்வதற்காகப் பணம் கொடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, திமித்ரி அதிகாரப்பூர்வமாகச் சிறை முகாமிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்; மாறாக, அவர் தப்பிச் சென்றதாக மட்டுமே ஆவணங்களில் குறிக்கப்படும்.
இதற்கிடையில், இவான் போலியான கடவுச்சீட்டுகளையும் மற்றும் போதுமான பணத்தையும் ஏற்பாடு செய்தார். திமித்ரி உடல்நிலை காரணமாகத் தனி அறையில் வைக்கப்பட்டிருந்தபோது, க்ருஷெங்கா அவரைச் சந்தித்து, இரகசியமாக கண்காணிக்கப்படாத ஒரு வழியில் அவரை வெளியேற்றத் திட்டமிட்டனர். தப்பிக்கும் பயணத்திற்குப் பிறகு, திமித்ரியும் க்ருஷெங்காவும் சேர்ந்து அமெரிக்காவுக்குச் சென்று, அங்கு அடையாளம் தெரியாத ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்பதே அவர்களின் இறுதி இலக்காக இருந்தது.
தப்பிக்கும் பயணத்தின்போது, திமித்ரி ஒரு முக்கியமான முடிவை எடுக்கிறார். தான் இழைத்த பாவங்களில் மிக மோசமானது, ஒரு ஏழை மனிதனின் கௌரவத்தைச் சிதைத்ததுதான் என்று உணர்ந்து, அவர் முன்பு அவமானப்படுத்திய ஸ்னெகிரியோவ் மற்றும் நோய்வாய்ப்பட்டிருக்கும் இல்லுஷாவிடம் மன்னிப்புக் கேட்கச் செல்கிறார். ஒரு சிறுவனின் கருணை மூலம், திமித்ரி தன் பாவப் பிணைப்பிலிருந்து விடுதலையைப் பெற்று, தன் விடுதலைப் பயணத்தைத் தொடர்கையில் கதை நிறைகிறது