தேவர் மகன் திரைப்படத்தில் சக்திவேல் வயக்காட்டில் கடலைபயிர் பிடுங்கும் அழகிய காட்சி இது,கால்நடைகள் விரும்பி உண்ணும் தீவனம் இது.
சீமையில் பல ஆண்டுகள் படித்து முடித்து வருங்கால் hotelier மாமனார் வழிகாட்டுதலில்  chain of restaurant திறக்க இருந்த சக்தி , சின்னத்தூவலூரை நேசிக்கத்துவங்கிவிட்ட தருணத்தில் சரியாக இக்காட்சி வருகிறது,
 hotel management படித்தவர், தன் சாரட் வண்டி  குதிரைக்கு தீவனம் பிடுங்கும் அளவு கனிந்து விட்டார், பிடுங்கிய பயிரில் களையை களைவார், பசுமையை முகர்ந்தும் பார்த்தபடி மண்சாலைக்கு ஏறுகையில், அண்ணன் உருவத்துக்கு பொருத்தமில்லாத குதிரை வண்டியை ஓட்டியபடி வருவார், கடிதம் கொண்டு வருவதாக சொல்லி இறங்குவார்,எழுதப் படிக்காதவர் ஆதலால் கடிதத்தில் கமழும் செண்ட் மணம் வைத்து பானு எழுதியது என சொல்லி கடிதத்தை தருகையில் கடிதம் சக்தியிடமும், கீரை அண்ணனிடமும் கைமாறும், அண்ணன் கீரையை குதிரைக்கு தின்னத்தந்தபடியே, தனக்கு கள் இறக்குபவர்கள் கள் குடிக்க சுத்தமாக தருவதில்லை, கைநடுங்கும் போதாவது தரச் சொல்லு என்கிறார், சக்தி முடியவே முடியாது, வீட்டுக்கு பெரியவர்னு சொல்றேன், அண்ணியிடம் அண்ணன் குடியை நிறுத்திக் காட்ரேன்னு சொல்லிருக்கேன் என்றபடியே கடிதத்தை வாசிக்க,அது சாலைகுறுக்காக வேலிபோட்ட பழைய பரமசிவம் முகத்தில் மோதி அவரின் land locked plot வீட்டு வேலிக்கு உள்ளே பறந்து போய் விழும், பஞ்சவர்ணம் அதை தாவிப் பிடித்து கொண்டு வருகையில் தான் அமைத்த வேலி ,ஊர்பகை, ஒற்றை மகள் பஞ்சவர்ணம் திருமணம் என நறுக்கென அறிவித்து கடிதம் சக்தியிடம் ஒப்படைக்கப்படும்.
இதில் பொருத்தமே இன்றி தலைவாசல் விஜய் சாரட் வண்டியை ஓட்டி வருவார்,அவருக்கு ப்ளைமவுத்தில் ஏற உண்டான செருக்கு துளியும் இல்லை , காலங்காலையிலேயே உரம் வாங்கப் போகிறேன் என சுரம் வாங்கி வருவதற்கு இந்த குதிரை வண்டி வசதியாக உள்ளது.
இந்த குதிரை வண்டி  அவருடையது இல்லை ,சக்தியுடையது என்பதை நிறுவும் காட்சி உண்டு, முதல் காட்சியில் தம்பியை பார்க்க தூவலூர் ரயிலடி வரும் தலைவாசல் விஜய் சாரட் வண்டி இருக்கையில் இருந்து முன்னால் தள்ளப்பட்டு மீண்டும் இருக்கையில் அமர்வார், தம்பி சக்தி அதைப் பார்த்து கையால் இன்னும் பழக்கலையா? என சைகை செய்வார், இரு வலுவான பகையாளிகளை நிறுவ வேண்டி சக்தி மற்றும் மாயன் இரு பங்காளி கதாபாத்திரங்கள் தான் வலுவாக நிறுவப்பட்டிருக்கும், தலைவாசல் விஜய் அண்ணன் அவ்வளவு தான் , இக்கதாபாத்திரத்துக்கு எங்கும் பெயர் கூட வெளிப்படவில்லை ,
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
 
 
 
