மகாநதி திரைப்படத்தில் ஒவ்வோரு கதாபாத்திரங்களுக்கும் நதிகளின் பெயர் அல்லது புண்ணிய தீரங்களின் பெயர் ,நீர் தொடர்புடையை பெயர்கள்  மிக நுட்பமாக சூட்டப்பட்டதை எண்ணி வியக்கிறேன்.
பிரதான கதாபாத்திரங்களான கிருஷ்ணா, மகள்  காவேரி , மகன் பரணி, இறந்து போன  மனைவி நர்மதா, மாமியார் சரஸ்வதி, (my name is kaveri like the river kaveri ல் இப்பெயர்கள் வரும்) வருங்கால மனைவி யமுனா என அநேகம் பேர் அறிவோம்.
சோனாகாச்சியில் காவேரியை விடுதலை செய்ய சக விலைமாதர்களிடம் பணம் வசூல் செய்து தரும் அந்த பரதேவதையின் மகள் பெயர் ஜலஜா, நீரில் பூத்த தாமரை.
மஞ்சு (துளசி) கதாபாத்திரப் பெயரில் கிழக்கு சிக்கிம்  முதல் திபெத் போகும் வழியில் இமயமலை தொடரில் 13615 அடி உயரத்தில்  மஞ்சு ஏரி உள்ளது.
இதே போலவே யமுனா தந்தை பஞ்சாபகேசன் கதாபாத்திரம் கூட நதிகளை சடையாக கொண்ட சிவனைக் குறிப்பது தான், திருவையாறு என்பது திரு ஐ(ந்து) ஆறாகும் , இங்கே காவிரி ஐந்து கிளை  ஆறுகளாக பிரிந்து கடலில் சென்று கலக்கிறது, இங்கு உள்ள மிகப்பழமையான சிவன் கோயிலின் பெயர் ஐயாரப்பன் திருக்கோயில், ஐயாரப்பன் என்பது சமஸ்கிருதத்தில்  பஞ்சாபகேசன் ஆகும்.
திருவையாற்றில் தியாகராஜர் ஆராதனை உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
இது போல சிறைக்காவலர் முத்துசாமி பெயருக்கும் காவிரி தீரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு,  திருவாரூரில் பிறந்து  மணலியில் வாழ்ந்து எட்டயபுரத்தில் முக்தி அடைந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் பெயரை இந்த கதாபாத்திரத்துக்கு சூட்டப்பட்டிருந்தது.
பெண் தரகன் தனுஷ் கதாபாத்திரத்தின்  பெயர் கூட தனுஷ்கோடி தீரத்தை குறிக்கிறது, 
பசுந்தோல் போர்த்திய புலி 
பிள்ளைக்கறி தின்னும் பீடோஃபைல் கதாபாத்திரமான வெங்கடாசலம் கூட பத்ராசலம் போல கிழக்கு கோதாவரி நதி தீரம் தான்.
துலுக்கானம் என்ற பெயர் பழைய சென்னை வாசிகளுக்கு பரீட்சயமான பெயர் ஆகும்,  கோடம்பாக்கத்தில் புலியூர் சாலையில் ஆதி துலுக்காணத்தம்மன் கோயில் அமைத்துள்ளது, நூறு வருடங்களுக்கு முன்பு மாம்பலம் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது இந்த  உக்கிரமான அம்மன் தலை சிலைவடிவம், அதை ஆதி துலுக்கானத்தம்மன் என்று கோயில் கட்டி வழிபடுகின்றனர், அந்நாளில் மரத்தடியில் இருந்த அம்மன் சிலையை  இஸ்லாமிய பெண்மணி ஒருவர் மகனுக்கு அம்மை நோய்கண்டு  கண்பார்வை பறிபோய் விட, மனதார  வேண்டிக் கொண்டு பார்வையை திரும்பப் பெற்றார், இஸ்லாமியர் வழிபட்டு அம்மனின் மகிமை முதலில் ஊருக்கு வெளிப்பட்டதால் இந்த அம்மனுக்கு பெயர் ஆதி துலுக்கானத்தம்மன், இன்றும் பெரிய வழிபாட்டு தலமாக திகழ்கிறது,பழைய சென்னை வாசிகளுக்கு இந்தப்பெயர் ஆண் பெண் என இருபாலருக்கும் சூட்டப்பட்டது.