வயதான காலத்தில் மனித வாழ்க்கையின் அர்த்தம் என்னவாக இருக்கும்?,
இழந்த கனவுகளை மீண்டும் நோக்கிப் பயணிக்கும் துணிச்சல் எப்போது பிறக்கும் என்ற ஆழமான கேள்வியை எழுப்பும் ஒரு அற்புத படைப்புதான் 'அப்' UP ,2009 ,ஆம் ஆண்டு வெளியான படைப்பு.
அனிமேஷன் திரைப்படங்கள் வெறும் சிறுவர்களுக்கான கேளிக்கை சாதனம் மட்டுமே என்ற எண்ணத்தை முற்றிலும் உடைத்தெறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், மனித உணர்வுகளில் தொடுவானத்தைத் தொடுகிறது.
வாழ்க்கையின் வசந்த காலங்களையும், இழப்புகளின் வடுக்களையும் ஒருசேரத் தாங்கி நிற்கும் ஒரு முதியவரின் அக உலகத்தை மையமாகக் கொண்டு, பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் வகையில் இதன் தொடக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் தொடரும் கனவு, காதலால் செதுக்கப்படும் நினைவுகள், மற்றும் அந்த நினைவுகளை விட்டுப்பிரிய முடியாத மனப்போராட்டம் ஆகியவற்றை மிக நேர்த்தியாக விவாதிக்கிறது இதன் திரைக்கதை அமைப்பு.
படத்தின் கதையோட்டத்தைப் பற்றிய எந்த முன்முடிவுக்கும் பார்வையாளரை அனுமதிக்காமல், முதல் நிமிடத்திலிருந்தே கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு நம்மை ஒன்றிணையச் செய்கிறது இதன் கதை சொல்லும் முறை.
இயக்குநர் பீட் டாக்டர் மற்றும் பாப் பீட்டர்சன் ஆகியோரின் கூட்டு உருவாக்கத்தில் உருவாகியுள்ள இந்த அணுகுமுறை, ஒரு பெரியவர் மற்றும் ஒரு சிறுவனின் கதாபாத்திர உருவாக்கத்தின் மூலம் தலைமுறைகளைக் கடந்த ஒரு அழகான பிணைப்பைப் பேசுகிறது.
கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ள குரல் நடிப்பு இப்படத்திற்குப் மிகப்பெரிய பலம். வயதான கார்ல் ஃப்ரெட்ரிக்சன் (எட் ஆஸ்னர்) என்ற கதாபாத்திரத்தின் குரலில் வெளிப்படும் முரட்டுத்தனமும், அதற்குள் ஒளிந்திருக்கும் ஏக்கம் நிறைந்த அன்பும் பார்வையாளர்களை உடனடியாகக் கட்டிப்போடுகிறது.
அவருடன் வரும் ரஸ்ஸல் (ஜோர்டான் நாகாய்) என்ற துடிப்பான சிறுவனின் அப்பாவித்தனமான குரலும், சார்லஸ் முன்ட்ஸ் (கிறிஸ்டோபர் பிளம்மர்) மற்றும் டக் (பாப் பீட்டர்சன்) ஆகிய கதாபாத்திரங்களின் குரல் பதிவுகளும் ஒவ்வொரு உணர்ச்சியையும் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன.
மனித முகங்களின் சுருக்கங்கள் முதல் உடலசைவுகள் வரை ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் நுணுக்கமாகச் செதுக்கியுள்ள விதத்தில் கதாபாத்திர வடிவமைப்பு மிளிர்கிறது.
திரைப்படத்தின் தொழில்நுட்பப் புதுமை மற்றும் காட்சி அமைப்புகள் அனிமேஷன் உலகின் புதிய உச்சம்.
ஒரு வீட்டை விண்ணில் பறக்க வைக்கும் கற்பனையை, கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணமயமான காட்சிகளாக மாற்றியுள்ளனர்.
வெனிசுலாவின் நிஜமான மலைப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இயற்கைச் சூழல்கள், கதாபாத்திரங்களின் ஆடைகள், மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் கலை இயக்கம் ஆகியவை பார்வையாளருக்கு ஒரு புதிய உலகிற்குள் சென்ற உணர்வை அளிக்கின்றன.
இந்த ஒட்டுமொத்தக் காட்சி அனுபவத்தையும், மிகச் சரியான தருணங்களில் இணைக்கும் படத்தொகுப்பு, கதையின் நகர்வுக்குப் பெரும் துணையாக நிற்கிறது.
இசைக்கலைஞர் மைக்கேல் ஜியாச்சினோ அமைத்துள்ள பின்னணி இசை, இப்படத்தின் உயிர்நாடி என்றே கூறலாம். வார்த்தைகளே இல்லாத இடத்தில்கூட, இசையின் மூலம் மனித மனதின் ஆழமான துயரத்தையும் மகிழ்ச்சியையும் மிக எளிதாகக் கடத்திவிடுகிறது.
ஒலியமைப்பு மற்றும் திரைப்பட மொழி ஆகியவற்றின் நேர்த்தி, காட்சியின் உணர்ச்சியைப் பார்வையாளரின் நெஞ்சிற்குள் நேரடியாக இறக்குகிறது. காலப்பின்னணியை உணர்த்தும் நுட்பமான விவரங்களும், வண்ணங்களின் தேர்வும் படத்தின் உணர்ச்சி ஆழத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன.
இயக்குநரின் மனிதநேயப் பார்வை மற்றும் சமூகச் சிந்தனை ஆகியவை வெறும் பொழுதுபோக்கையும் தாண்டி, வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்ன என்பதைச் சிந்திக்க வைக்கின்றன.
நாம் தேடும் இலக்குகளை விட, கடந்து வந்த பாதையில் நாம் நேசித்த மனிதர்களுடன் பகிர்ந்த தருணங்களே வாழ்க்கையின் மிகப்பெரிய சாகசம் என்பதை உணர்த்தும் விதமாக இதன் கருப்பொருள் அமைந்துள்ளது.
இந்தத் தனித்துவமான அணுகுமுறையே உலகளாவிய விமர்சன வரவேற்பைப் பெறக் காரணமாக அமைந்தது.
அகாடமி விருதான ஆஸ்கர் விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படம் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்றதோடு, ஆஸ்கர் வரலாற்றிலேயே சிறந்த திரைப்படத்திற்கான முதன்மைப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட மிகச்சில அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்றாக வரலாற்றுச் சாதனை படைத்தது.
மேலும் பல்வேறு சர்வதேச விருதுகளைக் குவித்த இந்தப் படைப்பு, உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் தனக்கான இடத்தை என்றும் அழியாமல் தக்க வைத்துள்ளது.
வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தையும், நேசத்தின் மதிப்பையும், மனித உறவுகளின் அழகையும் மிக மென்மையாக உணர்த்தும் இந்தப் படம், ஒவ்வொருவரும் கண்டிப்பாகக் காண வேண்டிய ஒரு திரைக்காவியம்.
எந்த வயதினராக இருந்தாலும், திரையின் முன் அமரும்போது நம்மை அறியாமலேயே நம் கண்ணீரையும் புன்னகையையும் ஒருசேர வரவழைக்கும் சக்தி இதற்கு உண்டு.
படம் முடிந்த பின்னரும், மனதிற்குள் ஒரு கதகதப்பையும், புதுவிதமான நம்பிக்கையையும் விதைத்துச் செல்வதே இதன் உண்மையான வெற்றி.
இயக்குநர் பீட் டாக்டர், வாழ்க்கையின் சிக்கல்களில் இருந்து தப்பித்து தூரமாக ஓடிவிட வேண்டும் என்ற தன் தனிப்பட்ட எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு 2004-இல் இந்த படத்தின் கதையை முதன்முதலில் உருவாக்கத் தொடங்கினார்.
தொடக்கத்தில் ஒரு வேற்றுகிரகத்தில் மிதக்கும் நகரம் மற்றும் இரண்டு சகோதரர்களுக்கு இடையேயான கதையாகவே இது திட்டமிடப்பட்டது.
பின்னர், மிதக்கும் நகரத்திற்குப் பதிலாக மிதக்கும் வீடு என்றும், ஒரே ஒரு முதியவர் மட்டுமே அதில் வாழ்கிறார் என்றும் கதையை மாற்றியமைத்தனர்.
கார்ல் வீட்டை காற்றில் பறக்கவிட உண்மையான கணக்கீட்டின்படி சுமார் 2.6 கோடி பலூன்கள் தேவைப்படும் என்றாலும், திரையில் அழகாகவும் தெளிவாகவும் தெரிய வேண்டும் என்பதற்காக 10,297 பலூன்களை மட்டுமே அனிமேட்டர்கள் பயன்படுத்தினர்.
இப்படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் குரல் தேர்வுகளுக்குப் பின்னால் பல ஆச்சரியங்கள் ஒளிந்துள்ளன. கார்ல் ஃப்ரெட்ரிக்சன் கதாபாத்திரத்தின் சதுர வடிவத் தோற்றம் அவரது பிடிவாதத்தையும் அடைபட்ட மனநிலையையும் குறிக்கவும், சிறுவன் ரஸ்ஸலின் உருண்டையான தோற்றம் பலூனைப் போன்ற அவனது துடிப்பான தன்மையைக் காட்டவும் வடிவமைக்கப்பட்டது.
கார்ல் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்களான ஸ்பென்சர் ட்ரேசி மற்றும் வால்டர் மாத்தாவ் ஆகியோரின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டது.
சிறுவன் ரஸ்ஸலுக்கு குரல் கொடுத்த ஜோர்டான் நாகாய், உண்மையில் தன் சகோதரனின் குரல் தேர்வுக்கு வந்த இடத்தில் எதிர்பாராமல் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், படத்தின் தொடக்கத்தில் வரும் எலியின் சிறுவயது கதாபாத்திரத்திற்கு இயக்குநர் பீட் டாக்டரின் மகளான எலி டாக்டரே குரல் கொடுத்துள்ளார்.
காட்சி அமைப்புகளின் உண்மைத்தன்மைக்காக பிக்சார் குழுவினர் மேற்கொண்ட முயற்சிகள் பிரமிக்க வைப்பவை.
இயக்குநர் மற்றும் 11 அனிமேட்டர்கள் அடங்கிய குழு, வெனிசுலா நாட்டில் உள்ள 'மோன்டே ரொரைமா' என்ற மேட்டுப்பகுதிக்கு நேரில் சென்று மூன்று நாட்கள் தங்கி, அங்குள்ள பாறைகள், தாவரங்கள் மற்றும் இயற்கை சூழல்களை நேரடியாக வரைந்து பார்த்து ஆராய்ச்சி செய்தனர்.
அதேபோல, படத்தில் வரும் கேவின் என்ற அபூர்வப் பறவையின் வண்ணங்கள் மற்றும் அசைவுகளை அனிமேஷன் செய்வதற்காக கலிபோர்னியாவில் உள்ள மிருகக்காட்சிசாலைக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.
நாய்களின் குழு நடத்தை மற்றும் தொடர்புகளைத் துல்லியமாகக் காட்ட ஒரு நாய் நடத்தை நிபுணரின் ஆலோசனைகளும் பெறப்பட்டன.
திரைப்பட வரலாற்றில் 'அப்' திரைப்படம் படைத்த சாதனைகளும், அதன் பின்னணியில் உள்ள குறியீடுகளும் மிக முக்கியமானவை.
புகழ்பெற்ற கான. திரைப்பட விழாவைத் தொடங்கி வைத்த முதல் அனிமேஷன் திரைப்படம் மற்றும் முதல் 3D திரைப்படம் இதுவே ஆகும்.
படத்தில் வரும் கார்லின் மனைவி எலி தனது சிறுவயது முதல் இறக்கும் வரை பேசும் எந்தக் காட்சியிலும் கார்ல் அவரிடம் மறுபேச்சு பேசுவதே இல்லை என்பதும், டிஸ்னி-பிக்சார் திரைப்படங்களில் பெற்றோர் விவாகரத்து பற்றிய குறிப்பு மறைமுகமாக இடம்பெற்ற முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்க தகவல்களாகும்.
===============================
படத்தின் கதை:-
எட்டு வயதான கார்ல் ஃப்ரெட்ரிக்சன், புகழ்பெற்ற சாகசப்பயணி சார்லஸ் முன்ட்ஸ் (கிறிஸ்டோபர் பிளம்மர்) என்பவரைத் தன் முன்மாதிரியாகக் கொண்டு ஆராதிக்கிறான்.
சார்லஸ் முன்ட்ஸ், தென்னமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டின் பேரடைஸ் ஃபால்ஸ் என்ற இடத்திலிருந்து கொண்டு வந்த ஒரு பெரிய பறவையின் எலும்புக்கூடு போலியானது என்று குற்றம் சாட்டப்பட்டு, அவமதிப்புக்கு ஆளாகிறார்.
இதனால் கோபமடையும் முன்ட்ஸ், அந்தப் பறவையின் உயிருள்ள மாதிரியைக் கொண்டுவரும் வரை தான் திரும்ப மாட்டேன் என்று சபதம் செய்து மீண்டும் பேரடைஸ் ஃபால்ஸுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
இந்தச் சமயத்தில், கார்ல் எல் என்ற மற்றொரு சிறுமியைச் சந்திக்கிறான். எலியும் முன்ட்ஸின் தீவிர ரசிகையாக இருக்கிறாள்.
அவளிடம் ஒரு ரகசிய சாகசப் புத்தகம் இருக்கிறது. ஒரு கைவிடப்பட்ட பழைய வீட்டைத் தன் கிளப் ஹவுஸாக வைத்திருக்கும் எலி, பேரடைஸ் ஃபால்ஸுக்குத் தன் கிளப் ஹவுஸைக் கொண்டு செல்ல வேண்டும், அங்கே சாகசங்கள் செய்ய வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவைச் சிறுவன் கார்லிடம் பகிர்ந்து கொள்கிறாள்.
காலப்போக்கில் கார்லும் எலியும் வளர்ந்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
எலியின் பழைய கிளப் ஹவுஸைப் புதுப்பித்து அங்கேயே குடியேறுகிறார்கள்.
கார்ல் மிருகக்காட்சிசாலையில் பலூன் விற்பனையாளராகவும், எலி அங்கே மிருகக்காட்சிசாலைப் பராமரிப்பாளராகவும் வேலை செய்கிறார்கள்.
இருவரும் மகிழ்ச்சியாக வாழும் சூழலில், எலிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு, அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை என்ற கசப்பான உண்மை தெரியவருகிறது.
இதனால் வேதனையடையும் தம்பதியினர், தங்கள் கவனத்தைப் பேரடைஸ் ஃபால்ஸுக்குச் செல்லும் கனவின் பக்கம் திருப்புகிறார்கள்.
அதற்காக ஒரு உண்டியலில் பணம் சேர்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால், காரின் டயர் வெடிப்பது, வீட்டின் கூரை பழுதுபார்ப்பது போன்ற அன்றாட அவசரச் செலவுகளால் அந்தச் சேமிப்புப் பணத்தை மீண்டும் மீண்டும் எடுக்க வேண்டியதாகிறது.
பல ஆண்டுகள் உருண்டோடுகின்றன. இப்போது வயதான கார்ல், தன் மனைவி எலியை ஆச்சரியப்படுத்த எண்ணி, வெனிசுலா செல்வதற்கான பயணச்சீட்டுகளை ரகசியமாக வாங்குகிறார்.
ஆனால், அதை எலியிடம் கொடுப்பதற்குள் எலி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
எலி இறப்பதற்கு முன், தன் சாகசப் புத்தகத்தை கார்லிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் துறக்கிறார்.
இப்போது எழுபதுகளின் பிற்பகுதியில் இருக்கும் கார்ல் (எட் ஆஸ்னர்), எலியின் நினைவாக அந்த வீட்டிலேயே தனிமையில் வாழ்கிறார்.
அவரைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் நவீனக் கட்டிடங்களாக மறுவளர்ச்சி அடைகின்றன.
கார்ல் தன் வீட்டை விற்க மறுத்து பிடிவாதமாக வாழ்கிறார். ஒரு நாள், கட்டுமானப் பணியாளர் ஒருவர் கார்லின் தபால் பெட்டியைத் தவறுதலாகச் சேதப்படுத்திவிட, ஆத்திரமடையும் கார்ல் அந்தப் பணியாளரைத் தடியால் அடித்துக் காயப்படுத்துகிறார்.
இந்தச் சம்பவத்தால், நீதிமன்றம் கார்லை முதியோர் இல்லத்திற்கு மாறுமாறு உத்தரவிடுகிறது.
ஆனால், முதியோர் இல்லத்திற்குச் செல்ல விரும்பாத கார்ல், எலிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடிவு செய்கிறார்.
தான் வேலை செய்த அனுபவத்தைப் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான ஹெலியம் பலூன்களைத் தன் வீட்டின் மீது கட்டி, வீட்டை அப்படியே காற்றில் பறக்கவிட்டு பேரடைஸ் ஃபால்ஸ் நோக்கிப் பயணிக்கிறார்.
வீடு வான்வெளியில் பறந்துகொண்டிருக்கும்போது, கார்ல் ஒரு கதவு தட்டும் சப்தத்தைக் கேட்கிறார்.
அங்கே, முதியோருக்கு உதவி செய்து தன் கடைசி தகுதி பேட்ஜைப் பெற முயலும் ரஸ்ஸல் (ஜோர்டான் நாகாய்) என்ற சாகசச் சிறுவன், எதிர்பாராத விதமாக வீட்டின் முன் வராண்டாவில் சிக்கிக்கொண்டது தெரியவருகிறது.
கார்ல் வீட்டைத் தரையிறக்கி ரஸ்ஸலைத் திருப்பி அனுப்ப முயல்வதற்குள், ஒரு பெரிய புயல் வீட்டைத் தாக்குகிறது.
புயல் வீட்டை அடித்துச் சென்று, வெனிசுலாவில் உள்ள பேரடைஸ் ஃபால்ஸுக்கு எதிரே உள்ள ஒரு மேட்டுப்பகுதியில் தரையிறக்குகிறது.
கார்லும் ரஸ்ஸலும் காற்றில் மிதக்கும் வீட்டைத் தங்களோடு கயிறுகளால் பிணைத்துக் கொண்டு, அந்த மேட்டுப்பகுதியின் வழியாக பேரடைஸ் ஃபால்ஸை நோக்கி நடந்து இழுத்துச் செல்கிறார்கள்.
வழியில், ரஸ்ஸல் 'கேவின்' என்று பெயரிடும் ஒரு பெரிய பறக்கும் தன்மையற்ற வண்ணப் பறவையைச் சந்திக்கிறார்கள் (அந்தப் பறவை பிற்பாடு பெண் பறவை என்பது தெரியவருகிறது).
தொடர்ந்து, டக் (பாப் பீட்டர்சன்) என்ற தங்க நிற நாய் ஒன்றைச் சந்திக்கிறார்கள். டக் கழுத்தில் இருக்கும் சிறப்புச் சாதனம், அதன் எண்ணங்களை மனித மொழியில் மொழிபெயர்க்கிறது.
அந்த விலங்குகளைத் தவிர்க்க கார்ல் முயன்றாலும், அவை இருவருடனும் சேர்ந்துகொள்கின்றன.
திடீரென, சிறப்பு மொழிபெயர்ப்புச் சாதனங்களை அணிந்த பிற நாய்கள் அடங்கிய ஒரு படை அவர்களைச் சூழ்கிறது.
அந்த நாய்களின் எஜமானர், கார்லின் சிறுவயது வழிகாட்டியான முதியவர் சார்லஸ் முன்ட்ஸ் என்பது தெரியவருகிறது.
முன்ட்ஸ் அவர்களைத் தனது பெரிய ஆகாயக்கப்பலுக்கு அழைத்து விருந்தளித்து, தான் பல ஆண்டுகளாக அந்த அபூர்வப் பறவையைப் பிடிக்க முயல்வதைப் பற்றிப் பேசுகிறார்.
ஆனால், முன்ட்ஸுக்கு அந்தப் பறவையைப் பிடிப்பதில் பெரும் வெறி பிடித்துள்ளதையும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறியிருப்பதையும் கார்ல் உணர்கிறார்.
ரஸ்ஸல் அந்தப் பறவையின் எலும்புக்கூடு கேவின் போலவே இருப்பதைச் சுட்டிக்காட்டும்போது முன்ட்ஸ் சந்தேகமடைகிறார். பறவையைத் தேடி வந்த மற்ற பயணிகளைத் தான் கொன்றதாக முன்ட்ஸ் வெளிப்படையாகக் கூறும்போது கார்ல் அதிர்ச்சியடைகிறார்.
கார்ல், ரஸ்ஸல், டக் மூவரும் தப்பியோட, முன்ட்ஸின் நாய்கள் அவர்களைத் துரத்துகின்றன.
இந்த மோதலில் கேவினின் காலில் காயம் ஏற்படுகிறது.
கேவின் தன் குஞ்சுகளின் குரலைக் கேட்டு அழுவதைக் கண்டு இரக்கப்படும் கார்ல், அதை அதன் வீட்டிற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஒப்புக்கொள்கிறார்.
ஆனால், முன்ட்ஸ் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து கேவினைக் கூண்டில் அடைக்கிறார்.
மேலும் கார்லின் வீட்டிற்குத் தீ வைக்கிறார். வீட்டைக்காப்பதா அல்லது கேவினைக் காப்பதா என்ற நிலை வரும்போது, கார்ல் தன் வீட்டைத் தீயிலிருந்து காப்பாற்றத் தேர்ந்தெடுக்கிறார்.
இதனால் முன்ட்ஸ் கேவினைக் கடத்திச் செல்கிறார். இதைக் கண்டு ஏமாற்றமடையும் ரஸ்ஸல், கார்ல் மீது இருந்த மரியாதையை இழக்கிறான்.
மனமுடைந்த கார்ல், தன் வீட்டிற்குள் சென்று எலியின் சாகசப் புத்தகத்தைத் திறக்கிறார்.
அதில் எலி தன் வாழ்நாளின் புகைப்படங்களை ஒட்டி, கடைசிப் பக்கத்தில் "இந்தப் அழகான சாகசப் பயணத்திற்கு நன்றி – இப்போது நீ புதிய சாகசத்தைத் தொடங்கு!" என்று எழுதியிருப்பதைப் பார்க்கிறார்.
எலியின் வார்த்தைகளால் புத்துணர்ச்சி பெறும் கார்ல், ரஸ்ஸலைக் காப்பாற்ற வெளியே வருகிறார்.
ஆனால், அதற்குள் ரஸ்ஸல் சில பலூன்களையும் இலை வீசும் இயந்திரத்தையும் பயன்படுத்தி கேவினைக் காப்பாற்றத் தனியாகப் பறந்து சென்றிருப்பது தெரியவருகிறது.
கார்ல் தன் வீட்டில் உள்ள கனமான பொருட்களை வெளியே வீசி வீட்டின் எடையைக் குறைத்து, மீண்டும் வீட்டைப் பறக்கவைத்து ரஸ்ஸலைப் பின்தொடர்கிறார்.
ரஸ்ஸல் முன்ட்ஸின் ஆகாயக்கப்பலை அடைகிறான், ஆனால் முன்ட்ஸின் நாய்களிடம் சிக்கிக்கொள்கிறான்.
அதே நேரத்தில், வீட்டிற்குள் ஒளிந்திருந்த டக் உடன் வரும் கார்ல், ஆகாயக்கப்பலில் ஏறி ரஸ்ஸலையும் கேவினையும் மீட்கிறார்.
முன்ட்ஸ் அவர்களைத் துரத்தி வந்து, கார்லின் வீட்டிற்குள் ரஸ்ஸல், கேவின், டக் ஆகியோரைச் சிறைபிடிக்கிறார்.
கார்ல் அவர்களைச் சமயோசிதமாகக் காப்பாற்றுகிறார். அதேநேரம், பலூன் கயிறுகளில் கால் சிக்கி முன்ட்ஸ் ஆகாயக்கப்பலில் இருந்து கீழே விழுந்து உயிரிழக்கிறார்.
கார்லின் வீடு பலூன்களை இழந்து மேகங்களுக்கு நடுவே கீழே இறங்கி மறைந்துபோகிறது.
கார்ல், டக், ரஸ்ஸல் மூவரும் கேவினை அதன் குஞ்சுகளுடன் சேர்த்து வைக்கிறார்கள்.
பின்னர், முன்ட்ஸின் ஆகாயக்கப்பலை இயக்கி அமெரிக்காவிற்குத் திரும்புகிறார்கள்.
காட்டுச்சாகசச் சிறுவர் அமைப்பின் விழாவில், ரஸ்ஸலுக்குப் பதக்கம் வழங்கும் நிகழ்வு நடக்கிறது. கார்ல் மேடையேறி, எலி சிறுவயதில் தனக்கு அளித்த பாட்டில் மூடியை ரஸ்ஸலுக்கு "எலி பேட்ஜ்" ஆக அணிவித்து அவனைக் கௌரவிக்கிறார்.
கார்லும் ரஸ்ஸலும் டக் உடன் சேர்ந்து புதிய உறவைத் தொடங்குவதாகக் கதை நிறைவடைகிறது.
அதேவேளையில், கார்லுக்குத் தெரியாமல், காற்றில் மிதந்து சென்ற அவருடைய வீடு பேரடைஸ் ஃபால்ஸ் அருவிக்கு மேலேயே சரியாகத் தரையிறங்கி, எலிக்குக் கொடுத்த வாக்கைப் பூர்த்தி செய்திருப்பதும் நமக்கு காட்டப்படுகிறது.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்இரண்டாம்நூறு
#கீதப்ப்ரியன்ஹாலிவுட்