"போஹிமியன் ராப்சோடி" 2018 ஆம் ஆண்டு வெளியான இசை சார்ந்த வாழ்க்கை வரலாற்றுச் சித்திரம்.
பிரிட்டனின் புகழ்பெற்ற ராக் இசைக்குழுவான குயீன் மற்றும் அதன் முதன்மைப் பாடகர் பிரெடி மெர்குரியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் மீண்டெழுதலையும் இப்படம் திரையில் கொண்டு வந்துள்ளது.
பிரெடி மெர்குரியின் மூதாதையர்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இவரது தந்தை போமி புல்சாரா மற்றும் தாய் ஜெர் புல்சாரா ஆகிய இருவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த சான்சிபார் தீவிற்குப் குடிபெயர்ந்தனர். அங்கேயே பாரோக் புல்சாரா பிறந்தார்.
அவர் பின்பற்றிய மதம் ஜோராஸ்ட்ரியம்.
பிரெடி மெர்குரியின் இறுதிச் சடங்குகளும் அவரது மத ஆச்சாரப்படியே லண்டனில் ஒரு ஜோராஸ்ட்ரிய மத குருவால் நடத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1970 இல் அந்தக் குழு உருவானது முதல் 1985 இல் வெம்ப்லி மைதானத்தில் அவர்கள் நிகழ்த்திய உலகப் புகழ்பெற்ற லைவ் எய்ட் இசை நிகழ்ச்சி வரையிலான காலத்தை இந்தப் படம் ஒரு காவியமாகப் பதிவு செய்துள்ளது.
ஒரு சாதாரண மனிதன் உலகளாவிய நட்சத்திரமாக மாறுகையில் அவனது தனிப்பட்ட வாழ்வின் வலிகளையும் குழப்பங்களையும் படம் நேர்மையுடன் அணுகியுள்ளது.
இப்படத்தின் அடிநாதம் ஒரு கலைஞனின் அசாத்தியமான ஆளுமைச் சுதந்திரம் , அந்தச் சுதந்திரத்தைச் தக்கவைக்க அவன் கொடுக்கும் விலை பற்றியதாகும்.
சமூகம் தீர்மானித்த ஒழுக்க முறைகள், இசை நிறுவனங்கள் விதித்த வணிகச் சட்டங்கள் மற்றும் குடும்பம் எதிர்பார்த்த பாரம்பரியம் ஆகிய அனைத்தையும் பிரெடி மெர்குரி தனது இசையாலும் வாழ்வாலும் சவாலுக்கு உட்படுத்துகிறார்.
எவராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு காட்டாற்று வெள்ளம் போலத் தனது கலைத்திறனை வெளிப்படுத்தும் அதே வேளையில், அந்தத் தனித்துவம் அவரைப் பொதுமக்களிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் எப்படி அந்நியப்படுத்துகிறது என்பதை இப்படம் மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது.
வெற்றி என்பது வெறும் கைதட்டல்களோ அல்லது பணமோ அல்ல, அது ஒரு மனிதன் தனது பலவீனங்களைக் கூடத் தனது பலமாக மாற்றிக் கொள்வதில் தான் இருக்கிறது என்பதை இப்படம் உணர்த்துகிறது.
பிரெடி தனது குரல் குறைபாடாகக் கருதப்படக்கூடிய நான்கு மேலதிகப் பற்களைத் தனது இசைத்திறனின் ரகசியமாகக் கருதுவதும், மரணம் தன்னை நெருங்குவதை உணர்ந்த பின்பும் தனது கலைப்பயணத்தை நிறுத்தாமல் ஒரு மாபெரும் போராட்டமாகத் தொடர்வதும் இப்படத்தின் ஆழமான தத்துவமாகும்.
இது ஒரு மனிதனின் சாதனைப் பயணம் என்பதை விட, ஒருவன் தனது குறைகளையும் பிழைகளையும் நேர்மையுடன் ஏற்றுக்கொண்டு, அந்த உண்மையை இசையாக மாற்றி உலகையேத் தன் பக்கம் திரும்பச் செய்த நேர்மையின் வெற்றி ஆகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவன் தனது வேர்களைத் தொலைத்துவிட்டுப் புகழைத் தேடி அலையும்போது ஏற்படும் வீழ்ச்சியையும், மீண்டும் தனது வேர்களை குழு மற்றும் குடும்பம் கண்டடையும்போது பெறும் எழுச்சியையும் இப்படம் ஒப்பிட்டுக் காட்டுகிறது.
பிரெடி இறுதியில் அடையும் வெற்றி இசை சார்ந்தது மட்டுமல்ல, அது தனது அகங்காரத்தைக் கடந்து தன்னை நேசிக்கும் மனிதர்களை அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு ஆன்மீகப் பயணம்.
தான் ஒரு சாமானியன் அல்ல, உலகிற்கு மகிழ்ச்சியை வழங்க வந்த ஒரு 'விதிவிலக்கு' என்பதை உணர்ந்த ஒரு மனிதனின் கம்பீரமான இறுதி முழக்கமே இத்திரைப்படத்தின் உண்மையான அடிநாதமாகும்.
உலக சினிமா அரங்கில் இப்படம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியது. 52 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் உலகளவில் 910 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இசை சார்ந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களில் இன்றுவரை ஒரு பிரம்மாண்ட வெற்றியாக இது கருதப்படுகிறது.
குறிப்பாக ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளில் இப்படம் ஒரு பெரும் அலையை உருவாக்கியது.
சீனாவில் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டாலும் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்து ஒரு கலாச்சார நிகழ்வாகவே இது மாறியது.
உலக சினிமா விமர்சகர்களால் இப்படம் ஒரு கலவையான வரவேற்பைப் பெற்றது. ராமி மாலெக்கின் அபாரமான நடிப்பும் படத்தின் இசை கோவைகளும் ஒட்டுமொத்தமாகப் பாராட்டப்பட்டன.
ஆனால் பிரெடி மெர்குரியின் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான நிகழ்வுகளைத் திரைக்கதை வசதிக்காக மாற்றி அமைத்தது மற்றும் அவரது தனிப்பட்ட உறவுகளைச் சித்தரித்த விதம் குறித்து சில விமர்சகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
ஒரு ஆவணப்படமாக இல்லாமல் ஒரு வணிக ரீதியான திரைப்படமாக இது ஒரு மெல்லிய கோட்டில் பயணிப்பதாகப் பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
இயக்கத்தில் இப்படம் பல சவால்களைச் சந்தித்தது. முதலில் பிரையன் சிங்கர் இப்படத்தை இயக்கத் தொடங்கினார்.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருந்தபோது ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அவர் நீக்கப்பட்டு டெக்ஸ்டர் பிளெட்சர் மீதமுள்ள பகுதிகளை இயக்கினார்.
இருப்பினும் இயக்குநர்கள் சங்க விதிகளின்படி பிரையன் சிங்கர் பெயரே இயக்குநராகப் படத்தில் இடம்பெற்றது.
சிக்கலான தயாரிப்புப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் திரைக்கதையில் ஒருமைப்பாட்டை இவர்களது கூட்டு முயற்சி கொண்டு வந்தது.
லண்டனின் பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படம் ஒவ்வொரு காட்சியிலும் நம்பகத்தன்மையைக் கொண்டுவர முயன்றது.
1985 ஆம் ஆண்டு நடைபெற்ற லைவ் எய்ட் கச்சேரியை மீண்டும் உருவாக்க ஒரு பழைய விமான தளத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டது.
குயீன் குழுவின் உண்மையான இசைக்கலைஞர்களான பிரையன் மே மற்றும் ரோஜர் டெய்லர் ஆகியோர் ஆலோசகர்களாகப் பணியாற்றியது படத்தின் காட்சி அமைப்பு மற்றும் இசை நுணுக்கங்களுக்கு அதிக வலு சேர்த்தது.
ஆயிரக்கணக்கான ரசிகர்களைத் திரையில் காட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டன.
2018 அக்டோபரில் லண்டனில் உள்ள வெம்ப்லி அரங்கில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.
திரையரங்குகளில் ரசிகர்கள் பாடல்களைக் கூடவே பாடி மகிழும் வகையில் சிறப்புத் திரையிடல்களும் பல நாடுகளில் நடத்தப்பட்டன.
படத்தின் வெற்றி குயீன் இசைக்குழுவின் பழைய பாடல்கள் மீண்டும் உலகளாவிய இசைப் பட்டியல்களில் முதலிடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.
நடிப்பில் ராமி மாலெக் ஒரு புதிய சரித்திரம் படைத்தார். பிரெடி மெர்குரியின் மேடை மேனரிசங்கள், அவரது உடல் மொழி மற்றும் பேச்சுத் திறன் என அனைத்தையும் அப்படியே பிரதிபலித்தார்.
இதற்காக அவர் பல மாதங்கள் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு இணையாக லூசி பாய்ண்டன் மேரி ஆஸ்டினாக மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.
கிதார் கலைஞர் பிரையன் மேயாக க்விலிம் லீ நடித்தது குயீன் ரசிகர்களுக்கு ஒரு நிஜமான அனுபவத்தைக் கொடுத்தது.
இசையே இந்தப் படத்தின் ஆன்மாவாகத் திகழ்கிறது. குயீன் குழுவின் புகழ்பெற்ற பாடல்களான போஹிமியன் ராப்சோடி, வி வில் ராக் யூ மற்றும் வி ஆர் தி சேம்பியன்ஸ் போன்றவை திரையரங்குகளில் ஒரு அதிர்வை ஏற்படுத்தின.
பிரெடி மெர்குரியின் உண்மையான குரல் பதிவுகளுடன் மார்க் மார்டெல் என்பவரின் குரலும் இணைந்து பயன்படுத்தப்பட்டது.
படத்தின் ஒலிப்பதிவு மற்றும் ஒலிச் சேர்க்கை ஆகியவை ரசிகர்களுக்கு ஒரு நேரடி இசை கச்சேரியைக் காண்பது போன்ற உணர்வை வழங்கின.
விருதுகள் வரிசையில் இப்படம் ஆஸ்கர் மேடையில் ஒரு மாபெரும் வெற்றியைக் கண்டது. ராமி மாலெக் சிறந்த நடிகருக்கான அகாடமி விருதைப் பெற்றார்.
இது தவிர சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலித்தொகுப்பு மற்றும் சிறந்த ஒலிச் சேர்க்கை என மொத்தம் நான்கு ஆஸ்கர் விருதுகளை இப்படம் அள்ளியது.
கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் என முக்கியமான விருதுகளை வென்று ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.
முதலில் இப்படத்தில் பிரெடி மெர்குரியாக நடிக்க சாசா பேரன் கோகன் ஒப்பந்தமானார், ஆனால் அவருக்கும் இசைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர் விலகினார்.
அதன் பின்னரே ராமி மாலெக் தேர்வு செய்யப்பட்டார். ராமி மாலெக் மிஸ்டர் ரோபோட் எனும் தொடரில் நடித்ததைப் பார்த்த தயாரிப்பாளர்கள், அவரது கண்கள் பிரெடியின் கண்களைப் போலவே தீவிரம் கொண்டிருப்பதாகக் கருதி அவரைத் தேர்ந்தெடுத்தனர்.
பிரெடியாக மாறுவதற்காக ராமி மாலெக் தனது பற்களின் அமைப்பை மாற்றிக்கொள்ளும் வகையில் பிரத்யேகப் செயற்கைப் பற்களைப் பொருத்திக்கொண்டு பல மாதங்கள் பயிற்சி செய்தார்.
மேடையில் பிரெடியின் தனித்துவமான அசைவுகளைக் கொண்டுவர அவர் ஒரு நடன இயக்குநருக்குப் பதிலாக ஒரு உடல் அசைவுப் பயிற்சியாளரை நியமித்துக்கொண்டார்.
படத்தின் இறுதிக்காட்சியான லைவ் எய்ட் கச்சேரியை மீண்டும் உருவாக்கப் படக்குழுவினர் காட்டிய மெனக்கெடல் பிரமிக்கத்தக்கது. லண்டனுக்கு அருகிலுள்ள ஒரு பழைய விமான தளத்தில் 1985 ஆம் ஆண்டு இருந்த அதே வெம்ப்லி மைதானத்தின் மேடை மிகத் துல்லியமாக மறுஉருவாக்கம் செய்யப்பட்டது.
படப்பிடிப்பின் முதல் நாள் இந்த மாபெரும் கச்சேரியின் காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்த 20 நிமிட இசை நிகழ்ச்சியை அப்படியே தத்ரூபமாகப் படம்பிடிக்க சுமார் நூற்றுக்கணக்கான கூடுதல் நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
அவர்கள் ஒவ்வொருவரையும் 360 கோணத்தில் டிஜிட்டல் ஸ்கேன் செய்து, பின் கணினி தொழில்நுட்பம் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூட்டமாகத் திரையில் காட்டினர்.
குயீன் இசைக்குழுவின் உண்மையான ஆவணக் காப்பாளர் கிரெக் ப்ரூக்ஸ் ஒவ்வொரு காட்சியிலும் இடம்பெற்ற பொருட்கள் மற்றும் சூழல்கள் 1970களில் இருந்தது போலவே இருப்பதை உறுதி செய்ய மாதக்கணக்கில் பணியாற்றினார்.
திரையில் வரும் கிதார் கலைஞர் பிரையன் மேயைப் பார்த்த நிஜ பிரையன் மே, தனது சொந்த உருவத்தையே கண்ணாடியில் பார்ப்பது போல இருப்பதாக வியந்து பாராட்டினார்.
இப்படத்தில் பிரெடியின் குரலுக்காக அவரது பழைய பாடல்களின் பதிவுகளுடன் கனடா நாட்டுப் பாடகர் மார்க் மார்டெலின் குரலும் கலந்து பயன்படுத்தப்பட்டது.
ராமி மாலெக் இப்படத்திற்காகப் பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டதோடு, பிரெடி மெர்குரியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அவரது தங்கை காஷ்மீராவிடமும் நீண்ட உரையாடல்களை மேற்கொண்டார்.
இத்தகைய நுணுக்கமான உழைப்பே இப்படத்தை ஒரு உலகத்தரமான படைப்பாக மாற்றியது.
இத்திரைப்படத்தில் பிரெடி மெர்குரியின் தனித்துவமான மேடை அசைவுகளை மறுஉருவாக்கம் செய்ய ராமி மாலெக் புகழ்பெற்ற நடிகை லிசா மின்னெல்லியின் பழைய காணொளிகளை உற்று நோக்கினார்.
பிரெடி மெர்குரிக்கு லிசாவின் நடன பாணி மீது இருந்த தீராத ஈர்ப்பே இதற்குக் காரணமாக அமைந்தது. படப்பிடிப்பு தளம் முழுவதும் வரலாற்று நம்பகத்தன்மை நிலவ வேண்டும் என்பதற்காக குயீன் குழுவின் உண்மையான ஆவணக் காப்பாளர் ஒவ்வொரு சிறிய பொருளையும் துல்லியமாகச் சரிபார்த்தார்.
1985 ஆம் ஆண்டு லைவ் எய்ட் மேடையில் வைக்கப்பட்டிருந்த அதே நிறத்திலான குளிர்பானக் கோப்பைகள் முதல் பியானோ மீது படிந்திருந்த தூசு வரை அனைத்தும் தத்ரூபமாகத் திரையில் கொண்டு வரப்பட்டன.
படத்தின் படத்தொகுப்பாளர் ஜான் ஓட்மேன் ஒரு சுவாரசியமான சவாலைச் சந்தித்தார். படத்தின் சில பகுதிகளை பிரையன் சிங்கரும் மீதமுள்ள பகுதிகளை டெக்ஸ்டர் பிளெட்சரும் இயக்கியதால் இரண்டு வெவ்வேறு பாணிகளில் இருந்த காட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் இணைக்க அவர் பெரும் மெனக்கெடலை தந்தார்.
இந்த உழைப்பிற்கு அங்கீகாரமாகவே அவருக்குச் சிறந்த படத்தொகுப்பிற்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் ரசிகர்கள் திரையரங்குகளில் குயீன் குழுவின் பாடல்களை எழுந்து நின்று பாடும் பாணி ஒரு மிகப்பெரிய அலையாகப் பரவியது.
இப்படத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட செயற்கைப் பற்களைப் படப்பிடிப்பு முடிந்த பிறகு ராமி மாலெக் தங்கம் பூசச் செய்து ஒரு நினைவாகத் தன்னிடம் வைத்துக் கொண்டார். 121 மில்லியன் டாலர் விளம்பரச் செலவில் உருவான இந்தப் படம் ஒரு இசைக்கலைஞனின் வாழ்வை உலகத் தரத்தில் ஆவணப்படுத்தியது.
பிரெடி மெர்குரியின் பற்கள் அவரது குரல் வளத்திற்கு ஒரு காரணமாக அமைந்ததாக அவர் நம்பியதால் ராமி மாலெக் அந்தத் தோற்றத்தைப் பெற செயற்கைப் பற்களைப் பயன்படுத்தினார்.
லைவ் எய்ட் கச்சேரியின் காட்சிகளைப் படமாக்கிய போது வெம்ப்லி மைதானத்தின் அசல் மேடை அமைக்கப்பட்டது மட்டுமல்லாமல் அன்று வானத்தில் மேகங்கள் இருந்த அதே சூழலும் டிஜிட்டல் முறையில் தத்ரூபமாகத் திரையில் கொண்டு வரப்பட்டது.
ஜப்பானில் போஹிமியன் ராப்சோடி அந்நாட்டின் மிகச் சிறந்த இசைத் திரைப்படமாகப் புகழப்பட்டது. அங்குள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் இப்படம் வரலாறு காணாத வசூலை ஈட்டியது.
இப்படத்தின் விளம்பரத்திற்காக மட்டும் சுமார் 121 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது ஒரு இசைச் திரைப்படத்துக்கான மாபெரும் முதலீடாகக் கருதப்படுகிறது.
=========================
படத்தின் கதை:-
1970 ஆம் ஆண்டு படம் துவங்குகிறது, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் பொதிகளைக் கையாளும் சாதாரணத் தொழிலாளியாகப் பணிபுரியும் பாரோக் புல்சாரா, தனது பெற்றோர் மற்றும் சகோதரி காஷ்மீராவுடன் வசித்து வருகிறார்.
ஒரு இரவு 'ஸ்மைல்' எனும் உள்ளூர் கல்லூரி இசைக்குழுவின் கலை நிகழ்ச்சியைக் காணச் செல்லும் அவர், அங்கே 'பீபா' எனும் ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் மேரி ஆஸ்டினை (லூசி பாய்ண்டன்) சந்தித்து அவர் பால் ஈர்க்கப்படுகிறார்.
நிகழ்ச்சியின் முடிவில் அந்த இசைக்குழுவின் பாடகர் டிம் ஸ்டாஃபெல், 'ஹம்பி பாங்' எனும் குழுவில் இணைய வேண்டி விலகிச் சென்றதை அறிகிறார்.
மிகுந்த தன்னம்பிக்கையுடன் ட்ரம்ஸ் கலைஞர் ரோஜர் டெய்லர் (பென் ஹார்டி) மற்றும் கிதார் கலைஞர் பிரையன் மே (க்விலிம் லீ) ஆகியோரைச் சந்தித்து, தனது அபாரமான குரல் வளத்தால் அவர்களை வியக்க வைத்தவர் அந்த குழுவில் புதிய பாடகராக இணைகிறார்.
குழுவில் புதிய பாஸிஸ்ட் ஜான் டீக்கன் (ஜோ மஸெல்லோ) இணைந்த பிறகு, அந்த இசைக்குழு பிரிட்டன் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது குழுவின் வேனை விற்று ஒரு இசை ஆல்பத்தைப் பதிவு செய்ய பிரெடி முதலீடு செய்கிறார்.
இவர்களின் திறமையைக் கண்ட இஎம்ஐ இசைத்தட்டு நிறுவனத்தின் பிரதிநிதியான பொறியாளர் ராய் தாமஸ் பேக்கரிடம் இசைக்குழுவின் மாதிரிகளை கேட்கிறார்.
பாரோக் புல்சாரா இப்போது தனது பெயரைப் பிரெடி மெர்குரி (ராமி மாலெக்) என்று மாற்றிக்கொண்டு, இசைக்குழுவிற்கு 'குயீன்' என்று பெயரிடுகிறார்.
ஜான் ரீட் எனும் மேலாளர் இவர்களை ஒப்பந்தம் செய்து அமெரிக்க இசை சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்.
பால் பிரெண்டர் இவர்களின் அன்றாடப் பணிகளைக் கவனிக்கிறார். 'டாப் ஆஃப் தி பாப்ஸ்' என்ற புகழ்பெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு 'கில்லர் குயீன்' பாடல் மூலம் இவர்களுக்கு முதல் அபார வெற்றி கிடைக்கிறது.
பிரெடி சக பாடகி மேரியிடம் திருமண முன்மொழிவை உறுதி செய்தாலும்,இசை சுற்றுப்பயணத்தின் போது தனது பாலின ஈர்ப்பு குறித்து அவர் குழப்பமடைகிறார்.
1975 ஆம் ஆண்டு 'ஏ நைட் அட் தி ஓபரா' எனும் நான்காவது ஆல்பத்தைப் பதிவு செய்யும் போது 'போஹிமியன் ராப்சோடி' எனும் தனது வாழ்நாள் சாதனையை உருவாக்குவதில் பிரெடி தீவிரமாக உழைக்கிறார்.
ஆனால் அந்தப் பாடல் மிக நீளமாக இருப்பதாகக் கூறி இஎம்ஐ நிறுவன நிர்வாகி ரே ஃபாஸ்டர் அதை வெளியிட மறுக்கிறார்.
இதனால் இசை நிறுவனத்தை விட்டு வெளியேறும் பிரெடி, வானொலி ஜாக்கி கென்னி எவரெட்டுடன் இணைந்து அந்தப் பாடலை வானொலியில் அறிமுகம் செய்கிறார்.
விமர்சகர்கள் இசையை சாடினாலும், அந்தப் பாடல் உலகளாவிய வெற்றியை அடைந்து குயீன் குழுவைச் சர்வதேச நட்சத்திரமாக்குகிறது.
இதனைத் தொடர்ந்து பிரெடி பாலுடனான உறவைத் தொடங்கி, தான் ஒரு இருபாலின ஈர்ப்பாளர் என்பதை மேரியிடம் மனமுவந்து ஒப்புக்கொள்கிறார்.
ஆனால் மேரி அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறி திருமண முன்மொழிவை முறிக்கிறார்.
அதன்பின் அவர்கள் நெருங்கிய நண்பர்களாகவே நீடிக்கிறார்கள்.
1980களின் தொடக்கத்தில் 'வி வில் ராக் யூ', 'அனதர் ஒன் பைட்ஸ் தி டஸ்ட்' போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்தாலும், பால் பிரெண்டரின் ஆதிக்கத்தால் குழுவிற்குள் விரிசல் ஏற்படுகிறது.
ஒரு விருந்தின் போது ஜிம் ஹட்டன் (ஆரோன் மெக்கஸ்கர்) எனும் ஊழியரைச் சந்திக்கும் பிரெடி அவர்பால் ஈர்க்கப்படுகிறார்.
ஆனால் இந்த ஒருபால் ஈர்ப்பு முன்மொழிவை மறுதலித்த ஜிம் அவரிடம் தன்னைத் தானே நேசிக்கக் கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.
இதற்கிடையில் ஜான் ரீடைத் தனி ஆல்பம் செய்யத் தூண்டுமாறு பால் பிரெண்டர் ஆலோசனை கூற, அதனால் ஆத்திரமடைந்த பிரெடி தனது நண்பர்களை ஆலோசிக்காமல் ஜான் ரீடை பணிநீக்கம் செய்கிறார்.
அவர்'ஜிம் மியாமி பீச்' குழுவின் மேலாளராகிறார். 1982 ஆம் ஆண்டு 'ஹாட் ஸ்பேஸ்' ஆல்பத்தின் செய்தியாளர் சந்திப்பில் பிரெடியின் உடல்நிலை மற்றும் அந்தரங்கம் குறித்து ஊடகங்கள் கேள்விகளால் துளைக்கின்றன.
பின்னர் 'ஐ வான்ட் டு பிரேக் ஃப்ரீ' பாடலில் இக்குழுவினர் பெண் வேடமிட்டு நடித்தது பெரும் சர்ச்சையாகிறது.
இதன் பின் பிரெடி தனது குழுவை விட்டுப் பிரிந்து நான்கு மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் சிபிஎஸ் நிறுவனத்திற்காகத் தனி ஆல்பம் செய்ய மியூனிக் செல்கிறார்.
மியூனிக் நகரில் 1984 ஆம் ஆண்டு 'மிஸ்டர் பேட் காய்' ஆல்பத்தைப் பதிவு செய்யும் வேளையில், பால் பிரெண்டருடன் இணைந்து போதை மற்றும் தவறான உறவுகளில் சிக்கித் தவிக்கிறார் பிரெடி.
அங்கு சென்ற மேரி ஆஸ்டின், அவரை மீண்டும் குயீன் குழுவுடன் இணைந்து 'லைவ் எய்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு உருக்கமாக வேண்டுகிறார்.
இப்போது தன்னை பணிநீக்கம் செய்ததற்கு பழிவாங்க பால் பிரெண்டர் பிரெடியின் அந்தரங்கங்களை ஊடகங்களுக்குப் பகிர்கிறார்.
லண்டன் திரும்பும் பிரெடி தனது குழுவினரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் குழுவில் இணைகிறார்.
தான் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு, மீதமுள்ள காலத்தை இசைக்காகவே செலவிட முடிவெடுக்கிறார்.
1985 ஆம் ஆண்டு ஜூலை 13 அன்று வெம்ப்லி மைதானத்தில் நடைபெறும் 'லைவ் எய்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன் ஜிம் ஹட்டன், மேரி மற்றும் தனது குடும்பத்தினரைச் சந்திக்கிறார்.
தனது தந்தையிடம் நற்சிந்தனை, நல்வார்த்தை, நற்செயல் எனும் ஜோராஸ்ட்ரியக் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார்.
அந்த மாபெரும் மேடையில் குயீன் குழுவினர் வழங்கிய இசை நிகழ்ச்சி வரலாற்றில் மிகச்சிறந்த நேரலை நிகழ்ச்சியாக மாறிப் பெருமளவில் நிதி திரட்ட உதவியது.
பிரெடி மெர்குரி 1991 ஆம் ஆண்டு தனது 45 வயதில் எய்ட்ஸ் நோயால் ஏற்பட்ட கடும் நிமோனியாவால் உயிரிழந்தார் என்ற தகவலுடன் படம் நிறைவடைகிறது.
இத்திரைப்படம் ஒரு இசைக் கலைஞனின் வெற்றிக் கதையை மட்டும் சொல்லாமல் ஒரு மனிதன் தன்னைத் தானே தேடிக் கண்டடையும் ஆழமான வாழ்வியல் பயணத்தைப் பாடமாகச் சொல்கிறது.
ஒரு சாதாரண விமான நிலையத் தொழிலாளி உலகப் புகழ்பெற்ற பிரெடி மெர்குரியாக உருவெடுப்பதன் மூலம் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எத்தகைய தடைகளையும் தகர்க்கலாம் என்பதை இது உணர்த்துகிறது.
புகழ் மற்றும் வெற்றியின் உச்சியில் இருக்கும்போது தவறான வழிகாட்டுதல்களால் ஒருவன் தனிமை எனும் இருளுக்குள் தள்ளப்படக்கூடும் என்பதையும் இது எச்சரிக்கையாக முன்வைக்கிறது.
வாழ்க்கையில் உண்மையான அன்பு மற்றும் நட்பின் முக்கியத்துவத்தை இப்படம் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. பிரெடி தனது குழுவினரை விட்டுப் பிரிந்து சென்றாலும் இறுதியில் தனது உண்மையான பலம் அந்த நட்பில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து திரும்புவது ஒரு கலைஞனின் வளர்ச்சிக்குத் தனித்திறமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஒரு நல்ல துணையும் குழுவும் அவசியம் என்பதை விளக்குகிறது.
தனது அடையாளத்தையும் பாலின ஈர்ப்பையும் உலகிற்கு வெளிப்படுத்த அவர் எடுத்த மனப் போராட்டங்கள் மற்றும் ஜிம் ஹட்டன் அவருக்குச் சொன்ன சுய அங்கீகாரம் குறித்த அறிவுரைகள் ஆகியவை ஒவ்வொரு மனிதனும் தன்னை முதலில் நேசிக்க வேண்டும் என்ற உயரிய செய்தியைத் தருகின்றன.
பிரெடியின் தந்தை அவருக்குச் சொல்லும் நற்சிந்தனை நல்வார்த்தை நற்செயல் எனும் வாழ்வியல் தத்துவமே இப்படத்தின் ஆன்மாவாக அமைகிறது.
தனக்கு மரணம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்த பின்பும் வருத்தப்படாமல் இருக்கும் நேரத்தைச் சமூக நலனுக்காகவும் இசைக்காகவும் அர்ப்பணிக்க அவர் எடுத்த முடிவு ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை விட அவன் என்ன நற்செயல்களை விட்டுச் சென்றான் என்பதே முக்கியம் என்பதை உலகுக்குச் சொல்கிறது.
குறுகிய காலமே வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கையை மற்றவர்களுக்காகவும் ஒரு மாபெரும் நோக்கத்திற்காகவும் அர்ப்பணிப்பதன் மூலம் ஒரு மனிதன் வரலாற்றில் என்றும் அழியாமல் நிலைக்க முடியும் என்பதே இத்திரைப்படம் சொல்லும் மிகச்சிறந்த செய்தியாகும்.