தி ஃபாதர் The Father 2020

2020 ஆண்டு வெளியான 
"தி ஃபாதர்"  திரைப்படம் முதுமை மற்றும் நினைவாற்றல் இழப்பு குறித்த மிகச்சிறந்த படைப்பாக மிளிர்கிறது.

 இயக்குனர் புளோரியன் ஜெல்லர்  கைவண்ணத்தில் உருவான இப்படம் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் சிதைந்து வரும் உலகத்தை மிகவும் நுட்பமாகவும் இதயத்தை உலுக்கும் வகையிலும் திரையில் கொண்டு வந்துள்ளது. 

உலகெங்கிலும் உள்ள திரை விமர்சகர்களிடம் இருந்து ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் பல்வேறு இணையதளங்களில் மிக உயர்ந்த தரவரிசையைப் பெற்றுள்ளதுடன் ஒரு மனிதன் தனது சுயத்தை இழக்கும் வேதனையை மிகவும் ஆழமாகப் படம்பிடித்துள்ளது.

 திரையரங்கு பார்வையாளர்களில் பெரும்பாலோர் இப்படத்தை மற்றவர்களுக்குக் கண்டிப்பாகப் பரிந்துரைக்க வேண்டிய ஒரு உன்னதப் படைப்பு எனப் போற்றியுள்ளனர்.

இதில் நடிகர் அந்தோணி  ஹாப்கின்ஸ் வெளிப்படுத்திய நடிப்பு அவரது நீண்ட காலத் திரைப்பயணத்திலேயே ஆகச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. 

தனது எண்பத்தி மூன்று வயதில் இப்படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான அகாடமி விருதை வென்றதன் மூலம் அந்தப் பிரிவில் ஆஸ்கார் வென்ற மிக வயதான நடிகர் என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். 

சாதாரணமாக முதுமை காலத்து மறதியைப் பற்றிப் பேசும் மற்றப் படங்களைக் காட்டிலும் இது முற்றிலும் மாறுபட்ட கோணத்தைக் கொண்டுள்ளது. 

சிதைந்து வரும் மனித மூளையின் உள்ளே இருந்து அந்த உலகம் எப்படித் தெரியுமோ அதையே பார்ப்பவர்களுக்கும் கடத்தும் விதமாக  மிக நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளது. 

ஒரு மனிதன் தான் காண்பது உண்மையா அல்லது கற்பனையா எனப் புரியாமல் தவிப்பதையும் தனது நிலையை மற்றவர்களுக்கு விளக்கப் போராடுவதையும் இதில் மிகத் துல்லியமாகக் காணலாம்.

இயக்குநர் புளோரியன் ஜெல்லர் தனது புகழ்பெற்ற நாடகத்தைத் திரைப்படமாக மாற்றிய விதம் அபாரமானது. முதல்முறை இயக்குநராக இருந்தபோதிலும் ஒரு தேர்ந்த கலைஞனைப் போலத் திரைக்கதையை அவர் கையாண்டுள்ளார். 

ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் சாதாரண குடும்பக் கதையைப் போலத் தொடங்கி மெல்ல மெல்ல ஒரு மனிதன் தனது நினைவுகளின் கடலில் மூழ்கிப் போவதையும் அதைக் கரையில் இருந்து பார்க்கும் மகள் அடையும் சொல்லொணாத் துயரத்தையும் அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.

 குறிப்பாகத் தந்தை மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட மகள் தனது தந்தையின் நிலையைப் பார்த்து மனதளவில் சிதையும் காட்சிகள் பார்ப்போரை நிலைகுலையச் செய்யும் ஆற்றல் கொண்டவை.

 இப்படத்தின் இசை மற்றும் பின்னணி அமைப்பும் அந்தச் சோகமான சூழலை மிகவும் அழுத்தமாகப் பிரதிபலிக்கின்றன.

சண்டான்ஸ் மற்றும் டொராண்டோ உள்ளிட்ட பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்படம் இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகச்சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. 

ஒரு மனிதன் தான் அறிந்த இடங்களும் மனிதர்களும் திடீரென அந்நியமாகத் தெரியும்போது அடையும் அந்த மிரட்சியையும் பயத்தையும் ஒரு திகில் திரைப்படத்திற்கு இணையான தாக்கத்துடன் இது வெளிப்படுத்தியுள்ளது.

 கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த மிகச்சிறந்த சினிமா அனுபவங்களில் ஒன்றாக இது உலகளவில் கொண்டாடப்படுகிறது.

 யதார்த்தமான உலகிற்கும் கலைந்த நினைவுகளுக்கும் இடையே ஊசலாடும் ஒரு முதியவரின் போராட்டத்தை மிகுந்த மனிதாபிமானத்துடன் அணுகிய விதமே இப்படத்தின் மாபெரும் வெற்றியாகவும் அதன் நீடித்த புகழுக்குக் காரணமாகவும் கருதப்படுகிறது.

ஒரு மனிதன் தனது இருப்பின் அடிப்படையான கால உணர்வையும் இடத்தையும் முற்றிலுமாக இழந்து ஒரு அந்தரமான நிலையில் தத்தளிப்பதே இதன் அடிநாதம். ஒருவரது மூளை தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் பொய்களையும் அந்தப் பொய்கள் உடையும்போது ஏற்படும் பேரதிர்ச்சியையும் காட்டுவதே இதன் புதுமை. 

ஒரு மனிதனுக்குத் தான் வாழும் வீடு என்பது பாதுகாப்பின் அடையாளம் ஆனால் அந்த வீட்டின் சுவர்கள் கூடத் தனது நினைவைப் போலவே அடிக்கடி மாறுவதை அந்தோணி (அந்தோணி ஹாப்கின்ஸ்) எதிர்கொள்ளும்போது ஏற்படும் அந்த இருத்தலியல் பயமே இப்படத்தின் உயிரோட்டம்.

வாழ்க்கை முழுக்க ஒரு நேர்க்கோட்டில் பயணித்த காலவரிசை சிதைந்து நேற்று இன்று நாளை என்பது யாவும் ஒன்றாகக் கலந்து ஒரு புரியாத புதிராக மாறுவதே இதன் மையப்புள்ளி . 

நாம் ஒவ்வொருவரும் நமது கடந்த கால நினைவுகளின் தொகுப்பாகவே நம்மை உணர்கிறோம் ஆனால் அந்தத் தொகுப்பு சிதறும்போது ஒரு மனிதன் தனது பெயரையும் உறவுகளையும் கூடத் தக்கவைக்க முடியாமல் ஒரு சூனியத்திற்குள் தள்ளப்படுகிறோம். 

இது ஒரு நோயைப் பற்றிய மருத்துவ விளக்கம் என்பதைத் தாண்டி ஒரு மனிதனின் ஆளுமை எப்படி அவனது கட்டுப்பாடின்றி மெல்ல மெல்லக் கரைந்து போகிறது என்பதை மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

உறவுகளின் பிணைப்பு  நினைவுகளின் மீது கட்டப்பட்டது என்பதை இப்படம் ஆழமாக வலியுறுத்துகிறது. ஒரு மனிதன் தனது மகளை அடையாளம் காணத் தவறும்போது அந்த உறவின் புனிதமும் பிணைப்பும் அங்கே கேள்விக்குறியாகிறது.

 அன்புக்குக் கூட நினைவாற்றல் அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. இறுதியில் அந்தோணி ஒரு குழந்தையைப் போலத் தனது தாயைத் தேடுவது என்பது மனித வாழ்வின் சுழற்சியைக் குறிக்கிறது. 

எவ்வளவு பெரிய மேதையாகவோ அல்லது அதிகாரமிக்கவராகவோ ஒருவன் வாழ்ந்தாலும் இறுதியில் அவன் ஒரு பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுவது இயற்கையின் நியதி என்பதை இந்தப் படம் ஒரு தத்துவார்த்தமான உண்மையாக முன்வைக்கிறது. 

இது ஒரு முதியவரின் கதை மட்டுமல்லாமல் மனித மூளையின் பலவீனத்தையும் அது உருவாக்கும் மாய பிம்பங்களையும் பற்றிய ஒரு ஆழ்ந்த தேடலாகும்.

 இப்படத்தின் கதையை எழுதிய புளோரியன் ஜெல்லர் இதன் முதன்மைக் கதாபாத்திரத்திற்கு அந்தோணி என்றே பெயரிட்டதுடன் அந்தப் பாத்திரத்தின் பிறந்த தேதியையும் நடிகர் அந்தோணி ஹாப்கின்ஸ் அவர்களின் நிஜமான பிறந்த தேதியான டிசம்பர் 30 1937 என்பதையே பயன்படுத்தியுள்ளார்.

 உண்மையில் இந்தத் திரைக்கதையை அவர் அந்தோணி ஹாப்கின்ஸை மனதிற்கொண்டே எழுதியுள்ளார். ஒருவேளை அவர் நடிக்க மறுத்திருந்தால் இப்படம்  ஆங்கில மொழியில் உருவாகியிருக்காது என்று இயக்குனர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த அந்த வீட்டின் உட்புற வடிவமைப்பு மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டது. அந்தோணியின் நினைவாற்றல் சிதைவதைக் காட்சிப்படுத்த அந்த வீட்டின் சுவர்களின் நிறம் தளபாடங்களின் அமைப்பு மற்றும் அங்கிருந்த ஓவியங்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் மெல்ல மெல்ல மாற்றப்பட்டன.

 பார்வையாளர்கள் கூட அறியாத வகையில் ஒரு அறையின் கதவு வேறொரு இடத்திற்கு இட்டுச் செல்வது போன்ற மாற்றங்கள் ஒரு தளம் அல்லது செட் என்பதற்குள் மிக ரகசியமாகச் செய்யப்பட்டன. 

இது அந்தோணி எதிர்கொள்ளும் அதே குழப்பத்தை பார்ப்பவர்களுக்கும் கடத்துவதற்காகச் செய்யப்பட்ட ஒரு கலை நுணுக்கமாகும்.

இப்படத்தில் மகளாக நடித்த ஒலிவியா கோல்மன் படப்பிடிப்பு தளத்தில் அந்தோணி ஹாப்கின்ஸின் நடிப்பைக் கண்டு பலமுறை உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார். 

குறிப்பாகப் படத்தின் இறுதிக்காட்சியில் அவர் ஒரு குழந்தையைப் போலத் தன் தாயைக் கூப்பிட்டு அழும் அந்த ஒற்றைப் பதிவை சிங்கிள் டேக்கில் படமாக்கியபோது அங்கிருந்த ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் மௌனத்தில் ஆழ்ந்தனர்.

 அந்தோணி ஹாப்கின்ஸ் தனது எண்பத்தி மூன்று வயதில் இந்தச் சிறந்த நடிப்பிற்காக ஆஸ்கார் வென்றபோது அவர் நேரில் வந்து விருதைப் பெறவில்லை. 

அந்தச் சமயத்தில் அவர் தனது சொந்த ஊரான வேல்ஸ் பகுதியில் அமைதியாக கழித்தபடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இப்படத்தின் படத்தொகுப்பாளர் யார்க்கோஸ் ஓல்பாவ் அந்தோணி ஹாப்கின்ஸ் எதிர்கொள்ளும் குழப்பத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்த ஒரு விசித்திரமான முறையைக் கையாண்டுள்ளார். 

ஒரு காட்சியின் தொடர்ச்சியில் சிறிய மாற்றங்களைச் செய்து அதாவது ஒரு பாத்திரத்தில் இருந்த தேநீரின் அளவு அல்லது ஒரு பொருளின் இடம் போன்றவற்றை நுணுக்கமாக மாற்றி அமைத்து பார்வையாளர்களின் மூளையையும் அந்தோணியின் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

படத்தின் கலை இயக்கத்தில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களும் ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றன. 

தொடக்கத்தில் அந்தோணியின் வீடு என்று காட்டப்படும்போது அங்கு பயன்படுத்தப்பட்ட அடர் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்கள் மெல்ல மெல்ல மங்கி படத்தின் இறுதியில் முதியோர் இல்லம் வரும்போது குளிர்ந்த நீல நிறமாகவும் வெளுத்த வெள்ளை நிறமாகவும் மாறுகின்றன. 

இது அந்தோணியின் ஆளுமையும் நினைவுகளும் எப்படி மெல்ல மெல்லத் தன் நிறத்தை இழந்து வெளிறிப் போகின்றன என்பதைக் குறியீடாகக் காட்டுகிறது.

இப்படத்தின் பின்னணி இசையை அமைத்த லுடோவிகோ ஈனாடி மிகக் குறைவான இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தினார். அந்தோணி ஒரு ஓப்பரா இசைப் பிரியராகக் காட்டப்படுவதால் இடையில் வரும் அந்த செவ்வியல் இசைத் துண்டுகள் அவரது பழைய கம்பீரமான வாழ்வை நினைவூட்டுகின்றன. 

ஆனால் படம் நகர நகர அந்த இசையும் சிதைந்து ஒருவித அமைதியற்ற ஒலியை உருவாக்குவது போல வடிவமைக்கப்பட்டது.

 இப்படத்தின் திரைக்கதை முழுவதுமாக அந்தோணி ஹாப்கின்ஸின் கண்களை மையப்படுத்தியே எழுதப்பட்டது. அவரது ஒரு பார்வையில் இருக்கும் அதிகாரமும் அடுத்த நொடியே ஒரு குழந்தையின் பயமாக அது மாறுவதும் கேமராவால் மிக நெருக்கமாகப் படம்பிடிக்கப்பட்டது.

 அந்தோணி ஹாப்கின்ஸ் தனது கதாபாத்திரத்திற்காகத் தனிப்பட்ட முறையில் எந்தப் பயிற்சியும் எடுக்கவில்லை என்றும் அந்தத் தருணத்தில் தனது வயோதிகத்தை அப்படியே வெளிப்படுத்தியதாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் கதை:-

 லண்டனில் வசிக்கும் அந்தோணிக்குத் தள்ளாத வயது வந்துவிட்ட நிலையிலும் தனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்கிற பிடிவாதம் அதிகம் இருக்கிறது. 

தன் வீட்டிற்கு வேலைக்கு வரும் செவிலியர்கள் எல்லாரும் திருடர்கள் என்றும் குறிப்பாக அவர்கள் தன் கைக்கடிகாரத்தைத் திருடிவிட்டார்கள் என்றும் அவர் தொடர்ந்து குற்றம் சுமத்துகிறார். 

தன் தந்தை இப்படித் தனிமையில் அவதிப்படுவதைக் கண்டு வருந்தும் அவரது மகள் ஆன் (ஒலிவியா கோல்மன்) அவரைச் சந்திக்க வந்து தான் ஒருவருடன் காதலில் இருப்பதாகவும் அவருடன் பாரிஸ் நகருக்குச் செல்லப் போவதாகவும் கூறுகிறார்.

 இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தோணி கடும் குழப்பத்தில் ஆழ்கிறார். ஏனெனில் ஆனின் முதல் கணவர் ஜேம்ஸ் பிரிந்து சென்ற பிறகு அவள் வாழ்க்கையில் வேறு யாரும் இருப்பதாக அவருக்கு நினைவிலேயே இல்லை.

 தொடர்ந்து செவிலியர்களை விரட்டினால் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டியிருக்கும் என்று ஆன் அவரிடம் கவலையுடன் கூறிவிட்டுச் செல்கிறார்.

அடுத்த நாள் தனது வீட்டின் வரவேற்பறையில் யாரோ ஒரு புதிய மனிதர் அமர்ந்திருப்பதைப் பார்த்து அந்தோணி அதிர்ச்சியடைகிறார். 

பால் (ரூஃபஸ் செவெல்) எனத் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் அவர் தான் ஆனின் கணவர் என்றும் அந்தோணி தங்கியிருப்பது ஆனின் வீடு என்றும் கூறுகிறார். 

இதனால் அந்தோணிக்குத் தான் இருப்பது தனது வீடா அல்லது மகள் வீடா என்கிற சந்தேகம் எழுகிறது. 

இந்த குழப்பம் உச்சமடையும் விதமாக வீட்டிற்கு வரும் ஆன் இப்போது வேறு ஒரு பெண்ணின் முகத்தோடு அவருக்குத் தெரிகிறார்.

 ஆட்கள் மாறுகிறார்கள் முகங்கள் மாறுகின்றன ஆனால் அது ஏன் என்று அந்தோணிக்குத் தெரியவில்லை. 

லாரா (இமோஜென் பூட்ஸ்) என்கிற புதிய செவிலியர் வேலைக்கு வரும்போது மட்டும் அந்தோணி உற்சாகமாகத் தன்னைப் ஒரு நடனக் கலைஞர் என்று பொய் கூறி அறிமுகம் செய்து கொள்கிறார். 

அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது மட்டும் நீண்ட நாட்களாக தான் காணாமல் போன தனது இரண்டாவது மகள் லூசியின் நினைவு அவருக்கு வந்து போகிறது.

நாட்கள் செல்லச் செல்ல யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான கோடு அந்தோணிக்கு மெல்லியதாகிறது. 

ஆனின் கணவர் என்று சொல்லிக்கொள்ளும் அந்த நபர் சில சமயம் பால் என்றும் சில சமயம் ஜேம்ஸ் என்றும் அழைக்கப்படுகிறார். 

ஒரு தருணத்தில் ஆனின் கணவர் அந்தோணியின் மீது கடும் கோபம் கொண்டு அவரை அறைந்து வசைபாடுகிறார்.

 உண்மையில் அந்தோணி பல வருடங்களாகத் தனது மகள் ஆனின் வீட்டில் தான் தங்கி வருகிறார் என்பதும் ஆனால் அவர் இன்னும் தனது பழைய சொந்த வீட்டில்தான் இருப்பதாக மனதளவில் நம்பிக் கொண்டிருக்கிறார் என்பதும் நமக்குப் புலனாகிறது. 

லூசி என்கிற அவரது மகள் ஒரு விபத்தில் இறந்துவிட்ட செய்தி கூட அவரது நினைவில் இருந்து அழிந்து போயிருக்கிறது. 

அவரது மூளை பழைய நினைவுகளையும் புதிய மனிதர்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு புரியாத புதிர் போன்ற உலகத்தை அவருக்குள் உருவாக்கிவிடுகிறது.

இறுதியில் ஒரு நாள் காலை கண்விழிக்கும்போது அந்தோணி முற்றிலும் ஒரு புதிய அறையில் இருப்பதை உணர்கிறார். 

அது ஒரு முதியோர் இல்லத்தின் அறை. அவருக்குச் சிகிச்சை அளிக்கும் செவிலியர் கேத்தரின் (ஒலிவியா வில்லியம்ஸ்) மற்றும் ஆண் செவிலியர் பில் (மார்க் கேட்டிஸ்) ஆகியோர் இதற்கு முன்னால் அவர் தனது வாழ்க்கையில் கண்ட வெவ்வேறு மனிதர்களின் முகங்களாகவே அவருக்குத் தெரிகிறார்கள். 

அவரது மகள் ஆன் இப்போது பாரிஸில் வசிப்பதாகவும் மாதம் ஒருமுறை அவரை வந்து பார்ப்பதாகவும் செவிலியர் விளக்குகிறார்.

 தான் எங்கே இருக்கிறோம் யாரிடம் பேசுகிறோம் என்பது கூடப் புரியாத அந்தோணி ஒரு குழந்தையைப் போலத் தேம்பி அழத் தொடங்குகிறார்.

 தனக்கு இப்போது தனது அம்மா வேண்டும் என்றும் தான் ஒரு மரத்தைப் போலத் தனது இலைகளையும் கிளைகளையும் காற்று மற்றும் மழையில் ஒவ்வொன்றாக இழந்து மொட்டையாகி நிற்பதாகவும் கதறுகிறார். 

ஒரு மாபெரும் அறிவாளியாகத் தன்னை நினைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதன் முதுமையின் பிடியில் சிக்கித் தனது சுயத்தை முழுமையாக இழந்து நிற்பதோடு இப்படம் நிறைகிறது.

முதுமை என்பது வெறும் உடல் தளர்ச்சி மட்டுமல்ல அது ஒரு மனிதன் கட்டியெழுப்பிய ஒட்டுமொத்த அடையாளமும் சிதைந்து போவதைக் குறிக்கும் ஒரு பெருந்துயரம் என்பதை இப்படம் ஆழமாக உணர்த்துகிறது. 

ஒரு மனிதன் தான் சேமித்த நினைவுகள் தான் வாழ்ந்த இடங்கள் மற்றும் தான் நேசித்த மனிதர்களின் முகங்களை ஒவ்வொன்றாக இழக்கும்போது ஏற்படும் அந்தப் பயங்கரமான தனிமையே இப்படத்தின் மையச் செய்தி ஆகும்.

 அந்தோணி  எனும் கதாபாத்திரம் ஒரு மாபெரும் கோபுரமாகத் தன்னை நினைத்துக் கொண்டாலும் காலத்தின் ஓட்டத்தில் அவர் ஒரு குழந்தையைப் போலத் தன் தாயைத் தேடி அழும் நிலைக்குத் தள்ளப்படுவது முதுமையின் தவிர்க்க முடியாத யதார்த்தத்தைக் காட்டுகிறது.

தன்னைச் சுற்றியுள்ள உலகம் மாறவில்லை ஆனால் தனது பார்வையும் நினைவாற்றலும் மாறிவிட்டன என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மனிதனின் மனப்போராட்டம் இதில் விவரிக்கப்படுகிறது.

 மகளாக வரும் ஆன் தனது சொந்த வாழ்க்கையையும் தந்தை மீதான பாசத்தையும் இடையில் வைத்துப் போராடும் விதம் முதியோரைப் பராமரிக்கும் குடும்பத்தினர் சந்திக்கும் உளவியல் சிக்கல்களைப் பிரதிபலிக்கிறது. 

அன்பு எவ்வளவு இருந்தாலும் காலப்போக்கில் ஒரு கட்டத்தில் அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு ஒரு பெரும் சுமையாக மாறுவதையும் அந்தச் சுமையால் ஏற்படும் குற்ற உணர்வையும் இப்படம் ஒளிவுமறைவின்றிப் பேசுகிறது.

முடிவில் அந்தோணி கூறும் அந்த வார்த்தைகள் அதாவது தான் ஒரு மரத்தைப் போலத் தனது இலைகளையும் கிளைகளையும் காற்று மற்றும் மழையில் இழந்து நிற்பதாகக் கூறுவது ஒரு மனிதனின் வாழ்நாள் அனுபவங்கள் அனைத்தும் நினைவிழப்பு நோயால் எப்படித் துடைத்தெறியப்படுகின்றன என்பதற்கான சாட்சியாகும்.

 நாம் யார் என்பதைத் தீர்மானிப்பதே நமது நினைவுகள்தான் அவை அழிந்து போகும்போது எஞ்சியிருப்பது வெறும் சதைப்பிண்டமான உடல் மட்டுமே என்பதை இப்படம் ஒரு பாடமாகச் சொல்கிறது.

 நிதர்சனமான உண்மையைச் சந்திக்கும் போது மனிதன் எவ்வளவு பலவீனமானவன் என்பதையும் முதுமையில் ஒவ்வொரு மனிதனும் மீண்டும் ஒரு குழந்தையாகவே மாறிப்போகிறான் என்பதையும் இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (220) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஆஸ்கர் (37) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)