இந்திய சினிமாவில் வெளியான முற்போக்கு திரைப்படங்களில் மிகவும் உசத்தியான படைப்பு, ஸ்வாதி முத்யம் 1985 (வெண் முத்து), தமிழில் சிப்பிக்குள் முத்து (1986),
தெலுங்கில் முதலில் வெளியான படைப்பு இது , தமிழை விட பிற்போக்கான பார்வையாளர்களைக் கொண்ட தெலுங்கு சினிமாவில் இத்தனை புதிதாக இத்தனை முற்போக்காக ஒரு மாபெரும் புரட்சியாக இந்த திரைப்படத்தை இயக்கினார் இயக்குனர் K.விஸ்வநாத் அவர்கள்,
இது மொழிமாற்று திரைப்படம்,பாடல்களில் close up காட்சிகளில் voice syncing ல் சில குறைகள் இருந்தாலும் படத்தை அழாமல் ஒருவர் பார்க்க முடியாது, காரணம் இதன் தரமான அழுத்தமான உள்ளடக்கம், இசைவடிவத்தின் orchestra தெலுங்கில் கேட்பது மிக அலாதியான அனுபவத்தை வழங்குகிறது,ஒருமுறை swathi muthyam juke box தேடி கேட்டு விடுங்கள்.
தெலுங்கு தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, தெலுங்கு தமிழ் மக்களின் வாழ்க்கை முறையிலும் பல வழமைகளை உடைத்த பெருமை சுவாதி முத்யத்துக்கு உண்டு.
லலிதா (ராதிகா) போன்ற விதவைத் தாய்க்கு மறுமணம் செய்துகொண்டு அழகான மிச்ச வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ முழு உரிமையும் உண்டு என்பதை இப்படைப்பு நிர்தாட்சண்யமாக காட்டியது. மனவளர்ச்சி குன்றிய இளைஞன் சிவா என்ற சிவய்யா (கமல் ஹாசன்) தனது மனைவி மற்றும் வளர்ப்பு மகன் பொழியும் அன்பு மற்றும் பாசத்தின் சக்தியால் தனது வாழ்க்கையை கூட மேன்மையாக மாற்ற முடியும் என்பதையும் இப்படம் காட்டியது.
இந்த படைப்பை புரிந்து கொள்ளவே ஒரு மனமுதிர்ச்சி தேவை, இது வரை தமிழில் வந்த முற்போக்கு திரைப்படங்களை ஒரு தட்டில் வைத்து மறுதட்டில் சுவாதிமுத்யத்தை வைத்தால் சுவாதிமுத்யமே அதன் கனத்தால் இறங்கி ஜெயிக்கும், எந்த திரைப்படமும் சுவாதி முத்யத்திற்கு உறை போடக்கூட முடியாது,
இயக்குனர் K.விஸ்வநாத் தான் பெரிதும் விரும்பும் இசை மற்றும் ஆன்மீகத்தின் துணைகொண்டு இந்த முற்போக்கு திரைப்படத்தை தந்து வெற்றி பெற்றார்.
இதில் சிவா என்ற மனம் முதிர்ச்சி கொள்ளாத குழந்தை மனதுடைய இளைஞனாக கமல்ஹாசன் வாழ்ந்தார், லலிதா என்ற கைம்பெண் கதாபாத்திரத்தில் ராதிகா வாழ்ந்தார், இன்று இப்படி ஊணை உருக்கும் கதாபாத்திரங்களாக மாறும் நடிகர்களில்லை என்னும் படியாக இப்படம் உணர்ச்சி பிரவாகமாக காட்சிக்கு காட்சி நம்மை நெகிழ்த்தி விடுகிறது,
இப்படத்தை 1985 ஆம் ஆண்டு மதுரை நர்த்தனா திரையரங்கில் பார்த்தேன், இதன் போஸ்டர் வாழ்நாளில் மறக்க முடியாது சிறுநீர் கழிக்கும் சிறுவனுக்கு கமல்ஹாசன் குடை பிடிக்கும் காட்சி அது, அன்று தெருவில் கடந்து போகும் அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்தது,
அது வரை நல்ல குணவதியான மாற்றாந்தாய் பெருமையை மட்டுமே அதிசயம் போல பேசிய தமிழ் சினிமாவில் மின்னல் வெட்டியதைப் போல ஒரு புது முயற்சியாக மனமுதிர்ச்சி குறைந்த மாற்றாந்தகப்பன் சிவா, அழகிய கைம்பெண் லலிதா , ஐந்து வயது பாலகன் பாலுவை போற்றி பாதுகாக்கும் படைப்பாக மிளிர்ந்தது, இதில் கமல் நடிப்பு சிறந்ததா ராதிகா நடிப்பு சிறந்ததா என்றால் இறுதி முடிவுக்கு வரவே முடியாது.
இது போல ஒரு திரைப்படத்தை வாழ்நாள் முழுதும் இருமாந்திருக்க தகுதியான அர்த்தமுள்ளதாக தந்தார் இயக்குனர் K.விஸ்வநாத் அவர்கள், தமிழ், தெலுங்கு சினிமாவின் போக்கை தரமாக மாற்றி அமைத்த முன்னோடி இயக்குனர் .
இப்படத்தில் இசைஞானி இசை மற்றொரு கதாபாத்திரமாகும், இசைஞானி சீதம்மா கல்யாணம் என்ற நாட்டார் பாடலை உள்வாங்கி thesis செய்து இதில் " ராமன் கதை கேளுங்கள்" பாடலை உருவாக்கியுள்ளார், தமிழ் வடிவத்தில் spb அவர்களின் குரல் அத்தனை அழகாக கமல்ஹாசனுக்கு பொருந்திப் போனது, ராமன் கதை கேளுங்கள் கேட்க எத்தனை மன சங்கடங்களும் விலகிவிடுவதை உணரலாம், அது இரட்டைப் பாடலாக உருவாக்கினார் இசைஞானி, அதாவது முதல்பாதி சீதை சுயம்வரம் காலட்சேபம் ராமன் பராக்கிரமம் உரைத்து சீதா கல்யாண வைபோக பாடலாக நிறைவுரும்படி அத்தனை பாண்டித்யத்துடன் அமைத்தார்,தெலுங்கு கவிகள் ஆத்ரேய ஆச்சார்யா, c.நாராயண ரெட்டி, தமிழ் கவி வைரமுத்துவின் காவியத்தன்மை மிகுந்த புலமைக்கு இப்படத்தின் பாடல்கள் சாட்சி
சிறுவயதில் விபத்தில் தாய் தந்தையை இழந்து தலையில் அடிபட்டதில் மூளை வளர்ச்சியையும் இழந்த சிவா தன் பாட்டி சொல்லும் நீதிக் கதைகள் வழியாக சமூகத்தில் பிறர் துயருக்கு அப்படி மெய்யாக கண்ணீர் வடிக்கிறார்.
சாதி மதம் அற்றவராக வளர்ந்திருக்கிறார் சிவா,
கற்பூரபுத்தி, இஸ்லாமியரின் சவ ஊர்வலம் போகையில் தோள் தந்து தூக்குகிறார், கிருத்துவ தேவாலயத்தில் ஆங்கிலத்தில் ஸ்பஷ்டமாக அருட்தந்தை சொல்லும் பைபிள் வாசகம் “In the name of the Father, and of the Son, and of the Holy Spirit” தினமும் உள்வாங்கியவர் அதன் தொடர்ச்சியான The grace of the Lord Jesus Christ, and the love of God, and the communion of the Holy Spirit, be with you all என்று கணீரென சொல்ல, சபை ஆமென் சொல்கிறது, கோயிலில் நெய்வேத்தியம் செய்யும் முன் சொல்லும் சமஸ்கிருத ஆரத்தி மந்திரத்தை ஸ்பஷ்டமாகச் சொல்கிறார்,
சிவாவின் இறந்து போன அக்காவின் கணவர் சிவாவுக்கு பெற்றோர் விட்டுச் சென்ற சொந்தவீடு, எண்ணெய் கடை, எண்ணெய் செக்கு ,மாடு என ஒன்று விடாமல் அபகரித்துக் கொண்டிருக்கிறார், திருமண வயதில் மகள் இருக்க மனைவி இறந்த மூன்றே மாதத்தில் திருமணம் செய்தவர், புதுப்பெண்டாட்டியுடன் அவர் அந்த அபகரித்த வீட்டிலேயே வசிக்கிறார்,பணத்துக்காக ஊரில் அத்தனை கீழ்மைத் தரகுகளையும் செய்கிறார், சிவாவும் பாட்டியும் பக்கத்தில் குடிசையில் வசிக்கின்றனர், சிவா ஏதாவது தவறு செய்து நஷ்டம் விளைந்தால் சிவாவிடம் பத்திரங்களில் கைநாட்டு வாங்கிக் கொள்கிறார், அவர் புது மனைவி நல்லவள், உடன் அவளின் தந்தையும் வசிக்கிறார், அவரும் நல்ல மனிதர்,இந்த மனிதரிடம் வாழ்வதற்கு பதில் வா மகளே காவிரியில் விழலாம் என்று அடிக்கடி கூப்பிடுகிறார்.
கைம்பெண் லலிதாவின் அண்ணன் சரத்பாபு தங்கை பாசத்தால் வீட்டின் பாத்திரம் பண்டங்களை விற்று காதல் திருமணம் செய்து கொண்டு கைம்பெண் ஆன லலிதாவுக்கு வர வேண்டிய ஜீவனாம்சத்துக்கு வேண்டி வழக்காடுகிறார்,அத்தனை வெள்ளந்தி அப்பாவி அண்ணன் அவர்.
லலிதாவின் மாமியார் டப்பிங் ஜானகி பேரனுக்காகவும் மருமகளுக்காகவும் அப்படி உருகினாலும் கணவர் மேஜர் சுந்தர்ராஜனால் இவர்களுக்கு எதுவும் உதவிவிட முடியாத கையறு நிலையில் தவிக்கிறார்.
லலிதாவின் அண்ணி y.விஜயா அனல் தகிக்கும் வார்த்தைகளால் லலிதாவை சுட்டபடியே இருப்பார், இதனால் கோயில் பிரசாதம் வாங்கி மகனுக்கு ஊட்டி பள்ளிக்கு அனுப்புவார் லலிதா , சிவா தனக்கு எத்தனை கேட்டாலும் கோயிலில் பிரசாதம் தருவர் என்பதால் தனக்கு தந்த பிரசாதத்தை லலிதாவுக்கு தந்துவிடுவார்.
சங்கீத ஞானமுள்ள லலிதாவிடம் சங்கீத கேள்வி ஞானம் உள்ள சிவா அவளுக்கு பொருளாதாரத்துக்கு உதவ வேண்டி சங்கீதம் கற்றுக் கொள்ள நினைக்கிறார், அதற்காக அக்காள் கணவரிடம் நடுநிசியில் சாட்டையால் அடித்துக் கொண்டு 100₹ பணம் வாங்கும் காட்சி உண்டு, மறுநாள் அத்தருணத்தில் தான் SPBக்கு ஜானகியம்மா ராக ஆலாபனை பாடம் எடுக்கையில் துவங்குகிற துள்ளி துள்ளி பாடல் பிறக்கிறது.
லலிதாவின் இடர்பாடு நீங்க தன் பாட்டி அறிவுரைப்படி ஆற்றில் இருந்து குடம் குடமாக நீர் தோளில் தூக்கி வந்து லலிதாவை உடன் வைத்து படிகளை இவர் அலம்பி விட்டு , அவரை விட்டு மஞ்சள் குங்குமம் இட்டு பூஜை செய்ய வைத்து உதவுகிறார் சிவா,
லலதா நான்கு படிகள் மட்டும் மீதமிருக்கையில் வெயில் தாளாமல் சுருண்டு மயங்கி விட படிபூஜை வழிபாடு தடைபடுகிறது.
அன்று இரவே ஊரில் தர்காவில் தீமிதி திருவிழா நடக்க, லலிதாவின் மகன் பாலுவை தூக்கி வந்து அவன் கையில் தாயத்து கட்ட வைத்து வழிபாட்டு பலனை தந்துவிட்டு, சிவா நெருப்பு குழிக்குள் புனிதக் கொடியை ஏந்திக்கொண்டு ஓடுகிறார், பாதம் முழுக்க கொப்பளம் வந்து படுக்கையில் கிடக்கையிலும் வலி வேதனைக்கு அஞ்சுவதில்லை சிவா, ஒரு கர்ம யோகி போன்ற கதாபாத்திரத்தை அத்தனை அழகாக செய்தார் நடிகர் கமல்ஹாசன்,
இது போல பல பிரயத்தனங்களுக்கு பிறகே, பாட்டி யாராவது லலிதாவை மணக்க வருவான் ,அவள் கஷ்டம் விடியும், என்று சொன்னதும், அது தான் தான் என்பதும் சிவாவுக்கு உறைக்கிறது, ஊர் கோயிலில் ராமநவமி அன்று நடக்க இருந்த சீதா கல்யாணத்தில் தாலித் தட்டு வலம் வருகையில் சீதம்மா தாலியை கைப்பற்றி லலிதாவின் கழுத்தில் கட்டிவிடுகிறார் சிவா,
ஊரார் கண்டபடி ஏச, கோயில் ட்ரஸ்டிகள் சிவாவை தாக்க, சிவா அவர்களை தாக்க,கூட்டம் சேர்ந்து சிவாவுக்கு தர்ம அடி விழுகிறது,
சிவாவின் பாட்டி (நிர்மலம்மா) லலிதாவின் மீது மிகுந்த அனுதாபமும் மரியாதையும் கொண்டிருப்பதால் இந்த திருமணத்தை மனதார ஒப்புக்கொள்கிறார்,
ஆனால் அவரது மாமாவும் ஆச்சாரம் மிகுந்த கிராம மக்களும் விதவை மறுமணம் செய்வதை காலங்காலமாக பாவமாகக் கருதுவதால் இந்த முற்போக்கு திருமணத்தை அப்படி எதிர்க்கிறார்கள்.
வீட்டில் சிவாவுக்கும் அக்கா கணவருக்கும் நடந்த சண்டையில் சிவாவும் காயமடைகிறார், அக்கா கணவரும் சிவாவால் தடியால் பலமாகத் தாக்கப்படுகிறார்.
சிவாவின் பாட்டி லலிதாவின் கைகளில் சிவாவை இனி பாதுகாக்கும் பொறுப்பைத் தந்து விட்டு இறந்து விடுகிறார், அப்பாவி சிவாவுக்கு அப்போது போய் பசிக்கிறது, எனக்கு யாராவது சாதம் இடுங்கள் என்று கேட்கையில் தான் லலிதாவுக்கு சிவா இன்னும் எத்தனை குழந்தையானவர் எனப் புரிகிறது.
லலிதா தன் சகோதரன் சரத்பாபு ஆசியுடன் சிவாவுடன் வெளியூருக்குச் சென்று குடியேறுகிறாள்.
கிராம மக்களில் சிலர் இவர்களுக்கு புதிய வாழ்க்கையை உருவாக்க முன்னின்று உதவுகிறார்கள்.
படிப்படியாக, லலிதா ஒரு ஆண்மகனின் வீட்டு கடமைகள் மற்றும் பொறுப்புகளை சிவாவுக்கு அதன் போக்கில் நிர்பந்தமின்றி புரிய வைக்கிறார்.
இப்படத்தில் சிவாவின் தியாகத்தை மிஞ்சும் தியாகத்தை லலிதாவும் மகன் பாலுவும் செய்து விட்டு மீண்டும் சிவாவிடம் வரும் காட்சி மிக உயர்வானது, மாமனார் மேஜர் சுந்தர்ராஜன் மனைவி ஜானகி பேரன் மற்றும் அவன் மாற்றாந்தகப்பன் சாலையில் பிச்சையெடுத்து உய்வதை கண்டு மன அழுத்தம் பீடித்து படுத்த படுக்கை ஆகிறார், அவரைக் காப்பாற்ற வேண்டிய சுயநலத்தில் மேஜர் சுந்தர்ராஜன் லலிதாவின் குடிசைக்கு வந்தவர் தன்னுடன் உடனே வந்து தன் மனைவியை ஒருமுறை பார்க்க அழைக்கிறார்,
லலிதா சிவாவின் கட்டாயத்தால் அங்கே பாலுவுடன் போகிறார், அங்கே பேரனையும் மருமகளையும் பார்த்ததும் மாமியாருக்கு மனஅழுத்தம் நீங்கி விடுகிறது, இதனால் மேஜர் சுந்தர்ராஜன் நைச்சியமாக திட்டம் இட்டவர், சிவாவிடம் லலிதாவுக்கும் பாலுவுக்கும் கிடைக்க இருக்கும் நல்ல வாழ்வை நீ கெடுக்காமல் வெளியேறிவிடு என அறிவுரை சொல்லி அனுப்ப, சிவா இனம் புரியாத பிரிவு சோகத்துடன் வீடு வந்தவர் மூட்டை முடிச்சுகளை கட்டி தனிமை வாட்டும் வேதனையுடன் புறப்படுவார்,அப்போது லலிதாவும் பாலுவும் வந்து சிவாவை தாங்கிக் கொள்வர், அன்று முதல் நிரந்தரமாக தாங்கிக் கொள்வர்.
எழுதப்படிக்கத் தெரியாத சிவாவுக்கு, குழந்தை பாலுவை பள்ளியில் சேர்க்க 85₹ தேவைப்பட,தெருவில் நின்று சாட்டையால் அடித்துக் கொள்கிறார், அதில் 63₹ கிடைக்க, லலிதாவின் சங்கீத ஆசிரியர் சோமையாஜுலு அங்கே வந்தவர் மீத தொகை 22₹ யை தான் தருவதாக சொல்லி சாட்டையை தூர எறிந்து அழைத்துப் போகிறார், பாலுவை பள்ளியில் சேர்த்த பின்னரே இவர்கள் அன்று வீடு திரும்புவர், இப்படி காட்சிக்கு காட்சி நம்பிக்கை ஒளி தருவார் இயக்குனர்.
இதே போலவே பொய் சொல்லத் தெரியாதவர் சிவா என்பதை நிறுவுகிற காட்சி உண்டு ,புதிய ஊரில் பக்கத்து மாடியில் வசிக்கும் சபல பேர்வழியான கொல்லப்புடி மாருதிராவ் சிவா, பாலுவை வெளியே பிச்சையெடுத்து உய்ய அனுப்பிவிட்டு லலிதாவை பெண்டாள நினைப்பார், லலிதா தப்பிவிடுவார், விஷயம் கேள்விப்பட்டு சிவா அந்த மாடி வீட்டுக்கு சென்று அடித்து துவைத்து நார் நாராக்கிவிடுவார், டாக்டரிடம் இவர்கள் மாடியில் இருந்து விழுந்ததாக சொல்ல ,சிவா தான் அடித்ததாக உண்மை சொல்ல, வாய்மை அறியாத இவரை அனைவரும் சேர்ந்து டாக்டரிடமிருந்து அப்புறப்படுத்துவர், வீடு வந்த லலிதாவிடம் இனி நான் நிஜம் சொல்லனுமா? பொய் சொல்லனுமா? என்பார், லலிதா பதில் சொல்ல முடியாமல் திகைப்பார்.
சிவாவுக்கு சங்கீத ஆசிரியர் சோமையாஜுலு மூலம் கோயிலில் பாதுகாவலர் வேலை கிடைக்கிறது , அதற்கு சிவா தரும் அன்புத் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல,வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் முதல் தனது மனைவி லலிதா மற்றும் வளர்ப்பு மகனை சிரத்தையாக ஆதரிக்கத் துவங்குகிறார் சிவா, தன் செலவில் மிச்சம் பிடித்து பாலுவின் படிப்புக்கு பணம் சேர்க்கும் எண்ணம் கூட சிவாவுக்கு வருகிறது.
பின்னர் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்து நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்,ஆனால் சிவாவுக்கு மூத்த மகன் பாலு மீதே பாசம் அதிகம் என்பதை நாம் பார்க்கிறோம்.
வருடங்கள் கடக்க மூத்த மகன் பாலு வெளிமாநிலத்தில் பெரிய நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக இருக்க, இளைய மகன் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார், அவர்கள் வருடாந்திர விடுமுறை பத்து நாட்களில் இங்கே தந்தையைப் பார்க்க வருகையில் , மூத்த மகன் பாலு தந்தை பற்றி தன் இளம் எழுத்தாளர் மகளுக்கு கதையைச் சொல்கையில் விரியும் படம் தாய் லலிதாவின் மரணத்தருவாயில் தான் சமகாலத்துக்கு திரும்புகிறது,
தாய் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் இவர்கள் அனைவரும் தந்தையை தங்கள் உடன் வந்து வசிக்க அழைக்கையில் அதை ஏற்று கிழவர் சிவா தயாரானவர், தன் மனைவி லலிதாவுக்கு மிகவும் பிடித்தமான அந்த துளசி மாடத்தை கடப்பாறை கொண்டு பெயர்க்கையில் , மனைவி லலிதா இவர் மடியில் தீர்க்க சுமங்கலியாக உயிர்விடும் தருணம் காட்சியாக விரிகிறது.
சிவா தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் தனது வீட்டை விட்டு லலிதாவின் அன்பின் நினைவாக இருந்த துளசி மாடத்தை அவர் சுமந்தபடி வெளியேறுவதுடன் படம் நிறைகிறது.
நடிகை ராதிகா அற்புதமான நடிகை, இதில் விதவைத் தாயாக, மனவளர்ரச்சி குன்றிய நாயகனுக்கு நிபந்தனையற்ற மனைவியாக நடித்தார்,தமிழ் நடிகை தீபா, நாம் சந்திக்கும் எந்த ஒரு படித்த நபரைக் காட்டிலும் சிறந்த உணர்திறன் கொண்ட துணி துவைக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தை மிக அற்புதமாக செய்தார்.
இப்படத்தில் சிவா எத்தனை குழந்தை என்பதை உணர்த்த ஒரு குளியல் காட்சி உண்டு, தமிழ் சினிமாவின் வழமையான குளியல் காட்சி போலதான் துவங்கும், ஆனால் காட்சி நிறைகையில் நம் உள்ளம் சுத்தமாகிவிடும் , கட்டழகியான சுப்பு (தீபா) ஆற்றில் "பட்டுச்சேல தர்ரேனுன்னு படகேறி போனதென்ன மாமா, கட்டியுள்ள சேல ,நிக்கவில்ல மேல,நிலா வந்து சிரிக்குதே வா சொந்த மாமா" என்று பாடிய படி குளிக்கையில் பட்டப் பகலில் நிலா வந்ததுன்னு பாடறியே எனக் கேட்கிறார் சிவா, நீ தான் நிலா, வட்டமுகம் நாகப்பழம் போல கண்ணு நிலா போல சிரிப்பு என்ற சுப்பு தன் முதுகுக்கு சோப்பு தேய்த்துச் விட சொல்ல நாம் எதாவது விவகாரமான காட்சியாக இருக்கும், தீபா குழந்தை மனம் கொண்டவனை தவறாக அணுகுகிறாளோ என நினைத்தால், அப்படியே காட்சி வேறு மாதிரி நிறையும், சோப்பு தேய்த்து விடுகையில் தீபாவின் முறைமாமன் வெள்ளைச்சாமி வர அவன் சிவாவுக்கு கால் சட்டை நாடாவை இறுக்கி கட்டி விடுவான், சிவா அவனிடம் சுப்புவின் முதுகுக்கு சோப்பிடும் பணியை ஒப்படைத்து அகன்றுவிடுவான், முறைமாமன் தீண்டலில் அவள் முதுகு எங்கும் மின்சாரம் பாய்வது போல தாப உணர்வுகள் எழும்,இப்போது தொடுவது வெள்ளைச்சாமி என அறிந்து நீ எப்போய்யா வந்தாய்? என்பார் சுப்பு,எப்படி நீ கண்டுபிடித்தாய் என்று கேட்க , உன் பிடி எனக்கு தெரியாதாய்யா? என்பார், அது தான் அந்த சிவாவின் வெள்ளை மனத்தை பார்வையாளருக்கு சரியாக உரைத்த முதல் காட்சி.
இதே போல இரண்டாவது திருமணம் செய்த பின்னரும் சிவா மனதளவில் குழந்தை ஆதலால் அவன் லலிதாவின் மகன் பாலுவுடன் தான் தூங்குவான், திடீரென இரவில் லலிதா அருகே வந்து படுக்க,லலிதா என்ன என்று கேட்க , நிஜம் சொல்லவா? பொய் சொல்லவா? என்று கேட்க, நிஜம் சொல்ல சொல்வாள், பாலு படுக்கையில் மூத்திரம் போனதால் படுக்கை நனைந்து போனது என்பார் சிவா.
இப்படத்தில் லலிதாவுக்கு சாந்தி முகூர்த்தம் காட்சி இத்தனை விரிவாக காமத்துப்பால் அத்தியாயமாக மனசு மயங்கும் பாடல் காட்சியாக வந்ததற்கு காரணம் உண்டு,
பாலு சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை, அவருக்கு நடக்கையில் கூட balance இராது, விழுந்தபடி இருப்பார், குழந்தை பாலு, லலிதா ,பாட்டி என யாராவது பார்த்து பார்த்து என சொல்லியபடியே இருப்பர், சிவா மனதில் விகல்பமில்லை, ஆதலால் அவன் ஆண் பெண் என பாராமல் தொடுவார், கை குலுக்குவார், y.விஜயாவை வெகுண்டெழுகையில் பெண் என்ற பேதமின்றி அறைவார்,
சுப்பு இந்த உளவியலை நன்கு அறிந்ததால் பாலுவிடம் மூன்று தேங்காய்களைத் தந்து வேலை , சம்பளம், புடவை என பிரார்த்தனை செய்யச் சொல்லி ஒவ்வொன்றாய் நிறைவேற ஒவ்வொன்றாய் உடைக்கப் பணிக்கிறாள், அப்படி இரண்டு தேங்காய் உடைத்து தன்னை தகுதி மிக்க ஆண்மகன் குடும்பத்தலைவன் என நிறுவுகிறார் சிவா, லலிதாவின் துக்கித்திருக்கும் மனதை மாற்ற சுப்பு (தீபா) நேரில் வந்து அந்த புது புடவையை கட்டி விட்டு பூசூட்டிவிட்டு, பொட்டு வைத்து, உறங்கும் குழந்தை பாலுவை விடிகாலை அனுப்புகிறேன் என தூக்கியும் செல்கிறார்கள்,அப்போது மணப்பெண்ணாக லலிதா அடியெடுத்து வைக்க மூன்றாவது வேண்டுதல் தேங்காயை சிவா தரையில் உடைக்கிறார்,அவர் உள்ளங்கை சில்லால் வெட்டுப்பட்டு ரத்தம் கசிய, அங்கீகாரமான மனைவியான லலிதா விருட்டென கையை வாங்கி ரத்தத்தை உரிஞ்சுகையில் , மனசு மயங்கும் பாடல் , பாடம் நடத்துவது போல வினா விடை சோதித்து அறிதல் போலவே விரிகிறது.
இப்படத்திற்கு ராஜமுந்திரி, தொர்ரேடு, தாண்டிகொண்டா, பட்டிசீமா கோதாவரி நதி தீரங்களில் ,மைசூர் காவிரி நதி தீரங்களில் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட சுமார் 70 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
கண்ணோடு கண்ணான என் கண்ணா பாடல் காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்குள் உள்ள 3500 வருட மாமரத்தின் சந்நிதி அதன் பிரகாரத்தில் படமாக்கப்பட்டது.
படிபூஜை செய்யும் வெங்கடேஸ்வர ஸ்வாமி மலைக்கோயில் தாண்டிகொண்டாவில் உள்ளது.
மனசுமயங்கும் பாடல் தாடிபுடி நீர் தேக்கத்தில் படமாக்கப்பட்டது.
துள்ளித் துள்ளி நீ பாடம்மா, ராமன் கதை கேளுங்கள் இப்பாடல்கள் கிழக்கு கோதாவரி பட்டிசீமா, ராஜ முந்திரி வட்டாரங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
தர்மம் சரணம் கச்சாமி பாடல் மைசூரில் படமாக்கப்பட்டது.
சாகர சங்கமம் (சலங்கை ஒலி) , ஸ்வாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து ) ,சுப சங்கல்பம் (பாசவலை) என மூன்று ஒப்பற்ற திரைப்படங்களை நடிகர் கமல் ஹாசனை வைத்து தெலுங்கு மற்றும் தமிழில் தயாரித்து இயக்கியதற்கு நாம் இயக்குனர் K.விஸ்வநாத் அவர்களுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளோம், காரணம் இம்மூன்றும் கலையை, அன்பை , தியாகத்தை மனிதத்தை போற்றும் நெகிழ்ச்சியூட்டும் படைப்புகள், மனதை புடம் இடுபவையாகும் .
இப்படத்திற்கு கமல்ஹாசன் நடனம் பற்றிய முக்கியமான trivia உண்டு
சிப்பிக்குள் முத்து படத்தை தன் மனைவி ஜானகியம்மாளுடன் பிரத்யேகக் காட்சியாகப் பார்த்தார் எம்.ஜி.ஆர். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர் கமல்ஹாசனைப் பார்த்து, "சீத்தம்மா பாட்டுன்னு சொல்லிட்டு ஒரு டான்ஸ் போட்டே பாரு. சிறப்பு. சிறப்பு. ரொம்ப சிறப்பு. உலகத்துலே உன்னை மாதிரி யாருமே டான்ஸ் பண்ண முடியாது” என்று சிரித்தவாறே சொன்னார். கமலஹாசன் குழம்பிப் போனார்.
'துள்ளி துள்ளி நீ பாடம்மா' என்கிற அந்தப் பாடலில் குடம் சுமந்திருக்கும் ராதிகாவை கமல் சுற்றி வந்து கையைத் தூக்கி, குதித்து குதித்து பாடியவாறே குத்தாட்டம் இடுவார் கமல்ஹாசன்.
எம். ஜி.ஆர் பாராட்டினாரா, கிண்டலடித்தாரா என்கிற சந்தேகம் கமல்ஹாசனுக்கு வந்தது.
"என்ன சார் கிண்டல் பண்ணுறீங்க? நான்தான் அதுலே டான்ஸே ஆடலையே?” என்று கமல் பதற்றமாகக் கேட்டார்.
"யாரு சொன்னது,நீ பிரமாதமா ஆடினே? டான்ஸ் ஆடுறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும். நல்லா டான்ஸ் ஆடுற ஒருத்தன், தான் ஏத்துக்கிட்ட கேரக்டருக்காக டான்ஸே தெரியாதமாதிரி ஆடுறதுதான் இருக்கிறதுலேயே ரொம்ப கஷ்டம். 'துள்ளி துள்ளி' பாட்டு ஆரம்பத்துலே ருந்து கவனமாக பார்த்தேன். உனக்குள்ளே இருக்கிற டான்ஸர் எங்கேயாவது வெளிப்படுவான்னு தேடிக்கிட்டே இருந்தேன். ஆனா, ஒரு நொடி கூட தெரியலை. என்னைப் பொறுத்தவரைக்கும் இதுவரைக்கும் நீ ஆடினதுலேயே இதுதான் பெஸ்ட்"
எம்.ஜி.ஆரின் கைகளை எடுத்து அப்படியே கண்ணில் ஒற்றிக் கொண்டார் கமல்.
மறைந்த இயக்குனர் K. விஸ்வநாத் அவர்களுக்கு இதய அஞ்சலி, சார்ந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.