காதலை நம் விருப்பத்திற்கு ஏற்ப வளைத்துவிட முடியுமா, அதை ஒரு ஆயுதம் போல கையில் எடுத்து இலக்கு நோக்கி வீசிவிட முடியுமா?
2010 ஆம் ஆண்டு வெளியான காதலின் கடவுள் God of Love என்ற 18 நிமிட அமெரிக்க குறும்படம் இந்த ஒற்றை கேள்வியை மையமாக வைத்து ஒரு மனிதனின் சுயநலத்தை அன்பாக மாற்றும் பயணத்தைச் சொல்கிறது.
2010-ல் லூக் மேதனி எழுதி இயக்கிய இந்தப் படத்தை கிகி டிமென்ட், ரயன் சில்பர்ட், ஸ்டெஃபனி வால்ம்ஸ்லி, ஸ்டீபன் டைபியாங்கோ நால்வரும் தயாரித்தனர்.
லூக் மேதனியே ரேமண்ட் குட்ஃபெல்லோ என்ற பிரதான பாத்திரத்தில் நடித்தார்.
அவருடன் மரியன் பிராக் கெல்லியாகவும், கிறிஸ்டோபர் ஹிர்ஷ் ஃபோஸியாகவும், எமிலி யங் ஏஞ்சலாவாகவும், மிகுவல் ரொசாலஸ் ஃபிராங்காகவும் நடித்தனர்.
பாபி வெப்ஸ்டர் ரெட் ஒன் கேமராவில் கருப்பு வெள்ளையில் படமாக்க, லெவி அப்ரினோ படத்தொகுப்பையும் சாஷா கார்டன் இசையையும் கையாண்டனர்.
டாபிக் நிறுவனம் விநியோகித்த இந்தப் படம் ஜூன் 12, 2010 அன்று மாணவர் அகாடமி விருதுகளில் முதலில் திரையிடப்பட்டது, பின்னர் 127 ஹவர்ஸ் திரைப்படத்தின் புளூ-ரே பதிப்பில் சிறப்பு அம்சமாகவும் இணைக்கப்பட்டது.
கதை ஒரு கிராமப்புற சாலையில் மோட்டார் ஸ்கூட்டரில் செல்லும் ரேவின் குரலோடு தொடங்குகிறது.
யாரை காதலிக்கிறோம், யார் நம்மை காதலிக்கிறார்கள் என்பதை கட்டுப்படுத்த முடியாது என்று ரே சொல்வதில் இருந்து படம் மூன்று மாதங்கள் பின்னோக்கி செல்கிறது.
அங்கு ரே ஒரு தன்னம்பிக்கை மிகுந்த, சற்று சுயநலமான லவுஞ்ச் பாடகனாகவும் சாம்பியன் டார்ட் வீரனாகவும் இருக்கிறான்.
அவனது இசைக்குழுவில் கிதாரில் ஃபோஸி, பேஸில் ஃபிராங்க், டிரம்ஸில் அவன் உயிருக்கு உயிராக நேசிக்கும் கெல்லி இருக்கிறார்கள்.
ரே மேடை ஏறும் முன் கடவுளிடம் கெல்லியின் காதலை பெற்றுத்தரும்படி தினமும் பிரார்த்திக்கிறான்.
ஆனால் கெல்லி ரேவை கண்டுகொள்வதில்லை, அவள் ஃபோஸியை விரும்புகிறாள்.
ஃபோஸியோ ரேவின் நெருங்கிய நண்பன் என்பதால் விசுவாசத்திற்காக அவளது முயற்சிகளை தொடர்ந்து நிராகரிக்கிறான்.
ஒரு நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு பார்டெண்டர் ரேவுக்காக வைக்கப்பட்ட ஒரு பார்சலை கொடுக்கிறான்.
உள்ளே காதல் டார்ட் அம்புகள் உள்ளன. அதன் விதிமுறை தெளிவானது, ஒருவரை அந்த அம்பினால் குத்தினால் அவர் அடுத்து பார்க்கும் முதல் நபர் மீது உடனடியாக காதலில் விழுவார்,
அந்த ஈர்ப்பு ஆறு மணி நேரம் நீடிக்கும், ஆறு மணி நேரத்திற்குப் பிறகு அந்தக் காதல் உண்மையானதாக இருந்தால் தொடரும், இல்லையெனில் ஒன்றும் நடக்காதது போல மறைந்துவிடும்.
ரே இதை ஃபோஸியிடம் சொல்ல இருவரும் சோதனை செய்ய முடிவெடுக்கிறார்கள்.
இசைக்குழு வீடு திரும்பும் வழியில் ஜெர்சியைச் சேர்ந்த ஆடம்பரமான பெண் ஏஞ்சலா மீது ரே டார்ட்டை வீசுகிறான்.
அவள் முதலில் பார்ப்பது அமைதியான ஃபிராங்கை, உடனே அவன் மீது காதல் கொள்கிறாள்.
இருவரும் அந்த ஜோடியை பின்தொடர்கிறார்கள், சரியாக ஆறு மணி நேரத்திற்குப் பிறகும் ஏஞ்சலா ஃபிராங்கை விட்டு விலகவில்லை.
டார்ட்கள் உண்மையானவை என்பது உறுதியாகிறது.
இந்த நம்பிக்கையில் ரே கெல்லிக்கான மிக காதல் நிறைந்த ஆறு மணி நேரத்தை உருவாக்க ஃபோஸியின் உதவியை நாடுகிறான்.
காதல் டார்ட்கள் ஒழுக்கமற்றவை என்று நினைத்தாலும் கெல்லியைப் பற்றி ஃபோஸிக்கு நிறைய தெரிந்திருந்ததால் பல யோசனைகளை கொடுக்கிறான்.
ரே கெல்லியின் வீட்டிற்குச் சென்று டார்ட்டால் தாக்குகிறான், அவள் உடனே அவன் மீது காதல் கொள்கிறாள்.
அவர்களின் சந்திப்பு சரியாக அமைகிறது, ஆறு மணி நேர முடிவில் முத்தமிடும் அளவுக்கு நெருங்குகிறார்கள்.
நேரம் முடிந்ததும் கெல்லியின் முகம் மாறுகிறது, சங்கடத்துடன் நன்றி சொல்லி விலகிச் செல்கிறாள்.
அவர்கள் காதல் விதிக்கப்பட்டதல்ல என்பது நிரூபணமாகிறது.
இதுவே ரே கெல்லியை மறக்க வேண்டும் என்பதற்கான சாட்சி என்று ஃபோஸி வலியுறுத்துகிறான்,
நகரத்தில் இருக்கும் வேறு பெண்களை முயற்சிக்கச் சொல்கிறான். ரே தன் விரக்தியில் எதிர்ப்படும் பெண்கள் மீதெல்லாம், ஒரு ஆண் உட்பட, டார்ட்களை வீசுகிறான்,
அவர்கள் அனைவரும் அவனைப் பின்தொடரும் கூட்டமாக மாறுகிறார்கள். ஆனால் அவனால் கெல்லியை மறக்க முடியவில்லை,
கூட்டத்தினரே அவளை தொடரச் சொல்லி உற்சாகப்படுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் கெல்லிக்கு தனக்கு நீரிழிவு இருப்பதாக நம்ப வைத்து வாழ்நாள் முழுவதும் டார்ட்டால் குத்தலாமா என்று கூட யோசிக்கிறான்.
இறுதியாக மற்றொரு நிகழ்ச்சிக்குப் பிறகு இசைக்குழுவுடன் நடந்து வரும்போது கெல்லி மீது கடைசி டார்ட்டை வீச தயாராகிறான்.
வீசும் முன் ஃபோஸி உண்மையிலேயே கெல்லியை நேசிக்கிறான் என்பதையும், ரேவின் வெறி காரணமாக தன் உணர்வை அடக்கி வைத்திருக்கிறான் என்பதையும் உணர்கிறான்.
அந்த கணத்தில் அவனது சுயநலம் உடைகிறது, கெல்லியைப் பார்த்துக் கொண்டிருந்த ஃபோஸி மீது டார்ட்டை வீசுகிறான்,
இருவரும் உடனடியாக காதலில் விழுகிறார்கள்.
பக்குவமடைந்த ரே வீடு திரும்பும்போது வாசலில் ஒலிம்பஸ் என்று குறிப்பிட்ட குறிப்புடன் நைஸ் வொர்க் என்று எழுதப்பட்ட மற்றொரு பெட்டி காத்திருக்கிறது,
உள்ளே மன்மதனின் வில்லும் அம்பும் இருக்கின்றன. படம் மீண்டும் தொடக்க காலத்திற்கு தாவுகிறது.
இசைக்குழு ரே இல்லாமல் தொடர்கிறது, பாட விருப்பம் தெரிவித்திருந்த ஏஞ்சலா புதிய பாடகியாகியிருக்கிறாள்.
ஃபிராங்கும் ஏஞ்சலாவும், கெல்லியும் ஃபோஸியும் ஆழ்ந்த காதலில் இருக்கிறார்கள்,
ரே வழியில் சந்தித்த மற்றவர்களுக்கும் துணைகளை கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறான்.
ரே வெகு தொலைவில் முதுகில் வில்லும் அம்பும் கட்டியபடி இருக்கிறான்,
காதல் சில நேரங்களில் பொருந்தாமல் தோன்றுவதற்கு தான் சில நேரங்களில் முட்டாளாக இருந்ததே காரணம் என்று பார்வையாளர்கள் நம்மிடம் மன்னிப்பும் கேட்கிறான்,
தான் காதலின் கடவுள் என்பதை அறிவிக்கிறான்.
கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு இந்த கதைக்கு பழங்கால மாயக்கதை தன்மையை கொடுக்கிறது,
ரெட் ஒன் கேமராவின் துல்லியம் அந்த எளிமையை நவீனமாக்குகிறது.
மேதனியின் திரைக்கதை ஒவ்வொரு சோதனையையும் அடுத்த தார்மீக திருப்பத்திற்கு காரணமாக மாற்றுகிறது,
படத்தொகுப்பு ஆறு மணி நேர காதல் விதியை நகைச்சுவையாகவும் பதட்டமாகவும் கடத்துகிறது.
இந்த நேர்த்திக்காகவே 83வது அகாடமி விருதுகளில் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் இந்த படத்திற்கு கிடைத்தது.
அப்போது 34 வயதான நியூயார்க் பல்கலைக்கழக டிஷ் கலைப்பள்ளி மாணவரான மேதனி மேடையில் தன் தாய்க்கு நன்றி சொல்லியவர், தான் இங்கு முடி திருத்தி வந்திருக்க வேண்டும் என்று சிரித்தபடி கூறினார்,
பட உருவாக்கத்தில் உதவிய பிலிப்பினோ-அமெரிக்கர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
படத்தின் கடைசி காட்சியில் வில் வைத்திருக்கும் ஒரு தனித்த பயணியாக ரே நிற்பது வெறும் பதவி உயர்வு அல்ல, தனக்கான காதலை விட்டுக்கொடுத்து பிறர் காதலை சேர்த்து வைத்ததற்கான அடையாளம்.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்இரண்டாம்நூறு
#கீதப்ப்ரியன்குறும்படம்