M.T.வாசுதேவன் நாயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
M.T.வாசுதேவன் நாயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உத்தரம் | 1989 (விடை)|மலையாளம் | V. K. பவித்ரன் | M.T.வாசுதேவன் நாயர்





















உத்தரம் | 1989 (விடை) | V. K. பவித்ரன் | M.T.வாசுதேவன் நாயர்

இயக்குனர் K.G.ஜோர்ஜ் அவர்களின் யவனிகா திரைப்படம் போலவே ஒரு அற்புதமான investigation thriller உத்தரம், இங்கிலாந்து பெண் எழுத்தாளர் Daphne du Maurier எழுதிய அபாரமான சிறுகதை " no motive " அக்கதையில் லயித்த எழுத்தாளர் M.T.வாசுதேவன் நாயர் உத்தரம் திரைக்கதையை கச்சிதமாக எழுத அதை அற்புதமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் V. K. பவித்ரன், யவனிகாவில் எப்படி தபலாக்காரன் ஐயப்பன் மர்மமாக காணாமல் போனதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்காரியா (மம்மூட்டி) ஐயப்பன் சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரையும் விசாரித்து இறுதியில் ஐயப்பன் காணாமல் போன மர்மத்திரையை விலக்குவார், அப்படிப்பட்ட ஒரு அபாரமான த்ரில்லர் உத்தரம்,இயக்குனர் K.G.ஜோர்ஜின் இரகள் திரைப்படம் எப்படி ஒரு underrated classic படைப்போ அதே போலவே உத்தரம் திரைப்படமும் underrated classic.

முதல் காட்சியிலேயே ரப்பர் தோட்ட முதலாளி மேத்யூவின் மனைவி செலினா இரட்டைக்குழல் துப்பாக்கி முனையை மார்பில் பதித்து விசையை காலால் சுண்டி தற்கொலை செய்து  கொள்கிறாள், வெறும் 27 வயது,புதுக்கவிதைகள் அதாவது தரமான தத்துவார்த்தம் பொதிந்த புதுக்கவிதைகள் புனைந்து தரமான கவிதை தொகுப்பு வெளியிட்டவள் செலீனா, கணவன் மேத்யூசிடம் அத்தனை அன்பு கொண்டவள், குழந்தையின்மையைக் கூட குறையாகவே எண்ணாதவள், உலகை உலகத்தாரை இயற்கையை அப்படி நேசிப்பவள்,  கணவனுடன்  காலை உணவு சேர்ந்து உண்டவள் ,மேத்யூஸ் ரப்பர் தோட்டத்திற்கு பார்வையிட புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் இத்தனை கோரமாக தன் கதையை முடித்துக் கொண்டிருக்கிறாள்.

மனைவியின் தற்கொலைக்கு எந்த காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாததால், மேத்யூ தனது நண்பரான பாலுவை அழைக்கிறார், இருவரும் தில்லியில் டைம்ஸ் பத்திரிக்கையில் ஒன்றாக வேலை செய்தவர்கள், மேத்யூஸ் சப் எடிட்டராக இருந்தவர் இங்கே வந்து ரப்பர் கிருஷி  செய்கிறார்,

பாலு திருமணமாகாதவர்,நண்பர் மேத்யூஸுக்கும் அவர் மனைவி செலீனா காட்டிய நட்பிற்கும் அன்பிற்கும் மிகவும் கடமைப்பட்டவர், இவர் புதுக்கவிதைகளின் ஆராதகரும் கூட என்பதால் நண்பனை விட தனக்கு இந்த மர்மத்தை விடுவிக்கப்படவேண்டும் என நினைக்கிறார்.

செலீனா தற்கொலை செய்து இறந்தாலும் அதை கணவர் மேத்யூஸ் குடும்ப மானம் காக்க துப்பாக்கி துடைக்கையில் நேர்ந்த விபத்து என்று போலீஸில் பதிந்து வழக்கை புதைத்திருக்கிறார், இருந்தும் மனைவி இறந்த மர்மத்தை அறிய நினைக்கிறார், நண்பன் பாலுவுக்கு முழு சுதந்திரம் தந்திருக்கிறார்.பாலு இந்த புலன் விசாரணையை துவக்குவதற்கு இரு வாரம் முன்பு தன் டைம்ஸ் பத்திரிக்கை வேலையை விட்டவர்,இங்கு நண்பனுக்காக நேரில் வந்து விட்டார்.

இந்த தனக்குப் பிடித்த கவிதாயினி தோழியின் தற்கொலையை அவள் குடும்பத்தார் தோழி பார்வதி உறைவிடப் பள்ளி  என ஒவ்வொருயிடமாக பயணித்து விசாரணை என்பதே தெரியாமல் நிறைய பொய்கள் சொல்லி நடித்து துப்பு துலக்கி  விசாரணை நடத்துகிறார்,  செலினா தற்கொலைக்கு பின்னால் உள்ள நோக்கத்தைக் கண்டறியும் ஒயிலான திடீர் ஷெர்லாக் ஹோம்ஸ் பாலகிருஷ்ண நாயரின் விசாரணையை இத்திரைப்படம் அத்தனை இயல்பாக பதிவு செய்திருக்கிறது,

படத்தின் ஒளிப்பதிவு ராமசந்திரபாபு அவர்கள், படத்தின் இசை ஜான்ஸன் மாஸ்டர், படத்தில் மேத்யூவாக நடிகர் சுகுமாரன் நடிப்பு ஒண்ணாந்தரம், சமையல்காரராக சங்கராடி, செலீனாவாக சுபர்ணா ஆனந்த் (இயக்குனர் பரதனின் வைஷாலி பட நாயகி ) செலீனாவின் உயிர்த்தோழியாக பார்வதி , செலீனாவின் தந்தை ஃபாதர் ரெவனன்டாக கரமன ஜனார்த்தனன் நாயர் என அற்புதமான cast கொண்ட படம், சினிமா ஆர்வலர்கள் மாணவர்கள்  no motive ஆங்கில் சிறுகதையை  கண்டிப்பாக தேடி வாசியுங்கள் ,இந்த gripping and moving thriller படத்தை தவறாமல் பாருங்கள்,

இந்த படத்தை  இன்னொரு முறை பார்த்தால் சிறிய சிறிய nuances பற்றி எழுதலாம், எம்.டி.வாசுதேவநாயரின் சிறிய சிறிய டீடெயல் அபாரமானது, ஒரு காட்சியில் நடிகை சுகுமாரியின் கணவர் நோயில் படுத்த படுக்கையாக இருக்கிறார்,அவர் அருகே அந்தரத்தில் தொங்கும் கயிறு,படுத்த படுக்கையாக இருக்கும் அவர் பிடித்து எழுவதற்கு,  இதை நிஜத்தில் சிறுப்பத்தில் ஒரு வீட்டில் பார்த்துள்ளேன், சினிமாவில் இப்போது தான் பார்த்தேன்.மௌனம் சம்மதம் போல மம்மூட்டி  துப்பறியும் ஏகம் படம் பார்த்தாலும் இதில் அத்தனை ஸ்டைல், அத்தனை நம்பகத்தன்மை அழகியலுடன் கைகூடியுள்ளது.

இப்படத்தின் இயக்குனர் வட்டம்பரம்பில் கிருஷ்ணன் பவித்ரன், இவர் திரைப்பயணம் அலாதியானது, அர்த்தமுள்ள ஐந்து படைப்புகள் மட்டும் தந்த படைப்பாளி,மனம் முழுக்க சினிமா ஆர்வம் கொண்டவர், இவர் கேரளத்தில் பட்டப்படிப்பு முடிந்ததும் புனே திரைப்பட கல்லூரிக்குச் சென்று அனுமதி பெற முயன்றவர் , இரண்டு முயற்சிகளும் தோல்வியுறவே  புனேவில் உள்ள திரைப்பட கல்லூரிக்கு அருகிலுள்ள புனே சட்டக் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்.அங்கே   சட்டம் படிப்பதற்குப் பதிலாக,சட்ட  வகுப்பை கட் அடித்து விட்டு உலக கிளாசிக் மற்றும் திரைப்படங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பதைப் பார்க்க அவர் புனே திரைப்படக் கல்லூரியில் தனது முழுநேரத்தையும்  செலவிட்டார்.ஏகலைவன் போல கிடைத்த  இந்த வாய்ப்பை அவர் புனே திரைப்படக்கல்லூரி  மாணவர்களுடன் நட்பு கொள்ளவும், சினிமாவை நெருக்கமாக புரிந்து கொள்ளவும் பயன்படுத்தினார், இவர் தீவிர கம்யூனிஸ்ட்,இவரது  இயக்கத்தில்  முதலில் வெளியான திரைப்படம் யாரோ ஒராள் 1978 ஆம் ஆண்டு வெளியானது,  கபினி நதி  சுவன்னதுபோல் என்ற கம்யூனிஸ்ட் போராட்ட திரைப்படத்தை தயாரித்தவர் , உப்பு என்ற தலைசிறந்த திரைப்படத்தை 1986 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார்,பலி என்ற திரைப்படத்தை 1991 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார், இவரது கடைசி திரைப்படம் குட்டப்பன் சாட்சி 2002 ஆம் ஆண்டு வெளியானது,
26 February 2006 மறைந்தார், இவர் மனைவி நடிகை கலாமண்டலம் ஹேமாவதி.

படம் யூட்யூபில் உள்ளது
https://youtu.be/nxUt1exBXx8

#உத்தரம்,#மம்மூட்டி,#சுகுமாரன்,#ராமசந்திரபாபு,#ஜான்ஸன்_மாஸ்டர்,#பார்வதி,#VK_பவித்ரன்,#MT_வாசுதேவன்_நாயர்


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

நகக்‌ஷதங்கல் | (நகக்கீறல்கள் )|1987 |M.T.வாசுதேவன் நாயர்| மலையாளம்











நகக்‌ஷதங்கல் (நகக் கீறல்கள் ) எம்.டி.வாசுதேவன் நாயரின் எழுத்தில், ஹரிஹரன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான படம்,இது தமிழில் பூக்கள் விடும் தூது என்று மீள் உருவாக்கம் செய்யப்பட்டு1987ஆம் ஆண்டு வெளியானது,அந்த படத்தை எல்லோரும் மறந்தாலும் அதன் பாடல்களை ஒருவர் மறக்க முடியாது, டி.ராஜேந்தர் பாடல்களும் இசையும், அந்த படத்தின் பாடல்களை யூட்யூபில் கேளுங்கள்.

மலையாள சினிமாவில் முக்கியமான முக்கோணக் காதல் க்ளாஸிக் படைப்பு இது.

காலஞ்சென்ற நடிகை மோனிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது இப்படத்துக்கு கிடைத்தது,மோனிஷா பெரும்தச்சன் போன்ற பல உன்னத க்ளாஸிக் படங்களில் நடித்தவர்,இதில் அவர் செய்த கௌரி கதாபாத்திரம் மறக்க முடியாதது, 

வினித் தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் அண்டர்ரேட்டட் நடிகர்,அவர் ஏற்று செய்த ராமு கதாபாத்திரம் மிகவும் கடினமானது,அதை அனாசயமாக செய்திருப்பார்.

புது முகங்களாக கலை சினிமாவில் அறிமுகமாவது சவாலானது, இப்படத்தில் லட்சுமி என்னும் கதாபாத்திரம் செய்த சலீமாவும் மனதில் இருந்து நீங்கா நடிகை, அவர் ஆரண்யகம் என்ற படத்திலும் நன்கு நிரூபனமானவர், அதன் பின்னர் அவர் அதிக படங்கள் செய்யவில்லை.

படத்தில் பாடகர் ஜெயச்சந்திரன் அண்டை வீட்டில் சோம்பித் திரியும் ஒரு நம்பூதிரி இளைஞராக  கேமியோ கதாபாத்திரம் செய்துள்ளார்.

படத்தின் கதை எளிமையானது, அதை எம்.டி.வி அவர்கள் திரைக்கதையில் மெருகேற்றி,மணி அவர்கள் நறுக்கென  எடிட் செய்து ,இந்நாள் கலைசினிமா இயக்குனரான ஷாஜி என்.கருண் அவர்களின் அற்புதமான ஒளிப்பதிவு மிகவும் நேரத்தியாக ,தொலைநோக்காக உள்ளது, ஒளிப்பதிவின் முக்கிய இலக்கணமான Rule of thirds ஐ பின்பற்றி சட்டகங்கள் அமைத்திருந்தார்.

படத்தின் கதை: தாய் தந்தையர் இல்லாத வினித் தன் தாய்மாமன் திலகனுடன் குருவாயூருக்கு சென்று தங்கி இருவார பிரம்மோசவத்தில் கலந்து கொள்கிறார், 

அங்கே ஊரின் பெரிய வக்கில் தரவாட்டு வீட்டின் வயதான பெண்மணி கவியூர் பொன்னம்மாவிற்கு துணையாக வருகிறார் வேலைக்காரப் பெண் மோனிஷா, வினித்திற்கும் மோனிஷாவிற்கும் கவிதைகள் மீதுள்ள நேசத்தால் நட்பு ஏற்பட்டு காதலாகிறது.

வினித்தின்  தாய்மாமா திலகன் மிகுந்த கருமி, கோபக்காரர்,  பத்தாம் வகுப்பு தேறிய வினித்தை ப்ரி டிகிரி சேர்க்காமல் வீட்டு வேலைக்கு உபயோகிக்கிறார்.

வினித்தின் பக்கத்து வீட்டுக்கார நம்பூதிரியாக பாடகர் ஜெயச்சந்திரன் நடித்திருந்தார்,இவர் எதிலும் பிடிப்பில்லாதவர்,கொஞ்சகாலம் ஜோதிடம் படிக்கிறார், அது அலுக்கவும் ஓவியம் படிக்கிறார், அதுவும் அலுத்துப் போக சங்கீதம் படிக்க ஆசை கொள்கிறார்,மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டால் கச்சேரியில் சாதகம் செய்யலாம் என உறுதியாக நம்புகிறார்.

அவருக்கு எப்போதும் பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும், அவ்வப்பொழுது வினித்தை அழைத்துச் சென்று சொக்கட்டான் ஆடுகிறார், தான் திருவனந்தபுரத்தில் அறை எடுத்து முழுநேரம் ஆசான் அமர்த்தி சங்கீதம் கற்கப்போவதாகவும் உடன் உதவிக்கு  வினித்தையும் அழைக்க அங்கே அருகில்  கௌரியும் வசிப்பதால் வினித்திற்கு நிலை கொள்ளவில்லை, அவளைப் பார்க்கத் துடிக்கிறார்,தாய்மாமனிடம் அனுமதி கேட்கிறார்.

வினித்தை தாய்மாமன் திலகன் வெளியூருக்கு விடுவதில்லை, எனவே ஓரிரவில் தன் வளர்ப்பு குரங்கு சகிதம் சொல்லாமல்  வெளியேறுகிறார் வினித்.

புதிதாக வந்த இடத்தில் வினித் நம்பூதிரி ஜெயச்சந்திரனின் சங்கீதம் கற்றலுக்கு சேவகம் செய்கிறார், இஸதிரி,சமையல் வேலை சகலம், என உழைத்துக் கொட்டுகிறார், நம்பூதிரி கல்விக் கட்டணம் செலுத்த நேரத்தை வீண்டிக்காமல் பிரி டிகிரியில் முதல் க்ரூப் சேர்கிறார்.

இடத்திற்கேற்ப வளைந்து போகக்கூடிய குணம் அவரை எல்லோரிடத்திலும் மிகுந்த  நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.கல்லூரியில் மாணவர் தலைவனாகிறார் நல்ல பேச்சாளராகிறார்.

இப்போது தன் தந்தையின் ஜாதகக் கட்டங்களை ஆராய்ந்த நம்பூதிரி தந்தைக்கு நடக்கும் செவ்வாய் திசை அவருக்கு மாரகம் செய்யும் என்று கணிக்கிறார்.எனவே இச்சூழ்நிலையில் தான் தந்தையுடனே இருக்க விரும்புவதாகக் கூறி வினித்தை நிர்கதியில் விட்டு ஊருக்குக் கிளம்புகிறார், 

வினித்திற்கு செய்வதறியாத நிலை, ஆனால் அந்த அனாதைக்கு பெரிய வீட்டு வேலைக்காரப் பெண் மோனிஷா உதவுகிறாள், தன் வீட்டு எஜமானியிடம் வினித்தின் அவல நிலையைக் கூறி வீட்டில் தலைமை சமையல்காரர் குதிரவட்டம் பப்புவிற்கு உதவும் எடுபிடி  வேலையும் தங்குவதற்கு இடமும் வாங்கித் தருகிறாள்.

அவ்வீட்டில் கவியூர் பொன்னம்மாவின் மகன் ஜகந்நாதவர்மா அவ்வூரின்  பெரிய வழக்கறிஞர், அவரின்  ஒரே மகள் சலீமா அழகி என்றாலும் பிறவியில் பேச்சுதிறன் , செவித்திறன் அற்றவள்,மிகுந்த படிப்பாளி ,எனவே தந்தைக்கு மகள் மீது உயிர்.

வழக்கறிஞர் , வினித் கல்லூரியில்  படிப்பது தெரியாமல் நிறைய எடுபிடி வேலைகள் வாங்குகிறார்,ஆனால் சலீமா அவருக்கு நிறைய உதவுகிறாள்.

ஒரு நாள் வழக்கறிஞர் வினித் படிக்கும் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்க ,வினித் வரவேற்புரை நல்கி அவர் எழுதிய புத்தகங்களைக் குறிப்பிட்டு அதில் மேற்கோள் காட்டி பேசி அவரை  அசரடிக்கிறார். 

வீட்டுக்கு வந்தவர் அவரைக் கொண்டாடுகிறார், அவரின் அடுக்களைப் பணிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தவர், தன் குமாஸ்தா வேலைகளுக்கும்,நிர்வாக வேலைகளுக்கும் வினித்தையே உபயோகப்படுத்துகிறார், அவரின் கல்லூரி கட்டணமும் செலுத்துகிறார்,

சலீமாவுக்கு வினித்தின் நல்ல பண்பான குணத்தின் மீது மையல் தோன்றி காதலாகிறது, இதை அவள் வேலைக்கார்பெண் மோனிஷாவிடம் பகிர அவளுக்கு பயம் வருகிறது,

இதனால் காதலன் ஜென்ம நட்சத்திரத்தன்று அவனுக்கு வில்வ மாலை அணிவித்து கோவில் வாசலில் கந்தர்வ மணம்  போல செய்கிறாள், அன்று இரவே அவன் அறைக்கு வந்து அவனைத் தேற்றி ஆரத்தழுவி தன்னை விருந்தாக்குகிறாள்,

இப்போது அப்பாவின் ஈமைக்கிரியைகளை செய்து விட்டு,சங்கீதத்தைக் கைகழுவிவிட்டு வினித்தைப் பார்க்க வருகிறார் நம்பூதிரி ஜெயச்சந்திரன், இம்முறை வடக்கே காசி,மதுரா,கயா என தேசாந்திரம் போவது தான் தன் லட்சியம் உடன் நீ வர வேண்டும் என உரிமையுடன் அழைக்கிறார், வினித் விட்டாரே ஓட்டம்,தெறித்து ஓடுகிறார்.

ஊருக்குச் திரும்பிச் சென்ற நம்பூதிரி தாய்மாமனிடம் வினித் இருக்குமிடத்தைச் சொல்ல,இங்கே வினித்தை காண கோபமாக வருகிறார்   திலகன், ஆனால் வினித்தின் செல்வாக்கான நிலையினைக் கண்டவர், அவரை ஆதூரமாய் தழுவிக் கொள்கிறார், ஊருக்கு மகிழ்ச்சியுடன் திரும்புகிறார்.

இப்போது வினித்தின் நன்றிக்கடனுக்கு அந்த தரவாட்டு வீட்டாரால் உடனடி பரீட்சை வைக்கப்படுகிறது.

வழக்கறிஞரின் தாயார் கவியூர் பொன்னம்மா படுத்தபடுக்கையாகிவிட்ட படியால் அவர் பேத்தி சலீமாவின் எதிர்கால நிலை குறித்து மிகுந்த கவலை கொள்கிறார்,

மாற்று திறனாளியான சலீமாவை யார் திருமணம் செய்வார்? என சதா அனத்துகிறார், அவரே வினித்திற்கு  தரவாட்டு வீட்டின் முகலட்சணம் உள்ளது,எனவே வினித்தே சலிமாவைக் கைபிடிக்க வேண்டும் என்கிறார்,அவனுக்கு 17 வயதே ஆவதால் தற்காலம் சிறியதாக மணமுடித்து அவன் பார் கவுன்சில் தேறியதும் பெரிதாக திருமணம் நடத்தலாம் என மகனிடம் யோசனை வைக்கிறார்.

 வினித் இருக்கும் அவல நிலைக்கு  அவரால் இந்த கட்டாயத் திருமணத்துக்கு எந்த மறுப்பும் சொல்ல இயலவில்லை, ஒரு புறம் கந்தர்வ மணம் புரிந்த காதலி மோனிஷா,

மறுபுறம் தன்னை நேசிக்கும் பணக்கார வீட்டுப் பெண் சலீமா, மற்றொருபுறம் தன் படிப்பிற்கும் எதிர்காலத்துக்கும் அஸ்திவாரம் போட்டு கட்டிடமே எழுப்பித் தரும் தரவாட்டுக் குடும்பம் என யாரைத் தான் திருப்தி செய்வது? என வினித் தவியாய் தவிக்கிறார்,இனி என்ன ஆகும் ? படம் அவசியம் பாருங்கள்.

படத்தில் ஓஎன்வி குருப் அவர்கள் எழுதி பாம்பே ரவி இசையமைத்த நான்கு அற்புதமான பாடல்கள் உள்ளன,

மஞ்ஞள் பிரசாதவும் நெற்றியில் சார்த்தி என்ற பாடல் சித்ரா பாடினார்,அவருக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.https://youtu.be/Bkj0jyd-SMA

இதில் ஜெயச்சந்திரன் பாடிய கேவல மர்த்ய பாஷ  பாடல் மிக அருமையான ஒன்று,
https://youtu.be/rVpXFyFz2yo
 அவர் பாடிய துக்கடாவான ஒரு கர்நாடக சங்கீத கீர்த்தனைப் பாடலும் உண்டு

தாஸேட்டா குரலில் ஆரேயும் பாவ காயகனாக்கும் ஆத்ம சௌந்தர்யமானுநீ பாடல் மிக அற்புதமானது,மனதில் ரீங்காரமிடுவது.https://youtu.be/_mklJayifLA

தாஸேட்டா குரலில் மற்றொரு பாடலான நீராடுவான் நிலையில் மிக ரம்மியமானது.https://youtu.be/GoNY9vSpfmI

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

வில்கானுண்டு ஸ்வப்னங்கள் திரைப்படத்தில் ஒரு வஞ்சம் தீர்க்கும் காட்சி





வில்கானுண்டு ஸ்வப்னங்கள் திரைப்படத்தில் ஒரு வஞ்சம் தீர்க்கும் காட்சிக்கு எழுத்தாளர் ,இயக்குனர் MT.வாசுதேவன் நாயர் எப்படி treatment வைத்திருக்கிறார் பாருங்கள், simple and powerful.

https://youtu.be/UcyxeiVSa-Y

வஞ்சத்தின் முன்கதை : 

ராஜகோபாலின் தரித்திரகாலத்தில் அவரை தரவாட்டில் தங்கநெக்லேஸ் திருடினார் என்று தூணில் கட்டி வைத்து அடித்த குரூப்பு இன்று கல்ஃப்வாசத்தால் கோடீசுவரனாகிவிட்ட ராஜகோபால் வீட்டிற்கு பம்மியபடி அவரைக் காண வருகிறார்,காத்திருக்கிறார்.

ராஜகோபாலன் பணியாளிடம் நான் சொல்லும் போது ஸ்காட்சும் இரண்டு கிளாஸும் கொண்டு வரச் சொல்கிறார்.

குசலவிசாரிப்புகள் முடிந்ததும் , இவர் நண்பன் மாதவன்குட்டி(மம்மூட்டி) முஸ்லிம்களுக்கு கோவில் அருகே உள்ள நிலங்களை விற்றுவிடப் போகிறாரே? என்று தான் வாங்கியதாக சமாதானம் சொல்கிறார் குரூப்பு, 

ராஜகோபால் பணியாளிடம் குப்பியும் கிளாஸிம் கொண்டுவரச் சொல்ல, குரூப்பிற்கு 300₹ வெளிநாட்டு சரக்கிற்கு  நாக்கு ஊறுகிறது, 

queen anne ஸ்காட்சை நன்கு straight ஆகவே ஊற்றி போதை ஏற்றிவிட்டு ராஜகோபால், அவர் போதும் என்கையில் நீங்கள் சாராயம் ஒரு குப்பி குடிப்பவர் ,உங்களுக்கு இது எம்மாத்திரம்?,குடியுங்கள்  குரூப்பு என்கிறார், போதையில் கிளாஸ் பிடித்திருக்கும் குருப்பை எழுந்து நில்லுங்கள் என்கிறார்.

குருப்பால் நிற்க முடியவில்லை,ஆத்திரத்தில் என்னை ஒன்றும் செய்துவிடாதே என்று கையெடுத்து கும்பிடுகிறார், அன்று காணாமல போன நெக்லஸ் என்ன விலை சொல்? ,இப்போது தருகிறேன் என்கிறார் ராஜகோபால், அவர் குற்ற உணர்வில் விக்கித்து ஐயோ அது பின்பு   புழக்கடையில் வேலைக்காரி கண்டெடுத்து தந்து விட்டாள், அன்று நடந்ததற்காக கால் பிடித்து மன்னிப்பு கேட்கிறேன்,மன்னித்தால் தான் இங்கிருந்து போவேன்,  என்னை மன்னி,என்னை எதுவும் செய்து விடாதே என்கிறார் குரூப்பு.

 ராஜகோபால் ,நான் துபாயில் கம்பி வளைத்துள்ளேன், கலவை எந்திரத்தில் பணியெடுத்துள்ளேன், இந்த காப்பு படிந்த கையால் உங்களை எதுவும் செய்யப்போவதில்லை,  நான் உங்களை  மன்னிக்கப் போவதில்லை, ஆனால் நன்றி சொல்கிறேன்,  
டிரைவரை அழைத்தவர் இவரை வீட்டில் 
கொண்டு விடு என்கிறார் , 

அவர் ஐயோ வீட்டில் நாராயணி ஏதாவது சொல்வாளே? என அஞ்ச,

இவர்,  உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்கனும் இப்போது போகத்தான் வேண்டும் என்று டிரைவரிடம், இவரை வீட்டில் அல்லது கடைவீதியில் கொண்டு விடு,என்று சொல்லிவிட்டு 
உள்ளே போகிறார்.

இந்த குரூப்பின் நிஜ பெயரும் குரூப்பு தான் பாஸ்கர குரூப்பு, இயக்குனர்  மணிரத்னத்தின் உணரு திரைப்படத்தில் இவர் வேலையில்லாத மீனவர் வேடம் அற்புதமாகச் செய்தார், இவரை ஒளிப்பதிவாளர் ராமசந்திரபாபு நல்ல நடிகர் என்று மணிரத்னத்திற்கு பரிந்துரை செய்தாராம்.
அந்த காட்சி இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10158409861206340&id=750161339

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

வில்கானுண்டு ஸ்வப்னங்கள் (கனவுகள் விற்பனைக்கு)| 1980 | மலையாளம் | M.ஆசாத் | M. T. வாசுதேவன் நாயர்



















வில்கானுண்டு ஸ்வப்னங்கள் (கனவுகள் விற்பனைக்கு)| 1980 | மலையாளம் | M.ஆசாத் | M. T. வாசுதேவன் நாயர்

"பூதலம் நிண்டே பத்ராசனம் " என்ற பாடல் யூ ட்யூபில் முதலில் பார்க்கையில் முழுக்க துபாயின் 1980 ன் skyline மற்றும் அமீரகத்தின் சூழலை அப்படி அள்ளி வந்திருந்தார் ஒளிப்பதிவாளர் ராமசந்திரபாபு அவர்கள்,
அந்த visuals உடனே என்னை படமும்  பார்க்க வைத்தது, இப்படத்தின் மூலம் தான் மலையாள நடிகர் சுகுமாரன் என் மனதில் பதிந்தார்.

நடிகர் சுகுமாரன் 1970 களில் மலையாள சினிமாவில் பிரபலமான  நட்சத்திரமாக உருவெடுத்தவர்.  1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் முற்பகுதியிலும் M.G.சோமன் மற்றும் ஜெயனுடன் இணைந்து மலையாள சினிமாவின் trio சூப்பர் ஸ்டார்கள் மூவரில் ஒருவராக அவர் கருதப்பட்டார், கட்டையான உருவம், சுருட்டை முடி , முட்டைக்கண்கள், தொங்கிய கன்னங்கள், எம்ஜியார் போன்ற முகவாய் குழி, ஒழுங்கில்லாத பற்களில் இடைவெளிகள் என ஒரு சாதாரண தோற்றம் கொண்ட நடிகர், ஆனாலும் மலையாள சினிமாவில்   பல மறக்கமுடியாத கதாபாத்திரங்களை அனாயசமாய் செய்தவர்.

பின்னர், 1980 கள் மற்றும் 1990 களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன்  கதாபாத்திரங்களிலும்  நடித்து பெயர் பெற்றார்.  
1978 ஆம் ஆண்டில், M. T. வாசுதேவன் நாயரின் பந்தனம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை பெற்றார்.  ஒரு தயாரிப்பாளராக இரகள், படயணி போன்ற படங்களைத் தயாரித்தார்.
16 ஜூன் 1997 ஆம் ஆண்டு  நடிகர் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்.  இறக்கும் போது அவருக்கு வயது 49 மட்டுமே, இரகள் திரைப்படத்தில் மூன்று மகன்களில் ஒருவர், மனசாட்சிமிக்க , அந்த குடிக்கு அடிமையான சன்னி கதாபாத்திரத்தை நடிகர் சுகுமாரன் அவர்கள் அத்தனை தத்ரூபமாக செய்தார்.

வில்கானுண்டு ஸ்வப்னங்கள் திரைப்படத்திற்கு  எம்.பி.ஸ்ரீனிவாசன் அவர்கள் இசை, கவிஞர் ஸ்ரீதரனுண்ணி பாடல் எழுதினார்.
M.T.வாசுதேவன் நாயர் படத்தின் கதை திரைக்கதை வசனங்களை எழுதினார், M.ஆசாத் இயக்கம், 

ராஜகோபால் (சுகுமாரன் )துபாய்க்கு கள்ளத்தோணியில் வந்து, தன் அண்டை கிராமத்தில் இருந்து வந்து இங்கு பெட்டிக்கடை நடத்தும் மம்மக்கா (பகதூர்) என்பவர் சிபாரிசில் வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக  மேனேஜராக உயரும் கதை  ,
அதை நம்பும் படி ரத்தமும் சதையுமாக படமாக்கியுள்ளார் இயக்குனர் M.ஆசாத், சில வருடங்களுக்கு முன்னர் வந்த  பத்தேமாரிக்கு எல்லாம் முன்னோடி இப்படம்,

படத்தில் மாலதி என்ற அழகிய நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிகை  ஸ்ரீவித்யா ,
நடிகர் மம்மூட்டியின் முதல் படம் இது,  மாதவன் குட்டி என்ற குடிகார நண்பன் கதாபாத்திரத்தில் வருகிறார் , அவருக்கு நடிகர்  சீனிவாசன் குரல் தந்துள்ளார்,

பாஸ்போர்ட் விசா எதுவும் இல்லாமல் ராஜகோபால் (சுகுமாரன்) துபாய்க்கு, பகீரதப் பிரயத்தனப்பட்டு பம்பாயில் கள்ளத் தோணி ஏறி புறப்படுகிறார், உடன் ஆறு பேர்  பயணிக்கின்றனர்,  இவர்கள் ஊரார் காலம் காலமாக சொல்லக் கேட்ட  பலப்பல துபாய்  கதைகள், தோணியில் ராஜகோபால் தூங்க கண்களை மூடினால் கண்களில் விரியும் ஊராரின் ஏச்சு பேச்சுக்கள்,அம்மா சமையல்காரியாக இருக்கும் தரவாட்டு வீட்டில் தங்கநெக்லஸ் திருட்டு ஒன்றில் இவரை சந்தேகித்து  தூணில் கட்டி வைத்து அடித்த ஆப்த நண்பர்கள் ,ஊர் பெரியவர் குருப், சம்பாதித்து அவர்கள் முகத்தில் கரிபூச வேண்டும் என்ற வெறியில் ஆறு நாட்களாக இந்த தோணியில் பயணம் தொடர்கிறது, இவருடன் இருக்கும் சந்திரனுக்கு தீராத வாந்தி ,மயக்கம்,  வயிற்றுப்போக்கு, தண்ணீர் குடித்தாலும் பச்சை மீனின் மணம் தோன்றி உடனே வாந்தி,
அழகான மற்றும் பணக்கார "துபாய்" பற்றிய அவர்களின் கனவுகளைத் தேடி புறப்பட்ட லட்சக்கணக்கானோரில் இவரும் ஒருவர் ஆகிறார், 

தோணி  விடியலில் ஃபுஜைராவில்  கடற்கரைக்கு ஒரு மைல் தொலைவில் இருக்கையில் படகோட்டி  , எங்கே இராணுவத்தால் பிடிபடுவோமோ? என்று அஞ்சி இவர்களை எழுப்பி குதி என்கிறான், குதிக்காதவர்களைத் தள்ளியும் விடுகிறான்.  
அங்கு உடன் வந்த ஆறுபேர் அலையில்லாத கடலில் கரைக்கு நீந்துகிறார்கள்,வெவ்வேறு திசையில் செல்கின்றனர் , இவர் சந்திரனை காப்பாற்றி நீந்தி அழைத்து வந்தாலும் கரையில் சந்திரனால் பிடித்து நிற்க முடியவில்லை, இறந்து போய்விடுகிறார், சுற்றிலும் வரண்ட மலைகள், புதையும் மணல்.

தான் கனவு கண்ட துபாய் இப்படி தரிசுப் பாலைவனமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் ராஜகோபால் , 
ஏதாவது கட்டிடம் தென்படும் வரை கடும் வெயிலில் தாகமெடுக்க தலைசுற்றலுடன் நடக்கிறார்,ஒரு நல்ல மனம் கொண்ட அரபி pickup truck ஓட்டி வந்தவர் இவருக்கு நீர் அருந்தக் கொடுத்து  ஷார்ஜா வரை கொண்டு விடுகிறார்.

அது முதலே இவரது மறுபூமி கதை தொடங்குகிறது. 
'பெர்ஸியா' வில் தலையெழுத்து தான் மிகப்பெரிய வல்லமை பொருந்திய  சான்றிதழ் என்பதை விரைவில் கண்டறிகிறார். 

துபாயில் முதலில் கடுமையான கட்டிட வேலைகளைச் செய்கிறார்,
ஊரில் மகனிடம் இருந்து கடிதம் வரவில்லை என்று மனம் நொந்த இவரது  அம்மா நோய்வாய்பட்டு இறந்த தகவல் ஊர்க்காரர் மூலம் கிடைக்கிறது , ஆனால் இவருக்கு ஊருக்குப் போக பணமில்லை,விசா இல்லை ,பாஸ்போர்ட் இல்லை ,
தனது  ஊர்க்கார நண்பர் மம்முக்காவை பல மாதங்கள் தேடி கண்டுபிடிக்கிறார். மம்முக்கா (பகதூர் )வலது கை தருவதை இடது கை அறியாமல் உதவுபவர், சாதி மதம் பாராமல் எத்தனையோ பேருக்கு வேலை வாங்கித் தந்தவர், அவர் தனக்குத் தெரிந்த கம்பெனி மேலாளரிடம் நேரில் சென்று மன்றாடி ராஜகோபாலுக்கு வேலை வாங்கித் தருகிறார்.,

அது ஒரு நல்ல அக்கவுண்ட் உதவியாளர் வேலை ,  ராஜகோபால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறார், கம்பெனியின் எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கிறார், தன் மேலாளருக்கு அதை தைரியமாக உரைக்கிறார்.
இப்போது மம்முக்கா மகன் அபு(சீனிவாசன்) அனுப்பிய கடிதத்தில் ராஜகோபாலனின் திருமண வயதில் இருந்த தங்கை அம்மணி கோவில் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக எழுதியிருப்பதை காட்டுகிறார், இதயம் கல்லாய் மாறி  உறைந்து நிற்கிறார் ராஜகோபாலன், ஆறுமாதத்தில் அடுத்தடுத்து இரு மரணங்கள் ,கண்ணீர் வறண்டு அழக்கூட தோன்றவில்லை இவருக்கு.

பின் வந்த நாட்களில் லட்சியத்துடன் கடுமையாக உழைத்து தன் மேலாளருக்கும் அரபாப் முதலாளிக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார் ராஜகோபால் , இப்போது மேலாளர் மேனோன் ஓய்வு பெறுகையில் அந்த மேலாளர் பதவி ராஜகோபாலுக்கு கிடைக்கிறது, உடன் கார், வீடு, நல்ல பெரிய சம்பளம் அனைத்தும் தேடி வருகின்றன, மம்முக்காவின் மகன் அபு முன்னின்று இவருக்கு ஊரில் அழகிய ஆற்றின் முன்பாக வீடு கட்டத் துவங்குகிறார்.

இவரது காரியதரிசி அலீஸ் ஆங்கிலோ இந்தியர்,இவருக்கு தானே விரும்பி வந்து படுக்கையில் விருந்தாகிறாள், மறுநாள் விடியலில் தன் தம்பிக்கு ஒரு NOC கேட்கிறாள். அப்போது விசாவுக்கு பதிலான NOC என்ற no objection certificate மட்டும் இருந்தால் போதும் ஒரு ஏழை இளைஞன் துபாய்க்கு நேர்வழியில் வந்து விடலாம்,இவர் இதற்கு தான் என்னோடு ஈஷினாயா என திகைத்தாலும் அவளின் குடும்பத்தின் கதை கேட்டவர், ஆகட்டும் முயன்று பார்க்கிறேன் என்கிறார்,பின்னாளில் கம்பெனியில் ஒரு NOC ம் தருகிறார், அலீஸ் நன்றியுடன்  இவரால் ஒரு குடும்பம் முன்னேறப் போகிறது என்கிறாள்,  ஆண்களுக்கு சதையை விருந்தாக்கினால் தான் உதவுவார்கள் என தப்புக்கணக்கு போட்டதற்கு வருந்துகிறாள் ,முன்னாள் மேலாளர் மேனோன் தன்னை ஒரு NOC வேண்டி பல இடங்களில் வருத்தி ஆசை காட்டி உபயோகித்து உபேஷித்ததை பகிர்கிறாள் அலீஸ்,  ராஜகோபாலனும் அவளை பயன்படுத்தியதில் தனக்கு குற்ற உணர்வு இருப்பதை சொல்கிறார்.இப்போது தனிமையை விரட்ட மதுவை துணைகொள்கிறார்.

இவரின் நண்பர் மம்முக்காவுக்கு கார் விபத்து நேர்கிறது, தலையில் பெரிய காயம்,கை எலும்பு முறிவு, ஒரு மாதம் மருத்துவமனையில் இவர் தினமும் சென்று அமர்ந்து பார்த்ததில் நர்ஸ் மாலதி (ஸ்ரீவித்யா) நல்ல தோழியாகிறார்,  வார இறுதிகளில் தன்னை தேடிவந்து உடன் தங்கி உணவு தயாரித்து இவர் மீதான புரிதலில்  தன்னையும் விருந்தாக்குகிறார் மாலதி.
மாலதிக்கு இவர் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டுவதேயில்லை, தான் விடுமுறைக்கு இரண்டு மாத விடுப்பில்  ஏட்டுமானூர் போவதாயும் இவர் அப்போது தன் வீட்டிற்கு வர வேண்டும் , தன் தந்தையிடம் இவர் பற்றி நிறைய கடிதங்கள் எழுதியிருப்பதாகவும் கண்களில் அத்தனை ஏக்கம் தேக்கி சொல்கிறார் மாலதி, 

மாலதியின் குடும்பம் ஊரில் நடுத்தரக் குடும்பம், ஸ்ரீ தனத்திற்கு பணமும் நகைகளும் சேர்க்க இங்கு துபாய்க்கு ஆறு வருடங்களுக்கு முன்பாக வந்தவர், தன் பக்கத்து ஊர் இளைஞர் ராஜகோபாலிடம் பேசி நட்பாகி விரும்பி,  மணமுடிக்காமலே சுகித்திருக்கிறார்,  இந்த துணிச்சலான நர்ஸ் மாலதி கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக உருமாறியிருந்தார் நடிகை ஸ்ரீவித்யா, 

தெய்வானுகிஹத்தில் பெரும் பணம் சம்பாதித்திருக்கிறார் ராஜகோபால் , ஊரார் வியந்து பார்க்க வீட்டைக் கட்டி முடிக்கிறார்,புழையோரத்தில் ஒரு வீடு.

தன் அம்மா சமையல்காரியாக இருந்த பெரிய தரவாடு இன்று நொடித்து ஜப்திக்கு வர இருக்கிறது, அந்த தரவாட்டின் பெண் வாரிசான ஸ்ரீதேவியை இவர் சிறுவயதில் விரும்பியிருக்கிறார், அவ்வீட்டார் மற்றும் ஸ்ரீதேவியின் அண்ணன் நேரே வந்து இவரிடம் ஸ்ரீதேவியை மணந்து அவளையாவது  இந்த கடன் துயரில் இருந்து காப்பாற்றும் படி கெஞ்ச இவர் மாலதிக்காக சற்று யோசித்தவர் சிறுவயது காதலி ஸ்ரீதேவிக்காக சம்மதிக்கிறார்.அங்கு செல்கையில் இவரைக் கட்டி வைத்த அந்த மரத்தூண் விரிசல் விட்டிருப்பதை தடவிப் பார்க்கிறார்.

நர்ஸ் மாலதியிடம் இருந்து வந்த இரண்டு தந்திகளுக்கும் இவர் நெடுநாளாக பதில் சொல்லவில்லை , அவள் ஊருக்கு நேரில் சென்றும் பார்ப்பதில்லை. மாலதியின் அப்பாவே இவர் வீட்டுக்கு வந்தவர் இவருக்கும் ஸ்ரீதேவிக்குமான திருமண ஏற்பாடுகள் நடப்பதைப் பார்த்து எதுவும் பேசாமல் எழுந்து வந்து விடுகிறார் மானஸ்தர்.

தன் தங்கை குளத்தில் விழுந்து சாகக் காரணம் ஏழ்மையல்ல , அவளின் நான்கு மாத கர்ப்பம் என்று நண்பன் மாதவன் குட்டி (மம்மூட்டி)குடித்து விட்டு வந்து சண்டை இடுகையில் அறிகிறார்,அவனுக்கு ஸ்ரீதேவி மீதான காதலில் இப்படி பொறாமையில் பிதற்றுகிறான் என நன்கு உதைத்தவர்.
அபுவிடம் அதை கேட்டு உறுதி செய்கிறார், தன் தங்கை அம்மணியை ஏமாற்றிய நண்பனின் தங்கை  ஸ்ரீதேவியை (ஜலஜா ) இவர் மணம் முடிக்க சம்மதம் சொன்ன நிலையில்,  திருமண நாளன்று ஸ்ரீதேவியின் அண்ணனை ஊர் பொதுவில் வைத்து அடித்து துவைத்து அவமானப்படுத்துகிறார், திருமணத்தை நிறுத்தி விடுகிறார், தான் இப்போது பெரும் கோடீஸ்வரன் என்று ஊரார் முன்பாக மார்தட்டுகிறார்.

ஸ்ரீதேவிக்கு வேண்டி ராஜகோபால் கால் பிடிக்கிறேன் என்று சமாதானம் சொன்னவனிடம்  ஸ்ரீதேவி மறுக்கிறாள், நம் தரவாட்டுக்கு பெருமை உள்ளது, அதைச் செய்யலாகாது என்கிறாள். ஸ்ரீதேவியின் அண்ணன் தங்கை திருமணம் நின்றதாலும், தரவாடு வீடு கடன்காரர்களால் கோர்ட்டில் தோற்று  ஜப்திக்கு வர இருப்பதாலும், அன்றிரவே விஷம் குடித்து இறந்து விடுகிறான். 

தன் கஷ்டப்பாட்டில் உதவாத ஊராரையும் தங்கையை ஏமாற்றி கர்ப்பமாக்கி அவள் சாக காரணமானவனையும் ராஜகோபால்  பழி வாங்கி விட்டாலும் அதன் மூலம் நிம்மதி கிடைப்பதில்லை,

இப்போது தான் விரும்பும்  ஸ்ரீதேவியை திருமணம் செய்ய அவள் தரவாடு தேடிப் போகிறார்,கதவைத் தட்டுகிறார் , ஆனால் காலம் கடந்துவிடுகிறது, அவள் பழைய தரவாட்டுப் பெருமைகள் பேசி தன் அண்ணன் இறந்ததற்கு இவர் காரணம் என்று இவரை வெளியே போகச் சொல்கிறாள், இனி ஒருக்கிலும் வரக்கூடாது என கதவை அடித்து சாத்துகிறாள், ராஜகோபால மேனனுக்கு அங்கே முதல் புறமுதுகு.

இப்போது தன்னை விரும்பும் நர்ஸ் மாலதியை திருமணம் செய்ய ஏட்டுமானூர் வீட்டுக்குத் தேடிப் போகிறார், அங்கும் காலம் கடந்து விடுகிறது, தந்தை சொன்ன டாக்டர்  வரனை திருமணம் செய்து கொண்டு நேற்றே மாலதி துபாய் சென்றுவிட்டதை அறிகிறார் .ராஜகோபால மேனனுக்கு  இங்கே இரண்டாம் புறமுதுகு.

சொந்த ஊரில் ஊரார் வியக்க கட்டிய வீடு , ஆனால் அங்கு நிலவிளக்கேற்ற ஒரு பெண் இல்லை, இரண்டு மாத விடுப்பு கரைகிறது,யாருக்காக இங்கே  இருக்க வேண்டும்? என்று மீண்டும் துபாய் புறப்படுகிறார், வீட்டு கதவில் வீடு விற்பனைக்கு என்று அபுவிடம் சொல்லி பலகை மாட்டச் சொல்கிறார்  .

தன்னிடம் வந்து இரண்டு மாத காலங்கள் கார் ஓட்டிய ,  கள்ளத் தோணியில் உடன் பயணித்த சந்திரனின் அப்பாவுக்கு நிறைய பணம் தருகிறார், அவர் ஐயோ போதும் என்கிறார்,அவர் மகனை தேடச் சொல்ல மீண்டும் விண்ணப்பிக்க, இவர் அவனை இனி தேட வேண்டாம், சந்திரனும் நானும் ஒன்றாகத் தான் தோணியில் பயணித்தோம்,அவனைத்  தேடிப் பயனில்லை இனி தேடாதீர்கள் என்று சொல்லிவிட்டு அவர் முகத்தை பாராமல விமான நிலையத்திற்குள் நுழைகிறார்.கதை நிறைகிறது.

வேலை தேடி, வளைகுடா நாடுகளுக்கு குடிபெயர்ந்த மக்களின் உணர்வுகளை இத்திரைப்படம் அத்தனை நுணுக்கமாக சித்தரித்தது, அவர்கள் ஆசைக்கனவுகளை தியாகம் செய்து தான் பொன் பொருள் சம்பாதித்தனர்,70 மற்றும் 80 களில் சுமார் எண்பதாயிரம் இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவுக்கு குடிபெயர்ந்தனர், இது அவர்கள் ஒவ்வொருவரின் கதையும் கூட. 
 இந்தியாவில் உறவினர்கள் "கல்ஃப்" இந்தியரின் செல்வத்தை மட்டுமே எவ்வாறு கவனிக்கிறார்கள் என்பதை, கல்ஃப் வாழ்க்கை சொர்க்கம் போன்றது என்ற தூரத்துப்பச்சை  மனநிலையையும் இத்திரைபடம்  நன்கு உரைக்கிறது.  
அரேபிய பாலைவனத்தின் குன்றுகள் மற்றும் பாலைவன வெப்பத்தின் மத்தியில் வாழும் லட்சக் கணக்கான இந்தியர்களின் உண்மையான வாழ்க்கையின் காலக் கண்ணாடி வில்காணுண்டு ஸ்வப்னங்கள் (கனவுகள் விற்பனைக்கு).

மலையாளத்தில் M.T.வாசுதேவன் நாயர் இயக்கத்தில் தேவலோகம் என்ற  திரைப்படம் பாதியில் நின்றதால், எம்.டி.  முஹம்மது குட்டி என்ற நடிகராய் மாறிய வழக்கறிஞருக்கு  அவர் கதை திரைக்கதை எழுதி எம்.ஆசாத், இயக்கிய வில்கானுண்டு ஸ்வப்னங்கள் திரைப்படத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார். 

இப்படத்தில் ஒரு தள்ளுமுள்ளு காட்சியில் முகமது குட்டி சுகுமாரன் என்ற உச்ச நட்சத்திர நடிகருக்கு  எதிராக கிடைத்த சிறு கதாபாத்திரத்தில் கவனிக்கப்படக்கூடிய நடிகராக தன்னை நிரூபித்தார் அவர் .  
வில்கானுண்டு ஸ்வப்னங்கள் படப்பிடிப்பின் போது, ​​நடிகர் ஸ்ரீனிவாசனும் மம்முட்டியும் நெருக்கமாயினர், அவர்களது நட்பு இன்று வரைத் தொடர்கிறது. 

பின்னாளில் கே.ஜி.ஜார்ஜ் மேளா திரைபடத்தை இயக்கியபோது, ​​அவர்  துணிச்சலான மோட்டார் சைக்கிள் ஜம்பர் கதாபாத்திரத்திற்கு  அழகான திறமையான ஒரு புதிய நடிகரைத் தேடினார். எர்ணாகுளத்தில் ரேமான் சர்க்கஸில் படப்பிடிப்பு  நடந்தபோது மம்முட்டியின் பெயரை நடிகர் ஸ்ரீனிவாசன் தான் இயக்குனருக்கு பரிந்துரைத்தாராம்.

கல்ஃப்வாசிகள் இந்த திரைப்படம் கண்டிப்பாக பாருங்கள் யூட்யூபில் சப்டைட்டில் இன்றி கிடைக்கிறது.

#mt_வாசுதேவன்_நாயர் ,#சுகுமாரன்,
#மலையாளம்,#ஸ்ரீவித்யா, #ராமசந்திரபாபு

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

இடவழியிலே ஒரு பூச்ச மிண்டா பூச்ச (சந்திலே ஒரு பூனை பேசாப்பூனை )|1979

 














இடவழியிலே ஒரு பூச்ச மிண்டா பூச்ச (சந்திலே ஒரு பூனை பேசாப்பூனை )|1979


எழுத்தாளர் M.T. வாசுதேவநாயரின் கதை திரைக்கதையில் இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் வெளியான அற்புதமான படைப்பு இது.


இப்படத்தின் திரி துரோகம் , அன்பு மனைவியின் துரோகத்திற்கு பின் அவளை  கணவன் அடியோடு புறக்கணித்தால் அது  எத்தனை கொடூரமாக  தண்டனையாக இருக்கும் என்று படம் நன்கு உரைக்கிறது.


நாம் unfaithful (2002)ஹாலிவுட் படம் பார்த்திருப்போம் ,அதில் Richard gere மனைவி diane lane ன் துரோகத்தை துப்பறிவாளன் மூலம் அறிந்தவர் அவளின் புதிய காதலனை நேரில் சென்று பார்ப்பார்,  அவன் இவருக்கு தன் வீட்டைச் சுற்றிக்காட்டுகையில்  விக்கித்து உணர்ச்சி வசப்பட்டு இவர் மனைவிக்கு இவர் பரிசளித்த snow globe அங்கிருப்பது கண்டு தாங்கமுடியாமல் அதைக்கொண்டு அவன் தலையில் அடித்துக் கொலை செய்துவிடுவார், இப்படத்தின் மூலப்படைப்பான  ஃபரெஞ்சு வடிவம் unfaithful wife 1969 படத்திலும் அச்சு அசலான இதே கதை தான், 


இந்த "இடவழியிலே ஒரு பூச்சா மிண்டா பூச்சா" கதையில் எழுத்தாளர் M.T. வாசுதேவநாயர் மனைவியின் துரோகத்துக்கு வைத்த treatment மிகவும் அபாரமானது, தனக்கு துரோகம் செய்யும் மனைவி ரோஹினி  (ஸ்ரீவித்யா ) காதலன் வீட்டின்  கதவு திறந்து வெளியே வரும்வரை காரில் காத்திருந்த கணவர் ராஜு(மது ),

ரோஹினி Iam ready , வீட்டுக்குப் போகலாமா? என்று கேட்டு அவளைக் காரில் ஏற்றிக் கொள்கிறார்.


பின்னர் காதலியை வழியனுப்பி விட்டு தன்னிடம் மாட்டிக்கொண்டு விக்கித்து நிற்கும் பாக்யநாதனிடம் (M.G. சோமன்) நேரே சென்று thank you என்கிறார். 


குற்ற உணர்வு கொண்டு அழுதபடி வரும் மனைவியை நாம் தனியாக சென்று சற்று பேசுவோம் என்று கடற்கரைக்கு கூட்டிப் போகிறார், நம் மகளை போர்டிங் பள்ளியில் சேர்க்கப் போகிறேன், என் IAS பணி ஐ சாக்காக வைத்து ஊர் ஊராக தான் போய்க்கொண்டே இருப்பேன், உனக்கு என்னால் எந்த தடையுமில்லை, உனக்கு இந்த கல்லூரி பேராசிரியை வேலை உண்டு போதிய வருமானம் உண்டு என்றாலும் மாதம் ஒண்ணாம் தேதி உனக்கு ஜீவனாம்சம் அனுப்பி விடுவேன், உன்னை நாங்கள் இனி தொந்தரவு செய்ய மாட்டோம், என்னை என் மகளை நீ பார்க்கக் கூடாது ,இது தான் நமக்கான ஒப்பந்தம், எத்தனை அழ வேண்டுமோ அழுதுவிடு, அதன் பிறகு அதைப் பார்க்க நான் உன்னருகில் இருக்க மாட்டேன் என்கிறார் கணவர் மது, கால் பிடித்து கலங்கி கதறும் ஸ்ரீவித்யாவை get up என்று அதட்டி வீட்டிற்கு கூட்டிப் போனவர்,தன் வீட்டை அவளுக்கு விட்டு தன் மற்றும் மகள் துணிமணிகளை பெட்டியில் அடுக்கி காரில் கட்டி தன் விசுவாசமுள்ள சமையல்காரர் சங்கராடியையும் கூட்டிக்கொண்டு ஸ்தலம் விடுகிறார்.போகையில் மகள் நடந்தது ஏதும் அறியாமல்  டாட்டா காட்டிக் கொண்டே இருக்கிறாள்.


இந்தப் படத்தில் ஸ்ரீவித்யா செய்த இந்த படிதாண்டும் பத்தினி கதாபாத்திரம் நம் தமிழ் ரசிகர்கள் அறியாத ஒன்று, கணவன் தந்த விடுதலைக்குப் பின் காதலன் IFS துறை ஊழியனான M.G. சோமனிடமே  திரும்பிச் செல்கிறார் , அவர் இவரை சற்றும் மதிப்பதில்லை, அலுத்துவிட்டது போல காட்டிக் கொள்கிறார்,பன்றிக்கு முன் முத்துக்களை சிதற விட்ட நிலை இவருக்கு,  தோளில் கை வைத்து அடுத்த ஸ்ரீவித்யாவை கையை தட்டி விடுகிறார், ஸ்காட்ச் ஊற்றி பருகியபடி சொல்கிறார் கிழக்கு கோவிலகம் தரவாட்டு வீட்டின் ஒரே பெண் நீ, அதே போல ஒரு கொழுத்த தரவாட்டின் வாரிசுகளுக்கு புத்தகப் பை சுமக்கும் பணிக்காரச் சிறுவன் நான், தினமும் புத்தகப் பை சுமந்துவிட்டு பாடம் கவனிக்கும் என்னையும் உயிராக மதித்து  ஆசிரியர் ஒருவர் என்னை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார், கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பில் படித்தேன்,தங்கபதக்கம் வாங்கினேன்,  IFS எழுதி தேர்வாகி வேலையில் சேர்ந்தேன், எனக்கு நேர்வழியில் கிடைக்கவே கிடைக்காத பொக்கிஷம் போன்ற உன்னை  குறுக்குவழியில் சென்று அடைய முயற்சித்தேன், உன் கவிதைகளை புகழ்ந்தேன் ,அழகை வர்ணித்தேன், நீ புஷ்பம் போல விழுந்தாய், அடைந்தேன், நீயும் இன்று என் பின்னால் இப்படி அலைகிறாய், கோவிலகத்தின் சிறுவர்க்கு புத்தக மூட்டை சுமந்தவனின் சேவை உனக்கு என்றும் கிடைக்கும்,நீ சுகிக்க வேண்டி அழைக்கையில் வந்து சேவை செய்கிறேன் என்கிறார், ஸ்ரீவித்யா அவரை ஆத்திரத்தில் அறைகிறார்.


இப்படத்தில் IAS அதிகாரி மதுவுக்கு நிறைய நளினமான ஆங்கில வசனங்கள் இருந்தன, ஸ்ரீவித்யா இந்த MA பட்டதாரி பெரிய பணக்கார தரவாட்டுப் பெண் கதாபாத்திரத்தை அற்புதமாக செய்தார், இப்படத்தில் இவர் கவிதாயினி, மாத்ருபூமிக்கு கவிதைகள் எழுதி அனுப்புகிறார், அக்கவிதைகள் ஜானகியம்மா குரலில் அழகாக பாடல்களாக உருமாறுகின்றன, ஸ்ரீவித்யாவின் வளர்ந்த மகளாக அம்பிகா நடித்துள்ளார், இவரின் திருமணத்தின் ஏற்பாடுகளின் போது தான் படமே துவங்குகிறது, தன்னை ஒருமுறைப் பார்க்க போர்டிங் பள்ளிக்கு வந்த அம்மாவை இவர் முகம் கொடுத்தே பேசுவதில்லை, அவர் தந்த பாக்கெட் மனியை கூட வாங்குவதில்லை, பெரும் அவமானத்துடனே திரும்புகிறார் இவர் , திருமணத்தன்று முன்னாள் கணவர் வீட்டுக்கு போன் செய்து திருமணத்துக்கு வந்தே தீருவேன் , ஓரமாகவாகவேனும் நிற்கிறேன் என கெஞ்சியவரை கணவர் மதுவும் வேலைக்காரர் சங்கராடியும் விடுவதில்லை, கையெடுத்துக் கெஞ்சுகின்றனர், 


நீ இத்தனை வருடங்களுக்குப் பிறகு நேரில் வந்தால் இத்தனை நாள் நான் கட்டமைத்து வைத்த single parent பிம்பம் சிதைந்து விடும், புதிய பொய்கள் சொல்ல என்னால் ஆகாது என இவர் தங்கியிருந்த hotel அறைக்கு நேராக சென்று கணவர் மது கறாராக தீர்க்கமாக சொல்கிறார், 


அப்படியே அடங்கிப் போகிறார் ஸ்ரீவித்யா, தினம் உபயோகிக்கும் தூக்க மாத்திரை டப்பாவில் இருந்த அத்தனை மாத்திரைகளையும் வாயில்  கவிழ்த்து நீர் அருந்தி படுக்கையில் சரிந்தவர், ஸ்விட்ச் பாக்ஸை குறுகுறுவென பார்த்தவர் எழுந்து போய் D என்று எழுதிய ஸ்விட்சை தட்டிவிட்டு வந்து படுக்கையில் சரிகிறார், வெளியே கதவின் மேல்  சிகப்பு பின்னணியில் do not disturb என்ற பலகை ஒளிர்கிறது.


படம் முழுக்க திருவனந்தபுரத்தில் நடக்கிறது, படத்தின் ஒளிப்பதிவு மெல்லி இரானி, படத்தின் இசை M.B.சீனிவாசன் அவர்கள், படத்தில் கவிஞர் யூசூஃப் அலி கேசேரி இயற்றிய மூன்று அற்புதமான பாடல்கள் உள்ளன.


நடிகை ஸ்ரீவித்யா நடித்த சுமார் 800 திரைப்படங்களில் அவர் நடிப்பின் முழு வீச்சை அறியத் தந்த சுமார் 700 திரைப்படைப்புகளை தமிழ் ரசிகர்கள் நாம் பார்த்திராதது எத்தனை துர்அதிர்ஷ்டமானது.


படத்தில் மகளிர் கல்லூரி ஆங்கிலப் பேராசியையான இவரை சக தோழிகள் மிண்டாப் பூச்ச என்கின்றனர், அதாவது பேசாத பூனை, சாதுவான பூனை ,இப்படித்தான் இந்தப் படத்தின் தலைப்பு ஒண்ணும் தெரியாத பாப்பா ஒரு மணிக்கு போட்டாளாம் தாப்பா என்ற பொருட்பட வைத்துள்ளனர் என நினைக்கிறேன், படத்தில் சிந்தனையில் இருக்கும் இவரிடம்  வந்த மாணவிகள் குசும்பாக மேடம் nymphomaniac என்றால் என்ன என்று கேட்க, அவர்களின் குஸ்ருதி அறிந்த இவர் சுதாரித்துக் கொண்டு போய் டிக்‌ஷ்னரியை எடுத்துப் பார் என்று பதிலுரைக்கிறார். 


இப்படத்திற்கு பிரபலமான தோற்றம் மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட சிறந்த படத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது

1979 ஆம் ஆண்டில் இயக்குனர் ஹரிஹரன், பிரியதர்சினி பிலிம்ஸிற்கு கிடைத்தது.

சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதும் ஃபில்ம்ஃபேர் விருதுகளும் 

 1979 ஆம் ஆண்டில் நடிகை  ஸ்ரீவித்யாவுக்கு கிடைத்தது.

சிறந்த இசை அமைப்பாளருக்கான கேரள மாநில திரைப்பட விருது

 1979 ஆம் ஆண்டில் எம். பி. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு கிடைத்தது


விவாஹநாளில் பூவணிப்பந்தல் என்ற அழகிய பாடல் ஜானகியம்மா பாடியது

https://youtu.be/OduyDaEjpn8

விஷ்வமஹாஷேத்ர சந்நிதியில் என்ற அழகிய பாடலும் ஜானகியம்மா பாடியது

https://youtu.be/ptakagiq0LU

கல்யாணி அம்ருத தரங்கினி என்ற அற்புதமான ஆலாபனைப் பாடல் P.ஜெயச்சந்திரன் பாடியது.

https://youtu.be/L-jSTMIkDnw


படம் சப்டைட்டில் இன்றி யூட்யூபில் பார்க்கக் கிடைக்கிறது.

https://youtu.be/YGOH5DTXL_o

#MT_வாசுதேவநாயர்,#ஸ்ரீவித்யா,#மது,#MG_சோமன்,#சங்கராடி,#அம்பிகா,#ஹரிஹரன்,

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (237) ஆஸ்கர் (182) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)