ஜெயகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

The Writer Who Extended The Boundaries - எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்


https://www.youtube.com/watch?v=iy0xpl5NztA
இசைஞானியின் மகத்தான தயாரிப்பு மற்றும் இசைப் பங்களிப்பில் ஒளிப்பதிவாளர் செழியன் ஒளிப்பதிவில் உருவான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பற்றிய மிக முக்கியமான ஆவணப்படம், தமிழின்.மிகத் தரமான ஆவணப் படைப்பு.ஒருவகையில் இதுவும் ஒரு உலகசினிமா தான்.அவசியம் பாருங்கள்.

ஒரு மகத்தான படைப்பாளி தான் வாழும் காலத்திலேயே இத்தகைய மிகத்தரமான ஆவணப்படம் ஒன்றால் கௌரவிக்கப்படுவது தமிழ் இலக்கியம் மற்றும் சினிமா சூழலில் மிகமிக அபூர்வமானது, இப்படைப்பைக் கொண்டாடுவோம்.வாருங்கள்.

பத்து பாகங்களாக இருந்ததை ஒன்றரை மணிநேர முழு பாகமாக தரவேற்றிய எழுத்தாளர் ரவி சுப்ரமணியன் அவர்களுக்கு மிக்க நன்றி

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 1964 ஆம் வருடம் ஆனந்த விகடனில் வெளியான பொக்கிஷப் பேட்டி





1.எழுத்துத் துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்?
நான் வரவில்லை, எங்கோ போய்க் கொண்டிருந்த வழியில், எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பியதில்லை. என்னைப் பத்திரிகைகள் ஆதரிக்கவில்லை என்று புலம்பியதுமில்லை. நான் கல்லூரியிலோ, உயர்நிலைப் பள்ளியிலோ படித்தவனல்ல, அங்கே எழுத்தையோ இலக்கியத்தையோ கற்பதற்கு! நான் நடைபாதையில், குழாயடியில், சில நாட்கள் வேலைக்குப் போன சிறிய தொழிற்சாலைகளில் பொதுவான நடைமுறை வாழ்க்கையில்தான் இலக்கியத்தைக் கற்றேன். பிறகு, அங்கேதான் எழுத்தும் இலக்கியங்களுமே பிறக்கின்றன என்று அறிந்தேன். அறிந்ததை - வாழ்க்கை எனக்கு அறிவித்ததை - திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். வந்தவன்தான் போவான். நான் வந்தவனும் இல்லை; போகிறவனும் இல்லை!

2.ஓர் எழுத்தாளன் எழுத்தை மட்டுமே நம்பிப் பிழைக்க முடியும் என்று நம்புகிறீர்களா?
பிழைப்பு என்றாலே ரொம்பச் சிரமமான காரியம்தான். 'என்ன பிழைப்பு?’ என்பது அலுப்புக் குரல். இலக்கணப்படிப் பார்த்தால், பிழைப்பு என்பது குற்றம் என்றும் பொருள்படும். எழுத்தை வெறும் பிழைப்பாகக்கொள்வது ஒரு குற்றமே. பிழைக்க முடியுமா என்பதல்ல; கூடாது என்பது என் கொள்கை. என்னைப் பொறுத்தவரை எழுதுவதற்கு எனக்குக் காசு தருகிறார்கள். ஆனால், நான் எழுதுவதே காசுக்காக அல்ல. கல்லடி கிடைத்தாலும் நான் எழுதுவேன். எழுத்து, காசு தராவிட்டால்தான் என்ன? பிழைப்புக்கு வேறு ஏதேனும் தொழில் செய்வேன். எழுத்து எனக்கு சீவனமல்ல; அது என் ஜீவன்!
3.தனித் தமிழில் எழுதுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அதில் யாரும் எழுதுவதில்லையே! எழுத வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஆசைக்கு ஒரு கடிதம், ஒரு கட்டுரை எழுத சிலர் முயலலாம். கதை எழுத முடியாது. கதை என்பது, இன்றைய வாழ்வின் பிரச்னை. இந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழனுக்குப் பிரச்னை, தமிழின் தனிமையல்ல!

4. தங்கள் மனத்தைக் கவர்ந்த எழுத்தாளர் யார்? விமர்சகர் யார்?
கவர்ச்சி என்பதே ஒன்றின் வளர்ச்சி பற்றிய பிரச்னை. சின்னப் பிள்ளைக்கு, மண் பிடிக்கும், வாலிபனுக்கு, பெண் பிடிக்கும். வயது முதிர்ந்தால் அவரவர் வளர்ச்சிக்கு ஏற்ப கவர்ச்சிகள் பேதப்படும். அதே போல் எனது ரசனை வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு காலத்தில், ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொருவரைப் பிடித்திருந்தது; பிடிக்கிறது. ஏதோ நீங்கள் கேட்டதற்காகச் சொல்வது என்றால்,     டால்ஸ்டாய் என்பேன். இந்தக் கவர்ச்சிக்குக் காரணம் கேட்பீர்களோ? என் வளர்ச்சிதான். விமர்சகரா? நானறிந்தமட்டில் அப்படி ஒருவர் இங்கே இல்லை ஐயா.
5.நீங்கள் ஏன் தொடர் கதைகள் எழுதுவதில்லை?
நான்தான் தொடர்ந்து கதை எழுதி வருகிறேனே! தொடர் கதை என்று இலக்கியத்தில் ஒரு பிரிவு கிடையாது. மேல் நாட்டில் மிகப் பெரிய எழுத்தாளர்களின் நாவல்களைக்கூட சில பத்திரிகைகள் வசதிக்காக அவ்விதம் பிரசுரித்தது உண்டாம். எனினும், அவை தொடர் கதைகள் என்பதற்காகப் பாராட்டப்படவில்லை. இங்கேயோ அது பெரும்பான்மை வாசகரை மயக்கும் ஒரு தந்திரமாகவே கையாளப்பட்டு வருகிறது. பத்திரிகைகளோ, வாசகரோ என்னிடம் அதை எதிர்பார்க்கவில்லை. எனக்கும் அதில் பழக்கமோ, விருப்பமோ இல்லை!
6.ஜனரஞ்சகமாக எழுதக் கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆம். ஜனங்கள் வளர்ந்துகொண்டே இருப்பவர்கள். வளர்ந்துகொண்டிருக்கும் ஒன்றின் அருகே குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக்குச் சமமாகப் போய் நின்றுவிட்டால், நாளைக்கு நாம் குறைந்துவிடப் போகிறோம் என்று அர்த்தம். ஜனங்களை விட்டு ஒதுங்கிவிடவும் கூடாது; கலந்துவிடவும் கூடாது. எப்போதும் ஓர் அடி முன்னே சென்றால்தான் ஜனங்களை இழுத்துச் செல்லவும் முடியும். அவர்கள் எதை வேகமாக விரும்பி ஏற்கிறார்களோ, அதை அவர்கள் அதே வேகத்தோடு வீசியும் எறிகிறார்கள். ஜனரஞ்சகம் என்ற பெயரால் என் எழுத்துக்கள் எறியப்பட வேண்டாம் என்றும் நான் நினைக்கிறேன்!
7.தாங்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் பங்கு கொண்டிருக்கிறீர்களா? அதனால் உங்கள் எழுத்து பாதிக்கப்படுகிறதா?
நான் ஒரு கம்யூனிஸ்ட். வாழ்க்கையின் எத்தனையோ பாதிப்புகளினால்தான் எழுத்தே உருவாகிறது. பாதிக்கட்டுமே!
8.ஓர் எழுத்தாளன் என்ற முறையில் தமிழ்ப் பட உலகைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?
நான் தமிழ்ப் படம் பார்த்து மூன்று வருஷம் ஆகிறது. ஓர் எழுத்தாளன் என்ற முறையில் அபிப்பிராயம் சொன்னால்... வேண்டாம் சார், விடுங்கள்!
9.திரைப்படங்கள் எதற்கேனும் எழுத உத்தேசித்திருக்கிறீர்களா?
எழுத உத்தேசமில்லை; எடுக்க உத்தேசம் உண்டு. அப்போது ஒருவேளை எழுதலாம்!
10.உங்கள் மாத வருமானம் என்ன? அது போதுமானதாக இருக்கிறதா? இல்லையென்றால் பற்றாக்குறைக்கு என்ன செய்து சமாளிக்கிறீர்கள்?
வாழ்க்கை ஐம்பது ரூபாயிலும் இருக்கிறது, நூறு ரூபாயிலும், ஆயிரம் ரூபாயிலும் இருக்கத்தான் செய்கிறது. நான் வாழ்க்கை வண்டியில் எல்லா 'கிளாஸ்’களிலும் பிரயாணம் செய்திருக்கிறேன். இன்றைக்கு எனக்கு ரூ.350-ல் தாங்குகிறது. நாளைக்கு முடியாவிட்டால், வேறு 'கிளாஸு’க்கு இறங்கி விடுகிறேன். முடிந்தால் உயரே போவது. ஆனால், கடன் வாங்க மாட்டேன். பொருளாதார வாழ்க்கை என்பது, வாழத் தெரிந்தவர்களுக்கு ரொம்பச் சாதாரணமானது. பொருளாதார வீழ்ச்சியும் சரி, உயர்வும் சரி ஓர் எழுத்தாளனின் வீழ்ச்சியோ உயர்வோ ஆகாது. அவை யாவும் அனுபவங்கள் அல்லவா? எனக்குப் பிரச்னை, என்னுடைய ஆன்மிக வாழ்க்கையும், பிறருடைய சமூக வாழ்க்கையும்தான். பிரச்னைகளுக்குப் பற்றாக்குறை ஏது?

தமிழின் மகத்தான எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா அவர்களுக்கு அஞ்சலி


”எனக்கு நானே கடவுள்
எனக்கு நானே பக்தன்
என் வாழ்நாள் எல்லாம் திருநாள்
மரணம் எனக்கு கரிநாள் ”

தமிழின் மகத்தான எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா மறைந்துவிட்டார், எத்தனை கொண்டாட்டமான மனிதர்,எத்தனை மகத்தான படைப்பாளி, தன் பலம் பலவீனங்களை எக்காலத்திலும் மறைக்காத ஒரு அபூர்வமான மனிதர், மாறும் காலத்துக்கேற்ப தான் தன் கொள்கைகளில் மாற்றம் கொண்டதைக் கூட தயக்கமின்றி ஒப்புக்கொண்ட முன்னுதாரண மனிதர்.

மானுடத்தையும்,பெண்ணியத்தையும், தன் படைப்பிலும் வாழ்விலும் போற்றிப் பேணிய கலைஞன், வையத் தலைமை கொள் வட்டாரத் தலைமையுடன் நின்று விடாதே!!! என்று அறிவுறை சொன்னவர். எளியாரின் தாழ்வு மனப்பான்மையை அறவே விரட்டிய நிபுணர்.பூர்ஷுவாக்களின் மேட்டிமைத் திமிரைக் கூட அவர் நாணச்செய்து கரைத்து திருத்தலாம் என்று தன் படைப்பில் உரைத்தவர்,உணர்த்தியவர்.

ஒவ்வொரு கனமும் வாழ்வை ரசித்து வாழ்ந்தவர்,வாழ்வை ரசித்து வாழ முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அவரின் மறைவு மிகவும் பெரிய இழப்பு, அவர் தம் தனித்துவம் நிறைந்த படைப்புகளில் என்றும் வாழ்வார்.அவர் படைப்புகளுக்கு என்றும் அழிவே கிடையாது.அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்தனைகள்.

அவரின் படைப்புகளை நினைவு கூருகையில் அதிகம் பேர் பாராமல் போன ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்னும் திரைப்படம் பற்றிய என் பழைய பதிவை இங்கே பகிர்கிறேன்.
http://geethappriyan.blogspot.ae/2014/12/1978.html

எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்துலகப் படைப்புகளை நம் வீட்டில் தாத்தா,பாட்டி,அம்மா,அப்பா,என பேதமின்றி வாசித்திருப்போம், அவரின் திரைப்படைப்புகளும் அவரின் இலக்கியம் போன்றே மிகவும் தரமானவை, ஒரு நூலை எப்படி படமாக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணங்கள் அவை, ஜெயகாந்தனின் உன்னதமான திரைப்படைப்புகள் இங்கே,

1 உன்னைப்போல் ஒருவன், 1965 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் டிவிடி பிரதி எங்குமே கிடைப்பதில்லை.

2 யாருக்காக அழுதான் திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

3 சில நேரங்களில் சில மனிதர்கள் யூட்யூபில் பார்க்கக் கிடைக்கின்றது டிவிடி பிரதியும் கிடைக்கின்றது

4 எத்தனை கோணம் எத்தனை பார்வை திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

5 புதுசெருப்பு கடிக்கும் திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

6 ஊருக்கு நூறு பேர் கதையைஇயக்குனர் லெனின் படமாக்கி அது தேசிய திரைப்படவிழாவில் கலந்து கொண்டது அதன் டிவிடி பிரதி எங்குமே கிடைப்பதில்லை.

7சினிமாவுக்கு போன சித்தாளு கௌதமன் இயக்கத்தில் வெளியானது,அதன் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

8 ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் யூட்யூபில் பார்கக் கிடைக்கிறது
ஜெயகாந்தன் ஞானபீடம் பரிசு பெற்ற நாம் வாழும் காலத்தின் மாபெரும் படைப்பாளி. பொதுவுடமை புரட்சி சிந்தனையாளர். இலக்கியம் மற்றும் சினிமாவில் தன் முத்திரையைப் பதித்தவர். இப்படி பலச் சிறப்புகள் இருந்தும் அவர் இயக்கிய திரைப்படங்களை நாம் தேடிப்பார்க்க வழியின்றி இருப்பது எத்தனை அவமானம் பாருங்கள்.இனியேனும் அவரது திரைப்படைப்புகளை ஆவணப்படுத்தி ரசிகர்கள் காண வழி செய்ய வேண்டும்.

சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன் அம்ஷன் குமாரின் உயிர்மை கட்டுரை



சினிமா எவ்வாறு தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கிறது என்பது பற்றி ஒரு தலைமுறைக்கே அது குறித்த எண்ணங்களைத் தோற்றுவித்த ஆசானாக விளங்கினார் ஜெயகாந்தன்.

ஜெயகாந்தன் எழுத வந்த காலத்தில் தமிழில் பத்திரிகை உலகும் சினிமா உலகும் பெரும் தொழில் நிறுவனங்களாக ஆகிவிட்டிருந்தன. பல இலக்கிய எழுத்தாளர்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற பெரும் பத்திரிகைகளில் தங்கள் படைப்புகளை வெளியிட்டனர். நாவல்கள், கதைகள் மட்டுமின்றி கட்டுரைகளும் அவற்றில் வந்தன. இலக்கியச் சிறப்பு மிக்க உ.வே.சாமிநாத அய்யரின் சுயசரிதை ‘என் சரித்திரம்‘ ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது என்பது இன்று பலருக்கும் வியப்பினைத் தரக்கூடும். இலக்கிய எழுத்துக்கும்  பத்திரிகை எழுத்துக்கும்  இடைவெளி இருந்தும் கூட ஜெயகாந்தன் போன்ற ஒரு எழுத்தாளர் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த பத்திரிகைகளில் எழுதிப் புகழ்பெற முடிந்தது. ஆனால் அவரைப் போன்றவர்கள் சினிமாவில் நுழைந்து அதே சுதந்திரத்துடன் பணியாற்றுகிற நிலையில் சினிமா இருக்கவில்லை.

ஜெயகாந்தனின் கதைகளைப் படிக்கும்பொழுதெல்லாம் அவர் சினிமாவிற்கு மிகவும் நெருக்கமானவர் என்கிற எண்ணமே மேலோங்கும். அவர் சினிமாவைக் கதைகளாக எழுதிவிட்டார். வாக்கியம், வார்த்தைகள் என்றெல்லாம் பார்ப்பதோடு அவரது எழுத்துகளை க்ளோஸ்-அப், லாங் ஷாட் என்றெல்லாம்கூட சுலபமாகப் பார்க்க முடிகிறது. அவரது யதார்த்தம் காட்சி யதார்த்தம். அவரது கதைகளைப் படிப்பது சினிமா பார்ப்பது போன்றது. பல சினிமா உத்திகளை அவரது கதைகளில் காணமுடியும். ப்ளாஷ் பேக் உத்தி இல்லாமல் அவர் எழுதுவதில்லை. இந்த இடத்தில் இருந்து’ சிறுகதை கேமரா கோணங்கள் வாயிலாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்‘ நாவலின் முடிவு சினிமாவின் உறைநிலை (freeze) உத்தியைக் கொண்டிருக்கிறது. 'ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்' நாவலைப் பேனா எழுதவில்லை, கேமராதான் எழுதி இருக்கிறது என்று சொல்வது சற்றும் மிகைப்படுத்தல் அல்ல. ‘கோகிலா என்ன செய்துவிட்டாள்’ கதையில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலுடன் ஓடி வரும் கோகிலாவை அவளது கணவன் தாவி உள்ளே இழுத்துக் கொள்ளும் செயல் சினிமாவிற்கே உரித்தான கணம். அதனாலேயே நேரடியான பாதிப்பாக அந்தக் காட்சி கணக்கிலடங்காத படங்களில் இடம் பெற்றது.

வெகுஜன சினிமா பற்றி ஜெய காந்தனுக்கு நிறைய விமர்சனங்கள் இருந்தன. அவரைப் போல் தமிழ் சினிமாவையும் தமிழ் சினிமா உலகையும் கடுமையாக விமர்சித்த தமிழ் எழுத்தாளர் இதுவரை எவரும் இல்லை. பத்திரிகைகளில், மேடைகளில், ‘சினிமாவுக்கு போன சித்தாளு’ கதையில் சினிமா எவ்வாறு தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கிறது என்பது பற்றி ஒரு தலைமுறைக்கே அது குறித்த எண்ணங்களைத் தோற்றுவித்த ஆசானாக விளங்கினார் ஜெயகாந்தன். எவரையும் அவர் தனிப்பட்ட முறையில் தாக்கியதில்லை. அதனாலேயே அவரது விமர்சனங்களுக்கு உள்ளாகிற படங்களை எடுப்பவர்கள்கூட அவரிடம் நட்பும் மரியாதையும் பாராட்டி வருகிறார்கள். தமிழ் சினிமா பற்றி விமர்சித்த அதே நேரத்தில் அவர் உலக சினிமா பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டிருந்தார். பிற நாட்டு இலக்கியங்களைத் தெரிந்து கொண்டதுபோன்று பிற மொழிப்படங்கள் பற்றிய பரிச்சயம் அவருக்கு ஏற்படத் துவங்கியது. ‘நல்ல சினிமா என்பது நல்ல புத்தகம் போல என்பது என் கருத்து! நல்ல படங்களைப் பார்த்துத்தான் படம் சம்பந்தப்பட்ட என் அறிவை வளர்த்துக் கொண்டேன். எனது அறிவு புத்தகங்கள் படித்து வந்தது இல்லை. எனது இளமைக் காலம் படங்களின் யுகமாக இருந்தது. ஆனால் தமிழ் சினிமா அன்றும் இன்றும் அதே கீழ்நிலையிலேயே இருக்கிறது. நமது சரித்திரப் பெருமையையோ, நமது மண்ணின் கலாச்சாரப் பெருமையையோ அவை எடுத்துச்சொல்ல முன் வந்தது இல்லை. அதைப் பற்றி நமது தமிழ் சினிமா ஏதாவது பேசியிருக்குமேயானாலும், அவை வெற்றுப் பம்மாத்துக்களாகவே இருக்கின்றன, என்று ஜெயகாந்தன் தன் சினிமா அறிவு பற்றியும் தமிழ் சினிமா பற்றியும் கூறினார்.

அவரது நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் அவருக்கு சினிமா எடுக்கும் எண்ணமும் தோன்றியது. சத்யஜித் ரே போன்றவர்கள் எடுத்த கலைப்பட பாணியில் ஒரு படத்தை எடுப்பது என்று அவர் முடிவு செய்தார். அத்தகைய படம் கீழான ரசனையை மக்களிடம் உண்டுபண்ணும் தமிழ்ப் படங்களுக்கு மெய்யாகவே ஒரு மாற்றாக விளங்கும் என்று கருதினார். அவர் தனது 'உன்னைப் போல் ஒருவன்' நாவலை எடுத்துக் கொண்டு அதற்குத் திரைக்கதை அமைத்தார். நாவலில் வருபனவற்றில்  எவற்றை சினிமாவுக்குக் கொண்டு வரலாம், எவற்றை நீக்கலாம் என்கிற வகையிலும் காட்சி ஊடகத்திற்கு ஏற்றாற்போல் என்ன மாதிரியான காட்சிகளை உருவாக்கலாம் என்பன பற்றியெல்லாம் அவர் ஆழ்ந்த கவனம் கொண்டிருந்ததை நாவலையும் படத்தையும் ஒப்பிடுவதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

நகர்ப்புற சேரி மனிதர்களைப் பற்றிய கதை 'உன்னைப் போல் ஒருவன்.' சித்தாள் வேலை செய்பவள் தங்கம். அவளுக்கு சிட்டிபாபு என்கிற பன்னிரெண்டு வயது மகன். ஓடிப்போய்விட்ட அவனது அப்பாவை அவன் பார்த்ததில்லை. பிற சேரி சிறுவர்களுடன் அலைந்து துண்டு பீடி குடிக்கும் நிலையிலுள்ள சிட்டியை ஒரு ஐஸ்கிரீம் கம்பெனி முதலாளி சீர்திருத்துகிறார். தொண்டர் என்று அறியப்படும் அவரைத் தெய்வமாகப் போற்றுகிறான் சிட்டி. எதிர்பாராதவிதமாக ஒரு குருவி ஜோஸ்யக்காரனுடன் ஏற்படுகிற பரிச்சயம் தங்கத்தினிடம் காதலாக மலர்கிறது. அவனைத் தன் குடிசைக்கு அழைத்து வருகிறாள். சிட்டியால் இந்த உறவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறான். அவளது புதிய உறவு தனக்கு அவமானத்தை விளைவித்துவிட்டது என்று அவன் கருதியதால் தொண்டரைச் சென்று பார்க்கும் துணிவையும் இழக்கிறான். தாயும் மகனும் படும் துயர்களைக் காணச் சகியாத குருவி ஜோஸ்யக்காரன் அவர்களை விட்டு சென்று விடுகிறான். தங்கம் அவன் மூலம் ஒரு பெண் குழந்தைக்குத்தாயாகிறாள். கடைசிவரை சிட்டியின் அன்பைப் பெற முடியாமல் போன தங்கம் அப்பிரசவத்தில் இறந்து போகிறாள். குருவி ஜோஸ்யக்காரன், தனது தாய் ஆகியோரைக் காலம் தாழ்த்தி மன்னிக்கும் சிட்டி தனது தங்கையைப் பாசத்துடன் ஏற்றுக் கொள்கிறான்.

 அதே பாத்திரங்கள், அதே நிகழ்வுகள் படத்திலும் வருகின்றன. படத்திற்கேற்றாற்போல் கதை நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. படத்தில் ப்ளாஷ் பேக் கிடையாது. நாவலில் உண்டு. நாவலில் இல்லாத சில நிகழ்வுகள் படத்தில் உண்டு. அவை படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. உதாரணமாக, நாவலில் தாய் இறந்தவுடன் சிட்டி அழுவதில்லை. பின்னொரு வேளைக்கு அதை ஒத்திப் போடுகிறான். சேரியிலுள்ளவர்கள் வீடுகளுக்கு வெளியே படுத்துறங்குகிற பொழுது கனவிலிருந்து திடீரென விழித்தவன் போன்று சிட்டி எழுந்தமர்ந்து அம்மா ஞாபகம் மேலிட அழுகிறான். படத்தில் இரவு வேளைகளில் தெருவில் ஐஸ்கிரீம் வண்டிக்காரன் வருவான். அவனுடைய ‘ஒரிணா ஒன்றிணா பால் ஐஸ்’ என்னும் கூவ லைக் கேட்டவுடன் தங்கத்திடம் சிட்டி காசு வாங்கிப் போய் ஐஸ்கிரீம் வாங்குவான். இரண்டாம் முறை குருவி ஜோஸ்யக்காரன் தங்களுடன் இருக்கும்பொழுது அதே ஐஸ்கிரீம் வண்டி வரும். ஆனால் சிட்டி தன் தாயிடம் சொந்தம் கொண்டாட விரும்பாது தூங்குவது போல் படுத்திருப்பான். மூன்றாம் முறை தாயை இழந்தபின் அந்த வண்டி வரும்பொழுது அவனுக்கு ஐஸ்கிரீம் தொடர்பாக அம்மாவின் நினைவு வந்து அழுவான்.

சில நிகழ்ச்சிகள் படத்தில் இல்லை. முக்கியமாக சிட்டியின் நண்பன் கன்னியப்பனைப் பற்றிய ஒன்று. கன்னியப்பனுக்கு பதினான்கு வயது. ஆனால் அவனுக்கு வி.டிநோய் வந்து விடுகிறது. அவனைப் பரிசோதிக்கும் டாக்டர் அதிர்ச்சிக்குள்ளாகிறார். அவனுக்குக் கட்டுப்போடும் கம்பவுண்டர் அவனைத் தன் மகன் போன்று நினைத்து வேதனை தாங்காது அத்தகைய கொடூரத்திற்குப் பலியான அவனை அடிக்கிறார். அதைப் பொறுத்துக் கொள்ளாத டாக்டர் கம்பவுண்டரிடம் கூறுகிறார்: 'உம்ம பையனா இருந்தாலும் அவனை அடிச்சு என்ன பிரயோசனம்? விப ரீதமா வளர்த்து விஷத்தைக் கக்கி பளபளப்பா நெளியற இந்த சமூகத்தை அடிக்கணும்.' இந்தக் காட்சிகள் படத்தில் இல்லை. இல்லை என்பதால் படத்தை அதன் போக்கில் ரசிப்பதற்கு எவ்வித இடையூறுகளும் இல்லை. ஆனால் இக்காட்சிகள் இடம் பெற்றிருந்தால் தமிழ் சினிமா யதார்த்தவாதம் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்திருக்கும். தணிக்கைக் குழுவினரிடமிருந்து இந்தக் காட்சிகள் தப்பாது என்று நினைத்து இயக்குநர் முன்னதாகவே சுய தணிக்கை செய்துகொண்டுவிட்டார் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

படம் பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. ஜெயகாந்தன் ஒரு கம்யூனிஸ்டு என்று அறிவிக்கப்பட்டிருந்த காலத்திலும் அவரது படைப்புகள் கட்சி முன்வைத்த இடதுசாரி அரசியலைப் பேசியதில்லை. வரையறைக்குட்படாத இடதுசாரி அவர். எனவே அவர் அதற்கெல்லாம் அப் பால் சென்று மனிதர்களின் பொதுப் பண்புகள் பற்றியே  ஆய்ந்து சித்தரித்தார். 'உன்னைப் போல் ஒருவ'னில் வரும் முதலாளி தன்னைத் தொழிலாளி என்று சமத்துவ நோக்கில் பார்க்கவில்லை. அதற்கும் மேலே சென்று ஒரு தொண்டராகத் தன்னைப் பார்க்கிறார். மக்களின் ஏழ்மையைப் படம் சோகமாக உணர்த்துவதில்லை. அன்பைப் பரிமாற்றம் செய்வதில் ஏற்படுகிற பரிதவிப்புகளே அவர்களின் துயரங்களுக்குக் காரணம் என்பதை நாவலும் படமும் சொல்கின்றன. 'யாருக்காக அழுதான்' நாவலில் வரும் முதலாளி கூட பணத்தாசையால் ஒரு தவறான காரியம் செய்துவிட்டு, நல்லவன் ஒருவன் அதனால் தண்டிக்கப்படுகிறான் என்பதை உணரும் பொழுது பதைபதைத்து திருந்துகிறார். அவரும் ஒரு சாதாரண முதலாளி அல்லரே.

'யாருக்காக அழுதான்' ஜெயகாந்தன் இயக்கிய இரண்டாவது படம். அது முழுவதும் ஒரு லாட்ஜில்  நடக்கிறது. கெட்டது என்றால் என்ன என்று கேட்கும் ஓட்டல் தொழிலாளி அப்பாவி சோசப்பின் மீது திருட்டுப் பழி சுமத்தப்படுகிறது. லாட்ஜில் இரவில் தங்க வரும் சேட் குடிபோதையில் தனது மணிபர்ஸை லாட்ஜ் முதலாளியிடம் பாதுகாப்புக் கருதி ஒப்படைக்கிறார். விடிந்தவுடன் அதை மறந்துவிட்டு பர்ஸ் காணாமல் போனதாக அலறுகிறார். முதலாளியும் இதைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அதை மறைத்து விடுகிறார். சோசப்பின் மீது பழி சுமத்தப்பட்டு அவன் வாயிலிருந்து ரத்தம் வரும் வரை அவனை அடிக்கிறார்கள் சேட்டும் லாட்ஜில் தங்கியுள்ள ஒரு சூதாடியும். சோசப்பின் மகத்துவம் அறிந்த சமையல்காரர் குறுக்கிடுகிறார். பயந்துபோன முதலாளி பர்ஸை சேட்டின் அறையிலேயே வைத்து விடுகிறார். சோசப் தப்புகிறான். தனக்காக மட்டுமின்றி தன்னைப் போன்ற அப்பாவிகள் தண்டிக்கப்படுகிற கொடுமைகளை நினைத்தும், பெரிய மனுஷத்தனத்துடன் கயமைகள் புரியப்படுகிற இந்த உலகின் நடைமுறை குறித்தும் அதுவரை அழுதிராத சோசப் வாய் விட்டுக் கதறி அழுகிறான். உணர்ச்சிகரமான கதை.

படம் 'உன்னைப் போல் ஒருவன்' பாணியில் எடுக்கப்பட்டிருந்தது.  மெதுவாக நகர்ந்தது. நடிகர்கள் யோசித்து யோசித்து வசனம் பேசுவது இதிலும் தொடர்ந்தது. ஆனால் இதில் இருட்டு இல்லை. நல்ல ஒளிப்பதிவு. நாகேஷ், கே.ஆர்.விஜயா, டி.எஸ்.பாலையா போன்ற பிரபல நட்சத்திரங்களும் இருந்தனர். அன்றைய கவர்ச்சி நடிகையான கே.ஆர். விஜயா இதில் எளிமையாக நடித்திருந்தார். திரையரங்குகளை எட்டிய பொழுது இது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சில பத்திரிகைகள் இப்படத்தை ஒரு பிடி பிடித்தன. ஜெயகாந்தனுக்கும் பத்திரிகைகளுக்குமிடையே ஒரு பிணக்கு இருந்தது. ஒரு பத்திரிகை படத்தின் விமர்சனத்திற்குத் தந்த தலைப்பு: ஜெயகாந்தனுக்காக அழுதான். 'உன்னைப் போல் ஒருவன்' படம் திரையிடப்பட்ட பொழுது ரசிகர்களைப்  பார்க்கவிடாமல் தடுத்தவர்கள் கண்டு வெகுண்டெழுந்த ஜெயகாந்தன், இந்தப் படம் பற்றித் தானே கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். தன்னைத்தானே விமர்சிப்பதில் அவருக்கு இணை அவர்தானேயொழிய வேறொருவர் இல்லை. படம் பற்றி அவர் செய்த விமர்சனம். ‘தியேட்டர்களுக்குச் சென்று ஜனக் கும்பலோடு உட்கார்ந்து படத்தைப் பார்த்தேன். ரசிகர்கள் வாரிக்கொண்டார்களே வாரி... படத்தின் ஆரம்பத்தில் 3 நிமிட நேரம் வெள்ளைத் திரையில் ஒன்றுமே தோன்றாது படம் ஓடும். தேய்ந்த பிரிண்ட்டின் கீறல்களை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அசரீரியாக நான் இந்தப் படத்தைப் பற்றி 3 நிமிட நேரம் பிரசங்கம் செய்வேன்... பேச்சைத் தொடர்ந்து கண்ணதாசன் எழுதிய ஒரு நல்ல பாட்டு. ஒரு நல்ல பாட்டைக் கூடக் கேட்க விடாமல் ரசிகர்களை அடித்து விரட்ட முடியும். அதற்கு மேல் படத்தில் நாகேஷை நடக்க வைத்தும் படுக்க வைத்தும் சாப்பிடச் செய்தும் இசைத்தட்டில் இரண்டு பக்கம் வருகிற மாதிரி ஒரு பாட்டுக் காட்சி ரீல்’.

ஆனாலும் இப்படம் குறிப்பிட்ட சில ரசிகர்களைக் கவர்ந்தது. 'உன்னைப் போல் ஒருவன்', 'யாருக்காக அழுதான்' ஆகிய இரண்டையும் பார்த்தவர்களில் சிலருக்கு இப் படம் சற்றுக் கூடுதலாகவே பிடித்திருந்தது.

சினிமாவைவிட்டு ஒதுங்கியிருந்த காலத்தில் அவரது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலை இயக்குநர் ஏ.பீம்சிங் படமாக்க முன்வந்தார். ஜெயகாந்தன் எப்பொழுதுமே தன்னை விரும்பி வரும் இயக்குநர்களுக்குத் தன் படைப்புகளைத் தயக்கமின்றி தருபவர். ஒன்றுமில்லாத கதைகளையெல்லம் அவர் மிக வெற்றிகரமாக சினிமாவாக ஆக்கி இருக்கிறார் என்று பீம்சிங்மீது ஒரு அபிப்பிராயம் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் நடித்த படம் எதையும் இயக்காதவர் என்பதையும் பீம்சிங்கின் தகுதியாகத் தனக்கே உரிய குணாதிசயத்தின்படி பார்த்தார்.

பீம்சிங்கிடம் அவர் கூறியது.  ‘நான் உங்களுக்குக் கதையைக் கொடுத்து உதவி செய்ய முடியும். இதை நீங்களோ அல்லது நீங்கள் விரும்புகிற வேறு யாரையேனும் வைத்தோ திரைக்கதை, வசன வடிவமைப்பை எழுதிக் கொள்ளுங்கள். நாவலில் வருகிற வசனங்களையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனாலும் படம் எடுக்கிறபோது எப்படி எப்படியெல்லாம் எடுக்கிறீர்கள் என்பதை நான் அறிந்து கொள்வதற்கும் அதில் என்ன சேர்க்கலாம், என்ன சேர்க்கக் கூடாது என்பதற்கு எனது யோசனைகளை அனுமதித்தும் இறுதியாக இந்தப் படம் சிறப்பாக இருக்கிறது என்று நான் சொல்வதற்கு இடம் வைத்தும் நீங்கள் படமெடுத்துக் கொள்ளுங்கள்.’ கதையைப் படமாக்கும் உரிமையை முற்றாக இயக்குநரிடம் கொடுத்து விட்டதுபோல் தோன்றினாலும் அதில் நிறைய நிபந்தனைகளை விதித்திருப்பதைக் காண முடியும். பாவம் பீம்சிங்! அதுநாள்வரை ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோரைத் திருப்தி செய்து படமெடுத்தவர், இப்பொழுது மகா முன்கோபக்காரரான ஒரு எழுத்தாளரையும் திருப்தி செய்யவேண்டும். பீம்சிங் புத்திசாலித்தனமாக ஜெயகாந்தனையே எழுத வைத்தார்.  இந்த நடைமுறை அவர்கள் இணைந்து செயல்பட்ட மற்ற படங்களிலும் தொடர்ந்தது.

நாற்பது நாட்கள் பீம்சிங்கின் உதவியாளர்களுடன் அமர்ந்து அவர் சொல்லச் சொல்ல 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைக்கதை -வசனம் உருவாகியது. படம் வெளிவந்து அதுவரை ஜெயகாந்தன் படங்கள் பெற்றிராத வெற்றியை அது கொடுத்தது. தமிழின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றான ஒரு நாவல் மக்களிடையே திரைப்படமாக வெற்றி பெற்றது அப்படியொன்றும் சுலபத்தில் ஒதுக்கிவிடக் கூடியதல்ல. பல புதிய திருப்பங்கள் இருப்பினும் கதைப் போக்கினைப் புரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு எத்தகைய சிரமமும் இல்லை. லட்சுமி, ஸ்ரீகாந்த், சுந்தரிபாய், ஒய்.ஜி.பார்த்த சாரதி ஆகிய அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்திருந்தார்கள். படம் வெற்றி அடைந்ததற்கு இவையெல்லாம் காரணங்கள். ஆனால் ஒப்பீட்டளவில் ஜெயகாந்தன் கதை - வசனம் எழுதி இயக்கிய படங்களுடனும் பீம்சிங்கின் பிற படங்களுடனும் பார்க்கும்பொழுது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' வேறு  தகுதிகளைப் பெற்றிருப்பினும் ஒரு அசாதாரணமான கலைப்படைப்பு என்று கூறமுடியாது. ஜெயகாந்தன் இயக்கிய படங்களில் மௌனத்திற்கு நிறைய இடம் இருக்கும். காட்சி பூர்வமாகக் கதையை நகர்த்த வேண்டும் என்கிற முயற்சிகள் தென்படும். அதேபோல் பீம்சிங்கின் உணர்ச்சிகரமான மெலோடிராமா படங்களில் வசனங்களுக்குக் களையூட்டு கிறாற்போன்று காட்சி அமைப்புகளும் இருக்கும். 'சில நேரங்களில் சில மனிதர்க'ளில் ஜெயகாந்தனும் இல்லை. பீம்சிங்கும் இல்லை. படம் முழுவதும் இடைவிடாது வசனங்கள் ஒலித்தன.

நாவலிலிருந்து திரைக்கதைக்கு ஜெயகாந்தன் சில மாற்றங்களைக் கொண்டுவந்திருந்தார். நாவலில் கங்கா 'அக்னிப்பிரவேசம்' கதையைப் படித்துவிட்டு அதை எழுதிய எழுத்தாளரைத் தேடிப் போகிறாள். படத்தில் 'அக்னிப்பிரவேசம்' சிறுகதையின் நிகழ்வுகள் ஆரம்பத்தில் காட்டப்படுகின்றன. படத்தில் வசனங்கள் குறைந்த பகுதி இது.

நாவலின் இறுதியும் படத்தின் இறுதியும் வெவ்வேறானவை. நாவலில் கங்கா பிரபுவுடனான உறவு முறிவுக்குப்பின் பொறுப்பற்ற உல்லாசத்துடன் வாழ்கிறாள். அவளது வாழ்க்கை வீணாகிவிட்ட விரக்தியில் பிரபு தன் வீட்டிற்குள் அடைந்து கொள்கிறான். அவனது மனைவி பத்மாவிற்கு அது ஒரு வகையில் ஆறுதலாக உள்ளது. சமூகம் என்கிற அமைப்பின் முன் தனி மனிதர்கள் தொடர்ந்து போரிட இயலாமல் தோற்றுப் போகிறார்கள் என்னும்போது கதாபாத்திரங்கள் மீது ஒரு புரிதலும் பரிவும் ஏற்படுகிறது. 'அக்னிப் பிரவேசம்' சிறுகதையில் கங்காவின் அம்மா நடந்து கொண்டது போல் இல்லாமலிருந்தால் கங்காவிற்கு எத்தகைய அழிவு காத்திருந்தது என்பதைத்தான் நாவல் எடுத்துக் காட்டுகிறது. நாவலை சினிமா பின்பற்ற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சினிமாவின் முடிவு வித்தியாசமாக இருப்பினும் அது அந்த ஊடகம் எடுத்துவைக்கும் கதையாடலுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. படத்தில் கங்கா தனிமைப்படுத்தப்படுகிறாள். அறியாத வயதில் யாரோ ஒருவனுடன் பாலுறவு கொள்கிற அவள் பின்னரும் அவனையே தன்னுடையவனாக நினைத்து அவனுக்காகவே காத்து நிற்கும், ஒரு வகையில் அவளைத் தண்டித்த சமூகத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற கற்புக்கரசியாய்க் காட்டப்படுகிறாள். இது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலும் திரைப்படமும் முன்வைக்கும் கண்ணோட்டத்திற்கு எதிரானது. ‘எல்லா பாவங்களையும் சுமந்து கொண்டு புனிதமாகவே ஓடிக் கொண்டிருக்கிறாள் அந்த கங்கை எல்லா பழிகளையும் தாங்கிக் கொண்டு புனிதமாய் உத்தமியாய் கற்பரசியாய் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள் இந்த கங்கை.’ என்னும் வர்ணனையாளரின் குரல், பிரபுவின் கோட்டைத் தன் மீது சார்த்திக் கொண்டு அவனது நினைவுகளுடன் நடமாடுகிற கங்காவின்மீது ஒலிக்கிறது. அசம்பாவிதமாக தமிழ்  சினிமாவிற்குப் பழகிப்போன வட்டத்திற்குள் படத்தை அச்சொல்லாடலும் காட்சியும் இழுத்துச் சென்று விடுகின்றன.

நாவலுக்கும் சினிமாவிற்குமான வேறு சில பொதுவானவற்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாவலிலோ சினிமாவிலோ பிரபு கங்காவைக் கற்பழித்தான் என்று எங்கும் கூறப்படவில்லை. பாலுறவினை அவள் விரும்பி ஏற்றதாக பிரபு எண்ணினான். அந்த உறவினைத் தன் வரையில் அனுபவங்களாக்குவதில் தடுமாற்றம் கொண்டவளாகவே கங்கா சித்தரிக்கப்படுகிறாள். சமூகம்தான் அந்த உறவினைக் கற்பழிப்பு என்று பழிக்கிறது. திருமணத்திற்கு அப்பால் ஆணும் பெண்ணும் ஒரே ஒருமுறை பாலுறவு கொண்டு விடினும் தமிழ் சினிமாவில் கதா நாயகியாகப்பட்டவள் எப்படியோ தவறாமல் கர்ப்பம் தரித்துவிடுவாள். 1975ல் வெளிவந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படம் தமிழ் சினிமா சரித்திரத்தில் முதன் முறையாக ஒருநாள் மட்டும் உடலுறவு கொண்ட கதாநாயகியைக் கர்ப்பத்திலிருந்து காப்பாற்றியது. சரியாக இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு  வெளிவந்த இன்னொரு தமிழ்ப்படத்திலும் இதேபோல் கதாநாயகி காப்பாற்றப்பட்டு இருக்கிறாள். அந்தப்படத்தின் பெயரைச் சொல்லத் தன்னடக்கம் என்னைத் தடுக்கிறது.

ஜெயகாந்தன் - பீம்சிங் கூட்டணியில் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ அடுத்து வெளிவந்தது. நாவலின் வடிவம் சிறப்பானது. நாவல் கிட்டத்தட்ட படமாக வந்திருந்தது. நாடக நடிகை கல்யாணிக்கும் நாடக விமர்சகனும் பத்திரிகையாளனுமான ரங்காவிற்குமிடையேயான உறவுதான் படம். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவரின் சுதந்திரத்தை உணர்ந்த காதலையும் ஒருவர் சுதந்திரத்தில் மற்றொருவர் குறுக்கீடு செய்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கும் திருமணத்தையும் படம் பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்கிறது. கல்யாணிக்கு ரங்காவின்மீது அளப்பற்கரிய காதல் என்றாலும் அவள் தன்னைக் கண்டு கொள்வது நாடகத்தில்தான். அறிவு ஜீவியான ரங்காவினால் இதைப் புரிந்து கொண்டாலும், அவனே ஒப்புக்கொள்ளும் ஆண் என்கிற அகங்காரத்தினால் அவளுடன் ஒன்றிணைய முடியவில்லை. அறிவுக்கும் அடிப்படையான உணர்வுக்குமான ஒரு போராட்டமாகப் படம் எடுத்துச் செல்லப்படுகிறது. அவளுக்கு உடல் நலம் குன்றிய நிலையில்தான் அவனும் அவளும் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். கல்யாணியை நாடகம் பார்க்க ரங்கா அழைத்து செல்கிறான். அவர்கள் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கதையைக்கூட நாடகமாகப் பார்க்கிறார்கள். என்றாவது ஒரு நாள் குணம் அடைந்து மீண்டும் தான் நடிக்கக் கூடும் என்று அவள் நம்புகிறாள். நாடகத்தில் தொடங்கிப் படம் நாடகத்தில் முடிகிறது. அதுநாள்வரை தமிழ்ப் படங்கள் கண்டிராத பாணியில் ஆண் - பெண் உறவு சித்தரிக்கப்பட்டிருந்தது. எனவே அவர்களது போராட்டங்களைப் பெரும்பான்மையான ரசிகர்கள் ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை. அது எழுப்பிய தனி மனித, மற்றும் ஆண் -பெண் உறவு பற்றிய சிந்தனைகள் பட ரசிகர்களைச் சென்றடையவில்லை. அது தவிர, டிராயிங் ரூம் விவாதங்கள் போன்று படம் முழுவதும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் இருந்தன. படம் தோல்வி என்ற போதிலும் அது ஒரு நல்ல முயற்சி.  லட்சுமியின் நடிப்பு ஜெயகாந்தன், பீம்சிங் தவிர மூன்றாவதான ஆளுமையாகப் படத்தில் இருந்தது. அவர் தன் நடிப்பில் வெளிப்படுத்திய காதலில் சிநேகமும் தாய்மையும் ஒருசேரப் பொங்கிற்று.

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு இயக்குநரும் ஒரு இலக்கிய எழுத்தாளரும் கூட்டணி அமைத்துச் செயல்பட்டது ஒரு அபூர்வ நிகழ்வு.

‘திரு. ஜெ.கே. அவர்கள் நம் திரைப்படத் துறைக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் என்று துணிந்து சொல்லுவேன். அவரைப் போன்ற எழுத்தாற்றல் உள்ளவர்கள் கிடைத்து விட்டால் தழுவல் இல்லாமல், நகல் இல்லாமல் ஒரிஜினலாகவே தமிழ்ப்படங்களைத் தயாரிக்கலாம். அதன் வாயிலாகத் தமிழ்ப் பட உலகம் தலை நிமிர்ந்து ராஜ நடை போடலாம் என்பதில் சந்தேகமே இல்லை என்று பீம்சிங் ஜெயகாந்தன் பற்றி உற்சாகமான எண்ணம் கொண்டிருந்தார். ஜெயகாந்தனும் அவ்விதமே பீம்சிங்குடன் தொடர்வது பற்றியும் விருப்பம் கொண்டிருந்தார்.

பீம்சிங்கின் மரணத்துடன் அது ஒரு முற்றுப்புள்ளியை எய்தது. இருவரின் கடைசிப் படைப்பு ‘கருணை உள்ளம்’. 'கருணையினால் அல்ல' குறுநாவலை வைத்து எடுத்த படம். அதையும் அவர் வசனம் எழுதிய ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ மற்றும் அவர் இயக்கிய ‘புது செருப்பு’ ஆகியவற்றை நான் பார்த்ததில்லை. ஜெயகாந்தனையும் அப்படங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களையும் தவிர எத்தனை பேர் அவற்றைப் பார்த்திருக்கக்கூடும்?அவை குறைந்த திரையிடல்களாகக் கூட விநியோகம் பெறவில்லை. என்றாவது அவை பார்க்கக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே  உலகின் பல மூலைகளிலும் எடுக்கப்பட்ட படங்கள் இங்குள்ள கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால் நாம் பெருமைப்படத்தக்க படங்களை எடுத்து நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞனின் படங்கள் நம் வசம் இல்லை என்னும் நிலை மாற வேண்டும்.

அவர் எடுத்த குறும்படம் ‘நேற்று இன்று நாளை’. இது 1967ல் வெளி வந்தது. படம் தொழிற்சங்க பலத்துடன், தொழிலாளிகள் அவசரப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் அவர்களது பொருளாதாரம் பாதிக்கப்படுவது பற்றிய ஓர் அறிவுறுத்தல். இது ஒரு நயமான பிரச்சாரப் படம். அவரது சில சிறுகதைகளையும் ‘நல்லதோர் வீணை’ என்ற பெயரில் ‘பாரீசுக்குப் போ’ நாவலையும் எஸ்.கிருஷ்ணசாமி தொலைக் காட்சி படங்களாகத் தயாரித்தார். அவற்றிற்கு ஜெயகாந்தன் வசனங்கள் எழுதியதோடு சிலவற்றில் புதிய காட்சிகளையும் சேர்த்திருந்தார். தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட படங்களில் அவை சிறந்தன என்றெல்லாம் கூற இயலாவிடினும் அவை தரம் வாய்ந்தன. அவருடைய கதை வசனத்துடன் வெளி வந்த 'காவல் தெய்வம்' ('கை விலங்கு' குறுநாவல்), 'ஊருக்கு நூறு பேர்' கதையை மட்டுமே பயன்படுத்தி அதே பெயரில் வெளிவந்த படம் ஆகியன மற்ற தமிழ்ப் படங்களிலிருந்து  மாறுபட்டவைதான்.

ஜெயகாந்தனின் வேறு சினிமா பங்களிப்புகளும் கருதத்தக்கவை. நிமாய் கோஷ் இயக்கிய’பாதை தெரியுது பார்’ படத்திலிருந்து தொடர்ந்து அவர் பங்கேற்ற பல படங்களுக்கு அவர் எழுதிய பாடல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே` போன்ற இசை நுட்பத்தால் கேட்டவர் எளிதில் மறந்துவிட இயலாத பாடல்களை எழுதியிருந்தாலும், ‘வேறு இடம் தேடிப் போவாளோ’, ‘நடிகை பார்க்கும் நாடகம்’ ஆகியனவே அவரது சிறந்த பாடல்கள். அவற்றை அவர்தான் எழுதி இருக்க முடியும். அவரது வசனங்களில் வெற்றுச் சொல் அலங்காரங்கள் இல்லை. கதாபாத்திரங்களின் உரையாடல் ஒரு கேள்வி - பதில் போன்று இல்லாது தொலை நோக்கு பார்வையைக் கொண்டிருக்கும். அவர் ட்ரீட்மெண்ட் எழுதிய ‘காத்திருந்த கண்கள்’ படத்தில் ஒரு பெண் தான் இன்னொருத்தியாக நடிக்க வேண்டி இருந்ததனால் கொண்ட வலியை வெளிப்படுத்தும் வரிகள் எந்த இலக்கியத்திற்கும் குறைந்தன அல்ல.

'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைக்கதை - வசனம் புத்தகமாக வெளிவந்தது. அதுவரை தமிழ் சினிமாவின் வசனங்களும் பாடல்களும்தான் வெளியிடப்பட்டு வந்தன. பட விநியோகத்திலும் ஜெய காந்தன் ஒரு புதிய நடைமுறையைப் பின்பற்றினார். 'உன்னைப் போல் ஒருவன் படம்' வெளிவந்து  நன்றாக ஓடியும் விநியோகத் தரப்பில் பல இடைஞ்சல்கள் ஏற்பட்டு அது தொடர்ந்து திரையிடமுடியாமல் போனது. எனவே விருப்பப்பட்டுக் கேட்டவர்களிடம் தொகை பெற்று அவர்களுக்காகப் பிரத்யேகமாகப் படத்தைப் போட்டுக்காட்டினார். அதில் கணிசமான வரவும் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அவ்விதம் இன்று மாற்றுப் படங்களைத் திரையிடுவதற்கு தியேட்டர்கள் கிடைக்காது. மாற்றுப் படங்களுக்கான மாற்றுத் திரையரங்குகளைக் கலைஞர்கள் தேட வேண்டும். ஜெயகாந்தன் சென்ற வழியை முன்னோடியாகக் கொள்பவர்கள் கவனிக்க வேண்டியது இது.

ஆரம்ப காலத்தில் 'உன்னைப் போல் ஒருவன்' மூலம் சினிமாவில் ஒரு இயக்குநராய் அடியெடுத்து வைத்த பொழுது அவர் ஒரு அறிக்கையைப் படித்தார். அதிலிருந்து சில வரிகள்.`தமிழ்ப் பட உலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு புதிய கதவு ஒரு புதிய திசை வழியை நோக்கி இந்தப் படத்தின் மூலம் திறக்கப்பட்டிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். புதுமை, புரட்சி என்ற ஆர்ப்பாட்டத்துடன் வந்த எந்தப் படத்திற்குமில்லாத ஓர் ஆத்மா இதற்கு உண்டு... இந்தப் படத்தின் தரத்திற்கு, இதன் ரசனைக்கு ஒத்தவர்கள் எத்தனை பேர் என்பதை நான் அறிந்துகொண்டால் அதுவே எனக்கு வெற்றி.’ பிரபலமடையவோ பொருள் ஈட்டவோ சினிமாவுக்கு வந்தவர் அல்லர் ஜெயகாந்தன். நல்ல சினிமா படைப்புகள் தமிழில் வர வேண்டும் என்கிற ஒரு கர்ம வீரராக அவர் செயல்பட்டார். அவரது வெற்றிகள் சிலவாயினும் அவை மகத்தானவை. புதுமையான சில தோல்விகளும் உண்டு.

‘இந்த சமுத்திரத்தில் நமது கட்டு மரத்தில் போன பயணம் மறுபடியும் நாம் கரையேறி வருகிற பட்சத்தில் வெற்றிகரமான பயணம் என்றே சொல்லவேண்டும்.’ என்று தனது சினிமா பயணம் குறித்து ஜெயகாந் தன் கொள்ளும் பெருமிதம் ஒப்பில்லாதது.              

*
படங்கள் உதவி : ஞானப்பிரகாசம்

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [1978] ஜெயகாந்தனின் காலத்தை வென்ற படைப்பு


இன்று ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்படம் யூட்யூப் புண்ணியத்தில் பார்த்தேன்,நெடுநாளாக கிடைக்காமல் இருந்த படம்.எத்தனை அருமையான ஒரு படைப்பு!!!. இப்படம் இயக்கும் போதே பீம்சிங் மறைந்து விட்டதால், ஜெயகாந்தன் இரண்டாம் யூனிட் இயக்குனராக திருமலை மகாலிங்கம் என்பவரைக் கொண்டு படத்தை முடித்ததாக தன் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.படத்தின் மிக அருமையான ஒளிப்பதிவு பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான பி.கண்ணன்.இந்தப் படம் 1978 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது, ஒரு நாவலை எத்தனை அழகாக அதன் வடிவம் மாறாமல் படமாக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இப்படத்தையும்,சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தையும் சொல்லலாம். ஜெயகாந்தனின் இந்த இரண்டு திரைப்படங்களுமே நூறு வருடங்கள் கடந்தாலும் தமிழ் சினிமாவில் நிச்சயம் பேசப்படபோகும் படைப்புகள்.

ஜெயகாந்தனின் ஆஸ்தான நடிகர்களில் முதன்மையானவர் பெண் சிவாஜி என்றழைக்கப்படும் லட்சுமி இதில் கல்யாணி என்னும் நாடக நடிகை வேடம் செய்திருந்தார், ஜெயகாந்தனையும் அவரின் மையக் தாபாத்திரமான சுயநலமி  கதா நாயகன் பிம்பத்தையும் மிகச் சரியாக பிரதிபலிக்கும் அண்டர்ரேட்டட் நடிகரான  ஸ்ரீகாந்த் இதில் நாடக விமர்சனங்கள் எழுதும் ரங்கசாமி என்னும் கதாபாத்திரம் செய்திருந்தார், ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தையான ஒய்.ஜி.பாரத்தசாரதி அண்ணாசாமி ஐயர் கதாபாத்திரம் செய்திருந்தார். ஒய்.ஜி மகேந்திரன் இதில் கல்யாணியில் குழுவில் தபலா கலைஞர் தாமுவாக வேடம் ஏற்றிருந்தார்,

தாய் தந்தையை சிறுவயதிலேயே இழந்த நாடக நடிகை கல்யாணி,அழகியல் உணர்ச்சி மிகவும் நிறைந்தவள், தன் வீடு முழுக்க பதியம் போட்டு ரோஜாச்செடிகள் வளர்க்கிறார், ஓய்வு வேளைகளில் புற்களை வெட்டி சீராக்குகிறாள் ,தன் மேடை நாடக சபாவை உயிருக்கு உயிராக நேசிப்பவள்,தன் தந்தையின் நண்பரான அண்ணாசாமியின் துணை கொண்டு பிரபல நாடக குழு தலைவியாக வளர்ந்து நிற்பவள். 32 வயதாகியும் மணமாகாதவள், நல்ல துணைக்காக ஏங்குபவள். அப்படி அவளின் நாடகத்துக்கு வந்த கறாரான நாடக விமர்சகரான எழுத்தாளர் ரங்காவை  விரும்புகிறாள், ரங்கா கதைகள் எழுதுவதை விட்டுவிட்டு விமர்சகர் ஆகிவிட்டாலும்,இவள் அவற்றை இன்னமும் நினைவில் வைத்திருப்பவள்.

அவருக்கு ஒரு கடிதம் எழுதி முடிந்தால் எழுதியது யார் ? என்பதை முடிந்தால் கண்டுபிடித்து தன்னை வந்து பார்க்குமாறு சவால் விடுகிறாள் கல்யாணி. ரங்கசாமி இவளாகத்தான் இருக்கும் என்று யூகித்தவர் அவளைச் சந்தித்து தன் வாரமலர் இதழுக்கு ஒரு பேட்டி தருமாறு கேட்க, அவள் அண்ணாசாமியையும் கூட வைத்துக்கொண்டு பேட்டி தருகிறாள். அப்போது அண்ணாசாமி ரங்காவிடம் பேச்சுக் கொடுத்து, ரங்கா மனைவியை இழந்தவர். 5 வயதுப் பெண்குழந்தையின் தந்தை, அக்குழந்தையை ஊரில் மாமனார் வளர்க்கின்றனர் போன்ற விபரங்களைக் கேட்டறிகின்றனர். 

ரங்காவின் மேதமை,பொதுவுடமை சித்தாந்தப் பேச்சு போன்றவற்றால் மயங்கியவள், மறுநாளே ரங்காவை விருந்துக்கு அழைத்தவள். ரங்காவுக்கு உணவும் பரிமாறி பின் தன்னையும் விருந்தாக பரிமாறுகிறாள்,தன் தாயார் பொட்டுக்கட்டி வாழ்ந்த தாசிக்குலம் என்பதால் தானும் ரங்காவுக்கு தாசியாக இருக்கவும் தயாராக இருக்கையில்,சில நாட்களே சேர்ந்து வாழாஅரம்பித்த நிலையில் அண்ணாசாமி ஐயரின் கண்டிப்பான அறிவுரையை ஏற்ற ரங்கா , கல்யாணியை எளிமையாக பதிவுத் திருமணமே செய்து கொள்கிறார். கல்யாணி அவரின் இந்த தயையை எதிர்பார்க்கவேயில்லை, ரங்காவை உச்சி மோர்ந்து கொண்டாடுகிறார்.

கல்யாணியில் சித்தி மகளான பார்வதி கல்யாணியின் வீட்டில் சமையல் வேலை செய்து ஒத்தாசையாக இருந்தவளை ஆசையைத் தூண்டிவிட்டுக் காதலிக்கிறார் தபேலாக் கலைஞர் தாமு.மிகுந்த யோசனைக்கு இடையில் கல்யாணி பாரு தாமுவின் திருமணத்தை  நடத்தி வைக்கிறாள்.
மகிழ்ச்சியான இல்லறத்தில் ரங்காவின் சுயநல,ஆணாதிக்க முகம் அவ்வப் பொழுது தலைகாட்டுகிறது,அப்பொதெல்லாம் இன்முகமாக விட்டுக் கொடுத்துப் போகிறார் கல்யாணி. ரங்கா நாயக்கர் சாதி,அவரின் சித்தப்பாவான சின்ன நயினா [தேங்காய் சீனிவாசன்] வீட்டில் குடியிருந்தவர், திருமணத்துக்குப் பின்னர் மிகுந்த சாதிப் பற்றுள்ள அவர்களின் வீட்டில் கல்யாணியை குடிவைக்க யோசிக்கிறார், கல்யாணியின் சொந்தமான பெரிய வீட்டிற்கும் தான் குடியேற அவரது ஆணாதிக்க மனோபாவம் முட்டுக்கட்டை போட, கல்யாணியிடம் சொல்லி அவ்வீட்டை வாடகைக்கு விட வைத்து, அவரும் கல்யாணியும் வேறு ஒரு வாடகை வீட்டிற்கு புதுக்குடித்தனம் செல்கின்றனர்.

ரங்காவின் கல்யாணியுடனான மறுமணம் சின்ன நயினாவுக்கும் அவர் மனைவி தொத்தாவுக்கும் [காந்திமதி] அவ்வளவாகப் பிடிப்பதில்லை.இதில் சின்ன நயினாவாக வந்த தேங்காய் சீனிவாசன் மிக அருமையாக அண்டர்ப்ளே செய்து நடித்த படம். இவரின் கதாபாத்திரம் எத்தனை வருடங்கள் ஆனாலும் மனதை விட்டு நீங்காது. ரங்காவின் மறுமணத்தை இவர்கள் எதிர்க்கவில்லை, கல்யாணி தங்கள் ஜாதியாக இல்லையே என்ற பிற்போக்குத்தனத்தில் அவர்கள் இத்திருமணத்தை ஆதரிக்கவில்லை என்பது தான் உண்மை.  ஊரிலிருக்கும் ரங்காவுடைய மாமனாருக்கும், ரங்காவின் மகளை வளர்த்து வரும் அவரின் கொழுந்தியாளுக்கும் கூட இந்த மறுமணம் பிடிப்பதில்லை, அவர்கள் அந்தப் பெண் குழந்தையையும் ரங்காவிடம் தர மறுத்துவிடுகின்றனர். சுயநலமியான ரங்காவுக்கு இதுவும் வசதியாகவே போய்விடுகிறது. கல்யாணியை அவ்வப்பொழுது வார்த்தைகளால் குத்திக் காயப்படுத்தினாலும் இவர் வேண்டும் பொழுது கட்டிலில் கல்யாணி போட்டது போட்டபடி வந்து விட வேண்டியிருக்கிறது. 


ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது தான் யதார்த்த நிஜம் என ரங்கா நினைக்கிறார்,அவர் மனதில் தாழ்வுமனப்பான்மை தலைதூக்குகிறது. தனக்கு நிகரான அறிவுடன் தன் மனைவி இருப்பதை ஆணாதிக்க மனோபாவம் கொண்ட ரங்கா ஏற்க மறுக்கிறார். தன் சின்ன நைனாவைச் சென்று பார்த்தவர், அவர் இவரிடம் தன் சாதிப் பெண்ணான இவரின் கொழுந்தியாளையே திருமணம் செய்து கொண்டு,அந்த நாடக நடிகையை ஆசைநாயகியாக வைத்துக்கொள் , அது ஒன்றும் நமது சாதிக்கு புதியதல்ல என்று கொம்பு சீவி விடுகிறார், மனைவி தமக்கு சரி நிகர் சமானமாக தேர்ந்தெடுத்துக் கொண்டால் வாழக்கை சுவையாக இருக்காது என்றவர், கல்யாணியை விட்டு விலக நாடகத்துக்கு முழுக்கு போடுமாறு கேள்,அவள் விட முடியாது என்று நிச்சயம் சொல்லுவாள், அது தான் சாக்கென்று நீ இங்கே வந்து விடு,மெல்ல வேறு பெண்ணைப் பார்த்து முடித்து விடலாம் என்று யோசனை சொல்ல,விஷமாகிறார் ரங்கா.

இந்த வாடகை வீட்டிலும் பார்த்துப் பார்த்து பதியமிட்டு ரோஜாச்செடி வளர்க்கும் கல்யாணியுடன் தர்க்கம் செய்கிறார் ரங்கா,நாட்டில் பசி பட்டினி வேலையில்லா திண்டாட்டங்கள் நிறைந்த இக்காலத்தில் காய்கறியான கத்தரிக்காய் வளர்ப்பதே பலன் தரும், ரோஜாக்கள் வெறும் ஏஸ்தெடிக்ஸ், வீண் டம்பமான செயல் என்கிறார். அது முதல்   முனுக்கென்றால் தேள் போலக் கொட்டி கல்யாணியை புண்படுத்துகிறார் ரங்கா, கருத்து வேறுபாடுகள் வேரூன்றத் துவங்க, ரங்கா தன் பெட்டிப்படுக்கையோடு சின்ன நைனாவின் பாரம்பரிய ஓட்டு வீடு இருக்கும் சூளைக்கே சென்று விடுகிறார். கல்யாணியோடு சண்டையும் இல்லை சமாதானமும் இல்லை. இவர்களிருவருக்குள்ளும் இன்னமும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இருக்கிறது. ரங்கா படுக்கை சுகம் தேவைப் படுகையில் கல்யாணியைத் காண வருவார், கல்யாணியும் தேவையறிந்து நிறைவேற்றுவாள்.

இப்படி கல்யாணி,எதற்கும் எதிர்க்காமல் பசுவைப் போல நடந்து கொள்வதும் ரங்காவுக்கு மிகுந்த தாழ்வு மனப்பான்மையை அதிகமாக்குகிறது. கல்யாணியிடம் இனி நாம் தம்பதிகள் என்ற பந்தத்திலிருந்து விலகி நண்பர்கள் என்ற வட்டத்திலேயே வாழ்வோமே என யோசனை சொல்கிறார் ரங்கா. அதற்கும் சரி என்று சிரித்துக்கொண்டே உட்படுகிறார் கல்யாணி. ரங்கா தன் வழக்கறிஞர் நண்பன் ராகவனிடம் [நாகேஷ்] கல்யாணியை அழைத்துக் கொண்டு போகிறார். அங்கே காரல் மார்க்ஸின் பெரிய படம் மாட்டப்பட்டிருக்கிறது, அதைப் பார்க்கும் கல்யாணியிடம் அது ராகவனின் தந்தை கிடையாது என்று கிண்டலாகச் சொல்ல, கல்யாணி,எனக்கும் தெரியும் அது காரல்மார்க்ஸ் என்று என்கிறார்,அது ரங்காவுக்கு எரிச்சல் ஏற்படுத்துகிறது, தன் பத்தாம்பசலியான முன்னாள் மனைவி ஒரு நாள் கத்தரிக்காய் குழம்பு வைத்து இவருக்குப் பரிமாற, அவளை திட்டி அடக்கியதை நினைவுகூருகிறார். புத்திசாலி மனைவியை தேர்வு செய்ததை எண்ணி அங்கே புழுங்குகிறார்.
வக்கில் நண்பர் ராகவன் [நாகேஷ்]  இருவரையும் வாதங்களால் துளைத்தெடுக்கிறார். நாகேஷ் மிக அருமையாக அண்டர் ப்ளே செய்து நடித்த படங்களில் இது முதன்மையான படம், சில நேரங்களில் சில மனிதர்கள்  படத்திலும் அவரின் நடிப்பு மிகவும் பேசப்பட்டிருக்கும். இப்படம் பார்த்தவர்கள் நிச்சயம் நாகேஷின் வக்கில் கதாபாத்திரத்தை மறந்திருக்க மாட்டார்கள். ராகவனின்  நியாயமான சட்டத்தின் பார்வையில் ஏன் விவாக ரத்து? என்று கிடுக்கிப்பிடி போடும் கேள்விகளுக்கு அங்கே இருவராலும் பதில் சொல்ல முடியவில்லை.
 திருமணத்துக்கு பின்னர் எங்களால் ஒருவரை ஒருவர் விரும்ப முடியவில்லை என்று அவர்கள் கூறும் சப்பைக் காரணங்களெல்லாம் சட்டத்த்தால் விவாகரத்து அளிக்க முடியாது, இருவரில் ஒருவருக்கு ஏதேனும் உடற்குறையிருந்தால் வேண்டுமென்றால்  விவாகரத்து கிடைக்கும் என்றவர்,   அன்று பேசியதில் தான் உணர்ந்த வரையில் இவர்கள் என்றைக்குமே பிரியமாட்டார்கள் என்கிறார், 

இருவரும் சேர்ந்து வாழ வேண்டுமென்பதே தன் விருப்பம்  அவர்கள் ஆழ் மனதிலும் அதுதான் உள்ளது என்றும் சொன்னவர்,திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் தான் தம்பதிகள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியும், மேலும் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஒரு வருடத்துக்கு சந்திக்கவே கூடாது, தொலைபேசியிலும் பேசிக்கொள்ளுதல் கூடாது என்பதும் முக்கிய நிபந்தனைகள் என்று அறிவுருத்தி அனுப்புகிறார்.

கல்யாணிக்கு இந்த மணஉறவிலிருந்து விடுபட விருப்பமில்லை, ரங்காவின் முடிவை எதிர்த்து அவரை நிர்ப்பந்தப்படுத்தவும் விரும்பவில்லை. ரங்கா அன்று போனவர் மூன்று மாதங்களாக அவள் வீட்டுக்கே வரவில்லை. அண்ணாசாமியும், பட்டுவும் மட்டுமே அவளுக்கு ஆறுதலாக உள்ளனர். பட்டுவுகும் தாமுவுக்கும் அடிக்கடி சண்டை வருவதால் கர்ப்பிணியான பட்டு கல்யாணியுடனே ஒத்தாசைக்கு வந்து விடுகிறாள்.

 மனச்சோர்வு கொண்ட கல்யாணி உடல் நாளுக்கு நாள்  நலிவுற. ஒரு நாள் படுக்கையில் இருந்து எழும் அவளுக்கு இரண்டு கால்களையும் அசைக்க முடியவில்லை. அவளுக்கு தண்டு வடத்தில் ஏற்படும் பிரச்சனையால் கால்களில் முடக்கு வாதம் வந்துவிடுகிறது, முடங்கிப் போகிறாள் கல்யாணி. அண்ணாசாமி கல்யாணியை மருத்துவமனையில் சேர்க்கிறார்.கல்யாணியின் கால்கள் குணமடைய வாய்ப்புள்ளது, ஆனால்சிறிது காலங்கள் செல்ல வேண்டும் என்று டாக்டர் அறிவுருத்துகிறார்.

இரண்டு மாதங்களாக சக்கர நாற்காலியில் முடங்கிப் போன கல்யாணியை காண்கையில் மனம் குமுறும் அண்ணாசாமி,ரங்காவின் சூளை வீட்டுக்குச் சென்று கல்யாணியைப் பற்றிச் சொல்ல, ரங்கா  உடனே மனைவியைக் காண வருகிறார். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த பின்பும், சக்கர நாற்காலியே கதியாக இருக்கும் கல்யாணிக்கு ரங்கா மிகவும் ஒத்தாசையாக இருக்கிறார். கல்யாணியின் எல்லாத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து கைகளில்  சுமந்து சென்று செய்கிறார். அன்று இவர்களைக் காண வரும் வக்கீல் ராகவன் இவர்கள் முன் வைத்து  ரங்காவின் காதைக் கடிக்கிறார், கல்யாணிக்கு  இப்போது இருக்கும்  உடல் குறைபாட்டைக்  காட்டி உடனடியாக விவாகரத்து வாங்கிவிடலாம், சட்டம் இதற்கு துணைநிற்கும்  என்று சொல்ல,திடீர் மனிதாபிமானியாக மாறிவிட்ட ரங்கா அருவருப்படைகிறார்.

 என்ன பைத்தியக்காரத்தனமான  சட்டம்?. தம்பதிகள் திடமாக ஒருவர் துணையின்றி ஒருவர் வாழலாம் என்கிற நிலையில் விவாகரத்து அளிக்க முன்வரா சட்டம்,  ஒருவரில்லாமல் ஒருவர் வாழ முடியாது என்ற அளவுக்கு நோயுற்றிருக்கும் போது அக்குறையையே காரணமாக வைத்து விவாகரத்து அளிக்க முடியும் என்றால் அச்சட்டம் தேவையே இல்லை  என்று கோபமாகக் கூறுகிறார்.

வக்கீல் ராகவன் ரங்காவின் இந்த நிஜமான மனமாற்றத்தால்  மகிழ்ச்சியடந்தாலும் வெளிக்காட்டிக்கொள்வதில்லை.  அண்ணாசாமியையும் அங்கே கண்ணைக் காட்டி வெளியில் அழைத்துக்கொண்டு போகிறார். கல்யாணியும் ரங்காவும் அங்கே ஆரத்தழுவிக்கொள்கின்றனர். இப்போது நடக்க முடியாத தன் மனைவிக்கு கால்களாக தான் இருப்பதே ரங்காவுக்கு மன நிறைவைத் தருகிறது.இப்போது அவருக்கு தாழ்வு மனப்பான்மையே எழுவதில்லை,அவளை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டே அண்ணாசாமி தலைமை ஏற்று நடத்தும் நாடகம் பார்க்க அழைத்துச் செல்கிறார் . தன்  நாடகக்குழு நடத்தும் நாடகத்தைப் பார்த்ததும், தனக்கு கால்கள் மீண்டும் வந்துவிட்டது போல மனதால் கல்யாணியும் அங்கே மேடையேறுகிறாள். ஆனால் அவள் ரங்காவின் அருகில் தான் அமர்ந்து நாடகத்தை அமைதியாகப் பார்க்கிறாள்.
    
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எத்தனை மலர்கள்? எத்தனை நிறங்கள்? எத்தனை மனங்கள் திருமணங்கள்   என்னும் டி.எம்.எஸ்., வாணி ஜெயராம் பாடிய பாடலை இங்கே பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=yJSytDOxrUY


படத்தின் கடைசிக் காட்சியில் வரும்  நடிகை பார்க்கும் நாடகம் அதில் மனிதர் எல்லாம் பாத்திரம்  என்னும் மிக அருமையான பாடலும் ரேர் ஜெம்கள் ஆகும். இப்பாடலை ஜெயச்சந்திரன்,சசிரேகா பாடியிருப்பார்கள்.இப்பாடலை இங்கே பாருங்கள்.
 http://www.youtube.com/watch?v=BQgmCq7Czyw

 இப்படத்தின் கதை வசனம்  பாடல்களையும் ஜெயகாந்தனே எழுதினார்.இந்தக் கதை உருவாக காரணிகளாக ஜெயகாந்தன் தன் திண்ணை பத்திரிக்கைப் பேட்டியில் இப்படிச் சொல்லியிருந்தார்.

இண்டெலெக்சுவல் என்பது படித்தவர்கள் இல்லை. சிந்திக்கிறவர்கள். ஒரு பாத்திரம் சிந்திக்கிற பொழுது, தன் அறிவினால் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்களாக மாறுகிறார்கள். அவள் ஓரளவிற்குப் படித்தவள். ஓரளவிற்குச் சிந்திக்கத் தெரிந்தவள். வாழ்க்கையில் ஆண் துணை வேண்டும் என்று சிந்தித்து செயல் படுகிறாள். அவர்(சாமி) முன்னாலே ப்ரொபோஸ் பண்ணியிருந்தால், அவருடன் கூட அவள் இருந்திருக்கக் கூடும். 
அவளுக்குப் பத்திரிகை நிருபராய் வரும் ரங்காவிடம் ஒரு ஈடுபாடு. அவள் தான் அவனுக்குக் கடிதம் எழுதி இந்தக் கடிதம் எங்கேயிருந்து வருகிறது என்று தெரிந்தால் வந்து சந்திக்கவும் என்று எழுதுகிறாள். ஆனால் ரங்கா , அவளை பேட்டி காண்பவனாக வருகிறான். போட்டோவிலே கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்பான். போட்டோவிலேயாவது கையெழுத்துப் போடலாமில்லையா ? என்று கேட்பான்.
துர்கனேவ்-இன் ஒரு நாவலில் நாயகி இப்படித் தான் தனக்குப் பிரியமானவனுக்கு எழுதுகிறாள். அதைப் படித்ததன் விளைவு என்று பிறகு கண்டுபிடித்தேன். அவள் கால் விளங்காமலான பிறகு, மனிதாபிமானத்தோடு இணைகிறான். அதன் காரணமாக அவளை விவாக ரத்து செய்து விடலாம் என்று சட்டம் சொல்லும் பொழுது அது அவனுக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. மனிதாபிமானத்திற்கு விரோதமென அவனுக்குத் தோன்றுகிறது. காதலுக்கு அடிப்படை மனிதாபிமானம் தான் . அது தான் இந்த நாவலில் வலியுறுத்தப்படுகிறது.
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் முழுப்படமும் யூட்யூபில் கிடைக்கிறது.யாரும் தவற விடக்கூடாத ஒரு க்ளாஸிக் இப்படம் இது.
http://www.youtube.com/watch?v=nbLGAYOE33Q 

ஜெயகாந்தனின் இன்ன பிற உன்னதமான திரைப்படைப்புகள் 
  1. உன்னைப்போல் ஒருவன், கமல்ஹாசன் புண்ணியத்தில் 1965 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தைப் பற்றி தேடினால் அவரின் உபோ ஒ தான் கழிவுப்பெருக்காக வருகிறது.
  2.  யாருக்காக அழுதான்  திரைப்படத்தின்  டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.
  3. சில நேரங்களில் சில மனிதர்கள்  யூட்யூபில் பார்க்கக் கிடைக்கின்றது டிவிடி பிரதியும் கிடைக்கின்றது 
  4. எத்தனை கோணம் எத்தனை பார்வை  திரைப்படத்தின்  டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.
  5. புதுசெருப்பு கடிக்கும்  திரைப்படத்தின்  டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.
  6. ஊருக்கு நூறு பேர் கதையைஇயக்குனர் லெனின் படமாக்கி அது தேசிய திரைப்படவிழாவில் கலந்து கொண்டது அதன் டிவிடி பிரதி எங்குமே கிடைப்பதில்லை. 
  7. சினிமாவுக்கு போன சித்தாளு கௌதமன் இயக்கத்தில் வெளியானது,அதன் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.
ஜெயகாந்தன் ஞானபீடம் பரிசு பெற்ற நாம் வாழும் காலத்தின் மாபெரும் படைப்பாளி.  பொதுவுடமை புரட்சி சிந்தனையாளர். இலக்கியம் மற்றும் சினிமாவில் தன் முத்திரையைப் பதித்தவர்.  இப்படி பலச் சிறப்புகள் இருந்தும் அவர் இயக்கிய திரைப்படங்களை நாம் தேடிப்பார்க்க வழியின்றி இருப்பது எத்தனை அவமானம் பாருங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (260) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (167) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)