'டிப்ளமாஸி' 2014
இயக்குனர் வோல்கர் ஷ்லோண்டோர்ஃப் இயக்கிய 'டிப்ளமாஸி' திரைப்படம், உலக சினிமா வரலாற்றில் 'சேம்பர் நாடகம்' என்ற வகையறையில் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
இது இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும், துப்பாக்கிச் சத்தங்களையும், வெடிப்புகளையும் விட, வார்த்தைகளின் நுண்ணிய மோதலை மையப்படுத்துகிறது.
இத்திரைப்படம் மனிதநேயம் மற்றும் கடமை என்ற இரண்டு துருவங்களுக்கு இடையே நடக்கும் தீவிரமான தத்துவப் போராட்டத்தை ஆவணப்படுத்துகிறது. ஸ்வீடன் தூதர் ராவ்ல் நோர்ட்லிங் என்பவர் ஒரு நகரத்தின் அழிவைத் தடுக்க, தனது பேச்சையும், ராஜதந்திர நுண்ணறிவையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு களமிறங்கும் ஒரு அன்புப் போராளியாகத் தோன்றுகிறார்.
அவருக்கு எதிரே நிற்பவர், ஹிட்லரின் கட்டளை, நாஜி சித்தாந்தத்தின் பிடி மற்றும் தனது குடும்பத்தைப் பற்றிய அச்சம் என்ற முப்பெரும் இரும்புக் கோட்டையினுள் இருக்கும் ஜெனரல் வான் சோல்டிட்ஸ்.
இயக்குனர் ஷ்லோண்டோர்ஃப், இந்த இரு ஆளுமைகளுக்கும் இடையேயான உரையாடலை வெறும் விவாதமாகக் காட்டாமல், ஒரு உயிருக்கு ஆடும் சதுரங்க ஆட்டமாக மாற்றுகிறார். ஒவ்வொரு வசனமும் ஒரு தர்க்கரீதியான நகர்வாக உள்ளது.
நோர்ட்லிங், சோல்டிட்ஸின் மனசாட்சியை மெல்ல மெல்லத் தட்டி எழுப்பி, அவரது வீரத்தின் உண்மையான அடையாளம் 'அழிப்பது' அல்ல, மாறாக 'காப்பது'தான் என்பதைப் புரியவைக்கப் போராடுகிறார்.
நீல்ஸ் அரெஸ்ட்ருப் மற்றும் ஆந்த்ரே டுசால்லியே ஆகியோரின் நடிப்பு, இந்த உணர்ச்சிப் போராட்டத்தை ஒரு சினிமா அனுபவமாக உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது.
அவர்களின் உடல் மொழி மற்றும் கண்களின் வழியே வெளிப்படும் பதற்றம், ஒரு நகரத்தின் ஒட்டுமொத்த பயத்தையும் சுமந்து நிற்கிறது.
ஒரே களம், குறைவான நடிகர்கள் என்ற கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பிற்குள், ஒரு உலக வரலாற்று முடிவின் சுமையை வைத்திருப்பது படத்தின் மிகப் பெரிய பலம். இது, பார்வையாளரின் கவனத்தை வெளிப்புறச் சண்டைகளை விடுத்து, உளவியல் மற்றும் தார்மீகச் சண்டைகளுக்குள் ஆழமாகச் செலுத்துகிறது.
"சோல்டிட்ஸ் ஹிட்லரின் கட்டளைப்படி ஏன் பாரிஸை அழிக்கவில்லை?" என்ற வரலாற்றுப் புதிருக்கு ஒரு நம்பகமான, நாடகீயமான கற்பனையை இந்தப் படம் வழங்குகிறது.
அவர் அழிவைத் தேர்ந்தெடுத்திருந்தால் ஒரு போர் குற்றவாளியாக இருந்திருப்பார்; ஆனால் காப்பாற்றியதன் மூலம், கடைசி நிமிடத்தில் தனது மனிதநேயத்தை நிலைநாட்டுகிறார்.
வன்முறை, ஆயுதங்கள் அல்லது அதிகாரத்தின் மூலமாக அல்லாமல், தர்க்கம், உணர்ச்சிவசப்படாத அணுகுமுறை மற்றும் பாசத்தின் உணர்வுபூர்வமான கோரிக்கை ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஒரு தனிப்பட்ட இராஜதந்திரி ஒரு நகரத்தின் தலைவிதியை மாற்றியமைக்க முடியும் என்பதை இந்தப் படம் நிரூபிக்கிறது.
'டிப்ளமாஸி' , இருண்ட காலத்தில் நம்பிக்கையின் தீப்பொறி எப்படி எழுகிறது என்பதைப் பற்றியது. இது வெறும் கடந்த காலப் பதிவு அல்ல; ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு தலைமுறையும், அதிகாரத்துக்கும் மனித மனசாட்சிக்கும் இடையே முடிவெடுக்க வேண்டிய தருணத்தில், கட்டாயம் பார்க்க வேண்டிய ராஜதந்திரத்தின் பாடநூல் ஆகும்.
டின் ட்ரம் என்ற ஒப்பற்ற படைப்பைத் தந்த வோல்கர் ஷ்லோண்டோர்ஃப் என்ற புகழ்பெற்ற ஜெர்மானிய இயக்குநர், சிரில் ஜேலியின் நாடகத்தைத் தழுவி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
பெரும்பாலான காட்சிகள் ஜெனரல் சோல்டிட்ஸின் ஒரே அலுவலக அறையில் அமைந்திருந்தாலும், இயக்குநர் காமிரா கோணங்கள் மற்றும் நடிகர்களின் தீவிரமான வசனப் பரிமாற்றங்கள் மூலம் பதற்றத்தையும், பரபரப்பையும் நிர்வகிக்கிறார்.
இந்த நாடகம் தழுவப்பட்ட திரைக்கதை, வார்த்தைகளின் சக்தியையும், ஒரு நகரத்தின் விதி ஒரே இரவில் இரண்டு ஆண்களின் உரையாடலில் அடங்கியிருக்கிறது என்ற கருத்தையும் வலுவாக நிலைநிறுத்துகிறது.
வசனங்கள் கூர்மையானவை, ஆழ்ந்த தத்துவார்த்த கேள்விகளைக் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படம் 40வது சீசர் விருதுகளில் "சிறந்த தழுவல் திரைக்கதைக்கான" விருதை வென்றது.
இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம், இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஆந்த்ரே டுசால்லியே (ராவ்ல் நோர்ட்லிங்) மற்றும் நீல்ஸ் அரெஸ்ட்ருப் (ஜெனரல் வான் சோல்டிட்ஸ்) ஆகியோரின் நடிப்புதான். டுசால்லியே, அச்சுறுத்தலில் இருக்கும் மனிதநேயம், புத்திசாலித்தனம் மற்றும் மென்மையான ஆனால் உறுதியான வாதங்களை வெளிப்படுத்துகிறார்.
அரெஸ்ட்ருப், கட்டளையைப் பின்பற்றும் இராணுவ அதிகாரி, குடும்பப் பாதுகாப்புக்கான அச்சம், மற்றும் அழிவின் சுமையைச் சுமக்கும் ஒரு மனிதனின் உள் போராட்டத்தை அற்புதமாகப் பிரதிபலிக்கிறார்.
இவர்களின் உரையாடல் ஒரு தீவிரமான உளவியல் மோதலைத் திரையில் நிகழ்த்துகிறது.
மிஷல் அமாத்யூவின் ஒளிப்பதிவு, உட்புறக் காட்சிகளுக்கு ஒரு இருண்ட, அடர்த்தியான வண்ணத் திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இது இரண்டாம் உலகப் போரின் முடிவில் நிலவிய கவலையான, மூச்சுத்திணற வைக்கும் சூழலைப் பிரதிபலிக்கிறது.
ஒளியும் நிழலும் ஜெனரலின் மனதிற்குள் நடக்கும் போராட்டத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, அன்னா பீலெர் இசையை மிகக் குறைவாகவும், தேவைப்படும் இடத்தில் உணர்ச்சிகளின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்ட மட்டுமே பயன்படுத்தியுள்ளார். அமைதி மற்றும் பின்னணியில் கேட்கும் போரின் சத்தம் ஆகியவை இசையை விட மிகையான பின்னணியை அளிக்கின்றன.
'டிப்ளமாஸி' திரைப்படம் , வன்முறை இல்லாத ராஜதந்திரத்தின் மகத்தான வலிமையை எடுத்துரைக்கிறது. இது ஒரு நகரத்தைக் காக்க வார்த்தைகள் மட்டுமே போதுமானது என்பதை நிரூபிக்கும் ஒரு உன்னதமான 'சேம்பர் நாடகம்' ஆகும்.
படத்தின் கதை:-
நேச நாட்டுப் படைகள் பாரிஸ் நகரை நோக்கி முன்னேறி வரும்போது, ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர், ஜெனரல் டீட்ரிக் வான் சோல்டிட்ஸ் என்பவருக்குப் பாரிஸ் நகரை முழுவதுமாக அழித்துவிட வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.
இந்தக் கட்டளையை நிறைவேற்ற, சோல்டிட்ஸ் தனது பொறியியல் குழுக்களை, லெப்டினன்ட் ஹெக்கர் தலைமையில் அனுப்புகிறார். மேலும், கைதியாகப் பிடிக்கப்பட்ட பாரிஸ் நகரப் பொறியாளர் எம். லேன்வின் என்பவரின் ஆலோசனையையும் பெறுகிறார்.
பாரிஸின் புகழ்பெற்ற இடங்களான ஈஃபில் கோபுரம், லூவர் அருங்காட்சியகம், பிளேஸ் டெ லா கான்கார்ட், நோட்ரெ டேம் தேவாலயம் மற்றும் லெஸ் இன்வாலிட்ஸ் ஆகியவை அழிக்கப்பட வேண்டிய இலக்குகளாகத் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும், சீன் நதியையும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்ய திட்டமிடுகிறார்.
ஸ்வீடன் நாட்டின் தூதரான ராவ்ல் நோர்ட்லிங், ஒரு காலத்தில் அங்கே வாழ்ந்த ஒரு பிரபல விலைமாதுவுக்காக அமைக்கப்பட்ட இரகசியப் படிக்கட்டு வழியாக, ஹோட்டல் மீரிஸில் உள்ள ஜெனரலின் அலுவலகத்துக்குள் நுழைகிறார்.
அவர் ஜெனரலிடம், இந்த அழிவு நடந்தால் எத்தனையோ அப்பாவி உயிர்கள் பலியாகும் என்று சுட்டிக்காட்டி, பாரிஸை அழிக்க வேண்டாம் என்று மன்றாடுகிறார். ஆனால், ஜெனரல் சோல்டிட்ஸ் தனது கடமையில் உறுதியாக இருப்பதாகவும், அதைச் செய்தே தீருவேன் என்றும் கூறுகிறார்.
இதற்கிடையில், பாரிஸ் மக்கள் ஜெர்மானியப் படைகளுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கிவிடுகின்றனர். தெருக்களில் சண்டை நடக்கிறது. இந்தக் கட்டத்தில், ஜெர்மனியின் நாஜி அரசாங்கம் கொண்டு வந்திருந்த 'சிப்பென்ஹாஃப்ட்' என்ற கொள்கையை சோல்டிட்ஸ் வெளிப்படுத்துகிறார்.
இந்தக் கொள்கையின்படி, ஒரு அதிகாரி கட்டளைக்குக் கீழ்ப்படியாவிட்டால், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தண்டிக்கப்படுவார்கள். இந்தக் கொள்கை தான் பதவி உயர்வு பெற்ற உடனேயே நடைமுறைப்படுத்தப்பட்டதால், ஹிட்லரின் கண் தன் மீது இருப்பதாகக் கூறி, தனது கடமையின் தீவிரத்தை உணர்த்துகிறார். நோர்ட்லிங் இதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முயல்கிறார்.
ஆனால் நோர்ட்லிங் நம்பிக்கையை இழக்கவில்லை. சோல்டிட்ஸின் குடும்பத்தை பிரெஞ்சு எதிர்ப்பாளர்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்ற ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளிக்கிறார்.
சோல்டிட்ஸின் நிலையில் தான் இருந்திருந்தால், தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதா அல்லது பாரிஸைக் காப்பாற்றுவதா என்று தன்னால் ஒரு முடிவெடுக்க முடியாது என்று நோர்ட்லிங் ஒப்புக்கொள்கிறார்.
இருப்பினும், சோல்டிட்ஸ் பாரிஸைக் காப்பாற்றினால், உலகம் அவரை ஒரு மாவீரனாக என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகிறார்.
இறுதியில், ஜெனரல் சோல்டிட்ஸ் மனம் மாறி, பாரிஸை அழிக்கும் கட்டளையை ரத்து செய்கிறார். ஆனாலும், லெப்டினன்ட் ஹெக்கர் எப்படியாவது அந்தக் கட்டளையைச் செயல்படுத்த முயற்சிக்கிறார். அப்போது அங்கிருந்த பாரிஸ் பொறியாளர் எம். லேன்வின், லெப்டினன்ட் ஹெக்கரைச் சுட்டுக் கொன்று விடுகிறார்.
நாஜி ஜெர்மனி வீழ்ச்சியடைந்த பிறகு, ஜெனரல் சோல்டிட்ஸ், தான் முன்னர் செவஸ்டோபோல் முற்றுகையின் போது செய்த செயல்களுக்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கிறார். பாரிஸைக் காப்பாற்ற சோல்டிட்ஸை இணங்க வைத்ததற்காக, தூதர் நோர்ட்லிங்குக்கு ஒரு பதக்கம் வழங்கப்படுகிறது.
ஆனால், நோர்ட்லிங் அந்தப் பதக்கத்தைத் தனக்கு வழங்க வந்தபோது, "உண்மையான வார் ஹீரோ சோல்டிட்ஸ்தான்" என்று கூறி, அந்தப் பதக்கத்தை அவரிடமே கொடுத்துவிடும் தருணத்தில் படம் நிறைகிறது.