நேற்று சென்னை 21 ஆம் வருட சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்த Perfect days திரைப்படம் மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது.
பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தனிமை விரும்பியும் புத்திஜூவியுமான ஹிரோயாமாவின் (Koji Yakusho) கதை இது, ஹிரோயாமா ஸென் மனநிலையில் வாழ்பவர், தான் செய்யும் தொழிலை ரசித்து செய்பவர், உலகின் மிகச்சிறந்த கழிவறை துப்புறவாளனைப் போல டோக்கியோவின் ஷிபுயா நகரில் உள்ள 17 பொதுக் கழிப்பறைகளை காலை 6 மணி துவங்கி மாலை 5-00 மணி வரையில் அத்தனை அருமையாக தியானம் போலவே சுத்தம் செய்கிறார்,
கழிவறை கோப்பையின் ரிம்மின் அடியில் கைப்பிடி கொண்ட சிறிய கண்ணாடியை வைத்து பார்த்து சிறிய கறை கூட இன்றி சுத்தம் செய்கிறார், யூரினல் கோப்பை அடியிலும் உள்ள கறைகளைக்கூட அவ்வாறே சுத்தம் செய்கிறார், யூரினலில் இருக்கும் நைலான் ஸ்க்ரீன் மேட்டைக் கூட கிளவுஸ் அணிந்த கைகளில் எடுத்து சுத்தம் செய்கிறார் , யாரிடம் எதுவும் பேசுவதில்லை, கருமமே கண்ணானவர், ஆனால் கண்களில் மகிழ்ச்சி ஒளியுடன் வாடிக்கையாளரை வரவேற்று கழிவறை உபயோகிக்க பணிக்கிறார்.
இவரது நீலநிற பினாஃபோர் பாணி சீருடையை தினமும் பொது சலவையகத்தில் சென்று துவைத்து பெருமையுடன் அணிகிறார்,தன் சைக்கிளை ஓட்டிக்கொண்டு பொது குளியலறை சென்று சென்று நீண்ட லூஃபா வைத்து முதுகு தோள் என நன்றாக தேய்த்துக் குளிக்கிறார், அதன் பிறகு குளியல் தொட்டியில் முங்கி மூச்சடக்கி ரசித்துக் குளிக்கிறார் , தினமும் காலை பல் துலக்குகையில் மீசையை கத்திரி கொண்டு நறுக்கி செதுக்குகிறார், அன்றைக்கு தேவையான சில்லரைகளை வாசற்கதவின் அருகே உள்ள மேசையின் மீது உள்ள தட்டில் இட்டு வைத்ததிலிருந்து எடுத்துக் கொள்கிறார்,
தனது துப்புறவுப் பணிக்கு என சொந்தமாக வேன் வைத்திருக்கிறார், அதில் முழுக்க கழிவறைக்கு தேவையான பொருட்களை நிரப்பி வைத்துள்ளார், சிறிய தெருவில் பழைய கட்டிடத்தில் தரைத்தளத்தில் மற்றும் மாடியில் என இரண்டு அறைகள் கொண்ட வீடு அவருடையது, வீட்டை அத்தனை சுத்தமாக வைத்திருக்கிறார், காலை வீட்டுக் கதவைப் பூட்டி வெளியேறியதும் தெருவில் இருக்கும் குளிர்பான எந்திரத்தில் இருந்து காசு போட்டு குளிர்காஃபி எடுத்து பருகி விட்டு வாகனத்தை இயக்குவதை பதிவாக கொண்டுள்ளார்,சிறிய ஓய்வு கிடைத்தாலும் புத்தகத்தை எடுத்துப் படிக்கிறார், பின்னணியில் நேஷனல் பேனசோனிக் டேப் ரிக்கார்டரில் கேசட் நுழைத்து இசை ஆல்பம் கேட்கிறார், படித்த புத்தகத்தை நூலகத்தில் 1$தந்து வேறு புத்தகம் எடுத்து வருகிறார், தனது சேகரிப்பில் வைத்திருக்கும் மிக அரிதான ஆடியோ கேசட் ஆல்பங்களை அத்தனை புதிதாக வைத்துள்ளார், அதை ஆதூரமாக கேசட் ப்ளேயரில் நுழைத்து வேலைக்கு போகையில் பாடல் கேட்கிறார், தனக்கு பிடித்த ட்ரீ டவரை தினமும் போகும் சாலையில் உயரே பார்த்து தரிசிக்கிறார், இரவு ஷிஃப்ட் பணிபுரியும் சக கழிப்பறை பணியாளன் ஸ்மார்ட் ஃபோனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டே ஏனோ தானோ என துப்புறவு செய்தாலும் கூட இவரிடத்தில் தான் பெரிய வேலைக்காரன் என்ற திமிரில்லை, அவனுக்கு அறிவுறை கூட சொல்லுவதில்லை, அவன் தொண தொண என்று எது பேசினாலும் சிரிப்பு,செல்லக்கோபம் மட்டுமே,அல்லது தலையசைப்பு மட்டுமே பதில்.
மதிய உணவு இடைவேளையில் வாங்கிப் போயிருந்த சாண்ட்விச்சை பூங்கா நாற்காலியில் அமர்ந்து ரசித்து சாப்பிட்டபடியே உயரே தெரியும் மரக்கிளை ஊடாக வடிகட்டி நுழையும் சூரிய ஒளியை தனது SLR கேமராவில் படம் எடுப்பதை பதிவாக வைத்துள்ளார், எந்த பெரிய மரத்தின் வேரடியில் விதையில் இருந்து வளரும் சிறு செடி இவர் கண்ணில் பட்டு விட்டாலும் அதை தன் சட்டை பையில் இருந்து காகிதப் பை எடுத்து அதில் மண் நிரப்பி செடியை வைத்து வீட்டில் கொண்டு போய் ஜாடியில் மண் நிரப்பி ஊன்றுகிறார், இவர் சுத்தம் செய்யும் கழிவறை ஒன்றில் முகம் தெரியாத வாடிக்கையாளர் ஒருவர் ஒரு ரகசிய இடத்தில் துண்டு காகிதத்தில் சுடோகு புதிர் கிறுக்கி வைத்திருக்க, இவர் அதற்கு விடை எழுதி அங்கேயே ஒளித்து வைக்கிறார், அந்த வாடிக்கையாளர் புதிரை தொடர்ந்தபடி இருப்பதைப் பார்க்கிறோம்.
வாரா வாரம் ஸ்டுடியோவுக்கு கேமராவைக் கொண்டு போய்
ஃபிலிம் சுருளை கழற்றி ப்ரிண்ட் இடுவதற்குத் தருகிறார், வந்த படங்களில் ஒளி நன்று ஊடுருவிய படங்களை வருடம் மாதம் எழுதிய அலுமினிய பெட்டியில் இடுகிறார், ஒளி ஊடுருவாகாத திருப்தியில்லாத படங்களை கிழித்து இன்னொரு பெட்டியில் இட்டு கப்போர்டில் அடுக்கி பாதுகாக்கிறார்.
இரவு உணவுக்கு வழக்கமாக சாப்பிடும் உணவகத்தில் சென்று உடான் நூடூல்ஸ் சாப்பிடுகிறார்.
உடன் பணிபுரியும் இளைஞன் அழகிய ப்ளாண்ட் முடி கொண்ட இளம் பெண்ணுடன் வெளியே செல்ல இவரது காரைக் கேட்க ,இவர் டேட்டிங் அழைத்துச் செல்கிறார், இவரது காரில் ஒலிக்கும் தரம் மிகுந்த ஆனலாக் ஆடியோ தரத்தில் பாடல் வரியில் அந்தப் பெண் இவரிடம் நட்பாகிறாள், பாடுபவரை உடனே கூகுள் செய்து அறிந்து பாடிய குரலைப் புகழ்கிறாள், இறங்குகையில் அந்த கேசட்டை அனுமதி கேட்காமல் கவர்ந்து கொண்டு போகிறாள், ஹிரோயோமாவின் சக பணியாளன் இவரின் கிடைத்தக்கரிய ஆடியோகேசட்களை விற்று பணம் ஈட்டலாம் என அவரை ஒரு பழைய ஆடியோ கேசட் கடைக்கு உடனே தள்ளிக் கொண்டு போகிறான், அங்கே இவர் கொண்டு போயிருந்த கேசட்டுற்கு 120$ தருவதாக சொல்லியும் கூட இவர் அதை விற்பதில்லை, ப்ளாண்ட் பெண்ணை வெளியே அழைத்துப் போவதற்கு பணம் கேட்ட சக பணியாளனுக்கு தன் பர்ஸில் இருந்து பெரும் தொகையை எடுத்துத் தந்து தன் அரிய கேசட்டை பாதுகாக்கிறார்.
மறுநாள் ஹிரோயாமாவின் முன்னால் மீண்டும் வந்த ப்ளாண்ட் பெண் கேசட்டை திருப்பித் தருகிறாள் , இதை மீண்டும் கேட்கலாமா? என காரில் அமர்ந்து ஒலிக்க விட்டு கேட்டு லயிக்கின்றாள், நல்ல இசை மனதை சுத்தி செய்திருக்க, உள்ளம் பேரமைதி அடைந்து ஆழ்ந்த மௌனம் கொண்டவள், ஹிரோயோமாவிற்கு அவர் எதிர்பாராத வண்ணம் கன்னத்தில் முத்தம் தந்து விட்டு அகல்கிறாள் .
ஹிரோயாமா வீட்டுக்கு வந்தவர், அங்கே தன் பணக்காரத் தங்கையின் மகள் தாய் மாமனைத் தேடி வந்து காத்திருக்கிறாள், குழந்தையாகப் பார்த்தவள்,நன்கு வளர்ந்துவிட்டாள், இங்கே தங்கப் போகிறேன் என பிடிவாதமாக தங்குகிறாள், அவள் மாடியில் உறங்குகையில் அவளை ஓசை எழுப்பாமல் படியேறிச் சென்று தன் ஆசையாக வளர்க்கும் செடிகளுக்கு ஸ்ப்ரே செய்து நீர் வார்க்கிறார், அதிகாலை வேலைக்கு சத்தமின்றி கதவு சார்த்தி கிளம்புகையில் அவளும் உடன் வர அனுமதி கேட்க யோசனைக்குப் பின் அழைத்துப் போகிறார், அவளுக்கும் எந்திரத்தில் குளிர் காஃபி வாங்கித் தருகிறார், மதிய உணவு வேளையில் அவளுக்கும் சாண்ட்விச் சாப்பிடத் தருகிறார், தன் கேமராவில் ஓங்கு தாங்கான மரத்தை படம் எடுக்கிறார்,நீங்கள் எனக்குத் தந்த இதே போன்ற கேமராவை இதோ நான் எடுத்து வந்திருக்கிறேன் என காட்டுகிறாள், இதை உனக்கு தந்ததை நான் மறந்தே போனேன் என்கிறார், இந்த மரம் உங்கள் நண்பனா என அவள் கேட்க ,
ஆமாம் என ஆமோதிக்கிறார், இவர்கள் இரு சைக்கிள்களில் நகர்வலம் போகின்றனர், வழக்கமான உணவகத்தில் இரவு உணவு உண்கின்றனர்,யாருக்கும் இவர் இந்தப் பெண்ணை இன்னார் என அறிமுகம் செய்வதில்லை. உங்களுக்கும் அம்மாவுக்கும் எதிலும் ரசனை சிறிதும் ஒத்துப் போவதில்லை என்று சொல்ல, அவர் அப்படியெல்லாம் இல்லையே என மறுக்கிறார்.
இரவு மகளைத் தேடிக் கொண்டு ஹிரோயாமாவின் தங்கையும் அவர் கணவரும் படகுகாரில் அவரின் குறுகிய தெருவில் நுழைந்து வீட்டின் முன்னே காத்திருக்கின்றனர் , வந்தவுடன் மகளை காரில் ஏறச் சொல்லுகிறார் தங்கை, ஹிரோயாமாவிடம் நீ இந்த வீட்டிலா வசிக்கிறாய் என்கிறார்? தவறாக நினைக்க வேண்டாம்,கேள்வியாக தான் கேட்டேன் என்கிறார், இன்னும் நீ கழிப்பறைகளை சுத்தம் செய்வதை விடவில்லையா? என்கிறார், டிமென்ஷியாவால் முதியோர் இல்லத்தில் இருக்கும் தந்தையை எப்போது சென்று பார்க்கப் போகிறாய் என்கிறார், எல்லாவற்றுக்கும் இவர் புன் முறுவலையே பதிலாக தருகிறார்,தங்கைக்கு அணைத்து பிரியா விடை தந்து காரைத் திறந்து ஏற்றி வழி அனுப்புகிறார் .
இத்தனை அழகானது கவிதையானது ஹிரோயாமாவின் தினசரி வாழ்க்கை, தேர்ந்தெடுத்த அல்லது கிடைத்த வாழ்க்கையை புகாரின்றி வாழும் வாழ்க்கைப் பாடம் இதில் அனைவருக்கும் உள்ளது என்பதால் அவசர உலகில் இதை உடனே எழுதிப் பகிர்கிறேன்.
கோவிட் 19 க்குப் பிறகு, ஜப்பானில் டோக்கியோ டாய்லெட் என்ற பொதுக்கழிப்பறை புணரமைப்பு திட்டம் வரைவு கட்டமைக்கப்பட்டது,
டோக்கியோ டாய்லெட் திட்டத்தை வடிவமைக்கும் போட்டிக்கு உலகம் முழுவதிலுமிருந்து 16 கட்டிடக் கலைஞர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் சமர்ப்பித்த வடிவமைப்புகளை பின்பற்றி ஷிபுயா நகரம் முழுவதும் இருந்த 17 பொதுக்கழிப்பறைகள் மறுவடிவமைப்பு கட்டுமானம் செய்யப்பட்டன,அவற்றுள் ஒரு கண்ணாடி கழிப்பறையும் அடக்கம், ஆள் உள்ளே கழிப்பறை கதவைத் திறந்து நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டதும் கண்ணாடி சுவர்கள் கதவு முழுக்க வர்ணம் போர்த்திக் கொள்கிறது,ஆள் வெளியேறியதும் மீண்டும் கண்ணாடி வழியே அனைத்தையும் வெளியே இருந்து பார்க்க முடிகிறது.
இந்த 17 பொதுக் கழிவறைகளை இணைப்பு படங்களில் காணலாம், கழிப்பறைகள் மீதான அருவருப்பை மாற்றுவதற்கு கொண்டு வரப்பட்ட புரட்சிகரமான திட்டம் ஆதலால் இவற்றைக் கொண்டு ஆவணப்படம் அல்லது குறும்படம் இயக்க உலகெங்கிலும் உள்ள இயக்குனர்களைக் கேட்க, பாரீஸ் டெக்ஸாஸ் திரைப்படப் புகழ் இயக்குனர் விம் வெண்டர்ஸ் இறுதியில் தேர்வானார்,
உலக நாடுகளில் பொதுக் கழிப்பறை வசதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த குறும்படம் அல்லது தொடர் குறும்படங்களை அவர் இயக்குவார் எனக் கருதினர் தயாரிப்பாளர்கள், ஆனால் இயக்குனர் விம் வெண்டர்ஸ் ஒரு நேர்த்தியான உலக சினிமாவையே இயக்கித் தந்திருக்கிறார்,
இந்த உலக சினிமா வென்ற விருதுகள் எண்ணிலடங்காதது, இப்படத்தின் இணை திரைக்கதை எழுத்தாளர் டகுமா டகாசாகி, ஹிராயமா கதாபாத்திரத்தை அத்தனை அருமையாக உருவாக்கியுள்ளனர், இப்படத்தை மாஸ்டர் மைண்ட் லிமிடெட் (ஜப்பான்) மற்றும் ஸ்பூன் இன்க் (ஜப்பான்) வெண்டர்ஸ் இமேஜஸ் (ஜெர்மனி) உடன் இணைந்து தயாரித்தது.
இந்தப் படம் டோக்கியோவில் வெறும் 17 நாட்கள் படமாக்கப்பட்டது, ஐப்பானிய நடிகர் Koji Yakusho அற்புதமான மெதட் ஆக்டிங் நடிகர், Babel திரைப்படத்தில் ஜப்பான் பாகத்தில் காதுகேளாத பள்ளி மாணவியின் தந்தையாக தோன்றியவர்.சர்வதேச அங்கீகாரம் பெற்ற நடிகர்
அவர் Shall We Dance? (1996), Cure (1997), 13 Assassins (2010), The Third Murder (2017), The Blood of Wolves (2018), Under the Open Sky (2020) மற்றும் The Days (2023) போன்ற படங்களில் அவர் நடித்த முன்னணி கதாபாத்திரங்களுக்காக சர்வதேச அளவில் அறியப்படுகிறார். Perfect Days (2023) திரைப்படத்தில் அவரின் சிறப்பான நடிப்பிற்காக 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பாருங்கள்,செய்யும் எதிலும் perfection கைவரும்,இந்தியாவில் அத்தனை மாநிலங்களிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும், மக்களுக்கு இன்றி அமையாத பொது கழிப்பறைகள் எப்படி திட்டமிடப்பட வேண்டும் என இதைக் கண்டு படிக்க வேண்டும் .
Perfect days திரைப்படத்தை திரையிட்ட PVR சத்யம் நிர்வாகம் அந்த திரைப்படத்தை தனிக்காட்சியாக அமர்ந்து பார்க்க வேண்டும், காரணம் போன 2022 டிசம்பர் சென்னை திரைப்பட விழாவுக்குப் பின் சுகாதாரப் பணியாளர்கள் பலரை ஆட்குறைப்பு செய்துள்ளனர், இதனால் சத்யம் வளாகத்தில் உள்ள அத்தனை கழிவறைகளும் முடை நாற்றம் எடுக்கிறது, கழிவறை தரை அத்தனை நசநசவென ஈரமாக உள்ளது,
ரூம் ஃப்ரெஷ்னரும் அடிப்பதில்லை,யூரினலில் நாப்தலின் உருண்டை கூட இடுவதில்லை, கழிவறை ஃபால்ஸ் ஸீலிங்கில் ஏசி எக்ஸாஸ்ட் ஏசி டிஃப்யூஸர் என வேலை செய்கிறதா? பராமரிப்பு செய்கின்றனரா என்பது நிர்வாகத்துக்கே வெளிச்சம்,யூரினலின் பின்னால் இருந்த ஒளிரும் விளம்பரங்கள் கூட வேலை செய்வதில்லை, அத்தனை cost cutting குயுக்தி, முன்பு serene திரையரங்கில் தரையில் கூட ஒளிரும் onyx வகை கற்கள் பதிக்கப்பட்டு படம் விடுகையில் ஒளிரும்,இப்போது அதன் அடியில் led strip விளக்குகள் ஆயுள் முடிந்து புதுப்பிக்காமல் பல் இளிக்கிறது, பேராசை பெருநஷ்டம் என்பதை இந்த நிர்வாகம் உணர வேண்டும், perfect days திரையிட்டால் போதாது,அதன்படி நடக்க வேண்டும்.
இயக்குனர் விம் வெண்டர்ஸ் இயக்கிய பாரீஸ் டெக்ஸாஸ் பற்றி
https://m.facebook.com/story.php?story_fbid=10159387742916340&id=750161339&mibextid=Nif5oz