இன்று ஐந்தாவதாக பார்த்த டென்மார்க் நாட்டு திரைப்படம் A Perfectly Normal Family, நம் அவ்வை சண்முகியில் பெண்ணாக வேடம் போட்ட தந்தையை பார்த்திருப்போம், இங்கு ஒரு நல்ல குடும்பத்தில் திடீரென குடும்பத் தலைவர் தாமஸ் நான் பெண்ணாக மாறப்போகிறேன், அதற்கு வீட்டார் நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும் என சமாதானம் பேசியவர், பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்டு Agnete ஆக மாறியும் விடுகிறார் ,
சமூகத்தில் மனைவி மற்றும் இரு மகள்களுக்கு அவமானம் பிடுங்கித் தின்கிறது, மனைவி விவாகரத்து கேட்பதால் சுமூகமாக தனி வீடெடுத்து தன் நாய்குட்டியுடன் அங்கு குடியேறுகிறார் குடும்பத்தலைவன், மகள்களில் பருவம் வந்த மூத்த மகள் அப்பாவை புரிந்து கொள்கிறாள், இளைய மகள் சிறுமி, தன் அப்பாவை புரிந்து கொள்வதில்லை, அப்பா பெண்ணாக மாறிய அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை, அப்பாவின் பிறந்த நாளன்று அப்பாவைப் பார்க்க அவர் வீட்டுக்குச் செல்லும் வழியில் இளைய மகள் அப்பாவிற்கு பிறந்தநாள் பரிசாக மாதவிலக்கிற்கு உபயோகிக்கும் sanitary napkins வாங்கலாமா ? எனக் கேட்கிறாள், பெரிய மகள் அப்பாவிற்கு மாதவிலக்கு ஏற்படாது, அவர் மார்பகங்களும் , யோனியும் தைத்துள்ளார், மற்றபடி நம் அப்பாவே தான் என்கிறாள்,அப்பாவிற்கு Manicure செய்வதற்கு beauty parlour ல் appointment வாங்கி இருவரும் அழைத்துச் செல்கின்றனர்,அங்கு manicure செய்பவர் மகள்கள் இருவரும் அம்மாவைப் போலவே இருக்கின்றனர், என்று பாராட்ட, அவர் புன்முறுவல் செய்கிறார், இளைய மகள் அவரிடம் நீங்கள் என் அம்மா அல்ல அப்பா என்று ஏன் சொல்லவில்லை? என குதர்க்கமாக கேட்க, அது விளக்குவதற்கு மிகவும் complicated ஆனது,அதற்கு புரிதல் வெளி இங்கு குறைவு என்கிறார்.
மனைவி மணமுறிவில் உறுதியாக இருக்கிறாள், எப்படி இறந்தவருக்கு திதி தந்து வழியனுப்புவோமோ அதே போல் ,பெண்ணாக மாறிய கணவனுக்கு பிரியா விடை தருவதற்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து ,தன் தந்தையை அங்கே தொகுப்புரையாற்றச் செய்கிறாள் , தந்தையோ பெண்ணாக மாறிய தன் மருமகனை அவள் என அழைக்காமல் அவன் என்றே அழைக்கிறார், மருமகனின் பழைய பெயரையே அழைத்து உரையாற்றுகிறார், பெண்ணாக மாறிய மருமகன் அதை சுட்டிக்காட்டி திருத்தும் இடம் எல்லாம் அருமையாக உள்ளது.
பெண்ணாக மாறிய அப்பாவுடன் மகள்கள் கடற்கரைக்குச் சென்று sunbath எடுக்கையில், அப்பா தான் பெண்ணாக மாறியது நினைவின்றி வெற்று மார்பகங்களுடன் நீரில் இறங்குகையில் இளைய மகள் திகைக்கிறாள்.தந்தையின் புதிய பெயரான Agnete அவரின் பாட்டியின் பெயர் என்று பகிரும் இடம் அருமை, தாமஸ் ஏன் இந்த விதியை மாற்றும் முடிவுக்கு வந்தார் என்பது சொல்லப்படவில்லை, அவர் தன்னை பெண்ணாக உணரத் தொடங்கியவர் அதற்கு மேலும் தன்னையும் குடும்பத்தாரையும் போலியாக ஏமாற்றவில்லை, அதை திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது.
இது போல இத்திரைப்படம் பேசாத பொருளை பேசியிருக்கிறது, வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள்.
PS: பத்து வருடங்களுக்கு முன்னர் துபாயில் என்னுடன் பணியாற்றிய பெண் தன்மை கொண்ட ஃபிலிப்பினோ ஆண் ஊழியர் இரண்டு மாத விடுமுறைக்கு பிலிப்பைன்ஸ் சென்று பணிக்குத் திரும்பியவர் முழுக்க பெண்ணாக மாறியிருந்தார்,
அது சில நாட்களுக்கு மற்ற நாட்டவர்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கும் பாகிஸ்தானிகளுக்கும் பெரிய culture shock ஆக இருந்தது, ஆனால் சக Philippines நாட்டவர்கள் அந்த transgender ஐ முன்னர் எப்படி நடத்தினார்களோ அதே போலவே baklâ ஆக மாறிய பிறகும் எப்போதும் போல மரியாதையாக நடத்தினார்கள், இந்தப் படம் பார்க்கையில் எனக்கு அந்த ஊழியர் நினைவுக்கு வந்தார்.
#சென்னை_திரைப்பட_விழா