21 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இன்று பார்த்த
Footprints on Water திரைப்படம் இன்றைய நாளை நிறைவாக்கிய படைப்பு.
இங்கிலாந்தின் பர்மிங்கம் நகருக்குள் விசிட் விசாவில் வந்து இறங்கி சட்ட விரோத வந்தேறிகளாக ஆறு ஆண்டுகளாக ஒளிந்து வாழும் ரகு, அவர் மனைவி சுபா, இவர்கள் மகள் மீராவின் அல்லல் துயர வாழ்க்கையை பேசும் படைப்பு இது , அற்புதமான Gripping த்ரில்லராக இயக்கியுள்ளார் பெண் இயக்குனர் நதாலியா ஷ்யாம், படத்தில் ஆங்கிலம், இந்தி,பீகாரி, மலையாளம்,தமிழ் என வசனங்கள் கலந்து வருகிறது.
தினம் உலக க்ரைம் செய்திகளில் அடிபடும் நகரம் இங்கிலாந்தின் பர்மிங்கம், சட்ட விரோதமான ட்ராவல் ஏஜெண்ட்கள் இந்தியர்களை அதிகம் பேப்பர் யுனிவர்சிட்டி மற்றும் சட்ட விரோத வேலைக்கும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி அனுப்பி வைக்கும் கருப்பு நகரம் .
இங்கே பல ஆயிரம் கனவுகளுடன் விசிட் விசாவில் வரும் இந்தியர்களுக்கு நிகழும் அல்லல் துயரங்களை அத்தனை ரத்தமும் சதையுமாக குறுக்கு வெட்டு தோற்றம் செய்து காட்டிய படைப்பு இது.
ரகுவாக "அதில் ஹுசைன்" மிக அருமையாக இந்த கல்லிவளி ஒளிந்து வாழுகிற குடிநோயாளி தகப்பன், கடும் முதுகு வலியுடன் துயருரும் loser கதாபாத்திரத்தில் அப்படி மிளிர்ந்திருக்கிறார், ஒவ்வொரு திரைப்பட விழாவிலும் இவரது படங்கள் நம்பிக்கை ஒளியாக அமையும், அப்படி 2023 ஆம் ஆண்டுக்கு இந்த footprints on water திரைப்படம் இருந்தது.
இவரது இரண்டாம் மனைவி சுபாவாக லேகா குமார், முதல் மனைவி இறந்து விட 18 வயதில் பீகாரில் குடியேறிய மலையாளி ஜவுளி வியாபாரியான இவரை பல பல கனவுகளுடன் மணந்தவள், ஆனால் எஞ்சியது அவமானமும் ஏச்சும் பேச்சும் மட்டுமே, இறுதியில் மனம் நொறுங்கிவிட்டவர், இவரின் மகளுக்கும் அம்மாவாக இருக்க முடியாமல் ரகுவுக்கும் உண்மையான மனைவியாக இருக்க முடியாமல் தன்னையும் ஏமாற்றிக் கொண்டு கணவனையும் மாற்றாந்தாய் மகளையும் ஏமாற்றிக் கொண்டு,பார்க்கிங் லாட் சென்று கிடைக்கும் எந்த வேலையையும் ஏற்றுச் செய்து , பர்மிங்கமின் ஒண்டுக்குடித்தன அறையில் உடன் வசிக்கும் சந்தர்ப்பவாதி மனைவி கதாபாத்திரம், மிகவும் கச்சிதமாக செய்திருக்கிறார், எனக்கு பிடித்த நடிகை இவர்.
ரகுவின் கல்லிவளி வந்தேறி மகள் மீராவாக நிமிஷா சஜயன் ,+2 முடித்தவள், ஆங்கிலப்புலமை மிக்கவள், கவிதைகள் journal எழுதுபவள்,சில வருடம் break year எடுத்து யுனிவர்சிட்டி சேர்ந்து படிக்கலாம் என்று தந்தை மாற்றாந்தாய் சகிதம் வந்தேறியானவள்,இங்கே குஜராத்தி சூப்பர் மார்க்கெட்டில் பேக்கிங் மற்றும் ஹவுஸ்கீபிங் பணி செய்கிறாள். தந்தையின் நொடித்துப்போன கொச்சி ஜவுளிக்கடை வியாபாரத்தால் தந்தைக்கு நேர்ந்த பகாசுரக் கடன்கள் மற்றும் அவப்பெயரைத் துடைக்க உதவ வேண்டி மனதுக்கு பிடிக்காத அரவிந்த் என்ற பணக்காரனை மணக்க ஒப்புக்கொண்டு தியாகத்தின் எல்லைக்கே போகத் துணிந்தவள், 4 பெட்ரூம் அபார்ட்மென்டில் ஒரு பெட்ரூமில் இவர்கள் மூவர் வசிக்கின்றனர், உடன் வசிக்கும் இலங்கை தமிழர் தம்பதிகளுக்கு நன்றி செய்வதற்கு வேண்டி இக்கட்டான சூழலில் தன் உடலையே விற்கத் தயாராகிறாள் மீரா, அந்த போராட்டத்தின் பின்னர் காணாமல் போகிறாள்.
தந்தை ரகுவுக்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலை, மகள் காணாமல் போய்விட்டாள் ஆனால் போலீஸில் புகாரளிக்க முடியாது, தான் செய்யும் வேலையோ வந்தேறிகளுக்கு மோசடி பாஸ்போர்ட் தயாரிப்பது, இவர்களது பாஸ்போர்ட் மோசடி ஏஜண்ட் வசம் உண்டு, யாரையும் உதவி கேட்க முடியாத சூழல், மனைவியிடம் கூட ஆறுதல் பெற முடியாத நிர்கதியில் உழல்கிறார் , மகளின் முன்னாள் காதலன் ஆஃப்கானிய வந்தேறியான ரெஹானை (life of pie அன்டோனியோ அகில்) சந்தேகித்து, பின்னர் அவனின் நல்லிதயம் மனித நேயத்தை கண்டுணர்ந்து நெங்குறுகி அவனுடன் மகள் மீராவைத் தேடுகிறார், உடன் நாமும் பதைபதைத்து பர்மிங்கம் நகரம் முழுக்க அலைகிறோம் என்றால் மிகையில்லை.
பர்மிங்கம் நகரில் போதை மருந்துக்கு அழகிய ஆசியப் பெண்களை அடிமையாக்கும் மாஃபியா பிரசித்தி பெற்றது, முதலில் அறையில் பல நாட்கள் அடைத்து வைத்து போதை ஊசி செலுத்தியபடியே இருப்பர், அதன் பிறகு சோறு தண்ணீர் பிடிக்காது, போதை ஊசி தொடர்ந்து வாங்க வேண்டும் என்றால் விபசாரத்தில் இறங்கியே ஆக வேண்டும்,அப்படியும் பணம் போதவில்லை என்றால் தங்கள் ஆரோக்கியமான அவயங்களை ஒன்றன் பின் ஒன்றாக அந்த கும்பலிடமே விற்று சொச்ச வாழ்நாளை ஷெட் என்ற ப்ராத்தல் வேர்ஹவுஸில் reverse mortage ஒப்பந்தத்தில் கழிக்க வேண்டும்,வெளியேறவே முடியாது, அரசு களையெடுக்க களையெடுக்க மீண்டும் மீண்டும் இந்த ஷெட் புதிதாக வந்தபடியே இருக்கின்றன, இந்த கோர வாழ்வியலை படம் பட்டவர்த்தனமாக பேசுகிறது.
படம் அவசியம் தேடிப் பாருங்கள்