பிளாக் பான்தர் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி உலகளாவிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ஒரு அங்கமாக இருந்தாலும் இது வெறும் சூப்பர் ஹீரோ படமாக மட்டும் நின்றுவிடாமல் ஆப்பிரிக்க கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை மீட்டெடுக்கும் ஒரு கலைப்படைப்பாகத் திகழ்கிறது.
இத்திரைப்படம் ஆப்பிரிக்காவின் வளமான பண்பாட்டை நவீன தொழில்நுட்பத்தோடு இணைத்து அஃப்ரோ ஃபியூச்சரிசம் எனும் பாணியில் ஒரு புதிய காட்சி மொழியை உருவாக்கியுள்ளது.
தனது நாட்டை வெளியுலகிற்குத் திறப்பதா அல்லது ரகசியமாகப் பாதுகாப்பதா என்கிற தார்மீகப் போராட்டமே இதன் அடிநாதம் ஆகும். ரியான் கூக்ளர் தனது தேர்ந்த இயக்கத்தின் மூலம் ஒரு கற்பனை தேசமான வகாண்டாவை நிஜத்தோடு நெருக்கமான உணர்வைத் தரும் வகையில் செதுக்கியுள்ளார்.
சட்விக் போஸ்மேன் வகாண்டாவின் அரசனாகவும் பிளாக் பான்தராகவும் கம்பீரமான நடிப்பை வழங்கியுள்ளார்.
மைக்கேல் பி ஜோர்டான் எரிக் கில்மாங்கர் என்ற கதாபாத்திரத்தில் ஒரு வில்லனாகத் தோன்றினாலும் அவரது வாதங்களில் இருந்த நேர்மையும் வலிமையும் உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக எதிரொலித்தது.
லெட்டிடியா ரைட் மற்றும் லுபிடா நியாங்கோ போன்ற நடிகர்களின் பங்களிப்பு வகாண்டாவின் அறிவுத்திறனையும் பெண்மையின் வலிமையையும் பறைசாற்றியது.
லுட்விக் கோரன்சன் செனகல் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு நேரடியாகச் சென்று அங்கிருந்த இசைக்கருவிகளைப் பயன்படுத்தி அமைத்த பின்னணி இசை படத்திற்கு ஒரு தனித்துவமான உயிர்ப்பைத் தந்தது.
இப்படம் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஆடை வடிவமைப்பு உட்பட மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்று மார்வெல் நிறுவனத்திற்குப் பெருமை சேர்த்தது.
இப்படத்தின் முதல் ட்ரிவியா செய்தியாக வகாண்டாவின் கலாச்சாரம் மற்றும் அதன் புவியியல் அமைப்பைக் குறிப்பிடலாம்.
இயக்குனர் லெசோதோ (Lesotho) என்ற ஆப்பிரிக்க நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு வகாண்டாவை வடிவமைத்தார்.
படத்தில் வரும் வீரர்கள் பயன்படுத்தும் போர்வைகள் அந்த நாட்டின் பாரம்பரிய அடையாளமாகும்.
வகாண்டாவின் கிரிட் மேப் மற்றும் கட்டிடங்கள் உலகப்புகழ் பெற்ற கட்டிடக்கலை நிபுணர் ஜாஹா ஹதீத் என்பவரின் வடிவமைப்புகளால் ஈர்க்கப்பட்டவை.
படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் வியப்பூட்டுபவை , ஆடை வடிவமைப்பாளர் ரூத் இ கார்ட்டர் ஆப்பிரிக்காவின் பல்வேறு பழங்குடியினக் குழுக்களான மாசாய், ஹிம்பா மற்றும் ஜூலு மக்களின் தனித்துவமான வண்ணங்களையும் அணிகலன்களையும் ஆராய்ந்து 700க்கும் மேற்பட்ட ஆடைகளை உருவாக்கினார்.
குறிப்பாக டோரா மிலாஜே பெண் படையினரின் ஆடைகள் 80 சதவீதம் மாசாய் கலாச்சாரத்தைச் சார்ந்து வடிவமைக்கப்பட்டவை.
வாரியர் ஃபால்ஸ் எனப்படும் அருவிச் சண்டைக்காட்சிக்காக அட்லாண்டாவில் 36 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ஒரு செட் அமைக்கப்பட்டது.
அதில் நிஜமான பாறைகள் போன்ற தோற்றத்தை உருவாக்க 25,000 கியூபிக் அடி நுரை பயன்படுத்தப்பட்டு ஒரு லட்சம் லிட்டர் நீர் பம்ப் செய்யப்பட்டது.
இதில் வகாண்டா எனும் தேசத்தை வெறும் திரைக் காட்சியாக அன்றி ஒரு உயிருள்ள நிலப்பரப்பாகவே மாற்றியுள்ளனர்.
வகாண்டாவின் எழுத்து வடிவம் மற்றும் மொழி. வகாண்டாவின் எழுத்துக்கள் நைஜீரியாவின் பழைய என்சிபிடி எழுத்து முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன.
அதேபோல் படத்தில் பேசப்படும் வாக்காண்டன் மொழி உண்மையில் தென்னாப்பிரிக்காவின் கோசா மொழியாகும்.
சட்விக் போஸ்மேன் மற்றும் ஜான் கானி ஆகியோர் இணைந்து தான் படப்பிடிப்பு தளத்தில் இம்மொழியை வகாண்டாவின் அதிகாரப்பூர்வ மொழியாக மாற்ற முடிவு செய்தனர்.
படத்தில் காட்டப்படும் வைப்ரேனியம் தொழில்நுட்பம் மற்றும் அதன் காட்சி அமைப்பு குறித்த சுவாரஸ்யம். வைப்ரேனியம் சுரங்கத்தில் அவை நீல நிறத்தில் மின்னுவதற்கும் பின்னர் சுத்திகரிக்கப்பட்ட பிறகு துருப்பிடிக்காத எஃகு போன்ற தோற்றம் பெறுவதற்கும் பின்னால் தாதுப்பொருள் மற்றும் சுரங்க நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டன.
ஷூரியின் ஆய்வகத்தில் காணப்படும் மணல் சார்ந்த தொழில்நுட்பம் இன்றைய நிஜ உலகின் மீயொலி அலைகள் மூலம் பொருட்களை அந்தரத்தில் மிதக்க வைக்கும் அகவுஸ்டிக் லெவிடேஷன் ஆராய்ச்சியை முன்மாதிரியாகக் கொண்டது.
எதிர்காலத் தொழில்நுட்பங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப மேக்லெவ் ரயில்கள் மற்றும் வான்வழி ஊர்திகள் வடிவமைக்கப்பட்டன.
வகாண்டாவின் தலைநகரான கோல்டன் சிட்டியின் கட்டிடக்கலை . இதன் வானளாவிய கட்டிடங்களின் உச்சியில் ரோண்டாவெல்ஸ் எனப்படும் ஆப்பிரிக்க பாரம்பரிய வட்ட வடிவக் கூரைகள் இணைக்கப்பட்டன.
இவை தென்னாப்பிரிக்காவின் பிளைட் ரிவர் கேன்யான் மலைச்சிகரங்களின் தோற்றத்தை பிரதிபலிக்கின்றன.
படத்தில் வரும் கிமோயோ மணிகள் வெறும் அணிகலன்கள் அல்ல. அவை வகாண்டாவின் டிஜிட்டல் அடையாளமாகவும் தகவல் தொடர்பு சாதனமாகவும் செயல்படுகின்றன.
இதன் ஒவ்வொரு மணிக்கல்லும் வெவ்வேறு பயன்பாட்டைக் கொண்டிருப்பதாக திரைக்கதையில் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டது.
படத்தொகுப்பில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவு படத்தின் ஆன்மாவை மாற்றியது. இறுதிப் போர்க்காட்சியில் பெண் வீரர்களான டோரா மிலாஜே படையினரை ஜபாரி பழங்குடியினர் வந்து காப்பாற்றும்போது அதில் ஆண்கள் மட்டுமே இருந்ததை படத்தொகுப்பாளர் டெபி பெர்மன் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் வலிமையைப் பேசும் படத்தில் அவர்கள் ஆண்களால் மட்டுமே காப்பாற்றப்படுவது சரியாக இருக்காது என்று அவர் கருதியதால் கூடுதல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஜபாரி பழங்குடியிலும் பெண் போர்வீரர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த மாற்றம் வகாண்டாவின் பாலின சமத்துவத்தை வலுப்படுத்தியது.
இத்திரைப்படம் சாதாரண வணிகத் திரைப்படங்களைத் தாண்டி, விருதுகள் உலகிலும் மிகப்பெரிய சரித்திரச் சாதனைகளைப் படைத்துள்ளது.
பிளாக் பான்தர் 91 வது ஆஸ்கார் விருதுகள் விழாவில் மொத்தம் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் பரிந்துரையைப் பெற்றது இதுவே முதல் முறையாகும்.
இதில் சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய மூன்று பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்று மார்வெல் நிறுவனத்திற்கு முதல் ஆஸ்கார் விருதைப் பெற்றுத் தந்தது.
ஆடை வடிவமைப்பாளர் ரூத் இ கார்ட்டர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஹன்னா பீச்லர் ஆகிய இரு ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்கள் ஆஸ்கார் வென்று அந்தத் துறையில் புதிய வரலாறு படைத்தனர்.
லுட்விக் கோரன்சன் இப்படத்தின் ஆன்மாவாக விளங்கிய இசைக்காகத் தனது முதல் ஆஸ்கார் விருதை உறுதி செய்தார்.
ஆஸ்கார் தவிர்த்து இத்திரைப்படம் கிரிட்டிக்ஸ் சாய்ஸ் மூவி அவார்ட்ஸ் விழாவில் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய மூன்று விருதுகளைத் தட்டிச் சென்றது. பிரிட்டிஷ் அகாடமி விருதுகளில் (BAFTA) சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதை வென்றது.
திரைக்கதை ஆசிரியர்கள் சங்கம் (WGA) 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த 101 திரைக்கதைகளின் பட்டியலில் இப்படத்தின் திரைக்கதையை 57 வது இடத்தில் வைத்து கௌரவித்தது.
கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த திரைப்படம் (Drama) உள்ளிட்ட மூன்று முக்கியப் பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றது.
திரைப்படத் துறையில் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் (AFI) மற்றும் நேஷனல் போர்டு ஆஃப் ரிவியூ ஆகிய அமைப்புகள், 2018 ஆம் ஆண்டின் சிறந்த பத்து திரைப்படங்களில் ஒன்றாக பிளாக் பான்தரைத் தேர்ந்தெடுத்தன.
நடிகர்கள் சங்க விருதுகளில் (SAG Awards) சிறந்த சண்டைக்காட்சிகளுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் சிறந்த நடிகர்கள் குழுவிற்கான விருதுகளைப் பெற்றது. இத்தனை விருதுகளையும் தாண்டி, 2025 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் மற்றும் ரோலிங் ஸ்டோன் இதழ்கள் வெளியிட்ட 21 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த 100 திரைப்படங்கள் பட்டியலில் இப்படம் முறையே 96 மற்றும் 52 வது இடத்தைப் பிடித்து இன்றும் உலகத் தரமான படைப்பாக நிலைத்து நிற்கிறது.
இப்படம் வெறும் பொழுதுபோக்குத் திரைப்படம் என்பதையும் தாண்டி ஒரு இனத்தின் தொலைந்துபோன பெருமைகளை நவீன காலத்திற்கேற்ப மீட்டுருவாக்கம் செய்த வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.
==========================
படத்தின் கதை:-
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் இருந்து விழுந்த வைப்ரேனியம் எனும் அதிசய உலோகம் ஆப்பிரிக்காவின் ஐந்து பழங்குடி இனங்களுக்கு இடையே பெரும் போரை உருவாக்கியது.
அப்போது ஒரு வீரன் இதய வடிவிலான மூலிகையை உண்டு சிறுத்தையின் சக்தியைப் பெற்று முதல் பிளாக் பான்தராக மாறி பழங்குடிகளை ஒன்றிணைத்து வகாண்டா எனும் தேசத்தை உருவாக்கினான்.
மலைப்பகுதிகளில் வாழும் ஜபாரி இனம் மட்டும் தனித்து நின்றது. வெளி உலகுக்கு வகாண்டா ஒரு ஏழ்மையான விவசாய நாடாகத் தெரிந்தாலும் அதன் உள்ளே வைப்ரேனியம் உதவியால் உருவான மிக நவீனமான தொழில்நுட்ப உலகம் ஒளிந்திருந்தது.
பல நூற்றாண்டுகளாக வகாண்டா தன்னை உலகின் பார்வையில் இருந்து மறைத்தே பாதுகாத்து வந்தது.
கேப்டன் அமெரிக்கா சிவில் வார் நிகழ்வில் தனது தந்தை டி சாகா கொல்லப்பட்ட பிறகு டி சல்லா (சட்விக் போஸ்மேன்) வகாண்டாவின் அரியணையில் அமர தாயகம் திரும்புகிறார்.
வகாண்டாவின் பாரம்பர்யப்படி அருவி முனையில் நடக்கும் சடங்குப் போட்டியில் ஜபாரி இனத் தலைவன் எம்பாகுவை வீழ்த்தி அவர் மன்னராகிறார்.
அப்போது நைஜீரியாவில் கடத்தப்பட்ட பெண்களை மீட்கச் சென்ற தனது காதலி நாகியாவை டி சல்லா அழைத்து வருகிறார்.
இதற்கிடையில் லண்டன் அருங்காட்சியகத்தில் இருந்த வகாண்டாவின் பழமையான ஆயுதம் ஒன்றை யுலிசிஸ் குளாவ் மற்றும் எரிக் கில்மாங்கர் (மைக்கேல் பி ஜோர்டான்) திருடுகின்றனர்.
குளாவ் பல ஆண்டுகளுக்கு முன்பு வகாண்டாவிற்குள் புகுந்து வைப்ரேனியத்தைத் திருடிச் சென்றவன் என்பதால் அவனைப் பிடிக்க டி சல்லா தென்கொரியாவின் பூசன் நகருக்குச் செல்கிறார்.
அங்கு நடந்த அதிவேக கார் துரத்தல் காட்சியில் குளாவ் பிடிபட்டாலும் கில்மாங்கர் அவனை மீட்டுச் செல்கிறான். பின்னர் கில்மாங்கர் குலாவைத் தானே கொன்றுவிட்டு அவனது உடலை வகாண்டாவின் எல்லைக்கு எடுத்து வந்து மக்களின் நம்பிக்கையைப் பெறுகிறான்.
அரியணை சபையில் தான் மறைந்த இளவரசன் என்ஜோபுவின் மகன் என்றும் தனக்கு வகாண்டாவின் ஆட்சியில் உரிமை உண்டு என்றும் கில்மாங்கர் அறிவிக்கிறான்.
என்ஜோபு அமெரிக்காவில் வாழ்ந்தபோது அங்கிருந்த கறுப்பின மக்களின் துயரங்களைக் கண்டு வகாண்டாவின் ஆயுதங்களைக் கொண்டு உலகப் புரட்சி செய்ய முயன்றதால் கொல்லப்பட்டவர்.
தனது தந்தையின் லட்சியத்தை நிறைவேற்ற வந்த கில்மாங்கர் சடங்குப் போட்டியில் டி சல்லாவை வீழ்த்தி அவரை அருவியில் இருந்து கீழே தள்ளுகிறான்.
மன்னராகும் கில்மாங்கர் வகாண்டாவின் ஆயுதங்களை உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி பேரரசை உருவாக்கத் திட்டமிடுகிறான்.
அருவியில் விழுந்த டி சல்லா ஜபாரி இன மக்களால் காப்பாற்றப்படுகிறார். அவரது தங்கை ஷூரி மற்றும் தாய் ராமோண்டா மீதமிருந்த ஒரே ஒரு இதய வடிவ மூலிகையைக் கொண்டு டி சல்லாவிற்கு மீண்டும் சக்தியை அளிக்கின்றனர்.
இறுதிப் போரில் டி சல்லா தனது படைகளுடன் கில்மாங்கரை எதிர்க்கிறார். வகாண்டாவின் வான்வெளி ஊர்திகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் களத்தில் இறங்குகின்றன.
வைப்ரேனியம் சுரங்கத்திற்குள் நடக்கும் இறுதி மோதலில் டி சல்லா கில்மாங்கரை வீழ்த்துகிறார்.
மரணத் தருவாயில் கில்மாங்கர் வகாண்டாவின் அழகைக் கண்டு வியக்கிறான்.
தன்னைச் சிறையில் அடைப்பதை விட அடிமைத்தனத்தை விட மரணத்தையே மேலாகக் கருதும் தனது முன்னோர்களைப் போல கடலில் புதைக்கச் சொல்கிறான். கில்மாங்கரின் வாதங்களில் இருந்த நியாயத்தை உணரும் டி சல்லா வகாண்டாவின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள முடிவெடுக்கிறார். வகாண்டா இனி தனித்து இயங்காமல் உலக நாடுகளுக்கு உதவி செய்யும் ஒரு பாலமாக மாறும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் அவர் அறிவிக்கிறார்.
அமெரிக்காவின் ஓக்லாண்ட் நகரில் வகாண்டாவின் முதல் சர்வதேச மையத்தை நிறுவி அதன் மூலம் புதிய மாற்றத்தைத் தொடங்கி வைக்கிறார்.
அநீதிக்கு எதிராகவும் நீதிக்காகவும் போராடும் ஒரு தேசத்தின் பயணமாக இக்கதை நிறைவடைகிறது.
இப்படம் சொல்லும் செய்தி மிக ஆழமானது. அறிவுள்ளவர்கள் பாலங்களைக் கட்டுகிறார்கள் என்றும் அறிவில்லாதவர்கள் மதில் சுவர்களை எழுப்புகிறார்கள் என்றும் படம் முடிக்கிறது.
ஒரு நாடு தன்னிடம் இருக்கும் தொழில்நுட்பத்தையும் வளங்களையும் சுயநலமாகப் பூட்டி வைப்பதை விட உலகளாவிய மனிதநேயத்திற்காகப் பகிர்ந்து கொள்வதே சிறந்தது என்பதை இது உணர்த்துகிறது.
வரலாற்றின் வடுக்களையும் காலனிய ஆதிக்கத்தின் வலிகளையும் சுமந்து நிற்கும் ஒரு சமூகத்தின் எழுச்சியாகவும் அதே சமயம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு சர்வதேசப் பிரகடனமாகவும் இப்படம் அமைந்திருக்கிறது.