:"தி ஷேப் ஆஃப் வாட்டர்"
2017 ஆம் ஆண்டு வெளியாகி உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய ஒரு உன்னதமான காஊஆதல் படைப்பு.
மெக்சிகன் மேதை கில்லர்மோ டெல் டோரோ இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம் மனித நேயத்திற்கும் மேலான ஒரு காதலைப் பற்றிப் பேசுகிறது.
1962 ஆம் ஆண்டின் பனிப்போர் காலத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தச் சித்திரம் வெறும் மாய யதார்த்த வகையைச் சார்ந்தது மட்டுமல்லாமல் சமூகத்தில் விளிம்புநிலை மனிதர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பையும் அழகியலோடு பதிவு செய்கிறது.
பால்டிமோர் நகரில் இருக்கும் ரகசிய அரசு ஆராய்ச்சி மையத்தில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் எலிசா எஸ்போசிட்டோ (சாலி ஹாக்கின்ஸ்) பேசும்திறன் அற்றவர்.
அவர் தனது வாழ்நாளில் எதிர்கொள்ளும் தனிமையை ஒரு விசித்திரமான நீர்வாழ் மனிதனுடனான சந்திப்பு மாற்றியமைக்கிறது.
தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளிலிருந்து கர்னல் ரிச்சர்ட் ஸ்ட்ரிக்லாண்ட் (மைக்கேல் ஷானன்) என்பவரால் கடத்தி வரப்பட்ட அந்த நீர்வாழ் மனிதன் (டக் ஜோன்ஸ்) முன்பு ஒரு கடவுளாக வழிபடப்பட்டவன், அவன் இந்த கிராதகர்களிடம் சோதனைச்சாலை எலிபோல அகப்பபட்டு எதிர்கொள்ளும் துயரம் சொல்லில் வடிக்க முடியாதவை.
இந்தத் திரைப்படத்தின் அடிநாதம் உருவமற்ற அன்பும் மற்றவர்கள் மீதான ஏளனமற்ற பார்வையும் ஆகும்.
எலிசா அந்த நீர்வாழ் மனிதனிடம் ஒரு மிருகத்தையோ அல்லது விசித்திரத்தையோ காணாமல் தன்னைப் போலவே ஒரு ஆன்மாவைக் காண்கிறார்.
அவர் அவனுக்கு முட்டை கொடுத்தும் இசையைப் பகிர்ந்தும் சைகை மொழியில் உரையாடியும் ஒரு பிணைப்பை உருவாக்குகிறார்.
மறுபுறம் கர்னல் ஸ்ட்ரிக்லாண்ட் அந்த உயிரினத்தை ஒரு வெறும் பொருளாகவும் சோதனைக் கருவியாகவும் மட்டுமே பார்க்கிறார்.
இது மனிதர்களிடையே இருக்கும் அதிகாரப் போக்கிற்கும் மனிதாபிமானத்திற்கும் இடையிலான போராட்டமாக விரிகிறது.
எலிசாவிற்கு உதவியாக இருக்கும் அவரது தோழி செல்டா (ஆக்டேவியா ஸ்பென்சர்) மற்றும் ஓவிய நண்பர் ஜைல்ஸ் (ரிச்சர்ட் ஜென்கின்ஸ்) ஆகியோரும் சமூகத்தால் ஏதோ ஒரு வகையில் ஒதுக்கப்பட்டவர்களே.
படமாக்கம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இப்படம் ஒரு கவிதைக்கு நிகரானது. டான் லாஸ்ட்சென் என்பவரின் ஒளிப்பதிவு படம் முழுவதையும் ஒரு நீலப் பச்சை நிறத்தின் நிழலில் நனைத்து வைத்திருக்கிறது.
அலெக்சாண்டர் டெஸ்பிளாட் இசையமைத்த பின்னணி இசை நீரின் அலைச்சலையும் காதலின் மென்மையையும் ஒரே நேர்க்கோட்டில் கடத்துகிறது.
குறிப்பாக எலிசாவின் குளியலறை நீரால் நிரம்பும் காட்சிகளும் அந்த நீர்வாழ் மனிதனுடன் அவர் இணையும் தருணங்களும் மாயாஜால யதார்த்தவாதத்தின் உச்சம்.
இப்படம் 90வது அகாடமி விருதுகளில் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட நான்கு ஆஸ்கார் விருதுகளை வென்று சாதனை படைத்தது.
கில்லர்மோ டெல் டோரோ தனது ஆறு வயதில் கிரியேச்சர் ஃப்ரம் தி பிளாக் லகூன் என்ற படத்தைப் பார்த்தபோது அந்த நீர்வாழ் மனிதனும் கதாநாயகியும் இணைந்திருக்கக் கூடாதா என்று ஏங்கியதன் விளைவே இப்படம் உருவாகக் காரணம்.
இதற்காக அவர் தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து அந்த நீர்வாழ் மனிதனின் வடிவமைப்பிற்கு மட்டும் ஒன்பது மாதங்கள் எடுத்துக் கொண்டார்.
அந்த உடையில் டக் ஜோன்ஸ் ஒரு நாளைக்கு பல மணிநேரம் இருக்க வேண்டியிருந்தது.
சாலி ஹாக்கின்ஸ் தனது பாத்திரத்திற்காக சார்லி சாப்ளின் மற்றும் பஸ்டர் கீட்டன் போன்ற மௌனப் படக் கலைஞர்களின் உடல் மொழியைக் கற்றுக்கொண்டார்.
இப்படத்தை முதலில் கருப்பு வெள்ளையில் படமாக்கவே இயக்குனர் விரும்பினார் ஆனால் பட்ஜெட் காரணங்களுக்காக வண்ணப் படமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது, அந்த நீர்வாழ் மனிதன் கதாபாத்திரத்திற்காக டக் ஜோன்ஸ் ஒரு நடனக் கூடத்தில் பலவிதமான உடல் அசைவுகளைப் பயிற்சி செய்தார்,
அந்த உயிரினம் மிருகத்தனமாகவும் அதே சமயம் ஒரு ராஜ வம்சத்து கம்பீரத்தோடும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் ஒரு மாடடோர் வீரனைப் போல அதன் நடையை அவர் வடிவமைத்தார்,
அந்த நீர்வாழ் மனிதனின் சத்தம் ஒலி வடிவமைப்பாளர் நாதன் ரோபிடைல் என்பவரின் குரல் மற்றும் பல்வேறு விலங்குகளின் ஒலிகளோடு சேர்த்து இயக்குனர் டெல் டோரோவின் மூச்சுக்காற்று ஒலியையும் கலந்து உருவாக்கப்பட்டது,
ஜைல்ஸ் கதாபாத்திரத்தை முதலில் இயன் மெக்கலென் நடிப்பார் என்று எதிர்பார்த்து எழுதப்பட்டது ஆனால் அவர் நடிக்க ஏற்காததால் ரிச்சர்ட் ஜென்கின்ஸ் அந்த இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்,
படத்தில் வரும் தியேட்டர் மற்றும் எலிசாவின் வீடு போன்றவை டொராண்டோவில் உள்ள புகழ்பெற்ற எல்ஜின் மற்றும் விண்டர் கார்டன் திரையரங்குகளில் படமாக்கப்பட்டன,
இப்படத்தின் இசைக்காக அலெக்ஸாண்ட்ரே டெஸ்ப்ளாட் ஆறு வாரங்கள் செலவிட்டார், அதில் எலிசாவின் இசைப் பின்னணி படத்தின் இறுதியில் அந்த உயிரினத்தின் இசையோடு ஒன்றிணைந்து ஒரு முழுமையான வடிவத்தைப் பெறுமாறு நுணுக்கமாக அமைக்கப்பட்டது,
சுமார் 19.5 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலக அளவில் 195 மில்லியன் டாலர்களை ஈட்டி மிகப்பெரிய வணிக வெற்றியையும் தேடித்தந்தது.
நீர்வாழ் மனிதனின் உடல் அமைப்பு ஒரு ஆணின் கட்டுக்கோப்பான தசைகளையும் அதே சமயம் ஒரு நீர்வாழ் உயிரினத்தின் நெகிழ்வுத்தன்மையையும் பிரதிபலிக்கும் வகையில் சிற்பமாகச் செதுக்கப்பட்டது,
பால் ஜிண்டெல் என்பவரின் குடும்பத்தினர் இக்கதை திருடப்பட்டது என்று வழக்கு தொடர்ந்தனர் ஆனால் பின்னர் அந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று ஒப்புக்கொண்டு கில்லெர்மோ டெல் டோரோவே இப்படத்தின் உண்மையான படைப்பாளி என்று அங்கீகரித்தனர்,
படத்தின் தொடக்கத்தில் வரும் எலிசாவின் வீடு நீரால் நிரம்பியிருக்கும் காட்சி உண்மையில் தண்ணீருக்கு அடியில் படமாக்கப்படவில்லை, மாறாக புகை மூட்டம் மற்றும் தொங்கவிடப்பட்ட பொருட்கள் மூலம் தண்ணீருக்கு அடியில் இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி பின்னர் கணினித் தொழில்நுட்பம் மூலம் நீர் குமிழ்கள் சேர்க்கப்பட்டன,
ஒரு கட்டத்தில் ஃபாக்ஸ் சர்ச்லைட் நிறுவனம் இப்படத்தை கருப்பு வெள்ளையில் எடுக்க சம்மதித்து 17 மில்லியன் டாலர்கள் மட்டுமே ஒதுக்கியது ஆனால் வண்ணப் படமாக எடுத்தால் 20 மில்லியன் டாலர்கள் தருவதாகக் கூறியதால் இயக்குனர் வண்ணப் படத்தைத் தேர்வு செய்தார்,
நெதர்லாந்து திரைப்பட அகாடமி மாணவர்களின் குறும்படம் ஒன்றோடு இக்கதை ஒப்பிடப்பட்டபோது அவை இரண்டும் தனித்துவமான காலவரிசைகளைக் கொண்டவை என்றும் எவ்வித தொடர்பும் அற்றவை என்றும் அந்த அகாதமி விளக்கம் அளித்தது,
லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் படத்திற்குப் பிறகு சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற இரண்டாவது பேண்டஸி திரைப்படம் இதுவாகும்,
எலிசா பேச முடியாதவர் என்பதால் அவருடைய உணர்வுகளை வெளிப்படுத்த வண்ணங்களின் பயன்பாடு மிக முக்கிய பங்கு வகித்தது குறிப்பாக படத்தின் இறுதியில் அவர் சிவப்பு நிற உடைகளை அணிவது அவருடைய வளர்ந்து வரும் காதலையும் துணிச்சலையும் குறிப்பதாக அமைக்கப்பட்டது.
==========================
படத்தின் கதை:-
எலிசா எஸ்போசிடோ (சாலி ஹாக்கின்ஸ்) பால்டிமோர் நகரில் உள்ள அதீத பாதுகாப்பு கொண்ட அரசு ரகசிய ஆய்வகத்தில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிகிறார்,
சிறு வயதிலேயே ஆற்றங்கரையில் கைவிடப்பட்ட எலிசாவிற்கு கழுத்தில் தழும்புகள் உள்ளன, அவரால் பேச முடியாது என்பதால் சைகை மொழியின் மூலமே அவர் உலகோடு உரையாடுகிறார்,
அவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் விளம்பர ஓவியரான ஜைல்ஸ் (ரிச்சர்ட் ஜென்கின்ஸ்) மற்றும் சக ஊழியரான செல்டா (அக்டேவியா ஸ்பென்சர்) ஆகிய இருவர் மட்டுமே நண்பர்கள்,
அந்த ஆய்வகத்திற்கு தென்னமெரிக்க ஆற்றுப்பகுதியிலிருந்து பிடிக்கப்பட்ட ஒரு விசித்திரமான நீர்வாழ் மனிதனை கர்னல் ரிச்சர்ட் ஸ்டிரி்க்லாண்ட் (மைக்கேல் ஷானன்) கொண்டு வருகிறார்,
விண்வெளிப் போட்டியில் முன்னிலை பெற எண்ணும் அமெரிக்க அரசு அந்த உயிரினத்தின் சுவாச மண்டலத்தை ஆய்வு செய்ய அதை உயிரோடு அறுக்கத் திட்டமிடுகிறது,
ஆனால் மறைமுகமாக அந்த உயிரினத்தைச் சந்திக்கும் எலிசா அதனுடன் ஒரு ஆழமான பிணைப்பை வளர்த்துக் கொள்கிறார்,
அதற்கு வேகவைத்த முட்டைகளை வழங்கியும் இசைத் தட்டுகளை ஒலிக்கச் செய்தும் அதன் நம்பிக்கையைப் பெறுகிறார்,
சோவியத் உளவாளியாக இருக்கும் விஞ்ஞானி ராபர்ட் ஹாஃப்ஸ்டெட்லர் அந்த உயிரினத்தை கொல்லாமல் காக்க விரும்புகிறார்,
இதற்கிடையில் அந்த உயிரினம் கொல்லப்பட இருப்பதை அறிந்த எலிசா தனது நண்பர்களின் உதவியுடன் அதைத் தப்பிக்க வைக்கத் திட்டமிடுகிறார்,
மிகுந்த ஆபத்துகளுக்கு இடையே அந்த நீர்வாழ் மனிதனை (டக் ஜோன்ஸ்) மீட்டு தனது வீட்டின் குளியலறையில் மறைத்து வைக்கிறார்,
பலத்த மழை பெய்யும் நாளில் அதை கடலில் விட முடிவு செய்கிறார், எலிசாவின் பராமரிப்பில் அந்த உயிரினம் இருக்கும்போது அது ஜைல்ஸின் காயமடைந்த கையையும் அவரது வழுக்கைத் தலையையும் தனது விசித்திரமான ஆற்றலால் குணப்படுத்துகிறது,
வார்த்தைகளே அற்ற எலிசாவிற்கும் அந்த உயிரினத்திற்கும் இடையில் காதல் மலர்ந்து அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் இணைகின்றனர்,
அந்த உயிரினத்தை மீட்கத் தவறியதால் தனது பதவிக்கு ஆபத்து வரும் என்று அஞ்சும் ஸ்டிரி்க்லாண்ட் வெறித்தனமாக அதைத் தேடி எலிசாவின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கிறார்,
இறுதியில் கால்வாய் பகுதியில் வைத்து எலிசாவையும் அந்த உயிரினத்தையும் சுடுகிறார்,
ஆனால் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் அந்த நீர்வாழ் மனிதன் ஸ்டிரி்க்லாண்டைக் கொன்றுவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் எலிசாவைத் தூக்கிக்கொண்டு நீருக்குள் குதிக்கிறான்,
நீருக்கு அடியில் அவன் எலிசாவை முத்தமிடும்போது அவனது ஆற்றலால் எலிசாவின் கழுத்தில் இருந்த பழைய தழும்புகள் செவுள்களாக மாறுகின்றன,
இதன் மூலம் எலிசாவும் ஒரு நீர்வாழ் உயிரினமாக மாறி உயிர் பிழைத்து அவனுடன் என்றும் பிரியாத காதலில் இணைகையில் படம் நிறைகிறது.
இத் திரைப்படம் சொல்லும் செய்தி மிகவும் ஆழமானது. அன்பு என்பது எந்த வடிவத்தையும் சார்ந்தது அல்ல என்பதையே படத்தின் தலைப்பு குறிப்பிடுகிறது.
நீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் அது அந்த வடிவத்தை எடுப்பது போல அன்பு யாரையும் எதையும் ஏற்றுக்கொள்ளும் வல்லமை கொண்டது.
மாற்று திறனாளிகள், இனத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் , பாலினத் தேர்வால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரின் குரலாகவே இப்படம் ஒலிக்கிறது.
அதிகாரம் மற்றும் திமிர் கொண்ட மனிதர்களை விட மென்மையான அன்பும் புரிந்துணர்வும் கொண்டவர்களே உலகில் வெல்வார்கள் என்பதை எலிசாவின் கழுத்துத் தழும்புகள் செவுள்களாக மாறும் இறுதி காட்சி மிக அழகாக உணர்த்துகிறது.