ஸ்டட்டரர் Stutterer 2015 ஆம் ஆண்டு வெளியான அயர்லாந்து நாட்டு குறும்படம், பெஞ்சமின் கிளியரி இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
செரீனா ஆர்மிட்டேஜ் மற்றும் ஷான் கிறிஸ்டோபர் ஓகில்வி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர் .
இது ஒரு அழுத்தமான காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான டிராமா ஜானர் திரைப்படமாகும்.
தன்னுடைய கடுமையான தடுமாற்றப் பேச்சுக் குறைபாட்டால் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் தவிக்கும் கிரீன்வுட் என்ற டைபோகிராபர் இளைஞனைப் பற்றிய படம் இது.
அவர் தன் குறைபாட்டின் காரணமாக சமூகத்தில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தாலும் அவரது மனதில் எண்ணங்கள் மிகத் தெளிவாகவும் வேகமாகவும் ஓடுகின்றன.
முகநூல் வழியாக எல்லி என்ற பெண்ணுடன் அவருக்கு ஆன்லைன் காதல் மலர்கிறது ஒரு கட்டத்தில் எல்லி நேரில் சந்திக்க லண்டன் வருவதாகக் கூறும்போது கிரீன்வுட் தன் குறைபாட்டை எண்ணி அஞ்சுகிறார்.
அவரிடமிருந்து தப்பிக்க சைகை மொழியைக் கூட கற்கத் தொடங்குகிறார் இறுதியில் அவர்கள் நேரில் சந்திக்கும்போது எல்லியும் ஒரு செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி என்ற நெகிழ்ச்சியான திருப்பத்துடன் இப்படம் நிறைவடைகிறது.
ஸ்டட்டர் திரைப்படத்தின் அடிநாதம் வெறும் பேச்சுக் குறைபாட்டைப் பற்றியது மட்டுமல்ல அது மனிதர்களுக்கு இடையேயான தொடர்பு தனிமை மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றைப் பேசும் ஆழமான வாழ்வியல் தத்துவமாகும்.
மனிதன் சமூக விலங்கு அவனுக்குள் இருக்கும் எண்ணங்களையும் உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தொடர்புதான் அவனது சமூக வாழ்வைத் தீர்மானிக்கிறது .
ஆனால் கிரீன்வுட் போன்ற ஒரு மனிதனுக்குள் ஒரு மிகப்பெரிய உலகமே பேச நினைத்தாலும் அவனது உடல் அதற்கு ஒத்துழைப்பதில்லை.
இதனால் ஏற்படும் ஏமாற்றம் கோபம் மற்றும் இயலாமை ஆகியவை அவனைத் தனிமைக்குள் தள்ளுகின்றன.
இந்தத் தனிமைதான் படத்தின் முதல் அடிநாதமாக ஒலிக்கிறது.
அடுத்ததாக இத்திரைப்படம் மனிதர்களின் சுய பாதுகாப்பு உணர்வையும் பயத்தையும் காட்டுகிறது .
எல்லி தன் மீது வைத்துள்ள அன்பு தன் பேச்சுக் குறைபாட்டை அறிந்ததும் போய்விடுமோ என்ற கிரீன்வுட்டின் பயம் சராசரி மனிதர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது .
அவளது நேர்முகத் தொடர்பைத் தவிர்க்க அவன் சைகை மொழியைக் கற்கத் தொடங்குவது அவனது தற்காப்பு முயற்சியே தவிர ஏமாற்று வேலை அல்ல.
இறுதியாக இப்படத்தின் மிக முக்கிய அடிநாதமாக விளங்குவது எதிர்பாராத புரிதலும் உண்மையான அன்பும் ஆகும் .
கிரீன்வுட் தன்னை ஒரு குறைபாடுடைய மனிதனாக எண்ணி தாழ்வு மனப்பான்மையில் உழலும்போது எல்லியும் ஒரு மாற்றுத்திறனாளியாக செவித்திறன் குறைபாடு உள்ளவராக அறிமுகமாவது கதையின் உச்சக்கட்ட திருப்புமுனை.
இங்குதான் படத்தின் அடிநாதம் முழுமை பெறுகிறது இருவருமே ஏதோ ஒரு வகையில் சமூகத்தோடு தொடர்பு கொள்ளத் திணறும் மனிதர்கள் தான் ஒருவர் பேசத் திணறுகிறார் .
மற்றொருவர் கேட்கத் திணறுகிறார் ஆனால் அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் ஆன்மாவின் தொடர்பு மிகத் தூய்மையானது.
ஒருவருக்கொருவர் தங்களின் குறைகளைத் தாண்டி மனதால் இணைந்து விடுகிறார்கள்
வெளிப்படையான வார்த்தைகளை விட மனதின் தூய்மையான அன்பும் உண்மையான புரிதலுமே மனிதர்களை இணைக்கும் உன்னதப் பாலம் என்பதை இத்திரைப்படம் மிக அழகாக உணர்த்துகிறது
இப்படத்தின் நடிப்பு மிக அற்புதம் கிரீன்வுட் கதாபாத்திரத்தில் மேத்யூ நீதம் வார்த்தைகளின்றி தன் முகபாவனைகள் மற்றும் கண்கள் மூலமாகவே ஒரு மாற்றுத்திறனாளியின் வலியை மிக நேர்த்தியாகக் கடத்தியுள்ளார் .
எல்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோலி பரியும் தந்தையாக நடித்துள்ள எரிக் ரிச்சர்டும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
பெஞ்சமின் கிளியரியின் இயக்கம் இப்படத்தின் மிகப்பெரிய பலம் வெறும் பன்னிரண்டு நிமிடங்களுக்குள் பார்வையாளர்களைக் கதையோடு ஒன்றிப்போகச் செய்து ஒரு ஆழமான தாக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார் .
மைக்கேல் பாலியோடிமோஸின் ஒளிப்பதிவு லண்டன் நகரத்தின் பின்னணியில் கிரீன்வுட்டின் தனிமையையும் அவரது மன உலகத்தையும் மிக அழகாகத் திரையில் காட்சிப்படுத்தியுள்ளது .
நிகோ காசலின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் உயிரூட்டியுள்ளது
இப்படம் சர்வதேச அளவில் பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது .
குறிப்பாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 88வது அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கார் விழாவில் சிறந்த லைவ் ஆக்சன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை இது வென்றது .
இது தவிர லண்டன் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது ஐரிஷ் ஃபிலிம் மற்றும் டெலிவிஷன் அகாடமி விருது ஏஸ்தெடிகா குறும்பட விழா விருது டிசி குறும்பட விழா விருது மற்றும் க்ரெஸ்டெட் பட் திரைப்பட விழா விருது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளை இப்படம் தன்வசப்படுத்தியுள்ளது
இயக்குனர் பெஞ்சமின் கிளியரிக்கு இதுதான் முதல் திரைப்படம் என்பதால் இதற்கான தயாரிப்புச் செலவிற்கு அவரிடம் போதிய பணம் இல்லை .
இதனால் லண்டனில் உள்ள ஒரு உணவகத்தில் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டே பல மாதங்கள் சிறுகச் சிறுகச் சேர்த்த தனது சொந்தப் பணத்தை மட்டுமே வைத்து இந்தத் திரைப்படத்தை அவர் உருவாக்கத் தொடங்கினார்.
படப்பிடிப்பிற்கான பட்ஜெட் மிகக் குறைவாக இருந்ததால் இங்கிலாந்தின் நார்த் யார்க்ஷையர் பகுதியில் உள்ள தனது சொந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளையே படப்பிடிப்புத் தளங்களாகப் பயன்படுத்திக் கொண்டார்.
படத்தில் கிரீன்வுட் தங்கியிருக்கும் அறையாகக் காட்டப்படுவது இயக்குனரின் நண்பர் ஒருவரின் நிஜமான படுக்கையறைதான்.
படத்தின் தயாரிப்பாளர்களான செரீனா மற்றும் ஷான் ஆகிய இருவரும் படப்பிடிப்பின் போது தயாரிப்புப் பணிகளைத் தாண்டி பல வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது.
மிகவும் குறைந்த ஆட்களைக் கொண்ட குழு என்பதால் கேமரா உபகரணங்களைச் சுமப்பது படப்பிடிப்புத் தளத்தைச் சுத்தம் செய்வது மற்றும் குழுவினருக்குத் தேவையான உணவுகளைத் தயாரிப்பது என அனைத்து வேலைகளையும் இவர்களே முன்னின்று கவனித்துக் கொண்டனர்.
இப்படத்தின் நாயகன் மேத்யூ நீதம் நிஜ வாழ்க்கையில் பேச்சுக் குறைபாடு இல்லாதவர் ஆனால் தனது கதாபாத்திரத்திற்கு முழு நியாயம் சேர்க்க வேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்பு தொடங்குவதற்கு பல வாரங்களுக்கு முன்பிருந்தே ஒரு நிஜமான மாற்றுத்திறனாளியைப் போலத் தனது பேச்சையும் உடல் மொழியையும் மாற்றிப் பழகினார் .
லண்டன் தெருக்களில் அந்நிய மனிதர்களிடம் பேசிப் பழகித் தனது நடிப்புத் திறனை அவர் கூர் தீட்டிக்கொண்டார்.
குறைந்த செலவில் மிகக் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் எடிட்டிங் செய்யப்பட்டு முழுமையாகத் தயாரான பிறகு சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்குக் கூட இயக்குனரிடம் பணம் இருக்கவில்லை .
அப்போது அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் நிதியுதவி செய்து உதவினர் அதன் பின்னரே இத்திரைப்படம் உலக அரங்கிற்குச் சென்று ஆஸ்கார் மேடை வரை பயணிக்கும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது.
இப்படத்தின் திரைக்கதை உருவாவதற்கு இயக்குனரின் சொந்த வாழ்க்கை அனுபவம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது பெஞ்சமின் கிளியரி தனது சிறுவயதில் சில காலம் லேசான பேச்சுக் குறைபாட்டை எதிர்கொண்டவர் .
அந்தத் தவிப்பும் மற்றவர்கள் தன்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்ற பயமும் அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது அந்த நிஜமான வலியும் உணர்வுகளுமே கிரீன்வுட் கதாபாத்திரத்தின் சிந்தனைகளாகத் திரைவடிவம் பெற்றன.
படப்பிடிப்பின் போது ஒலிப்பதிவுத் துறைக்கு ஒரு பெரிய சவால் காத்திருந்தது படத்தின் பெரும்பகுதி நாயகனின் மனக்குரலாகவே பேக்ரவுண்ட் வாய்ஸ் ஓவர் மூலம் பயணிக்கிறது எனவே லண்டன் நகரத்தின் பரபரப்பான இரைச்சலுக்கு நடுவிலும் கிரீன்வுட்டின் உள்மன அமைதியையும் தவிப்பையும் மிகத் துல்லியமாகக் காட்டுவதற்காக ஒலிக் கலவையில் மௌனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரத்யேகமாக ஒலிகளை வடிவமைத்தனர்.
இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட கோ கேம் விளையாட்டுத் தளம் சும்மா காட்சிக்கு வைக்கப்பட்டது அல்ல கிரீன்வுட் மற்றும் அவரது தந்தை இடையேயான உறவின் ஆழத்தைக் காட்டுவதற்காக அது மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
வார்த்தைகளால் அதிகம் பேச முடியாத தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஒரு மௌனமான பிணைப்பை அந்த விளையாட்டு மிக அழகாகக் கடத்தியது.
படத்தின் இறுதி காட்சியில் எல்லி சைகை மொழியில் பேசும் அந்தத் திருப்புமுனை காட்சி மிகவும் ரகசியமாகத் திட்டமிடப்பட்டது படப்பிடிப்புத் தளத்தில் மிகக் குறைவான நபர்களுக்கு மட்டுமே அந்த கிளைமாக்ஸ் ரகசியம் தெரியும் இதனால் ஒட்டுமொத்தக் குழுவும் அந்த இறுதி காட்சியைத் திரையில் பார்த்த போது நிஜமாகவே உணர்ச்சிவசப்பட்டு நெகிழ்ந்து போயினர்.
ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு இத்திரைப்படம் தேர்வான போது அந்தப் பெருமிதமான செய்தியை முதன்முதலில் கொண்டாடுவதற்கு கூட இயக்குனரிடம் போதிய போன் பேலன்ஸ் இருக்கவில்லை பின்னர் நண்பர்களின் அலைபேசி மூலமாகவே இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் உலகிற்குப் பகிர்ந்துகொண்டார்.
இப்படத்தின் பின்னணி இசையமைப்பாளர் நிகோ காசல் லண்டனில் உள்ள ஒரு சிறிய அறையில் அமர்ந்துதான் இதற்கான இசையை உருவாக்கினார்.
மிகக் குறைந்த பட்ஜெட் என்பதால் பெரிய இசைக்கருவிக் குழுவை அவரால் பயன்படுத்த முடியவில்லை எனவே ஒரு பழைய பியானோவை மட்டும் வைத்துக்கொண்டு கிரீன்வுட்டின் மன அழுத்தத்தையும் சோகத்தையும் பிரதிபலிக்கும் மெல்லிசையைத் தனித்துவமாக வடிவமைத்தார்.
அந்த இசைதான் படத்தின் உணர்வை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தது
படத்தின் போஸ்டர் மற்றும் கிராஃபிக்ஸ் டிசைன் வேலைகளைச் செய்வதற்கு இயக்குனருக்குத் தெரிந்த ஒரு சில கல்லூரி மாணவர்களே முன்வந்தனர் .
அவர்கள் எவ்வித பெரிய லாப நோக்கமும் இன்றி படத்தின் கதையை மட்டுமே நம்பி தங்களின் முழு உழைப்பைக் கொடுத்தனர் இது போன்ற புதியவர்களின் கூட்டு முயற்சியே இப்படத்தின் கலைத் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தியது.
இப்படம் ஆஸ்கார் விருதுக்குத் பரிந்துரைக்கப்பட்ட பிறகு அதன் குழுவினர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்ல நேர்ந்தது ஆனால் அங்கே தங்குவதற்கும் ஆஸ்கார் விழா ஆடை அணிவதற்கும் அவர்களிடம் போதிய வசதி இருக்கவில்லை .
அப்போது அயர்லாந்து மற்றும் பிரிட்டன் நாட்டின் சில சுயாதீனத் திரைப்பட அமைப்புகள் அவர்களுக்குத் நிதியுதவி அளித்து தங்குமிட வசதிகளையும் செய்து கொடுத்தன.
ஆஸ்கார் மேடையில் சிறந்த லைவ் ஆக்சன் குறும்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்ட தருணத்தில் பெஞ்சமின் கிளியரி மற்றும் தயாரிப்பாளர்கள் மேடைக்குச் சென்றபோது தங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திகைத்து நின்றனர் .
பல நூறு கோடிகள் செலவழித்து எடுக்கப்பட்ட படங்களுக்கு மத்தியில் தங்களின் மிகக் குறைந்த பட்ஜெட் படம் ஆஸ்கார் வென்றதை அவர்களால் எளிதில் நம்ப முடியவில்லை.
விருதை வென்ற பிறகு இத்திரைப்படம் அமேசான் இன்ஸ்டன்ட் வீடியோ தளத்தின் மூலம் உலகமெங்கும் வெளியாகி லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்தது.
பேச்சுக் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் பலவும் இந்தத் திரைப்படத்தை மனதாரப் பாராட்டி இயக்குனருக்குக் கடிதங்கள் எழுதினர் ஒரு சிறிய லண்டன் அறையில் தொடங்கிய ஒரு இளைஞனின் சுயமுயற்சி உலக அளவில் மாற்றுத்திறனாளிகளின் மீதான பார்வையை மாற்றியமைத்த உன்னதப் பயணமாக இத்திரைப்படத்தின் இறுதி உருவாக்கம் அமைந்தது
படத்தின் கதை:-
கிரீன்வுட் (மேத்யூ நீதம்) ஒரு தனிமையான டைபோகிராபர் , அவர் ஒரு முறை தனது பில் சார்ந்த பிரச்சனை குறித்து பேசுவதற்காக தொலைபேசி மூலம் ஒரு நிறுவனத்தை அழைக்கிறார் .
ஆனால் அவருக்கு இருக்கும் கடுமையான தடுமாற்றப் பேச்சுக் குறைபாடு காரணமாக அவரால் தன் வாயிலிருந்து வார்த்தைகளைச் சரியாக வெளியே கொண்டு வர முடியாமல் போகிறது.
இதனால் மறுமுனையில் இருப்பவர் பொறுமையிழந்து இணைப்பைத் துண்டித்து விடுகிறார் பின்னர் அவர் தனது முகநூல் பக்கத்தில் எல்லி (சோலி பரியே) என்ற தனது ஆன்லைன் காதலியுடன் உரையாடுகிறார்.
அப்போது எல்லி தனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாகவும் அதை அடுத்த நாள் கூறுவதாகவும் கிரீன்வுட்டிடம் தெரிவிக்கிறார்.
பொது இடங்களில் நடமாடும் போது கிரீன்வுட் தான் பார்க்கும் அந்நிய மனிதர்களைப் பற்றித் தன் மனதில் தோன்றும் கருத்துக்களை மிகத் தெளிவாகவும் வேகமாகவும் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவராக இருக்கிறார்.
அவர் தனது தந்தையின் (எரிக் ரிச்சர்ட்) வீட்டிற்கு நடந்து செல்லும்போது அவரிடம் கூற நினைக்கும் ஒரு பொன்மொழியைத் தன் மனதிற்குள் பலமுறை சொல்லிப் பழகுகிறார் .
பின்னர் தந்தையும் மகனும் கோ என்ற பலகை விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கும்போது கிரீன்வுட் மிக மெதுவாகவும் சிரமப்பட்டும் அந்தப் பொன்மொழியைத் தன் தந்தையிடம் வெற்றிகரமாகக் கூறிவிடுகிறார் .
இதனால் அவரது தந்தை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார் அன்றிரவு எல்லி மிகவும் பதற்றத்துடன் கிரீன்வுட்டிற்கு ஒரு செய்தியை அனுப்புகிறார் அதில் தான் ஒரு வாரக் காலமாக லண்டன் நகருக்கு வந்திருப்பதாகவும் அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் கூறுகிறார்.
அதே நேரத்தில் தனது பில் பிரச்சனைக்காகத் தொலைபேசியில் காத்திருப்பில் இருக்கும் கிரீன்வுட் இந்தச் செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.
தனக்கு இருக்கும் பேச்சுக் குறைபாடு எல்லிக்குத் தெரிந்தால் என்னவாகும் என்ற பயத்தில் அவர் அந்தச் செய்திக்கு எந்தப் பதிலும் அளிக்காமல் மௌனமாக இருக்கிறார்.
அடுத்த நாள் கிரீன்வுட் தனது தந்தையின் வீட்டில் இருக்கும்போது அவரது தந்தை அந்த நிறுவனத்துடன் தொலைபேசியில் ஆக்ரோஷமாக வாதிட்டுக் கொண்டிருக்கிறார் .
தனது மகனின் பில் பிரச்சனை குறித்து அவரிடம் பேசுமாறு அந்த நிறுவனத்திடம் அவர் சண்டையிடுகிறார்.
இதற்கிடையில் எல்லி கிரீன்வுட்டிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் மிகுந்த வருத்தத்துடன் மற்றொரு செய்தியை அனுப்புகிறார்.
இதைப் பார்த்த கிரீன்வுட் தான் ஏன் அவளை நேரில் சந்திக்க முடியாது என்பதற்கான ஒரு போலி காரணத்தை உருவாக்கி ஒரு செய்தியைத் தட்டச்சு செய்யத் தொடங்குகிறார் .
ஆனால் பின்னர் தனது மனதை மாற்றிக்கொண்டு அந்தப் போலியான பதிலை அனுப்பாமல் அப்படியே விட்டுவிடுகிறார்.
மறுநாள் காலையில் கிரீன்வுட் சைகை மொழியைக் கற்கத் தொடங்குகிறார் சமூகத்தில் மற்றவர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பதற்காகத் தான் ஒரு செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி போல நடிக்க அவர் திட்டமிடுகிறார்.
இருப்பினும் அவரது உள்மனதில் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகத் துல்லியமாகப் பதிலளிப்பதோடு அவர்களுடன் இயல்பாகப் பேச முடியவில்லையே என்று அவர் ஏங்குகிறார்.
பின்னர் ஒரு கணத்தில் அவருக்குள் ஒரு தெளிவு பிறக்கிறது அவர் உடனடியாக எல்லிக்குச் செய்தி அனுப்பி அவளை நேரில் சந்திக்கத் தான் விரும்புவதாகத் தெரிவிக்கிறார் .
அன்று மாலை ஒரு பேருந்து நிறுத்தத்தில் எல்லியின் பதிலுக்காக அவர் மிகவும் பதற்றத்துடன் காத்துக் கொண்டிருக்கும்போது அங்கே ஒரு ஆக்ரோஷமான மனிதன் (ரிச்சர்ட் மேசன்) ஒரு பெண்ணைத் தாக்குவதைக் காண்கிறார் .
உடனே கிரீன்வுட் குறுக்கே புகுந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முற்படுகிறார் இந்தத் தலையீட்டின் விளைவாகக் கிரீன்வுட்டின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கே ஒரு கட்டுப் போடப்படுகிறது.
அன்றிரவு தனது தனிமையான அறையில் சைகை மொழியைப் பழகிக் கொண்டும் எல்லியின் பதிலுக்காகக் காத்துக் கொண்டும் இருக்கும்போது கிரீன்வுட் தன்னைத் தானே சுய விமர்சனம் செய்து கொள்கிறார் .
தான் ஒரு மிகச் சிறந்த கம்யூனிகேட்டர் இல்லை என்றும் தான் சுய பரிதாபத்தில் மூழ்கிக் கிடப்பதாகவும் அவர் எண்ணுகிறார்.
ஆனால் அவர் உறங்கச் செல்லும் சரியான நேரத்தில் அவரது அலைபேசிக்கு ஒரு புதிய செய்தி வந்ததற்கான சத்தம் கேட்கிறது .
எல்லி அனுப்பிய அந்தச் செய்தியின் விவரம் திரையில் காட்டப்படவில்லை என்றாலும் அதைப் பார்த்த கிரீன்வுட் மிகவும் பதற்றமாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் மாறுகிறார்.
அடுத்த நாள் அவர் தன்னை அழகாகத் தயார்படுத்திக் கொண்டு அவளைச் சந்திப்பதற்காகப் பயணப்படுகிறார் .
அந்தப் பயணத்தின் போதும் எல்லியிடம் நேரில் என்ன பேச வேண்டும் என்பதைத் தன் மனதிற்குள் தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே செல்கிறார்.
அவர் எல்லி இருக்கும் இடத்தை அடைந்ததும் சாலையின் மறுபுறம் நின்றபடி அவளைக் கூர்ந்து கவனிக்கிறார் .
அப்போது எல்லியின் பின்புறமாக வரும் ஒரு அந்நிய மனிதன் அவளிடம் ஏதோ பேச முயல்கிறான் ஆனால் எல்லி அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார் அந்த மனிதன் அவளது தோளைத் தட்டியதும் எல்லி அவர்பக்கம் திரும்பித் தான் ஒரு செவித்திறன் குறைபாடுடையவர் என்பதைச் சைகை மொழியின் மூலம் அவருக்கு விவரிக்கிறார்.
எல்லியும் ஒரு மாற்றுத்திறனாளி என்பதைப் புரிந்து கொண்ட கிரீன்வுட் ஆச்சரியமடைகிறார் அதே நேரத்தில் எல்லி சாலையின் மறுபுறம் நிற்கும் கிரீன்வுட்டை நேருக்கு நேர் பார்த்துப் புன்னகைக்கிறார் .
அவர் கைகளை அசைத்துத் தன்னை நோக்கிச் சாலையைக் கடந்து வருமாறு சைகை மொழியில் கிரீன்வுட்டைக் அழைக்கிறார்.
இதைக் கண்டு மிகுந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்த கிரீன்வுட் புன்னகையுடன் தனது தலையை அசைத்து அவளை நோக்கிச் செல்ல விழைகையில் படம் நிறைகிறது.
ஸ்டட்டர் குறும்படம் தன் எளிய கதைக் களத்தின் மூலம் உலக மனிதர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான சில வாழ்வியல் செய்திகளை மிக அழுத்தமாக உணர்த்துகிறது.
இப்படத்தின் முதல் செய்தி,
ஒரு மனிதனின் உண்மையான ஆளுமையையும் அவனது அறிவுத் திறனையும் அவனது வெளிப்படையான பேச்சை அல்லது குறைபாட்டை மட்டும் வைத்து ஒருபோதும் எடைபோடக் கூடாது என்பதாகும்.
கிரீன்வுட் வெளியே பேசுவதற்குத் தடுமாறினாலும் அவனது உள்மனச் சிந்தனைகள் மிகவும் ஆழமானதாகவும் கூர்மையானதாகவும் சமூகத்தின் மீதான அக்கறை கொண்டதாகவும் இருப்பதை படம் நமக்குக் காட்டுகிறது.
பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள் அகம் சார்ந்த தங்களின் திறமைகளில் எவ்வளவு சிறந்தவர்களாக விளங்குகிறார்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது.
அடுத்த செய்தி மாற்றுத்திறனாளிகள் அல்லது ஏதேனும் ஒரு குறைபாடு உள்ளவர்களிடம் நாம் காட்டும் பொறுமையின் அவசியம் பற்றியதாகும் .
படத்தின் தொடக்கத்தில் ஒரு பில் பிரச்சனையைப் பேச முயலும் கிரீன்வுட்டை மறுமுனையில் இருப்பவர் அவசரப்பட்டு இணைப்பைத் துண்டிப்பது போன்ற செயல்கள் அவர்களின் மனதை எவ்வளவு காயப்படுத்துகின்றன என்பதை இது சுட்டிக்காட்டுகிறது .
அத்தகைய மனிதர்களுக்குச் சமூகம் தேவையற்ற பரிதாபத்தையோ அல்லது உதாசீனத்தையோ காட்டாமல் அவர்களுக்குத் தேவையான நேரத்தையும் பொறுமையான அணுகுமுறையையும் தர வேண்டும் என்ற செய்தியை இப்படம் வலியுறுத்துகிறது.
தன் மீதுள்ள குறைபாடுகளை எண்ணிப் பயந்து தற்காப்பு வளையத்திற்குள் சுருங்கிவிடாமல் தடைகளை உடைத்து முன்னோக்கி நகர்வதே வாழ்வின் வெற்றிக்கான வழி என்ற செய்தியையும் இப்படம் தருகிறது .
எல்லியைச் சந்திக்க அஞ்சும் கிரீன்வுட் பின்னர் ஒரு கணத்தில் தெளிவு பெற்று அவளை எதிர்கொள்ளத் துணிவது அவனது நம்பிக்கையைக் காட்டுகிறது.
நாம் எதற்கு அஞ்சி ஓடுகிறோமோ அதை தைரியமாக எதிர்கொள்ளும் போதுதான் நமக்கான மகிழ்ச்சியான எதிர்காலம் அமையும் என்பதை கிரீன்வுட்டின் முடிவு நமக்கு உணர்த்துகிறது.
மனிதர்களுக்கு இடையே உள்ள உண்மையான அன்பும் பிணைப்பும் வெறும் வார்த்தைகளைச் சார்ந்தது அல்ல என்ற மிக உயரிய செய்தியை இப்படம் நமக்குத் தருகிறது .
ஒருவர் பேசத் தடுமாறும் டைபோகிராபர் மற்றொருவர் கேட்கத் திணறும் செவித்திறன் குறைபாடுடையவர் என இரு துருவங்களாக இருந்தாலும் அவர்களின் மனம் சார்ந்த புரிதலும் எல்லியின் அன்பான புன்னகையும் கைகுலுக்கலும் அனைத்துத் தடைகளையும் தகர்த்து விடுகின்றன.
உலகளாவிய மொழியான அன்பும் பரஸ்பரப் புரிதலும் இருந்தால் எந்தவொரு மனிதரும் மிக எளிதாக ஒன்றிணைந்து வாழ முடியும் என்ற நேர்மறையான செய்தியுடன் இத்திரைப்படம் நிறைவடைகிறது
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்