ஃபீஸ்ட் Feast ஆங்கில அனிமேஷன் காதல் நகைச்சுவை குறும்படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது.
இந்தத் குறும்படத்தை பேட்ரிக் ஆஸ்போர்ன் இயக்கியுள்ளார். வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்த குறும்படம் விண்ஸ்டன் என்ற போஸ்டன் டெரியர் வகை நாய் மற்றும் அதன் உரிமையாளர் ஜேம்ஸ் ஆகியோருக்கு இடையே உணவின் மூலம் ஏற்படும் பிணைப்பை அழகாக விவரிக்கிறது.
ஜேம்ஸ் ஒரு உணவகத்தில் பணிபுரியும் கிர்பி என்ற பெண்ணை காதலிக்கும்போது அவர்களின் வாழ்க்கையிலும் உணவிலும் ஏற்படும் மாற்றங்களை நாயின் பார்வையில் இருந்து இந்த குறும்படம் சுருக்கமாக விளக்குகிறது.
இக்குறும்படத்தின் அடிநாதம் அன்பு, உறவு மற்றும் மனித உணர்வுகளை உணவின் வழியாகவும், ஒரு செல்லப் பிராணியின் பார்வையிலிருந்தும் விவரிப்பதாகும்.
தன் எஜமானின் மகிழ்ச்சி எது என்பதில் ஒரு நாய் காட்டும் நிபந்தனையற்ற அன்பே இப்படத்தின் மையக்கரு.
ஆரம்பத்தில் தனக்குக் கிடைக்கும் சுவையான உணவுகளுக்காக மட்டுமே எஜமானோடு ஒட்டி வாழும் விண்ஸ்டன் என்ற நாய், ஒரு கட்டத்தில் தன் எஜமானின் காதல் தோல்வியையும் அவனது ஆழ்ந்த சோகத்தையும் உணர்கிறது.
தனக்கு பிடித்தமான ஜங்க் ஃபுட் உணவுகளை விட தன் எஜமானின் மகிழ்ச்சியே முக்கியம் என்பதை உணர்ந்து, பிரிந்த காதலர்களைச் சேர்க்க அது எடுக்கும் முயற்சிகளே கதையின் ஆன்மாவாக விளங்குகிறது.
வயிறு நிரம்பும் உணவை விட, மனம் நிரம்பும் அன்பே வாழ்க்கையின் உண்மையான விருந்து என்பதை இக்குறும்படம் நறுக்கென உணர்த்துகிறது.
இப்படத்தில் டாமி ஸ்னைடர், கேட்டி லோவ்ஸ், பென் பிளெட்சோ, ஸ்டீவர்ட் லெவின், பிராண்டன் ஸ்காட் மற்றும் ஆடம் ஷாபிரோ ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.
பேட்ரிக் ஆஸ்போர்ன் இயக்கிய முதல் படம் இது, இதற்கு நிக்கோல் மிட்செல் மற்றும் ரேமண்ட் எஸ் பெர்சி ஆகியோர் கதையமைத்துள்ளனர்.
இப்படத்தின் காட்சி அமைப்பு மற்றும் அனிமேஷன் பாணி மீண்டர் மற்றும் ஹைபெரியன் ஆகிய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வண்ணமயமாக உருவாக்கப்பட்டது.
கோடுகள் இல்லாத திடமான வண்ண பாணியில் மனிதர்களை மங்கலாகக் காட்டி நாய் மற்றும் உணவின் மீது மட்டுமே கேமரா கவனம் செலுத்துமாறு இதன் ஒளிப்பதிவு காட்சி வடிவமைப்பு அமைந்துள்ளது.
இப்படம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதையும் அன்னி விருதையும் வென்றது.
இயக்குநர் பேட்ரிக் ஆஸ்போர்ன் ஒரு நொடிக்கு ஒரு வீடியோ என்ற செயலியைப் பயன்படுத்தி 2012 ஆம் ஆண்டில் தான் சாப்பிட்ட இரவு உணவுகளைத் தினமும் ஒரு வினாடி வீதம் பதிவு செய்து ஒரு தொகுப்பாக மாற்றியதே இந்த அனிமேஷன் படம் உருவாவதற்கான ஆரம்பப்புள்ளி ஆகும்.
உணவுகளின் காட்சிகளைக் கொண்டு ஒரு நல்ல குறும்படத்தை உருவாக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு இதன் மூலமே தோன்றியது.
அந்த காலகட்டத்தில் பிக் ஹீரோ 6 படத்தின் அனிமேஷன் பிரிவின் இணைத் தலைவராகப் பணியாற்றி வந்த பேட்ரிக் ஆஸ்போர்னுக்கு, டிஸ்னி நிறுவனம் தனது ஊழியர்களுக்காகப் புதிதாகத் தொடங்கிய குறும்பட யோசனைகளைச் சமர்ப்பிக்கும் திட்டம் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.
பிக்ஸார் நிறுவனம் தனது திரைப்படங்களோடு குறும்படங்களை வெளியிடும் வழக்கத்தைக் கொண்டிருந்த போதிலும், டிஸ்னி நிறுவனம் அந்தப் பழக்கத்தை நிறுத்தியிருந்த நிலையில், ஊழியர்களின் திறமைகளை வெளிக்கொணர இந்த புதிய பிட்ச்சிங் முறையை முறைப்படி அறிமுகப்படுத்தியது.
தன் குடும்பத்தின் கதையை ஒரு செல்ல நாயின் பார்வையில் அது உண்ணும் உணவுகளின் வழியே சொல்லும் இந்த சுவாரஸ்யமான கதையை பேட்ரிக் டிஸ்னி நிறுவனத்திடம் சமர்ப்பித்தார்.
அக்டோபர் 2013 இல் இந்தத் திட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாகப் அனுமதி கிடைத்தது. அனெசி சர்வதேச அனிமேஷன் திரைப்பட விழாவில் இதனைத் திரையிட வேண்டும் என்ற இலக்குடன் பணிகள் மிக வேகமாக முடுக்கிவிடப்பட்டன.
இறுதியாக விழா தொடங்குவதற்கு வெறும் மூன்று நாட்களுக்கு முன்புதான் இதன் முழுப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
அதுமட்டுமின்றி, பேட்ரிக் ஆஸ்போர்ன் இயக்குநராகக் களம் இறங்கிய முதல் திரைப்படமாகவும் இது அமைந்தது.
இப்படத்தில் வரும் நாய்க்குட்டியாக போஸ்டன் டெரியர் வகையைத் தேர்ந்தெடுத்ததற்குக் குறிப்பிட்ட காரணங்கள் இருந்தன.
டிஸ்னியின் முந்தைய படங்கள் எதிலுமே இடம் பெறாத ஒரு புதிய நாய் இனமாக இது இருக்க வேண்டும் என்று படக்குழுவினர் விரும்பினர்.
மேலும், அந்த நாய் அளவில் சிறியதாக இருந்தால் மட்டுமே அதனை எளிதாக நாற்காலியின் மீது தூக்கி உட்கார வைக்கவும், பின்னர் கீழே இறக்கி விடவும் முடியும் என்ற திரைக்கதை வசதிக்காகவும் இந்த இனம் தேர்வு செய்யப்பட்டது.
கோடுகள் இல்லாத திடமான தட்டையான வண்ண பாணியில் படம் உருவாக்கப்பட்டதால், போஸ்டன் டெரியர் நாயின் உடலில் உள்ள பிரத்யேகமான அடையாளக் குறிகள், அதன் மெல்லிய அசைவுகளைக்கூட பார்வையாளர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள பெரிதும் உதவின.
படத்தில் பல சுருக்கமான காட்சிகள் அடுத்தடுத்து வெட்டப்பட்டு நகர்வதால், காட்டப்படும் உணவுகள் அனைத்தும் பார்த்த உடனே பசியைத் தூண்டும் வகையிலும், நொடிப் பொழுதில் அடையாளம் காணும் வகையிலும் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டன.
இப்படத்தின் அனிமேஷன் உருவாக்கத்தில் முந்தைய பேப்பர்மேன் குறும்படத்திற்காக உருவாக்கப்பட்ட மீண்டர் (Meander) தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்பட்டது.
ஆனால், வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த மீண்டர் தொழில்நுட்ப கருவியை முழுமையான வண்ணமயமான காட்சி அமைப்பிற்காகப் பயன்படுத்தியது இக்குறும்படத்தில்தான் என்பது ஒரு முக்கிய மைல்கல்.
மேலும், பிக் ஹீரோ 6 திரைப்படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஹைபெரியன் (Hyperion) என்ற அதிநவீன ரெண்டரிங் அமைப்பைக் கொண்டே இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் நேர்த்தியாகக் கணினியில் வடிவமைக்கப்பட்டன.
கதையின் போக்கிற்கு ஏற்ப கேமராவின் கவனம் முழுவதும் நாய் விண்ஸ்டன் மற்றும் அதன் உணவுகளின் மீதே இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது.
இதனால் காட்சிகளில் வரும் மனிதர்களின் முகங்கள் மற்றும் உருவங்கள் பொதுவான பார்வையில் மங்கலாகவே வைக்கப்பட்டன.
எப்போது விண்ஸ்டன் உணவை விடுத்து மனிதர்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்குகிறதோ, அப்போது மட்டுமே மனித கதாபாத்திரங்கள் திரையில் தெளிவாகத் தெரியும்படி ஒரு புதுமையான உத்தி கையாளப்பட்டது.
அனெசி விழாவில் திரையிடப்பட்டபோது, இதன் தொழில்நுட்ப நேர்த்தியைக் கண்டு வியந்த திரையரங்கக் கூட்டத்தினர், கைதட்டல்களோடு நில்லாமல் தங்களின் கால்களால் தரையைத் தட்டி அதிரவைத்து தங்களின் பேராதரவை வெளிப்படுத்தினர்,
இது விழாக்களிலேயே மிக அரிதான ஒரு சுவாரஸ்யமான வரவேற்பாகும்.
இத்திரைப்படம் திரையரங்குகளில் பிக் ஹீரோ 6 திரைப்படத்துடன் இணைந்து வெளியாகி உலகெங்கும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்த பிறகு, அதன் இல்ல ஊடக வடிவிலும் பல சுவாரஸ்யமான வெளியீடுகளைப் பெற்றது.
ப்ளூ-ரே மற்றும் டிவிடி வடிவங்களில் இப்படம் வெளியானதோடு, டிஜிட்டல் தளமான ஐடியூன்ஸ் மூலமும் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இதனை ரசிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் மிகச்சிறந்த குறும்படங்களின் தொகுப்புப் பதிப்பிலும் இது பெருமையுடன் சேர்க்கப்பட்டு வெளியானது.
உலகளாவிய அளவில் விமர்சகர்களிடம் இருந்து தடையற்ற பாராட்டுகளைப் பெற்ற இக்குறும்படம், திரைத்துறையின் மிக உயரிய அங்கீகாரங்களை அடுத்தடுத்து வென்று சாதனை படைத்தது.
அனிமேஷன் உலகிற்கான 3டி கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் விருது மற்றும் 42வது அன்னி விருது விழாவில் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை இது தட்டிச் சென்றது.
இதன் உச்சகட்டமாக, 87வது அகாடமி விருது விழாவில் பேட்ரிக் ஆஸ்போர்ன் மற்றும் தயாரிப்பாளர் கிறிஸ்டினா ரீட் ஆகியோருக்கு சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
ஒரு எளிய மொபைல் செயலியின் யோசனையில் தொடங்கி, உலக சினிமாவின் மிக உயரிய ஆஸ்கார் மேடை வரை இந்த அனிமேஷன் படம் பயணித்ததே இதன் சுவாரஸ்யமான வரலாறாகும்.
படத்தின் கதை:-
ஒரு தெருவில் அலைந்து திரிந்து கொண்டிருந்த ஒரு போஸ்டன் டெரியர் குட்டி நாய் தரையில் கிடந்த துரித உணவு உறைகளை நக்கிக் கொண்டிருக்கிறது.
அப்போது தரையில் விழுந்த ஒரு பிரெஞ்ச் பிரைஸை அது பார்த்து அதை சாப்பிடுகிறது. அந்த பிரைஸைக் கீழே போட்ட ஜேம்ஸ் (டாமி ஸ்னைடர்) என்ற மனிதன், அந்த நாய் குட்டிக்கு இரண்டாவது பிரைஸை வழங்கி, அதைத் தன் செல்லப் பிராணியாக வளர்க்க முடிவு செய்கிறான்.
அதற்கு விண்ஸ்டன் என்று பெயரிடும் ஜேம்ஸ், அதற்கு வழக்கமான நாய் உணவோடு சேர்த்து தன் உணவின் பகுதிகளையும் ஜங்க் ஃபுட் எனப்படும் நொறுக்குத் தீனிகளையும் கொடுக்கத் தொடங்குகிறான்.
ஒரு நாள், ஜேம்ஸ் உள்ளூர் உணவகம் ஒன்றில் பணிபுரியும் கிர்பி (கேட்டி லோவ்ஸ்) என்ற பெண் உழைப்பாளியுடன் காதலில் விழுகிறான்.
அவள் ஜேம்ஸை ஆரோக்கியமான உணவு முறைக்கும் வாழ்க்கை முறைக்கும் மாறும்படி வற்புறுத்துகிறாள்.
ஆனால் இந்த மாற்றம் விண்ஸ்டனுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏனென்றால் ஜேம்ஸ் அதற்குத் திருட்டுத்தனமாகக் கொடுக்கும் மிச்ச உணவுகள் அனைத்தும் காய்கறிகளாக இருக்கின்றன, அவை விண்ஸ்டனுக்கு சுத்தமாகப் பிடிப்பதில்லை.
எனினும், ஒரு பெரிய வாக்குவாதத்திற்குப் பிறகு அந்தக் காதல் ஜோடி பிரிந்துவிடுகின்றனர்.
இதனால் ஜேம்ஸ் ஆழ்ந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி, மீண்டும் தனது பழைய மோசமான உணவுப் பழக்கத்திற்கே மாறுகிறான்.
ஆரம்பத்தில் விண்ஸ்டன் தனக்கு மீண்டும் ஜங்க் ஃபுட் உணவுகள் கிடைப்பதால் மிகுந்த உற்சாகமடைகிறது.
ஆனால், சீக்கிரமே அது ஜேம்ஸின் சோகமான மனநிலையைக் கவனித்து உணர்கிறது. ஜேம்ஸும் கிர்பியும் சேர்ந்து சமைத்த உணவுகளையும் அவளையும் நினைவூட்டும் ஒரு பார்ஸ்லி இலையைக் காணும் விண்ஸ்டன், அவர்களை மீண்டும் சேர்த்து வைக்க முடிவு செய்கிறது.
அந்த இலையைத் கவ்விக்கொண்டு திருடி ஓடும் விண்ஸ்டன், வழியில் இருக்கும் பல சுவையான உணவுகளின் சோதனைகளைக் கடந்து கிர்பியிடம் கொண்டு சேர்க்க முயல்கிறது.
இதனால் ஒரு துரத்தல் ஆட்டம் ஆரம்பமாகிறது. விண்ஸ்டனைப் பின்தொடர்ந்து அந்த உணவகத்திற்கு வரும் ஜேம்ஸ், அங்கே கிர்பியுடன் சமரசம் செய்து கொள்கிறான்.
அவர்கள் இருவரும் விரைவில் திருமணமும் செய்து கொள்கிறார்கள். தன் எஜமான் மீண்டும் மகிழ்ச்சியாக இருப்பதை எண்ணி நிம்மதியடையும் விண்ஸ்டன், ஆரம்பத்தில் சாதாரண நாய் உணவை மட்டும் சாப்பிட்டு திருப்தியடைகிறது.
சில காலத்திற்குப் பிறகு, அந்தத் தம்பதியினர் ஒரு புதிய வீட்டிற்குத் குடியேறுகிறார்கள். அங்கே சமையலறைத் தரையில் உருண்டு ஓடும் இரண்டு மீட்பால்ஸ் இறைச்சி உருண்டைகளை விண்ஸ்டன் பார்த்து அவற்றைச் சாப்பிடுகிறது.
அவை விட்டுச் சென்ற சாஸ் தடங்களைப் பின்தொடர்ந்து செல்லும் அது, அந்தத் தம்பதியரின் குழந்தை அமர்ந்திருக்கும் ஒரு உயரமான நாற்காலியின் அடிப்பகுதியை அடைகிறது.
அந்த குழந்தை மகிழ்ச்சியுடன் மற்றொரு இறைச்சி உருண்டையை விண்ஸ்டனை நோக்கி வீசுகிறது.
படம் முடியும் தருவாயில், விண்ஸ்டன் மீண்டும் ஒருமுறை தன் எஜமானின் மிச்ச உணவுகளைப் பெருந்தீனியாகச் சாப்பிடத் தொடங்குகிறது.
எஜமானின் குழந்தையின் முதலாவது பிறந்த நாள் விழாவில் வைக்கப்பட்டிருக்கும் கப்கேக்குகளை அது மிகுந்த மகிழ்ச்சியோடு அள்ளி விழுங்குவதுடன் இக்குறும்படம் நிறைவடைகிறது.
குறும்படம் நமக்கு உணர்த்தும் முக்கியச் செய்தி நிபந்தனையற்ற அன்பும், பிறரது மகிழ்ச்சிக்காகத் தியாகம் செய்யும் குணமுமே வாழ்க்கையை முழுமையாக்குகிறது என்பதாகும்.
மனிதர்களாகிய நாம் பல நேரங்களில் சுயநலத்தோடு வாழ பழகியிருக்கிறோம். ஆனால், தன் எஜமானின் உண்மையான மகிழ்ச்சி அவனது காதலியோடு இருக்கும்போதுதான் கிடைக்கிறது என்பதை உணர்ந்த அந்தச் செல்லப் பிராணி, தனக்கு மிகவும் பிடித்தமான உணவுகளை விட தன் எஜமானின் மன அமைதிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.
தனது சொந்த விருப்பு வெறுப்புகளை சுவையான உணவுகளை ஓரங்கட்டிவிட்டு, தன் எஜமானின் வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியைக் கொண்டுவர அது துணிச்சலோடு செயல்படுகிறது.
நம்மைச் சுற்றியுள்ளவர்களின் மகிழ்ச்சியில் நம் மகிழ்ச்சியைக் காண்பதே உண்மையான அன்பு என்ற உன்னதமான செய்தியை இக்குறும்படம் அழகாக விவரிக்கிறது.