இந்திய சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அஸ்தித்வா திரைப்படம் மற்றும் பியர் அண்ட் ஜீன் நாவல்

மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் 2000-ம் ஆண்டு வெளியான 'அஸ்தித்வா' திரைப்படம், இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான சமூகச் உளவியல் சித்திரங்களில் முக்கியமானதாகும். இத்திரைப்படம் இந்தி மற்றும் மராத்தி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது. 

2000-ம் ஆண்டிற்கான சிறந்த மராத்தி மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருதை இப்படம் வென்று சாதனை படைத்தது.
இப்படத்தில் நடிகை தபு, அதிதி பண்டிட் என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் தனது அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருப்பார். அவருடன் இணைந்து சச்சின் கடேகர், மோனிஷ் பால், சுனில் பார்வே, ஸ்மிதா ஜெயகர் மற்றும் ரவீந்திர மன்கானி ஆகியோர் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு பெண், தனது சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தை இப்படம் மிக நுணுக்கமாக விவரிக்கிறது.

 'அஸ்தித்வா' திரைப்படத்தின் கதையானது பிரெஞ்சு எழுத்தாளர் கை டி மாப்பசான் (Guy de Maupassant) எழுதிய "பியர் அண்ட் ஜீன்" (Pierre and Jean) என்ற புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. 

அஸ்தித்வா திரைபடத்தின் கதை:-

'அஸ்தித்வா'   ஆணாதிக்கம், திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மற்றும் குடும்ப வன்முறை போன்ற ஆழமான சமூகச் சிக்கல்களை மையமாகக் கொண்டது. இது ஒரு பெண் தனது திருமண பந்தத்திற்கு வெளியே, ஒரு தனி மனிதராகத் தனது அடையாளத்தைக் கண்டறியும் போராட்டத்தை விவரிக்கிறது.

 கதை 1997-ல் தொடங்குகிறது. மல்ஹார் காமத் (மோனிஷ் பால்) என்ற  இசை ஆசிரியரும் இசைக் கலைஞரும் மரணப் படுக்கையில் இருக்கும்போது தனது உயிலைத் தயார் செய்கிறார்.

 அதில் ஒரு பெரிய ஹவேலி (Mansion), 1.5 ஏக்கர் (6,100 சதுர மீட்டர்) நிலம், 1,400 கிராம் தங்கம் மற்றும் சுமார் 8,60,000 ரூபாய் ரொக்கம் எனத் தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் அதிதி ஸ்ரீகாந்த் பண்டிட்டிற்கு (தபு) எழுதி வைக்கிறார். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்ததும், அந்த உயில் முறைப்படி அதிதிக்கு விநியோகிக்கப்படுகிறது.
புனேவில் இருக்கும் அதிதிக்கு இந்த உயில் கிடைக்கும்போது, அவர் ஒரு தற்செயலான பார்ட்டியில் இருக்கிறார். ஸ்ரீகாந்த் பண்டிட்டின் (சச்சின் கடேகர்) நெருங்கிய நண்பரான டாக்டர் ரவி பாபட் (ரவீந்திர மன்கானி) மற்றும் அவரது மனைவி மேக்னா (ஸ்மிதா ஜெயகர்) ஆகியோர் அங்கு வந்துள்ளனர். 

அதிதி மற்றும் ஸ்ரீகாந்தின் ஒரே மகனான அனிகேத் (சுனில் பார்வே), தனது காதலி ரேவதியை (நம்ரதா ஷிரோத்கர்) அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். அந்தச் சான்றளிக்கப்பட்ட உயில் பாக்கெட் அதிதியின் பெயருக்கு வந்திருந்தாலும், மேக்னாவின் அதிருப்திக்கும் ரவியின் வியப்பிற்கும் இடையில் ஸ்ரீகாந்த் அதைத் திறந்து பார்க்கிறார்.

 ஆர்வமடைந்த ஸ்ரீகாந்த், 25 ஆண்டுகளுக்கு முந்தைய தனது டைரிக் குறிப்புகளைப் புரட்டுகிறார். அதில் தனது அன்றாட நிகழ்வுகளை அவர் துல்லியமாகக் குறித்து வைத்திருந்தார். 

அந்த காலகட்டத்தில் தான் வேலை விஷயமாகத் தொடர்ந்து பயணங்களில் இருந்ததால், அதிதி தன்னிடம் இருந்து கர்ப்பமடைந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை அவர் உணர்கிறார். டைரியை அதிதியிடம் காட்டி, உண்மையைச் சொல்லுமாறு வற்புறுத்துகிறார்.

கடந்த கால நினைவுகளில்  ஸ்ரீகாந்த் தனது நிறுவனத்தில் ஒரு வளரும் நட்சத்திரமாக, சொந்தமாகத் தொழில் தொடங்கத் துடிக்கும் வேகத்தில் இருப்பது காட்டப்படுகிறது. அவரது வேலை அவரை எப்போதும் பயணங்களிலேயே இருக்க வைக்கிறது. இது புதிதாகத் திருமணமான அதிதியை மிகுந்த தனிமையிலும் விரக்தியிலும் ஆழ்த்துகிறது.

 தனது சலிப்பைப் போக்கிக்கொள்ள ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்ல அனுமதி கேட்டபோது, அதைத் தனது கௌரவத்திற்கு இழிவாகக் கருதும் ஸ்ரீகாந்த், தங்கள் குடும்பப் பெண்கள் யாரும் வெளியே வேலைக்குச் சென்றதில்லை என்று கூறி மறுக்கிறார். 

அதற்குப் பதிலாக அவர் சற்றே தயக்கத்துடன் இசையைக் கற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார். மல்ஹார் காமத் இசை ஆசிரியராக வருகிறார். ஸ்ரீகாந்த் தனது உலகப் பயணங்களைத் தொடர்கிறார், இசை என்பது அதிதிக்கு ஒரு பொழுதுபோக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை மல்ஹாரிடம் தெளிவுபடுத்துகிறார்.

அதிதியின் அக்கா சுதா (ரேஷம் திப்னிஸ்) மற்றும் அவரது கணவர் அங்கு வந்து தங்குவது, அவர்களின் நெருக்கம் அதிதியின் தனிமை மற்றும் ஏக்க உணர்வை மேலும் ஆழப்படுத்துகிறது. ஒரு வசந்த கால மதிய வேளையில், மழையின் பின்னணியில் மல்ஹார் ஒரு புதிய கஸல் பாடலைப் பாடும்போது, அந்தச் சூழலால் ஈர்க்கப்பட்ட அதிதி தனது நிதானத்தை இழந்து மல்ஹாருடன் இணைகிறார்.

 இரண்டு நாட்களுக்குப் பிறகு மல்ஹார் மீண்டும் வந்தபோது, தான் ஸ்ரீகாந்தை மட்டுமே நேசிப்பதாகக் கூறி அவரை வெளியேறச் சொல்கிறார். அதிதிக்குத் மாதவிடாய் தள்ளிப் போகிறது. இதை அறிந்த சுதா, இதைப் பற்றி ஏதேனும் செய்யுமாறு அறிவுறுத்துகிறார்.

 ஸ்ரீகாந்த் வீடு திரும்பும்போது அதிதி உடைந்து போய் உண்மையைச் சொல்ல முயல்கிறார். ஆனால், அதே சமயம் ஸ்ரீகாந்த் தனது நிறுவனத்திற்கு ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைத்த மகிழ்ச்சியில் இருப்பதாலும், தந்தை ஆகப்போகும் செய்தியைக் கேட்ட உற்சாகத்தினாலும் அதிதியை மேற்கொண்டு பேச விடாமல் கொண்டாட்டங்களில் மூழ்கடிக்கிறார்.

கதை மீண்டும் நிகழ்காலத்திற்கு வரும்போது, ஸ்ரீகாந்த் அதிதியைத் தண்டிக்கும் நோக்கில் அனிகேத், ரவி மற்றும் மேக்னா முன்னிலையில் அந்த உண்மையைச் சொல்ல வைக்கிறார். 

மேக்னா தனது முன்னாள் குடிகாரக் கணவரிடமிருந்து குடும்ப வன்முறையை அனுபவித்து, பின்னர் விவாகரத்து பெற்று ரவியைத் திருமணம் செய்தவர் என்பதால் ஸ்ரீகாந்தின் இச்செயலை வெறுக்கிறார். 

தனது தந்தை யார் என்ற உண்மையை அறிந்த அனிகேத் தனது தாயை அருவருப்புடன் பார்க்கிறான். ரவி ஸ்ரீகாந்தை எதிர்கொண்டு, அவரது பல கள்ளத்தொடர்புகளைச் சுட்டிக்காட்டுகிறார். 

 ஸ்ரீகாந்த் தனது செயல்களை மறுக்காமல், தான் ஒரு ஆண் என்றும், அந்த உறவுகள் மூலம் பிறந்த குழந்தைகளைத் தான் வீட்டிற்கு அழைத்து வரவில்லை என்றும் கூறி அதை நியாயப்படுத்துகிறார்.

 ஸ்ரீகாந்த் அதிதியுடன் ஒரே வீட்டில் வாழலாம், ஆனால் அவர்களுக்குள் எந்த உறவும் இருக்காது என்று முடிவெடுக்கிறார். ரேவதி உண்மையை அறிந்ததும், அனிகேத்தும் அவனது வளர்ப்புத் தந்தையைப் போன்ற ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவன் என்பதை உணர்ந்து தனது நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்கிறார்.

மேக்னா அதிதியைத் தன்னுடன் கோவாவிற்கு அழைத்துச் செல்ல முன்வருகிறார், ஆனால் அதிதி அதை மறுக்கிறார். வீட்டை விட்டு வெளியேறும் முன், தனது கணவன் மற்றும் மகனைத் தனது பேச்சைக் கேட்குமாறு கட்டாயப்படுத்துகிறார். 

தனது பலவீனம் பாவமாகக் கருதப்படுவதையும், ஸ்ரீகாந்தின் பலவீனங்கள் எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுவதையும் அவர் கேள்வி எழுப்புகிறார். மேலும், ஸ்ரீகாந்திற்கு ஆண்மைக்குறைவு இருந்த ரகசியத்தை அங்கே பொதுவில் வெளிப்படுத்துகிறார். ஸ்ரீகாந்தால் ஒருபோதும் குழந்தையைப் பெற்றிருக்க முடியாது என்றும், அப்படி இருக்கையில் தான் எப்படி குடும்பத்தாரால் மலடி என்று முத்திரை குத்தப்பட்டிருக்கவும் கூடும் என்றும் கேட்கிறார். 

அனிகேத் இன்று உயிருடன் இருப்பதற்கே தனது தாய் அன்று கருக்கலைப்பு செய்யாததுதான் காரணம் என்று ரேவதி அனிகேத்தைக் கண்டிக்கிறார். 

இறுதியில், அதிதியும் ரேவதியும் அந்த வீட்டை விட்டு வெளியேறிச் சாலையில் நடக்க, ஸ்ரீகாந்தும் அனிகேத்தும் வாசலில் நின்று அவர்களைப் பார்ப்பதுடன் அந்தப் படம் 'அஸ்தித்வா' நிகழ்காலம்  என்பதன் உண்மையான சாராம்சத்தைப் பிரதிபலிக்கிறது.

'பியர் அண்ட் ஜீன்' மூல நாவலின் கதை ஒரு நடுத்தர வர்க்க பிரெஞ்சு குடும்பத்தைப் பற்றியது.

 தந்தை ஜெரோம் ஒரு ஓய்வுபெற்ற நகைக்கடைக்காரர், தாய் லூயிஸ் ஒரு அன்பான இல்லத்தரசி. இவர்களுக்கு பியர் மற்றும் ஜீன் என்ற இரண்டு மகன்கள். பியர் ஒரு மருத்துவர், ஜீன் ஒரு வழக்கறிஞர். எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கும்போது, இவர்களது குடும்ப நண்பர் லியோன் மரேச்சல் என்பவர் இறந்து போகிறார். அவர் தனது உயிலில் மொத்தச் சொத்தையும் இளைய மகன் ஜீனுக்கு மட்டுமே எழுதி வைக்கிறார்.
இந்தச் சொத்து வந்தவுடன் அண்ணன் பியரின் மனதில் ஒரு சந்தேகம் எழுகிறது. "குடும்ப நண்பர் என்றால் இருவருக்கும் அல்லவா சொத்து கொடுத்திருக்க வேண்டும்? ஏன் தம்பிக்கு மட்டும் கொடுத்தார்?" என்று யோசிக்கிறார். இந்தத் தேடல் அவரைத் தன் தாயின் ஒழுக்கத்தின் மீது சந்தேகப்பட வைக்கிறது. ஒரு கட்டத்தில், தனது தாய் லூயிஸுக்கும் அந்த நண்பர் மரேச்சலுக்கும் இடையே திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்ததையும், ஜீன் அந்த நண்பருக்குப் பிறந்த மகன் என்பதையும் பியர் கண்டுபிடிக்கிறார்.

இந்த உண்மை தெரிந்ததும் பியர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அவர் தன் தாயை வெறுக்கத் தொடங்குகிறார். குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் நேரங்களில் எல்லாம், தாயின் கடந்த காலத் தவறை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அவரை வார்த்தைகளால் சித்திரவதை செய்கிறார். தாயோ பயத்திலும் குற்ற உணர்ச்சியிலும் நடுங்குகிறார். 

மறுபுறம், சொத்து கிடைத்த தம்பி ஜீனோ தனது வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே போகிறான். ஒரு கட்டத்தில் பியர் பொறுமையிழந்து, "நீ உன்னுடைய தந்தைக்குப் பிறக்கவில்லை" என்ற உண்மையை ஜீனிடம் சொல்லிவிடுகிறான்.
இங்கேதான் கதையின் ஒரு முக்கியமான திருப்பம் நிகழ்கிறது. உண்மையை அறிந்த ஜீன், தனது அண்ணனைப் போலத் தாயை வெறுக்கவில்லை. மாறாக, தன் தாய் இத்தனை காலம் இந்த ரகசியத்தைச் சுமந்து கஷ்டப்பட்டதை உணர்ந்து, அவருக்கு அன்பையும் பாதுகாப்பையும் தருகிறான்.

 இறுதியில், உண்மையைப் பேசிய மூத்த மகன் பியர் அந்தக் குடும்பத்தில் ஒரு அந்நியனாக மாறி, ஒரு கப்பலில் வேலை தேடிக்கொண்டு வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுகிறான்.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு கசப்பான உண்மை வெளிவரும்போது, பணத்திற்காகவும் குடும்ப கௌரவத்திற்காகவும் அந்த உண்மை எப்படி மறைக்கப்படுகிறது என்பதையும், உண்மையைச் சொன்னவனே கடைசியில் வெளியேற்றப்படுவதையும் இந்த நாவல் காட்டுகிறது.

படம் யூட்யூபில் உள்ளது.

த ரெய்ன்கோட் | The Raincoat 2004 | The Gift Of The Maggi | ஜன ஆரண்யா


காலம் சென்ற இயக்குனர் ரிதுபர்ன கோஷின் ரெயின் கோட் திரைப்படம் ,இந்திய கலை சினிமாவின் முக்கியமான படைப்பு, இது எழுத்தாளர் ஓ.ஹென்ரியின் 1906ல் வெளிவந்த The Gift of the Magi என்னும் சிறுகதையைத் தழுவி வெளியான திரைப்படம், ரிதுபர்ன கோஷ் தன் மானசீக ஆசான் சத்யஜித் ரே வின் ஒப்பற்ற படைப்பான , 1976 ஆம் ஆண்டு வெளிவந்த ஜன ஆரன்யா[ஆங்கிலத்தில் The Middleman] வில் இருந்து ஒரு காதல் தோல்வி திரியில் வரும் ஒரு முக்கியமான காட்சியை தன் ரெயின் கோட்டில் எடுத்தாண்டிருக்கிறார்,

ஆனால் இது காப்பி அல்ல ட்ரிப்யூட்.மூலத்தை விடவும் தழுவல் மேம்பட்டு நிற்கையில் அது ட்ரிப்யூட் ஆகிறது, மூலத்தை விடவும் தழுவல் கோணிக்கொண்டு பல் இளிக்கையில் அது காப்பி ஆகிறது,இது தான் வித்தியாசம்.இப்படித்தான் நான் காப்பியையும் ட்ரிப்யூட்டையும் வரையறுக்கப் பழகியுள்ளேன்.

ஜன ஆரண்யா திரைப்படத்தில் ,கொல்கத்தாவின் நகர சூழலில் வேலை தேடி அலுத்துப்போய் காதலியை வேறொருவன் தட்டிக்கொண்டு போவதை தடுக்கமுடியாமல் மனதுக்குள் குமையும் சோம்நாத் [ப்ரதிப் முகர்ஜி] கதாபாத்திரம் தான் ரெயின் கோட் திரைப்படத்தில் ஊரக வங்காளத்தில் படிப்பை முடித்து,வேலை தேடிக்கொண்டிருக்கும் மனு [அஜய் தேவ்கன்]

ஜன ஆரண்யாவில் சோம்நாத் தன் அண்ணி கமலாவை உற்ற தோழி போலவே பாவிக்கிறான், தாயிழந்தவன் மனம் விட்டு அவரிடம் அப்படிப் பேசுகிறான், கமலாவும் தன் கணவன், மாமனாருக்கு தெரியாமல் சோம்நாத்&அபர்னா சென் காதலுக்கு உதவுகிறாள், அபர்னா சென் பெற்றோரின் கட்டாயம் மற்றும் செட்டில் ஆக வேண்டிய சந்தர்ப்பவாதத்தால் ஒரு டாக்டரை மணந்து கொண்டு வெகு தொலைவுக்கு செல்ல நினைக்க, அண்ணி கமலா அவனுக்காக அப்படி வருந்துகிறாள்,

இதே போலவே ரெயின் கோட்டில் காதல் தோல்வியுற்று , சணல் கம்பெனியில் வேலையும் இழந்து,தன் முன்னாள் நண்பர்களிடம் பண உதவி பெற்று புதுவாழ்வை தேட கொல்கத்தா வரும் மனுவுக்கு, நண்பனின் மனைவியான ஷீலா [மவ்லி கங்குலி]அப்படி கரிசனம் காட்டுவார், அஜய் தேவ்கன் மிகுந்த தாழ்வு மனப்பான்மையால் நண்பனின் ஒயிலான அபார்ட்மெண்டில் புழங்க சிரமப்படுவார், இவர் தான் அப்படி ஓடி ஓடி உதவுவார்,மனு டாய்லெட்டில் ஷேவ் செய்கையில் அழுவதை வெளியில் இருந்து உற்றுக் கேட்டவர் , இனி அழும் போது ஷவரை திருகி ஓடவிட்டு அழுமாறு ஆலோசனை சொல்வார், மனு புது தைரியம் பெற்றவர், ஷீலாவிடம் தன் நண்பனுடனான திருமணத்தன்று அவள் ஏன் அப்படி அழுதாள் எனப் புரிகிறது என்று ஷீலாவை மடக்குவார். மிக அருமையான காட்சியாக்கம் அது,மனுவும் நண்பனின் மனைவி ஷீலாவை பாபி என்று தான் அழைப்பார்.
 
இக்காட்சியை சத்யஜித் ரே தன் ஜன ஆரண்யாவில் இப்படி வைத்திருந்தார்,தன் மைத்துனன் சோமநாத் காதல் தோல்விக்காக அண்ணி கமலா மிகவும் வருத்தம் கொண்டு, நாளை அவள் திருமணத்துக்கு போகமாட்டாய் தானே?!!!ஆனால் அவள் தேம்பித் தேம்பிஅழுவதை நீவிரும்புவாய் தானே?!!! கவலைப்படாதே ,அவள் நாளை திருமணத்தின் போது நிறைய அழுவாள்,என்கிறாள்,

சோம்நாத் அண்ணியை நிதானமாகப் பார்த்தவன்.அண்ணி, நீங்கள் ஏன் உங்கள் திருமணத்தின் போது அப்படி அழுதீர்கள் எனப் புரிகிறது!!! என்பான். இரு ஒப்பற்ற படைப்பாளிகள் அவர்கள் இயக்கிய இந்த காட்சியில், கலை அதன் உச்சத்திற்கு உயர்ந்து நிற்கிறது.இந்த இரு படங்களின் கனெக்‌ஷனையும் என்னால் ஆயுளுக்கும் மறக்க முடியாது.

ரெய்ன்கோட் திரைப்படம், தன்னலமற்ற அன்பின் ஆழத்தையும், வறுமையின் பிடியில் சிக்கியவர்களின் மௌனமான போராட்டத்தையும் மையப்படுத்துகிறது. 

வேலை இழந்து, சொந்த தொழில் செய்ய நண்பர்களிடம் பண உதவி கேட்கலாம்  என கல்கத்தா வரும் மனு, தன் முன்னாள் காதலி நீருவைச் சந்திக்கும்போது, ஒருவரின் உண்மையான எதார்த்தத்தை மற்றவர் முன் மறைப்பதற்காக இருவரும் புனைந்துரைக்கும் பொய்களைச் சுற்றியே இக்கதை நகர்கிறது. 

நீரு, தன் பெரிய வீட்டின் ஆடம்பரத்தைக் காட்டி, தான் சந்தோஷமான செல்வந்த வாழ்க்கை வாழ்வதாகச் பல பல பொய்யுரைக்கிறாள்.

 அதேபோல், மனுவும் தான் ஒரு வெற்றிகரமான தொலைக்காட்சி விளம்பர தயாரிப்பாளர் என்று சொல்லி, தன் கையறு நிலையிலிருந்து தன்னை மறைத்துக் கொள்கிறான். 

இந்த உரையாடல், தோற்றத்திற்கும் எதார்த்தத்திற்கும் இடையேயான கூர்மையான வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது. 

மனு நண்பனிடமிருந்து இரவல் பெற்று வந்த மழைக் கோட்டு , இருவரின் உண்மையான வேதனையையும் ஏழ்மையையும் மறைக்க உதவும் ஒரு புற அடையாளமாக மாறுகிறது.

 கதையின் முடிவில், அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டிய பரிதாபத்தினால் அல்லாமல், ஆழமான, தன்னலமற்ற அன்பினால் உந்தப்பட்டு, தங்கள் வசமிருந்த கடைசி மதிப்புமிக்க ஒன்றை துச்சமாக எண்ணி மற்றவருக்காக தியாகம் செய்கிறார்கள். 

தான் கஷ்டப்பட்டுச் சேகரித்த பனிரெண்டாயிரம் ரூபாய் பணத்தை மனு நீருவின் வீட்டு வாடகை நிலுவைக்காகக் கொடுக்கிறான், நீருவோ, பதிலுக்குத் தன் நகைகளை மழைக்கோட்டின்  பையில் வைத்து மனுவுக்கு உதவுகிறாள். இந்த இரட்டைத் தியாகமானது, இருவரின் உறவு முறிந்தாலும், தியாகத்தின் மூலம் வெளிப்படும் அவர்களின் உண்மையான ஆத்மார்த்தமான காதல், எந்தவொரு உலகியல் செல்வத்தையும் விட மேலானது என்பதை உணர்த்துகிறது. 

இது, தனிமனிதர்களின் ஆழ்ந்த உணர்வுகளையும், அவர்களின் தோல்வியுற்ற வாழ்வின் துயரங்களையும் பேசும் ஒரு கலைப் படைப்பாக அமைகிறது.

ஓ. ஹென்றி எழுதிய "தி கிஃப்ட் ஆஃப் தி மேகி" என்ற சிறுகதையை மிக அழகாக இந்திய கொல்கத்தா சூழலுக்கு மாற்றி திரைக்கதை எழுதியிருந்தார் இயக்குனர் ரிதுபர்ன கோஷ்,

 மிகவும் ஏழ்மையில் உள்ள ஜிம் மற்றும் டெல்லா ஆகிய இளம் தம்பதியினரின் தன்னலமற்ற அன்பைச் சொல்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு நாள் முன்பு, டெல்லா தன் கணவன் ஜிம்முக்கு நல்ல பரிசு வாங்க வெறும் $1.87 மட்டுமே கையில் வைத்திருப்பதைக் கண்டு கவலைப்படுகிறாள். 

அந்தக் குடும்பத்தில் இருவரிடமும் இரண்டு பொக்கிஷங்கள் இருந்தன: ஜிம்மிடம் அவரது மூதாதையரிடமிருந்து வந்த அழகிய தங்கக் கடிகாரம் இருந்தது ,அதற்குச் சங்கிலி இல்லை, மேலும் டெல்லாவிடம் தரையில் விழும் அழகான நீண்ட பிரவுன் கூந்தல் இருந்தது அதற்கு ஏற்ற அழகிய சீப்புகள் இல்லை. 

வேறு வழியின்றி, டெல்லா உடனடியாக வெளியே சென்று, தன் கூந்தலை $20-க்கு விற்று, அந்தப் பணத்தைக் கொண்டு ஜிம்முக்காக விலை உயர்ந்த பிளாட்டினம் கடிகாரச் சங்கிலியை வாங்குகிறாள்.

 ஜிம் வீட்டிற்கு வந்தபோது, டெல்லாவின் குட்டையான முடியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்; ஏனென்றால் அவன் தனது தங்கக் கடிகாரத்தை விற்று, டெல்லா ஆசைப்பட்ட அழகிய ஆமை ஓட்டுச் சீப்புகளை வாங்கியிருந்தான். இவ்வாறு, டெல்லாவின் சங்கிலி இப்போது ஜிம்மிடம் இல்லாத கடிகாரத்திற்காக வாங்கப்பட்டது, 

 ஜிம்மின் சீப்புகள் இப்போது டெல்லாவிடம் இல்லாத கூந்தலுக்காக வாங்கப்பட்டது. இந்தக் அவலமான முரண்பாடு இருந்தாலும், ஆசிரியர் ஓ. ஹென்றி, இந்தத் தம்பதியினரை "மேகி" (ஞானிகள்) என்று அழைக்கிறார்; ஏனெனில், தங்கள் அன்பிற்காகத் தங்களிடமிருந்த மிகவும் விலை உயர்ந்தவற்றைத் தியாகம் செய்த இவர்களின் தன்னலமற்ற செயலே, உலகின் மிகச் சிறந்த மற்றும் ஞானம் நிறைந்த பரிசு என்று இக்கதை முடிகிறது.

Paanch | பாஞ்ச் | அனுராக் காஷ்யப்


"Evil is perhaps a child. It will play any game. Like the fictitious Characters in this film, the treacherous waters of felony and crime would need a solvent compassion. This film serves as a Psychological Revelation and a warning to the Society in which urban ambitions and estrangement are ever on the rise." |Anurag Kashyap|

கடந்த 6 வருடங்களுக்கு முன் "பாஞ்ச்" திரைப்படத்தை  பார்த்தும்  எழுதவில்லை,காரணம் அது கொண்டிருந்த கடினமான சரளமான மொழி, இப்போது தான் நல்ல பொருத்தமான சப்டைட்டில் உடன்  படத்தை  என்னால் ஊன்றி உள்வாங்கிப் பார்க்க முடிந்தது.

பொதுவாக, மிகைப்படுத்தப்பட்ட திரைப்படங்கள்,தடை செய்யப்பட்ட திரைப்படங்களை தேடிப் பார்க்கையில்  நாம்  ஏமாற்றமடைந்ததாக உணர்வோம். ஆனால் இது மாற்று குறையாத தங்கம், இந்தித் திரையுலகம் தயாரித்த மிகச் சிறந்த க்ரைம் Noir த்ரில்லர்களில் ஒன்று பாஞ்ச் திரைப்படம்.

சென்சார் இதை ஏன் தடை செய்தனர்? என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை,ஒருவேளை இந்த திரைப்படம் கல்ட் அந்தஸ்தை அடைந்து, இன்றைய இளைஞர்களை புகைபிடிக்கவும், குடித்து நேரத்தை வீணாக்குவதையும் தடுக்கும், என எண்ணி தடை செய்தார்கள் போலும், படத்தில் இளைஞர்களுக்கு செய்தி அத்தனை உறுதியாக சொல்லப்பட்டிருந்தது, 
நமக்கு அப்படி நிஜ பதைபதைப்பைத் தருகிறது என்றால் மிகையில்லை,

 புனேவில் 1976-77 ஆம் ஆண்டுகளில் ஜோஷி-அபியங்கர்  தொடர் கொலைகளை அடிப்படையாக கொண்டு உருவான  தரமான கலை திரைப்படம் பாஞ்ச், புனே எரவாடா சிறையில் 27 நவம்பர் 1983 ஆம் ஆண்டு ஒரே நாளில் நால்வர் தூக்கிலடப்பட்ட சம்பவம் அன்று நாட்டையை திரும்பிப் பார்க்க வைத்தது, 

நிஜக்கொலைகாரர்களான ராஜேந்திர ஜக்கல், திலீப் சுதர், சாந்தாராம் கன்ஹோஜி ஜக்தாப் மற்றும் முனாவர் ஹருன் ஷா என்ற நால்வருடன் சுவாரஸ்யம் கூட்ட வேண்டி ஷுய்லி என்ற ஒரு பெண் கதாபாத்திரத்தையும் சேர்த்து திரைக்கதை புனைந்துள்ளார் இயக்குனர்.

இப்படத்தில்  கேகே மேனன், தேஜஸ்வினி கோலாபுரி, ஆதித்ய ஸ்ரீவத்சவா,ஜாய் ஃபெர்ணான்டஸ், விஜய் மௌர்யா , சரத் சக்ஸேனா என அத்தனை பேரின் நடிப்பும் இயல்பாக அமைந்திருந்தது,   பாலிவுட் வரலாற்றில் இதுவரை உருவாக்கப்பட்ட சிறந்த இசை கோப்பு கொண்ட படம் இது , இசை விஷால் பரத்வாஜ், நம் சதுரங்கவேட்டை நடிகர் மற்றும் ஒளுப்பதிவாளர் நட்டியின்  மிகச்சிறந்த ஒளிப்பதிவில்  மிளிர்கிறது இப்படம், 

 பாஞ்ச் திரைப்படத்தின் கரு, Requiem for a Dream, Trainspotting ஆகியவற்றை நமக்கு  நினைவூட்டுகிறது,ஆனால் தனித்துவமான அடையாளத்துடன் மிளிர்கிறது .

பாஞ்ச் கதை மிகவும் எளிமையானது.  புனே கல்லூரி ஒன்றில் க்ரியேடிவ் ரைட்டிங் இளங்கலை படித்து முடித்து,  வேலை இல்லாத பட்டதாரிகள் ஐவர், இவர்களுக்கு ஒரு இசைக்குழு உண்டு அதன் பெயர் பேரசைட், அதாவது ஒட்டுண்ணி, இந்த பெயருக்கேற்ப ஐவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒட்டுண்ணியாகவே சகித்து வாழ்கின்றனர். இவர்கள் சொற்ப  சம்பளத்துக்காக இரவு மதுபான விடுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் Rock கச்சேரி நடத்துகின்றனர், 

பெரும்பாலான நேரம்  கஞ்ஜா சுருட்டி புகைக்கின்றனர், கஞ்ஜா மற்றும் மதுவுக்காக இவர்களின் சொற்ப சம்பளப் பணம்  முழுதும் செலவிடப்படுகின்றன, சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.  கல்லூரியில் இருந்து  வெளியேறியவர்கள் வேலை தேடுவதில் ஆர்வம் காட்டாமல் கஞ்சா ,மது குடிப்பதில் மட்டும் நேரம் செலவிடுகின்றனர், 

இந்த ஐவர் குழுவில் ஒரு பெண்ணும் அடக்கம் ,அவள் பெயர் ஷிய்லி, அவள் நித்யகல்யாணி, பணமிருக்கும் யாருடனும் நொடியில் ஐக்கியமாகி படுக்கையில் விருந்தாகிறாள், இவர்கள் தங்கியுள்ள மாடி அழுக்கு கோடவுனுக்கு தினமும் ஒரு பணக்கார இளைஞனை அழைத்து வந்து சுகிக்கிறாள், ஐவர் குழுவில் ஒருவனான பாண்டி அவளை ஒருதலையாக விரும்புகிறான், ஆனால் ஷிய்லி அவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, அவள் கயமை, துரோகம், சரசலீலைகள் அத்தனையும் தெரிந்தும் பாண்டி அவளை நிபந்தனைகளின்றி விரும்புகிறான்.

இந்த ஐவருக்கும் தம்  பெற்றோர் உறவினர்களுடன்  எந்த தொடர்பும் இல்லை, இந்த மொட்டை மாடி கோடவுன் இவர்களின் பொதுவான நண்பனான நிர்மல் என்பவனுக்குச் சொந்தமானது, நிர்மலின் அப்பா உணவகம் நடத்துகிறார், மிகவும் கருமி ஆதலால் மகனுக்கு செலவுக்கு சல்லிப் பைசா தருவதில்லை, அவனும் இந்த இசைக்குழுவுக்கு தன்னார்வ தொண்டு செய்கிறான், வாடகை எதுவும் வாங்குவதில்லை. 

இவர்கள் ஐவரும் தம் ராக் இசைக்குழுவுக்கு ஒலி நாடா வெளியிடுவதற்கு ஆசைப்படுகின்றனர், லூக் (கேகே மேனன்) என்பவன் பரம மூர்க்கன்,அறைத்தலைவன்,அவன் அறைக்குள் யாருக்கும் அனுமதியில்லை , நிலையில்லாத எண்ண ஓட்டம் கொண்டவன்,கஞ்ஜா வாங்க பணம் இல்லை என்றால் கஞ்ஜா வியாபாரியையே தாக்கி கஞ்ஜா பொதியை திருடும் துணிவு கொண்டவன், பேருந்தில் பயணச்சீட்டு இன்றி பயணிக்கையில்
நடத்துனருடன் கைகலப்பு ஆகிவிட ,அவரின் கட்டணப்பையில் இருந்து திருடித் தப்புகிற துணிச்சல் காரன் லூக், நல்ல தரமான  இசை ஒலிநாடா வெளியிடுவதற்கு ஐந்து லட்சம் ரூபாய் செலவாகும் என அறிகையில் அதிர்கிறான்.

அவ்வளவு பணத்துக்கு என்ன செய்வது எங்கே திருடுவது என யோசிக்க,நண்பன் நிர்மலே வலிய வந்து தன்னை  கடத்தி அடைத்து  வைத்து  தன் பணக்கார அப்பாவிடம் கொழுத்த பணயத் தொகை  8 லட்சம் ரூபாயை கேட்கும் படி யோசனை தருகிறான், இத்தருணம்  வரை திரைப்படம் நிதானமான வேகத்தில் செல்கிறது.  

ஆனால் நிர்மலின் அப்பா தன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைத்துனர் தேஷ்பாண்டே உதவியை நாடுகையில்  சிக்கலாகிறது, இதனால் கோபமான லூக் நிர்மலின் அப்பாவை மிகவும் அசிங்கமாக திட்ட நிர்மலுக்கு  கோபம் மிகுந்து ஐவரை அறையை காலி செய்து வெளியே போக சொல்லுகிறான், அவன் மூர்க்கன் லூக்கை அசிங்கமாக திட்டி இரும்புக்கழியால் முதலில் தாக்கியது தான் தாமதம்,லூக் ஆத்திரம் முற்றி தன் நண்பன் நிர்மலை கண்மண் தெரியாமல் அந்த இரும்புக் கழியால் தாக்க, நிர்மல் முகம் சிதைந்து இறந்து விடுகிறான், அது முதல் நடக்கும் அனைத்தும் படபடப்பை கூட்டுகின்றன, இடியாப்ப சிக்கலாகின்றன, ஆப்பசைத்த குரங்கு போலாகின்றன.  

சடுதியில் நிகழ்ந்த கொலை மற்றொரு கொலையைக் கேட்கிறது, கொலையை மற்றொரு கொலையால் சமண் செய்ய முடியாது என ஐவர் கடைசி வரை உணருவதில்லை, ஒரு கொலையை மறைக்க அவர்கள் இன்னொரு கொலை செய்ய ,திமு திமுவென பத்து கொலைகள் அரங்கேறிவிடுகின்றன,  கொலையை மூடி மறைக்க இறங்கும்போது நிலைமை மேலும் மோசமாகின்றன.  

இறுதியில்,இவர்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் நம்பாமல் நிர்மலின் தந்தையைக் கொன்று கொள்ளையடித்த பெரும்பணம் 9 லட்சம் ரூபாயை தானே முழுதாக  அனுபவிக்க நினைத்து நம்பிக்கை துரோகம் செய்து கொலை செய்கின்றனர், 

கடைசியில் ஐவரில் எஞ்சியிருந்த முர்கி போலீஸால் சுட்டுக்கொல்லப்படுகிறான், ஷிய்லி பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடியவள் 8 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பின் போலீஸில் பிடிபடுவதுடன் பாஞ்ச் நிறைகிறது. 

 பாஞ்ச் திரைப்படம் யூட்யூப் மற்றும் சில் OTTல் உள்ளது,கே கே மேனனின் அபாரமான ஆற்றல்மிக்க நடிப்பிற்காகவும் தேஜஸ்வினி கோலாபுரியின் அசாதாரணமான நடிப்பிற்காகவும் பாஞ்ச் என்றும் நினைவுகூறப்படும்.  
ஃபைட் கிளப் திரைப்படத்தில் புகழ்பெற்ற டைலர் டைர்டனாக பிராட் பிட்டை நினைவுபடுத்தும் வகையில் கேகே மேனனின் நடிப்பு அமைந்துள்ளது.  

விஷால் பரத்வாஜின் இசை இப்படத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும், 
பாஞ்ச்  பாலிவுட்டின் சீரிய முயற்சியாகும், நேர்த்தியான இயக்கத்தில் புலிப்பாய்ச்சல் பாய்ந்திருந்தார் அனுராக் காஷ்யப்,  பொருத்தமான ராக் இசையை திரைப்படத்திற்கு புனைந்து பயன்படுத்தி நம்பகத்தன்மை கூட்டியிருந்தார்.

திரைப்படத்தில் தரமான மூன்று பாடல்கள்  உள்ளன, ஒன்று "க்யா தின் க்யா ராத்" என்ற Bluesy பாணி இசைக்கோர்வை,1940களின் கிளாசிக் ஜாஸை நமக்கு நினைவூட்டும், 
 
Psychedelic கருப்பொருளான "து ஜா மாத்" நமக்கு Cobain மற்றும் ராக் பாணி இசைக்கோர்வையை நினைவுபடுத்தும் .

"குதா கே லியே" இது Rock on பாணி இசைக்கோர்வை.

 கே கே மேனன் "லூக்" ஆக அத்தனை குருரதையுடன் கூடிய மிடுக்கனாக  தோன்றியுள்ளார், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா  "முர்கி" கதாபாத்திரத்தில் மிகவும் ஈர்க்கிறார் , "ஜாய்" ஆக ஜாய் பெர்னாண்டஸ் ,  "பாண்டி"யாக விஜய் மவுரியா மற்றும் conniving நித்யகல்யாணி கதாபாத்திரத்தில்  தேஜஸ்வினி கோலாபுரி என அபாரமான casting கொண்டுள்ளது பாஞ்ச்.  சரத் சக்சேனா போலீஸ் இன்ஸ்பெக்டராக தனது சிறிய பாத்திரத்திலும் வசீகரிக்கிறார்.

இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு,  கன்னி முயற்சி பாஞ்ச்.முழுக்க  அவருடைய புது முயற்சி. அவரே தயாரிப்பாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் பரிமளித்திருக்கிறார், Black Friday (2004), Dev.D (2009),Gulaal (2009),That Girl in Yellow Boots (2011),Gangs of Wasseypur (2012),Ugly (2014),Raman Raghav 2.0 (2016)
போன்ற தரவரிசையில் முன்னோடியான சினிமா "பாஞ்ச் " என்றால் மிகையில்லை.

சீரியஸ் மேன் | 2020 | நவாஸுதீன் சித்திக்கி | நாசர் |


சீரியஸ்மேன் (2020 )

NIFR ல் காரியதரிசியாக பணிபுரியும் அய்யன் மணி மகாராஷ்டிராவின் உள்ளடங்கிய korti என்ற கிராமத்தில்  ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர், 

இவரது மேலதிகாரி வானசாஸ்திர விஞ்ஞானி அரவிந்த் ஆச்சர்யா, அவர் இப்போது வேற்றுகிரகவாசிகள் பற்றி விரிவான ஆராய்ச்சியை செய்கிறார், அவருக்கு அழகிய பெண் இளம் விஞ்ஞானியிடம் சபலம் உள்ளது,  ஆச்சர்யாவை கிட்டத்தட்ட வேவு பார்க்கிறார் அய்யன்மணி, அவரின் dictations மற்றும் attitude ஐ   அப்படியே பிரதியெடுத்து தன் மகன்  ஆதியை ஒரு child prodigy போன்ற பிம்பத்தை கட்டமைத்து மும்பை தாராவியின் 90 வருட பழமையான chawl ஒன்றில் வாடகைக்கு இருந்தபடி வளர்க்கிறார், 

10 வயது சிறுவன் மீது வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்ட அளவு கடந்த அறிவு பாரம் ,அது சிறுவன் ஆதிக்கும் அய்யன் மணிக்கும் அவர் மனைவிக்கும் எப்படி எதிர்வினையாற்றுகிறது ? என்பதை மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இயக்குனர் சுதிர் மிஸ்ரா இந்திய சினிமாவின் முக்கியமான படைப்பாளி,  இவரின் முந்தைய படங்களான Hazaaron Khwaishein Aisi , Inkaar முக்கியமான படைப்புகள் அந்த வரிசையில் இந்த படத்தையும் வைக்கலாம்.

நவாஸுதீன் சித்திக்கி அய்யன் மணி என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து போராடி மேலே வரத் துடிக்கும் முதல் தலைமுறை கல்வியறிவு பெற்ற குடும்பத் தலைவனாக  அற்புதமாக நடித்துள்ளார், 

நம் நாசர் National Institute of Fundamental Research அரசு நிறுவனத்தின் வானசாஸ்திர விஞ்ஞானியாக அட்டகாசமாக பொருந்துகிறார், சிறிய பெண் சபலம் கொண்ட mediocre விஞ்ஞானி கதாபாத்திரம், இதை அழகாகச் செய்துள்ளார்.

இவர் அய்யன் மணியை நுணுக்கமான ஆங்கில கெட்ட வார்த்தைகளால் திட்டுகையில் அவற்றை அப்படியே பிரதி எடுத்து word building செய்து தன் மகனை கொம்பு சீவி விட்டு  தயார்செய்து கண்காட்சிகள் நடத்துகிறார் அய்யன் மணி, தனக்கும் தன் மகனுக்கும் ஆன இந்த ரகசிய கல்வி பரிமாற்றங்களை தன் பிரிய மனைவிக்கு கூட சொல்வதில்லை அய்யன்மணி, அத்தனையையும் அந்த 200 சதுர அடி chawl ல் இருந்தபடி நடத்துகிறார், தன் மகனின் அறிவை ஊதிப் பெருக்க தன் அரசு சம்பளம் மொத்தத்தையும் செலவு செய்கிறார்.

தன் தாழ்வு மனப்பான்மையை துடைத்தெரிய அய்யன்மணி அரவிந்த் ஆச்சர்யாவின் proxy போலவே நடந்து கொள்ளும் இடங்கள் எல்லாம் அற்புதமானவை.

கலவிக்காட்சிகள் உள்ளதால் இந்தப்படம் வயது வந்தோருக்கு மட்டுமானது, 

அய்யன் மணி தன் ஒடுக்கப்பட்ட குடும்பத்திற்கு கல்வியும் உரிமையும் எத்தனை முக்கியமானது? என விஞ்ஞானி அரவிந்த் ஆச்சார்யாவிடம் விளக்கும் இடம் அற்புதமானது,

"She is too healthy for a farmer girl"

அது ஒரு சர்வதேச விருது பெற்ற கருப்புவெள்ளைப் புகைப்படம், அந்த படத்திற்கு வலுவான ஒரு பின்கதை உள்ளது, அந்த படத்தில் உள்ளது கர்ப்பிணித் தாயார்,மற்றும் அவரது பத்து வயது மகன் , 

அந்த மகன் தான் அய்யன் மணி, அவன் அம்மாவிற்கு இந்த புகைப்படமாவது  இந்த உலகப்புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ராபர்ட் அடிங்டனுக்கு திருப்தி அளிக்க வேண்டும், தன் கணவனுக்கு  பத்தாயிரம் ரூபாய் பணம் கிடைக்க வேண்டும் என்ற பதட்டம் , 

கடந்த இரு வாரமாக புகைப்படத்துக்கு வேண்டிய வறிய தோற்றத்துக்காக ஒட்ட ஒட்ட  பட்டினி இருந்து ஐந்து கிலோ எடை குறைத்து இப்படி புகைப்படத்திற்கு முன் நிற்கிறார், 

அவர் வேண்டியது போலவே புகைப்படத்துக்கு கோபன்ஹாகன் புகைப்பட திருவிழாவில் முதல் பரிசு கிடைத்து இரண்டு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை கிடைக்கவே இவர் அப்பாவுக்கு ராபர்ட் இருபதாயிரம் ரூபாய் தருகிறார், ஆனால் இவர் அம்மா ஊட்டச்சத்து குறைபாட்டால் பிரசவத்தில் மரிக்கிறார்,
பிறந்த ஆண் மகவும் எட்டு மணி நேரத்தில் இறந்து விடுகிறது, 

அந்த இருபதாயிரம் ரூபாய்  பணம் கண்ணை விற்று சித்திரம் வாங்கியது போல ஆகிவிட்டது, இந்த தகிப்பு எல்லாம் சேர்ந்து அய்யன் மணியை இப்படி தன் இலக்கை அடைய எதையும் செய்யும் நிலைக்கு தள்ளியது என்பதை அறிகிறோம்,உறைகிறோம்.

#சீரியஸ்_மேன்,#நவாஸுதீன்_சித்திக்கி,#நாசர்

Train to Pakistan | ட்ரெய்ன் டு பாகிஸ்தான் | குஷ்வந்த் சிங்

"Freedom is for the educated people who fought for it. We were slaves of the English, now we will be slaves of the educated Indians—or the Pakistanis."

Train to pakistan | ட்ரெய்ன் டு பாகிஸ்தான், எழுத்தாளர் குஷ்வந்த் சிங் 1956 ஆம் ஆண்டு எழுதிய நாவலைத் தழுவி 1998 ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழிப்படம், embedded சப்டைட்டிலுடன் யூட்யூபில் காணக்கிடைக்கிறது.
படத்தின் இயக்கம் பமீலா ரூக்ஸ். 

ஹுக்கும் சந்த் (மோகன் அகஸி) என்ற  மாவட்ட மாஜிஸ்திரேட்டின் கண்களில் இருந்து இக்கதை விரிகிறது,
எதோ ஒரு சொல்லப்படாத கலவரத்தில் தன் மனைவி மகளை இழந்து தனிமையில் ஸ்காட்ச் விஸ்கி போதையில் வசிக்கிறார் ஹுக்கும் சந்த், 

அந்த ஊர் மனோ மஜ்ரா அமைதியான கிராமம்  என்பதால் வருடாவருடம் அரசுக்கு குற்றவாளிகளை கணக்கு காட்டுவதற்கு என்றே ஜுகா என்ற ஜுகா சிங்கை மட்டும் ஊருக்குள் விட்டு வைத்திருக்கிறார், அவனுக்கும் பிற ஊர்களின் கொள்ளையர்களுக்கும் அவ்வப்பொழுது சண்டை மூட்டி விட்டு  தொலைவில் இருந்து அந்த கொள்ளையர்களை தன் ஆட்களை நிறுத்தி சுட்டுக் கொன்று அரசுக்கு குற்றவழக்கு கணக்கு காட்டுகிறார்.

ஜுகாசிங்கின் தந்தை ஒரு புரட்சியாளராக இருந்து பிடிபட்டு இவர் தலைமையில் தான் தூக்கிலிடப்பட்டார்.ஜுகாசிங் அன்னமிட்ட தன் ஊரில் கன்னமிடுவதில்லை என்ற கொள்கை உடையவன்.

ஹுக்கும் சந்த் மாலையில் தன் ஆடம்பரமான  ஜல்சாகர் அறையில் இஸ்லாமிய இசை குழு பாடல்கள் பாடி இசைக்க களித்திருக்கிறார், அக்குழுவின் பாடகி அழகிய ஹசினா (திவ்யா தத்தா) இக்கிழவருக்கு ஒரு விருப்பத்துக்குரிய அடிமை போலவே இணக்கத்துடன் நடந்து கொள்கிறாள்.கவலைகள் கொண்ட உள்ளத்தை பாடி,ஆடி சரசகலைகள் செய்து குளிர்விக்கிறாள்.

சமீப காலமாக நடக்கும் பிரிவினை துயர் குற்றங்கள் மாஜிஸ்த்ரேட் ஹுக்கும் சந்த்தை  நிம்மதியாக இருக்க விடுவதில்லை, தன் இறந்து போன மகள் வயது இருக்கும் ஹசீனாவை மணக்கவும் மனமில்லை, அவளுக்கு அடைக்கலம் தரவும் இயலவில்லை, ஊரில் பெரிய பண்ணையாளர்களாக இருக்கும் சீக்கியர்கள் அவ்வூரின் விவசாய நிலங்களில் காலங்காலமாக கூலிவேலை செய்யும் முஸ்லிம்களை நிச்சயம் கொன்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையான செய்தி வருகையில் முஸ்லிம்களை இவர் நிர்கதியாக கைவிடுகிறார், அவர்களை அகதி முகாமுக்கு அனுப்புகிறார் ஹுக்கும் சந்த்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தேசப்பிரிவினைக் காலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில்  பஞ்சாப் மாகாணத்தில்  உள்ள மனோ மஜ்ரா என்ற கற்பனை கிராமத்தில் அது வரை தொப்புள் கொடி உறவாக வசித்த சீக்கியர்களும் முஸ்லீம்களும்  சந்தித்த மதக் கலவரக் கொந்தளிப்பின் கோரமுகத்தின் கதையை நிதர்சனமாக கண்ணுறுகிறோம். 

 பாகிஸ்தானில் இருந்து சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் பிணங்கள்  நிறைந்த ரயில் மனோஜ் மஜ்ரா கிராமத்தின் ரயில் நிலையத்திற்கு ஒன்றன் பின் ஒன்றாக வரும் வரை சீக்கியர்களும் முஸ்லிம்களும் கிராமத்தில் மிகுந்த நல்லிணக்கத்துடன் தான் வாழ்கின்றனர்.
அகதிகளாக விருந்தினராக வருபவர்களுக்கு மனோ மஜ்ரா தன் குருதுவாரா கதவுகளை திறந்தே வைத்திருக்கிறது .

அந்த ரயிலில் வந்த பிணங்களை ஊரின் அமைதி வேண்டி ஊரார் அறியாமல் தொலைவில் காட்டில் வைத்து காதும் காதும் வைத்தது போல கும்பலாக தகனம் செய்து வருகிறார் ஹுக்கும் சந்த், ஆனாலும் வீட்டுக்கூரையில் மேல் உரசிச் செல்லும் தகனப் புகை ஊராருக்கு பீதி கூட்டுகிறது,

பிற கிராமங்களில் மதக்கலவரத்தில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் மண்டை ஓடுகளை சாக்கில் வைத்து அடுக்கி கழுதை மீது ஏற்றி மனோ மஜ்ரா வந்து கலவரத்துக்கு ஆள் திரட்டுகின்றனர் முஸ்லிம்கள், 

அந்த சதியை முறியடித்து அந்த மண்டை ஓடு குழுவை எல்லை தாண்டி கொண்டு விடுகிறார் மாஜிஸ்த்ரேட் ஹுக்கும் சந்த்.

கிராமத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பார்கள் எனக்கருதி ஊருக்குள் அகதியாக வரும் லண்டனில் படித்த கம்யூனிஸ்டான இக்பால் சந்த் (ரஜத் கபூர் ) என்பவரைப் பிடித்து சிறையில் அடைக்கிறார் ஹுக்கும் சந்த், நடிகர் மங்கள் தில்லான் (ஜுனூன் நாடகத்தில் சுமீர் ராஜ் வன்ஷ்) இதில் போலீஸ் இன்பெக்டர் கௌரவ வேடத்தை அழகாக செய்திருந்தார்.

ஊரின் ஒரே கொள்ளையனான ஜுகா என்ற ஜுக்காத் சிங்கை கூட இப்போது (நிர்மல் பாண்டே ) பிடித்து சிறையில் அடைக்கிறார் ஹுக்கும் சந்த், அவனுடைய  அழகிய காதலி நூரான் (ஸ்மரிதி மிஷ்ரா), மதம் தாண்டி ஜுகாவை காதலிக்கிறாள், அவனுடன் அவன் அழைக்கும் போதெல்லாம் கலவி கொண்டு அவன் இரண்டு மாத சிசுவை சுமக்கிறாள் நூரான்,

 நூரானின் தந்தைக்கு கண்பார்வை இல்லை, அவர் ஒரு ஏழை நெசவாளி, அவருக்கு கண் தெரியாது என்பதால் ஜுகா தைரியமாக நூரானின் வீட்டுக்கு வந்து அவளைத் தழுவி முயங்குகிறான், அவர் அப்பா என்ன சப்தம் என கேட்கையில் நூரான் எலி தானிய கூடையை உருட்டுகிறது என்று பொய் சொல்கிறாள், இதே நாவலின் பாதிப்பில் நானும் ஒரு தொழிலாளி திரைப் படத்தில் அம்பிகாவை அவர் கண் தெரியாத அப்பா முன்னாலேயே  புரட்டி எடுப்பார் கமல்ஹாசன் அது உடனே நினைவுக்கு வந்தது.

சில அகதிகளும் எல்லையில் இருந்து மனோ மஜ்ரா கொண்டிருக்கும் மதநல்லிணக்கத்துக்காக அவ்வூருக்குள் படையெடுக்கின்றனர்.  ஆனால் சீக்கிய கிராமவாசிகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கிராமத்தில் இருந்த  முஸ்லிம் குடும்பங்களை மொத்தமாக பாகிஸ்தானுக்கு வெளியேற்ற புதிதாக பிறந்த இந்திய அரசு முடிவு செய்கிறது, ஹுக்கும் சந்த்திற்கு கையறுநிலை.

நேற்றுவரை தாயாய் பிள்ளையாய் பழகியவர்களே இன்று மிருகவெறியுடன் மாற்று மதத்தவரை கொலை கொள்ளை வன்கலவி செய்ய விழைகையில் நடுநடுங்கிப் போகின்றனர்.தெறித்து ஊர் விட்டு எல்லையில் உள்ள அகதிகள் முகாமிற்கு ராணுவ லாரியில் கண்ணீரும் கம்பலையுமாய் தம் காலநடைகள் வீடுகள் பொருட்களை விட்டுவிட்டு ஒரே ஒரு துணி மூட்டையுடன் ஏறிச் செல்கின்றனர்.

மனோ மஜ்ரா கிராமத்திற்கு வெளியில் இருந்து வரும் சில மதவெறி கொண்ட  சீக்கியர்கள் ரயிலில் முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு முன் அப்பாவி முஸ்லிம்களை  கொத்துக் கொத்தாக கொல்லத் திட்டம் தீட்டுகிறார்கள். 
மனோ மஜ்ரா கிராமத்து  சீக்கிய மதத்தைச் சேர்ந்த கொள்ளையன்  ஜுகத் சிங்கின் முஸ்லிம் காதலி  நூரானும் அந்த பாகிஸ்தானுக்கு செல்லும் ரயிலில் அகதியாகப் போகிறாள்.   ஹுக்கும் சந்த்தின் ஆசைநாயகி ஹசீனாவும் அதே ரயிலில் போகிறாள், சட்டத்தால் உதவ முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறையில் இருந்து தன் வழமையான பலியாடு ஜூகாவை விடுதலை செய்கிறார் ஹுக்கும் சந்த், தன் தவறுக்காக தன் இயலாமைக்காக தன்னை நம்பியவர்களை கைவிட்டதற்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு விஸ்கியை தொடர்ந்து பருகுகிறார் ஹுக்கும் சந்த்.
சீக்கிய மதவாதிகள் ரயில் பயணிகளை கொன்று குவிக்கும் திட்டத்தை ஜுகத் சிங் முறியடிப்பதை தான் நாம் நெகிழ்ச்சியுடன்  பார்க்கிறோம்.

இந்த பாகிஸ்தான் செல்லும் ரயில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த அகதிகளால் நிரம்பி வழிகிறது, அவர்கள் இந்த ரயிலின் ஜன்னல்கள் மற்றும் கூரையின் மீது கூட கூட்டமாக அமர்ந்துள்ளனர்.  
ரயிலின் மேற்கூரையில் கொத்தாக அமர்ந்திருப்பவர்களை பாலத்தின் தொடக்கத்தில் கயிறு கட்டி கீழே தள்ளிவிட்டு கொன்றுவிடுவதுதான் சீக்கிய மதவாதிகளின் சதி.  
ஆனால் இந்த கொடூரமான திட்டத்தை தன் உயிரைத் தந்து முறியடித்து அந்த பாலத்தின் மீது ஏறி கயிறை அறுத்து , சீக்கிய மதவாதிகளின் துப்பாக்கியால் சுடப்பட்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்து சாகிறார் ஜுகத் சிங், 

படம் வயது வந்தோர் மட்டும்  பாருங்கள் , படம் non linear  மற்றும் பூடகமாக கதை சொல்லும் கோடிட்ட இடங்களை  நிரப்புக பாணி  முறையில் நகருகிறது, படத்தின் ஒளிப்பதிவு சன்னி ஜோஸப், 
இசை Piyush Kanojia
Taufiq Qureshi,Kuldeep Singh இந்த மூவர்.

இப்படத்தில் வரும் நிர்மல் பாண்டே மற்றும் ஸ்மிருதி மிஷ்ரா ஜோடிகளையும் , மோகன் அகஸி மற்றும் திவ்யா தத்தா ஜோடிகளை ஒருவர் வாழ்நாளில் மறக்க முடியாது, அப்படி அந்தந்த கதாபாத்திரங்களில் நிஜமாகவே வாழ்ந்திருக்கின்றனர்.

PS: அண்ணாத்தே படத்தில் தலைவரும் அவர் முறைப்பெண்ணும் இருட்டு கரும்புக் காட்டுக்குள் சும்மா பேசிக்கொண்டிருந்தோம் என்பார்கள் அது போல நிர்மல் பாண்டே மற்றும் ஸ்மிருதி மிஷ்ரா ஜோடி அப்படி ரசமாக பேசுகின்றனர்.

படத்தில் வரும் சுவைமிகுந்த ஆங்கில வசனங்கள் 

"The last to learn of gossip are the parties concerned"

"India is constipated with a lot of humbug. Take religion. For the Hindu, it means little besides caste and cow-protection. For the Muslim, circumcision and kosher meat. For the Sikh, long hair and hatred of the Muslim. For the Christian, Hinduism with a sola topee. For the Parsi, fire-worship and feeding vultures. Ethics, which should be the kernel of a religious code, has been carefully removed."

#train_to_pakistan

ஹேராம் | Direct Action Day


ஹேராம் படத்தில் நாம் பார்த்த direct action day சம்பவங்கள் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்பட்டது,அன்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த  இந்திய தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைந்த இந்திய நாடு கேட்டனர், முஸ்லிம் லீக் கட்சியோ வடகிழக்கிலும்,வடமேற்கிலும் என இரு பிரிவினை பிரதேசங்கள் தங்களுக்குக் கேட்டனர்,

ஆங்கிலேய அரசுடனான  கடைசிக் கட்ட உடன்படிக்கை பேச்சு வார்த்தையில் சுதந்திர இந்தியாவில் இந்து மற்றும் முஸ்லிம் கூட்டாட்சியை ஏற்படுத்தி விட்டு அவர்களிடம் நாட்டை கொடுக்கலாம் என்று தீர்மானம் ஆனது,

இதை எதிர்த்து ஜின்னாவின் முஸ்லிம் லீக் நாடு முழுக்க பந்த் அறிவித்தது, இஸ்லாமியர்கள் தங்கள் பலத்தை நிரூபனம் செய்யவேண்டும் என்பதே குறிக்கோள்,  வங்கத்தில் அன்று ஆட்சியில் இருந்தது முஸ்லீம் லீக் கட்சி,அக்கட்சி பத்து வருடங்களாக ஆண்டு கொண்டிருந்தது, அங்கே போலீசார், மாஜிஸ்த்ரேட்கள்  என பெரும்பான்மையினர் இஸ்லாமியர், அதன் வங்காள ப்ரீமியர் சுஹ்ராவர்தி ஒரு நிரூபனமான பிரிவினைவாதி, 

அவர்  ஆங்கிலேய ஆட்சியரிடம் பந்த் அன்று முழு விடுமுறை அறிவிக்க கேட்டு ஆங்கிலேய கவர்னரை அழுத்தம் தர, அதன்படியே விடுமுறை அறிவிக்கப்பட்டு கடைகள் முழுக்க அடைக்கப்பட்டன, அன்று பகலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சுஹ்ராவர்தி மற்றும் பிற தலைவர்களின் பேச்சு பிரிவினையைத் தூண்டுவதாக அமைந்தது,இரும்புத் தடி ,மூங்கில் கழி என தருவிக்கப்பட்டு பாமர மக்களுக்கு வழங்கப்பட்டு நம் கை ஓங்கியிருந்தால் தான் தனி நாடு என்ற பிரிவினைவாத மூளைச் சலவையும் நடந்தது, 

தவிர போலீஸ் கன்ட்ரோல் ரூமில் எப்போதும் குடியிருக்கும் வழக்கம் கொண்ட சுஹ்ராவர்த்தி , ரேடியோ ரிசீவர் வழியாக போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தாராம், அதனால் தான் அவரை butcher of Bengal என்றே இன்றும் அழைக்கின்றனர்.
இப்படம் நடந்த வரலாற்றை தான் காட்டியது,ஆகஸ்ட் 16 ஆம் தேதி முழுக்க இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டால் ,ஆகஸ்ட் 17,18 ஆம் தேதி அவர்களுக்கு பதிலடி தருவதற்கு இந்து பிரிவினைவாதிகள்,சீக்கிய பிரிவினைவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர், ஒரு வாரம் வரை பிணங்களைக் கூட அப்புறப்படுத்த முடியவேயில்லை,

வன்முறை காட்டுத்தீயாக நவகாளி உள்ளிட்ட பக்கத்து நகரங்களுக்கு பரவிவிட்டது, கங்கையில் இருந்து பிணந்தின்னிக் கழுகுகள் கூட்டம் கூட்டமாக கல்கத்தாவில் தஞ்சம் அடைந்து வீதியில் இரைந்து  கிடந்த பிணங்களை சதா கொத்திக் கொண்டிருந்தன,இதை அமெரிக்க பத்திரிக்கையான Life பத்திரிக்கை புகைப்படக்கலைஞர் எடுத்துத் தள்ளிய படங்களில் இருந்து அறியலாம்.

இந்த நீண்ட Post Direct Action Day காட்சியை எடுப்பதற்கு இயக்குனர் கமல்ஹாசன் தேடிப் படித்த நடுநிலையான புத்தகங்கள் எண்ணிலடங்காதது, 

direct action day கழிந்து ஒரு வருடத்துக்குப் பின் படத்தின் ஒரு காட்சியில் வங்காள மக்களுடன்  சாகேத்ராம் சேர்ந்து கொண்டு வங்காள ப்ரீமியர் வசிக்கும் மாளிகையை முற்றுகை இடுவார்,அங்கே காந்தி பக்ரீத் பண்டிகை சமயத்தில் சமாதானம் மதநல்லிணக்கத்திற்கு வேண்டி வந்து தங்கியிருப்பார்  , 

பால்கனியில் சன்னலைத் திறந்து பெங்கால் ப்ரீமியர் சுஹ்ராவர்தியுடன் காந்தியும் தோன்றுவார்,

நாட்டில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாக வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என பேசுவார்.

அப்போது சாகேத்ராம் சென்ற வருடம் நடந்த direct action day  படுகொலைக்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்களா? என ஆத்திரத்துடன் நேரடியாகக் கேட்பார், கூட்டம் ஆமோதிக்கும்.

காந்தி முன்னிலையில் சுஹ்ராவர்தி அந்த துயர சம்பவத்துக்கு எச்சில் விழுங்கிய படி முழுப் பொறுப்பேற்பதாக அறிவிப்பார், காந்தி சுஹ்ராவர்தியை வேதனையுடன் பார்ப்பார்,மக்களைப் பார்த்து இன்னும் என்ன வேண்டும் என சைகை செய்வார்,அதைக் கேட்டு அதுவரை  ஒழிக  என்று சொன்ன கூட்டம் ,வாழ்க என்று சொல்லிவிட்டு கலையும்,.

அங்கே மறுபடியும் அப்யங்கரும் சாகேத்ராமும் சந்திப்பார்கள், அவர் போலீஸ் தேடுகையில் தப்பிச் சென்றதால் பத்து மாதங்கள் சந்தேக வழக்கில் சிறையில் இருந்ததாகவும் ஒன்றும் நிரூபிக்க முடியாததால் சிறை மீண்டதாகவும் சொல்வார்,

படத்தில் வங்காள ப்ரீமியர்  சுஹ்ராவர்த்தியை சாகேத்ராம் சந்திக்கும்  மூன்று கதாபாத்திரங்கள் குற்றம் சாட்டுவர், நொடியில் அவை வசனங்களாக கடக்கும் 

சாகேத்ராம் பயணிக்கும்  கல்கத்தா டாக்சி டிரைவர்,

சாகேத்ராம் வசிக்கும் நீல்கமல் மேன்சனில் வசிக்கும் வயதான தம்பதியரில் அந்த முதிய பெண்மணி

சாகேத் ராம் காப்பாற்றும் சீக்கிய வீட்டுப் பெண் வீட்டில் இருந்து போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு இவர் பேசுகையில் அங்கே போனில் எதிர்புறம்  பேசும் ஆங்கிலேய போலீஸ் ஆணையர்,

17 August 1947 Direct Action Day ன் மறுநாள் கல்கத்தா வீதிகளில் எங்கும் முன் இரவு கலவரத்தால் இறந்தவர்கள் பிணங்களின் குவியல், நொடியில் கடக்கும் காட்சிகள் தானே என்று இக்காட்சிகளில் எந்த சிறு  மெத்தனமும் காட்டப்படவில்லை,

ஒளிப்பதிவாளர் திருவின் கேமரா அது பாட்டிற்கு அலையும்,அது சுழலும் 360 டிகிரியிலும் detailகளால் அக்காட்சி நிரம்பியிருக்கும், முதல் நாள் நர வேட்டையின் போது எதிர்ப்பட்ட ஸ்ரீராம் அப்யங்கர் தான் edit செய்வதாக சொல்லித் தந்த bharath publications தினசரி அலுவலகத்தைத் தேடி சாகேத்ராம் வருகிற காட்சி இது,

ஒரு வங்காளக் குடும்பம்  தன் காணாமல் போன உறவினரை வீதியில் வரிசையாக கிடத்தப்பட்ட பிணக்குவியல்களில் தேடும், அங்கே தென்படாமல் போக பிணங்களை வாரிப்போட்டுக்கொண்டு கடக்கும் ஒரு ட்ரக்கின் பின்னால் உள்ள பிணக் குவியல்களில் தேடும்,

அங்கே பாகன் வயிற்றில் கத்தியால் குத்தி குடல்கள் வெளியேறியிருக்க, கையில்  அங்குசத்துடன் பிணமான பாகன், அனாதையான யானை,

அங்கே ஒரு நாய் பசியில் அலைந்து திரியும், பசியால் நரமாமிசம் சாப்பிட பழகியிருக்கும், வானம் முழுக்க பிணம் தின்னிக் கழுகுகள் வட்டமிடத் துவங்கும், அங்கே விளக்கு கம்பத்தில் ஒருவரை தூக்கில் ஏற்றிக் கொன்றிருப்பார்கள், அப்யங்கர் இவரை மாடிபடிப்பக்கம் கண்டவர் , என்னையா தேடுகிறாய் ? என்பார், 

ஆம் என்றவரை கைபிடித்து அழைத்துக் கொண்டு  தப்புகையில் , நீ ஏன் குளித்து உடை மாறவில்லை? என ரத்தக்கறை படிந்த சட்டையைப் பார்த்தவர் வங்காளத்தில் கேட்க, இவர் கற்றுக் கொண்டிருக்கும் புதிய மொழி ஆதலால் பதில் திணறி தமிழில் பதிலுரைப்பார், இது அத்தனையையும் தன்னிச்சையாக செய்வார், 

அப்போது தான் அப்யங்கர் தமிழா? நானும் தமிழ் தான்,தஞ்சாவூர் மராட்டா என்பார்,அங்கே காரிடாரில் ஒரு பிணம் தொங்கும் ,அங்கே தூண்களில் ஃபேன்ஸி ட்ரெஸ் விளம்பரம், கோல்ட் ஃபில்டர் சிகரட் விளம்பரம், கைரிக்‌ஷாக்கள்,தீ அணைக்க மாநகராட்சி நிறுவிய் fire hydrantகள், 

shell பெட்ரோல் kiosk என முடிந்தவரை detail களால் நிரப்பி 
ஒரு இயக்குனராக கமல்ஹாசன் இந்தக் காட்சிக்கு எப்படி நீதி செய்திருக்கிறார்?, எப்படி தொழிற்நுட்ப கலைஞர்களை ஒருங்கிணைத்துள்ளார்? பாருங்கள் , பிரமிப்பு மிஞ்சுகிறது,

PS: ஹேராம் படத்திற்கு கமல்ஹாசன் சம்பளம் எடுத்துக் கொள்ளாமல் மொத்தம் 16 கோடிகள் ஆகியுள்ளது , அதாவது அசல் 16 கோடிகள் ,இது பற்றி ஒரு பேட்டியில் அவர் சொன்ன பதில் இங்கே.
Q: How much are you pumping into the project?
A: As of now, without my remuneration (smiles) we've budgeted the project at Rs. 16 crores.

#ஹேராம்,#கல்கத்தா,#கமல்ஹாசன்,#heyram,#kamalhaasan,#சுஹ்ராவர்தி,#The_Vultures_of_Calcutta
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (136) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)