வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சென்னை உயர்நீதிமன்றம் | குவிமாட கொண்டை ஊசி


ஒருவழியாக சென்னை உயர்நீதி மன்றத்தின் குவிமாடத்துக்கு கொண்டை ஊசி (steeple point needle) வைக்க வேலைகள் நடக்கிறது, சாரம் அமைத்த வேகத்தில் conservation பணிகள் நடந்தால் நன்று.

குவிமாட கொண்டை ஊசி  பற்றி மேலும்




பல்லாவரம் | மறைமலை அடிகள் வாழ்ந்த வீடு

பல்லாவரம் மறைமலை அடிகள் வாழ்ந்த வீடு இது, எண் 58,சாவடி தெரு பல்லாவரத்தில் இன்னும் குத்துக்கல்லாக உள்ளது, பல்லாவரத்துக்கும் மறைமலை அடிகளுக்கும் நெடுங்கால பந்தம் உள்ளது.

1960 ஆம் ஆண்டு முதல் பல்லாவரம் போர்ட் ஹை ஸ்கூல் என்று அழைக்கப்பட்டு வந்த அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளி மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலைபள்ளி என பெயர் மாற்றம் கண்டு இன்றும் இயங்கி வருகிறது.

மறைமலை அடிகள் நாகப்பட்டினத்தில் 15.7.1876 அன்று பெருவணிகர் குடும்பத்தில் பிறந்தார், இயற்பெயர் வேதாசலம் சுவாமி , இவர் பெற்றோர் திருக்கழுக்குன்றம் சென்று மூலவரை தரிசித்து மகன் பிறந்ததால் இந்த பெயர் வைத்தனர், மிகுந்த செல்வாக்குடன் வளர்ந்தார், அன்றைய ப்ரிட்டிஷ் இந்தியாவில் நான்காம் ஃபார்ம் (இன்றைய 10 ஆம் வகுப்பு) படித்தவர், அதன் பின்னர் தந்தையார் மறைவுக்குப் பிறகு பள்ளிக் கல்வியில் இருந்து இடை நின்றவர், தமிழ் ஆராய்ச்சியில் தன் முனைப்புடன் கரை கண்டவர், அவரின் தனித் தமிழ் ஆர்வத்தை  நன்கு உணர்ந்த தலைமைத் தமிழ்ப் பேராசிரியராய் இருந்த திரு. சூரிய நாராயண சாஸ்திரியார் அவருக்கு தாம்பரம் மெட்ராஸ் கிருத்துவ கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பரிந்துரை செய்து பணியமர்த்துகிறார், பின்னாளில் அதே கல்லூரியில்  தமிழ்த்துறையில் பேராசிரியராகவும் உயரக் காரணமாகிறார், நாராயண சாஸ்திரி அவர்கள் தன் தீவிர தமிழ்ப்பற்றின் காரணமாக தன் பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக் கொண்டது  பின்னாளில் வேதாசல சுவாமியாக இருந்தவர் மறைமலைஅடிகள் என பெயரை மாற்றிக் கொள்ள காரணமாயிற்று.

இப் பின்னணியில் கற்றது கைமண் அளவு என்று தமிழை 
விடாமல் ஆராய்ச்சி செய்கிறார் மறைமலை அடிகள், தமது 21ஆவது வயதில் முத்தமிழையும் நன்கு படித்து தேர்ந்தும் விட்டார். பிறகு ஆங்கிலம், வடமொழியையும் நன்கு படித்துப் புலமை பெற்றார்.

ஆய்வு செய்து பலபல புத்தகங்கள் எழுதுகிறார்,சிறந்த மேடைப் பேச்சாளராகவும் உருவெடுக்கிறார், தமிழ் சொற்பொழிவு என்பது ஆங்கில சொற்பொழிவை விட எத்தனை இனிமையானது என நன்கு நிறுவிவிடுகிறார், சமகால தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆர்வலர்கள் என அத்தனை செரிவான பட்டிமன்ற விவாதங்களை முன்னெடுத்தவர், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் முன்னோடியாக திகழ்ந்தவர்.

இந்நிலையில் கல்லூரி இளங்கலை படிப்புகளுக்கு தாய்மொழியை பாடமாக எடுத்து படிப்பது அவசியமல்ல, எந்த விருப்ப மொழியையும் படிக்கலாம் என்ற விதிமுறை மெட்ராஸ் பல்கலைக்கழக நிர்வாகத்தாரால் அமல்படுத்தப்பட, கொள்வாரின்றி தமிழ் துறை காற்றாடுகிறது, மெட்ராஸ் மாகாணமெங்கும் நூற்றுக்கணக்கான தமிழ்துறை  பேராசிரியர்கள் பணி இழக்கின்றனர்.

இந்த பின்னணியில் மறைமலை அடிகள் அவர்கள்  10.4.1911 அன்று தமிழ் பேராசிரியர் பணியில் இருந்து விடைபெறுகிறார்,நெடுங்காலம் தாம்பரம் சேலையூரில் தங்கியிருந்த MCC staff quarters வீட்டை விட்டு இடம் பெயர்கிறார்,  பல்லாவரத்தில் தன் சொற்பொழிவு வருமானத்தில் வாங்கிய இந்த முக்கால் ஏக்கர் பண்ணை நிலத்தின் மையத்தில் வளைவுகள் கொண்ட porch  வைத்து  பங்களா வீட்டைக் கட்டி மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளுடன் 1.5.1911 அன்று குடி பெயர்கிறார், பல்லாவரத்துக்கு குடி வந்த போது அடிகளின் வயது 35. அவரின் தாயாருக்கு வயது 70. மனைவிக்கு 32. அடிகளாருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் இருந்தனர். பல்லாவரத்தில் குடியேறிய நாட்களில் கடைசி மகள் திரிபுரசுந்தரி பிறந்தார். இவர் பிறந்து சில திங்களில் அடிகளார் 27.8.1911 அன்று இல்லறத் துறவியானார்.
ஆனால் திரவியம் என்பது தேவை என்பதை உணர்ந்திருக்கிறார், தமிழின் முதல் தொழிற்முறை சொற்பொழிவாளர் என்று மறைமலை அடிகளைச் சொல்லலாம், அந்நாட்களிலேயே திருமணம் மற்றும் இதர பட்டி மன்றங்களுக்கு சொற்பொழிவாற்ற 5000 ரூபாய் சன்மானமாக பெற்றுள்ளார், அதை அவரது தன்வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளதைப் படித்துள்ளேன்.

மறைமலை அடிகள் இந்த பண்ணை வீட்டுக்கு குடிவந்து சுமார் இருபதாண்டுகள் கழிந்த பின்னரே பல்லாவரம் ரயில் நிலையம் திறக்கப்பட்டுள்ளது (11 May 1931), அப்போது பல்லாவரம் சுற்று வட்டாரத்தில் ஓல்ட் ட்ரங்க் ரோடு (GST ரோடு )  இருந்துள்ளது, பழமையான ராணுவ கண்டோன்மெண்ட் இருந்துள்ளது, தர்கா ரோடு இருந்துள்ளது, கார்டன் வுட்ராஃப் என்ற தோல் பதனிடும் தொழிற்சாலை கிழக்கு பல்லாவரத்தில் இருந்துள்ளது, பெருவாரியான தொழிலாளர்கள் பல்லாவரம் சாவடி தெருவில் வீடு கட்டி குடியிருந்ததை கேட்டுள்ளேன், அந்த தொழிற்சாலைக்கு சரியான நேரத்துக்கு வேலைக்கு செல்வதற்கு நேரம் அறிய வசதியாக பல்லாவரம் மாங்காளி அம்மன் கோயில் அருகே  சாவடித் தெரு நாற்சந்தி முனையில் மணிக்கூண்டு இருந்தது, அது 1970 ஆம் ஆண்டு வரை இயங்கி இருந்துள்ளதை அறிவேன், நெடுநாளாக அந்த மணிக்கூண்டு பாழடைந்து கடந்த கால வரலாற்றுக்கு சாட்சியாக இருந்து வந்தது,அந்த மணிக்கூண்டில் மாலை  ஆறு மணி அடிக்க அக்கம்பக்கத்தில் இருந்து மறைமலை அடிகளாரின் சொற்பொழிவு கேட்க கூட்டம் கூடியுள்ளனர், இரவு பத்து மணி அடிக்கும் வரை சொற்பொழிவு நீண்டுள்ளதை கார்டன் வுட்ராஃபில் பணியாற்றிய தொண்டு கிழப்பாட்டன் ஒருவர் என் நண்பனைப் பார்க்க அவன் வீட்டுக்கு போகையில் வரலாற்று ஆவணமாக விவரித்துள்ளார் .

1938 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு குடும்பத்துடன் சிறை சென்றவர் மறைமலை அடிகள், 13.11.1938 அன்று அந்த மாநாட்டில் வைத்து மறைமலை அடிகள் அவர் மகள்,சுதந்திர போராட்ட  தியாகி நீலாம்பிகை , சுதந்திர போராட்ட தியாகி தர்மாம்பாள் அவர்கள் சேர்ந்து தந்தை பெரியார் அவர்களுக்கு " பெரியார்" என்ற தன்னலமற்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
மறைமலை அடிகள் 15.9.1950 அன்று  மறைந்தார்,அவரை பல்லாவரத்தின் மிகப்பழமையான ஜமீன்தார்லைன் சுடுகாட்டில் எரியூட்டினர்.

நாங்கள் 1986 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை இந்த வீட்டின் இடம் வலமாக மாறி மாறி ஒண்டுக்குடித்தன குளுகுளு நாட்டு ஒடு வேய்ந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்தோம், 

அன்றைய நாட்களில் மராமத்து எதுவும் இன்றி மாலைக்கருக்கலில் பதின்ம சிறுவன் எனக்கு பயம் விளைவித்த வீடு இது, சுற்றத்தில் இந்த வீட்டில் மறைமலை அடிகளின் ஆவி உலவுகிறது என்ற கட்டுக்கதை இருந்தது, அவர் குண்டலினியை எழுப்பி சோதனை செய்கையில் இறந்ததாகவும், மரணத்துக்கு பின் மனித நிலை என்ன என்று விடாமல் ஆராய்ந்ததாகவும் வதந்திகள் உலவின, இந்த பிரம்மாண்ட வீட்டின் பின்னால் சாக்கடை,  தடதடக்கும் ரயிலடி,வடகிழக்கு மூலையில் பிரம்மாண்டமான பாசனக் கிணறு, தென்கிழக்கு மூலையில் கூரை இடிந்து பாழடைந்த பணியாளர் குடியிருப்பு அறைகள், அதன் உள்ளே குட்டி போட்ட பூனைகள், சதா கத்தும் புறாக்கள், ஆந்தைகள் என வயிற்றில் கிலியை உண்டாக்கும் சூழல், குண்டு பல்பு மஞ்சள் நிற விளக்கொளி காலத்தில் ஸ்டார்டர் சோக் பட்டி இவை கொண்ட ட்யூப் லைட் கூட ஆடம்பரம் தான், அதன் காரணமாக இருளோ என்று தான் இருக்கும்,  இருளில் இந்த வீட்டைக் கடந்து தெருவில் நடக்கையில் பாடத்தில் படித்த வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு  விளையாட  போகும் போது சொல்லி வைப்பாங்க உன் வீரத்தை கொழுந்தினிலே கிள்ளி வைப்பாங்க என்ற பாடலை சத்தமாக பாடியபடியே கடப்பேன், மறந்தும் கூட இருளில் இந்த வீட்டுப்பக்கம் தலை திருப்பி பார்க்க மாட்டேன்.

பகலில் உள்ளே சென்று தெற்கு புறத்தில் நடுநாயகமாக இருந்த பிரம்மாண்டமான மகிழ மரத்தடியில் விளையாடுவேன்,பாடங்கள் படிப்பேன்,  1988 ஆம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தி பீச் முதல் தாம்பரம் வரை ரயிலில் கதவடியில் நின்று பொதுமக்களுக்கு கையசைத்தபடி வந்தார், 
முதல்நாளே ஒலிபெருக்கியில் அதை காங்கிரஸ் கட்சியினர் சொன்னதால் சுற்று வட்டாரத்தில் இருந்த ஜனங்கள் திரண்டு அந்த மகிழ மரத்தடியில் நின்று அவருக்கு கையசைத்து வழியனுப்பியது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது , மகிழம் பூக்களை பொறுக்கி வந்து நூலில் கோர்த்து சுவாமி படத்துக்கு அணிவிப்பேன், இங்கு சிறிய கிளை நூலகம் வீட்டின் வரவேற்பறையில் செயல்பட்டது, வாரத்தின் சில நாட்களில் மட்டும் மாடி அறை திறக்கப்பட்டு அந்த மரப்படிகளில் பார்வையாளர்களை அனுமதிப்பர், மறைமலை அடிகள் தன் தமிழ் ஆராய்ச்சி பணிக்காகவும் எழுத்துப் பணிக்காகவும் வேண்டி  அப்போதே இருபதாயிரம்  ரூபாய்க்கு பல மொழிப் புத்தகங்கள் வாங்கி சேமித்திருந்தவர், தினமும் டைரி நாட்குறிப்பு  ஆங்கிலத்தில் எழுதியவர், அவர் எழுதிய கைப்பிரதிகளை பத்திரமாக கண்ணாடி அலமாரியில் பூட்டியே வைத்திருப்பர், இன்றும் பல எழுத்தாளரும் எழுதத் தயங்கும் யோகம், ஆத்ம விசாரம், குண்டலினி எழுப்புதல் போன்ற பொருளடக்கத்தில் சுமார் ஐம்பது புத்தகங்களை எழுதியவர், அவர் புத்தகங்கள் அனைத்தும் அடிப்படை மாணவர்களுக்கானதல்ல,தமிழ்  முனைவர் மாணாக்கர்களுக்கானது, எழுத்தை உள்வாங்கவே கடும் உழைப்பை கோரியது, எனவே அவரின் மாடி நூலக அறையை தகுதிவாய்ந்த கொள்வார் அதிகம்  இல்லாததால் பூட்டியே வைத்திருந்ததைக் கண்டிருக்கிறேன், மறைமலை அடிகள் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது தகுதியுள்ள பார்வையாளர்களுக்கு மட்டும் அறைகள் திறக்கப்பட்டன.

பத்து கிரவுண்டுக்கு கூடுதலான மனையில் மேற்கு பார்த்த வீடு இது ,தெருவின் கோணத்துக்கு வீட்டை கட்டாமல் வடக்குத் தெற்காக வீட்டை காற்று வருவதற்கு வேண்டி சாய்வான கோணத்தில் கட்டியதை படத்தில் பாருங்கள்,  மிகச் சிறிய இருபது அடி அகலம் கொண்ட தெரு இது, வீட்டின் முகப்பு தோட்டத்தில் வட்ட நீருற்றும்  கூட இருந்தது, அன்று ஆறடி உயர காம்பவுண்டு சுவர் இருந்தது, உள்ளே வாகனங்கள் நிறுத்த விசாலமான இடம் இருந்தது, நான் நீரூற்று இயங்கிப் பார்த்ததில்லை, 
வீட்டு மேற்கு நுழைவு வாயிலை ஒட்டி வடமேற்கு மூலையில் கலை மன்றம் என்று ஒரு சொற்பொழிவு மேடையும் கூட இருந்தது,இன்றும் உள்ளது, நான்கு புறமும் நீண்ட திறந்தவெளி விட்டு கட்டிய வீடு இது.
இந்த கூகுள் எர்த் படத்தில் இருந்து  இதன் விஸ்தீரண அளவை கணக்கிட்டுள்ளேன்.

கழுதை தேய்ந்து கட்டெரும்பானது போல இன்று நூலகம் திறப்பதில்லை, திறப்பதேயில்லை, 27 ஆவது வார்டு ரேஷன் கடையாக மாறிவிட்டது மறைமலை அடிகளார் வாழ்ந்த வீடு, மறைமலை அடிகள் வாழ்ந்த வீட்டையும் ஐம்பது நூல்களையும்  நாட்டுடைமையாக்கிவிட்டனர் , அவரின் மகன் எழுபது வயதான மறை . பழனியப்பன் ராயப்பேட்டை தொகுப்பு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வறுமையில் உழல்கிறார், மனைவியும் அவரும் அரசு தரும் முதியோர் உதவித்தொகை தலா 1000₹ வாங்கி உய்வதை காணச் சகிக்கவில்லை, ஐம்பது நூல்களின் ராயல்டி எத்தனை லட்சங்கள் பெறும்? அரசு நாட்டுடைமையாக்கிய இந்த பண்ணை வீடு கிரவுண்டு ஒன்றரை கோடி ரூபாய் என கணக்கிட்டாலும் கூட சுமார் பதினைந்து கோடிகள் பெறும், ஆனால் அவர்கள் முதுமையில் வறுமையில் உழல்வது நிதர்சனமாக இங்கே காணக்கிடைக்கிறது,
https://youtu.be/1dKKETPyVW0 

ஆனால் இது வரை  வழிபிறந்தபாடில்லை, நர்மதா பதிப்பகம் உள்ளிட்ட  பதிப்பகங்கள் மறைமலை அடிகளின் நூல்களை பிதுர்ராஜ்ய சொத்துகள் போல பாவித்து மறுபதிப்புகள் கொண்டு வருகின்றன, கொண்டு வரடரடும் , ஆனால் அந்த வறுமையில் உழலும் வாரிசுகளுக்கு கண்ணியமான பங்குத்தொகையைத் தர வேண்டியது தார்மீக கடமையும் தர்மமாகும் .

நான் பல்லாவரம் மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவன் என்பதால் எனக்கு மறைமலை அடிகளின் வாழ்க்கை வரலாற்றை தேடிப் படிப்பதில் பால்யத்தில் ஆர்வம் ஏற்பட்டது, இந்த கட்டுரையை அப்படி கண்டவற்றையும் கேட்டவற்றையும் நினைவில் வைத்து எழுதுகிறேன், விரைவில் மறைமலை அடிகள் அவர்கள் வாழ்ந்த வீட்டிற்கு நேரில் சென்று படங்கள் எடுத்து பதிவிடுகிறேன்.

சர் வில்லியம் லாம்ட்டன் கல்லறை

இந்த கட்டுரையில் சர்.வில்லியம் லாம்ப்டன் சமாதியின் முன் கட்டுரையாளர் எடுத்துக் கொண்ட செல்பி படம் உள்ளது ,நாக்பூரில் zero mile stone படம் உள்ளது

வரலாற்றுக் கட்டுரை எழுதும் கட்டுரையாளர்கள் அதில் உங்கள் புகைப்படங்களை தவிருங்கள்,நீங்கள் சரித்திரத்தை நிகழ்காலத்துக்கு கடத்தும் ஒரு தபால் காரர் மட்டுமே,

//அடிலாபாத்திலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் தொடங்குகிறது. ஒரு மணிநேரப் பயணத்துக்குப் பிறகு சாலையோரம் இருந்த ஒரு நல்ல விடுதியில் இரவு தங்கி, காலை புறப்பட்டோம். 1802 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி பரங்கிமலை என்று நாம் அழைக்கும் செயின்ட் தாமஸ் மலையிலிருந்து அருகில் இருக்கும் ஒரு குன்று வரை ஒரு நேர்கோட்டை வரைந்தார் கேப்டன் வில்லியம் லாம்டன். இந்தியா முழுவதையும் அளந்த முதல் சர்வேயின் முதல் கோடு அதுதான். அதன் கடைசிக்கோடு முடிந்த இடம் இமயத்தின் பாதம்.
இந்த நில அளவைப் பயணம் ``அறிவியல் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களிலேயே மிகப்பிரமாண்டமான, பிரமிப்பான பயணம்" எனப் புவியியல் ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்டது. நான்காம் கர்நாடகப் போரில் திப்புசுல்தானை வீழ்த்திய படையில் பெரும்பங்காற்றியவர் லாம்டன். திப்புவின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஏறக்குறைய இந்தியா முழுமையும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. இனி பெரிய போர்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற நிலையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். இந்தக் காலகட்டத்தில் இந்திய நாடு முழுமையையும் அளவிட வேண்டும் என லாம்டன் திட்டமிட்டார். இதற்கான அனுமதியை சென்னை ராஜதானியின் கவர்னரிடம் பெற்று, பணியைத் தொடங்கினார்
இரண்டு மாட்டு வண்டிகள். ஒரு வண்டியில் 20 அடி நீளம் இருந்து தியோடர்லைட் என்ற அளக்கும் கருவி. இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட கருவி அது. அந்தக் கருவி வந்த கப்பல் பிரான்ஸ் நாட்டினரால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது. (லாம்டன் பயன்படுத்திய அந்தக் கருவி இப்பொழுது டேராடூனில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருக்கிறது). 1802 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணி 40 ஆண்டுகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பேர் ஈடுபட்டு, நூற்றுக் கணக்கானோர் உயிர்களைத் தியாகம் செய்து, எண்ணற்ற இடையூறுகளைச் சந்தித்து முடிக்கப்பட்ட பணி இது.
சுட்டெரிக்கும் வெயில், கடும் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள், கோபக்கார பழங்குடியினர், தங்கள் நிலங்களை அபகரிக்க வந்த எதிரிகளாகப் பார்த்த விவசாயிகள், தொற்று நோய்கள், ஆபத்தான விலங்குகள், விஷ ஜந்துக்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு லாம்டன் இந்தப் பணியை நடத்தினார். தஞ்சை பெரிய கோயிலின் ஒரு பகுதியில் நின்று நில அளவை செய்யும்போது கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுகிறது. இதனால் நில அளவைப் பணிக்குக் கடும் எதிர்ப்பு வருகிறது. பதேபூர் சிக்ரியில் நில அளவை செய்யும்போது அக்பர் சமாதியின் ஒரு தூபி மறைக்கின்றது என்று மேல் பகுதியைக் கொஞ்சம் இடித்து விடுகிறார்கள். உடனடியாக நிஜாமின் ஆட்கள் இவர்களைச் சிறைப்பிடித்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

21 ஆண்டுகள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த லாம்டனுக்குப் பிறகு இந்தியாவின் புதிய சர்வே ஜெனரலாக ஜார்ஜ் எவரெஸ்ட் பொறுப்பேற்கிறார். ஜார்ஜ் எவரெஸ்ட்க்குப் பிறகு ஆன்ட்ரூ ஸ்காட் வாக் இறுதிக்கட்ட பணியைத் தொடர்கிறார். 1856 ஆம் ஆண்டு இமயமலையில் நில அளவை செய்துகொண்டிருந்த ஸ்காட் வாக் ஒரு சிகரத்தின் உயரம் உலகில் உள்ள எல்லா சிகரங்களையும் விட உயரமாக இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். 1856 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி கல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் இந்தக் கண்டுபிடிப்பு அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டு, ஸ்காட் வாக்கின் பரிந்துரைப்படி அந்தச் சிகரத்துக்கு 'எவரெஸ்ட்' எனப் பெயரிடப்பட்டது. தன் பெயரை அந்தச் சிகரத்துக்கு வைக்க வேண்டாம் என்று எவரெஸ்ட் மன்றாடினார்! வில்லியம் லாம்டன் ஒரு தமிழ்ப் பெண்ணை மணந்து கொண்டார். அந்தப் பெண் தூத்துக்குடியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற ஒரு கருத்து இருக்கிறது. கடமை தவறாத, நாட்டுப்பற்று மிக்க அதிகாரியான வில்லியம் லாம்டன் 1823 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாள் நாக்பூருக்கு 47 கிலோ மீட்டர் தெற்கே இருக்கும் ஹங்கன்காட் என்ற ஊரில் இறந்து போனார்.

அடிலாபாத்திலிருந்து நாக்பூருக்குப் போகும் வழியில் இருக்கும் ஹங்கன்காட்டுக்குச் சென்று 'கிரேட் ட்ரிக்னாமெட்ரி ஆஃப் இந்தியாவின் தந்தை' என்றழைக்கப்பட வேண்டிய லாம்டனின் கல்லறையைத் தேடினோம். புன்னகையோடு வழிகாட்டிய ஒருவர், 'இந்தப் பகுதியில் இருக்கலாம்' என்று ஒரு முஸ்லிம்கள் குடியிருப்பைக் காட்டினார். ஏழ்மையின் அடையாளங்களோடு இருந்த நெருக்கமான வீடுகளுக்கு இடையே நடந்து சென்றபோது கவனிப்பாரற்ற அந்தக் கல்லறை இருந்தது. அங்கே இருந்தவர்களுக்கு 'இது யாரோ வெள்ளைக்கார அதிகாரியின் கல்லறை' என்பதைத் தாண்டி எதுவும் தெரியவில்லை. வேதம் புதிது என்ற படத்தில் "ஒவ்வொரு சமூக மாற்றத்தின் வேரிலும் ஒரு புரட்சியாளனின் இரத்தம் இருக்கிறது" என்ற வசனம் இடம் பெற்றிருக்கும்.
மனித சமூகத்தின் நாகரிக வளர்ச்சியின் ஒவ்வொரு படிக்கட்டும் தன்னலம் கருதாத தியாகச்சீலர்களால் கட்டப்பட்டது. அத்தகைய மனிதர்களில் ஒருவரான வில்லியம் லாம்டனுக்கு எங்கள் வணக்கத்தைச் செலுத்தி விட்டு நாக்பூர் நோக்கிச் சென்றோம். நாக்பூரின் மையப்பகுதியில் 'ஜீரோ மைல் ஸ்டோன்' என்ற கல் இருக்கிறது. இந்தக் கல்லை இந்தியாவின் மையப் புள்ளியாகப் பல பேர் நினைக்கிறார்கள். அது தவறு. இந்தத் தூணின் அருகில் கிரேட் ட்ரிக்னாமெட்ரிக் சர்வேவுக்காக அமைக்கப்பட்ட கல் மேடை இருக்கிறது. இந்தக் கல்தூண் நில அளவையின் வரலாற்றை நினைவுகூரும் தூண் மட்டுமே. அதன் அருகில் புகைப்படம் எடுத்துக்கொண்டு, மீண்டும் எங்கள் பயணத்தை வடக்கு நோக்கித் தொடர்ந்தோம்.
- மருத்துவர் இரா.செந்தில்

சந்திரிகா சோப் நினைவுகள்

தினமும் குளியல் என்பது சுகானுபவம், தலைக்கு சேர்த்து குளிப்பதே குளியல் ஆகும், சந்திரிகா சோப்பு நல்ல தரமான மணமான சோப் எனக்கு மிகவும் பிடித்தமானது, நீண்ட நாட்களாக இதன் உறை வடிவம் மாறவே இல்லை,80 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது. அமீரகத்தில் கிடைக்கும்  export quality இன்னும் தரமாக இருக்கும், சோப் அப்படி நுரைக்கும்,கரையும், எனவே இதை சிகைக்கு பயன்படுத்தியும் வந்தனர், விளம்பரமும் அப்படி வந்ததைப் பாருங்கள்.

1980 களில் நுகர்ந்த அதே மணம் இன்னும் கமழ்கிறது,old cinthol classic போன்றே புராதானத்தை மதிக்கும் ஒரு சோப்.சந்திரிகா அல்லது சந்த்ரிகே என்ற சொல் மலையாளத்தில் மிகவும் பிரபலம் , பிறை நிலவு இலச்சினை மீது CRK என எழுதியிருக்கும், செவ்வக வடிவ சோப்பு அழகாக பட்டர் பேப்பர் சுற்றி வரும், அந்நாளில் சாவி அச்சு எடுக்க திருடர்கள் இந்த சோப்பை தான் பிரத்யேகமாக வாங்குவர் என்பது உபசெய்தி.

முன்னர் கேரளத்தின் இரிஜ்ஞாலகுடா  என்ற ஊரில் இருந்து தயாரானது இப்போது பெங்களூரின் கச்சரஹனஹள்ளியில் இருந்து தயாராகி வருகிறது.

சந்திரிகா சோப் SV தயாரிப்பு நிறுவனத்தாரால்  பெங்களூரில் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்ட மூலிகை சோப் பிராண்ட் . 
இந்த நிறுவனம் 1940 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சி.ஆர். கேசவன் வைத்தியரால் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டு இருந்தாலும், இப்போது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட விப்ரோ நிறுவனத்திற்குச் சொந்தமாகிவிட்டது, 
சமீபத்தில் இதன் உறை வடிவம் என மாற்றி சந்தைப்படுத்துவதை அறிந்தேன், ஆனால் அதே மணம் இன்னும் உள்ளது.  

சந்திரிகா சோப்பில்  தேங்காய் எண்ணெய், காஸ்டிக் சோடா, காட்டு இஞ்சி, எலுமிச்சை தோல் எண்ணெய், மரவெட்டி என்ற குஷ்டவைரி எண்ணெய் (Hydnocarpus) , ஆரஞ்சு எண்ணெய் மற்றும் சந்தன எண்ணெய் என  மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் கலந்து  தயாரிக்கப்படுகிறது.

இன்று 75 கிராம் சோப் விலை 30₹ , body wash எல்லாம் அத்தனை நன்றாக உள்ளது, இணைப்பு படங்களில் சந்திரிகா சோப் கடந்து வந்த பாதையைப் பாருங்கள்..

பக்கிங்காம் கால்வாய் படகு பயணம் பற்றி கவிஞர் பாரதிதாசன்

அன்று பக்கிங்காம் தெற்கு கால்வாயில் மயிலை தண்ணீர்துறை சந்தை முதல் கடலூர் வரை சரக்கு தோணி போக்குவரத்து நடந்துள்ளது , மகாகவி பாரதியார் ரயிலில் ஃப்ரெஞ்சு காலனி பாண்டிச்சேரி தப்பிச் செல்ல அவர் பதிப்பித்த இந்தியா பத்திரிக்கையின் அச்சு எந்திரங்கள் தளவாடங்கள் இந்த நீர் வழியில் தான் சென்று அவரிடம் அடைந்துள்ளன,  

அறுபது வருடங்களுக்கு முன்பாக மயிலை தண்ணீர் துறையில் மாலை நான்கு மணிக்கு தோணி ஏறினால் அது விடிகாலை மகாபலிபுரம் சென்று சேர்ந்ததை இந்த பாரதிதாசன் கவிதை  மூலம் அறிய முடிகிறது.

புரட்சி கவிஞர் பாரதிதாசன் தான் நண்பர்களுடன் இரவில் மேற்கொண்ட இந்த பக்கிங்காம் கால்வாய்  படகு பயணம் பற்றி நீண்ட கவிதை எழுதியுள்ளதை வாசியுங்கள்.

மாவலிபுரச் செலவு (மகாபலிபுரச் செலவு )

1934 ஆம் ஆண்டு  பௌர்ணமி இரவில் தோழர் ப. சிவானந்தம், குருசாமி குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி. வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி.சிதம்பரனார்,எஸ்.வி.லிங்கம், துரைக்கண்ணன் இவர்களுடன் கவிஞர் பாரதிதாசன்  சென்னை மயிலையிலிருந்து மாலை 4 மணிக்குச் சென்னை பக்கிங்காம் கால்வாயில் தோணி ஏறி  மறுநாள் மாமல்லபுரம் சென்றார். 

ஆழமில்லாத கால்வாய் பகுதிகளில் அப்பெருந் தோணியை  கரையோரத்தில் கயிறு பற்றி ஒருவன் இழுத்துச் சென்றமையும், மற்றோர் ஆள் பின்புறமாக ஒரு நீளக் கழியால் தள்ளிச் சென்றமையும் கழிவிரக்கம் கொள்ளத்தக்க காட்சி, அதையும், ஆங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும் சில காட்சிகளையும் விளக்கி அப்போது எழுதப்பெற்றது இக்கவிதை.

சென்னையிலே ஒருவாய்க்கால் - புதுச்
   சேரிநகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் - எழில்
   அன்னம் மிதப்பது போலே.
என்னருந் தோழரும் நானும் - ஒன்றில்
   ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி - பின்பு
   தீவிரப் பட்டது வேகம்.

தெற்குத் திசையினை நோக்கி - நாங்கள்
   சென்றிடும் போது விசாலச்
சுற்றுப் புறத்தினில் எங்கும் - வெய்யில்
   தூவிடும் பொன்னொளி கண்டோம்
நெற்றி வளைத்து முகத்தை - நட்டு
   நீரினை நோக்கியே தாங்கள்
அற்புதங் கண்டு மகிழ்ந்தோம் - புனல்
   அத்தனையும்ஒளி வானம்.

சஞ்சீவி பர்வதச் சாரல் - என்று
   சாற்றும் சுவடி திறந்து
சஞ்சார வானிலும் எங்கள் - செவி
   தன்னிலும் நற்றமிழ் ஏற்றி
அஞ்சாறு பக்கம் முடித்தார் - மிக்க
   ஆசையினால் ஒரு தோழர்,
செஞ்சுடர் அச்சம யத்தில் - எம்மைச்
   செய்தது தான்மிக்க மோசம்

மிக்க முரண்கொண்ட மாடு - தன்
   மூக்குக் கயிற்றையும் மீறிப்
பக்க மிருந்திடும் சேற்றில் - ஓடிப்
   பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச்
சக்கரம் போலிருள் வானில் - முற்றும்
   சாய்ந்தது சூரிய வட்டம்!
புக்க பெருவெளி யெல்லாம் - இருள்
   போர்த்தது! போனது தோணி.

வெட்ட வெளியினில் நாங்கள் - எதிர்
   வேறொரு காட்சியும் கண்டோம்.
குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில்
   கூந்தல் சரிந்ததோர் ஈந்தும்
மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப
   வார்த்தைகள் பேசிடும் போது
கட்டுக் கடங்கா நகைப்கைப் - பனை
   கலகல வென்றுகொட் டிற்றே.

எட்டிய மட்டும் கிழக்குத் - திசை
   ஏற்றிய எங்கள் விழிக்குப்
பட்டது கொஞ்சம் வெளிச்சம் - அன்று
   பௌர்ணமி என்பதும் கண்டோம்.
வட்டக்குளிர்மதி எங்கே என்று
   வரவு நோக்கி யிருந்தோம்.
ஒட்டக மேல்அர சன்போல் - மதி
   ஓர்மரத் தண்டையில் தோன்றும்.

முத்துச் சுடர்முகம் ஏனோ - இன்று
   முற்றும் சிவந்தது சொல்வாய்.
இத்தனை கோபம் நிலாவே - உனக்கு
   ஏற்றியதார் என்று கேட்டோம்.
உத்தர மாக எம் நெஞ்சில் - மதி
   ஒன்று புகன்றது கண்டீர்.
சித்தம் துடித்தது நாங்கள் - பின்னால்
   திருப்பிப் பார்த்திட்ட போது,

தோணிக் கயிற்றினை ஓர் ஆள் - இரு
   தோள்கொண் டிழுப்பது கண்டோம்.
காணச் சகித்திட வில்லை - அவன்
   கரையொடு நடந்திடு கின்றான்.
கோணி முதுகினைக் கையால் - ஒரு
   கோல்நுனி யால்மலை போன்ற
தோணியை வேறொரு வன்தான் - தள்ளித்
   தொல்லை யுற்றான்பின்புறத்தில்.

இந்த உலகினில் யாரும் - நல்
   இன்ப மெனும்கரை யேறல்
சந்தத மும்தொழி லாளர் - புயம்
   தரும்து ணையன்றி வேறே
எந்த விதத்திலும் இல்லை - இதை
   இருப துதரம் சொன்னோம்.
சிந்தை களித்த நிலாவும் - முத்துண்ச்
   சிந்தொளி சிந்தி உயர்ந்தான்.

நீல உடையினைப் போர்த்தே - அங்கு
   நின்றிருந் தாள்உயர் விண்ணாள்
வாலிப வெண்மதி கண்டான் - முத்து
   மாலையைக் கையி லிழுத்து
நாலு புறத்திலும் சிந்தி - ஒளி
   நட்சத்திரக்குப்பை யாக்கிப்
பாலுடல் மறையக் காலை - நாங்கள்
   மாபலிபுரக்கரை சேர்ந்தோம்.

பக்கிங்காம் கால்வாய் பற்றி மேலும்

https://m.facebook.com/story.php?story_fbid=10160880279371340&id=750161339&mibextid=Nif5oz
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (168) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)