ஆஃப்டர்சன் Aftersun 2022

ஒரு குழந்தை தனது பெற்றோரை எப்போது உண்மையாகப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறது? 

அவர்களுடன் வாழும் காலத்திலா, அல்லது வளர்ந்து பெரியவரான பிறகு பழைய நினைவுகளைத் திரும்பிப் பார்க்கும்போதா? 

இந்தக் கேள்வியை மையமாகக் கொண்டு, நினைவுகளுக்கும் உண்மைக்கும் இடையிலான நுட்பமான இடைவெளியை உணர்ச்சிகரமான திரைப்பட அனுபவமாக மாற்றுகிறது சார்லட் வெல்ஸ் இயக்கிய ஆஃப்டர்சன்.

1990-களின் இறுதிக்காலப் பின்னணியில் அமைந்துள்ள இந்தத் திரைப்படம், தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்டாலும், அதன் பார்வை குடும்பப் பாசத்தை மட்டும் சுற்றிவருவதில்லை. 

குழந்தைப் பருவத்தில் நாம் அறிந்திருந்த பெற்றோர்களுக்கும், வயது வந்த பிறகு அவர்களைப் பற்றிப் புரிந்துகொள்ளும் விதத்திற்கும் இடையில் ஏற்படும் மாற்றத்தை ஆராய்கிறது. 

நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வாழ்க்கையிலும் நம்மால் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத பகுதிகள் இருக்கலாம் என்ற உண்மையை, எந்தவிதமான தீர்ப்பையும் முன்வைக்காமல் படம் அணுகுகிறது. 

இதனால், இது ஒரு குடும்பத்தின் அனுபவத்தைப் பற்றிய திரைப்படமாக மட்டுமல்லாமல், நினைவுகளின் இயல்பைப் பற்றிய சிந்தனையாகவும் விரிகிறது.

சார்லட் வெல்ஸின் இயக்கத்தில் காணப்படும் முக்கியமான சிறப்பு, உணர்ச்சிகளை நேரடியாக விளக்குவதற்குப் பதிலாக, அவற்றைப் பார்வையாளர்கள் உணர்ந்து புரிந்துகொள்ள இடமளிப்பதாகும்.

 கதாபாத்திரங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உரையாடல்கள் மூலமாக முழுமையாக வெளிப்படுத்திவிடாமல், அவர்களின் பார்வைகள், உடல்மொழி, மௌனம் ஆகியவற்றின் வழியாக உணர்ச்சிகளைக் கடத்துகிறார்.

 இதனால், திரையில் நிகழ்வதை மட்டும் கவனிக்கும் பார்வையாளராக நாம் இருக்க முடிவதில்லை; காட்சிகளுக்கு இடையிலான அர்த்தங்களையும் தேடத் தொடங்குகிறோம்.

 இயக்குநரின் தனிப்பட்ட குழந்தைப் பருவ அனுபவங்களுடன் தளர்வாகத் தொடர்புடைய இந்தப் படைப்பு, சுயசரிதைத் தன்மையை வெளிப்படையான நினைவுக் குறிப்பாக மாற்றாமல், தனிப்பட்ட அனுபவங்களைப் பலரும் உணரக்கூடிய மனிதநேயப் பார்வையாக மாற்றுகிறது.

திரைக்கதையின் அமைப்பும் இந்த அணுகுமுறைக்கு வலுசேர்க்கிறது. கடந்த கால அனுபவங்களையும் நிகழ்கால நினைவுகளையும் ஒன்றோடொன்று இணைக்கும் கதைசொல்லல் முறை, நினைவு என்பது நடந்தவற்றின் துல்லியமான பதிவாக மட்டுமே இருப்பதில்லை என்பதை உணர்த்துகிறது. 

ஒரு காலத்தில் சாதாரணமாகத் தோன்றிய தருணங்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு பொருளைப் பெறலாம். 

அப்போது நாம் நினைவுகூருவது நடந்த சம்பவங்களை மட்டுமல்ல; அவற்றை அனுபவித்த வயது, அன்றைய புரிதல், இன்று நமக்குக் கிடைத்திருக்கும் புதிய பார்வை ஆகியவற்றையும் சேர்த்துத்தான். 

இந்தக் கதை அமைப்பு, படத்தின் உணர்ச்சிகளைத் தீர்மானிக்கப்பட்ட விளக்கங்களாக வழங்காமல், பார்வையாளர்களின் சொந்த அனுபவங்களுடன் தொடர்புபடுத்துகிறது.

காலம் பேட்டர்சனாக தோன்றிய பால் மெஸ்கலின் நடிப்பு, இத்திரைப்படத்தின் உணர்ச்சிசார் மையமாக அமைகிறது. 

வெளிப்படையான உணர்ச்சி வெளிப்பாடுகளைக் காட்டிலும், மனதிற்குள் நிகழும் போராட்டத்தை மிக நுட்பமான உடல்மொழியாலும் முகபாவங்களாலும் வெளிப்படுத்துகிறார். 

ஒருவரின் வெளிப்புறத் தோற்றத்தையும் அவருடைய உள்ளார்ந்த நிலையையும் ஒரே நேரத்தில் உணரச் செய்யும் இந்த நடிப்பு, கதாபாத்திரத்தை எளிதில் புரிந்துகொண்டுவிட்டதாக நினைக்க முடியாத வகையில் அமைந்துள்ளது. 

அவர் வெளிப்படுத்தும் அமைதிக்கும் மறைக்கப்பட்ட உணர்ச்சிகளுக்கும் இடையிலான இடைவெளி, கதாபாத்திரத்தின் ஆழத்தை அதிகரிக்கிறது.

சோஃபியாக நடிக்கும் பிராங்கி கொரியோவின் நடிப்பும் அதே அளவுக்கு இயல்பானது.

 குழந்தைப் பருவத்தின் ஆர்வம், தன்னிச்சையான செயல்பாடு, சுற்றியுள்ள மனிதர்களைப் புரிந்துகொள்ளும் முயற்சி ஆகியவை செயற்கைத்தன்மையின்றி வெளிப்படுகின்றன.

 அவளுடைய நடிப்பில் காணப்படும் இயல்பான தன்மை, திரைக்கதையின் நுணுக்கமான உணர்ச்சிகளை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்த உதவுகிறது.

 வயது வந்த சோஃபியாக நடிக்கும் செலியா ரவுல்சன்-ஹாலும், நினைவுகளுடன் தொடர்புடைய கதாபாத்திரத்தின் உணர்ச்சிப் பரிமாணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறார். 

இந்த மூன்று நடிப்புப் பரிமாணங்களும் இணைந்து, ஒரே உறவை வெவ்வேறு வயதுகளிலும் புரிதல்களிலும் அணுகுவதற்கான வாய்ப்பை உருவாக்குகின்றன.

கிரிகோரி ஓக்கின் ஒளிப்பதிவு, திரைப்படத்தின் நினைவுத்தன்மையை வலுப்படுத்தும் முக்கியமான கலைக்கூறாக இருக்கிறது. 

ஒளி, வண்ணங்கள், காட்சிகளின் அமைப்பு ஆகியவை வெறும் அழகியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாமல், கதாபாத்திரங்களின் மனநிலையையும் நினைவுகளின் மங்கலான தன்மையையும் உணர்த்துகின்றன. 

துருக்கியின் விடுமுறைச் சூழல், அதன் ஒளிரும் காட்சிகளுடன், மனித உணர்ச்சிகளின் சிக்கல்களையும் தாங்குகிறது.

 வெளிப்புற உலகின் அழகுக்கும் மனித மனத்தின் குழப்பங்களுக்கும் இடையில் உருவாகும் இந்த முரண்பாடு, படத்தின் காட்சிமொழிக்கு தனித்தன்மை அளிக்கிறது.

 காட்சிகள் நினைவுகளின் பதிவுகளைப் போலத் தோன்றினாலும், அவை வெறும் பழைய காலத்தின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதுடன் நின்றுவிடுவதில்லை.

படத்தொகுப்பாளர் பிளேர் மெக்ளெண்டனின் பணி, இந்த நினைவுத் துணுக்குகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் விதம், காலத்தின் தொடர்ச்சியை மட்டும் காட்டாமல், நினைவுகள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புபடுகின்றன என்பதையும் உணர்த்துகிறது.

 குறிப்பாக, யதார்த்தமான காட்சிகளுக்கும் கனவுத்தன்மை கொண்ட காட்சிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், படத்தின் உளவியல் பரிமாணத்தை விரிவுபடுத்துகின்றன.

 இத்தகைய காட்சியமைப்பு பார்வையாளர்களிடம் உடனடியான விளக்கத்தை வற்புறுத்துவதில்லை; மாறாக, திரைப்படம் உருவாக்கும் உணர்ச்சிகளை மனதிற்குள் தொடர்ந்து ஆராயச் செய்கிறது.

இசையமைப்பாளர் ஆலிவர் கோட்ஸின் பின்னணி இசை, காட்சிகளின் உணர்ச்சிகளைத் தனியாக அறிவிப்பதற்குப் பதிலாக அவற்றுடன் நெருக்கமாக இணைகிறது.

 படத்தில் இடம்பெறும் பாடல்களும் கதாபாத்திரங்களின் அனுபவங்களுடன் தொடர்புடைய கலாசார மற்றும் உணர்ச்சிசார் பின்னணியை உருவாக்குகின்றன. 

குறிப்பாக, குயின் மற்றும் டேவிட் போவியின் “அண்டர் பிரஷர்” பாடல் இடம்பெறும் பகுதி, இசை எவ்வாறு தனிப்பட்ட நினைவுகளுக்கும் பகிரப்பட்ட உணர்ச்சிகளுக்கும் இடையே பாலமாகச் செயல்பட முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது.

 இசையும் ஒலியும் காட்சிகளுடன் இணையும் விதம், பார்வையாளர்களின் அனுபவத்தைச் செறிவாக்குகிறது.

1990-களின் இறுதிக்காலத்தை மீட்டுருவாக்கும் கலைநோக்கும் படத்தின் தனித்துவத்திற்கு உதவுகிறது. 

சிறிய வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், அன்றாடத் தருணங்களின் இயல்பான தன்மையையும் அவற்றின் தனிப்பட்ட நினைவுமதிப்பையும் வெளிப்படுத்துகின்றன. 

இந்தப் பதிவுமுறை, தொழில்நுட்பத்தை ஒரு காட்சிப்பதிவு சாதனமாக மட்டும் பயன்படுத்தாமல், நினைவுகளுடன் தொடர்புடைய திரைப்பட மொழியின் ஒரு பகுதியாக மாற்றுகிறது. 

பழைய வீடியோப் பதிவுகளின் தோற்றமும் திரைப்படத்தின் பிற காட்சிகளும் ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும்போது, பார்வையாளர்கள் ஒரு காலத்தைப் பார்ப்பதுடன், அந்தக் காலம் பின்னாளில் எவ்வாறு நினைவுகூரப்படுகிறது என்பதையும் அனுபவிக்கிறோம்.

ஆஃப்டர்சன் திரைப்படம் வெளியானபோது விமர்சகர்களிடையே பரவலான பாராட்டைப் பெற்றது. 

அதன் இயக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு மற்றும் முன்னணி நடிகர்களின் நடிப்பு ஆகியவை குறிப்பாகப் பாராட்டப்பட்டன. 

2022ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக அமெரிக்காவின் தேசிய விமர்சகர்கள் வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், சைட் அண்ட் சவுண்ட் இதழின் அந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்பட வாக்கெடுப்பில் முதலிடத்தையும் பெற்றது. 

பிரிட்டிஷ் சுதந்திரத் திரைப்பட விருதுகளில் சிறந்த பிரிட்டிஷ் சுதந்திரத் திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றிபெற்றது.

 மேலும், சார்லட் வெல்ஸ் இயக்குநராக அறிமுகமான திரைப்படத்திற்காக பாஃப்டா விருதையும் வென்றார்; பால் மெஸ்கல் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

 இவ்வங்கீகாரங்கள், திரைப்படத்தின் தனிப்பட்ட கலைநோக்கும் நடிப்பின் நுணுக்கமும் பரந்த அளவில் கவனிக்கப்பட்டதை வெளிப்படுத்துகின்றன.

மொத்தத்தில், ஆஃப்டர்சன் திரைப்படத்தின் வலிமை, மனிதர்களை முழுமையாக அறிந்துவிட்டோம் என்று நினைக்கும் நமது நம்பிக்கையை மென்மையாகக் கேள்விக்குள்ளாக்குவதில் இருக்கிறது. 

நினைவுகள் நமக்குப் பாதுகாப்பான கடந்த காலத்தை வழங்குவதோடு, நாம் அறியாமல் விட்டுச் சென்ற உண்மைகளைப் பற்றிய கேள்விகளையும் எழுப்புகின்றன. 

நெருக்கமான உறவுகளுக்குள்ளும் புரிந்துகொள்ள முடியாத இடைவெளிகள் இருக்கலாம் என்பதையும், வயது முதிரும்போது நமது பழைய அனுபவங்களுக்கு புதிய அர்த்தங்கள் உருவாகலாம் என்பதையும் இப்படம் உணர்த்துகிறது. 

வேகமான கதை நகர்வையோ வெளிப்படையான உணர்ச்சிப் பிரகடனங்களையோ எதிர்பார்க்காமல், காட்சிகளின் மௌனத்தையும் நடிப்பின் நுணுக்கத்தையும் கவனிக்கத் தயாராக இருக்கும் பார்வையாளர்களுக்கு, இது நீண்ட நேரம் மனதில் தங்கும் அனுபவமாக அமையும். 

ஒரு திரைப்படம் முடிந்த பிறகும் நமது சொந்த நினைவுகளையும் உறவுகளையும் மறுபரிசீலனை செய்யத் தூண்ட முடியும் என்பதற்கு ஆஃப்டர்சன் சிறந்த எடுத்துக்காட்டு.

இப்படம் மொத்தம் 121 விருதுப் பரிந்துரைகளைப் பெற்று, 33 விருதுகளை வென்றது. சார்லட் வெல்ஸ் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான பிரிட்டிஷ் இன்டிபென்டன்ட் திரைப்பட விருதுகளைப் பெற்றார்.

 இப்படத்தில் காலமாக நடித்த பால் மெஸ்கலும் 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற 95-வது அகாடமி விருதுகளில் சிறந்த நடிகருக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். 

2022-ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக இயக்குநர் திரைப்படமாக  இத்திரைப்படத்தை நேஷனல் போர்டு ஆஃப் ரிவ்யூ தேர்ந்தெடுத்தது. 

மேலும், கோதம் விருதுகளில் வெல்ஸ் பிங்ஹாம் ரே திருப்புமுனை இயக்குநர் விருதையும், பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகளில் சிறந்த அறிமுக பிரிட்டிஷ் எழுத்தாளர், இயக்குநர் அல்லது தயாரிப்பாளருக்கான விருதையும் பெற்றார்.

===============================
படத்தின் கதை:-

1999ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பதினொரு வயது சோஃபி பேட்டர்சன் (ஃபிராங்கி கோரியோ), தனது முப்பது வயது தந்தை காலம் (பால் மெஸ்கல்) உடன் துருக்கியில் உள்ள கடற்கரைச் சுற்றுலா விடுதிக்குச் செல்கிறாள். 

சோஃபியின் தாயிடமிருந்து காலம் இணக்கமாகப் பிரிந்துவிட்டான். அதன் பிறகு அவன் லண்டனுக்குச் சென்று வசித்து வருகிறான். 

சோஃபி தாயுடன் வசிப்பதால், தந்தையுடன் நீண்ட நேரம் செலவிட அவளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. எனவே, இந்தச் சுற்றுலா இருவரும் ஒன்றாக நேரம் செலவிடுவதற்கான அரிய வாய்ப்பாக அமைகிறது.

 அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் நீச்சல் குளத்தில் விளையாடுகிறார்கள்; ஒன்றாகச் சாப்பிடுகிறார்கள்; சுற்றுலாவின் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

 சோஃபி அந்த விடுமுறை அனுபவங்களைச் சிறிய காணொளிப் படக்கருவியில் பதிவு செய்கிறாள். அந்தப் பதிவுகள் பின்னாளில் அவளுடைய நினைவுகளுடன் இணைந்து முக்கியத்துவம் பெறுகின்றன.

சோஃபி தனது தந்தையுடன் இருக்கும் நேரத்தில், தன்னைச் சுற்றியுள்ள இளம் வயதினரையும் கவனிக்கத் தொடங்குகிறாள். 

விடுதியில் சந்திக்கும் பிரிட்டிஷ் இளைஞர்களுடன் பழகுகிறாள். மைக்கேல் என்ற சிறுவனைச் சந்தித்து, அவனுடன் விளையாட்டு இயந்திரங்களில் விளையாடுகிறாள். 

தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நடத்தை, அவர்களுக்கிடையேயான பழக்கம் ஆகியவற்றை அவள் ஆர்வத்துடன் கவனிக்கிறாள்.

 அவளுடைய வயதுக்கு ஏற்ற இயல்பான ஆர்வமும், வளரிளம் பருவத்தை நோக்கி நகரும் மனநிலையும் இந்தச் சந்திப்புகளில் வெளிப்படுகின்றன.

சோஃபியுடன் இருக்கும்போது காலம் அன்பான தந்தையாக நடந்துகொள்கிறான். ஆனால், அவளுக்குத் தெரியாத நேரங்களில் அவன் மனதுக்குள் வேறொரு போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.

 வாழ்க்கையின் சுமை, மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றால் அவன் பாதிக்கப்பட்டிருக்கிறான்.

 இருப்பினும், தனது மனநிலையை மகளிடம் வெளிப்படுத்தாமல், மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள முயல்கிறான்.

 தனியாக இருக்கும் நேரங்களில் தாய் சி மனநல பயிற்சியும் செய்கிறான்; தன்னம்பிக்கையையும் மனநிலையையும் மேம்படுத்த உதவும் சுயமுன்னேற்ற நூல்களைப் படிக்கிறான்.

 புகைபிடிக்கும் பழக்கத்தையும் சோஃபியிடம் மறைக்கிறான். அவளுடன் இருக்கும்போது அவன் காட்டும் இயல்பான அன்புக்கும், தனிமையில் அவன் அனுபவிக்கும் மனக்குழப்பத்துக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. ஆனால், சிறுமியான சோஃபியால் அந்த வேறுபாட்டின் முழு ஆழத்தையும் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு நாள், காலமும் சோஃபியும் கடலுக்கடியில் நீந்திப் பார்க்கும் பயிற்சிக்குச் செல்கிறார்கள். அப்போது சோஃபி விலையுயர்ந்த ஸ்கூபா டைவிங் நீர்மூழ்கி நீச்சல் முகமூடியைத் தொலைத்துவிடுகிறாள்.

 இதனால் காலத்துக்கு வருத்தம் ஏற்பட்டாலும், அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாததுபோல் நடந்துகொள்கிறான். 

ஆனால், அவனுடைய உண்மையான உணர்வைச் சோஃபி உணர்ந்துகொள்கிறாள். அந்த முகமூடி விலை உயர்ந்தது என்பது தனக்குத் தெரியும் என்றும், அதனால் அவன் வருத்தப்படுவது புரிகிறது என்றும் அவள் கூறி அவனை ஆறுதல்படுத்துகிறாள். 

தந்தை தனது மனவருத்தத்தை மறைத்தாலும், அவனுடைய உணர்வுகளை மகள் கவனிக்கத் தொடங்கியிருப்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.

அந்த நீச்சல் பயிற்சிக்குப் பிறகு, காலம் பயிற்றுநரிடம் தனக்கு முப்பது வயது ஆகியிருப்பதே கூட ஆச்சரியமாக இருப்பதாகக் கூறுகிறான். 

அவன் கூறும் இந்த வார்த்தைகள், தனது வாழ்க்கையைப் பற்றிய அவனுடைய ஆழமான மனநிலையை வெளிப்படுத்துகின்றன.

 மகளுடன் மகிழ்ச்சியாக விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தாலும், அவனுடைய உள்ளத்தில் தீராத குழப்பம் இருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

பின்னர், சோஃபியும் காலமும் ஒரு உள்ளூர் கைவினை கம்பளி விற்பனைக் கடைக்குச் செல்கிறார்கள். அங்கு காலத்துக்குப் பிடித்தமான மெத்து மெத்தென்ற தரைவிரிப்புக் கம்பளம் ஒன்றைக் காண்கிறார்கள். 

ஆனால் அதன் விலை அதிகமாக இருப்பதால், அதை வாங்குவதா வேண்டாமா என்று அவன் தயங்குகிறான். 

இறுதியில் அதை வாங்காமல் கடையிலிருந்து வெளியேறுகிறான். எனினும், அந்தக் கம்பளத்தின் மீது அவனுக்கு இருந்த விருப்பம் மறையவில்லை. பின்னர் அவன் தனியாக அந்தக் கடைக்குத் திரும்பிச் சென்று, அந்தக் கம்பளத்தை வாங்கி வருகிறான்.

அடுத்த நாள் இரவு, இருவரும் தங்கியிருக்கும் விடுதியில் நடைபெறும் பாடல் பாடும் நிகழ்ச்சிக்குச் செல்கிறார்கள்.

 தந்தையும் மகளும் சேர்ந்து பாட வேண்டும் என்ற எண்ணத்தில் சோஃபி அவர்கள் இருவரின் பெயர்களையும் பாடுவதற்குப் பதிவு செய்கிறாள். 

ஆனால் காலம் அவளுடன் மேடையில் பாட மறுக்கிறான். சோஃபி மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாலும், அவன் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

 இதனால் சோஃபி தனியாகவே பாடுகிறாள். அவள் பாடும்போது காலம் அவளைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்; ஆனால் அவளுடன் சேர்ந்து பாடுவதில்லை.

தந்தை தன்னுடன் பாட மறுத்ததால் சோஃபி வருத்தமடைகிறாள். அவனுடன் அறைக்குத் திரும்பிச் செல்லவும் மறுக்கிறாள். 

அதற்குப் பதிலாக, முன்பு சந்தித்த சுற்றுலாப் பயணிகளுடன் தங்கிப் பில்லியர்ட்ஸ்  மேசை விளையாட்டை விளையாடுகிறாள். 

அப்போது மைக்கேல் அவளுக்குப் பின்னால் திடீரென வந்து அவளைப் பயமுறுத்துகிறான். 

பின்னர் இருவரும் நீச்சல் குளத்தின் அருகே முத்தமிடுகிறார்கள்.

 இதற்கிடையில், காலம் அருகிலுள்ள கடற்கரைக்குச் சென்று கடலுக்குள் நடந்து செல்கிறான். 

அவன் ஏன் அப்படிச் செய்கிறான் என்பதற்கான தெளிவான விளக்கம் அந்த நேரத்தில் கிடைப்பதில்லை; ஆனால் அவனுடைய மனக்குழப்பம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பது வெளிப்படுகிறது.

சோஃபி பின்னர் தங்களுடைய அறைக்குத் திரும்பி வரும்போது, காலம் ஆடையின்றித் தூங்கிக்கொண்டிருப்பதைக் காண்கிறாள். 

அவனைத் தொந்தரவு செய்யாமல், மெதுவாக அவன் மீது ஒரு போர்வையைப் போர்த்திவிடுகிறாள். 

தந்தை தனது மனநிலையை மகளிடமிருந்து மறைத்துக்கொண்டிருந்தாலும், சோஃபி அவன் மீது கொண்டிருக்கும் அன்பு குறையவில்லை. 

அதே நேரத்தில், முந்தைய இரவில் தந்தை தன்னுடன் நடந்துகொண்ட விதத்தால் ஏற்பட்ட வருத்தமும் அவளிடம் இருக்கிறது.

மறுநாள், இருவரும் சேற்று நீராடும் இடத்துக்குச் செல்லும் வழியில் பேசிக்கொள்கிறார்கள்.

 முந்தைய இரவில் தான் நடந்துகொண்ட விதத்துக்காக காலம் சோஃபியிடம் மன்னிப்புக் கேட்கிறான். 

இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பு ஓரளவுக்குத் தீர்கிறது. இருவரும் மீண்டும் இணக்கமாகப் பழகத் தொடங்குகிறார்கள்.

அந்த விடுமுறையின்போது காலத்தின் முப்பத்தொன்றாவது பிறந்தநாளும் வருகிறது. 

இதை முன்னிட்டு சோஃபி அவனுக்குத் தெரியாமல் ஒரு சிறிய ஏற்பாட்டைச் செய்கிறாள். சுற்றுலா விடுதியில் சந்தித்த மற்றவர்களின் உதவியுடன், காலத்துக்காகப் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடச் செய்கிறாள். 

திடீரென அனைவரும் அவனுக்காகப் பாடுவதை காலம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான். வெளிப்படையாக அவன் தனது உணர்ச்சிகளை அதிகம் காட்டவில்லை. 

ஆனால், பின்னர் அவன் தனியாகத் தங்கியிருக்கும் அறையில் கதறி அழுகிறான். சோஃபிக்காக எழுதப்பட்ட ஒரு அஞ்சலட்டையும் அங்கு இருக்கிறது. 

அதில், அவளைத் தான் எப்போதும் நேசிப்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்று அவன் எழுதியிருக்கிறான். 

மகளிடம் தனது அன்பை வெளிப்படுத்த விரும்பும் காலம், அதே நேரத்தில் தனது மனவேதனையையும் தனிமையையும் சமாளிக்க முடியாமல் தவிப்பது இந்த நிகழ்வில் வெளிப்படுகிறது.

விடுமுறையின் கடைசி இரவில், காலமும் சோஃபியும் ஒன்றாக நடனமாடுகிறார்கள். இசையின் பின்னணியில் அவர்கள் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு நடனமாடும் அந்தத் தருணம், தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. 

அதற்கு மறுநாள் காலையில் அவர்கள் விமான நிலையத்துக்குச் செல்கிறார்கள். சோஃபி தனது வீட்டுக்குத் திரும்புவதற்காக விமானத்தில் ஏற வேண்டும். 

காலம் அவளிடம் விடைபெற்று, அவள் புறப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் கையசைத்து விடை கொடுக்கிறான். 

இந்தச் சுற்றுலா இருவரும் ஒன்றாகக் கழித்த கடைசி விடுமுறையாக அமைகிறது.

கதை இருபது ஆண்டுகள் பின்னோக்கி நகர்கிறது. இப்போது வளர்ந்த பெண்ணாகிவிட்ட சோஃபி, நியூயார்க் நகரில் தனது துணையுடனும் சிறு குழந்தையுடனும் வாழ்கிறாள்.

 தந்தையுடன் துருக்கியில் கழித்த விடுமுறையின் நினைவுகள் அவளிடம் இன்னும் இருக்கின்றன. 

அந்தக் விடுமுறைக் காலத்தில் காலம் வாங்கிய விலை உயர்ந்த கம்பளம், இப்போது அவளுடைய படுக்கையறையில் படுக்கைக்கு அருகே தரையில் கிடக்கிறது.
 காலம் வாங்கிய அந்தப் பொருள், அவள் வாழ்வில் கடந்த காலத்தின் நினைவாகத் தொடர்ந்து இருக்கிறது.

வளர்ந்த சோஃபி, அப்போது பதிவு செய்திருந்த காணொளிப் பதிவுகளைப் பார்க்கிறாள். அவற்றில், சிறுமியாக இருந்தபோது அவள் கண்ட தந்தையின் உருவம் மீண்டும் தோன்றுகிறது. 

ஆனால், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பதிவுகளைப் பார்க்கும் சோஃபியால், அப்போது புரிந்துகொள்ள முடியாதிருந்த சில விஷயங்களைப் பற்றிச் சிந்திக்க முடிகிறது. 

தன்னுடன் அன்பாக இருந்த தந்தையை அவள் நினைவுகூர்கிறாள்; அதே சமயம், அவளுக்குத் தெரியாமல் அவன் மனதுக்குள் நடந்துகொண்டிருந்த போராட்டத்தையும் புரிந்துகொள்ள முயல்கிறாள்.

இதனுடன் இணைந்து, வளர்ந்த சோஃபி மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இரவு நடன நிகழ்ச்சியில் இருப்பதைப் போன்ற கனவுத்தன்மை கொண்ட காட்சிகள் தோன்றுகின்றன.

 மாறிமாறி ஒளிரும் விளக்குகளுக்கு நடுவே காலம் நடனமாடுவதை அவள் காண்கிறாள். 

அவனை நெருங்கிச் செல்ல அவள் முயல்கிறாள். ஒரு கட்டத்தில் அவனை அணைத்துக்கொள்ளவும் முடிகிறது. 

ஆனால், இருவரின் கைகளும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் அந்தத் தருணத்திலும், காலம் அவளுடைய பிடியிலிருந்து பிடி நழுவிச் செல்கிறான். 

இந்தக் காட்சிகள் சோஃபியின் நினைவுகளுக்கும், அவளால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத தந்தையின் வாழ்க்கைக்கும் இடையேயான இடைவெளியை வெளிப்படுத்துகின்றன.

இறுதிக் காட்சியில், விடுமுறை முடிந்து சோஃபி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிறகு, காலம் காணொளிப் படக்கருவியைப் பெட்டியில் வைத்து மூடுகிறான்.

 பின்னர் விமான நிலையத்தின் நீண்ட நடைபாதையில் தனியாக நடந்து செல்கிறான். அவன் முன்னால் இருக்கும் கதவுகளைத் திறக்கும்போது, கனவுத்தன்மை கொண்ட அந்த இரவு நடன நிகழ்ச்சியின் காட்சிகள் மீண்டும் தோன்றுகின்றன. 

சோஃபியிடம் அன்பு காட்டிய தந்தையாக அவன் இருந்த தருணங்களுக்கும், அவளுக்குத் தெரியாமல் அவன் அனுபவித்த வேதனைக்கும் இடையேயான தொடர்பைத் தெளிவாகத் தீர்க்காமல் படம் முடிகிறது.

 திரைப்படத்தில் தந்தை காலம் கையில் மாவுக்கட்டுப் போட்டிருப்பதற்கான உண்மையான காரணம் எங்கும் வெளிப்படையாகக் கூறப்படவில்லை.

ஆனால், படத்தில் ஒரு முக்கியமான காட்சி வருகிறது. காலம் தனது கையில் இருக்கும் கட்டை அகற்றுவதற்காக விடுதி அறையின் குளியலறையில் முயற்சி செய்கிறான். 

கட்டை நீரில் ஊறவைத்து, கத்தரிக்கோலால் அதை வெட்டிப் பிரிக்க முயலும்போது அவனுக்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் வருகிறது.

 இதற்கிடையில், அருகிலுள்ள அறையில் இருக்கும் சோஃபி அவனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். மகளுடன் நீச்சல் பயிற்சியில் ஈடுபடவும், அவளுடைய கையைப் பிடிக்கவும் விரும்புவதால் மாவுக்கட்டை அகற்ற அவன் முயல்கிறான்.
சில விமர்சனங்களும் அந்தக் காயத்தை தந்தையுடைய மனநலப் போராட்டத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றன; 

 காலத்துக்கு அதன் பிறகு என்ன நடந்தது என்பதைத் திரைப்படம் நேரடியாக விளக்குவதில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையின் பழைய பதிவுகளைப் பார்க்கும் சோஃபி, தான் சிறுமியாக இருந்தபோது அறிந்த தந்தையையும், அப்போது தனக்குத் தெரியாமல் இருந்த அவனுடைய வாழ்க்கையையும் ஒன்றாகப் புரிந்துகொள்ள முயன்றுகொண்டே இருக்கையில் படம் நிறைகிறது.

 இத்திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலும் 35 மில்லிமீட்டர் திரைப்படச் சுருளில் படமாக்கப்பட்டுள்ளன; சில காட்சிகளை நடிகர்களே MiniDV கேமராவில் படம்பிடித்துள்ளனர்.

 இயக்குநர் சார்லட் வெல்ஸின் சொந்த வாழ்க்கை அனுபவங்களும் தந்தை–மகள் உறவைப் படமாக்குவதில் தாக்கம் செலுத்தின. 

வெல்ஸ் தனது 16-வது வயதில் தந்தையை இழந்தார். அவர் தந்தையிடமிருந்து தனியாக வாழ்ந்திருந்தாலும், தனது வளர்ப்பில் தந்தை ஈடுபாடு காட்டவில்லை என்று அவர் கருதவில்லை. 

தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவை ஆராய்வது ஆரம்பத்தில் வெல்ஸ் திட்டமிட்டிருந்த முக்கிய நோக்கமாக இருக்கவில்லை; திரைக்கதை எழுதும் பணியின்போது அந்த உறவின் ஆழம் இயல்பாகவே திரைப்படத்தின் மையக் கருத்துகளில் ஒன்றாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

#கீதப்ப்ரியன்பாஃப்டா
#கீதப்ப்ரியன்bafta
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (244) ஆஸ்கர் (187) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) உலக சினிமா (42) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)